’அசுரர் வாரம்’: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.
இந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின் விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
’அசுரர் வாரமும்’ அடையாள மீட்டுருவாக்கமும்
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில்(English and Foreign Languages University) நிர்வாகத்தின் துணையுடன் இந்துமதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP) யினால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, எப்போதும் போலவே மாணவர்களின் கடுமையான எதிர்ப்பயையும் மீறி நிர்வாகத்தின் பாதுகாப்புடன் இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.
அதை எதிர்க்கும் வண்ணமாகவும், திரிக்கப்பட்ட வரலாற்றினை மீட்டெடுக்கும் விதமாகவும் பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனை உடைய மாணவர்கள் தாங்களாகவே இணைந்து, பார்ப்பனியப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, திராவிடக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அசுரர் வாரம் (Asura Week) எனும் எதிர் கலாச்சார (Counter Cultural) விழாவினைக் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.
இந்துக்களின் பண்டிகைகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், சரசுவதி பூஜை போன்ற பண்டிகைகள் வெறுமனே பக்தி சார்ந்த பண்டிகைகள் மட்டுமல்ல, மாறாக இப்பண்டிகைகள் மிகவும் விசமத்தனமான உள்ளடக்கங்களைக் கொண்டவை. இவை இந்த மண்ணின் மைந்தர்களையும், நமது மூதாதையர்களான திராவிட மக்களையும் அசுரர்கள், அரக்கர்கள் மற்றும் கொடூரமானவர்கள் எனச் சித்தரித்தும், வந்தேறிகளான ஆரியர்கள் மேம்பட்டவர்களென கதை கட்டியும், ’இக்கொடிய’ அசுரர்களை, ’புனித’ ஆரியக் கடவுள்கள் கொல்லும் நிகழ்வுதான் இது போன்ற விழாக்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். பல நூறாண்டு காலமாக பார்ப்பனியத்தின் கொடூரக் கரங்களால் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் உழைக்கும் மக்களை பார்ப்பனியப் பண்பாட்டுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு சங்கப் பரிவாரங்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாறான கட்டுக் கதைகளின் மூலம் திராவிட மக்களை பார்ப்பனப் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு அடிமைகளாக்கி, அவர்களது கலாச்சார வரலாறுகளை அழித்து, அவர்களே அவர்களது பண்பாட்டு வீழ்ச்சியினைக் கொண்டாடும்படி செய்கின்ற, அதாவது திராவிட மக்களின் இறப்பை திராவிட மக்களே கொண்டாடும்படி செய்வதுதான் இது போன்ற விழாக்களின் உள்நோக்கம். தீபாவளி, ஓணம், துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் முறையே நரகாசூரன், மஹாபலி மற்றும் மகிசாசூரன் ஆகிய திராவிட மன்னர்களின் இறப்பைக் கொண்டாடுவதுதான் என்பதை நினைவில் கொள்க.
இவை போன்ற கட்டுக் கதைகள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் புனையப்பட்டு பார்ப்பனியப் பண்பாட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில் புகுத்தி, அதன் வழி பார்ப்பனிய மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முறைமையில்தான், விநாயகர் சதுர்த்தி என்ற பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படாத விழாவானது சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து தேசியக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக, ’திலகர்’ என்ற இந்துமத வெறியரால் இந்தியா முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக மாற்றப்பட்டது. ’இந்து’ என்ற பட்டியில் சட்ட ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இம்மண்ணின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், இவ்விழாக்களின் பின்னுள்ள அரசியல் பற்றி ஏதும் அறியாமல் இவை போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். மேலும் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி என்பது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்துமத வெறியர்களின் கைகளில் ஆயுதமாகப் பயன்படுகிறது.
இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து ’அசுரர் வாரம்’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தெலுங்கானா மாணவர்கள் கூட்டமைப்பு (TSA), தலித், ஆதிவாசி, சிறுபானமையின, பகுஜன் மாணவர்கள் கூட்டமைப்பு (DAMBSA), முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) ஆகிய மாணவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
’அசுரர்வார’ விழாவின் அடிப்படைகள் :
- இந்து மதப் புராணங்களை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு அரசியலின் முகத் திரையைக் கிழித்து அதன் ஒரு சார்புத் தன்மையை அம்பலப்படுத்தி, அசுரர்களாகவும், தீய செயல்களைச் செய்யும் அரக்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சித்தரிக்கப்படும் இம்மண்ணின் மைந்தர்களைப் பற்றிய புராணக் கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து எதிர் கதையாடல்களை (Counter Narratives) உருவாக்குதல். (பார்ப்பனியத்தை எதிர்த்து போராடிய இம்மண்ணின் மைந்தர்களது உண்மையான கதைகளை கொண்டாடுதல் – வினவு)
- திராவிட, பார்ப்பனிய எதிர்ப்புக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதன் வழியாக மறக்கடிக்கப்பட்ட திராவிட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தல் .
- கொலையைக் கொண்டாடுவதும், பகுத்தறிவுக்கு விரோதமானதாகவும், மூடநம்பிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதுமான பார்ப்பன இந்து மதப் பண்டிகைகளைப் புறக்கணித்து, உழைக்கும் மக்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கட்டமைத்தல்.
- நமது அன்றாட வாழ்க்கையில் நுட்பமாகக் கலந்து நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனிய விழுமியங்களைத் துடைத்தெறிதல்.
அறிவுசார் கல்விப் புலத்தில் திணிக்கப்படுகின்ற பார்ப்பனிய விழுமியங்களை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் வேறுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. சான்றாக, மஹிசாசூர விழா, நரகாசூர விழா, சரசுவதி சிலையை உடைத்தல், மாட்டுக் கறித் திருவிழா (Beef Festival) முதலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக் கழகத்தில் அசுரர் வாரம் (EFLU Asura Week) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 வரை நடைபெற்றது. ஆனால் இவ்விழா ஏற்படுத்திய அதிர்வுகளும், அது சார்ந்த சிந்தனைகளும் இன்னும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
’அசுரர் வாரம்’ விழா நிகழ்வுகள் :
- முதல் நாள்: ராவணன் தினம்
- இரண்டாம் நாள்: சூர்ப்பனகை தினம்
- மூன்றாம் நாள்: மகிசாசூரன் தினம்
- நான்காவது நாள்: தாடகை தினம்
- ஐந்தாவது நாள்: “இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற தலைப்பில்கருத்தரங்கம்.
இராவணன தினத்தில், இராமாயணத்தைக் கட்டுடைக்கும் எதிர் கதையாடலின் வடிவமாக, மூர்க்கமாகவும் கொடூர அரக்கத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்ட திராவிட மன்னனான இராவணனின் உருவத்தை முக ஓவியங்களாக வரையும் போட்டி நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் கலந்து கொண்டு மாவீரன் இராவணனின் உருவம் வரையப்பட்ட முகத்தோடும், இவர்களுடன் மற்ற மாணவர்களுமாக சுமார் 35-க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் ‘அய்யனார்’, ’மதுரை வீரன்’ போன்ற நாட்டுப்புற கடவுள்களின் உருவங்களையொத்த படங்களைக் கொண்ட பதாகைகளுடன்
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!
அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!
அசுரர் கலாச்சாரம் ஓங்குக!
அம்பேத்கர், பெரியாரின், பூலே சாதி மறுப்புக் கருத்துகள் ஓங்குக!
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே பல்கலைகழக வளாகத்தினுள் பேரணியாக வலம் வந்தனர்.
