privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்

-

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் இந்து முன்னணியினர் அராஜகத்திற்கு எதிரான பிரச்சார இயக்கம்

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணியினர் அமைப்புகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே குத்துச் சண்டை பயிற்சி, நாடகப் பயிற்சி என பிஞ்சு மனதில் மதவெறியை பரப்பும் வகையில் நடத்தி ஷாகா வந்தனர். இதை தட்டிக்கேட்ட 4 இளைஞர்கள் மீது 40 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரச்சாரம்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்ற வகையில் இயக்கம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் உக்கடை (தெற்கு) பகுதியில் சுமார் 1,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து-முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவரிடையேயும் எந்த பாகுபாடுமின்றி, மத வேற்றுமையில்லாமல் பழகி வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம், இந்து மக்கள் பண்டிகையென்றால் முஸ்லீம் மக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள், முஸ்லீம் பண்டிகையின் போது இந்துக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள் என்ற வகையில் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள புங்களாயி அம்மன் கோவில் ஊர் பொதுக்கள் வழிபடும் பொதுவான ஆலயமாகும். இங்கு கடந்த சில வாரங்களாக, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஷாகா பயிற்சி நடத்தி வந்தனர். இவர்களைப் பற்றி முழுமையாக அறியாததால் ஊர் பொதுமக்கள் இவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை.

ஆனால், ஷாகாவில்,”இந்துக்குள் ஒன்று சேர்ந்து முஸ்லீம்களை அடிக்க வேண்டும், வன்முறையில் ஈடுபட வேண்டும். அவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்கள், ஆனால் இங்கு வாழ்ந்து கொண்டு நம் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், வீடு இல்லை, வேலை இல்லை” என்ற சிறுவர்களின் மனதில் கலவரத்தைத் தூண்டும் வகையில் நஞ்சூட்டி வந்துள்ளனர். இதை இன்னும் ஆழமாக பதிய வைக்கும் வகையில் நாடகம் நடத்தியும் ஆயுதங்களைக் கொண்டு சண்டை பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இதே வேலையைத்தான் பாசிசத்தின் பிறப்பிடமான ஜெர்மனியில் ஹிட்லரின் கட்சியும், அரசும் செய்தனர். பொது மக்களை யூத மக்களுக்கு எதிராக திருப்பி விட்டு சொல்ல முடியாத படுகொலை துயரங்களை அரங்கேற்றினர.

இத்தகைய ஆர்.எஸ்.எஸ் மூலத்தைக் கொ்ண்ட குஜராத் மோடி தலைமையில் அங்குள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவருடைய பாதந்தாங்கிகள்தான் இன்று திருச்சியில் ஷாகா நடத்துகிறார்கள். விளையும் நச்சுப் பயிரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்று போராட்டத்தில் இறங்கினர் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு தோழர்கள்.

இந்து முன்னணி அளிக்கும் இந்த பயிற்சிக்கு அந்தப் பகுதி இளைஞர்கள் யாரும் செல்வதில்லை. சிறுவர்கள் மட்டுமே ஒரு 10 பேர் செல்கின்றனர்.  “அந்தப் பகுதியில் ஷாகா நடத்தக் கூடாது, கோவில் என்பது பொதுச் சொத்து” என்று பா.ஜ.க-வினரிடம் அந்த பகுதி இளைஞர்கள் பேசியிருக்கின்றனர். இதற்கு மழுப்பலாக பதிலளித்த அவர்கள் அப்பொழுது எதுவும் செய்யாமல் பிறகு இந்து முன்னணியினர் 40 பேரைக் கொண்டு அந்தப் பகுதி இளைஞர்கள் 4 பேரை இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் திரண்டவுடன் தப்பி ஓடி விட்டனர்.

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் நடந்த இந்த அராஜகத்தை அம்பலப்படுத்தியும், ஷாகா பயிற்சியை நிரந்தரமாக தடை செய்யக்கோரியும் அந்த பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம்,தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்றும் அப்பகுதி மக்களை இணைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கையெழுத்து இயக்கத்தில் அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டனர். சுமார் 50 பேர் சென்று பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அனைவரின் கருத்துமே இந்து முன்னணியினரை விரட்ட வேண்டும் என்பதே. ஏனென்றால் இதுவரைஅமைதியாக இருந்த பகுயில் கலவரத்தை நடத்தி மதவெறியை தூண்டும் வேலையை செய்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்தனர்.

