privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஇன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

-

திருநெல்வேலி, கீழவல்லநாடு பகுதியில் இயங்கிவரும் இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இன்பென்ட் ஜீசஸ்
இன்பென்ட் ஜீசஸ் (படம் : நன்றி தினகரன்)

“பேனா பிடிக்க வேண்டிய வயதில் கத்தியைப் பிடித்த மாணவர்கள்”, “படிக்கின்ற வயதில் பாதை மாறிய மாணவர்களின் வெறிச்செயல்”, “”மாணவர்களின் ரவுடி அவதாரம்”, “தவறான நடத்தையால் சஸ்பென்ட் ஆன மாணவர்கள் வெட்டி சரித்த கோரம்” என  ஊடகங்கள் கவலைப்படுகின்ற்ன. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று ஊர்வலம் போகின்றனர் பேராசிரியர் பெருமக்களும் கல்லூரி முதல்வர்களும்.

“மாணவர்களின் கொலையை சரியென்று வாதிடுகிறீர்களா?, மாணவர்கள் என்பதற்காக அவர்களுடைய பொறுக்கித் தனங்களையும் ஆதரிக்க வேண்டுமா?, பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனையும், அரிவாளும் கையுமாக அலைபவனையும், தறுதலைப் பிள்ளைகளையும் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூடாதா?, மாணவனை நல்வழிப்படுத்துகிற குருவாகத் திகழும் பேராசிரியர்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான், உங்களின் கேள்வி நியாயமானதுதான்.

உங்களிடம் உரிமையுடன் எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறோம், மன சாட்சியுடன் பரிசீலித்து பதில் சொல்லுங்கள்.

மாணவர்கள் ரவுடித்தனம் பண்ணுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்ற பத்திரிக்கைகள், இன்ஃபென்ட் ஜீசஸ் போன்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் கல்லூரி நிர்வாகங்களின் 420 வேலைகளைப் பற்றியும் என்றைக்காவது எழுதியிருக்கின்றனவா? இல்லை, இப்பொழுதாவது அது பற்றிய விவாதத்தைத்தான் கிளப்பியிருக்கின்றனவா?

மாறாக, மாணவர்களையே குற்றஞ் சுமத்தி மாணவர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்; கல்லூரியிலேயே உளவியல் ஆலோசனை மையங்களைத் திறக்க வேண்டுமென்றும் அல்லவா அவை பரிந்துரைக்கின்றன.

தமிழகத்தில் இயங்கும் அனைத்துத் தனியார் பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கைத் தொடங்கி, பருவத்தேர்வுகளின் முடிவுகள் வரையில் தினுசு தினுசாக பிராடு, 420 வேலைகளை மேற் கொள்கின்றன என்பது ஊரறிந்த உண்மை. பணம் பண்ணுவதற்காக எதையும் செய்யத் துடிக்கும் வாழ்வியல் நெறியற்ற பிழைப்புவாதிகளாக, காரியவாதிகளாக, மாணவர்களையும் பெற்றார்களையும் அச்சுறுத்தும் மாஃபியாக் கூட்டமாக பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பரிணமித்து நிற்கையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவன் மட்டும் நல்லொழுக்கம் உடையவனாக, நாட்டுப் பற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எங்கனம்?

“பாளையங்கோட்டை சிறைச் சாலையை விடக் கொடுமையானது எங்களின் கல்லூரி வாழ்க்கை” என்று புலம்பும் பொறியியல் கல்லூரி மாணவனின் குரலுக்கு நீங்கள் என்றைக்காவது செவி மடுத்திருக்கிறீர்களா? செம்மறியாட்டுக் கூட்டம் போல, வீட்டுக்கும் கல்லூரிக்கும் அன்றாடம் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகப்படும் அந்த மாணவர்களை இடைமறித்து விசாரித்துப் பாருங்கள். தனியார் பொறியியல் கல்லூரிகளின் “ஸ்ட்ரிக்ட்” என்பதற்கான பொருள் விளங்கும்.

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலரை சந்தித்து சேகரித்த தகவல்களுள் சிலவற்றை கீழே தொகுத்து தருகிறாம். அதிலிருந்து கல்லூரி முதல்வரின் கொலைக்கு காரணமான  கல்லூரி மாணவர்களை குற்றவாளிகளாக்கியவர்கள் யார் என்பதையும் பகுத்துப் பாருங்கள்.

