privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை : ஜில்லெட்டின் விலை

சிறுகதை : ஜில்லெட்டின் விலை

-

சார்! சார்!“ லேசாக கதவைத் தட்ட, அது தானாகத் திறந்து கொண்டது. இருவரையும் பார்த்தவன் ஆர்வத்துடன் ”வாங்கம்மா உள்ள வாங்க!” என்று முகமெல்லாம் பல்லானான். அறுபது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வீட்டில் துண்டை கட்டிக்கொண்டு நிற்க, பேசாமல் திரும்பி விடலாம் என நினைத்த ராதாவை, “வாம்மா! ஏன் போற? என்ன வேணும்” என்று நகர விடாமல் வார்த்தையால் வளைத்தார். “சேல்ஸ் சார்! ஜில்லட் ரேசர், த்ரீ பிளேடு சார், ஸ்மூத் சேவிங். இத கடையில வாங்கினா ஒன் தர்ட்டி பைவ். எங்ககிட்ட வாங்குனா நூறு ரூபா சார்!” கடகடவென மஞ்சுளா ஒப்பிக்க, ராதாவுக்கு நகர்ந்தால் போதுமென்றிருந்தது.

”ஓ! ரெண்டு பேரும் சேல்ஸ் பண்றிங்களா! முன்ன ஆபீஸ் போனப்ப டெய்லி செய்வேன். இப்ப வீட்ல இருக்கறப்ப எங்க! வாரம் ஒரு தரந்தான்” என்று கன்னத்தை தடவிக் காட்டியபடி சிரிப்பு நுரை தள்ளியது. வீட்டிற்குள் எதையோ தேடிய ராதாவின் கண் அசைவுகளை புரிந்து கொண்டவர், ”வீட்ல ஊருக்குப் போயிருக்காமா! எங்க வயசானா கவனிக்குறாங்க!” என்று வழிய ஆரம்பிக்க, ராதா ”என்னங்க சார். வேணுங்களா?” என்று அவசர தொனியில் கேட்டாள்.08-shortstory-1

”என்ன இந்தப் பொண்ணு ரொம்ப பறக்குது. சேல்ஸ்னா அப்படித்தான் சுறுசுறுப்பா இருக்கணும். எங்க காட்டும்மா…” என்று தருவதற்குள் ரேசரைப் பிடிப்பது போல கொஞ்சம் கையைப் பிடித்தான். சுதாரித்துக் கொண்ட ராதா பொருளை விட, அவனும் பிடிக்காததால் கீழே விழுந்தது. குனிந்து எடுத்த மஞ்சுளாவை அவன் அளந்து பார்க்க, ராதாவுக்கு எரிச்சல் கூடியது. ”ஏம்மா! ரெண்டு பேருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” எனக் கேட்டான். ”அது விக்கிறத பொறுத்து சார்! வேணுங்களா ஒண்ணு வாங்கிக்க சார்! உங்களுக்கு ரெண்டு மாசம் தாண்டி வரும்…”

”அட! கரெக்டா சொல்றியே! கெட்டிக்காரப் பொண்ணா இருக்கியே… உக்காரும்மா… ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆயிருச்சா?…” வாங்கும் பொருளை விட விற்கும் பெண்களைப் பற்றியே அவரது விசாரணை நீண்டது. ”சார்! ஒண்ணு எடுத்துக்கிறீங்களா?…” ராதா திரும்பத் திரும்பத் கேட்க, “அதான் சொன்னேனம்மா! இன்னம டெய்லி சேவ் பண்ணி என்ன யாரு பாக்கப் போறா… மொதல்ல நீ பாப்பியா?… ஹா ஹா…” அவனது விகாரமான பேச்சுக்கு பதிலுக்கு அவர்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்தவன் போல இளிக்க, ”சரி சார்! தாங்க்ஸ்!” என்று மஞ்சுளா ரேசரைப் பக்குவமாக எடுத்துக்கொண்டு நகர, ”வாடி! வாடி! நீ வேற…” என்று பல்லைக் கடித்தபடி ராதா வேகமாக மஞ்சுளாவை நெட்டித் தள்ளினாள்.

”ஏய் ராதா! என்ன இதுக்கே டென்சனாயிட்டே! புதுசுல்ல அதான் குமுறுறே. பாத்தாலே தெரியல.. அது வாங்குற மூஞ்சா ஏங்குற மூஞ்சான்னு. கிழம் ஜொள்ளு தாங்கல. அவன் மூஞ்சும் இளிப்பும்! ஏன் தான் இப்படி அலையுறானுவளோ! ஏண்டி இதுக்கே இவளோ டென்சனாவுறியே! போன வாரம் தண்டையார் பேட்ட பக்கம் ஒரு கெழம் பிளேடு போட்டான் பாரு. நீயா இருந்தா அடிச்சே இருப்ப! சேல்ஸ் என்றால் இதெல்லாம் சகிச்சுத்தான் ஆகணும். டெக்னிக்கா மூவ் பண்ணி எஸ்கேப் ஆகணும்!”

