Sunday, January 19, 2025
முகப்புஉலகம்ஈழம்காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்கு - தஞ்சை, திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்

காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்கு – தஞ்சை, திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்

-

1. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கு –தஞ்சையில் ம.க.இ.க ஆர்பாட்டம்.

  • காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்று
  • அம்மாநாட்டில் இந்தியாவே பங்கேற்காதே

எனும் கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் சார்பில் 14.11.2013 அன்று மாலை 5.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தஞ்சை மாவட்ட ம.க.இ.க தோழர்.அருள் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பு.மா.இ.மு தோழர்.ஆசாத், பட்டுக்கோட்டை வட்டார வி.வி.மு தோழர்.மாரிமுத்து மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர்.சதீஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ம.க.இ.க மாநில இணைச்செயலாளர் தோழர்.காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காமன்வெல்த் அமைப்பின் வரலாறு குறித்து விளக்கப்பட்டது. இந்திய இலங்கைக்கான உறவு முதலாளிகள் நலனுக்கான வர்த்தக உறவே என்பதும் அந்த முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்கவே மன்மோகன் அரசு தமிழர்கள் எதிர்ப்பையும் மீறி இலங்கையுடனான உறவை பேணுகிறது எனும் உண்மை ஆதாரங்களோடு பதிவு செய்யப்பட்டது. காமன்வெல்த் மாநாட்டை இந்தியா ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும், முள்ளிவாய்க்கால் முற்றத்து இடிப்பின் பின்னிருக்கும் அரசியலும், ஈழத்தமிழருக்கு சரியான நியாயத்தைப் பெற்றுத்தர போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதே வழி என்பதும் கூடியிருந்த திரளான மக்கள் மத்தியில் விரிவாக விளக்கப்பட்டது.

  • இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
  • காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது.
  • காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை

2.  திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
  • காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது.
  • காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்.
  • இனப்படுகொலை செய்த ராஜபக்சே தனது கொலை முகத்தை மறைத்து விட்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி இலங்கையின் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைத்து அங்கீகாரம் பெறுவதன் மூலம் நீர்த்துப் போகச் செய்யும் சதியே!
  • ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தூக்கிலிட வேண்டும்!
  • பங்காளியான இந்திய அரசும் குற்றவாளி கூண்டில்  நிறுத்தப்பட வேண்டும்!

என்கிற தலைப்பில் 14.11.2013 அன்று காலை 10.30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்டச் செயலர் தோழர் செழியன் அவர்கள் தலைமையேற்றார்.

காவல் துறை தடையை மீறியதாகக் கூறி, குழந்தைகள், பெண்கள் 13 பேர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

3. தடையை மீறி ஓசூரில் ஆர்ப்பாட்டம்

  • இந்திய அரசே, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே!
  • காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
  • காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்று!

என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழகம் தழுவிய வகையில் 14-11-2013 அன்று புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., வி.வி.மு. மற்றும் பெ.வி.மு. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஒசூரில் ஆர்ப்பாட்டம் நடத்த பு.ஜ.தொ.மு. சார்பாக போலீசு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீசு சட்டம் 32ஐக் காரணம் காட்டி முதல் நாள் இரவு அனுமதி மறுத்தது போலீசு. இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து காலை 11 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன்பு பு.ஜ.தொ.மு., வி.வி.மு. தோழர்கள் குவிந்தனர். தோழர்கள் வருவதற்கு முன்னமே மக்களுக்கு ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதை தெரிவிக்கும் முகமாக போலீசு குவிந்திருந்தது. பேருந்து நிலையம், நகராட்சிக்கு வருகின்ற மக்கள் மத்தியில் இது பரப்பரப்பை ஏற்படுத்தியது.

திடீரென தோழர்கள் கூடி மக்களை கவரும் வகையில் செங்கொடிகளுடன் முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.பரசுராமன் தலைமை தாங்கினார். பாகலூர் பகுதி தோழர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர்கள் பேசும் போது, “இனபடுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என நாம் கோரி வருகின்ற சூழலில், அங்கே காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது என்பது இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை சகித்துக் கொள்வது அவமானம். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் தங்களது வர்த்தக சந்தையை விரிவுப்படுத்தவும் அதற்கான வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் ஏகாதிபத்தியங்களுக்கும் இந்திய அரசுக்கும் இது உதவுகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஆகையால், இந்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவது அவசியமானது. இவற்றைக் கணக்கில் கொண்டு இராஜபக்சேவுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும் போராடுகின்ற உழைக்கும் மக்கள் இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதைக் கண்டிக்க வேண்டும். மேலும், காமன் வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும். காமன்வெல்த் இலங்கையில் நடத்துவதை கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் அணிதிரண்டு போராட முன்வர வேண்டும்” என்று பேசினர்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்பதை வைத்து நாடகமாடுவதை அம்பலப்படுத்தினர். தோழர்கள் பேசும் போது, தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டுவிட்டு போலீசைவிட்டு கருத்து சுதந்திரத்தை மறுக்கும் ஜெயா அரசின் பாசிச போக்கைக் கண்டித்து பேசினர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் வெற்றுத் தீர்மானங்களை அம்பலப்படுத்தி பேசினர். இதுபோன்ற தீர்மானங்களை நம்பி இருப்பதை கைவிட்டு உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். நூற்றுக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் இறுதிவரை கண்டு ஆதரவு அளித்தனர்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி காலை முதல் பிரச்சாரம் செய்யப்பட்டது. தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மத்தியில் துண்டு பிரசுர வினியோகம் செய்யப்பட்டது. திரளான தொழிலாளர்கள் ஆர்வமுடன் துண்டு பிரசுரங்களை பெற்று சென்றனர். தொழிலாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 97880 11784
ஒசூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க