Friday, May 9, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !

அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !

-

 அசாராம் பாபு என்ற பிரபல வட இந்திய சாமியார், 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள இச்சாமியாரது சிந்த்வாரா குருகுலப் பள்ளி மாணவியான  அச்சிறுமியைக் கடந்த ஆகஸ்டு 15 அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நடந்த சத்சங் எனும் கூட்டு வழிபாட்டிற்கு வரவைத்துப் பலாத்காரப்படுத்தியிருக்கிறார், இக்கிரிமினல் சாமியார்.

அஸ்ராம் பாபு
சிறைச்சாலையிலும் சுகபோகமாக வாழும் அளவுக்கு செல்வாக்கு கொண்ட கார்ப்பரேட் சாமியார் அசாராம் பாபு

இந்த அக்கிரத்தைக் கேட்டு அதிர்ந்த அசாராம் பக்தர்களான அச்சிறுமியின் பெற்றோர் முதலில் ஜோத்பூர் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தனர். ராஜஸ்தான் போலீசார் இந்தக் கயவனுக்கு எதிரான புகாரைப் பதிவு செய மறுக்கவே, தலைநகர் தில்லியில் புகார் செய்துள்ளனர். தில்லியிலும் கூடப்  பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தி, தொடர்ச்சியான பாலியல் வல்லுறவிற்கு உள்ளானதை உறுதி செய்ததன் பின்னர்தான் இந்தச் சாமியாருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்தனர்.

அதற்குப் பிறகும் கூட அவரைக் கைது செய்ய பல முனைகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அசாராம் பாபுவைக் கைது செய்வதில் போலீசு மெத்தனம் காட்டினாலும், சிறுமியின் பெற்றோர் இவ்வழக்கில் உறுதியாக இருந்தனர். சாமியாரைக் கைது செய்யாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் அறிவித்த பிறகுதான் ராஜஸ்தான் போலீசார், அசாராம் பாபுவைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாமியார் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள குருகுலப் பள்ளியில் திபேஷ் வகீலா மற்றும் அபிஷேக் வகீலா என்ற 11 வயது மாணவர்கள் இருவர் 2008-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி  கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களை இந்தச் சாமியார் நரபலி கொடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களது பெற்றோரது தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னரும் கூட சாமியார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து விசாரித்த டி.கே.திரிவேதி கமிஷசனின் அறிக்கையைக் கூட வெளியிடாமல் மோடி அரசு அசாராமைப் பாதுகாத்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அசாராமின் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய ராஜு சாந்தக் என்பவர் அங்கே தாந்த்ரீக யோகம் என்ற பெயரில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடப்பதாக போலீசில் புகார் செய்தார். இதனால் அசாராம் பாபு உள்ளிட்ட 3 பேரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டு, அது குறித்த வழக்கும் பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை இவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி
டி.ஜி. வன்சாரா – அமித் ஷா – நரேந்திர மோடி – அசாராம் பாபு : இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி

கடந்த 2000-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் பகுதியில், ஜெயந்த் வைட்டமின்ஸ் என்ற மருந்து நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை, அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மோசடி செய்து அபகரித்ததாக, அந்நிறுவனத்தின் பங்குதாரர் புகார் செய்தார். டெல்லியின் முக்கியமான மூன்று இடங்களில் ஆசிரமம் வைத்துள்ள அசாராம் பாபு ஆண்டுக்கணக்கில் சொத்து வரி கட்டாததால் டெல்லி மாநகராட்சி அவருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஆசிரமத்திற்கு அருகில் அரசிற்குச் சொந்தமான இடத்தை அத்துமீறி கைப்பற்றிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆசிரமத்திற்குச் சொந்தமான கடைகளில் விற்பனை வரி செலுத்தாதது பற்றி ஆராய்ந்து வருவதாக அம்மாநில கணக்கு அதிகாரிகள் கூறுகின்றனர். ராஜஸ்தானில் அசாராமின் கூட்டாளிகள் இருவர் கணக்கில் வராத ஹவாலா பணத்தை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று பலவிதமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் வந்து குவிந்தாலும் அசாராமுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏனென்றால், அசாராமின் செல்வாக்கு அத்தகையது. வாஜ்பாயி, அத்வானி முதற்கொண்டு உமாபாரதி, திக்விஜய்சிங், அசோக் கெலாட், சிவராஜ் சிங் சௌகான், நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னாள் – இன்னாள் முதல்வர்களின் ஆதர்ச குருவாக இந்த அயோக்கிய சாமியார் உள்ளார்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, மோடிக்கு ஆதரவாக நின்ற காரணத்திற்காக, பல ஏக்கர் நிலம் அசாராமுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அதேபோல் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும்  பல ஏக்கர் நிலங்களை அசாராமுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மதவெறி அமைப்புகள் எப்போதும் அசாராமுக்குப் பக்கபலமாக உள்ளன.

