உங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது.
ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோயிலையும் கட்டித் தொலைத்ததால் தமிழ்தேசிய புரவலர் நடராஜனுக்கு ஒரு கட்டிடம் கட்டி தன் பெயரை நிலை நாட்டியாக வேண்டிய அவசியம் உருவாகிறது. மற்றபடி அவர் தஞ்சைக்கு செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார். தஞ்சையின் ரியல் எஸ்டேட் விலையை சகட்டு மேனிக்கு ஏற்றியது முதல் மார்க்கெட் போன நடிகைகளை தஞ்சாவூருக்கு பொங்கல் சமயத்தில் அழைத்து வருவது வரை நடராஜன் செய்த பணிகளை ராஜராஜனே வந்தாலும் செய்ய முடியாது.
அந்த நடராஜன் நடத்தும் விழாவை ஒரு தஞ்சாவூர்காரனான நான் புறந்தள்ளுவது பெரும் வரலாற்றுப் பிழையாகி விடுமாகையால் எப்பாடுபட்டாவது சென்று விடுவது என தீர்மானித்தேன். மேலும் விழாவுக்கு அழைக்கப்படாதவர்கள் துரோகிகள் மட்டுமே என ஆனந்த விகடனில் பழ நெடுமாறன் சொல்லியிருக்கிறார் (ஆனால் கூட்டத்தில் அதை மறுத்தார்). அழைக்கப்படாதவன் துரோகியென்றால் வராதவனும் துரோகியாகி விடுவானே எனும் அச்சமும் சேர்ந்து கொள்ள, செல்ல வேண்டுமெனும் தீர்மானம் வலுப் பெற்றது. இந்த முடிவுக்கு வந்த வேளையிலேயே முற்றத்துக்கு முடிவு கட்ட மம்மி முடிவெடுத்த செய்திகள் வர ஆரம்பித்தபடியால், ஜெயாவுக்கு எதிராக நெடுமாறன் சீற்றம் காட்டும் ஒரு அரிய காட்சியைக் காணும் வாய்ப்பு கிட்டலாம் எனும் சாத்தியங்கள் என மனதில் தோன்றின. வாழ் நாளுக்குள் அப்படியான ஒரு காட்சியை காணும் ஆவலும் இணைந்து கொள்ள, தஞ்சைக்கு போவது ஒரு தற்காலிக லட்சியமாகவே மாறிவிட்டது.
விளார் சாலை தஞ்சையின் மறுகோடியில் இருப்பதால் நகரத்து வீதிகளில் முற்றத்து விளம்பரங்களை பார்த்தபடியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஆச்சர்யம், எந்த போஸ்டரிலும் பிரபாகரனைக் காணவில்லை. அனேக சுவரொட்டிகளில் நெடுமாறனும் நடராஜனும் மட்டுமே காட்சி தந்தார்கள். மணியரசன் மட்டும் பாலச்சந்திரன் படத்துடன் பேனர் வைத்திருந்தார். அண்ணனுக்கு விமரிசையாக கல்யாணம் செய்து வைத்த களைப்பில் இருப்பதால் நாம் தமிழர் தம்பிகளின் விளம்பரங்கள் பெரிய அளவில் தட்டுப்படவில்லை. இதையெல்லாம் கவனித்தபடியே சென்றதில் முற்றம் வந்து விட்டது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் தோற்றம் பற்றிய பதிவை இரண்டொரு நாளில் எழுதுகிறேன். இன்று திறப்புவிழா என்பதால் இப்போது விழா அரங்க நிகழ்வுகளை மட்டும் பார்க்கலாம். முதலில் தேனிசை செல்லப்பாவின் பாடல் நிகழ்ச்சி, அதில் அவர் மூன்று முறை உலகை சுற்றி வந்த செய்தியை மூன்று முறையும், தன்னை சிறப்பாக வரவேற்ற மலேசிய மற்றும் கனடா நாட்டு தமிழர்கள் பெயரை நான்கு முறையும், தலைவர் நெடுமாறன் எனும் வார்த்தையை குறிப்பெடுக்க இயலாத அளவுக்கு பல முறையும் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர் சொன்ன விடயம்தான் செல்லப்பாவைப் பற்றி இங்கே பேச வைக்கிறது. அதாவது நெடுமாறன் இன்னமும் பிரபாகரனுடன் பேசி வருவதாகவும் விரைவில் அவர் வெளியே வருவார் எனவும் உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார். இந்த இரகசியத்தை தேனிசை செல்லப்பாவுக்கு சொன்ன நெடுமாறன், மற்ற யாருக்கும் சொல்லவேயில்லை. என்ன செய்ய, எல்லா தமிழர்களுக்குமான தலைவனின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தமிழனாக தேனிசை செல்லப்பா மட்டும்தான் இருக்கிறார் போல. மற்றவர்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.
கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் நடந்த இந்த நிகழ்வின் சாரத்தை மூன்று வரிகளில் அடக்கிவிடலாம், (சில விதிவிலக்குகள் உண்டு)
- வள்ளல் நடராஜன் வாழ்க.
- அய்யகோ இந்த அரசு எங்களை இப்படி துன்புறுத்துகிறதே.
- ராஜபக்சேவுக்கு துணைபோன காங்கிரசை தண்டிப்போம்.
அதேபோல வழக்கமான தமிழ்தேசிய கூட்டங்களில் காணப்படும் மூன்று சங்கதிகள் இங்கே அத்தனை அதிகமாக இங்கே இல்லை,
- துரோகி கருணாநிதி எனும் வசைபாடல் கணிசமாக குறைந்திருக்கிறது.
- பிரபாகரன் மீண்டும் வருவார் எனும் வாக்குறுதி எந்த பேச்சாளரிடம் இருந்தும் வரவில்லை.
- இந்தியாவே எங்கள் மீது கருணை காட்டும் எனும் மன்றாடல் காசி ஆனந்தனிடம் இருந்து மட்டும்தான் வந்தது. மற்ற பலரும் மகிந்தாவுக்கு இணையான குற்றவாளி இந்தியா என குறிப்பிட்டார்கள்.
ஆகவே தமிழ்தேசிய பாகவதர்கள் தங்கள் பாடல்கள் சலிப்பூட்டாமல் இருக்க சில மாறுதல்களை செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
இடம் கொடுத்த மகராசன்,
எங்கள் ம.நடராசன்.
அவன் எல்லாம் வல்ல இளவரசன் – செல்லப்பாவின் பாடல்.
கருத்து முதல் வாதமாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை பொருள் முதல் வாதமாக மாற்றியவர் எங்கள் நடராசன் –மருத்துவர் தாயப்பன்.
மேலேயுள்ளவை சில மாதிரிகள். அனேகமாக எல்லா பேச்சாளர்களும் நடராசனை தாஜா செய்தே பேச்சை ஆரம்பித்தார்கள். இந்த முற்றத்தின் தொண்ணுறு விழுக்காடு செலவை நடராசனே ஏற்றார் என்றார் காசி ஆனந்தன். நாங்கள் இந்தியாவை நேற்றும் நம்பினோம், இன்றும் நம்புகிறோம் நாளையும் நம்புவோம் மற்றும் ஈழம் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எப்போதுமே இருக்கும் எனும் செய்தியை 8436-வது முறையாக சொன்னார் காசி.
அடுத்ததாக வந்தார் முனைவர் ம.நடராசன். சூத்திரதாரியாகப்பட்டவர் சிறந்த சொற்பொழிவாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? ஆதலால் அவரது பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. சிலரது நிர்ப்பந்தத்தால் இரண்டு நாட்கள் முன்னதாகவே இந்த முற்றம் திறக்கப்பட்டதாக தெரிவித்தார் நடராசன்.
“என்னை இனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை” என்ற அளவுக்கு வீராவேசமாகப் பேசிய நடராசன், மேற்படி நிர்ப்பந்தம் யாரால் தரப்பட்டது, என்ன வகையான நிர்ப்பந்தம் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்.
அவரை தொடர்ந்து பேசிய நெடுமாறனது பேச்சு வழக்கத்தை விட கொஞ்சம் கடுமையானதாக இருந்தது. அவரது வழக்கமான வாசகங்களான “புலிகள் இந்தியாவின் எதிரியில்லை. நாம் புலிகளை ஒடுக்கியதால் தமிழக கடல் பரப்புக்கு சீனாவின் அச்சுறுத்தல் வரும்” ஆகியவை இப்போது இல்லை. இரண்டு பேரும் தாங்கள் நான்கு நாளாக பெரும் துயரப்பட்டதாகவும், அப்படி நாங்கள் செய்த பாவம்தான் என்ன எனும் புலம்பல்தான் வந்ததே தவிர யார் அப்படி செய்தது எனும் பேச்சு கடைசி வரை இருவரிடமிருந்தும் வரவேயில்லை. ஜெயலலிதா எவ்வளவுதான் ஊமைக்குத்தாக குத்தினாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டாமல் இருக்கும் பெருந்தன்மைதான் இருவரையும் இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அந்தச் சூழலிலும் ஜெயாவின் மனம் காயப்படக் கூடாதென்று மத்திய அரசின் உளவுத் துறை கொடுத்த தவறான தகவலுக்கு தமிழ்நாடு அரசு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாக மட்டும் சொன்னார் ம.நடராசன்.
