privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

-

நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.

2011 முதல் இன்றுவரை நிகழ்ந்தவை என்று பல சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவை குறித்த அவரது விமரிசனங்களையும் அதில் எழுதியிருக்கிறார். இத்தனை நாட்களுக்குப் பின்னர், இப்படியொரு கடிதத்தை அவர் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம்? அதையும் அக்கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் உதயகுமாரை இடிந்தகரையில் நேரில் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் 12 ஆம் தேதி தூத்துக்குடியில் நடத்தவிருந்த பேரணி, பொதுக்கூட்டம் குறித்த துண்டறிக்கைகளைக் கொடுத்து, தாதுமணல் கொள்ளைக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தைப் பற்றியும் விளக்கியிருக்கின்றனர். இச்சந்திப்பு பற்றி உதயகுமாரும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தாது மணல் கொள்ளை எதிர்ப்பியக்கத்தை வரவேற்று வழக்குரைஞர்களிடம் உதயகுமார் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது கடிதத்தில் வேறு குரலில் பேசுகிறார். சென்ற மாதம் வரை அவரை பல சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்த தோழர்களிடம் பேசாத பல “பிரச்சினைகளை” இப்போது அவர் பட்டியலிட்டு அடுக்குகிறார்.

தாது மணல் கொள்ளை என்ற பிரச்சினை பற்றி அவரது நிலை என்ன? இதனை 16, அக், 2013 ஆனந்த விகடன் பேட்டியில் அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.

“தாதுமணல் கொள்ளையர்களின் அனுதாபிகள் எங்கள் ஊர்களில் இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர் மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப் பிரச்னைகள் எழும்… நாங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மட்டும்தான். அனைத்து தீய சக்திகளுக்கும் எதிரான மக்கள் இயக்கமல்ல ..”

என்று கூறி தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை தங்களால் எடுக்க இயலாத காரணத்தை விளக்கியிருக்கிறார்.

அவரால் எடுக்க இயலாத தாது மணல் பிரச்சினையை ம.க.இ.க வும் அதன்  தோழமை அமைப்புகளும் எடுப்பது குறித்து நியாயமாக அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, “கடலோர கிராமங்களில் வேலை செய்யாதீர்கள்” என்று ம.க.இ.க வுக்கு ஏன் அறிவுருத்துகிறார் என்று புரியவில்லை. தாது மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கடலோர மக்கள். போராட விரும்புகிறவர்களும் அவர்கள்தான்.

நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல் கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும் நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் – நிதி தொடர்பான அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைத் தவிர. தனது கடிதத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மீது உதயகுமார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தோழர் ராஜுவுக்குத் தெரிவித்தோம்.

அவர் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், இதில் தொடர்புள்ள மற்றவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் நகலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

இவண்,

காளியப்பன்,
மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

________________________

அனுப்புநர்:

ராஜு, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
கை பேசி: 94432 60164

 பெறுநர்

ஊர் நலக்கமிட்டி, இடிந்தகரை
பங்குத்தந்தை, இடிந்தகரை
பங்குத்தந்தை சுசீலன்,  கூட்டப்புளி
சுந்தரலிங்கம், கூடங்குளம்
திரு.சுப.உதயகுமார்,ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை.

ஐயா,

வணக்கம்.

நேற்று (5.11.2013) திரு சுப.உதயகுமார், இணையத்தில் தனது முகநூல் பக்கத்தில் எங்களது வழக்குரைஞர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், பல தவறான தகவல்களை எழுதியிருக்கிறார். அதன் நகலை உங்களுக்கு இணைத்திருக்கிறேன். அதில் கண்டுள்ள எல்லா விசயங்களையும் உங்களிடம் எழுப்புவது என் நோக்கமல்ல. வழக்குகளுக்காக நாங்கள் பெற்ற தொகை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை உண்மைக்கு மாறானவை என்பதால், அவை குறித்து உங்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று கருதுகிறேன்.

சங்கரன் கோயில் இடைத்தேர்தல்முடிந்த பின்னர், மார்ச் 19, 2012 அன்று ஜெயலலிதா அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கூடங்குளத்தில் போராட்டக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உட்பட 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சாலை மறியல் செய்த பங்குத்தந்தை சுசீலன் உட்பட்ட கூட்டப்புளி மக்கள் 178 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனை ஒட்டி வள்ளியூர் நீதிமன்றம், நெல்லை நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பது தொடர்பான பணிகளை நாங்கள் செய்தோம். 12 வெளியூர் வழக்குரைஞர்கள் சுமார் 15 நாட்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருந்த காரணத்தினால், போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு ஆயின. இவையன்றி நீதிமன்றச் செலவுகள். குறிப்பாக மக்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்ததாலும், அதனை அங்கீகரிக்கும் விதத்தில் நீதிமன்றம் நடந்து கொண்டதாலும்,  மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்த வேண்டியதாயிற்று. அவரை வெளியூரிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்த்தால் அதற்கு  குறிப்பிட்ட அளவு செலவிட வேண்டியதாயிற்று. அந்தச் செலவுகள் குறித்த உள்விவரங்கள் அனைத்தும் நாங்கள் உங்களிடம் கொடுத்துள்ள கணக்கில் உள்ளன.

இச்செலவுகளுக்காக கூட்டப்புளி பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் முக்கியஸ்தர்கள் வழியாக பல தவணைகளில் மொத்தம் ரூ. 65,000, மற்றும் கூடங்குளத்தில் கைதானோருக்காக அந்த ஊர் முன்னணியாளரிடமிருந்து ரூ.5000 ஆக மொத்தம் ரூ.70,000 பெற்றிருந்தோம். அதற்கான செலவு கணக்கை, உதயகுமாரிடமும், கூட்டப்புளி பங்குத்தந்தையிடமும், கூடங்குளம் சுந்தரலிங்கத்திடமும் ஆளுக்கொரு நகல் கொடுத்து விட்டோம்.