”என்னதான் சேல்ஸ் என்றாலும், நம்மள கேவலமாக நெனச்சா சார்ப்பா கொடுத்துட்டு வரணும். இடுப்புல துண்ட கட்டிக்கிட்டு இளிச்சு இளிச்சு பேசுறான்… அவன பாத்தோன்னயே புரிஞ்சுகிட்டேன். நீதான் வாங்குவான்னு நெனச்சு மாட்டிவுடுற…” என்றாள் ராதா.

”அதுல்லடி! திடீர்னு திரும்புனா இன்சல்ட் பண்றோம்னு எத வேணாலும் பழிய போட்டு கத்துவானுங்க. இதெல்லாம் சும்மா. போன வாரம் ஒரு கெழத்திட்ட மாட்டுனேன் பாரு! ரேசர பாக்குறேன்னு என் கைய புடிச்சவன், “தோ பாரும்மா! உன் ரேகல தன பாக்கியம் உண்டு. இன்னும் மூணு வருசத்துல, இதோ சுக்ர மேடு லாப ஸ்தானத்துல இருக்கறதால பணமா கொட்டும்..” அது இதுன்னு கைய தொட்டுகிட்டே திடீர்னு நல்லா பாத்து சொல்றேன்னு மடில வைக்க பாத்தான்! வெடுக்குன்னு உதறுனேன்.

“ஏம்மா தப்பா எடுத்துக்குற? நான் உன் அப்பா மாதிரி” ன்னு பேசிவிட்டு, வேற வழியில்லாம ஒரு ஜில்லட்டு வாங்கிட்டான். இப்படியெல்லாம் இருக்கானுங்க!” மஞ்சுளா வியப்பு, ஆத்திரம்,சிரிப்பு என பல உணர்ச்சிகளுடன் விவரித்துக் கொண்டே நடந்தாள். ”நானா இருந்தா செருப்பக் கழட்டி அடிப்பேன்…” பிரச்சினையை தானே சந்தித்தது போல ராதா ஆத்திரப்பட்டாள்.

”ஏண்டி! எத்தன பேர அடிப்பே! செருப்பே பத்தாது. நீ வேற.. எப்படி சாமர்த்தியமா நகர்றது, அடுத்த டோரை பாக்கறதுங்கறது தான் நம்ம டேலண்டே. தெருவையே வெறுத்தா எங்க போயி விக்கிறது! சொல்லு!”

”சரி, நீ அந்த பக்கம் போ! நான் லெஃப்ட பாத்துக்குறேன்.” மஞ்சுளா எதிர் திசையில் போக, ராதா அடுத்த வீட்டுக் கதைவைத் தட்ட ஆரம்பித்தாள்.

”சார்! ஜில்லட் சார்!“ என்றாள். ”ஆங்! டி.வி.ல பாக்கறதோட சரி. நம்ம மூஞ்சிக்கு இதெல்லாம் ஒத்து வராது”.

”ஏன் சார்! இதோட சேவிங் க்ரிம் ஃப்ரீ சார்! இத கடைல வாங்குனா ஒன் தர்ட்டி ஃபைவ் வரும். ரேசரோட சேர்த்தே எங்ககிட்ட நூறு ரூபா தான் சார்.”

”எவ்வளோ ஈசியா சொல்றமா! நூறு ரூபாதான்னு. ஒரு குவார்ட்டருக்கு காசில்லாம நாங்களே கும்பலா திரியறோம். இதுல நூறு ரூபாய்க்கு ப்ளேடா…!” ஆரம்பிக்கும் போது ஒருவனாய் இருந்தவனைச் சுற்றி இன்னும் இரண்டு வாலிபர்களும் சேர்ந்து கொண்டனர்.

“ஏய் மச்சி! நீதான் உன் ஆள பாக்க கெத்தா போகணும்னியே! ஜில்லட்ட வாங்கிக்கடா! ஸ்மூத் ஷேவாம். டி.வி.ல வர்ற மாதிரி உன் ஆளு வந்தோன்னய கன்னத்துல ஒட்டிக்கும்… ஹே ஹே…” அவர்கள் கலாய்க்க, வேறு வழியில்லாமல் மெலிதாக புன்னகைத்தபடி“சார்! நீங்க..” என்று ஒவ்வொருவராகக் கேட்டபடி நிதானமாக பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்த இடத்துக்கு நகர்ந்தாள்.

”சார்! சார்!” கதவு திறக்காததால் அழைப்பு மணியை அழுத்தினாள். “யாரும்மா அது! அறிவில்ல. கேட்லயே சேல்ஸ் அனுமதி இல்லேன்னு போர்டு போட்டிருக்கோம்ல. நீ பாட்டும் வந்து அழுத்துற! நைட் ஷிப்ட் பாத்துட்டு வந்து தூங்குனா அறிவே இல்லாம வந்து காலிங் பெல்ல இந்த அழுத்து அழுத்துற. கதவு சாத்தியிருந்தா போக மாட்டியா? ஆளப் பாரு! போம்மா?…” தடித்த வார்த்தைகளுடன் கதவும் அதிர்ந்து, மர உதடுகளால் திட்டுவது போல சத்தமிட்டு மூடிக்கொண்டது.