பிற்பாடு வந்த மணியரசனுக்கு, அவர் மார்க்சையும் பெரியாரையும் கசடறக் கற்று தனக்கேயுரித்தான ஒரு தனி பாதையில் போகும் தலைவர் என அறிமுகம் தரப்பட்டது. அவர்தான் விழாவின் திருப்பு முனையான “இந்தியா எங்கள் பேச்சை மதிக்கா விட்டால் தமிழகம் தனியாகப் போக நேரும்” எனும் எச்சரிக்கை வாக்கியத்தை உதிர்த்தார். அவருக்குப் பிறகு வந்த தஞ்சை.இராமமூர்த்தி, வெள்ளையன் மற்றும் மகேந்திரன் ஆகியோரது உரைகளில் குறிப்பிடும்படி ஏதுமில்லை என்பதால், விரைவில் ஈழம் பெற்றுத் தரவிருக்கும் பாஜகவின் பொன்னார் அவர்களுடைய பேச்சுக்கு வரலாம்.
மொத்த நிகழ்விலும் ஒரு ஆராய்ச்சியாளனுக்கு உரிய நேர்த்தியுடன் பேசியது பொன்.ராதா மட்டுமே. மணியரசனின் பேச்சைப் பற்றி குறிப்பிட்ட அவர் “காங்கிரசின் தவறுக்கு இந்தியாவில் இருந்து பிரிவோம் என சொல்வதா? தமிழ்நாடு இந்தியாவின் நெடிய கலாச்சாரத்தின் ஒரு அங்கம்’’ என்று உணர்ச்சி பொங்க சொல்லி விட்டு கூட்டத்தைப் பார்த்தார் பொன்னார், மொத்த கும்பலிலும் இரண்டு பேர் மட்டும் கைதட்டல் மட்டும் கேட்டது. அது அனேகமாக அவரது ஓட்டுனராகவும் தனி உதவியாளராகவும் இருக்கக் கூடும்.
இந்தியா சார்பாக ஒரு பியூன்கூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றார் பொன்.ராதா. ஆனால் அது தமிழக பாஜக தலைவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு என தெரிவித்து விட்டது பாஜக மேலிடம். அனேகமாக பாஜக ஆட்சிக்கு வரும் வரை அல்லது மகிந்தவிடம் போய் ஒரு மைனர் செயின் வாங்கி வரும்வரை பொன்னார் இந்த நிலைப்பாட்டில் இருப்பார் என நம்பலாம் (நெக்லசெல்லாம் அகில இந்திய தலைவருக்கு மட்டுமே).
இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சம்மான உரிமைகள் கிடைக்க இந்தியா பாடுபட வேண்டும். அதற்குப் பிறகும் அவர்களுக்கு கொடுமைகள் நடந்தால் வங்காள தேசத்தை இந்தியா உருவாக்கியது போல ஈழத்தை பிரிக்க வேண்டுமென்று குரலை உயர்த்தி உறுமினார். ம்ஹூம். இதற்கும் கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை.
கடைசியாக, “நான் அரசியல் பேச விரும்பவில்லை” என்று சொல்லிக் கொண்டே, “ஒரு வலுவான பிரதமர் இல்லாத்துதான் ஈழத் தமிழர் பிரச்சனைக்குக் காரணம்” என்று மறைமுகமாக மோடிக்கு மார்க்கெட்டிங் செய்து, அந்த குறையும் விரைவில் தீரும் என அருள்வாக்கு சொல்லி விட்டு விடைபெற்றார் பொன்னார்.