இராவணன் தின பேரணி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
திரண்ட பெருமுழக்கமாக பல்கலைக்கழக வாயிலை அடைந்த மாணவர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு பார்ப்பனியத்தின் நச்சு முகங்களை தோலுரிக்கும் விதமாகவும், திராவிடப் பண்பாட்டைப் போற்றும் விதமாகவும் முழக்கங்களிட்டனர். வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் முழக்கங்களையும், முகஓவியங்கள் மற்றும் பதாகைகளையும் கவனமாகப் பார்த்துச் சென்றார்கள்.
அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “ஏன் ஜெய் ராவாணா என்று முழக்கமிடுகிறார்கள்” என்று ஆர்வமுடன் கேட்டார். ”இவர்களெல்லாம் திராவிட குலத்தைச் சார்ந்தவர்கள்; நமது மூதாதையர்கள். ஆரியர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போரடியவர்கள். இவர்கள் தான் நமது வணக்கத்துக்குரியவர்கள்; ராமர், விநாயகர் போன்றோரெல்லாம் நமது தெய்வங்கள் இல்லை” என்று ஒரு மாணவர் விளக்கினார்.
சூர்ப்பனகையின் மூக்கு

சூர்ப்பனைகை தினத்தன்று, பெண்ணென்றும் பாராமல் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து, கடவுள் அவதாரத்தின் தனயனாகவும், மாவீரனாகவும் புராணத்தால் போற்றப்படும் இலக்குமணின் கையாலாகாத தனத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், சூர்ப்பனகையை போற்றும் விதத்திலும், ஆணாதிக்க எதிர்ப்பின் சின்னமாகவும் அறுபட்ட சூர்ப்பனகையின் மூக்கு உருவாக்கப்பட்டு, மாணவர்கள் கூடுகின்ற ’சாகர் சதுக்கத்தில் வைக்கப்பட்டது.

மகிசாசூரன் தினத்தன்று ”ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் திரைச்சீலை ஓவியம் (Canvas Painting) வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்,
- ‘சமணர்கள் கழுவேற்றப்படுதல்’
- ‘மகாபலி மன்னன் பார்ப்பன விஷ்ணுவைக் கொல்லுதல்’
- ‘பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள்’,
- ‘சாதிய ஆதிக்கம்’
போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் ‘இரணியன் நரசிம்மாவைக் கொல்வது’ என்ற ஓவியம் ஏ.பி.வி.பிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. ஏற்கனவே அசுரர் விழாவினால் கொதிப்படைந்திருந்த இந்துத்துவ ஆதரவு நிர்வாகமும், ஏ.பி.வி.பியும் விழாவை நிறுத்த ஏதாவதொரு ’போலியான’ காரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நரசிம்ம ஓவியம் அதற்கான வாய்ப்பாக அமைந்தது.


இந்நிலையில், ஏ.பி.வி.பி யின் தூண்டுதலின் பேரில் 15 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து ’இரணியன் நரசிம்மனைக் கொல்வது’ என்ற ஓவியத்தை நீக்கி விடும்படியும், துயிலுரிக்கப்பட்டு மூக்கறுபட்ட நிலையில் அபலையாய் நின்ற சூர்ப்பனகையின் ஓவியத்தை சீதாவின் நிர்வாண ஓவியம் என்று புரிந்து கொண்டு, அது அவர்களது மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் முறையிட்டனர். அது மட்டுமில்லாமல், அவர்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தின் முடிவில் ஓவியத்தை நீக்கமுடியாது என்றும், இதில் புதிதாக யாரையும் புண்படுத்தவில்லை என்றும், நூறாண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் நாங்கள் ஓவியமாக வரைந்திருக்கிறோம் என்றும் பதில்அளிக்கப்பட்டது. ஒன்றும் மறுமொழி சொல்லமுடியாமல் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில், வளாகத்தில் சுயமாக இயங்கும் திராணியற்று எதையுமே திரை மறைவில் ஆதிக்க, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் கைகோர்ப்போடு செயல்படுத்தும் ஏ.பி.வி.பி, அதன் ஆதரவுப் பேராசிரியர்கள் மூலம் நிர்வாகத்தில் புகார் செய்தனர். நிர்வாகத்தினரும் விழாவை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் இது பற்றி ஏதும் விசாரிக்காமல் உடனடியாக உஸ்மானியப் பல்கலைக் கழக காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்தனர்.