அசாராமின் அயோக்கியத்தனம் அம்பலப்பட்ட பின்னரும்கூட இந்தக் காவிக் கூடாரம் அவரைக் கைவிட மறுக்கிறது. அசாராம் உண்மையான துறவி என்றும் அப்பாவி என்றும் வி.இ.ப.வின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகிறார். வி.இ.ப.வின் முன்னாள் சர்வதேச  தலைவர்அசோக் சிங்காலோ, அவரது கைது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்கிறார்.  பா.ஜ.க.வின் துணைத் தலைவர் உமா பாரதி, இது காங்கிரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அசாராம் பாபுவிற்குச் சிறைச்சாலையில் குளிப்பதற்கு கங்கை நீர், விசேசமாகத் தயாரிக்கப்பட்ட உணவு, சொகுசுக் கட்டில், சிரமப் பரிகாரம் செய்ய இரண்டு உதவியாளர்கள் – என சகல சுகபோக வசதிகள் அதிகாரிகளால் செய்து தரப்பட்டன.  இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கண்டித்துள்ளனர்.

சாமியார்களின் ஆர்ப்பாட்டம்
இந்து மதவெறி சாமியார்கள் கூட்டம் – அசாராம் பாபு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

யோகாவையும் ஆன்மிகத்தையும் இணைத்து விற்கும் வியாபாரத்தை  ஒரு ஆசிரமத்துடன் ஆரம்பித்த அசாராம், இன்று உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், 50-க்கும் மேற்பட்ட குருகுலங்கள், 1000-கும் மேற்பட்ட சமிதிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் – என்று மிகப் பெரிய ஆன்மீக வியாபார வலைப்பின்னலைக் கட்டியமைத்திருக்கிறார். பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், பெரு முதலாளிகள், அதிகாரிகளின் பினாமியாக அசாராம் இருந்ததன் விளைவாக அடைந்த வளர்ச்சி இது.

முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளது கருப்புப்பணத்தின்  பாதுகாப்பான புகலிடமாக சாமியார்கள் மற்றும் அவர்களின் ஆசிரமங்கள், மடங்கள், டிரஸ்டுகள் போன்றவை உள்ளன. சங்கராச்சாரி, சாய்பாபா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் மாட்டிக்கொள்ளும்போது அவர்களின் கொலை மற்றும் பாலியல் அசிங்கங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. சாமியார்களின் மற்ற கிரிமினல் குற்றங்கள், நில அபகரிப்பு, ஊழல், ஹவாலா மோசடி போன்றவை கண்டுகொள்ளப்படுவதில்லை.

மத நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் என்கிற அடிப்படையில், நாட்டின் சட்டமே இது போன்ற சாமியார்களைப் பாதுகாப்பதால், இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் சொத்து மற்றும் வருமானவரி விலக்கிலிருந்து எளிதில் தப்பிவிடுகிறார்கள். காவிக் கும்பல், ஆளும் வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள், அரசு அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் துணையோடு எல்லா வழக்குகளிலிருந்தும் அசாராம் பாபுவும் விரைவில் வெளிவந்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கதிர்
__________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
__________________________________________