ஒரு கணம் ஆடிப்போனவள் அடுத்த அபார்ட்மெண்ட் கதவை யோசித்தபடி தாளை திறந்து மெதுவாக அடியெடுத்தாள். முதல் வீட்டிலிருந்து ஒரு பெண்மணி எட்டிப்பார்க்க சற்று ஆறுதலுடன் நெருங்கினாள். அதற்குள் முந்திக்கொண்ட பெண்மணி, ”ஏம்மா! ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு சேல்சு சேல்சுன்னு கதவ திறந்து விட்டுட்டு வந்துர்றீங்க. நீங்க பாட்டும் கதவ திறந்து போட்டுட்டு போயிடுறீங்க! மல்லி, மொளகா வத்தல் காயப் போட முடியுதா! நாயிலேந்து பூனை வரைக்கும் வந்து நாசம் பண்ணுது. நீங்க வேற! துணிமணி வேற காணாம போவுது. யார்னு கேக்கறது? போங்கம்மா தொல்ல கொடுக்காம…”

”இல்லம்மா! நாங்க கரெக்டா மூடிட்டுதான் போவோம். வீட்ல ஆளு இருக்காங்களா? ஜில்லட்டும்மா…”

”ஏம்மா! உனக்கு தமிழ் தெரியாது! போங்குறேன். ஜில்லட்டு கில்லட்டுன்னு… ஒண்ணும் வேணாம். நகரும்மா! இதே வேல. அத விக்கிறேன் இத விக்கிறேன்னு ஆளில்லாத நேரத்துல நோட்டம் பாக்குறது! போம்மா!” கழுத்தில் தெரிந்த தடிமனான தங்கச் சரடு, பாசக்கயிறு போல நெளிய ”சே! இந்தப் பொம்பள நம்ம தரப்ப பேசவே விடலியே… அடிக்காத கொறையா.. அதுவும் திருடன விரட்டுற அளவுக்கு பட்டம் கட்டி துரத்துறாளே! பதிலுக்கு கேட்டு விடுவோமா?” என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, ’மத்தவங்க சூழ்நிலைமையை மதிச்சு பேசத் தெரியாத இதெல்லாம் ஒரு ஜென்மமா? நம்ம தலையெழுத்து! தயாரிச்சவன் டி.வி.ல வந்தா, காட்டுனா முழிச்சுக்கிட்டு பாப்பாங்க. நம்மள பாத்தா எளப்பமா தெரியுது!” என பலவாறு சிந்தித்துக் கொண்டே நடந்தாள்.

ரு கம்பெனியோட மிகப்பெரிய அசட் பொருள் இல்ல. கீழ இருக்குற ஒர்க்கர்ஸ் தான்.. நீங்கதான் கேர்ள்ஸ்! இன்னைக்கு பி.பி.ஏ, எம்.பி.ஏ படிச்சவங்களுக்கு கூட நல்ல ஸ்கோப் இல்ல. பதினாலு அவர் வேல பாத்து பத்தாயிரம், பதினைந்தாயிரம் கெடச்சா பெரிசு. ஆனா சேல்ஸ் கேர்ள் நீங்க நெனச்சா மன்த்லி ட்வெண்டி ஃபைவ் தவுசண்ட் வரைக்கும் ஏர்ன் பண்ணலாம். ஏன்னா நார்மல் மிடில் கிளாஸ் மாதிரி நீங்க.. வேல கையில இல்ல, வேலை உங்க கைல! நீங்க நெனச்சா இன்னும் சேல்சயே இம்ப்ரூவ் பண்ண முடியும்! இன்னைய மார்க்கெட்டிங் உலகத்துல ஒரு பொருள் மனுசனுக்கு தேவையா, இல்லையாங்குறது இல்ல விசயம்.. அத எப்படி கொடுக்கறதுங்குறது தான் விசயமே!

சேல்ச ஒரு எண்டர்டெயின்மெண்டா ஆக்குறதுல அவன வாங்க வச்சிட முடியும்! உதாரணத்துக்கு கடையில போனா நோ டயலாக்ஸ். ஆனா நீங்க டோர் கேன்வாஸ்ல அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசி, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பேச வுட்டு, பொருளோட ஒரு எக்ஸ்பீரியன்சையும் சேத்து தர்றீங்க! அதுனால பொருள் தேவைங்கிறத விட அவங்க தனிமையை நீங்க மார்க்கெட் பண்ண முடியும்! புரியுதா!” விற்பனை மேலாளர் முருகேஷ் பல உத்திகளை அடுக்கிக் காட்டினார்.

”என்ன ராதா! டல்லா இருக்கீங்க? உங்க ஃபெர்பார்மென்ஸ் கொஞ்சம் ஃபுவரா இருக்கு. நீங்க நெனச்சா சூப்பரா பண்ணலாம். இந்த பீல்டுல தயக்கமே கூடாது!”

