privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை

58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை

-

சாட்சியங்கள் கூறுவது நம்பும்படியாக இல்லை என்ற ஒரு காரணத்தை கூறி லட்சுமண்பூர் பதே படுகொலையின் குற்றவாளிகள் 26 பேரையும் பாட்னா உயர்நீதி மன்றம் கடந்த அக்டோபர் 9 அன்று விடுவித்துள்ளது. 1997 டிசம்பர் 1 அன்று இரவு 11 மணிக்கு லட்சுமண்பூர் பதே கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களான பூமிகார் சாதியினரின் குண்டர்  படையான ரண்வீர் சேனா நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 58 தாழ்த்தப்பட்டவர்கள் பலியானார்கள். உண்மையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்ற போதிலும் அதிகாரப்பூர்வமாக இந்த எண்ணிக்கைதான் இதுவரை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ”தேசிய அவமானம்” என்று இப்படுகொலை குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் கூறியிருந்தார்.

பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் சோன் நதிக் கரையில் அமைந்துள்ளது லஷ்மண்பூர் பதே கிராமம். நிலப் பிரபுக்களான பூமிகார் உயர்சாதியினரும், நிலமற்ற கூலி விவசாயிகளான தாழ்த்தப்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களில் பாஸ்வான், சாமர், மல்லா, மாதோ ஆகிய சாதியினரும் அடக்கம். கூலி விவசாயிகள் மத்தியில் எண்பதுகளில் இருந்தே மா-லெ அமைப்புகளான “கட்சி ஐக்கியம்” (Party unity) மற்றும் “லிபரேசன்”(Liberation) குழுக்கள் பணியாற்றி வந்தன. இங்கு தாழ்த்தப்பட்ட மக்களில் சிலருக்கு இருந்த மொத்தம் 50 ஏக்கர் அளவுள்ள விளைநிலத்தையும், பின்னர் நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு ஒதுக்கிய 10 ஏக்கர் நிலத்தையும் பூமிகார் சாதி நிலப்பிரபுக்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர். நீதிமன்றத்திற்கு சென்று தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது உரிமையை நிலைநாட்டிய பிறகும் உயர்சாதி இந்துக்கள் நிலத்தை அவர்களிடம் திருப்பித் தரவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ”அந்த பத்து ஏக்கர் நிலம் எங்களிடமிருந்து அரசு முன்னர் கையகப்படுத்தியது தான்” என்பதே.

bihar-district-map

இந்த நிலங்களில் செங்கொடி நாட்டி, நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்துக்கொள்ளும் போராட்டம் துவங்கியது. ஏற்கெனவே கூலி விவசாயிகள் மா.லெ குழுக்களின் தலைமையில் அணி திரண்டு தங்களது அன்றாடக் கூலியை 1.5 கிலோகிராம் தானியத்திலிருந்து 3 கிலோகிராம் ஆக உயர்த்தக் கோரி அப்பகுதியில் போராடத் துவங்கியிருந்தனர். அங்கு கட்சி ஐக்கியம் குழுவினர் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் சாதிரீதியான ஒடுக்குமுறைகள், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்களை பாலியல்ரீதியில் சுரண்டுவது ஆகியவற்றை எதிர்த்து போராட துவங்கியிருந்தனர்.

பிரம்மேஷ்வர் சிங்
ரண்வீர் சேனா தலைவன் பிரம்மேஷ்வர் சிங்

இந்நிலையில் மா.லெ குழுக்களின் தலையெடுப்பை ஒழிக்க பூமிகார் சாதியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட குண்டர் படையான ரண்வீர் சேனாவின் போஜ்பூர், பாட்னா மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் (போஜ்பூர் மாவட்டம் கோபிரா கிராமம்தான் ரண்வீர் சேனா தலைவன் பிரம்மேஷ்வர் சிங் முக்கியா-வின் சொந்த ஊர்) சாகா பிராந்தியத்திலிருந்து சம்பவத்தன்று இரவு கிளம்பி சோன் நதியை 3 படகுகள் மூலம் கடந்து லட்சுமண்பூர் பதே கிராமத்துக்கு வந்தனர். தங்களை படகுகளில் கொண்டு சேர்த்த பிற்படுத்தப்பட்ட மல்லா சாதி மீனவர்கள் மூவருடன் கரையிலிருந்த மல்லா சாதியினை சேர்ந்த 2 மீனவர்களையும் கொன்று விட்டுதான் ஊருக்குள் பூமிகார் சாதி வெறியர்கள் நுழைந்தனர்.