இதன் பின்னர் கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட ராஜத்துரோக வழக்குகளுக்கு எதிராக நாங்கள் நெல்லையில் நடத்திய கருத்தரங்கினை ஒட்டி ஏப்ரல், 21, 2012 அன்று இடிந்தகரை சென்றிருந்தபோது எமது வழக்குரைஞர்கள் சுமார் 50 பேரை மேடையில் அமரச் செய்து, “நமக்காக ஒருகாசு கூட கட்டணம் வாங்காமல் பணியாற்றிய வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறுவதாக” உதயகுமாரும் புஷ்பராயனும் மக்கள் மத்தியில் அறிவித்தனர்.

பின்னர் செப்டம்பர், 2012 இல் நடைபெற்ற கடலோர முற்றுகை, போலீசு தாக்குதல், கடலில் மனிதச் சங்கிலி, சகாயம் மரணம் ஆகியவை தொடர்பான பணிகளில் நாங்கள் உங்களோடு இணைந்து ஈடுபட்டோம். இவற்றைத் தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகள் எதையும் போராட்டக்குழு எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

“பிணையெடுப்பதில் காலதாமதமாகிறது” என்று கருதிய மக்கள் சிலர், “நீங்கள் வழக்கை நடத்துங்கள்” என்று எங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் கேட்டனர். “உதயகுமார் யாரிடம் வழக்கை ஒப்படைத்திருக்கிறாரோ அவர்கள்தான் செய்ய முடியும். எங்களிடம் வழக்கு தரப்படவில்லை” என்று அவ்வாறு கேட்டவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். வழக்குகளை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்களிடமும் வேறு சிலரிடமும் உதயகுமார் ஒப்படைத்திருப்பதாக பின்னர் கேள்விப்பட்டோம்.

இதற்குப் பின்னர் திடீரென்று ஒரு புது வதந்தி பரப்பப் பட்டது.  “உங்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் போராட்டக் கமிட்டி பணம் கொடுத்திருக்கிறதாமே” என்று வள்ளியூர், நெல்லை, நாகர்கோயில் நீதிமன்றங்களில் சில வழக்குரைஞர்கள் எங்கள் வழக்குரைஞர்களிடம் போகிற போக்கில் குறிப்பிட்டனர். யார் சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் இல்லாமல், ஒரு கிசு கிசு செய்தி போல இது பரப்பப் பட்டது.  எனவே இதனை மறுத்து, “நாங்கள் கட்டணம் வாங்காமல்தான் பணியாற்றினோம்” என்பதைக் கூறவேண்டியது அவசியமாயிற்று.

இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக கூட்டப்புளி, இடிந்தகரை ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களிடமும் கூடங்குளம் முன்னணியாளர்களிடமும் நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். “இப்படி கிளப்பி விடுவது யார்” என்று தாங்கள் உதயகுமாரிடமே கேட்டதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை என்று உதயகுமார் மறுத்ததாகவும் அவர்கள் எங்களுக்கு தெளிவு படுத்தினர். இந்த பொய்ப்பிரச்சாரம் பற்றி நாங்கள் முறையிட்டது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இப்பிரச்சினையை அரைகுறையாக விடக்கூடாது என்பதால், மே, 9 2013  அன்று இடிந்தகரையில் நேரடியாக உதயகுமாரிடமே நாங்கள் இது பற்றி கேட்டடோம். நாங்கள் வாங்கிய பணம், அதற்கான கணக்கு ஆகியவற்றின் நகலை மீண்டும் ஒருமுறை அவர் கையில் கொடுத்தோம். “இரண்டு இலட்சம் வாங்கியதாகவெல்லாம் யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி யாராவது சொன்னால், என்னிடம் அனுப்புங்கள். நான் விளக்குகிறேன்” என்று அவர் எங்களுக்குப் பதிலளித்தார்.

இப்போது தனது கடிதத்தில்,  மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.

இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி மக்கள் அனைவரும் இந்தக் கணம் வரை எங்களுடன் நேசமாகத்தான் பழகுகிறார்கள். யாரும் இப்படி ஒரு கேள்வியை எங்களிடம் கேட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு எதிராக இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அல்லது எங்கள் பெயரைச் சொல்லி 1.25 இலட்சம் ரூபாயை யாரோ கையாடல் செய்திருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

எங்கள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளைப் போடும் மிக மோசமான போலீசு அதிகாரிகளுக்குக் கூட, இப்படி ஒரு பொய்க்குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்த மனம் வந்ததில்லை. வெளிநாட்டுப் பணம் வருவதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, கண் கலங்கி குமுறியவர் உதயகுமார். அந்த வலி மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

எந்த இடிந்தகரை மக்களிடமிருந்து எங்களுக்கு 1.25 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக உதயகுமார் கூறுகிறாரோ, அந்த இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், கூட்டப்புளி பங்குத்தந்தை மற்றும் ஊர்க்கமிட்டியினருக்கும், கூடங்குளம் முன்னணியாளர்களுக்கும் என்னுடைய இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும். அதில் கூட்டப்புளி, கூடங்குளம் முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாண்ட எமது வழக்குரைஞர்கள் அனைவரும் இடிந்தகரைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறோம்.

தேதியை இடிந்தகரை ஊர்க்கமிட்டி தெரிவிக்கட்டும்.

நன்றி.

______________________

 

 

  1. எதிரிகளின் சூழ்ச்சிக்கு நீங்கள் இரையாகி விட்டீர்கள் என்பது மிகவும் வருந்த தக்கது… ம.க.இ.க மற்றும் உதயகுமார், உடனடியாக சுமூகமாக இதை தீர்கக வேண்டும்..

    மேலும் உதயகுமாரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களை ம.க.இ.க கண்டிப்பாக, சுய பரிசோதனை செய்யவேண்டும்….