***

  • கல்லூரிக்குள் இரு சக்கர வாகன அனுமதி கிடையாது. கல்லூரிப் பேருந்தில்தான் பயணிக்க வண்டும். (அப்பதான கம்பெனி கல்லா கட்ட முடியும்!) கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் கால்மணி நேரம் தாமதமாக வந்தாலும், வருகைப் பதிவு உண்டு. வெளிப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் கால் நொடி தாமதித்தாலும் அடையாள அட்டை பிடுங்கப்படும். மன்னிப்புக் கடிதம் எழுதி வகுப்பு ஆசிரியர், துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று வர வண்டும்.
  • மாணவர்களின் வருகைப் பதிவேடு, இன்டெர்னல் மதிப்பெண் போன்றவற்றை கல்லூரிகளிலிருந்து அண்ணாப் பல்கலைக்கழகம் கேட்கிறது. இர்ரெகுலர் மாணவர்களுக்கு ஹால் டிக்கட் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
    இதையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகள், காலதாமதமாக வந்தாரா, சக மாணவியுடன் பேசினாரா, வகுப்பு பேராசிரியரிடம் முறைத்தாரா, அசைன்மெண்ட் எழுதவில்லையா, எதுவானாலும் முதலில் பிடுங்கப்படுவது, மாணவரது அடையாள அட்டைதான். அடையாள அட்டை இல்லையெனில், வாசலில் காவலாளியால் தடுத்து நிறுத்தப்படுவார். அடையாள அட்டையில்லையெனில் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தாலும் வருகைப் பதிவு கிடையாது.
    75% வருகைப்பதிவு இல்லையெனில் தேர்வெழுத இயலாது. 1% முதல் 5% வருகைப்பதிவு குறைவு எனில், அதற்கேற்ப ரூ 10,000 கொடு ரூ 20,000 கொடு என பிடுங்குவதும், அதற்கு மேலும் குறைந்தால் ஓராண்டு பீஸ் கட்டச் சொல்வதும் நடக்கிறது.
  • நோ டியூ ஃபார்ம் சமர்ப்பித்தால்தான் ஹால் டிக்கட் கிடைக்கும். பேராசியர்களை முறைத்துக் கொண்டால் கையெழுத்திட மாட்டார்கள். பலமணி நேர கெஞ்சல்களுக்குப் பிறகு மனமிறங்கி, தேர்வெழுத அரை மணி நேரம் முன்னதாக போனால் போகிறதென்று கையெழுத்திட்டு வழங்குவார்கள், பேராசிரியர் பெருமக்கள். தேர்வெழுதுவதற்கு முன்பாக ஹால் டிக்கட்தான் கொடுத்தாயிற்றே என்று கூறலாம். ஹால் டிக்கட் கிடைத்தது அல்ல இங்கே பிரச்சினை. “”நாளை நோ டியூ ஃபார்ம் இல் கையெழுத்திடுவார்களா? ஹால் டிக்கட் பெற முடியுமா? தேர்வு எழுத முடியுமா?” என்ற நிலையில் முந்தைய இரவு வரையில் அந்த மாணவனால் நிம்மதியாக படித்திருக்க இயலுமா?’, அந்த மாணவனை மன நோயாளியாக்கிய நிர்வாகத்தின் அணுகுமுறைதான் இங்கு பிரச்சினை! அந்த மாணவனின் மனநிலையிலிருந்து அணுகிப் பாருங்கள், இதன் கொடூரம் புரியும்.
  • கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் குறிப்பிடும் நோட்ஸ்களை உடனுக்குடன் தனது பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர் சொன்ன நோட்ஸ் அவனது நோட்டில் இல்லையென்றால், அவனது அடையாள அட்டை பிடுங்கப்படும். வருகைப் பதிவு இல்லை. பெற்றோரை அழைத்து வரவண்டும்.
  • அசைன்மெண்ட் எழுதவில்லையென்றால் வருகைப் பதிவு கிடையாது. அடையாள அட்டையை பிடுங்கிக் கொள்வது. அடையாள அட்டை இல்லையெனில் செக்கியூரிட்டி கல்லூரிக்குள் விடுவதில்லை. அடையாள அட்டை இல்லையெனில் வருகைப் பதிவு கிடையாது. டெஸ்க் மேல் ஏறச் சொல்வது. தரையில் அமர வைப்பது. பெற்றோரை அழைத்து வரவண்டும். அவர்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது. மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும்.
  • ஆயிரக்கணக்கில் கட்டும் பணத்துக்கு முறையான ரசீது இல்லை.
