privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஆயத்த ஆடைத்துறையில் காதல் - பாலியல் பிரச்சினைகள்

ஆயத்த ஆடைத்துறையில் காதல் – பாலியல் பிரச்சினைகள்

-

ஆயத்த ஆடைத்துறை – 4

துயரங்களைத் திரையிட்டு மறைக்கும் ஒழுக்க மதிப்பீடுகள்.

டைத்துறை என்றில்லை, எல்லா இடங்களிலும் ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் பெண்களை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கின்றன?

உழைக்கும் பெண் மீது இரட்டைச் சுமை
ஓடிப் போய் அன்றைய நாளின் மீதி வேலையை முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

நள்ளிரவு ஒரு மணிக்கு ஏதேனும் ஒரு திருப்பூர் தொழிற்சாலையை கவனித்திருக்கிறீர்களா? பெண்கள் கிட்டத்தட்ட ஆலையில் இருந்து ஓடுவார்கள். அப்படி ஓடிப் போய் அன்றைய நாளின் மீதி வேலையை முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். விடியற்காலை எழுந்து மீண்டும் அந்த நாளுக்கான சமையல், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது போன்ற வேலைகளை செய்து விட்டு காலை 8 மணி வேலைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலான பெண்கள் பார்க்கும் செக்கிங் வேலை நின்று கொண்டே பார்க்க வேண்டியது. அவர்கள் சாப்பாட்டை விட உட்கார்வதற்காகவே உணவு இடைவேளையை எதிர்பார்ப்பார்கள். இப்படி பத்தொன்பது மணி நேரம் ஓயாமல் உழைக்க வேண்டிய அவலச் சூழல் நீங்கள் நன்கறிந்த ஒரு ஊர் பெண்களுக்கு இருப்பது ஒரு தகவலாகவேனும் உங்களுக்குத் தெரியுமா ?

மேற்கு மாம்பலத்தில் என் சகோதரர்களோடு தங்கியிருந்த சமயம், எங்கள் பக்கத்து அறையில் ஒரு குடும்பம் குடியிருந்தது (குடும்பம் குடியிருந்ததால் அந்த அறைக்கு வீடு எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது). ஒருநாள் அந்த குடும்பத் தலைவி தனது மகன்களுடனான சண்டையில் சொன்னார் “எக்கேடும் கெட்டுப்போ, நீ எக்ஸ்போர்ட்டுல வேலை செய்யுற பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுனாலும் நான் கவலைப்பட மாட்டேன்”. அந்த வாசகங்களால் அவரது மகனைக்காட்டிலும் அதிகம் கவலைப்பட்டது நானே. காரணம் அப்போது நான் ஆடையுற்பத்தி தொழில் நுட்பம் படித்துக் கொண்டிருந்தேன். உலகத்தில் உள்ள எல்லோரையும் நல்லவராக்க வேண்டுமானால் அந்த பெண்மணியின் இரண்டு மகன்களையும் நல்லோர் என அறிவித்தால் போதும். இத்தகைய புத்திர சிகாமணிகளைப் பெற்ற தாயே கேவலமாக கருதும் ஒரு துறையை தெரிவு செய்தது குறித்த கவலை பல நாட்கள் நீடித்தது.

திருப்பூர் வந்த பிறகு கவனித்த வரையில், உள்ளூரில் அத்தகைய கருத்தோட்டம் இல்லை. வெளி மாவட்டங்களில் திருப்பூர் குறித்த ஒழுக்க விமர்சனங்கள் அந்த சென்னைப் பெண்மணியை ஒத்தே இருந்தது. திருப்பூர் வேலை என்பதாலேயே பலருக்கு திருமண சம்மந்தம் அமைவது தள்ளிப் போனது. என் நண்பர் ஒருவர் தனது அலுவலகத்தின் பெங்களூர் கிளையில் பணியாற்றுவதாக பொய் சொல்லி பெண் தேடினார். சரியான கணக்கு இல்லையென்றாலும் நிச்சயம் நூறு தொழிற்சாலைகளேனும் இதுவரை எனது வேலை எல்லைக்குள் வந்திருக்கும். அந்த அனுபவத்தில் உறுதியாக சொல்ல முடியும், பாலியல் சார்ந்த பிரச்சனைகள் இந்தத் துறையில் நிச்சயம் ஒரு பெரிய சவால்.