  2. கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களுக்கு மத்தியில், இரண்டு லட்சங்களுக்கு இவ்வளவு நீண்ட கடிதம், விளக்கங்கள்…….. மனம் கனக்கிறது, யார் கண்பட்டதோ , உங்கள் தோழமை இந்த நிலைக்கு வந்து நிற்கிறது. ம.க.இ.க. மக்களிடம் ஆற்றிய பணிக்கு இந்த பணம் ஒரு தூசி…. கொள்கைக்காக வாழ்பவனுக்கும் பணம் என்பது உயிர் காக்கும் மருந்து மட்டுமே, அந்தவகையில் இவர்கள் மக்களிடம் அந்த உயிர் காக்கும் மருந்தை தெருவில் உண்டியல் ஏந்தி பெறுவதை நம்மில் பலர் கண்கூடாக கண்டிருப்போம் ……….. கொள்கையில் வேறு பட்டு இருந்தாலும் அவர்களின் நேர்மை மீது மதிப்பு வைத்திருப்பதால்தான், என்னை போன்றோர் இன்றும் அவர்கள் ஏந்தும் உண்டியலுக்கு மதிப்புகொடுக்கிறோம்……… தன்மானத்தின் மீது ஒரு அவதூறு………. அவதூறு உண்மையாக இருக்கக்கூடாது என்பதே எம்மை போன்றோரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

    • \\ம.க.இ.க. மக்களிடம் ஆற்றிய பணிக்கு இந்த பணம் ஒரு தூசி…\\

      \\அவதூறு உண்மையாக இருக்கக்கூடாது என்பதே எம்மை போன்றோரின் பிரார்த்தனையாக இருக்கிறது\\

  3. போச்சு, எல்லாமே போச்சு.

    ஏற்கனவே வெறும் வாயை மென்னுகிட்டு இருக்குறவுங்களுக்கு அவல் கிடைச்சாச்சு.

    இந்த பிரச்சனையை வைத்துக் கொண்டு ரெண்டு பக்கமும் ஊதிப் பெரிதாக்கி………..

    என்னமோ போங்க……

  4. மக்கள் நன்றிகெட்டவர்கள் அல்ல…அவர்களுக்குத் தெரியும் எது உண்மை என்று!

    கூடங்குளத்தை விட்டுத்தாண்டாத அணுமின் நிலையப் பிரச்சினையை தமிழகெங்கும், பேருந்துகளும், இரயில்களிலும், வீடுவீடாகவும் கொண்டு சென்றது ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும்தான்.

    கூடங்குளம் மக்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு வரும்போது அவர்களை நடுநிசியென்றும் பாராது சென்று சந்தித்து ஆறுதல் தந்ததோடு அவர்களுக்கு உற்சாகமூட்டியது ம.க.இ.கவின் தோழர்கள்தான்.

    இதைப்பற்றிய பல கட்டுரைகளை வினவில் படித்ததாக ஞாபகம்…இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்…

    இப்போதாவது மக்கள் விழித்தெழ வேண்டும்…யார் உண்மையானவர்கள், யார் போலிகள் என்பதை அடையாளம் காண வேண்டும்.

  5. தோழர்கள் மக்கள் முன்னிலையில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மிகவும் சரியானது.அமைப்பு மீது வைத்துள்ள அவதூறுகள் அனைத்தும் மக்கள் முன் பொய் என அம்பலபடுத்த வேண்டும்

  6. மகஇக தோழர்களின் நேர்மை யை கூடங்குளம் மக்கள் அறிவர்…. உதய குமார் போன்றவரின் அவதூறுகளை மகஇக நிச்சயம் சுக்கு நூறாக்கும்

  7. இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும். அதில் கூட்டப்புளி, கூடங்குளம் முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும்

    இப்படி தோழர்களின் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு விசரணை பகிரங்கமாக, கண்டிப்பாக நடத்தியாக வேண்டும்.

  8. பொதுவெளிக்கு வராமலே பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம் , மேலும் இது நட்பு முரணாக மட்டுமே இருக்க வேண்டுமென இருதரப்பிடமும் எதிர்பார்க்கிறேன் .

  9. உதயகுமாருக்கு யோக்கியதை என்கிற வஸ்து கொஞ்சமாவது இருக்குமா என்று தெரியவில்லை. தமிழகம் முழுவதும் நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று இப்போது கேலியாக கேட்கிறார். ஆனால், கூடங்குளத்தில் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டு வெகு பாதுகாப்பாக பாய்ச்சல் காட்ட வேண்டும் என்கிற தமிழ்தேசிய டாக்டிஸ் ம.க.இ.கவுக்கு தெரியாமல் போனது ஒரு சோகம் தான். இந்த தோழர்கள் தான் கூடங்குளத்திற்குள்ளும் சென்னையின் ஏ.சி அரங்கங்களுக்குள்ளும் இருந்த பிரச்சினையைத் தமிழகத் தெருக்களில் பேசு பொருளாக்கினர்.

    https://www.vinavu.com/2012/10/08/koodankulam-report/ –> இதோ திருச்சியில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி இந்த அமைப்பின் பெண் தோழர்கள் தான் மண்டை உடை வாங்கினார்கள். இதே இணையதளத்தில் வெளியாகியுள்ள எண்ணற்ற கட்டுரைகளே இந்த தோழர்களின் அர்ப்பணிப்புக்கு சாட்சி.

    வழக்குச் செலவுகளுக்காக அப்போது 1.95 லட்சம் காசு வாங்கினார்கள் என்று இப்போது சொல்லும் அதே உதயகுமாரின் வாய் தான் ஓராண்டுக்கு முன் வேறு மாதிரி பேசியது. அது கீழே,

    https://www.vinavu.com/2012/05/15/koodankulam-updates/

    //துவக்கவுரை ஆற்றிய சுப.உதயகுமார், “இப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நம்மோடு நிற்கிறது. இன்று நூற்றுக்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாதாரண மக்களுக்காக இங்கே வந்துள்ளார்கள். நமக்கு வழக்கு பிரச்சனை என்றால் அவர்களைத்தான் கேட்கிறோம். அவர்கள்தான் நம் வழக்குகள் அனைத்தையும் நடத்துகிறார்கள். நெருக்கடியான நேரங்களிலும் நள்ளிரவிலும்கூட நம்மை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் கொள்கைக்காக நிற்கிறார்கள்; வழக்குகளுக்காக அவர்கள் நம்மிடம் ஒரு காசு கூடச் சம்பளம் வாங்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று கூறி வழக்குரைஞர்களை அறிமுகப்படுத்தியவுடன் மக்கள் நேசத்துடன் கரவொலி எழுப்பினர். //