நட்சத்திரப் பேச்சாளர் வைகோ பேச ஆரம்பிக்கையில் மணி பதினொன்று. அந்த அர்த்த ராத்திரியிலும் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா வழியாக உலகம் சுற்ற அவர் தயங்கவில்லை. அதுகூட பரவாயில்லை, ஜெயா எக்ஸ்பிரஸ்சில் இனி ஆர்.ஏ.சி கூட கிடைக்காது என்பது தெரிந்து போனதால் அவர் அதிகம் விமர்சனம் செய்தது ஜெயலலிதாவைத்தான். கிட்டத்தட்ட ஜெயாவை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு நடராஜன் கண்களுக்கு மரண பயத்தைக் காட்டினார் வைகோ. அந்த ஒளி வெள்ளத்திலும் நடராசனின் முகம் இருண்டு கிடந்தது.
முன்னதாக வைகோவை பிறவிப் போராளி என வர்ணித்திருந்தார் பொன்னார். வாஜ்பாய் அரசுக்கு வைகோ நற்சான்றிதழ் கொடுத்ததற்கான நன்றிக் கடன் அது. பதிலுக்கு வைகோ தனக்கு ஏதாவது மொய் செய்வார் என்று எதிர்பார்த்து வைகோவின் வாயைப் பார்த்துக்கொண்டிருந்த பொன்.ராதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழர்களை மதிக்காமல் இனி எந்த ஆளும்கட்சி செயல்பட்டாலும் அதனால் இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என சொல்லி வைகோ உரையை முடித்தார். சமீபகாலமாக அவர் இணையத்தை அதிகம் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பது அவரது உரையின் வாயிலாக தெரிந்தது.
விழாவின் பிரதான நோக்கமான நடராஜனை வாழ்த்திப் பாடுவது என்பது ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்றாலும் அதனை மதுரை ஆதீனம் அளவுக்கான நேர்த்தியுடன் யாரும் செய்யவில்லை. இன்னுமொரு பிரதான நோக்கமான தமிழ் தேசிய வாக்கு வங்கியை பாஜக பக்கம் கொண்டுசெல்வது என்பது பரிதாபமான தோல்வியை சந்தித்திருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. நெடுமாறன் தனது இந்துத்துவ பாசத்தை வெளிப்படையாக 6-ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டினார். (பாஜகவை அழைத்தது பற்றிய கேள்வியை கோபமாக தவிர்த்தார்). ஆனால் அதற்கான ஆதரவு அவருக்கு மற்றவர்களிடமிருந்து கிடைத்த மாதிரி தெரியவில்லை.
ஈழப்பிரச்சினையில் இதுவரை வெளிப்படையாக வாஜ்பாயை பாராட்டி வந்த வைகோ, அந்தக் கதையை இங்கே கடை விரிக்கவில்லை. இந்த அரங்கில் பாஜகவையும் சேர்த்து எச்சரிக்கும் நிலையைத்தான் அவர் எடுக்க வேண்டியிருந்தது.
சில செய்தித்துளிகள் :
- ஒரு குழந்தையைப் பெற்ற தாயைப்போன்ற பரவசத்தில் இருக்கிறோம் என்றார் நடராஜன்.
- போரின் கடைசி இரண்டு நாட்களில் மட்டும் ஒன்னரை லட்சம்பேர் கொல்லப்பட்டதாகக் கூறிய நெடுமாறன், இது ஒரு விழா அல்ல, துயரத்தை காட்டும் நிகழ்வு என்றார். ஆனால் பந்தலின் பகட்டு அப்படி எந்த துயரத்தையும் காட்டவில்லை. அரங்க ஏற்பாட்டை கவனிக்கையில் விழாவுக்கான செலவு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்கும் என தெரிந்தது.
- முற்றம் அமைப்பதற்கான செலவில் 90 சதவிகித பணத்தை நடராசன் கொடுத்ததாகச் சொன்னால் காசி ஆனந்தன். உலகில் உள்ள எல்லா தமிழர்களிடமும் நிதி பெற்று இந்த முற்றம் கட்டப்படுவதாக சொன்னார் மணியரசன். “அம்மையப்பன்தான் உலகம்” என்ற பொருளில் உலகம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும்.
- ஒரு முதியவருக்கு இப்படி நாலு நாளாக மன உளைச்சல் தருகிறீர்களே என புலம்பினார் பெ.மணியரசன். மண்ணை வாரி தூற்றாத்துதான் பாக்கி.
- நெடுமாறனின் தந்தையார் இதே சூரசம்ஹாரத்தன்று பழமுதிர்சோலை முருகன் கோயிலை திறந்ததாகவும் இப்போது நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் திறந்திருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
- நடராஜன் எதிர்பார்த்த இரண்டாம் ராஜராஜன் எனும் பட்டத்தை தஞ்சை ராமமூர்த்தி அவருக்கு வழங்கினார், ஆனால் இறுதி நேர திருப்பமாக அப்பட்டம் நெடுமாறனுக்கும் தரப்பட்டு விட்டது.
- திடலுக்கு வெளியே வைக்கப்பட்ட பெரும்பாலான பேனர்கள் நடராசனை வாழ்த்தி மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று கள்ளர் குல முன்னேற்றக் கழகத்தால் வைக்கப்பட்டிருந்தது. புதிய பார்வை வாசகர் வட்டம் எனும் அடையாளத்தோடு ஒரு வேன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது
“யாயும் யாயும் யாராகியரோ” எனும் குறுந்தொகைப் பாடலைக் குறிப்பிட்டு அதற்கான ஒரு புது விளக்கத்தோடு பொன்.ராதாகிருஷ்ணனை வரவேற்றார் தாயப்பன். அந்த வரிகள் கீழே,
“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..
உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு,
உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி
இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”.
ஒரே நேரத்தில் தமிழையும் பெரியாரையும் கொச்சைப்படுத்த தாயப்பன் பயன்படுத்திய அந்தப் பாடலின் பொருளை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ளுதல் நல்லது.
உன் தாய் யாரோ என் தாய் யாரோ, உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த வகையிலும் உறவில்லை, நீ வந்த வழியும் நான் வந்த வழியும் நமக்கு தெரியாது (வழி –குலம்). ஆயினும் செம்புலப்பெயநீர் போல நம் இரு அன்புடைய நெஞ்சங்களும் கலந்தனவே.
இரண்டும் கலந்தால் பிறப்பது என்ன? அதைத்தான் தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.
– வில்லவன்
மார்பு 3 அங்குலம் விரிய பேசும்
தமிழருவி மனியனுக்கு
பந்தியில் இடமில்லையா?
ஹிஹிஹி!!!
ஒவ்வொரு முறையும் இதை படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை.
இன்று காலை தான் நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்த விழா குறித்தும், இந்த விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருப்பவர்கள் பற்றியும், இதன் செலவுகள் குறித்தும் பேசினார். எங்கேயும் இதைப் பற்றி படிக்கவே இல்லை என்ற ஆதங்கத்தை போக்கியது.
எழுத்து நடையும் நக்கலும் வெகுஜன வாசிப்புத் தன்மையும் கலந்து எழுதிய சமீப கால உங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் (பொறாமை கலந்த) வாசகனாக. வாழ்த்துகள் வில்லவன்.
ரசித்த வரி
வைகோவிற்கு ஏஆர்சி கூட கிடைக்காத காரணத்தால்?????
ஆர் ஏ சி?
தஞ்சையின் ரியல் எஸ்டேட் விலையை சகட்டு மேனிக்கு ஏற்றியது முதல் மார்க்கெட் போன நடிகைகளை தஞ்சாவூருக்கு பொங்கல் சமயத்தில் அழைத்து வருவது வரை நடராஜன் செய்த பணிகளை ராஜராஜனே வந்தாலும் செய்ய முடியாது.—–அடடா..என்னே ,தமிழனுக்கு செய்த தொண்டு,
ராச ராச சோழன், பெரு உடையார் கோவிலை
வேறெ ஊருக்கு மாற்றப் போவதாக பி.பி.சி யில் செய்தி கூறுகிறது
கட்டுரை சூப்பர்! நல்ல நகைச்சுவை நடை.
ரெண்டு விஷயம்.
தெரிந்து கொள்ள கேட்கிறேன். இந்த கோமாளிகளை விடுங்கள். தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட எவராலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நேரடியாக தம்பிடி பிரயோஜனம் கிடைத்ததுண்டா? வைகோ, நெடுமாறன் சிறைக்கு சென்றது போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது. அதனால் இலங்கை தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது? நேரடிப் பயன் விளைத்தோர் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
எல்லார் இலைக்கும் பாயாசம் போடறீங்க, கலைஞர் இலைக்கும் ஒரு நாள் போடுவீங்கன்னு ரொம்ப நாளா காத்துட்டு இருக்கேன். ம்ஹூம்! என்ன செய்ய. அவரு கடல்ல தூக்கி போட்டா கட்டுமரமா மெதக்கற உன்னத மனிதர்!
சிறப்பான தொகுப்பு!
