Wednesday, September 28, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி சப்பாயேவ் - சோவியத் திரைப்படம்

சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

-

வீடியோவை நேரடியாக தளத்தில் பார்க்க முடியவில்லை என்றால், இந்த சுட்டியை கிளிக் செய்து யூடியூபில் பார்க்கவும்

மிடுக்கான ராணுவச் சீருடைகள், நவீன ஆயுதங்கள், வசதியான தங்குமிடங்கள் இவற்றுடன் முறையாக போரிடுகிறது ஒரு படை. படைத் தலைவர் ஓய்வு நேரத்தில் பியானோ வாசிக்கிறார். எதிரிப் படைகளை முறியடித்து பழைய உலகை பாதுகாக்கும் நோக்கத்தோடு போரிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம், தொள தொளப்பான, கந்தலாடை உடுத்த, துருப்பிடித்த துப்பாக்கிகளுடன், கிராமத்து வீடுகளில் இருந்து செயல்படும் படை. படைத் தலைவர் சப்பாயேவ் உருளைக் கிழங்குகளை மேசையில் நகர்த்துவதன் மூலம் போர் உத்திகளை விளக்குகிறார். தங்களை பசியும், பட்டினியும் ஆக சுரண்டும் உலகை தகர்த்து புதிய உலகை படைப்பதற்காக போராடுகின்றனர் இந்தப் படையினர்.

விவசாயியான சப்பாயேவின் தலைமையிலான செம்படையணியின் வீரர்களும், எளிய விவசாயிகள். அவருடைய படைகள் படித்த, அனுபவம் வாய்ந்த தளபதிகளின் வெண் படைகளிடம் ஒருமுறை கூட தோற்றதில்லை. விவசாயிகள் படை வெற்றிகளை குவித்தாலும், கட்டுக் கோப்பு, ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் பல இருக்கின்றன.

கட்சியிலிருந்து அனுப்பப்பட்டு வந்து சேரும் தன்னை விட இளையவரான கமிஸார் பர்மனோவை சந்தேகமாக பார்க்கிறார் சப்பாயேவ். விவசாயிகளின் வர்க்க ரீதியான புரட்சிகர உணர்வுக்கும், புரட்சிகர திட்டத்துடன் செயல்படும் கட்சியின் ஒழுங்குக்கும் இடையேயான மோதலாக இது விரிகிறது.

சப்பாயேவ் திரைப்படம்கிராம மக்களை கொள்ளையடிக்கும் செம்படை வீரர்களை கைது செய்து அடைக்கும் கமிசாரிடம், தனது படையணி வீரர்களை தண்டிக்கும் அதிகாரம் தனக்குத்தான் உண்டு என்று கலகம் செய்யும் சப்பாயேவ், கிராம மக்கள் திரண்டு வந்து நன்றி சொன்னதும் இளம் கமிசாரின் அரசியல் வழிகாட்டலை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்.

இயல்பிலேயே போர்த்திறமும், தலைமைப் பண்பும் கொண்ட சப்பாயேவ், செம்படைத் தளபதி ஆன பிறகு எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறார். கமிஸார் பர்மனோவ் அவருக்கு உலக வரலாற்றையும், அரசியல் கண்ணோட்டத்தையும் கற்றுக் கொடுக்கிறார். ஒரு படைத் தலைவருக்கான ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறார். படிக்காத விவசாயி, மக்களுக்காக போராடும் போராளி என்ற நிலையிலிருந்து ஒரு வரலாற்றுப் பார்வை கொண்ட தலைவராக பரிணமிக்கிறார், சப்பாயேவ்.

ஒரு காட்சியில் “நீ கம்யூனிஸ்டா, போல்ஷ்விக்கா” என்று கேட்கும் ஒரு விவசாயியிடம் சப்பாயேவ், தான் ஒரு இண்டர்நேஷனலிஸ்ட் (சர்வதேசியவாதி) என்று பதில் சொல்கிறார். பர்மனோவ், “எந்த சர்வதேசியம், இரண்டாவது அகிலமா, மூன்றாவது அகிலமா” என்று கேட்க, மிடுக்கு சற்றும் குறையாமல், “லெனின் எந்த அகிலத்தில் இருக்கிறாரோ அந்த அகிலம்” என்கிறார் சப்பாயேவ்.