    இதில் எது உண்மை உதயகுமார்? நான் சொல்கிறேன், நீங்கள் மணல் மாபியாக்களிடம் காசு வாங்கிக் கொண்டு ம.க.இ.கவைப் பார்த்து குரைக்கிறீர்கள் என்பது உண்மையாக இருக்கக்கூடுமென்று. ஏனெனில்,இந்த ஓராண்டில் வைகுண்டராசனை ம.க.இ.க எதிர்க்கத் துவங்கியது என்பதைத் தாண்டி கூடங்குளம் பகுதியில் வேறு புதிய நிகழ்வுகள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை.

    உதயகுமார் வாங்கிய காசுக்கு மேல் கூவுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த முறை அவரது தேர்வு தவறானது என்பதை நீங்கள் அவர் மண்டையில் உறைக்கும் வண்ணம் கற்றுக் கொடுக்க வேண்டும் தோழர்களே

  10. 1. Udhayakumar now linked to NAAM THAMILAR SEEMAN

    2. SEEMAN linked to Vaikundarajan

    3. Vaukundarajan AMMA ADIMAI

    So finally udhayakumar surrenders to AMMA and get all the cases closed and make some money.

  11. ngo உதையகுமார் என்று இப்போதாவது ம க இ க தோழர்கள் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும் .சுய விமர்சனம் செய்ய வேண்டும் .

  12. மேலே கருத்து தெரிவித்தவர்கள் பலரும் கூறியிருப்பதை போல இதை ஒரு நட்பு முரண்பாட்டு அடிப்படையில் பேசித் தீர்த்துக்கொள்ல வேண்டியதன் அவசியத்தை இருத்தரப்பினரும் உணர்வது நல்லது.அவசியமற்ற சொல்லாடல்களை தவிர்க்க வேண்டும்.
    (எ-டு)
    திரு உதயகுமார் மடலில் கண்ணியமிகுந்த சொற்களுக்குநடுவே சுவாரச்யமான தகவல்கள் என்ற பேரில் மக இக வின் போராட்டத்தை கேள்விக்குள்ளாக்குவது.
    மக இக வின் பதிலில் “வைகுன்டராஜன் வலைப்பின்னல்” என்பது.

    எநடிய போராட்டத்தில் நட்பு சக்திகள் சண்டையிட்டு எதிரிகளின் வேலையை சுலபமாக்கிடவேண்டாம்.

  13. திரு.சுப.உதயக்குமார் அவர்கள் அதிகாரத்துவ மொழியை, அமெரிக்க நடையில், அழகான தமிழில் சொல்லுகிறார் என்றுத்தெரிகிறது,
    வீண்பழியை விவாதமாக மாற்றுவது. தடம் மாறுவுவதன் தடயத்தை அழிப்பது.அசிங்கத்தை அலங்கரித்து சந்தைப்படுத்துவது. அமெரிக்கா ஓபாமா முதல், உள்ளூர் சு சாமிவரை, பறக்கும் அதிவேக ராஜ வீதி இதுதான்!
    இவர்கள் தங்கள் அரசியல் முகூர்த்த மேடையில் நிர்வாணம் ஆகும்போது, யாராவது கோவணத்தோடு, குறுக்க வந்தால் எரிச்சல் ஆவது இயல்புதானே!
    ஆனால், திரு.சுப.உதயக்குமார் அவர்களின் எரிச்சலுக்கான காரணம் என்ன என்று காலம், மிக விரைவில் விளக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்!
    அவருடைய வாக்குமூலப்படி ” நாங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மட்டும்தான். அனைத்து தீயசக்திகளுக்கும் எதிரான மக்கள் இயக்கமல்ல” என்று கூறியது, அரசு தர்பாரை நோக்கி அவர் அசைத்த வெள்ளைக்கொடியா?
    அதை, அதிகாரப்பீடம் அலட்சியப்படுத்திய அவமானத்தால், சிவப்புக் கலரைக்கண்டாலே அவரை அறியாமல் எரிச்சல் படுகிறாரா? என்னமோ….தெரியவில்லையே…!…ஆனால் இப்போது, திரு.சுப.உதயக்குமார் அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

  14. சீமான் தனது திருமணத்தின்போது, வைகுண்டராஜனிடம் ஆசீர்வாதம் பெற்ற காட்சியும், சீமானையும் வைகுண்டர்ராஜனையும் மகஇக தொடர்ந்து விமர்சித்து வருவதையும், அரசாங்கத்தை வேண்டுமானால் எதிர்த்து வெற்றி பெற்று விடலாம்; ஆனால், ஆனால், வைகுண்டராஜனை எதிர்த்தால் எதுவுமே செய்ய இயலாது என்றும் புரிந்துகொண்டிருப்பதுமான, சுப உதயகுமார் அவர்களின் நடைமுறை அறிவு பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால், இந்த விஷயங்கள் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில் சுப உதயகுமார், சக போராளிகள் இயக்கமான மகஇகவின்மீதான குற்றச்சாட்டிலுள்ள அவர்கள் தரப்பு நியாயங்களை அறிந்து, இணக்கம் காட்டுவதுதான் அவரது இன்று வரையிலான செயல்பாட்டை அர்த்தமுள்ளதாக ஆக்கும்.

  15. அம்மா, சீமான், வைகுண்டராஜன், எங்களுக்கு வேறு வழியே இல்லை. ஆகவே, கன்னியாகுமாரி தொகுதி. இதெல்லாம் மக்களுக்கும் தெரியுமென்பதை நிச்சயமாக சுப உதயகுமார் அவர்கள் புரிந்துகொண்டிருப்பார். சறுக்கி விடாதீர்கள் தோழர்களே… இதற்காக மகஇகவின்மீது குற்றம் சாட்டத் துணியாதீர்கள் தோழர்களே….