அன்று மாலையே காவல் துறையினர் பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்து அசுரர் தினவிழா ஏற்பாடு செய்த மாணவர்களை அழைத்து “நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று ‘அன்பாக’ எச்சரித்துச் சென்றனர்.
காவல் துறையினருக்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர விநாயகர் சிலை மதச்சார்பினமையின் அடையாளமாகவும், பிற மதத்தவரின் மத உணர்வை ஒரு சிறிதும் புண்படுத்தாத, புண்ணியம் தருகின்ற ‘கடவுளா’கத் தெரிந்தது போலும்! உச்சமன்ற நீதிபதிகளே ஆர்.எஸ்.எஸ் இன் கொ.ப.செவாக செயல்படும் போது பார்ப்பனிய அரசமைப்பின் ஏவல் அடிமைகளாகச் செயல்படும் காக்கிகளிடம் எப்படி மதச் சார்பின்மையை எதிர்பார்க்க முடியும்?
இந்த நிகழ்வுகளுக்குப் பின் ’அசுரர் வாரம் ’ விழாவைப் பற்றிய செய்திகள் அனைத்து செய்தித் தாள்களிலும் வரத் தொடங்கின. பெரும்பாலான செய்தித் தாள்கள் நிர்வாகம் சொன்னதைத்தான் அப்படியே வாந்தி எடுத்தன. சில நாளிதழ்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களின் தரப்புக் கருத்துக்களையும் செய்திகளாக வெளியிட்டன. நிர்வாகம், ஏ.பி.வி.பி மற்றும் காவல்துறை என பல்முனைகளில் இருந்து வந்த தாக்குதல்களையும் பொருட்படுத்தாது திட்டமிட்டிருந்தபடியே நிகழ்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டன.
தொடர்ந்து வந்த தாடகை தினத்தன்று ”ஆதிக்கத்தை எதிர்த்தல், கலாச்சார எதிர்ப்பை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் விவாத அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்ட ஏற்றுத் தாழ்வுள்ள சமூகத் தன்மைகள் விவாதிக்கப்பட்டன.
அசுர வார விழா நிறைவாக ”இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச் சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்றதலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் “துண்டி(Dhundi)” என்றநாவலை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர் யோகஷ் மாஸ்டர் கலந்துகொண்டு அவர் எழுதிய நாவலைப் பற்றி விளக்கிப் பேசினார். இந்நாவல் எப்படி கணத்தின் (குழு) தலைவனான கணபதி இப்பொழுதுள்ள விநாயகன் ஆக்கப்பட்டான் என்பது பற்றி ஆராய்ந்து எழுதப்பட்டதாகும்.
’விக்நாயக்’ (Vighnanayak) என்றால் தடைகளை உருவாக்குபவன் என்று பொருள். புராணங்களிலும் கூட விநாயகன் தீமைசெய்யும் கடவுளாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையைக் கூறியதற்காக, இந்நாவல் வெளியான கர்நாடகாவில், இந்து மதவெறி அமைப்பான ஸ்ரீராம்சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள், இந்நாவல் இந்து மக்களின் கடவுளான விநாயகனைக் கொச்சையாகச் சித்தரிக்கிறது என்றும், நாவலைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டதோடு, நாவலை எழுதிய யோகேஷ் மாஸ்டர் கைதும் செய்யப்பட்டார்.