\\அந்த அர்த்த ராத்திரியிலும் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா வழியாக உலகம் சுற்ற அவர் தயங்கவில்லை. அதுகூட பரவாயில்லை, ஜெயா எக்ஸ்பிரஸ்சில் இனி ஆர்.ஏ.சி கூட கிடைக்காது என்பது தெரிந்து போனதால் அவர் அதிகம் விமர்சனம் செய்தது ஜெயலலிதாவைத்தான்.
\\கிட்டத்தட்ட ஜெயாவை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு நடராஜன் கண்களுக்கு மரண பயத்தைக் காட்டினார் வைகோ. அந்த ஒளி வெள்ளத்திலும் நடராசனின் முகம் இருண்டு கிடந்தது.\\
சார் சத்தியம சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
\\அந்த அர்த்த ராத்திரியிலும் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா வழியாக உலகம் சுற்ற அவர் தயங்கவில்லை. அதுகூட பரவாயில்லை, ஜெயா எக்ஸ்பிரஸ்சில் இனி ஆர்.ஏ.சி கூட கிடைக்காது என்பது தெரிந்து போனதால் அவர் அதிகம் விமர்சனம் செய்தது ஜெயலலிதாவைத்தான்.
\\கிட்டத்தட்ட ஜெயாவை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு நடராஜன் கண்களுக்கு மரண பயத்தைக் காட்டினார் வைகோ. அந்த ஒளி வெள்ளத்திலும் நடராசனின் முகம் இருண்டு கிடந்தது.\\
ஆக பேரு தான் முள்ளிவாய்க்கால் முற்றம். மற்றப்படி அந்த நிகழ்வுக்கும் இந்த விழாவிற்கும் (இது ஒரு விழா தானே ? அப்படித்தானே நடந்திருக்கிறது ) சம்பந்தமில்லை. எல்லோரும் அவர் அவர் பிழைப்பு பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதற்கு நிரூபணமாக நடராஜா சோழரின் தயவிலும், ஈழ போராளி!!!!! பொன்ராதா அவர்களும் கலந்துக்கொண்ட இந்த விழவே!!!! சிறந்த சாட்சி.
அய்யா வினவு ஆசிரியருக்கு ஒரு அன்பாச் வேன்டுகோல்
பொராமை படுவதை தவிர்க்கவும்
முள்ளிவாய்க்கால் முற்றம்நிகல்ச்சியில் உன்மையாயன ஈழ போராளி பெ.மனியரசன்
அப்போ மைனர் செயினை மனியரசனுக்குத் தான் தர வேன்டும் .
சிரிப்பொ சிரிப்பு.
னக்கல் போகலை உனக்கு போகலை
புரம்சொல்லுவதை தவிர்த்து தமில்நாட்டின் உரிமைகலுக்காக போராடுங்கல்
நக்கல் போகலை உனக்கு, புரம் சொல்லுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுங்கள்
மனியரசன் இலங்கையோட ராஜபக்சேவின் பாசிச சிந்தனைக்கு எதிராக தமிழ் பாசிசத்தை வளர்க்க வேண்டும் என்று ஆவல் காட்டுகிறார். இப்படித்தான் பின்லாடனை வளர்த்துவிட்டு அமெரிக்கா அரபு நாடுகளை அவதிக்குள்ளாக்குவது நமக்கு தெரியும். அடுத்து இந்தியாவில் மோதியை வளர்த்து விடுகிறார்கள். அடுத்து தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் வருவார்கள், அமேரிக்க பஞ்சாயத்து தலைவர்கள். எல்லா நாடுகளிலும் வானத்திலிருந்து தேவர்களைப் போல் அட்சதை போடுவார்கள். வியட்னாமில் அவர்கள் போட்ட அட்சதைகள் இன்றைக்கும் பல கொணங்களில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன. பாகிஸ்தானில் சில நாட்கள் முன் தானியங்கி தேவதைகள் மக்கள் மீது ஆசிர்வாதம் செய்ய தொடங்கி விட்டார்கள், லோக்கல் ராஜாவைக் கேட்பது கூட கிடையாது. தேவதைகள் தறையிலிறங்க அவசியமில்லை…வாருங்கள் நாமும் பரம பிதாவின் தேவதைகளின் ஆசிவதத்தை பெறுவோம்!
இந்த நக்கல், நையாண்டி எல்லாம் பார்பனியனுக்கும், திராவிட வடுகனுக்கும் உரியது. இதில் நீங்க எந்த வகை ?