கொல்லப்பட்டவர்கள்
கொல்லப்பட்ட தலித் மக்கள்

குடிசைகளின் கதவுகளைத் தட்டி தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளை எழுப்பி, குடும்பத்துடன் வெளியே வரச் செய்து அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, யாரும் தப்பி விடக் கூடாது என்பதற்காக மொத்தக் குடிசைகளையும் தீ வைத்து எரித்தனர். இந்த கும்பலுடன் சேர்ந்திருந்த உள்ளூர் பூமிகார் சாதியினர் மாத்திரம் முகத்தில் துணியைப் போர்த்தியபடி தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டனராம். பதுங்கித் தப்பிய ஒரு பெண் வந்தவர்களின் குரலை அடையாளம் கண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் 27 பேர் பெண்கள், அவர்களில் 8 பேர் தப்பியோட இயலாத கர்ப்பிணிகள், 10 குழந்தைகள். நான்கு குடும்பங்கள் மொத்தமாக அழிந்து போயின. பல குடும்பங்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் 4, 5 என்ற எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருந்தனர். ஒரு வயது குழந்தை சுமித்திரா முதல் எண்பது வயது மூதாட்டி ராஜ்மதி தேவி வரை அன்று கொல்லப்பட்டவர்களில் அடக்கம்.

நீதிபதி அமிர் தாஸ்
நீதிபதி அமீர் தாஸ்

அப்போது ஆட்சியில் இருந்த ராப்ரி தேவியோ பாஜக – பூமிகார் சாதியினரின் கூட்டணி இப்படுகொலையை நடத்தி தன் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்துக்கு அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் வாஜ்பாயி நேரடியாக லட்சுமண்பூருக்கு வருகை தந்தார். மனித உரிமை அமைப்புக்கள் சிறப்பு விசாரணை கமிசனை அமைக்க வலியுறுத்தின. அமீர்தாஸ் கமிசனை அமைத்து ரண்வீர் சேனாவின் அரசியல் கட்சிகளுடனான தொடர்பு குறித்து விசாரிக்க உத்திரவிட்டார் ராப்ரி தேவி. ரண்வீர் சேனாவுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

2006-ல் பூமிகார் சாதி ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் அக்கமிசனை கலைத்து விட்டு, தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்த பாதிக்கப்பட்ட சாதி மக்களை ‘மகா தலித்துகள்’ என்ற பிரிவில் சேர்த்து தனி இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் வாயை அடைத்தார். அக்கிராமத்தில் சேரியில் உள்ள நான்கு சாதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை மட்டும் மகா தலித் பிரிவில் சேர்த்து அங்கு அவர்களுக்குள் பிரிவினையையும் தூண்டி விட்டார் ‘சமூகநீதிக் காவலரா’ன நிதிஷ் குமார்.

லஷ்மன் ராஜ்வன்ஷி
மூன்று குடும்ப உறுப்பினர்களை பறி கொடுத்த லஷ்மன் ராஜ்வன்ஷி.

2008-ல் 46 ரண்வீர் சேனா குண்டர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 7 ஏப்ரல் 2010-ல் பாட்னா கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி வி.பி.மிஸ்ரா குற்றவாளிகளான 16 பேருக்கு தூக்குத்தண்டனையும், 10 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 152 சாட்சிகளில் 91 பேர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியமாக மாறி விட்டனர். நீதிபதி தனது தீர்ப்பில் இப்படுகொலையை அரிதினும் அரிதான ஒன்று எனவும், நாகரிமடைந்த சமூகத்தின் மீதான கறையே இப்படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவன் அப்ரூவராகவும் மாறியிருந்தான்.