நான் பணியாற்றிய சென்னை நிறுவனத்தில் மணமாகாத பெண்கள் காணாமல் போவதும் (அதாவது ஓடிப்போவது) அவர்களது உறவினர்கள் வந்து தகராறு செய்வதும் கிட்டத்தட்ட வாராந்திர நிகழ்வு. மனிதவளத் துறை மேலாளரின் முக்கியமான பணிகளில் இந்த சிக்கலை கையாள்வதும் ஒன்று. திருப்பூரில் இருக்கும் செக்கிங் நிறுவனம் ஒன்றின் பெண்கள் விடுதிக் காப்பாளர் ஒரு 100% ரவுடி. தொழிலாளர்களுக்கு வரும் கடிதங்களும் தொலைபேசி அழைப்புக்களும் கூட அவரது கடுமையான கண்காணிப்பின் கீழ் வரும். வேலை செய்யுமிடமும் அதற்கிணையான கடுங்காவல் பிரதேசம். ஆனால் அங்கேயும் காதலித்து ஓடிப் போவது மற்றும் திருமணத்துக்கு முந்தைய கருத்தரிப்பு ஆகிய சம்பவங்கள் பதிவாகின்றன. சென்ற ஆண்டு எங்கள் நிறுவனத்தில் (பெங்களூர்) ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்புக் கூட்டமொன்றில் உரையாற்றிய மடிவாலா காவல்நிலைய அதிகாரியொருவர், “பெண்கள் யாரும் தயவுசெய்து காதலிக்காதீர்கள். கார்மென்ட் துறையால் எங்களுக்கு வரும் பெரிய தலைவலி காதலித்து ஏமாற்றியதாக வரும் புகார்கள்தான்” என்றார்.

ஊர் பாகுபாடெல்லாம் இல்லாமல் இந்த சிக்கல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஒழுக்க மதிப்பீட்டாளர்களது பார்வை இப்போது கணிணித் துறை மீதிருப்பதால் ஆடைத் துறை பற்றிய அத்தகைய அபிப்ராயங்கள் பொதுவெளியில் பெரிதாக இல்லை. ஆனால் இத்தகைய பிரச்சனைகள் தொடந்து அதிகரித்தபடிதான் இருக்கிறது. ஏன்?

உழைக்கும் பெண்களின் காதல்
தொழிற்சாலைகளில் பிரச்சனைக்குரிய காதல் ஜோடிகள் கண்டறியப்பட்டால், பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுவார்.

கடந்த இருபது ஆண்டுகளில் திருப்பூரில் பெருமளவுக்கு வேலைக்கு வந்தவர்கள் 15 முதல் 20 வயதுடையவர்கள். இப்படி வருபவர்கள் படிக்க வசதியில்லாதவர்கள் அல்லது படிப்பு ஏறாதவர்கள், பிள்ளைகளும் உழைத்தால் மட்டுமே உணவு எனும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தவர்கள். வாழ்கையில் அதிகம் சிரமப்படாமல் விளையாட்டோடு கழிக்க வேண்டிய இந்த பதின் பருவத்தில் மொத்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தை இவர்கள் தாங்குகிறார்கள். மந்தைகளைப் போல அடைத்து வைக்கும் பணியிடங்கள், நெருக்கடியான வசிப்பிடங்கள் (வெறுமனே உறங்க மட்டும்தான் என்றாலும்), வேலையைத் தவிர வேறெதற்கும் நேரம் ஒதுக்க முடியாத நகரச் சூழல், இவையெல்லாம் பதின் வயது இளையோருக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை.

இந்தச் சூழலில் அங்கு பணியாற்றும் இளையோருக்கு விவாதிக்க இரண்டு பொதுவான விஷயங்கள்தான் இருக்கும், ஒன்று அவர்களது வேலை அல்லது பாலுறவு. புத்தகம் வாசிக்கவோ, சுற்றுலா செல்லவோ அல்லது விளையாடவோ அவர்களது வேலைச் சூழலும் பொருளாதாரமும் அனுமதிக்காது. இதனால் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான பாலுறவு நாட்டம் பெருமளவு இளைஞர்களது உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது. அவர்களது ஒரே பொழுது போக்கு சினிமா மட்டுமே. இப்போது சினிமா தரும் பாடம் மிகச் சிறியது, காதலிக்க ஆள் இருப்பவர் கதாநாயகன் அல்லது கதாநாயகி. அப்படி ஆள் கிடைக்காதவர் காமெடியன். ஆகவே நீங்கள் ஹீரோவாக விரும்பா விட்டாலும் காமெடியன் ஆகி விடாமல் இருக்க ஒரு காதலன் அல்லது காதலி இருப்பது அவசியமாகிறது. ஒரு துணையைத் தேடும் இயல்பான மனித உணர்வும் அதனை முட்டாள்தனமான முறையில் உசுப்பிவிடும் சினிமாவும்தான் இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை.

திருப்பூரில் உள்ள வசதியான வீட்டு பெண்கள் பெரும்பாலும் கோவைக்கு கல்லூரிப் படிப்பிற்காக அனுப்பப்படுகிறார்கள். அதில் பெரும்பாலான பெண்களுக்கு கல்லூரி இறுதியாண்டிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

போதிய மன முதிர்ச்சியற்ற நிலையில் உருவாகும் இந்த உந்துதல் காரணமாக தங்கள் சுற்றத்தில் இருக்கும் ஒருவரால் இவர்கள் கவரப்படுகிறார்கள் அல்லது கவர முனைகிறார்கள். அதிகப்படியான பணி நேரம், கடுமையான கண்காணிப்புக்கு இடையே இந்த செயலுக்கான நேரம் மிகவும் குறைவு. இந்தகைய சூழ்நிலைகளில் காதலானது மிக அவசர கதியில் உருவாகிறது. ஆகவேதான் தமது புதிய சினேகத்தை மதிப்பிடவும் அது தமக்கு பொருத்தமானதா என தீர்மானிக்கவும் அவர்களுக்கு அவகாசம் இல்லாமல் போகிறது. ஆயத்த ஆடைத் துறையில் உருவாகும் அனேக பாலியல் சார் பிரச்சனைகளுக்கான வேர் இதுதான்.

திருப்பூரில் ஓரளவு சுதந்திரமான வேலைப் பிரிவு சிங்கர் டெய்லர் எனும் பிரிவினர். வரைமுறையற்ற வேலை நேரமும் வேலைப் பளுவும் உள்ள சாபம் பெற்ற பிரிவு செக்கிங் (வேலை நேரம் முழுக்க ஒரே இடத்தில் நின்று கொண்டேயிருக்க வேண்டும்). முன்னது முழுக்க ஆண்களாலும் பின்னது முழுக்க பெண்களாலும் ஆன பிரிவுகள்.

செக்கிங் தொழிலாளர்கள்
வரைமுறையற்ற வேலை நேரமும் வேலைப் பளுவும் உள்ள சாபம் பெற்ற பிரிவு செக்கிங்.

இது பொதுவாக எல்லாத் துறையிலும் இருக்கும் பிரச்சனை, ஆனால் ஏன் ஆடைத் துறையில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்க வேண்டும் எனும் ஐயம் உங்களுக்கு எழக்கூடும். இங்கேதான் இருபாலரும் சம எண்ணிக்கையில் பணியாற்றுகிறார்கள். அதனால் ஒரு துணையை கண்டறியும் வாய்ப்பு இங்கே அதிகம். திருப்பூரைப் போன்ற அதிக நேரம் பணியாற்ற வேண்டிய இடங்களில் இவர்களின் காதலுக்கான நேரம் குறைவு. கிடைக்கும் அவகாசத்தில் காதல் செய்ய வேண்டியிருப்பதால் அவர்களால் தங்கள் எல்லையை வரையறுப்பது இயலாததாகிறது. மேலும் “பாதுகாப்பான உறவுக்கும்” வாய்ப்பில்லாமல் போகிறது (நான் ஆய்வுக்கு சென்ற நிறுவனமொன்றில் இலவச ஆணுறைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன). பாமரத்தனம் மற்றும் பாதுகாப்பான உறவுக்கான அவகாசமின்மையும்தான் இங்கு பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தொழிற்சாலைகளில் பிரச்சனைக்குரிய காதல் ஜோடிகள் கண்டறியப்பட்டால், பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுவார்.

சென்னை மற்றும் பெங்களூரில் விடுதியில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளிகள் மிகவும் குறைவு (காரணம், அது கட்டுப்படியாகாது). ஆயத்த ஆடைத் துறையில் பணியாற்ற கல்வித் தகுதி அவசியமல்ல என்பதால் கல்வியறிவில்லாத ஆதரவற்ற நகரத்துப் பெண்கள் இத்துறைக்கு வருகிறார்கள். இநத்த் துறையில் வேலை பார்க்கும் பெண்களின் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்கள் பல, இந்த பெண்களது திருமணத்துக்கான (அல்லது மறுமணத்துக்கான ) ஏற்பாட்டை அவர்களது வீட்டாரால் செய்ய முடிவதில்லை அல்லது செய்வதில்லை. ஒரு வாழ்க்கைத் துணைக்கான நியாயமான தேவையை உணரவும் அதற்கான ஏற்பாட்டை செய்யவும் ஆட்கள் இல்லாத பெண்களை ஏமாற்றுவதுதான் உலகின் இலகுவான ஏமாற்று வேலை. அதுதான் பெருநகர ஆடை நிறுவனங்களில் அதிகமாக நடக்கிறது.