    • ma ka e ka ulakathil ullla anaithu natchu kallil erunthum manitha kulaithai kaappadrum markchiya leniniya movo sinthanai amaippu uthaya kumar poaruppodu nadanthu koallunngal

  16. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் முதல் இப்போதைய தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் வரை உண்மையிலேயே மக்களைச் சார்ந்து போராடியவர்கள் இந்தப் பிரச்னைக்கு மக்கள் மன்றத்தில்தான் தீர்வு காண வேண்டும்.அதுதான் சரியான, நேர்மையான ஒரே வழி.ம.உ.பா.மையம் அதற்குத் தயார் என்று மக்களுக்கும், தலைவர்களுக்கும் பகிரங்கமாக அறிவித்து விட்டது.இதை ஏற்றுக்கொண்டு தனது குழுத் தோழர்களோடு மக்கள் மன்றத்துக்கு திரு.சுப.உதயகுமார் ஐயா அவர்கள் எப்போது வருவார்கள் என்பதே நேர்மையான அனேகம் பேருடைய எதிர்பார்ப்பு.சுப.உ.அவர்கள் இதை விரைந்து செய்ய பணிவான வேண்டுகோள்.

  17. இது புதிதாக எழுப்பப் பட்டுள்ள பிரச்சனை அல்ல என்பதும், இதனை ஒரு நற்பு முரண்பாடு என்ற முறையில் ம.உ.பா.மையம் கண்ணியமாக கையாண்டிருப்பதும் தோழர் ராஜுவின் கடிதத்திநூடாக தெளிவாகின்றன. கூடங்குளம் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கவனித்து வரும் யாருக்கும் தெரியும் ஏன் அப்போது அவதூறுகள் கிளப்பப் பட்டன என்றும் உதயகுமார் ஏன் அவற்றைப் புதிதாக மசாலா கலந்து கிளப்புகிறார் என்றும்: ம.உ.பா.மையம் மற்றும் ம.க.இ.க. அமைப்புகளின் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவான செயல்பாடுகள் முதலில் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் கமிட்டிக்கும் பாதிரிகளுக்கும் உவப்பாகத்தான் இருந்தது, மக்கள் தமக்கு கட்டுப்பட்டு போராடிய வரை. ஒரு கட்டத்தில் மக்களே போராட்டத்தை தலைமையின் நீக்குப் போக்குகளையும் மென்மையான அரசியலற்ற NGOதனத்தையும் மீறி தம் கைகைளில் எடுத்து தம் தலைமைக்கு வழிகாட்டினர். இதில் ம.உ.பா.மையத் தோழர்களின் பனி அளப்பரியது, இன்றியமையாததாக இருந்தது. செப்டம்பரில் போலீஸ் வன்முறை வேரியாட்டங்களின் போதும் தோழர்கள் மக்களை அணிதிரட்டி தொடர்ந்து போராட வைத்தனர், உதயகுமார் தலைமையில்தான்! உதயகுமார் சரணடையப் போவதாக கூறியபோது மக்களே அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்து தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதற்கும் தோழர்கள் மக்களுக்கு அரசியலரிவு ஊட்டியதே காரணம் என்று உறுதியாகக் கூறலாம். இந்நிலையில் அங்கிருக்கும் கிருத்துவப் பாதிரிகளுக்கு ம.உ.பா.மையம் ,மற்றும் ம.க.இ.க. தோழர்களின் தலையீடும் தொடர் அரசியல் பிரசாரங்களும் ஒரு தலைவலியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு அரசியல்மயப் படுத்தப்பட்டால் மக்கள் தமது தலைமையின் NGO செயல்பாடுகளையும் அதுசார்ந்த ஏமாற்றும் போக்கையும் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தவர்கலாய், ஈனத்தனமான அவதூறுகள் மூலம் போராட்டக் களத்திநின்று ம.க.இ.க.வை அப்புறப் படுத்திவிட்டு, போராட்டத்தை ஒருவாராக முடித்துவிடலாம் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது என்று இப்போது தெளிவாகத் தெரிகிறது. கூடங்குளம் போராட்டம் முடிக்கப்பட்டுவிட்டதாகவும் இனி அரசை எதிர்த்துப் போராடும் வலிமை இல்லை என்றும் கூறிவிட்ட உதயகுமார் இப்போது அதே பழைய அவதூறுகளை மீண்டும் எழுப்பக் காரணம் வைகுண்டராஜன் உடனான அவரது தொடர்பும் அவன் தரும் காசுமே என்பது யாருக்கும் தெரியும். தம்மைத் தலைமையில் மக்கள் நியமித்திருப்பதால் தாமே அந்தப் பகுதி மக்களுக்கும் அவர்களது போராட்டங்களுக்கும் அத்தாரிட்டி என்று அவர் நினைக்கிறார், அப்படி ஒரு தோற்றத்தை வலிந்து மக்களிடம் ஏற்படுத்த வீண் முயற்சி செய்கிறார். இதன் பின்புலத்தில் பாதிரிகள், அவர்களின் NGOக்கள், மறத்தமிழன், மனர்தமிலன் என ஒரு பெரிய கூட்டு இருப்பதும் கண்கூடு. தற்போது உதயகுமார் யாரோ எழுதிக் கொடுத்தது போன்றதொரு கடிதத்தை, ஏதோ ம.க.இ.க.வின் செயல்பாடுகளை தமிழகம் முழுவதும் கண்காணித்து வருபவர் போல எழுதிகிறார். அறிவு நாணயம் என்பதற்கு அவருக்கும் அவர் பின்னால் இருந்து இந்த அவதூருகாளைப் பரப்புபவர்களுக்கும் அர்த்தம் தெரியுமானால் தோழர்கள் அழைத்திருக்கும் வெளிப்படையான விசாரணைக்கு வந்து நிரூபிக்கட்டும். மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட இடிந்தகரை கூட்டப்புளி மக்கள் பிரச்சனைக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டும் போராட வேண்டுமென்ற உதயகுமாரின் ஞாயம்தான் அவரது கடிதத்தின் உச்சகட்ட நகைச்சுவை!