தற்போது போதிய சாட்சியங்களை வைத்து குற்றத்தை  நிரூபிக்க போலீசு தரப்பு தவறி விட்டது எனக் கூறி உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுவித்துள்ளது. சாட்சிகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது பி.என். சின்கா, ஏ.கே. லால் அடங்கிய பாட்னா உயர்நீதி மன்ற பெஞ்ச். சாட்சி சொன்னவர்கள் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து குறிப்பான குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது என்றும், சாட்சி சொன்ன யாருக்கும் அவ்வளவாக காயம் படவில்லையே என்றும், தப்பி ஓடியவர்கள் எப்படி ஒளிந்திருந்து அதன் பிறகு நடந்தை பார்த்திருக்க முடியும் என்றும், அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் என்றும் தனது சந்தேகங்களை பதிவுசெய்து விட்டு, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளது பாட்னாவின் பார்ப்பனீய உயர்நீதி மன்றம். இந்த காரணங்கள்தான் பதானி டோலா படுகொலையில் ஆதிக்கசாதி குற்றவாளிகளை விடுவிக்கவும் முன்னர் பயன்படுத்தப்பட்டன.

நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. நீதிபதிகள் ‘உயர்’சாதி இந்துக்களின் குற்றங்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரத்தில் வர்க்கம் என்ற முறையில் ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியையும் மறுக்கிறது. பதோனி டோலா படுகொலை இதே பீகாரில் தான் 1996 ஜூலையில் நடந்தது. 21 தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரலில் குற்றவாளிகள் 23 பேரை பாட்னா உயர்நீதி மன்றம் விடுவித்துள்ளது.

பதனி டோலா படுகொலை
பதனி டோலா படுகொலை

காவல்துறையும் உயர்சாதிக்கு ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. லட்சுமண்பூர் பதே கிராமத்தில் படுகொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் தாழ்த்தப்பட்டவர்களுடைய குடியிருப்புக்கு வந்து ஆயுதங்கள்  ஏதாவது இருக்கிறதா என போலீசார் வீடுவீடாக தேடியுள்ளனர். சிறிய அளவிலான கத்திகளைக் கூட கைப்பற்றிச் சென்று விட்டனர்.

கடந்த ஆண்டு பதோனி டோலாவுக்கான தீர்ப்பு வந்தபோது வாயைத் திறக்காத காங்கிரசு 2014 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இப்போது லட்சுமண்பூர் பதே தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வாதாட தனது வழக்கறிஞர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள மாநில தலைவரும் சந்தடி சாக்கில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஏற்கெனவே நிலபிரபுக்களான ஆதிக்க சாதியினரின் குண்டர் படைகளுக்கும் பாஜக, காங்கிரசு, ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தள், சமதா கட்சியினருக்கும் உள்ள தொடர்பை அமீர்தாஸ் கமிசன் ஆதாரத்துடன் 2002-ல் புட்டுப்புட்டு தனது அறிக்கையில் வைக்கவே, அக்கமிசனின் இறுதி அறிக்கையை வெளியிட விடாமல் லாலுவும், நிதிஷும் கூட்டணி சேர்ந்து பின்னர் முடக்கி விட்டனர்.

ஜூன் 2000-ல் அவுரங்கபாத் மாவட்டம் மியான்பூர் கிராமத்தில் 34 தாழ்த்தப்பட்டவர்களை படுகொலை செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தண்டனையை ரத்து செய்து குற்றவாளிகளான ரண்வீர் சேனா குண்டர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டது பாட்னா உயர்நீதி மன்றம். நவம்பர் 1998-ல் போஜபூர் மாவட்டம் நகரி கிராமத்தில் 10 மா.லெ ஆதரவாளர்களை கொன்ற ரண்வீர் சேனா உறுப்பினர்கள் 11 பேரை கடந்த மார்ச் மாதம் பீகார் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது. இந்த பார்ப்பன ‘மேல்’சாதி ஆதரவு மனநிலை தான் கீழ்வெண்மணி படுகொலையாளன் கோபாலகிருஷ்ண நாயுடுவை ”இப்பேர்ப்பட்ட மனிதன் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருப்பான் என்பது நம்பும்படியாக இல்லை” என நீதிபதி மகாராசன் வாயில் இருந்து வெளிப்பட்டு, உயர்நீதி மன்றத்தில் அவரை விடுதலை செய்ய வைத்தது.