சென்னையில் படிக்கையில் (பகுதிநேர) தினக்கூலி செக்கிங் வேலைக்கு செல்வதுண்டு. அங்கு கண்காணிப்பாளர்கள் பெரும்பலும் மோசமான இரட்டை அர்த்தத்தில் பேசுவது வழக்கம். இது படிப்பறிவற்றவர்கள் நிர்வகிப்பதால் வந்த வினை என கருதியிருந்தேன். திருப்பூரில் ஒரு பெரிய பன்னாட்டு இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றியபோது அங்கிருந்த தரக் கட்டுப்பாட்டு மேலாளர், தான் பார்த்த ஃபோர்னோ வீடியோக்கள் குறித்து போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பேச்சு கேட்கும் தொலைவில் பெண் ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களை கவனித்தபடியேதான் அவரும் பேசிக் கொண்டிருந்தார். அவர் எம்.டெக் படித்தவர், 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளின் தலையெழுத்தை தீர்மானிப்பவர் – இரட்டை அர்த்தப் பேச்சு என்பது ஒருவகையான ஆழம் பார்க்கும் தந்திரம். அருகேயிருக்கும் பெண்ணின் எதிர் வினையைப் பொறுத்து பேச்சு அடுத்த கட்டத்துக்கு நகரும்.

கேரளாவின் உள்ளடங்கிய ஊர்களில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வரப்படும் பெண்களது நிலையை தெரிந்து கொள்வது மேற்சொன்ன தகவலை புரிந்து கொள்ள உதவலாம். இரண்டு வேளை உணவுக்குக் கூட வழியற்ற குடும்பங்களில் இருந்து தரகர்களால் அழைத்து வரப்படும் இவர்களது ஊதியம் மட்டுமே அவர்களது குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். வெட்டி மாப்பிள்ளைக்கே அதிக வரதட்சணை கேட்கும் கேரளத்தில் இந்த பெண்களது திருமணம் என்பது கிட்டத்தட்ட கனவுதான் (ஓரளவு வசதியான கேரளப் பெண்கள்கூட தங்கள் திருமணத்துக்கான பணத்தை சேர்க்க பெங்களூரில் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்…).

உழைத்துக் கொட்டுவதைத் தவிர வேறெந்த வாய்ப்புமற்ற இந்த பெண்களது நிலையை புரிந்து கொள்ள பெரிய ஞானம் அவசியமில்லை. இத்தகைய நெருக்கடியில் இருக்கும் பெண்கள்தான் மிக எளிதில் காதல் வயப்படுகிறார்கள். கைவிடப்படுவோரில் பெரும்பாலானோர் இவர்கள்தான். மலையாளப் பெண்கள் பற்றிய மோசமான சித்தரிப்புகளும் இவர்களை வைத்தே செய்யப்படுகின்றன.

இப்படி ஒரு கேரளப் பெண்ணை மணந்து பிறகு பிரசவத்துக்கு வீட்டுக்கு அனுப்பியதோடு அவரை மறந்து விட்ட ஒரு நபரை சந்தித்தேன். சிறு அளவிலான ஒப்பந்தக்காரரான அவரிடம் மனைவியை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என கேட்டேன். அது ராசியில்லீங்க என்றார் சுருக்கமாக.

பெண்களுக்கு சம உரிமை
பெண்களை சமஉரிமை உள்ளோராக நடத்தும் சமூகத்தில் அவர்களை வெறும் பாலியல் பண்டமாக கருதும் ஆண்கள் இருக்க முடியாது.