“இல்ல சார். ஹார்டு ஓர்க் தான் பண்றேன். மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருக்கு சார்!“

“நோ! நோ! ஹார்டு ஒர்க் கூட பாயிண்ட் இல்ல. நம்ம டார்கெட் தான் பாயிண்ட். அத ஈசியா பண்ண மார்க்கெட் ட்ரிக்சை கையாண்டா சோ சிம்பிள். நம்ப டல் தான் மார்க்கெட் டல். கன்ஸ்யூமர இம்ப்ரஸ் பண்ண நாம தர்ற ட்ரஸ் கோடும், மெட்டீரியலும் மட்டும் போதாது. செல்ஃபா நீங்க இம்ப்ரூவ் பண்ணனும். நீங்க நல்லா ஃபேரா இருக்கீங்க. கொஞ்சம் ஸ்மைல் ஃபேசா, நளினமா கன்ஸ்யூமர் டச் இருந்தா இன்னும் சேல்ஸ் இம்ப்ரூவ் ஆகும்.”

”ரெண்டாவது நீங்க தெருவுல டோர் டோரா கேன்வாஸ் பண்றத விட, முக்கியமா பேச்சிலர் மேன்சன்ஸ், லாட்ஜஸ் கவர் பண்ணனும். ரெகுலர் ஒர்க் முடிச்சு டல்லா வந்து படுத்திருப்பாங்க. சிரமம் பாக்காம காலைல போய் ப்ரஷ்ஷா அப்பியர் ஆனீங்கன்னு வச்சிக்குங்க… உங்களுக்கு ரிசப்ஷன் நல்லா இருக்கும். கவர்மெண்ட் ஒர்க்கர்ஸ் மாதிரி ஃபீல் பண்ணாம, ஈவ்னிங் ஏழு மணிக்கு மேல மேன்சன்ஸ், லாட்ஜஸ் அட்டண்ட் பண்ணீங்கன்னா சேல்ஸ்ல நல்ல ரிசல்ட் இருக்கும்! என்ன நினைக்கிறீங்க ராதா?”

“ஒ.கே. தான் சார். ஆனா மேன்சன், லாட்ஜஸ்ல ரொம்ப ப்ராப்ளம் உண்டு சார். ஒரு மாதிரி அப்ரோச் பண்றாங்க! அதான் ஒரளவு அவாய்ட் பண்றது சார்!”

“இட் இஸ் நாட் லேடீஸ் ப்ராப்ளம், யுவர் கல்ச்சுரல் ப்ராப்ளம். இது கார்ப்பரேட் வேல்டும்மா! லேடீஸ் தனியா உலகம் முழுக்க வேலைக்கு போறாங்க. ப்ராப்ளம்னு நெனக்காம புராஜெக்டுனு நினைச்சுப் பாரு, நோ ப்ராப்ளம்! சிரிக்கிறது, பேசுறது, ஸ்மால் டச் இதெல்லாம் பஸ்ல போற லேடிசே அனுபவிக்கிறதுதாம்மா? இட்ஸ் நத்திங் மேட்டர். புரிஞ்சுக்குங்க! வேணும்னா உங்களுக்கு இன்னொரு ட்ரெயினிங் கிளாஸ் எடுக்க சொல்றேன்… ஒ.கே.ம்மா? பெஸ்ட் ஆஃப் லக்!”

முருகேசின் வார்த்தைகளின் அர்த்தங்கள் அவள் மனத்திரையில் புழுக்களாய் நெளிந்தாலும், குடும்பச் சூழல், வயதான தாய், தகப்பனின் வருமானமற்ற நிலையெல்லாம் சேர்ந்து மலைப் பாம்பாய் வளைக்க மனதை சமாதனப்படுத்திக் கொண்டாள்.

”என்ன ராதா! வழக்கம் போல குழப்பமா? இப்படியே கொழம்பி கொழம்பி தான் எனக்கும் ஏழு வருசம் ஒடிப்போச்சு புள்ள! படிப்புன்னு, வீடுன்னு த்ரி இன் ஒன்னும் ஜில்லட்ல பழகிப் போச்சு… ரொம்ப திங்க் பண்ணாதே! அப்புறம் வாழவே புடிக்காது!

“அதுக்காக இப்படிதான் வாழணும்னு ஆசப் படவே கூடாதா? இந்த லட்சணத்துல வீட்ல மாப்பிள்ள வேற பாத்திருக்காங்க. இந்த வாரம் பொண்ணு பாக்க வர்றாங்களாம்” சலிப்போடு வார்த்தைகளை உதிர்த்தாள் ராதா. ”அட நல்ல விசயந்தான.. எதுக்கு அலுத்துக்குற! அது சரி, நம்மள மாதிரி ஆளுக்கு கேன்வாசுக்கு எக்ஸ்ட்ரா டோர் மாதிரிதான் மேரேஜூம். மொதல்ல சுவாரசியமா இருக்கும், முடிவு ப்ளேடா இருக்கும். ஹா…ஹா…” மனம் விட்டு சிரித்தாள் மஞ்சுளா.