டெல்லி ஆர்ப்பாட்டம்
டெல்லி ஆர்ப்பாட்டம்

பிரிட்டிஷ் காலனியாட்சியின் போது 18-ம் நூற்றாண்டின் இறுதியில் காரன்வாலிஸ் உருவாக்கிய வங்காள ஜமீன்தாரி முறையால் பூமிகார், காயஸ்தர் மற்றும் ராஜ்புத் சாதியினர் இங்கு நிலபிரபுக்களாக தங்களை மீண்டும் தக்க வைத்துக் கொண்டனர். (தென்னிந்தியாவில் இம்முறை தோல்வியடையவே 1825-ல் மன்றோ ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்து விவசாயிகளிடமிருந்து கம்பெனி நேரடியாய் வரி வசூலிப்பதற்கு வித்திடுகிறான்.) 1947-க்கு பிறகு அவர்களது நிலவுடைமை ஆதிக்கம் இன்னும் பலமானதாக மாறியது. பிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் இந்த நிலவுடைமை சாதியினரை அண்டியே வாழ வேண்டியிருந்தது. இடைத்தட்டை சேர்ந்த குர்மிக்களும், யாதவர்களும் முன்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குத்தகை விவசாயிகளாக இருந்து, பின்னர் 50-களில் வந்த குத்தகைதாரர் சீர்திருத்த சட்டங்களால் ஓரளவு நடுத்தர விவசாயிகளாக அறுபதுகளில் வளர்ச்சியடையத் துவங்கினர்.

பீகாரில் இன்றும் 35% நிலத்தில் குத்தகை விவசாய (பட்டயதாரி முறை) அடிப்படையில் தான் விவசாயம் நடக்கிறது. நில உச்சவரம்பு மற்றும் குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1986-ல் காங்கிரசு ஆட்சிக்காலத்தில் வந்த பிறகு, 12 ஆண்டுகள் தொடர்ந்து குத்தகை விவசாயியாக இருப்பவர் நிலத்தில் சொந்தம் கொண்டாட முடியும் என்ற நிலைமை சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றது. பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டது. நடைமுறையில் அப்படி ஏதும் நடைபெறவில்லை என்பது எதார்த்தம்.

நிதீஷ் குமார்
பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.

பட்டயதாரி முறையில் நில உடமையாளர்களுக்கு விளைச்சலில் 25% பங்குதான் தர வேண்டும் என சட்டம் அப்போதே கூறினாலும் அதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை. தொண்ணூறுகளில் மாநிலம் முழுதிலும் சேர்த்து உபரியாக இருந்த 3.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் 2.62 லட்சம் ஏக்கர் நிலம் நிலமற்ற விவசாயிகளிடம் மறு விநியோகம் செய்யப்பட்டதாக அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பீகாரில் 61% பிற்படுத்தப்பட்டவர்களும், 70% தாழ்த்தப்பட்டவர்களும் நிலமற்ற கூலி விவசாயிகள் தான்.

நிலமிருக்கும் இவர்களிடம் கூட 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பூமிகார், ராஜ்புத் போன்ற ஆதிக்க சாதியினரில் பெரும்பான்மையினருக்கு 5 ஏக்கருக்கு மேல் தான் நிலம் உள்ளது. இங்கு பெரும்பான்மை விவசாயிகள் நடுத்தர விவசாயிகள் (5 முதல் 15 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளவர்கள்). இங்கு குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், 2006-ல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பீகார் நிலச்சீர்திருத்த ஆணையத்தை அமைத்தார் நிதிஷ்குமார். 2008-ல் ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது. நில உச்சவரம்பு, பட்டயதாரர் பாதுகாப்பு, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல் போன்றவற்றுக்கான பரிந்துரைகள் அதில் உள்ளன. ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றிய புரளிகளை தங்கள் சாதியின் நடுத்தர விவசாயிகள் மத்தியில் ஓட்டுக்கட்சிகள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. நிதிஷ், லாலு, பாஜக, காங்கிரசு என யாரும் இதில் விதிவிலக்கில்லை.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

இருபதாம் நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டுகளில் மட்டும், அதாவது ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நவநிர்மாண் இயக்கம் துவங்கிய காலம் முதல் எட்டு மாபெரும் படுகொலைகள் பீகாரில் நடந்துள்ளன. 1992-ல் நடந்த பாரா படுகொலையை தவிர மற்ற அனைத்துமே நிலமற்ற, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிலப்பிரபுக்களான ஆதிக்க சாதி இந்துக்கள் நடத்திய தாக்குதலே. பாரா கிராமத்தில் ஆதிக்கசாதி பூமிகார் சாதியினர் 35 பேரை லிபரேசன் குழுவினர் கொன்றனர். இதற்காக பீகாரில் முதன்முறையாக தடா சட்டத்தின் கீழ் பல அப்பாவி தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்தார் லாலு.