ஆண்களுக்கென பிரத்யோகமான பிரச்சனை இங்கில்லை. அதாவது இங்கு வரும்போதே பிரச்சனைகளோடுதான் வருகிறார்கள். பெண்களை ஒரு நுகர்பொருளாக கருதுவது, பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு மிக முக்கியமான காரணி. ஆனால் அந்த மனோபாவம் அவர்களுக்கு குழந்தைப் பிராயத்திலேயே நம் சமூகத்தால் உருவாக்கப்படுகிறது. நுகர்வு கலாச்சாரம் அதிஅழுத்தமாக ஊட்டப்பட்ட நம் இளையதலைமுறை, பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் கருதும் நம் நாட்டின் சமூக அமைப்பு மற்றும் அதனை ஊக்குவிக்கும் பொழுதுபோக்கு ஊடகங்கள் எனும் இந்த கூட்டணியில் பாலியல் சிக்கல்கள் வராமல் இருக்க வாய்ப்பேயில்லை. கூடுதலாக, ஆண்கள் மது அருந்துவது ஒரு சமூக நிகழ்வாக இங்கே உருப்பெற்றிருக்கிறது. ஒப்பந்தக்காரர்கள் வாராவாரம் தம் ஆண் தொழிலாளர்களுக்கு சாராயம் வாங்கித் தருவதும், தேவைப்படுவோருக்கு தினசரி அதற்காக முன்பணம் தருவதும் ஒரு வழக்கமான நடைமுறை. மது ஒரு தற்காலிக இன்பம் என்றால், ஒரு பெண் துணை (அல்லது காதலி) இருப்பது கௌரவத்தின் அடையாளம். இவை இரண்டிற்கான முனைப்பு ஒருவனை தனது உரிமைகளுக்காக போராட விரும்பாதவனாக மாற்றுகிறது. ஆகவே இங்கு மதுப் பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது, பெண்கள் மீதான ஆண்களது கண்ணோட்டம் கண்டு கொள்ளாது விடப்படுகிறது.

ஆயத்தஆடைத்துறை குறித்து முதலில் குறிப்பிட்ட பொது அபிப்ராயம் கொஞ்சம் உண்மையே. ஆனால் அது குறித்து வெட்கப்படவேண்டியது நம் முழு சமூகமும்தான். தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதிய வேலை, நியாயமான ஊதியம் மற்றும் மரியாதை கிடைத்திருந்தால் இங்கிருக்கும் முக்கால்வாசி மக்கள் இடம் பெயர்ந்திருக்க மாட்டார்கள். உணவுக்கான உத்திரவாதம் இருந்து வரதட்சணையும் இல்லாதிருந்தால் கேரள தொழிலாளர்கள் இங்கு வரப்போவதில்லை. எல்லோருக்கும் கல்வி அரசாங்கத்தால் வழங்கப்படும் பட்சத்தில் பதின் வயதில் யாரும் இந்த துறைக்கு வந்து துயரப்பட அவசியமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களை சமஉரிமை உள்ளோராக நடத்தும் சமூகத்தில் அவர்களை வெறும் பாலியல் பண்டமாக கருதும் ஆண்கள் இருக்க முடியாது.

வங்கதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் கருவுற்ற பெண்கள் தங்கள் கர்ப்பத்தை தொழிற்சாலைக்கு தெரியாமல் மறைக்க முயல்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் அங்கே பேறுகால சலுகை வழங்குவதை தவிர்க்க கருவுற்ற பெண்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இத்தனை குரூரமான நிர்வாகம் இருப்பதால்தான் கனவிலும் நினைக்க முடியாத மலிவு விலையில் ஆடைகள் அங்கே உற்பத்தியாகிறது. அந்த அளவுக்கு மோசமில்லையென்றாலும் இங்கேயும் தொழிலாளர்களது நல்வாழ்வு பற்றிய அக்கறை துளியும் கிடையாது. ஆகவே தொழிலாளர்கள் வாழ்வில் உண்டாகும் தனிப்பட்ட பிரச்சனைகள் தீர்ப்பதற்கான முயற்சி ஒரு கருத்தளவில் கூட ஆடைத் துறையில் கிடையாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விசாரிக்கும் குழு முறையாக செயல்படும் ஒரு நிறுவனத்தைக் கூட நான் இதுவரை பார்த்ததில்லை. மனிதவள மேலாண்மைத் துறையானது தொழிலாளர் நலனுக்காக துறை எனும் அடிப்படைத் தகவல் இங்கே மனிதவளத்துறை ஊழியர்கள் பலருக்கே தெரியாது.

இவ்வளவு மோசமான சூழலிலும் இங்கே பெருந்தொகையான மக்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழ்கிறார்கள். அது குறித்து ஒரு ஆடைத் துறை ஊழியனாக நான் பெருமிதம்தான் கொள்கிறேன். இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே. ஆகவே அதற்கான சிகிச்சை ஒட்டுமொத்த தேசத்தால் செய்யப்பட வேண்டியது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் செய்ய வேண்டியது.

– வில்லவன்