பிணையில் வெளி வந்த அவர், கருத்தரங்கத்தில் இந்நாவலைப் பற்றியும், நாவல் வெளியான பிறகு தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் வி.பி.தாரகேஸ்வரும், உஸ்மானியாப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்.ஏ.சத்தியநாராயணாவும், ஆய்வு மாணவரும், களப்போராளியுமான சுதர்சனும் மதச்சார்பின்மை, விநாயகர் சதுர்த்தியின் வரலாறு, பார்ப்பனிய மேலாக்க எதிர்ப்பு ஆகியன பற்றிப்பேசினர். பெரும்பான்மையான மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
விழாவை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு :
அசுரர் வார விழா முடிவடைந்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அக்டோபர் 3-ம்தேதி அசுரர் வாரம் கொண்டாடியதற்காக அதை ஏற்பாடு செய்த மாணவர்கள் ஆறு பேர் மீது ‘மதவுணர்வைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் பிணையில் வெளிவர இயலாத 153 A என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு மாணவர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.
விழா ஏற்பாடு செய்த மாணவர்களிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் நேரடியாக நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. இப்படி நிர்வாகம் அடாவடியாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், பார்ப்பனரைத் துறைத் தலைவராகக் கொண்ட ஜெர்மன் மொழிப் பிரிவு மாணவரை தேர்ச்சியற்றவராக்கி கல்வியில் தொடர முடியாமல் செய்தது, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் துன்புறுத்தலால் முதாஸிர் (Mutassir) என்ற காஷ்மீரத்து இஸ்லாமிய மாணவன் விடுதி அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது ஆகிய நிகழ்வுகளிலெல்லாம் நிர்வாகம் நேரடியான மாணவர் விரோதப் போக்கையே கடைப் பிடித்திருக்கிறது.
விளக்கம் அளிக்கும் பொருட்டு, தாங்கள் மீதுள்ள குற்றம் என்னெவென்றும், குற்றம் சாட்டியவர்கள் யார் என்றும், காவல் துறையினரிடம் கேட்டபொழுது அவர்கள் ஒரு புகார் கடிதத்தை காண்பித்தார்கள். அதில் பெயர், கையொப்பம் முதலிய தகவல்கள் எதுவுமே தெளிவாக இல்லை. பின்னர் அதுபற்றி வளாகத்தில் விசாரித்த போது, ஏ.பி.வி.பியின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் விழாவின் மூன்றாம் நாளன்றே காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள் என்றும், அதன் பேரிலும், நிர்வாகத்தின் தூண்டுதலாலும் தான் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.
நிர்வாகத்திற்கும், பார்ப்பனிய மேலாண்மைக்கும் தலை சாய்க்காத மாணவர்கள்யாரேனும் காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், அவர்களது பெயர், துறை, விடுதி அறை எண் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது அடையாள அட்டையை நுணுகிப் பரிசோதிக்கவும் அவர்கள் தவறுவதில்லை. மாறாக அசுரர் வாரம் விழாவைப் பற்றிய புகாரில் மேற்சொன்ன எதையுமே காவ ஞநல்துறை பின்பற்றவில்லை. இது நிர்வாகமும், காவல் துறையும் எவ்வளவு நேர்மையாக(?) செயல்படுகிறது என்பதைக் காட்டுகின்றது.
கடந்த அக்டோபர் 11-ம் தேதி TSA, DAMBSA, PDSU ஆகிய மாணவர் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக நூலகத்தில் நூலக அதிகாரியின் ஆதரவுடன் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு ’’துர்கா பூஜை பெரும்பான்மையினரால் கொண்டாடப்படும் பண்டிகை என்றும் அதையெல்லாம் தடுக்க முடியாது.’’ என்றும் அல்ட்சியமாகக் கூறி விட்டனர்.
துர்கா பூஜை போன்ற மத விழாக்கள் கொண்டாடுவதில் அதிகமாக அக்கறை காட்டாத உழைக்கும் மக்களையும் வலுக்கடாயமாக இந்தப் பெரும்பான்மையில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை என்னும் குதிரையின் மீதுதான் இந்து மத வெறியர்கள் வெகு சுலபமாகப் பயணிக்கிறார்கள்.