”ஏண்டி! எல்லாமே உனக்கு விளையாட்டு தானா? நானே வீட்டு விருப்பத்துக்காக எல்லாத்தையும் செய்ய வேண்டியிருக்குதேன்னு கவலைல இருக்கேன்.”

”ஏண்டி! நெகட்டிவா நெனச்சுகிட்டு.. ஆம்பளல ஒருத்தன் கூடவா நல்லவன் இல்ல! ஒரு வேளை நல்லவனா இருந்து, உனக்கு ரெஸ்ட் கொடுத்து தாங்குறவனா கெடச்சா லக்கு தான! அப்படி யோசிச்சு பாரு!”

”எப்புடி யோசிச்சாலும் சேல்ஸ் கேர்ள் டார்கெட் முதலாளிக்குத்தான் லாபம். லைஃப் மட்டுமாவது நம்ப விருப்பத்துக்கு நடக்குதா பார்ப்போம். சரி இன்னிக்கு உனக்கு எந்த ஏரியா?”

“நான் திருவல்லிக்கேணி மேன்சன்ஸ் போறேன்…” ”பாத்துடி! பயப்படாதே. பெரிசுங்களுக்கு பசங்க எவ்வளவோ மேல்!” இருவரும் அனுபவங்களை நினைத்து சிரித்துக் கொண்டே நகர்ந்தனர்.                                     08-shortstory-2

ம்பி, பொண்ண நல்லா பாத்துக்க! அப்புறம் வந்து சரியா கவனிக்கலேன்னு கேட்டா ரெண்டாவது டைம் லாம் வர முடியாது. ஆமா…!” அமைதியான சூழலை கொஞ்சம் நகைச்சுவையாக்குவது போல பெரியவர் பையனை சீண்டினார்.

தினந்தோறும் பல பார்வைகளை எதிர்கொண்டு பழகிய ராதாவுக்கு அவனது பார்வையில் தெரிந்த புதிய எதிர்பார்ப்பை தானும் எதிர்கொண்டு பார்த்தாள். சம்பிரதாயமான எல்லா பரிமாறல்களும் முடிந்தவுடன் பையன் சார்பாக திரும்பவும் பெரியவரே முன்வந்து பேசினார்.

“இதுல சுற்றி வளைச்சு பேசுறதுக்கு ஒண்ணுமில்ல. எல்லாம் ஏற்கெனவே பெரியவங்க பேசியதுதான். ஒரு சம்பிரதாயத்துக்காக பையனும், பொண்ணும் பாத்தாச்சு. பையன்  புடிச்சிடுச்சின்னுட்டான். அது தெரிஞ்ச கத தான்… அப்புறம் உன் ஃபோன் நம்பர் தாம்மா! அவன் பிறகு உன்னோட பேசணுமாம். நேர்லயே பேசுடான்னா, இந்தக் காலத்துல போயி இவன் தயங்குறான்!” என்ற பெரியவரிடம் தனது செல்பேசி எண்ணை ராதா சொல்லவும் அவன் தனது செல்பேசியில் அதனைப் பதிந்து கொண்டான். விடைபெறும் போது மீண்டுமொரு முறை அவனை நம்பிக்கையாய் பார்த்துக் கொண்டாள்.

”ராதா! நம்ம சக்திக்கு இந்த வரன் கெடச்சதே பெரிசு. பொண்ண புடிச்சிருக்கிறதால நீங்க போடுற பவுண தாண்டி வேற எதுவும் வேணாம்னுட்டான். பையன் வீட்லயும் நம்மள மாதிரிதான். பெரிய வசதி எல்லாம் இல்லை. இப்ப தான் வேலைக்கு போயி முன்னேறி வர்றவன். ஒரே தங்கச்சிதான். அதுனால உன்ன தோதா வச்சுக்குவான். என்னடா அப்பா பெரிய இடமா பாக்கலியேன்னு எதுவும் நெனைக்காதே! நம்ம சக்திக்கு அவ்வளவுதான்.” என்றார் அப்பா.

பையனை அனுப்பிவிட்டு வந்த பெரியவர், ”அட நீங்க வேற! பையனுக்கு என்ன கொற! அவனும் பாலிடெக்னிக் வரைக்கும் படிச்சிருக்கிறான். எக்ஸ்பீரியன்ஸ் ஆயி வேற கம்பெனி போனா சம்பளம் கூடும். அவனும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான். என்ன.. நீங்க சொன்ன மாதிரி அந்த பவுண மட்டும்  கொறை வைக்காம, பாப்பா ஆபீசுல லோனு வாங்கியாவது போட்டுடுங்க! யார் தான் கைல வச்சிகிட்டு செய்யுறா? கடன பாத்தா வரன பாக்க முடியாது. உங்களுக்கும் வயசாயிட்டே போவுது! ரெண்டாவது, நல்ல பையனா கெடைக்கிறது கஷ்டம். என்ன பாப்பா! நான் சொல்றது!” எதிர்பார்ப்புடன் கேட்க, “ம், ஒன்னும் கொற இல்ல மாமா! பாத்துக்கலாம்” என்று சுருக்கமாக விடையளித்தாள் ராதா.

”அதான் படிச்ச பொண்ணுங்கறது. விசயத்த ஷார்ப்பா புரிஞ்சுகிச்சு! அது அது குடும்பத்த அது அது எடுத்துக்கும். நீங்க பழச பேசிகிட்டே இருக்காம ஆக வேண்டியத பாருங்க. அப்புறம்.. வாறேன் பாப்பா!”

செல்பேசி எண் வாங்கியதிலிருந்து அவனிடம் மனம் விட்டு சில விசயங்களைப் பேச ராதா துடித்துக் கொண்டிருந்தாள். தானாக அவன் அழைத்துப் பேசும் தருணத்தை ஆவலுடன்  எதிர்பார்த்து ஒரு வகையில் மனம் ஏங்கியது. முக்கியமாக தனக்கென கணவனாக வரப்போகும் அவனது வார்த்தைகள் காதலாய் பொழியும் போது, உரிமையுடன் அவனிடம் சொல்லி ஒரு வருடத்திற்காவது இந்த வேலைச்சூழலை விட்டு விட்டு, நிதானமாக தினமும் பல விசயங்களை அனுபவித்து, வீட்டில் ஓய்வெடுத்து சில நாட்களாவது வாழ வேண்டும் என அவள் மனம் ஏங்கியது.

தோள் சுமையை மாட்டிக் கொண்டு “சார் ஜில்லட் த்ரி பிளேடு, ஸ்மூத் சேவ்” இந்த வசனத்தை சில நாட்களாவது உச்சரிக்காமல், உச்சி வெயிலில் தெருத் தெருவாய் சுத்தாமல், கொஞ்ச நாளாவது ஓய்வெடுத்து, பரபரப்பின்றி வாழப் பழகி, பின்பு வேலைக்கு செல்ல வேண்டும். அதுவும் வேறு வேலைக்குப் போக இடையில் ஏதாவது பயிற்சி கூட எடுத்துக் கொள்ளலாம்… என்ற தனது நீண்ட நாள் விருப்பத்தை தனக்குரியவரிடம் மனது விட்டு பேசிவிட வேண்டும், தனது உணர்ச்சிகளுக்கு இவனாவது செவி சாய்ப்பான், ஏனெனில் எனக்குரியவன்.. என்று பலவாறு எண்ணியபடியே அவள் சிறிது கண்ணயற செல்பேசி சிணுங்கியது.

அவனே அவனேதான். வேறு யார் இந்நேரம் அழைப்பது.. சற்று ரகசியம் காப்பது போல் தள்ளிப்போய் செல்பேசியை எடுத்தாள்.

“ஹலோ! நான் தான். டிஸ்டர்ப் இல்லயே! தூங்கிட்டீங்களா?”

”இல்ல! ஃபோனை எதிர்பார்த்தேன்”

”அப்படியா! நான் லக்கி. என்ன புடிச்சிருக்கா?”

”ம்.. ரொம்ப… வெளில பாக்க வந்திருக்கலாம்ல?”

”சாரி! நீங்க எப்புடியோன்னு நான் யோசித்து.. அப்புறம் பர்சனலா ஒரு விசயம். அத பேசத்தான் கூப்பிட்டேன்…”

”சொல்லுங்க! பர்சனலா பேசத்தான் நானும் ஆசப்பட்டேன்.”

”ரெண்டு பேரும் ஒரே மாதிரியே யோசிச்சிருக்கோம். எனக்கு  உங்கள ரொம்ப புடிச்சிருக்கு! ப்ராங்கா பேசுறீங்க… நேர்ல பேச டயம் இல்லாததால போன்லயே பேசுறேன்… கேக்குறீங்களா?”

”என்னா தயங்குறீங்க. பேசுங்க! கேக்குறேன்.”

“தப்பா எடுத்துக்காதிங்க! என்னடா இப்படி கேக்குறேன்னு..” இழுத்தான்.

”வேறு ஏதுமோ?” என ஒரு கணம் துணுக்குற்று யோசித்தவள், ”சரி! எதுவா இருந்தாலும் சொல்லுங்க!”

“இல்ல.. எனக்காக உங்ககிட்ட நான் கேக்குறது, நம்ம மேரேஜ் முடிஞ்சப்புறம் ஒரு வருசமாவது கட்டாயம் நீங்க இப்ப பாக்குற வேலைக்கே போங்க! நிறுத்திடாதீங்க. ஏன்னா? அத நான் சொல்ல மறந்திட்டேன். சில பேரு மேரேஜ் ஆனவுடன் வேலைய விட்டுடு வாங்க, பிறகு பாக்கலாம்னு சாதாரண வேலதானேனு விட வேணாம். ஏன்னா.. எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு. வண்டிக்கு, தங்கச்சி படிப்புக்குன்னு நிறைய லோன் போட்டுருக்கேன்.”

”நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போனாதான் லைஃப் ஸ்மூத்தா போகும். இன்னைக்கு சிக்சுவேசன்ல இருக்குறத விட்டுட்டு பிறகு செட் ஆவறது ரொம்ப கஷ்டம். ஸ்டாட்டிங்கே நம்ப லைஃப் கஷ்டமாயிடும். இதெல்லாம் உங்க மாமாகிட்டே ஏற்கெனவே சொன்னேன். அவுரு சொன்னாரான்னு தெரியாது! அதான் ஃபிராங்கா மனம் விட்டு பேசுறேன். தப்பா எடுத்துக்காதீங்க! மனசுல பட்டத பேசுறேன். என்னங்க!”

என்னென்னவோ பேச நினைத்த ராதா குரல் கம்மிக்கொண்டே போக “ஊம்… சரிங்க…! ஒண்ணுமில்ல. சும்மாதான்! ஆமாம். நேர்ல பாக்கலாம்…” வார்த்தைகள் தொடர்பற்று தன் குரல்தானா என்று தானே சந்தேகப்படும் அளவுக்கு அவளது உள்ளுணர்வு அவளிடமிருந்து அந்நியப்பட்டிருந்தது. செல்பேசியை வைத்துவிட்டு, முகம் திருப்பிய போது ஜில்லட் ரேசர் பாக்கெட் கண்ணுக்கு நேரே மின்னியது. அதையே உற்றுப் பார்க்க பார்க்க, மென்மையாக செதுக்கும் ஜில்லட்டில் அவள் முகத்தை தவிர அனைவர் முகமும் தெரிந்தது!                                                                                                     

-துரை.சண்முகம்
__________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________

  1. “இட் இஸ் நாட் லேடீஸ் ப்ராப்ளம், யுவர் கல்ச்சுரல் ப்ராப்ளம். இது கார்ப்பரேட் வேல்டும்மா! லேடீஸ் தனியா உலகம் முழுக்க வேலைக்கு போறாங்க. ப்ராப்ளம்னு நெனக்காம புராஜெக்டுனு நினைச்சுப் பாரு, நோ ப்ராப்ளம்! சிரிக்கிறது, பேசுறது, ஸ்மால் டச் இதெல்லாம் பஸ்ல போற லேடிசே அனுபவிக்கிறதுதாம்மா? இட்ஸ் நத்திங் மேட்டர். புரிஞ்சுக்குங்க! வேணும்னா உங்களுக்கு இன்னொரு ட்ரெயினிங் கிளாஸ் எடுக்க சொல்றேன்… ஒ.கே.ம்மா? பெஸ்ட் ஆஃப் லக்!”

  2. சம்பவங்கள் புதிதுதானே தவிர இது பன்னேடுங்காலந்தொட்டு இருப்பதுதானே!ஆனாலும் அவஸ்தைகள் எப்போதும் அவஸ்தைகள் தான்.கால வேறுபாடே இல்லை.அதை மறுப்பதற்கில்லை!

  3. எந்த இலக்கியத்தில் அடிப்படையும் ஒரு எளிய மனிதனுக்கு நம்பிக்கை அளிப்பாதாக இருக்கவேண்டும். ஆனால் எந்த சிறு கதையில் ……..?

  4. அன்புள்ள துரை.சண்முகம் ,

    ஜெயமோகன் கதைகளில் இருந்து இந்த கதையை எந்த வகையில் வேறுபாடு உள்ளது?[விதிக்கப்பட்டதை வாழவேன்டும் என்ற கருத்தாக்கம்]

    துரை.சண்முகம் அவர்களின் கவியில் உள்ள காரம் இந்த கதையிலும் உள்ளது. ஆனால் ..

    எந்த இலக்கியத்தின் அடிப்படையும் ஒரு எளிய மனிதனுக்கு நம்பிக்கை அளிப்பாதாக இருக்கவேண்டும் அல்லவே ?

    ஆனால் எந்த சிறு கதையில் ……..?

    அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

  5. அன்புள்ள துரை.சண்முகம் ,

    இந்த கதையின் மு டி வு குறைந்தது இப்படியாவது இருந்தால் சற்று நம்பிக்கை அளிப்பாதாக இருக்கும்.

    ———————————————————————————————-
    என்ன வேலை செய்ரீங்க என்றான் ?
    சொன்னதும் பதறி போய் , நான் சின்னதா கடை வைத்து தரேன் நீங்க recharge ,xerox பண்ணுக என்றன்!!!
    ———————————————————————————————-

    Note: This is the true story of a little girl who care her family by only getting income from her small business recharge and xerox in porur–chennai.

    ஜெயமோகன் கதைகளில் இருந்து உங்கள் கதையை எந்த வகையில் வேறுபாடு உள்ளது?[விதிக்கப்பட்டதை வாழவேன்டும் என்ற கருத்தாக்கம்]

    துரை.சண்முகம் உங்களின் கவியில் உள்ள காரம் இந்த கதையிலும் உள்ளது. ஆனால் ..

    எந்த இலக்கியத்தின் அடிப்படையும் ஒரு எளிய மனிதனுக்கு நம்பிக்கை அளிப்பாதாக இருக்கவேண்டும் அல்லவே ?

    ஆனால் எந்த சிறு கதையில் ……..?

    அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

  6. அன்புள்ள துரை.சண்முகம் ,

    [1]உங்கள் கதை முற்றிலும் பின்நவீனத்துவம் அடிப்படையாக கொண்டது.

    [2]இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.

    [3] பின்நவீனத்துவம் நான்கு விஷயங்களை மறுக்கிறது. 1. அது எதையும் உலகளாவியதாக பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது 2. அது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது. 3. அது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண்இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கை ஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது என நினைக்கிறது 4. எல்லாவற்றையும் முழுமையாக தர்க்கப்படுத்தமுடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம்போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள்.

    [4]பின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. உள்ளுக்குள்ளேயே சுழலக்கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், பின்தொடரும் நிழலின் குரல் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி, வெளியேற்றம் முதலியவை இவ்வகைப்பட்டவை.

    [5]பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் கொற்றவை அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின்நவீனத்துவம் வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்

    நன்றி:
    ta.wikipedia.org/wiki/பின்நவீனத்துவம்

    ‎அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

  7. அன்புள்ள துரை.சண்முகம் ,

    பின்நவீனத்துவம் – சில அடிப்படைகள்
    வெள்ளி, 20 ஃபிப்ரவரி 2004
    பின்நவீனத்துவச் சூழலை ஆங்கிலக் கவிஞர் (நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட) ஜான்டன் எழுதிய உலகத்தின் ஆண்டுவிழா என்னும் கவிதையின் ஒரு பகுதியைக் கொண்டு விளக்கலாம்.

    புதிய தத்துவம் எல்லாவற்றையும் சந்தேகத்திற்குள்ளாக்குகிறது…

    எல்லாம் உடைந்துபோயின, எல்லா ஒருங்கமைவும் போய்விட்டது.

    எல்லாமே அளிப்புகளும் தொடர்புறுத்தலும் ஆகிவிட்டன…

    நன்றி:- – க. பூரணசந்திரன்
    எம் தமிழ் ஆசிரியர், பிஷப் ஹீபர் காலேஜ், திருச்சி.

    அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

  8. அன்புள்ள துரை.சண்முகம் ,

    நீங்கள் எப்போது நவீனத்துவம் எனும் சிறகுகளை உடைதீர்கள் ?

    நீங்கள் எப்போது பின்நவீனத்துவம் நவீனத்துவம் எனும் சிறகுகளை ஒட்டிகொண்டிர்?

    தடவுதல்,தொடுதல் உடன் அதே வேலை செய்ய

    அந்த சிறு பெண்ணுக்கு ஏன் இந்த “இறுதி முடிவு” சாபம்!

    நீங்கள் மனசாட்சி உள்ள கதை-ஞன் என்றால்

    முடடிவை மாற்றி இப்படி வைகலாமே !

    “—— என்ன வேலை செய்ரீங்க என்றான் ?

    சொன்னதும் பதறி போய் , நான் சின்னதா கடை வை த்து தரேன்

    நீங்க recharge ,xerox பண்ணுக என்றன்—–”

    அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

    Note:
    My finishing of this story is the true story of a little girl who care her family by only getting income from her own small business stationary recharge and xerox in porur–chennai.

  9. அன்புள்ள துரை.சண்முகம் ,

    [1] திரு பெருமாள்முருகன் அவர்கள் எழுதிய கங்கணம் என்ற நெடுங்கதையில் , நீண்ட நாட்கள் பெண் கிடைகாமல் திருமண த்துக்கு ஏங்கும் முதிர் இளைஞன் இறுதியில் தன் உயிரையும் பணயம் வைத்து [ தற்கொலைக்கு முயன்று பின்பு அம்மாவிடம் சம்மதம் பெற்று ] கலப்பு திருமணம் செய்து கொள்வான்.

    [2] கொங்கு வேளாளர் மக்களின் வரட்டு மரியாதையை காட்டும் இந்த நெடுங்கதை, இறுதியில் நவீனத்துவத்துவத்துடன் கலப்பு திருமணதில் முடியும். “தலித் மற்றும் கொங்கு வேளாளர்” மக்களின் உறவை இந்த நெடுங்கதை வெளிகாட்டும்

    ஆனால் உங்கள் கதையின் முடிவு எவ்வளவு பிற்போக்கு தனமாக உள்ளது என்று உணர்ந்து இருப்பீர்கள் !!!

    அன்புடன் ,
    கி.செந்தில்குமரன்

  10. இதுபோன்ற ஒரு உண்மை கதையை நான் சந்தித்த விற்பனை
    பிரதியைப் பற்றி எழுத நினைத்தேன் நான் எழுத நினைத்ததில்
    50 சதவீதம் இக்கதையில் உண்டு நெகிழ்ச்சியான பதிவு

    நன்றி துரை.சண்முகம்

  11. !”இப்படித்தான் ஒவ்வொரு வேலைகளில் ஒவ்வொருத்தர்களின் வாழ்வும் வளமும் புதைந்து கொண்டே செல்கிறது. தீர்வு தெரிந்தாலும்.தீர்வு வந்தபாடில்லை

Leave a Reply to K.Senthil kumaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க