  18. இந்நிகழ்வுகளை பார்க்கும் போது உதயகுமார் காந்தியை போன்றும் ம.க.இ.கவினர் பகத்சிங் போன்றும் போராடுகின்றனர் என்பது தெரிகிறது. காந்தியின் உண்மை வரலாறு தெரிந்தவர்களுக்கு இது புரியும் என நினைகின்றேன்.

    • உதயகுமார்! அரசியல் அறியாத அப்பாவியா நீங்கள்?நியாயமாக பார்த்தால், மணற்கொள்ளையை எதிர்த்தும் அல்லவா போராடியிருக்கவேண்டும்? உங்களால் முடியாவிட்டாலும், போராடும் தோழர்களுக்கு ஆதரவாவது தெரிவித்திருக்கலாமே! அவதூறு கிளப்புவது ஏன்?

  19. ## தாது மணல் கொள்ளை விவகாரத்தில் இந்து முன்னணியும், தென்னிந்திய திருச்சபையும் ஓரணியில் இணைந்து வைகுண்டராஜனை ஆதரித்து மனு கொடுக்கிறார்கள்.##
    -மனித உரிமைப் பாதுகாப்புக் கழக வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் பேட்டி.
    -மணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரையில்

    இப்ப தெளிவா புரிஞ்சிருக்குமே உதயகுமாரோட அவதூறு, பொய் மூட்டைகளோட லட்சணம். மேலும், அவர் யாருக்காக, யாருடைய குரலில் சொல்லி இருக்கிறார் என்பதும்!

  20. இந்த அவதூறு கடிதம் கூட ஒரு விதத்தில் நல்ல விசியம் தான், ஏனென்றால் சில கும்பலை சேர்ந்தவர்கள் கூடங்குளம் NGO கும்பலோடு கூட்டு வைத்துகொண்டு ம க இ க மக்களை ஏமாற்றுகிறது என்று அவதுறு செய்தனர், ஆனால் இப்பொழுது ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கூடம்குளம் பிரச்னையை ஏன் எடுத்தனர் (மக்களின் உண்மையான போரட்டதிருக்கு ஆதரவும், ஏகாதிபத்திய – மறுகாலனிய சுரண்டலை ஒழிக்கவும் ), அவர்களது அணுகுமுறை எப்படி இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தேரிந்துவிட்டது. NGO எடுபிடிகளுக்கு ம க இ க-வின் போராட்டம் எப்படி பிரச்சனையாக இருந்தது என்று வேறு வழி இல்லாமல் சொல்லிவிட்டனர்…

    /கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா?/

    மக்கள் முன்னால் இவர்கள் அம்பல பட்டு போவதை ஒத்துக்கொள்ளாமல் ம க இ க மீது பலி போடுகிறார்கள்…….

  21. மணற்கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக உயிரை துச்சமாக மதித்து இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும் ம.க.இ.க தோழர்களைப் பார்த்து ‘இந்த பிரச்சாரத்தை ஏன் கடலோர மக்களிடமே செய்கிறீர்கள்’ என்கிற அறிவார்ந்த கேள்வியை கேட்டிருக்கிறார் அண்ணன் சு.ப உதயகுமார். அந்த கேள்வியை அவரிடம் கேட்டால் இப்படி கேட்க வேண்டியிருக்கும். ‘நீங்கள் ஏன் அணுஉலை ஆபத்து குறித்து கூடங்குளம், இடிந்தகரை மக்களிடமே பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?’

    மணற்கொள்ளையன் வைகுண்டராஜனால் பாதிக்கப்பட்டிருப்பது இப்பகுதி மக்கள், அவனுக்கெதிராக போராட வேண்டியவர்கள் இப்பகுதி மக்கள், எனவே அணிதிரட்டப்பட வேண்டியதும் இவர்களே என்பது சின்ன பொடியனுக்கும் தெரிந்த விசயம், அது அறிவாளியான அண்ணன் உதயகுமாருக்கு தெரியாமல் போனதேன்? மணற்கொள்ளைக்கெதிராக தூத்துக்குடி, தி.வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களைத் திரட்டாமல் திண்டுக்கல் மாவட்ட மக்களையா திரட்ட முடியும்? தோழர்களின் வேலைக்கு இடையூறு செய்யும் வகையில் ‘சம்பந்தமே’ இல்லாமல் அண்ணன் இப்படி ஒரு கேள்வியை வைப்பானேன்?

    அடுத்ததாக ம.க.இ.க தோழர்கள் மீது உதயகுமார் வைத்திருக்கும் குற்றச்சாட்டை இடிந்தகரை, கூடங்குளம் மக்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அதற்கு ம.க.இ.க தோழர்களின் ஆலோசனைப்படி உடனடியாக ஒரு பகிரங்கமான மக்கள் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த விசாரணையில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து முன்னணி பத்திரிகையாளர்களையும் அழைக்க வேண்டும், அவர்கள் அனைவர் முன்னிலையிலும் இவ்விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும், அதில் உதயகுமார் ம.க.இ.க மீது கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பகிரங்கமாக தோழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  22. அரசியல்காரணங்களுக்கு அப்பாற்பட்டு, என்போன்றவர்கள் மிகவும் ஆதரித்த உதயகுமார் அவர்கள் சோரம்போவதை அறிந்த பின் மனது மிகவும் சோர்ந்துபோய் விட்டது. உதயகுமார் அவர்களே, அணுசக்திக்கெதிராக உங்களால் தொடர்ந்து போராடுவதோ வெற்றிபெறுவதோ இயலாத விஷயம் என்பதை உங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரும் அறிவார்கள். போராட்டக் களத்தில் தாங்கள் நீண்ட காலம் நின்று தாக்குப்பிடித்தீர்கள் என்பதே நம்மைப் பொறுத்தவரைக்கும் பெரும் வெற்றிதான். வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் நமக்கில்லை. ஆகவே, இதை முன்னிட்டு தாங்கள்,கூடா நட்புகளுடன் சேர்ந்து அரசியல் களத்தில் இறங்க வேண்டாம். எம்.பி. ஆகி விட்டால் அணு உலையை இங்கிருந்து அகற்றி விட முடியுமென்று தாங்கள் பிரச்சாரம் செய்ய நினைப்பீர்களெனில் தயவு செய்து ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்த ஒரு உண்மையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதிகார வர்க்கத்தினர் சொல்வதுபோல் மீனவ மக்கள் அறிவிலிகள் அல்ல.