மதவுணர்வு என்பது இந்துக்களுக்கு (பெரும்பானமையான உழைக்கும் மக்கள் இந்துக்கள் இல்லை என்ற போதிலும்) மட்டுமே என்பதாகத்தான் காவல் துறை, கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் புரிந்து கொள்கின்றன. பாரபட்சமற்று நடந்து கொள்வதாகவும், ’சமூக நீதியை’க் காக்கும் காவலர்கள் என்றும் மார்தட்டிக் கொண்டே இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு சார்புத்தன்மையுடன் தான் நடந்து கொள்கின்றன. பிற மதத்தவர்களுக்கு மதவுணர்வே இல்லையென்பது போலவும், பிறப்பால் ஒரு கிறிஸ்தவராகவோ, ஒரு இஸ்லாமியராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தவராகவோ இருந்தாலும், அவர்கள் இந்துவாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் கூற்றைத் தான் இதுபோன்ற நிறுவனங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக(!?) நாடான இந்தியாவினுடைய மதச்சார்பின்மையின்(?) யோக்கியதை இதுதான்.
பாசிசமயமாகி வரும் பல்கலைக்கழக நிர்வாகம்
அசுரர் வார விழா கொண்டாடுவதை எதிர்த்து புகார் அளித்தவுடன் பாய்ந்து நடவடிக்கை எடுத்த நிர்வாகம், வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திய போது பெரும் கூச்சல் எழுப்பி, தொந்தரவு செய்ததாக வளாகத்தில் தங்கியிருக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் புகார் செய்தும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
அசுரர் வார விழாவினை எதிர்த்து ’பின் வழியில்’ சில ஏ.பி.வி.பி மாணவர்கள் அளித்த புகாரைக் கொண்டு உடனே காவல்துறைக்குத் தெரிவித்த நிர்வாகம், அசுரர் வார விழாவினை ஏற்பாடு செய்த மாணவர் இயக்கங்களை ஒரு பேச்சுக்குக் கூட அழைத்து எந்தவித விளக்கமும் கேட்க முயலவில்லை. இதைப் பற்றி பல்கலைக்கழகத்தின் துணை ஒழுங்குநரிடம் (Deputy Proctor)பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நமது அறிவைக் கொண்டு அந்த மாணவர்களைத் திருப்திப் படுத்த முடியாது” என்று திமிராகப் பதிலளித்திருக்கிறார்.
ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பல காரணங்களைக் கூறி வளாகம் முழுவதும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள பாதுகாவலர்கள் (Securities), வளாகத்தில் கவனத்தை ஈர்க்கும் எந்த நிகழ்வையும், யாருடைய முன் அனுமதியுமின்றி பதிவு செய்யலாம் என்றும், அவற்றிற்கெதிரான எந்தவித நிகழ்வும் கடமையாற்ற விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழக மாணவர் விரோதப் போக்குக்கு எதிரான எந்தவித நியாயமான குரல்களையும் ஒடுக்கி, அவற்றைக் கிரிமினல் குற்றங்களாக சித்தரித்து, அச்சுறுத்தி, மாணவர்களின் எதிர்ப்பை முற்றாக நசுக்குவதுதான் நிர்வாகத்தின் எண்ணம்.
சமீபத்தில் நடந்த ஆண்கள் விடுதி உணவகத்தின் செயற்குழுவிற்கான தேர்தலில் எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆறு பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆறு பேரும் ஏ.பி.வி.பியைச் சார்ந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல. பின்னர், அது தொடர்பாக பதிவாளரிடம் புகார் அளித்துக் கேள்வி எழுப்பியவுடனே வேறு வழியின்றி அந்தத் தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார்.