இன்று லட்சுமண்பூர் பதே வழக்கிற்காக தாழ்த்தப்பட்டவர்களை கைகழுவ சாட்சியங்களை நம்ப முடியாது எனச் சொன்ன நீதிமன்றம் பாரா படுகொலையில் சம்பந்தப்படாத நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. அவர்கள் தலித்துகள் என்பதுடன், யாரும் லிபரேசன் ஆதரவாளர்கள் கூட கிடையாது என்பது தான் உண்மை. குற்றம் சாட்டிய ஆதிக்க சாதி நபரை நீதிமன்றத்துக்கு அழைக்காமலேயே விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்ட நிலையில், அவரே வாக்குமூலத்தில் குறிப்பிடாத அந்த முன்னாள் பண்ணையடிமைகளுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட்டது. சாதிக்கொரு நீதி என்பதை இந்திய நீதித்துறை துல்லியமாக இந்த வழக்கிலும் நிரூபித்தது.

1977ல் பெல்ச்சி கிராமத்தில் 8 தலித்துகள் குர்மி சாதியினரின் பூமி சேனா நிலபிரபுக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இங்கு யாதவர்களுக்கு லோஹ்ரி சேனா, ராஜ்புத்களுக்கு குண்வர் சேனா, குர்மிக்களுக்கு பூமி சேனா, பூமிகார்களுக்கு பிரம்மரிஷி சேனா என நிலவுடைமை சாதிகளுக்கு சாதிக்கொன்றாக குண்டர் படை  உள்ளது. 1990-களில் பூமிகார் சாதியினரை மட்டும் இணைத்து ரமதார் சிங் என்பவர் தலைமையில் ஸ்வர்ணா லிபரேசன் ப்ரண்ட்-ஐ நிலபிரபுக்கள் அமைத்திருந்தனர். இவர்கள்தான் ரண்வீர் சேனாவின் முன்னோடிகள். நக்சல்பாரிகளை ஒழிப்பது என்ற இவர்களது நோக்கத்திற்கு உதவியாக அரசு படைகளும் இருந்ததால் பல மா.லெ குழுக்களின் தோழர்களை இப்படையினர் படுகொலை செய்தனர்.

சுனைனா தேவி
7 குடும்ப உறுப்பினர்களை பறி கொடுத்த சுனைனா தேவி.

ஓட்டுச் சீட்டு தேர்தல் பாதைக்கு போய் விட்ட லிபரேசன் குழுவினரது சில நகர்ப்புற போராட்டங்களை கூட இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கலைக்கத் துவங்கினர். வெளிப்படையாக சேனா அலுவலகத்தை அமைத்துக் கொண்டதுடன், அதன் உறுப்பினர்கள் 4000 பேருக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமையையும் பெற்றிருந்தது. இதனை ஒழித்துக் கட்ட விரும்பிய அன்றைய லிபரேஷன் எனும் மா லெ குழுவின் திட்டப்படி தான் பூமிகார் சாதியினர் மீதான பாரா படுகொலை நிகழ்த்தப்பட்டது. அதற்கு பழி வாங்கும் முகமாகத்தான் லட்சுமண்பூர் படுகொலையை பின்னர் அமைந்த ரண்வீர் சேனா நடத்தியது.

லட்சமண்பூர் பதே படுகொலையில் சம்பந்தப்பட்ட ரண்வீர் சேனாவின் நிறுவனரான பிரம்மேஷ்வர் சிங் முக்கியாவை கண்டு பிடிக்க முடியவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் கூறிவிட்டனர். அப்படி அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லிய காலத்தில் 2002 முதல் ஆரா மத்திய சிறையில் தான் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010-ல் வெளியே வந்த அவர் அகில பாரதிய ராஷ்டிரவதி கிசான் சங்கத்தினை ஆரம்பித்தார். ஆதரவாளர்களால் காந்தி என்றம், தாழ்த்தப்பட்டவர்களால் கூனி என்றும் அழைக்கப்பட்ட பிரம்மேஷ்வர் சிங் 2012-ல் கொல்லப்பட்டார். பீகார், உ.பி,  போன்ற வட மாநிலங்களில் பொதுவாக கிசான் சங்கம் என்பதே ஆதிக்க சாதியினரின், நில உடைமையாளர்களின் சங்கமாகத்தான் துவக்கம் முதலே இருந்து வருகிறது. பிரம்மேஷ்வர் சிங்கின் கொலைக்கு பழிவாங்க நினைத்த ரண்வீர் சேனாவின் அடுத்த தலைவர் சம்ஷீர் சிங் என்பவர் பாரியாரி தோலா கிராமத்தில் 5 தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளை படுகொலை செய்தார். ஆனால் உண்மையில் ரண்வீர் சேனாவுக்குள் இருந்த கோஷ்டி சண்டையால்தான் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டார் என நிதிஷின் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது கைதுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.

பார்வதி தேவி
ஒன்பது குடும்ப உறுப்பினர்களை இழந்த பார்வதி தேவி.

தற்போது லட்சுமண்பூர் பதே படுகொலையின் குற்றவாளிகள் விடுதலையாகி ஊருக்குள் வந்து விட்டதால் தாழ்த்தப்பட்ட மக்களை சுற்றி ஒருவித பயரேகை ஓடத் துவங்கியுள்ளது. தீர்ப்பு வெளியான அன்று  ஆதிக்க சாதியினர் குடியிருக்கும் பகுதிகளில் அவர்கள் வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர். இனிப்புகளையும் எல்லோருக்கும் வழங்கியுள்ளனர். இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள தயாராகுங்கள் என தாழ்த்தப்பட்ட மக்களிடையே செய்தியை கசியவிட்ட வண்ணம் உள்ளனர்.

இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள தாழ்த்தப்பட்டவர்கள் திராணியற்று உள்ளனர். பூமிகார் சாதியினர் தற்போது தங்களது சமூக, பொருளாதார நிலைமை தலித்துகளை விட மோசமாக இருப்பதாக சொல்லுகின்றனர். ”தலித்துகள் எல்லாம் இப்போது நிலத்தில் வேலை செய்வதில்லை. அவர்கள் எல்லாம் வசதியாகி விட்டார்கள். நாங்கள்தான் ஏழைகளாகி விட்டோம்” என்றும் கூறும் பூமிகார் சாதியினர், தாங்கள் படுகொலை சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளனர். சோன் நதி வழியாக வந்த வெளியாட்கள் தான் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், உள்ளூர் பூமிகார்கள் இந்த சாதி மோதலில் பலிகடாக்களாக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இப்படி சொல்பவர் குற்றவாளி சத்துருகன் சிங் என்பவரின் சகோதரனான நாகேஷ்வர் சர்மா மற்றும் அலோக் குமார் சிங்.

கொல்லப்பட்ட பெண்களும் குழந்தைகளும்
கொல்லப்பட்ட பெண்களும் குழந்தைகளும்

தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் சாட்சி சொன்ன ராம் உக்ரகரஜ் பான்சி, ”அவர்கள் இரு குழுவாக வந்தார்கள். ஆயுதமேந்திய 35 பேர் தங்களது முகம் வரை துணியால் மூடியிருந்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக 80 பேர் வந்தார்கள். ஆனால் ஆயுதம் வைத்திருந்தவர்கள் பேச்சு எங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதாக இருந்து விட்டதே!” எனக் கூறி ஆயுதமேந்தியவர்கள் உள்ளூர் பூமிகார் சாதியினர் தான் என்பதை அடையாளம் காட்டி விட்டார்.

67 வயது லஷ்மண் ரஜூவன்ஸ்கி, படுகொலையின்போது தப்பிய தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் ஒருவர், குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவர். ”தினமும் பத்து முறையாவது சந்திக்க நேர்ந்த ஒரே ஊரைச் சேர்ந்த அந்த மனிதர்களை எப்படி அடையாளம் காட்டாமல் இருக்க முடியும், தினமும் அவர்களது நிலத்தில் தானே வேலை பார்த்தோம். எந்த முன் எச்சரிக்கையும் எங்களுக்கு தரப்படவில்லை என்பதால் பலருக்கும் தப்பிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்று விரக்தியுடன் கூறுகிறார். ”எங்களுக்கு மகா தலித் பிரிவை ஒதுக்கி வாயை அடைத்து விட்டு, இப்போதோ நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் நிலப்பிரபுக்களின் கையாளான நிதிஷ்குமார்” என்றும் வெறுப்புடன் கூறுகிறார்.