  23. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் மேலும் ஒருவர் வீசியெறியப்படவிருக்கிறார். உதயகுமாரின் நல்லெண்ணம், அரசியலாகத் தடம்புரள ஆரம்பித்து விட்டதை மிக நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அணுசக்திக்கெதிரான செயல்பாட்டாளராக இருந்தவரின் அண்மைக்கால அரசியல்களை உற்றுக் கவனித்த பிறகுதான் இந்த உண்மையை வேதனையுடன் உரக்கச் சொல்ல வேண்டியதா யிற்று. உதயகுமார் அவர்களே, உங்களது தர்க்கங்களைக் கடந்த சில நியாயங்களின் பக்கம் நிற்பவர்கள்தான் பெரும்பான்மையான போராளிகளும் மக்களும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் நீங்கள் பயப்பட வேண்டிய தேவைகள் இல்லை. அப்படியான பயம் உங்களுக்கு இருக்குமெனில், வைகுண்டராஜன், சீமான், நடராஜன்போன்றவர்களை நம்புவதை விடவும் நம்முடைய சட்டத்தை நம்புங்கள்; ஜெயலலிதா அம்மையாரை நம்புங்கள். எவ்வளவு காலம்தான் இடிந்தகரையில் வாழ்வது; ஆகவே, இங்கிருந்து வெளியேறி விட வேண்டுமென்ற உங்கள் எண்ணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியே சட்டம் உங்களைத் தண்டிப்பதாக இருந்தாலும் வீரத்துடன் அதனை எதிர்கொள்ளுங்கள். வெற்றியுடன் திரும்பி வாருங்கள். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உங்கள் நேர்மையையும் போராட்ட வடிவத்தை யும் முன்வைத்து உங்களை காந்திக்கு ஒப்பாக நாங்கள் கருதியிருந்தோம். உங்கள் நேர்மையைக் கேள்விக்குட்படுத்திய நண்பர்களையும் உறவினர்களையும் நாங்கள் பகைத்துக்கொண்டோம். ஆகவே, தயவு செய்து, எங்களை அவமானப்படுத்தி விடாதீர்கள். அரசியல் சாக்கடைக்குள் இறங்கி விடாதீர் கள். மக்களைப் பேசிச் சரிக்கட்டி விடலாமென்று நீங்கள் கருதுவதாக இருந்தால், இந்தப் பத்தியின் முதல் வாசகங்கள்தான் பதில்.

  24. ”இடிப்பாரில்லாத ஏமிரா மன்னன் கெடுப்பாரில்லாமல் கெடுவான்” என்பதை, உலக அளவுக்கு உதயகுமார் உயரக் காரணமாக இருந்த, இடிந்தகரை மக்களே, முகிலன், மைபா உள்ளிட்ட போராளிகளே எடுத்துரைப்பீர்.

  25. நண்பர் ஆனந்தன் என்பவர், இங்கே அடிப்படை ஆதாரம் இல்லாமல், உதயகுமார் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது, அநாகரீகமானது…ஆதாரங்களை கொடுங்கள், உதயகுமாரிடம் நாங்கள் கேட்கிறோம்..

    • ஜோ. தமிழ்ச்செல்வன், “ம.க.இ.க வை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். மார்ச் 19, 2012 அன்று போராட்டக்குழுவை சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியனும், கூட்டப்புளி கைது செய்யபட்டபோது சக வழக்குரைஞர் என்ற முறையில், “வாருங்கள் போகலாம் என்று இவரை இடிந்த கரை செல்வதற்கு அழைத்தேன்”. “எனக்கு வேறு வேலை இருக்கிறது, வரமுடியாது” என்று அப்போது வர மறுத்தார்.

      அன்றைக்கு வராதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு மக்களைப் பிணையில் எடுப்பதற்கான வேலைகள் 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்தன. 15 நாளும் அவருக்கு தொடர்ந்து வேறு முக்கிய வேலைகள் இருந்திருக்கின்றன. அவர் வரவில்லை. எந்த வேலையும் இல்லாதவர்களான நாங்கள்தான் போய்க்கொண்டிருந்தோம். இந்த லட்சணத்தில் “தொடக்க காலத்திலிருந்தே கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்ததால் ம.க.இ.க வை நான் நன்கு அறிவேன்” என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்.

      “கைது செய்யப்பட்ட 200 பேரையும் 200 ரூபாய் செலவில் பிணையில் எடுத்திருக்க முடியும்” என்கிறார் தமிழ்ச்செல்வன். அப்படிப்பட்ட சாகசங்களையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாட்டில் ஒரே ஒரு மனிதருக்கு மட்டும்தானே உண்டு? 80 இன்னோவா கார்களில் 15,000 பக்தர்களை கேதார்நாத்திலிருந்து காப்பாற்றியவரான நரேந்திர மோடி வேண்டுமானால், 200 ரூபாயில் 200 பேரைப் பிணையில் எடுத்திருக்க முடியும். ஜோ.தமிழ்ச்செல்வனால் எப்படி முடியும் என்று சிந்தித்தபடியே நாகர்கோயில் நகரின் ஒரு குட்டிச் சுவரில் ஒன்னுக்கடிப்பதற்காக ஒதுங்கினேன்.