அதற்கு அடுத்த நாள் அதே பகுதியில் பு.மா.இ.முசார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பிரச்சாரத்தில் சுமார் 100 இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தெருமுனைப் பிரச்சாரத்தில் பேசிய தோழர்கள் இந்து முன்னணியினரின் கொள்கை பற்றியும், இதுவரை அவர்கள் செய்த மதக்கலவரங்களை பற்றியும், ஷாகாவின் நோக்கம் பற்றியும் விளக்கி பேசினர். இது போன்ற பாசிஸ்டுகளை விரட்ட வேண்டும் என்றால் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து போராட வேண்டும் என்று அறிவுறுத்தினர். பகுதி மாணவர்கள், இளைஞர்கள் பிரச்சாரத்தின் இறுதி வரை நம்முடனே இருந்தனர்.

முதல் நாளில் ஒருபகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கவில்லை. எனவே தெருமுனைப்பிரச்சாரத்தின் போது அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

பிறகு பிரச்சனை நடந்த இடத்திற்கு அருகில் தெருமுனை பிரச்சாரம் செய்த போது, திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து குலை நடுங்கிப் போய் காவல் துறைக்கு தகவல்கொடுத்து விட்டனர். உடனே காவல் துறையினரும் வந்து, “ஒலிபெருக்கி வச்சி செய்றீங்களே, அனுமதி வாங்கினீங்களா? முதல்ல ஏன் எல்லா இவ்ளோ கூட்டம் போட்றீங்க, கூட்டத்தை கலைங்க”  என்றதும் ஒரு பெண்மணி, “40 பேர் சேர்ந்து 4 பேர அடிச்சப்ப நீங்க கேக்க வரல. இப்போது அதுக்கு நியாயம் கேக்க வந்தா எங்கள போகச் சொல்றீங்க, நீங்க போங்க சார்” என்றார்.

“நீங்க சட்ட விரோதமா கூடியிருக்கீங்க” என்றதும், நம் தோழர் ஒருவர்,”இங்க என்ன 144 தடை உத்தரவா போட்டு இருக்கீங்க, எங்க ஏரியால நாங்க நிக்கிறோம். நீங்க ஏன் கேட்குறீங்க” என்று தைரியமாக பதிலளித்தார். பு.மா.இ.மு தோழர்களை தனியாகக் கூட்டிச் சென்று காவல்துறை பேசும் போது கூட அந்தப் பகுதி இளைஞர்கள் காவல் துறை தோழர்களை ஏதாவது செய்து விடுவர் என்று அந்த இடத்தை விட்டு கலையவே இல்லை. “போங்கப்பா, ஏன் நிக்கிறீங்க” என்ற போலீஸ் ஒருவர் கூறவும், “நீங்க போங்க சார், நாங்க போறோம். எங்க பசங்க மேல கேஸ் போட்ட மாதிரி எங்க தோழர்கள் மீதும் போட்டுட்டீங்கன்னனா? உங்கள நம்பறதா இல்லை” எனக் கூறினர். கையெழுத்து வாங்கி முடித்த பின்னரே இளைஞர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மறுநாள் முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்யக் கோரியும், பொதுக் கோவிலில் நடைபெறும் ஷாகா பயிற்சியை தடை செய்யக் கோரியும் மனு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ஒட்டி நகரம் முழுக்க 300 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும், “இப்படியொரு பிரச்சனை நடந்ததா?” என ஆச்சரியத்துடன் கேட்டார் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன். கூடுதலாக, “நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?” என்று கேட்டார். உடனே மனு கொடுக்க சென்ற அனைவருமே, “நாங்க எந்த மதமும் இல்ல,எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்” என்று பதில் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தி பார்த்தார். பிறகு ஆணையரிடம் பேசுவதாகக் கூறியுள்ளார்.

நம்முடைய இந்தச் செய்தி அன்றைய நாளிதழில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காலிகளை அடித்து விரட்டும் வரை போராட்டம் ஓயாது என்று ஆயத்தமாகியுள்ளனர் பு.மா.இ.மு தலைமையிலான உக்கடை பகுதி இளைஞர்கள். இது போன்ற மதவெறி கும்பல்கள் மக்கள்  மத்தியில் வேரூன்றாமல் இருக்க பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டிய தேவை உள்ளது என்பது இந்த சம்பவத்தில் இருந்து நிரூபணமாகியுள்ளது.

இந்த சம்பவத்தை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. தற்போது காவல் துறை உத்தரவின் பேரில் ஷாகா பயிற்சி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி