Monday, May 5, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மோடி – கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்

மோடி – கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்

-

மோடிக்கும் சாரு நிவேதிதாவுக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சில விடயத்தில் ஒற்றுமையுண்டு. அதாவது இருவரையும் சோறிட்டு வளர்ப்பது முதலாளிகள்தான், இருவருமே தங்களை சூப்பர் பவராக கருதிக் கொள்பவர்கள். முதலாமவர் கேள்விகளை விரும்பாதவர், பின்னவர் தனது வலைத்தளத்தில் பின்னூட்டப் பெட்டியையே மூடி வைத்திருப்பவர். இருவருமே இணையத்தின் உதவியோடு தங்களுக்கான பெரும்பாலான பிரச்சாரத்தை செய்பவர்கள். இன்னபிற ஒற்றுமைகளை காலம் நமக்கு காட்டும் என்பதால் அதனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சரித்திரம் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு நடந்திருப்பதைப் பற்றி பேசலாம்.

சாரு
ஃபிராய்டியன் வாக்குமூலம் வகையறா சாரு.

சாருவின் சமீபத்தைய பதிவொன்றில் தாம் ஒரு தீவிர மோடி ஆதரவாளர் என அறிவித்த பிறகுதான் நமக்கு கொஞ்சம் நிம்மதி உருவாகியிருக்கிறது. நிதானத்தில் இருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் மோடிக்கு எதிராகப் பேசி நம் தரப்பை பலவீனப்படுத்திவிடுவாரோ எனும் அச்சம் எனக்கு இருந்தது எனும் உண்மையை இங்கு ஒப்புக் கொண்டு விடுகிறேன். சாரு எப்போதும் நமக்கு சிரமம் வைக்காமல் தானே அம்பலப்படுபவர். நாம் பேசுகையில் உள்ளத்தில் இருக்கும் நிஜத்தை தவறுதலாக சொல்லி விடுவோம், இதற்கு ஃப்ராய்டியன் ஸ்லிப் என்று பெயர். ஆனால் சாரு ஃபிராய்டியன் வாக்குமூலம் வகையறா.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தமது “வறுமையை” கட்டுரைகள் மூலம் சொல்வது ஒருவகையான பணம் கறக்கும் தந்திரம் என ஒரு வாசகர் சொன்னதாகவும் ஆகவே இனி தமது பணக் கஷ்டத்தை எழுதப்போவதில்லை என்றும் சொன்னார் ((தினமலர் வலைப்பக்கத்து கோணல் பக்கங்களில்). அடுத்த ஆறு மாதம் கூட அந்த வாக்குறுதி நீடிக்கவில்லை. ஆனந்தவிகடன் தொடர் கட்டுரையில் நாடகத்துறை பேராசிரியர் ராமசாமி போன்றோர் தமது உயரத்துக்கு ஒவ்வாத வகையில் துக்கடா பாத்திரத்தில் சினிமாவில் தோன்றுவதாக சலித்துக் கொண்டார் சாரு. அடுத்த சில மாதங்களில் மிஷ்கின் படமொன்றில் 13 செகண்டு ஆர்மோனியம் வாசிக்கும் காட்சியில் தோன்றி அசிங்கப்பட்டார் (பட ரிலீசுக்கு முன்னால் அந்த விரல் குளோசப்புக்கென்றே விகடனில் ஒரு கட்டுரை வேறு எழுதினார்.)

மகள் வயதுடைய பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறும் பேச்சைப் பேசிய பிரச்சனையில், அது தனது உரையாடல் அல்ல என சாதித்தார். சில மாதங்களில் அந்தப் பெண்ணே தன்னை அப்படி உரையாடும்படி தூண்டியதாக உளறினார். ஒரு எழுத்தாளனது விழாவை பிரபலப்படுத்த ஒரு சினிமாக்காரன் தேவைப்படுவதைக் கண்டு அறச் சீற்றம் கொண்டார் (எஸ்.ராவின் விழாவுக்கு வந்த ரஜினி பற்றி). அந்த சினம் தணியும் முன்னால் எனது புத்தக வெளியீட்டுக்கு திரிஷா வரவேண்டும் என பொது மேடையில் கோரிக்கை வைத்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சாருவின் கையும் வாயும் நித்யான்ந்தாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல காத்திருந்தது. ஒரேயொரு கேமராவின் சதியால் அந்த அரிய வாய்ப்பை நித்தி பறிகொடுத்தார். நித்திக்குப் பிறகு அந்த வாய்ப்பு மோடிக்கு கிட்டும் சாத்தியங்கள் பிரகாசமாக தெரிகின்றன. சாருவே ஆதரித்துவிட்டார் ஆகவே இனி மோடியின் கதி அவ்வளவுதான் என நாம் அலட்சியம் செய்ய முடியாது. மோடி எதிர்ப்பென்பது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும், ஏன் என்பதை பின்வரும் பத்திகளில் விவாதிக்கலாம்.

அறிவுபூர்வமான சில கேள்விகளுக்குப் பிறகு அதற்கு பதிலளிக்க இயலாத மோடி ஆதரவாளர்கள் சொல்வது அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே என்பதுதான். ஒரு தலைவருக்குரிய குறைந்தபட்ச அம்சமே அவரிடம் இல்லை என்பதுதான் இங்கு விசேஷம். ஒரு தலைவன் வெளிப்படையானவனாக இருக்க வேண்டும், ஆனால் தனக்கு திருமணமான விடயத்தையே மறைப்பவர் அவர். தனது திருமண தகவலை மறைத்து ஒரு பிரமச்சாரியாக காட்டிக்கொள்ளும் மோசடியை செய்கிறார் மோடி (அவரது மனைவி பெயர் ஜஷோதாபென் சிமன்லால், இன்னமும் விவாகரத்து பெறவில்லை.) கல்யாணத்தையே மறைப்பவர் கலவரம் செய்ததை ஒப்புக்கொள்வாரா என்ன?. ஒரு தலைவன் எளிமையானவனாக இருக்க வேண்டும், இந்தத் துறவியின் அலங்காரச் செலவுகளோ நம்மை மலைக்க வைக்கின்றன.

கரண் தாப்பர் நேர்காணல்
மோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணல்.

மூன்றாவதாக அவனுக்கு குறைந்தபட்ச வீரமாவது வேண்டும் அதாவது அச்சமில்லாமலாவது இருப்பது, விசா மறுத்ததற்க்கு அவரது கடைநிலைத்தொண்டனே அமெரிக்கா மட்டும் என்ன யோக்கியமா என கேள்வி கேட்கிறான். ஆனால் மோடியோ பொத்திய கையை இன்னும் எடுத்தபாடில்லை. இவ்வளவு ஏன், மோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணலைப் பாருங்கள், அவரது ஆளுமையில் வீரம் இருப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புக் கூட இல்லை என்பது புரியும். தன்னை விட வலுவுள்ளவனிடம் மண்டியிடுவதும் எளியோரை கொல்வதும்தான் மாபெரும் கோழைத்தனம். அந்தவகையில் மோடி ஒரு மோசமான கோழை.

எங்களுக்கு 60 மாதம் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்கிறார் மோடி. அவரை இந்த அளவுக்கு வளர்த்துவிட்ட குஜராத்தைப் பற்றி சமீப காலங்களில் எவ்வளவு பேசினார்? ஆனால் பாகிஸ்தானைப் பற்றி எல்லா கூட்டங்களிலும் பேசுகிறார். ஏனென்றால் அவரால் உண்மைகளைக் கொண்டு விவாதிக்க இயலாது. ஆதலால் அச்சுறுத்தல் மூலமாகவே தன்னை முன்னிலைப்படுத்த முனைகிறார். பொய், புரட்டு மற்றும் அச்சுறுத்தல் போன்ற கோயபல்ஸ் பாணி பிரச்சாரம் மூலமே அவரது பிம்பம் பிரம்மாண்டமானதாக கட்டமைக்கப்படுகிறது. அதன் கோரமான வடிவம் மற்றும் விளைவுதான் கலவரங்கள். குஜராத் கலவரங்கள் மூலம் தனது இருப்பை வலுவாக்கிக்கொண்ட மோடி அகில இந்தியாவுக்கும் அதை விரிவாக்கிக் கொள்ள மாட்டார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

மேலும் சங்கப் பரிவாரங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள எப்போதும் கலவரங்களையே சார்ந்திருக்கின்றன. மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகுதான் கன்னியாகுமரியில் பாஜக காலூன்றியது. தாங்கள் வளர்ந்த பிறகும் தங்களது இருப்பை நிரூபிக்க அவர்கள் கலவரங்களை நம்புகிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கிருஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. எத்தகைய கொலை பாதகத்தைச் செய்தேனும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விழையும் மோடி, கலவரம் செய்வதற்கான களத்தைத் தருவார் என அவரை கொண்டு வரத் துடிக்கும் சங்கப் பரிவாரங்கள் இந்த அபாயகரமான கூட்டணியைத்தான் தெரிந்தோ தெரியாமலோ மத்தியதர வர்கத்தினர் பலர் ஆதரிக்கிறார்கள். பொருளாதார விவகாரத்தில் மோடிக்கும் மன்மோகனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. விவசாயிகள் நிலத்தை கம்பெனிகளுக்கு கொடுத்துவிட்டு அவர்களுடன் இணைந்து பிழைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்கிறார் மன்மோகன். நகரமயமாக்கலை நாம் ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும் என அதே கருத்தை வேறு வார்த்தைகளில் சொல்கிறார் மோடி. மன்மோகன் நசுக்கி விடும் காற்றை மோடி பயமில்லாமல் சத்தமாக விடுவார் என்பதுதான் இருவருக்குமான ஒரே வேறுபாடு. பிறகு எதற்கு அந்த 60 மாத வாய்ப்பு?

ராகுல் காந்திக்கு ஏழ்மையைப் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார் மோடி. மிக நியாயமான கேள்வி. ஆனால் இந்த கேள்வியை எழுப்பும் அவர் ஒன்றும் சாமானியன் அல்ல. அவரது ஆளுகையின் கீழ் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஊட்டச் சத்தற்ற குழந்தைகளும் பெண்களும் மிக அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பச்சிளம் குழந்தைகள் இறப்புவிகிதத்தில் குஜராத்தான் முதலிடம். குஜராத் மாநிலத்தில் நகர்புற அமைப்புசாரா தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 106 ரூபாய், கிராமங்களில் 83 ரூபாய், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கொடுப்பதைக் காட்டிலும் குறைவு. அங்கே ரேஷன் பொருட்கள் 69% திருடு போகின்றன. மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மிக்க் குறைவான நாட்கள் வேலையளிக்கும் மாநிலம் குஜராத். மாநில பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதியை கணிசமாக குறைத்தவர் மோடி, 1995ல் 4.25% ல் இருந்தது இப்போது 0.75% ஆகியிருக்கிறது. இப்படி ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கி தெருவில் நிறுத்திய மோடி, அது குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்காத மோடி; ராகுலுக்கு ஏழ்மையைப் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார். அப்படியெனில் ரயிலில் டீ விற்றதுதான் ஏழைமையைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியா?

குஜராத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் நாலாயிரத்து சொச்சம் கோடி நட்டத்தில் இயங்குகின்றன. அதாவது மோடியின் நேரடி அதிகார எல்லைக்குள் வரும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, ஆனால் அவர் மிகச்சிறந்த நிர்வாகி என ஓலமிடுகின்றன ஊடகங்கள்.

மோடி பிரச்சார மோசடி
மோடி ஒரு பிரச்சார மோசடி.

இவையெல்லாம் கேட்டுக் கேட்டு சலித்த செய்திகள்தாம். ஆனாலும் மக்கள் ஆதரிக்கிறார்களே எனும் கருத்து கடைசியாக வேறு வழியே இல்லாத நிலையில் மோடி ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகிறது. இதற்காகத்தான் நாம் சொன்ன விடயத்தையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. நம் ஊரில் அனுபவ் தேக்குமர மோசடி முதல் நித்தியானந்தாவின் ஆன்மீக மோசடி வரை எல்லாமே பிரம்மாண்டமான விளம்பரங்களாலும் ஊடகங்களின் ஆதரவாலும் செய்ய முடியும் என்பது நிரூபணம் ஆகியிருக்கும் போது அது மோடியின் பெயரால் செய்யப்படுவதை கண்டு கொள்ளாதிருக்க முடியுமா?. அத்தகைய ஒரு பிரச்சார மோசடியை அம்பலப்படுத்தவே மோடி பற்றிய உண்மைகளை நாம் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

இதே திருச்சிக்கு ஒரு கடைத் திறப்புக்கு நமிதா வந்த போது போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு கூட்டம் கூடியது, 2012-ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன் – இந்த மக்கள் ஆதரவை வைத்து இவர்கள் இருவரையும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? டி.ஆர்.பி இல்லாத சீரியல்களை ஒப்பேற்ற ஒரு கதாபாத்திரத்தை கொன்று கதையில் விறுவிறுப்பை சேர்ப்பது போல, முட்டுக் கொடுக்க முடியாத அளவு தோல்வியடைந்த இந்திய ஜனநாயக அமைப்பை இன்னும் சில காலத்துக்கு ஒப்பேற்ற செய்யப்படும் கதை மாறுதல்தான் மோடியின் வளர்ச்சி.

மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு தீவிரமாக செய்ய வேண்டும், அது ஒருவகையில் காங்கிரசுக்கு ஆதரவானதுதானே என்பது கடைசியாக எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கின்றன.

முதலாவதாக, 2002 குஜராத் கலவரம் பற்றிய முழுமையான செய்திகளை காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும்கூட பேசுவது கிடையாது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமல்ல, மேலும் அது இன்றுவரை எப்படி நடந்தது என நிறுவப்படவில்லை. ஆனால் குஜராத் கலவரம் நன்கு திட்டமிடப்பட்டது என்பது நிரூபணமாகியிருக்கிறது, அது மோடியின் ஆசீர்வாதத்துடனும் அரசின் முழு ஒத்துழைப்புடனும் நடந்தது என்பதை காவி கிரிமினல்கள் பெருமையாக ஒப்புக்கொண்டதை தெகல்கா வீடியோ ஆதரங்களோடு வெளியிட்டது. ஆனால் இந்த உண்மைகளை பாஜகவை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை.

குஜராத் கலவரத்தைப் பற்றிய எல்லா குற்றச்சாட்டுக்கும் பாஜகவினர் வைக்கும் பதில் குற்றச்சாட்டு கோத்ரா ரயில் எரிப்பு பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை என்பதுதான், இப்போதுவரை அதனை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விளக்க முனைவதில்லை. காரணம் எதிரணியில் மோடி இருப்பது இவர்களுக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது. அவரைக் காட்டி பயமுறுத்தி பெறும் வாக்குகள் இவர்களுக்கு தேவையாக இருக்கிறது, ஆகவே மோடியை தண்டிக்கும் அளவுக்கான குற்றச்சாட்டுக்களை இவர்கள் அமுக்கி வைக்க விரும்புகிறார்கள். மேலும் இரண்டு தரப்பையும் இயக்கும் முதலாளிகள் ஒன்று எனும் போது ஓரெல்லைக்குமேல் தமது சக அடியாளைப் பற்றி குற்றம் சாட்டுவது என்பது இவர்களுக்கு இயலாததாகிறது. எனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டாலும் போட்டியிடா விட்டாலும் மோடி அம்பலப்படுத்தப்பட வேண்டியவர் ஆகிறார்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இத்தகைய பிரச்சாரங்களால்தான் சில குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. இன்றைக்கு தாராள மயமாக்கல் கொள்கை மீதான விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப்படுவதன் பின்னால் ஏராளமானவர்களின் இருபதாண்டு கால உழைப்பு இருக்கிறது. காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தியதன் விளைவுதான் இன்று பாட்னா சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என வலிய வந்து பாஜக ஆட்கள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய காவி கும்பலை சந்தேகப்பட்டியலில் வைக்கவே நாம் இத்துணை தூரம் உழைக்க வேண்டியிருக்கிறதென்றால், முதலாளித்துவத்தின் கள்ளக்காதலனான மோடியை அம்பலப்படுத்த நாம் எத்தனை தூரம் மெனக்கெட வேண்டும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

சில கூடுதல் தகவல்கள் :

குஜராத் கலவரம் பற்றி சாருவும் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறார். கலவரத்தின்போது வெளி நபர்களை நிர்வாணமாக்கி அவர்களுக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து கொலை செய்திருக்கிறார்கள் காவி காலிகள். அந்த செய்தியைப் பார்த்து தான் நடுங்கிப்போனதாகவும் காரணம் தனக்கும் மருத்துவக் காரணங்களுக்காக அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் சாரு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

(நிஜ) கரப்பான் பூச்சி இயல்பில் பயந்த சுபாவமுடையது. ஆனால் அது உங்கள் வீட்டில் அதிகமிருந்தால் அது சுகாதாரமின்மையின் அறிகுறி. மேலும் கரப்பான் நோய்களின் கன்டெய்னரைப் போன்றது. ஆகவே கரப்பானை விட்டு விலகியிருங்கள், கரப்பானை விரட்டியடியுங்கள்.

– வில்லவன்