Thursday, May 13, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!

தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!

-

மூத்த தோழர் ஆர். சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பும்,
சிபிஎம் மாஃபியாக் கிரிமினல் கும்பலின் கொலை வெறித் தாக்குதல் முயற்சியும்

ழைக்கும் மக்களின் விடுதலைக்கான கட்சி என்று வாய்ச் சவடால் அடித்து வரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியே அல்ல, கொலைவெறி மாஃபியா குண்டர்களைக் கொண்ட கட்சி என்பதை கடந்த 18.10.2013 நள்ளிரவி்ல், உழைக்கும் விவசாயக் கூலித் தொழிலாளிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த முயன்றதன் மூலம் நிரூபித்துள்ளது.

தோழர் ஆர் சின்னப்பா
தோழர் ஆர் சின்னப்பா

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் ஆர். சின்னப்பா. அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை மாவட்டத்தில் நிலவி வந்த நிலவுடைமை ஆதிக்கத்தின் கொடுமைகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களின் உறுதி மிக்க போராளியாகத் திகழ்ந்தவர். ஆரம்ப கால கட்டங்களில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு, பெரியாரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு, கண்கொடுத்தவனிதம், காவாலக்குடி பகுதிகளில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தியவர்.

பின்னர், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கடும் ஒடுக்கு முறை ஆயுதங்களான, சாணிப்பால், சவுக்கடி கொடுமைகளுக்கு எதிராக, பண்ணை அடிமைகளாய் இருந்த கூலி விவசாயத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி போராடியவர். ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்ட பின்னர், சி.பி.எம். கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் வளர்ச்சிக்காக அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர்.

கிழக்கு தஞ்சை மாவட்டம் முழுவதும் சைக்கிளிலேயே பயணித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை கட்ட அரும்பாடுபட்டவர். திருவாரூர், குடவாசல், நன்னிலம் தாலுக்கா பகுதிகள் எங்கும் தோழர் ஆர். சின்னப்பா பெயரை சொன்னாலே, அப்பகுதியின் உழைக்கும் மக்கள் அவரின் தன்னலமற்ற சேவையை இன்றும் நினவு கூர்கிறார்கள். திட்டாணிமுட்டம் பகுதியில் ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருந்த புறம் போக்கு இடங்களில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு குடிசைகள் கட்டிக் கொடுப்பதற்கு அவர்களை ஒன்று திரட்டி போராடி அதில் வெற்றி கண்டவர். திட்டாணி முட்டம் சி.பி.எம். கட்சிக்கு அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து அந்த இடத்தில் கான்கிரீட் கட்டிடம் கட்டி முடிக்க அரும்பாடுபட்டவர். இன்னும் இப்பகுதியில் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகள் சொல்லி மாளாது.

நினைவுச் சின்னம்
நினைவுச் சின்னம்

இவ்வளவு தியாகங்கள் செய்த தோழர் ஆர் .சின்னப்பா அவர்களை சி.பி.எம். கட்சியின் சீரழிவு தேர்தல் பாதை, அடித்து துவைத்து அவரை எழுந்து நடமாட முடியாத அளவுக்கு முடமாக்கி விட்டது. பொறுக்கி தின்பதற்காகவே ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்றிய சி.பி.எம் கட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியின் கணவரும், சி.ஐ.டி.யூ. சங்கத்தின் மாவட்டத் தலைவருமான டி. முருகையன் என்பவர் தன் மனைவி ஊராட்சித் தலைவராக இருந்த பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் சாலை போடுவதற்கு தோழர் சின்னப்பாவின் வயல்களை அத்துமீறி ஆக்கிரமித்து, அவர் வளர்த்து வந்த மரங்களை வெட்டி சாய்த்து, வேலிகளை அழித்து கொடுமைகளை நிகழ்த்தினான். சி.பி.எம். கட்சியின் தூண்டுதலோடு இது நடத்தப்பட்டது. தனிப்பட்ட பகைமையும், காழ்ப்புணர்ச்சியுமே இதற்கு காரணம். ஏனென்றால், இவர்கள் ஊர்ச்சொத்தை கொள்ளை அடிப்பதை, ஊராட்சியில் முறைகேடுகள் செய்வதை, கிராமக் கமிட்டியில் உள்ள பொது நிதியை சி.பி.எம் கட்சிக் காரர்கள்  முறைகேடாக பொய்க் கணக்கு காட்டி கொள்ளையடிப்பதை, அப்பாவி கூலித் தொழிலாளிரகளை சாதி கட்டுமானம் செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை ஒரு மூத்த  கம்யூனிஸ்டு தோழர் என்ற முறையிலும், தான் வளர்த்த கட்சி தன் கண் முன்னாலேயே சீரழிவுபாதையில் போவதை பொறுத்துக் கொள்ள முடியாமலும் அடிக்கடி தட்டிக் கேட்டவர் தோழர் சின்னப்பா.

சி.பி.எம். கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கிராம கமிட்டி கூட்டத்தில் தவறு செய்த ஊராட்சி மன்றத் தலைவரையும், அவரது கணவரையும் ஊர்ப் பணத்தை கொள்ளையடித்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தோழர் சின்னப்பாவையும் அவருக்கு ஆதரவாக நின்று நியாயம் கேட்ட மேலும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் சாதிக் கட்டுப்பாடு போட்டு ஊரை விட்டே ஒதுக்கி வைத்து அட்டூழியம் செய்தார்கள், தலித் குடியிருப்பில் பெரும்பான்மையாக  உள்ள சி.பி.எம் கட்சியினர்.

memorial-22011-ல் சின்னப்பாவின் இடத்தை அத்து மீறி ஆக்கிரமிப்பு நடத்திய  சி.பி.எம் கட்சியை தட்டிக் கேட்டதால், அவர்கள்  சின்னப்பாவை கொடூரமாக தாக்கியதில் அவரது இடுப்பு எலும்பு முற்றிலுமாக முறிந்து, 6 மாதம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் படுத்த படுக்கையாக கிடந்து கடந்த 05.10.2013 அன்று காலமானார்.

இப்பகுதியில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர் என்ற நோக்கத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல், அனைத்து ஜனநாயக  சக்திகளுக்கும், சி.பி.எம். கட்சியின் மூத்த தோழர்கள் உட்பட அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, அவருக்கு கொடுமைகள் செய்த சி.பி.எம் கட்சி கிராம கமிட்டிக்கும் தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் துக்க  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சி.பி.எம். கட்சித் தலைமை வழக்கம் போல் சாதிக் கட்டுப்பாடு போட்டு தோழர் சின்னப்பா உறவினர்களைக் கூட இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள தடை செய்தனர். சில  சி.பி.எம். தோழர்கள்  “எங்களை உருவாக்கிய தலைவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு தடை போட நீ யார்?” என்று ஆவேசப்பட்டு கடைத் தெருவில் இருந்த சி.பி.எம். கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறைந்த தோழருக்கு நினைவு கல்வெட்டு அமைப்பதற்கு வி.வி.மு, பு.மா.இ.மு, தோழர்களும் கிராம கமிட்டி மற்றும் மாதர் சங்கத் தோழர்களும் கடைத்தெரு அருகே மற்ற அரசியல்  கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைந்திருந்த இடத்தில் நினைவு கல்வெட்டு அமைக்க முடிவு செய்து கட்டுமான பணிகள் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது 17.10.2013 வியாழக்கிழமை மாலை இரண்டு போலீசுக் காரர்கள் வந்து கல்வெட்டு அமைக்கக் கூடாது என்று புகார் வந்துள்ளது, பணிகளை நிறுத்தி விட்டு கொரடாச்சேரி காவல் ஆய்வாளரை சந்திக்கும்படியும் கூறினார்கள். காவல் ஆய்வாளரைச் சந்தித்த போது, தன்னிடம் நேரடியாக புகார் எதுவும் வரவில்லை என்றும் குடவாசல் தாசில்தார் சொன்னதன் பேரில்தான் போலீசை அனுப்பியதாகவும், வருவாய்த் துறை அதிகாரகளைச் சந்திக்கும்படியும் கூறினார். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி விட்டு, கட்டுமானப் பணியை தோழர்கள், தொடர்ந்தார்கள்.

memorial-1மறுநாள், கொரடாச்சேரி காவல் உதவி ஆய்வாளர் கண்ணாகாந்தி என்பவரை சி.பி.எம் பொறுப்பாளர்கள் தூண்டி விட்டு கல்வெட்டு கட்டுவதை நிறுத்துங்கள் என்று சொன்னதன் அடிப்படையில் மேற்படி உதவி ஆய்வாளர் நமது தோழர்களிடம் கல்வெட்டு கட்டும் பணியை நிறுத்தச் சொன்னார். அதற்கு நமது தோழர்கள், இங்கே நாங்கள் கல்வெட்டு அமைக்கக் கூடாது என்றால் இங்கு இடம் பெற்றுள்ள மற்ற அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் அகற்றுங்கள் என்று வாதிட்டனர். பிறகு கல்வெட்டு கட்டும் வேலையை தொடர்ந்தனர்.

மூத்த தோழர் சின்னப்பாவுக்கு நினைவு கல்வெட்டு அமைப்பதை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மட்டத்திலும் இதை பிரச்சனையாக்கி கொண்டு சென்ற அவர்களது முயற்சி நமது தோழர்களின் உறுதியான நடவடிக்கையின் மூலம் தோல்வியை தழுவியதால் வெறிகொண்டு அலைந்தார்கள் சி.பி.எம் கட்சியினர். இரவோடு இரவாக நினைவு கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கி விட வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டினார்கள். திட்டமிட்டபடியே 18.10.2013 வெள்ளிக் கிழமை இரவு சுமார் 60-70 பேர் கொண்ட குண்டர் படை முழு குடிபோதையில் அரிவாள், கம்பு, உருட்டுக் கட்டை, கடப்பாறை போன்ற ஆயுதங்களோடு நள்ளிரவு 1.30 மணிக்கு கல்வெட்டை உடைக்க வந்தார்கள்.