மேலும், வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி பல்கலைக்கழக மாணவர் அவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விதிமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக அரசியலமைப்பில், மாணவர் அவை (Student’s Council) யின் சுயசார்பினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் மாணவர்களின் அனுமதியின்றி நிர்வாகம் பல திருத்தங்களை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும், காவல் துறைக்குமான உறவுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
“மாணவர்களின் ஒழுக்கமின்மையோ, துர்நடத்தையோ அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வில் ஆசிரியர் எவரேனும் ஈடுபட்டால், நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தினால் ஒழுங்கு நிலையை சரி செய்ய முடியாத பட்சத்தில் மட்டுமே காவல் துறையின் உதவியை நாடவேண்டும். கற்பதற்காக கல்வி நிலையம் செல்லும் மாணவர்கள் எவ்விதத்திலும் காவல் துறையாலோ, சிறைச்சாலை பயத்தாலோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவோ மனம் உடைந்து போவதான நிலையினை உருவாக்கக் கூடாது. (Supreme Court of India, 4th May 2001; Equivalent Citations: AIR 2001 SC 2814, 2001 (3) SCALE 503, (2001) 6 SCC 577).”
இந்நிலைக்கு மாறாக, எவ்வித நிகழ்வாயினும், பல்கலைக்கழக நிர்வாகம் காவல் துறையின் உதவியினை நாடுவதும், இந்த உறவின் மூலம் சீருடையணிந்த அணிந்த காவலர்கள் அடிக்கடி வளாகத்தினுள் வலம் வருவதும், விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் காவல் நிலையத்திற்கு இழுக்கப்படுவதும் இங்கு யதார்த்தமாகி விட்டது.
இந்திய அரசின் சட்டங்களில் பெரும்பாலானவைகள் சாதி ஏற்றத் தாழ்வு, இந்துமத வெறி ஆகியவற்றை நியாயப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன. கொட்டை எழுத்தில் மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சோசலிச ஜனநாயகக் குடியரசு என்று போட்டுக் கொண்ட இந்திய அரசாங்கத்திடமும் அதன் நிறுவனங்களிடமும் மதச்சார்பின்மை பற்றி பேசினால் மதச்சார்பின்மையா? கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைதான் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கொஞ்ச நஞ்ச உரிமையைப் பயன்படுத்துவதற்கும் இது போன்ற பல்கலைக்கழக நிர்வாகங்களும், காவல் துறையும் தடையாக உள்ளன.சட்டத்தை மதிக்காத இவர்கள் தான் சட்ட ஒழுங்கு பற்றியும், ஒழுக்கம் பற்றியும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.
பகுத்தறிவுக்கு விரோதமான, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதவிழாக்களையும், நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்க்கும் கேளிக்கை விழாக்களையும் அனுமதிக்கும் நிர்வாகம்,’சமத்துவம்’, ’மதச்சார்பின்மை’ ஆகியவற்றை வலியுறுத்தும் ’அசுரர் வாரம்’ போன்ற கலாச்சார விழாக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஏனெனில் ’எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்;ஆனால் நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்காதீர்கள்’ எனபது தான் ஐ.ஐ.டி முதல் ஜவகர்லால் நேரு போன்ற மதிப்பு மிக்க பல்கலைக் கழகங்களிலும் உள்ள நடைமுறை யதார்த்தம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) மட்டும் இருப்பதல்ல. மாறாக இந்தியாவில் உள்ள அடிப்படைக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரையான அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. காலத்திற்க்கிற்கேற்ப வெவ்வேறு வடிவங்களை எடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த பெரியாரையும், அம்பேத்கரையும் போன்ற பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளின் கருத்துகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகமாகத் தேவையாக உள்ளன. பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று வளாகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உணவகங்களில் (Mess) பெரியாரின் உருவப் படம் நிறுவப்பட்டது. ஏற்கனவே உணவகத்தில் அம்பேத்கர், பூலே அவர்களின் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க ’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!
_______________________________
– முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,
ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகம்
(English and Foreign Languages University),
ஐதராபாத்.
பெரியார் பிறந்த நாளன்று ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உண்வகங்களில் பெரியாரின் உருவப்படம் நிறுவும் போது எடுக்கப்பட்ட படங்கள் :
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]