  • மாணவனை பேராசிரியர் அடித்து விட்டதற்காக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர், ஒரு துறையைச் சேர்ந்த மாணவர்கள். இதற்குத் தண்டனையாக அத்துறையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்னடத்தைச் சான்றிதழ், அவர்கள் அக்கல்லூரியில் படித்த ஆண்டுகளில் எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதங்கள் பற்றிய விவரம், அரியர் பற்றின விவரங்களைப் பதிவு செய்து வழங்கியிருக்கிறது நிர்வாகம். அவர்கள் வழங்கிய அந்த நன்னடத்தைச் சான்றை வைத்துக்கொண்டு, நாக்குதான் வழிக்க இயலும். வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்தில் நன்னடத்தைச் சான்று சமர்ப்பிக்கா விட்டால் வேலை கிடையாது. இதை என்னவென்று சொல்வது. மாணவர்களை நல்வழிப் படுத்தும் செயல் என்பதா? “என்னைப் பகைத்துக் கொண்டவன் நாசமாகப் போகட்டும்” என்ற சாபத்தின் வெளிப்பாடென்பதா?
  • மூன்றாமாண்டு மாணவர் ஒருவர் தனது துறைத்தலைவருக்கு பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுத்ததற்காக இடைநீக்க தண்டனை. (அந்த சாக்லட்டுக்குள்ள என்ன விஷத்தையா வச்சுக் கொடுத்துட்டான்?) பெற்றோரை அழைத்து வந்து முதல்வரை சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளனர். அதன் பிறகே வகுப்புக்குள் அந்த மாணவன் அனுமதிக்கப்பட்டான்.
  • மூன்று மணி தேர்வைக் கூட முழுமையாக எழுத விடாமல், இரண்டு மணி நேரம் முடிந்தவுடனேயே, அவன் எவ்வாறு தேர்வு எழுதியிருக்கிறான் என்பதை கண்காணித்து, சரியாக எழுதவில்லையெனில் அடையாள அட்டையை பிடுங்கி வைத்துக் கொண்டு, தேர்வு அறையை விட்டு துரத்தி விடுவது. தாள் ஒன்றுக்கு ரூ 50.00 கட்டி மறு தேர்வு கட்டாயம் எழுத வேண்டுமென்று நிர்ப்பந்தித்து, கல்லா கட்டுவது.
  • பொதுவில், தேர்வில் பாஸ் ஆனால் தேர்வுத்தாள் கையில் கொடுக்கப்படும். பெயில் எனில் தூக்கி வீசிறியெறியப்படும்.
  • டபுள் பாக்கெட் சட்டை போட்டு வரக்கூடாது. எம்பிராய்டரி இருக்கக் கூடாது. இது போல ஏகப்பட்ட கூடாதுகள்.
  • இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றவர்களில் பலர், அதே கல்லூரியில் எம்.இ. படிக்கின்றனர். எம்.இ. முடித்தவர்கள்தான் விரிவுரையாளராக நியமிக்கப்பட வேண்டுமென்ற விதியை மீறியது மட்டுமன்றி, எம்.இ. வகுப்புகளுக்கு போகாமலேயே பி.இ. மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இந்த விரிவுரையாளர்களுக்கு முழு வருகைப் பதிவு வழங்குகிறது கல்லூரி நிர்வாகம்.
  • ஆய்வகத்தில் கூட குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துகிறாரார்களாம், பேராசிரியர் பெருமக்கள்.

“என்ன காரணத்துக்காகவோ, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியிருக்கின்றனர். நிர்வாகத்துக்குப் பயந்து, என் ஃபிரண்ட், இரண்டு மாதமாக கல்லூரிக்கு வருவதில்லை. கல்லூரிக்கு செல்வதில்லை என்பது அவன் வீட்டிற்கு தெரியாது. வருகைப்பதிவு குறைந்து கடிதம் வீட்டிற்கு அனுப்பப்படும் பொழுதுதான் பிரச்சினை வீட்டுக்குத் தெரிய வரும். அப்பொழுது, ஒன்று அவன் ஆத்திரத்தில் யாரையேனும் குத்தி சாகடிக்க வேண்டும். அல்லது அவன் தூக்கிட்டு சாக வேண்டும். இதைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது, அவனிடம்” என இறுதியாக கேள்வி எழுப்பினார், அந்த மாணவர்.

இப்பொழுது சொல்லுங்கள்,

  • கல்லூரி மாணவர்களை குற்றவாளிகளாக்கியவர்கள் யார்?

– இளங்கதிர்.