இவர்களது சதித்திட்டத்தை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்த நமது தோழர்கள் ஆண்,பெண், சிறுவர்கள் உட்பட 25 பேர் நினைவு கல்வெட்டை காத்து நின்று மூத்த கம்யூனிஸ்ட் தோழரின் கல்வெட்டை உடைக்க வருகிறீர்களே, நீங்கள்  கம்யூனிஸ்ட்தானா என்று உறுதியுடன் எதிர்த்தனர். எல்லோரும் உரத்த குரலில் தோழர் சின்னப்பா அவர்களின் புகழையும், நக்சல்பாரி எழுச்சி முழக்கங்களையும் எழுப்பியாவறு நின்றார்கள். இந்த முழக்கங்களைக் கேட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தை நோக்கி கூட ஆரம்பித்ததும் சி.பி.எம் கயவர்கள் உருட்டுக் கட்டைகளையும், தடிக் கம்புகளையும் அவர்களுடைய சி.பி.எம் கொடிக்கட்டைகள் மீது வைத்து விட்டு ஓடி விட்டார்கள்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் நிலைமை விபரீதமாக போவதைக் கண்டு குடவாசல் வட்டாட்சியர் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்தார்கள். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது,  நமது தோழர்கள் வட்டாட்சியரிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துகிற அளவிற்கு இங்கு என்ன மதக் கலவரம், சாதிக் கலவரம் எதுவும் நடந்ததா? ஒரு கிரிமினல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களே, நடந்த சம்பவத்தை  நடுநிலையோடு விசாரிக்க நீங்கள் தவறி விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பியதும் வட்டாட்சியர் மூக்கு உடைபட்டு, வேறொரு நாளில் இதை நான் விசாரிக்கிறேன், அது வரை எந்த பணிகளும் வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டதன் பேரில் தோழர்கள் வந்து விட்டார்கள்.

திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், பு.மா.இ.மு, வி.வி.மு. தோழர்கள்  கலந்து கொண்டார்கள். நினைவு கல்வெட்டை திறந்து வைத்து பட்டுக் கோட்டை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் எம்.மாரிமுத்து அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

படத் திறப்பு நிகழ்ச்சிக்கு வி.வி.மு. தோழர் தரும ஞானசேகரன் தலைமை தாங்கினார். அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும், வி.வி.மு தோழர்கள் டி வினோதகன், கு.ம.பொன்னுசாமி, பு.மா.இ.மு. தோழர் எம். முரளி. பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத், பட்டுக் கோட்டை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் எம். மாரிமுத்து ஆகியோர் அஞ்சலியுரை நிகழ்த்தினார்கள்.

இறுதியில் ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள், மறைந்த தோழர் சின்னப்பா அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்க்கையையும் அவரின் தியாகங்களையும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டங்களில் பல முறை சிறை சென்றதையும் அவர் இறந்த பின்பும் அவருக்கு நினைவு கல்வெட்டு அமைப்பதற்கு தோழர்கள் போராடியதையும் எடுத்து உரைத்து அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

கம்யூனிசப் பண்புகளில் இருந்து முற்றாக விலகியும், நடந்துள்ள தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுத்தும் கிரிமினல் மாஃபியா கும்பல்களை போல செயல்படும் சி.பி.எம் கட்சியினரின் பித்தலாட்டங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்காக நக்சல்பாரிப் புரட்சிப் பாதையில் மக்களை அணி திரட்டுவதே மறைந்த தோழர் சின்னப்பா அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நினைவஞ்சலியாக இருக்கும் என்பதை இந்நிகழ்ச்சி அனைவருக்கும் உணர்த்தியது.

அழைப்பிதழ் : [பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி – தமிழ்நாடு
திருவாரூர்
உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்
தொடர்புக்கு :  தோழர் கு.ம.பொன்னுசாமி.
பேசி : 9487864560

  1. “சி.பி.எம் கயவர்கள் உருட்டுக் கட்டைகளையும், தடிக் கம்புகளையும் அவர்களுடைய சி.பி.எம் கொடிக்கட்டைகள் மீது வைத்து விட்டு ஓடி விட்டார்கள்.”! இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதானே! அந்தச் சிவப்பு நிறத்தையும் அரிவாள் சுத்தியையும் எடுத்துவிட்டு, காவி நிறம், வீச்சரிவாள், சோடா பாட்டில் என்று ஒரு புதிய கொடியை வடிவமைத்தால் சி.பி.எம்மின் கட்சியின் கொள்கை மக்களுக்குத் தெரியும். இந்தத் தலைவெட்டி கச்சி விரைவில் தமிழகத்தில் இருந்து ஒழிவது நிச்சயம்.

  2. வேறொரு நாளில் இதை நான் விசாரிக்கிறேன், அது வரை எந்த பணிகளும் வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டதன் பேரில் தோழர்கள் வந்து விட்டார்கள்.

    அரசு அதிகாரிகல் கெஞசலுக்கு வந்து விட்டார்கள்..அப்படித்தான் பனிகல் செய்வொம் அன சொல்ல வேன்டும் தொலர்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க