லஷ்மன் ராஜ்வன்ஷி வீடு
சேதப்படுத்தப்பட்ட லஷ்மன் ராஜ்வன்ஷி வீடு.

முன்னி ரஜ்பன்ஷி இவ்வழக்கின் 12 வது சாட்சி. இவரது சாட்சி முறையானதாக இல்லை எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனைவி, மருமகள், பேரன், பேத்தி என குடும்பத்தில் 4 பேரை பலி கொடுத்தவர் இவர். பினோத் பாஸ்வான் என்பவர் தனது குடும்பத்தில் 7 பேரை பலிகொடுத்தவர். இவரது புகாரை பதிவு செய்துதான் வழக்கு நடத்தப்பட்டது. இவர் 26 குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் எதுவும் நடந்து விடவில்லை.

ரஷ்மி தேவி இப்படுகொலை நடந்தபோது கர்ப்பமாக இருந்துள்ளார். ஒரு அழுக்கு சாக்குப் பைக்கு பின்னால் ஒளிந்திருந்த அவருக்கு அதன்பிறகு குழந்தை இறந்தே பிறந்தது. பார்வதி தேவியின் குழந்தை அனிதாவை வந்த பூமிகார் சாதிவெறியர்கள் கொன்று விட்டனர். காலையில் தன் வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது குழந்தையினுடைய தலையின் ஒரு பகுதி மட்டும் தரையில் கிடந்ததை அந்த தாய் பார்க்க நேர்ந்தது.

பவுத் பஸ்வான் என்ற முதிய தாழ்த்தப்பட்டவர் தற்போது இந்த படுகொலையின் சாட்சியாக உயிர் வாழும் மற்றொருவர். ”58 பேர் இறந்த பிறகும் யாரும் தண்டிக்கப்படவில்லை. அரசாங்கம், நீதிமன்றம், லத்தி (அதிகாரம்) எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. ஏழைகளுக்கோ ஏதுமில்லை.” என்று கூறும் இவரது குடும்பத்தினர் 7 பேர் இப்படுகொலையிலும், அதனைத் தொடர்ந்து வந்த சமூக உளவியல் பிரச்சினைகளாலும் மரணமடைந்தனர். ”நாட்டுக்கே 58 பேர் இறந்தது தெரிகிறது. பாவம் நீதிமன்றத்துக்குதான் தெரியவில்லை” என்று மூன்று உறவினர்களை படுகொலையில் இழந்த தனது சோகத்திற்கு மத்தியிலும் நீதித்துறையை கேலி செய்கிறார் பிரமிளா தேவி.

பதனி டோலா
பதனி டோலா படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்.

தற்போது சி.பி.எம், லிபரேசன் போன்ற கட்சிகள் மட்டும் இந்த தீர்ப்பை ”நீதித்துறையின் படுகொலை” எனக் கண்டித்துள்ளனர். நிதிஷை உச்சநீதி மன்றத்தில் முறையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். உச்சநீதி மன்றம் சிறப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வெளியான தீர்ப்பில் எப்பகுதி தவறாக உள்ளது எனக் கண்டறிந்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக மாநில டி.ஜி.பி அபய் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞர் லலித் கிஷோரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தீர்ப்பு வெளியான மறுநாள் கூறியுள்ளார்.

ஆனால் போலீசும், நீதிமன்றமும் ஆதிக்கசாதி வெறியர்களை பாதுகாக்கும் காவலனாகத்தான் தொடர்ந்து இருந்து வருகின்றன. எனவே உச்சநீதி மன்றத்தில் மாத்திரம் அப்படி எதாவது அதிசயம் நடந்து நீதி கிடைக்கும் என்பதை நம்புமளவுக்கு உழைக்கும் நிலமற்ற தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஏமாளிகளில்லை.

இன்றைக்கு தலித் அமைப்புகள் பலவும் சீரழிந்து விட்ட நிலையில் பீகார் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நக்சல்பாரிகளே செயல்படுகிறார்கள். நீதிமன்றம் செய்திருக்கும் இந்தக் கொலைக்கு அவர்கள் மக்கள் மன்றத்தில் பழி வாங்குவார்கள்.

– வசந்தன்