வடுகன் எவனுடைய
வீட்டிலும் புகுந்து
கருமாதி/திவசம்/பரிகார பூசை
என்ற பெயரில் எவனது சொத்தையும்
ஏமாற்றி தின்பதில்லை…
ஏமாளியாக இருப்பது தனிமனிதனின் குற்றம்!
ஒருவேளை,நாங்கள் தமிழ்நாட்டில் வந்தேறிகளாக/ உழைத்து
வாழ்வது உங்கள் கண்களுக்கு “நையாண்டி” தர்பாராக தோன்றினால்,
திருச்சியில் ஜோசப் கண் ஆச்பத்திரி/மதுரை அரவிந்து கண் ஆச்பத்திரியை அனுகுவது
பார்வைக் கோளாரை சரி செய்ய வாய்ப்புண்டு….
“கல்லடி சித்தன் போனவழி காடுமேடு எல்லாம் தவிடு பொடி”
இப்படித் தான் இலங்கையை மூன்று தகாப்தமாக அவலப் படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலும் பல கல்லடிசித்தர்கள் தோன்றி தஞ்சையை அடையாளப் படுத்கிறார்கள் என்றால்…
மிகுதியை வாசகர்களே முடிவெடுங்கள்.
அது கல்லடிசித்தர் இல்லை. கடுவெளிசித்தர்.
விமர்சனம் என்பதன் பெயரில் சகட்டுமேனிக்கு நையான்டியும் நக்கலும் மட்டுமே செய்வதன் மூலம் சாதிப்பது என்ன ? மிகவும் சலிப்பூட்டுகின்ரது.
அய்யா…. வயிற்றுவலி தாங்கல……
உப்புசப்பு இல்லாதது இந்த “முள்ளிவாய்க்கால்” நிகழ்வுகள் அனைத்தும்!!!
லெட்டர் பேடு கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூடி சமபந்தி போஜனம் செய்துள்ளார்கள்!! எதற்கும் உதவாது. “பிரபாகரன்” உயிரோடு இருக்கிறாராம். நெடுமாறனுடன் தினமும் பேசி வருகிறாராம். ஏன் அவர் தனது மக்களான ஈழ மக்களுடன் பேசவில்லை!! ஈழ முதல்வர் விக்னேஸ்வருடன் பேசி இருக்கலாம். என்ன பிதற்றல் பாருங்கள். மக்களை ஏமாற்ற எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. இதனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. மக்களை உசிப்பிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள். அது ஒன்றும் நடக்காது!
பிரபாகரனை உசிப்பிவிட்டு பாவம் அவர் மீது பல குண்டுகள் துளைத்தது. அவர் கொடுமையான மரணத்தை தழுவ வேண்டியிருந்தது.
உதய குமாரை உசுப்பிவிட்டு கிருத்துவ சர்ச்சிகளில் தினசரி சோறு போட்டு மக்களை தூண்டிவிட்டதுதான் மிச்சம். இதனை ஆதரித்தவர்கள் அனைவரும் முகத்தில் கரி பூசிகொண்டார்கள்.
முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனை ஆதரித்து முகத்தில் கரி பூசிக்கொண்டார்கள்.
இவர்களின் வலையில் மக்கள் விழவில்லை. மக்கள் புத்திசாலிகள். இவர்கள்????
நடராசன் 90 சதவீத செலவுகளை ஏற்றுக்கொண்டாராம். என்னே பெருந்தன்மை!!!!!! இவரிடம் இருக்கும் பணத்திற்கு கணக்கு உண்டா? அல்லது எவ்வளவு இருக்கிறது என்று யாராவது கணக்கிடமுடியுமா? இது போன்ற கேலிக்கூத்தான கூட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிகொள்ளுவது இவர்களின் வேலை!!! இது ஒன்றும் புதிது அல்ல!!!
வில்லவன் ப்ரொடக்ஷன்ஸின் மற்றுமொரு மிகச்சி(ரி)றப்பான தயாரிப்பு! வாழ்த்துக்கள் வில்லவன்!!
//“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..
உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு,
உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி
இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”.//
இந்த கன்றாவியலாம் கேட்க பெரியார் இல்லை, அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இவனுங்கல தோழ உரிச்சு தொங்கவிட்ருபாரு.
இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சனைகளில் உரிமை மறுக்கப்படுகின்றன. இரண்டு கேரள மீனவர்கள் இத்தாலியக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டபோது கொந்தளித்த ஆரியப் பார்ப்பனிய இந்திய அரசு, 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டபோது மவுனம் காத்தது ஏன் ? தமிழர்களுக்கென ஒரு நாடு இருந்தால்தான் ஐ.நா சபையிலும் சரி, அல்லது பொதுநல மன்றத்திலும் நாம் புவியியல் சார்ந்த அரசியல் செய்ய முடியும்.ஆகவே பெ.மணியரசனின் கூற்று சரிதான்.
மவுனம் காத்தது ஏன்?
தினமலம்,
தி இந்து,
தினமனி
துக்லக்
இவாள்ளாம் இருக்கும் வரை.நாம் ஒரு இன்ச் கூட நகர முடியாது!
மற்றபடி…இந்தியாவும்,பூணூலும் இருக்கும் வரை,தமிழன் எழுந்து கூட நிற்க முடியாது….
பாருங்களேன்,அக்கிரகாரம் ஆர்ப்பரித்து, என்மீது மண்ணை வாரி இறைக்கும்!
தனித் தமிழ்நாடு எப்போது மலரும் என்று என்னால் ஆருடம் கூற முடியாது..ஆனால் கோமாளி காங்கிரசு ஆட்சி தொடர்ந்தால்,எல்லோருமே தெருவுக்கு வருவார்கள்( மெக்சிகோ போண்டியான கதை)
அட போங்கய்யா வெறுப்படைந்தா எப்போது பார்த்தாலும் பார்பான குற சொல்லிட்டு ஆத்திரத்த தனிச்சுக்கரதுக்கு.. மன்னுமோகனும் சோனியாவும் குருணாநிதியும் மைய்ய அரசின் தூண்களாக விளங்கும் மலையாளத்தான்களும் நடராசனும் நெடுமாறனும் இன்னும் ஏராளமானோரும் பார்பனர்களா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………
எல்லாவற்றுக்கும் குறிப்பாக, தமிழனின் இழிநிலை/அழிவுக்கும்
பிரதான காரணம்..பூணூல்கள்தான்…உங்களை திட்டாமல்
கட்டிப்பிடிச்சி முத்தமா கொடுகக முடியும்….
சமயம் கிடைத்தால், இந்தமாதம் 27 ஆம் தேதி புடுச்சேரிக்கு வாங்க…
உங்களோட உலக-தப்பு,தப்பு லோக குரு ஜெயேந்திரனுக்கு
என்ன ஆப்புன்னு பாத்துண்டு போகலாம்!
எதுக்கும் ராம் ஜேத்மலானியை கையோடு அழைச்சிண்டு வாங்கோ-விறாமீன் இல்லாவிட்டாலும்
ஜாமீனாவது வாங்க ட்ரை பன்னலாம்
முதலீடாக்கப்பட்ட அவலங்கள் : தோழர் மருதையனின் நேர்காணல் காணொளி
http://inioru.com/?p=37855
பார்ப்பன பாசிஸ்டு ஜெயாவை ஈழத்தாய், தமிழ்த்தாய் என்று நம்பச் சொல்லி ஜெயாவின் காலடியில் வீழ்ந்து கிடந்த இந்தத் தமிழினப் பிழைப்புவாத கும்பல் தான் குற்றவாளிகள். அவர்கள் தான் தன் கடந்த காலச் செயல்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு இந்த ஜெயலலிதாவின் ‘அடிமைச் சீமான்’, ஜெயா வளர்ப்பு மகன் கல்யாணப் பந்தியில் வீரமாக வெளுத்து வாங்கிய ‘ஈனமாறன்’, ‘புழுதிப்புயல்’ பொய்க்கோ, ‘பிணியருவி சனியன் (தமிழருவி மணியன் தான்)’, கொளத்தூர் மணி போன்றோர் தங்களை மீண்டும் நம்பச் சொல்கிறார்கள்? இந்தக் கும்பல் தான் இப்போது பாசிச ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை ஈழ விடுதலையைப் பெற்று தரப் போகிறவர்கள், அவர்கள் தமிழின ஆதரவாளர்கள், நம்புங்கள், ‘கொலைகாரன் மோடி’க்கு ஓட்டுப் போடுங்கள் என்று பாசிசத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். இந்தக் கும்பல் தங்கள் கடந்த காலக் குற்றங்களுக்கு பொறுப்பாளி ஆவார்கள். இவர்களே தமிழினத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். தமிழினத்தின் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்.