சப்பாயேவின் உதவியாளர் பெத்கா, தனது காதலி அன்னாவிற்கு இயந்திரத் துப்பாக்கி சுட கற்றுத் தருகிறார். இறுதிக் காட்சியில் துப்பாக்கியின் பொறுப்பில் இருந்த முதியவர் கொல்லப்பட்ட நிலையில் அன்னா துப்பாக்கியை இயக்கி வெண்படைகளின் தாக்குதலை முறியடிக்க உதவுகிறார்.

கட்சி பர்மனோவை திரும்ப அழைத்துக் கொண்டு அவ்விடத்தில் வேறொரு கமிசாரை நியமிக்கும் போது சப்பாயேவும், மக்களும் உருக்கமாக விடை கொடுக்கின்றனர்.

நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படம், எதிர்கால குறிக்கோள்களின் உயரத்தில் இருந்து கடந்த காலத்தை ஆய்வு செய்வது என்ற சமூக யதார்த்த அடிப்படையிலானது. இந்த திரைப்படம் இன்றைக்கும், புத்துணர்ச்சி ஊட்டும் புரட்சிகர அனுபவத்தைத் தருகிறது. கலை மக்களுக்கானதாக படைக்கப்படும் போது , லட்சக் கணக்கான மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் போது அது சாகாவரம் பெறுகிறது.

வசிலி சப்பாயேவ் ரஷ்யாவில் புதய்கா என்ற கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். முதல் உலகப் போரில் போரிட்டு புனித ஜார்ஜ் பட்டயத்தை மூன்று முறை பெற்றார். செப்டம்பர் 1917-ல், போல்ஷ்விக் கட்சியிலும் செம்படையிலும் சேர்ந்து புரட்சிகர அணியில் போரிட்டார். 1917 டிசம்பர் மாதம் செம்படையின் 138-வது காலாட்படைப் பிரிவின் வீரர்கள் அவரை தங்களது தளபதியாக தேர்ந்தெடுத்தனர். பின்னர் 2 வது நிக்கலேவ் பிரிவு மற்றும் 25-வது துப்பாக்கி படைப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். சப்பாயேவின் தலைமையில் 25வது படைப்பிரிவு தோல்வியையே சந்தித்ததில்லை.

செப்டம்பர் 5, 1919-ல், செம்படையின் வட்டார தலைமையகத்தை வெண் படைகள் தாக்கியபோது, தீரத்துடன் போரிட்டு காயமடைந்த சப்பாயேவ் உரால் ஆற்றின் குறுக்கே நீந்தி தப்பிக்க முயன்றார். அதன் பின் அவர் உயிரோடு வரவில்லை, அவரது உடலும் மீட்கப்படவில்லை.

வசிலி சப்பாயேவ்
வசிலி சப்பாயேவ்

சிலி சப்பாயேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சப்பாயேவுடன் கமிஸாராக பணியாற்றிய டிமித்ரி பர்மனோவ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட உண்மைக் கதையே வசிலியேவ் சகோதர்களால் இயக்கப்பட்டு 1934-ம் ஆண்டு வெளி வந்த சப்பாயேவ் திரைப்படம்.

தோழர் சப்பாயேவின் வாழ்க்கையும், இந்த திரைப்படமும், தன்னிச்சையான புரட்சிகர உணர்வுக்கும், பாட்டாளிவர்க்க தலைமையில் அமைப்பாக்கப்பட்ட கட்சியின் புரட்சிகர உணர்வுக்கும் இடையிலான போராட்டத்தையும், வர்க்க அடிப்படையில் உணர்வு பெற்றிருக்கும் மக்களை கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

பர்மனோவிற்கும் சப்பாயேவிற்குமிடையிலான உறவு, மக்களுக்கு கற்றுக் கொடுத்தல், மக்களிடமிருந்து கற்று கொள்ளல் என்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கையாண்ட முறையை சித்தரிக்கிறது.

  1. படிக்காத விவசாயி, மக்களுக்காக போராடும் போராளி என்ற நிலையிலிருந்து ஒரு வரலாற்றுப் பார்வை கொண்ட தலைவராக பரிணமிக்கிறார், சப்பாயேவ்.

  2. இப்படி பட்ட படங்களை தான் நான் தேடி கொண்டிருந்தேன், எனக்கு அறிமுக படுத்தியதற்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க