      எதிரில் தமிழ்ச்செல்வனும் மோடியும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில் சிறுநீர் உறைந்து விட்டது. அந்தக் சுவரொட்டியை உங்களுக்கும் காணத்தருகிறேன். “புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை – நரேந்திர மோடி – ஜோ.தமிழ்ச்செல்வன், தெற்கு எழுத்தாளர் இயக்கம்.”

      https://www.facebook.com/sivaraja.boopathy

      • மோடியும்,தமிழ் செல்வனும் சேர்ந்து இருக்கும் போஸ்டரைப் பார்த்தேன்.இவர்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டியதில்லை.அருவெறுப்பாக இருக்கிறது.

        http://tpdkma.blogspot.in

  26. திறந்த மனதோடு அணு உலைப் பிரச்சனைக்கு தீர்வைத் தேடும் – தூய ஜனநாயகவாதி திரு.சுப.உதயகுமார் அவர்களுக்கு சில கேள்விகள்

    1. உங்கள் கொள்கை காந்தியமா? பெரியாரியமா? அல்லது வை.கோபால்சாமி, நெடுமாறன்,
    சீமானின் தமிழ் தேசியமா? அல்லது வெறும் தன்னார்வ தொண்டு நிறுவன சேவை மட்டுமா?
    2. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் யாரால் எப்போது எங்கு துவங்கப்பட்டது? அதன் தலைவர் செயலர், நிர்வாகிகள் யார்?அதன் கொள்கை அறிக்கையை வெளியிடவும்.
    3. அனுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் புஷ்பராயன், மை.பா, முகிலன் உள்ளனரா?
    4. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கடந்த மூன்றாண்டுகளாக இதுவரை எத்தனை முறை கூட்டப்பட்டுள்ளது? அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படிதான் நீங்கள் செயல்படுகின்றீர்களா?
    5. கூடங்குளம் அனுலை எதிர்ப்பு போராட்டக்குழு உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?
    6. ஜனநாயக முறைப்படி போராட்டகுழுவின் அனைத்து உறுப்பினர்களையும் கூட்டித்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறதா?
    7. கூடங்குளம் சிவசுப்பிரமணியம், மனோ தங்கராசு ஆகியோர் போராட்டக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்களா? ஆம் எனில் ஏன்?
    8. தமிழர் களம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள மாற்று மொழிபேசும் மக்களை வந்தேறிகள் என எதிர்க்கும் இனவெறி பாசிச அமைப்பு.அதன் நிர்வாகிகளுடன் காந்தியம் பேசும் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் எப்படிப் பணியாற்றுகிறீர்கள்?
    9. செப்.10, 11 , 2012 தடியடி, துப்பாக்கிசூட்டின் போது கைதானோர் வழக்குகளை நடத்தியது எந்த அமைப்பினர்? இடிந்தகரை மக்களை பிணையில் எடுக்க அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு? அதற்கு கணக்கு எழுதி கொடுத்துள்ளார்களா? கொடுத்திருந்தால் வெளியிடவும்.
    10. அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோதும் புஷ்பராயன் தொண்டு நிறுவனம் மீது மட்டும் அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத மர்மம் என்ன?
    11. முகிலன் போராட்டக்குழுவில் எந்த அடிப்படையில் எப்போது சேர்க்கப்பட்டார்?
    12. முகிலன் மீதான பாலியல் குற்றாச்சாட்டுக்கு மக்கள் முன்பு விசாரணை நடத்தப்பட்டதா?
    13. கருணாநிதியை காட்டமாக விமர்சிக்கும் நீங்கள், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கருணாநிதியை சந்தித்ததைக் கண்டிக்காதது ஏன்?
    நீண்ட நாட்களாக இக்கேள்விகளில் பல எனக்கு உண்டு.தற்போது பலரும் தங்களிடம் கேள்வி கேட்பதால் நானும் கேட்கிறேன்.திறந்த மனத்துடன் விரைந்து பதிலளிக்கவும்.

    • உங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்கிறாரோ இல்லையோ, ஆனால் பதில் எனக்கு நன்கு தெரிகிறது, நன்றி.

  27. மோடியும்,தமிழ் செல்வனும் சேர்ந்து இருக்கும் போஸ்டரைப் பார்த்தேன்.இவர்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டியதில்லை.அருவெறுப்பாக இருக்கிறது.
    http://tpdkma.blogspot.in/

  28. I am little late. I just read Suba. Udayakumar’s letter in the following link.

    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25394

    He seems to be contemptuous of ‘புரட்சி’. The following expressions in his letter hint on it.

    // உங்களின் புரட்சியையும், அதன் தீரத்தையும்//
    // உங்கள் புரட்சியை மட்டுமே நடத்துவதற்குப் பதிலாக//
    // அடுத்தவர் நடத்தும் போராட்டத்தில் நுழைந்து புரட்சி செய்யாதீர்கள்.//
    // போராடும் மக்களிடையே போய் புதிய புரட்சியாளர்களைத் தேடுவது//
    and
    //இவையெல்லாம் நேர்மையான புரட்சியல்ல.//

    Then I have to give my remark on the following paragraph.

    // சிங்கூர், நந்திகிராமம் போல கூடங்குளம் போராட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல இடங்களில் உங்களில் சில தோழர்கள் பேசியிருக்கிறீர்கள். அப்படிப் பேசுவது, நம்புவது உங்கள் கருத்துரிமை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஒருமுறை உங்கள் கலைக்குழுவினர் இடிந்தகரை மேடையில் இதே கருத்தை வலியுறுத்திப் பாடினார்கள். இந்த வன்முறைக் கருத்துக்கு நான் உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, “சும்மா ஒரு எழுச்சிக்காகவே அப்படிப் பாடினார்கள்” என்று விளக்கம் அளித்தீர்கள். உங்களின் புரட்சியையும், அதன் தீரத்தையும், உண்மைத் தன்மையையும் நான் அன்றைக்கு தெளிவாகப் புரிந்துகொண்டேன்.//

    He cannot even stand the songs of ma.ka.ee.ka which are of a genre apart. Here he ridicules ma.ka.ee.ka’s use of those songs. This shows his indifference.

    This paragraph also hints he thinks ‘இடிந்தகரை மேடை’ as his own மேடை.

Leave a Reply to மணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க