privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!

ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!

-

தார் அட்டை இல்லை என்ற காரணத்தினால், யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கப்படக் கூடாது” என ஆதாருக்கு எதிரான வழக்கில் செப்.23 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இவ்வுத்தரவை மீளாய்வு செய்ய வேண்டுமென மைய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த போதிலும், இறுதி விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டுமென்ற அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

ஆதார் அட்டை வழங்கும் சோனியா காந்தி
ஆதார் அட்டை வழங்கும் சோனியா காந்தி : தமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை அறியாத மக்கள்

ஆதார் அட்டைக்கு எதிரான முதல் ரிட் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவால் டிசம்பர், 2011-இல் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக யு.ஐ.டி.ஏ.ஐ. (Unique Identification Authority of India) பதில் மனுவும் தாக்கல் செது விட்டது. 2012-இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் விக்ரம் கிருஷ்ணா என்பவரும் ஆதாருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இறுதியாக டிசம்பர் 2012-இல் ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியான புட்டசாமி, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு  மனுவைத் தாக்கல் செதார். இதனையொட்டி எல்லா வழக்குகளும் உச்ச நீதிமன்ற விசாரணையில் இணைக்கப்பட்டு விட்டன.

அரசுக்கு எதிரான தற்போதைய இடைக்கால உத்தரவுக்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. ”நீதிபதியே ஆனாலும், ஆதார் அட்டை இல்லாதவனுக்குச் சம்பளம் கிடையாது” என்று மகாராட்டிர அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் ‘ஜனநாயக உணர்வை’ உடனே உசுப்பி விட்டது.  இடைக்கால உத்தரவில் சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரம் இடம்பெறக் காரணம், புட்டசாமி தாக்கல் செய்த மனுவாகும். பா.ஜ.க. வின் கண்ணோட்டத்திலானதும், ஆதார் அட்டையின் பாசிசத் தன்மை குறித்த மையமான பிரச்சினையையே திசைதிருப்பக் கூடியதுமான இவ்விசயத்தை தனது மனுவில் அவர்தான் எழுப்பியிருக்கிறார்.

வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது என்ற பெயரில், முஸ்லிம் மக்கள் அனைவரையும் சந்தேகத்திற்கிடமான சட்டவிரோதக் குடியேறிகளாகச் சித்தரிக்கும் பா.ஜ.க., கார்கில் போரைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் “பல்நோக்கு தேசிய அடையாள அட்டை” வழங்கும் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. அதற்குப் பின்னால் தற்போது காங்கிரசு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆதார் அட்டை, தேச எல்லைகளைத் தகர்ப்பதையும், தேசிய இறையாண்மை என்பதை முடிவுக்குக் கொண்டு வருவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இது தலைகீழ் மாற்றமல்ல, ஆதார் பற்றி நமக்கு அளிக்கப்பட்டு வருவதுதான் தலைகீழ் தோற்றம். குற்றவாளிகளின் பெயர், முகவரியை மட்டுமின்றி, அங்கமச்ச அடையாளங்கள் மற்றும் புகைப்படத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளும் போலீசைப் போல, ஒவ்வொரு குடிமகனின் புகைப்படம், இரு கைரேகைகள், கை அமைப்பு, விழிப்பாவை, முக அமைப்பு, குரல் போன்ற தனித்துவம் வாந்த அடையாளங்களை அளந்து (Bio-metric) பதிவு செய்து, அவற்றைக் கணினியால் அடையாளம் காணத்தக்க தரவுகளாக மாற்றித் தொகுத்து வைப்பதே ஆதார் திட்டத்தின் பணி. ஆதார் என்பது உங்கள் கையில் அளிக்கப்பட்டிருக்கும் அட்டை அல்ல. சங்கேத எண்களில் விண்ணில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உங்களுடைய அடையாளம்.

ஆனால், இத்திட்டத்தின் நோக்கமாக காங்கிரசு அரசு கூறுவது என்ன? போலி ரேசன் அட்டைகள் காரணமாக உணவு, எரிவாயு மானியச் செலவுகள் அதிகரிப்பதைத் தடுப்பதும், மக்கள் நலத் திட்டங்களில் இடைத் தரகர்கள் கமிசன் அடிப்பதைத் தடுத்து, முழுத் தொகையையும் மக்களுக்குச் சேர்ப்பதும்தான் இந்த ஆதார் திட்டத்தின் நோக்கம் என்கிறது அரசு. ஆனால், ”உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற இந்தத் திட்டத்தின் நோக்கமே, உணவு தானியங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளுமாறு கூறி, அதற்கான அரசு மானியத்தை வங்கிகள் மூலம் வழங்குவதும், அதனை ஆதார் அட்டை மூலம் பெற்றுக் கொள்ளச் செய்வதும்தான். ரேசன் கடைகளை மூடிவிட்டு, பொருட்களின் விலையைச் சந்தையே தீர்மானித்துக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டும் என்பதே உலக வங்கியின் வழிகாட்டுதல். அதனை அமல்படுத்துவதற்கான முதல் படியாகத்தான் ”உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதை ஏற்கெனவே பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

ஒரு குடிமகனின் அடையாளத்திற்கான நிரூபணமாக ரேசன் அட்டை, வங்கிக் கணக்கு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற சுமார் 15 ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்போது, பயோமெட்ரிக் அட்டைக்கான அவசியத்தை அரசால் நிறுவ இயலவில்லை. இதனால்தான், ”ஆதார் அட்டை என்பது கட்டாயமல்ல” என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் ”எரிவாயு இணைப்பு முதல் வங்கிக் கணக்கு வரையிலான அனைத்துக்கும் ஆதார் தேவை” என்று அந்தந்தச் சேவையை வழங்கும் நிறுவனங்களைக் கூற வைத்து கீழிருந்து சதித்தனமாக இதனைத் திணிக்கிறது. ”ஆதார் இல்லாதவர்களுக்கு உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை இல்லை” என்று நவ. 23, 2012 அன்று நடந்த தார்குண்டே நினைவு சொற்பொழிவில் வெளிப்படையாகவே அறிவித்தார், ஆதார் ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலேகனி.

படித்தவர்களும் பாமரர்களே
ஆதார் குறித்த மயக்கம் : படித்தவர்களும் பாமரர்களே

தனியார்மய-தாராளமயக் கொள்கைகளால் உடைமைகள் ஏதுமற்றவர்களாக்கப்பட்டு, நகர்ப்புறத்துக்குப் புலம் பெயருகின்ற கிராமப்புற ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும், உதிரித் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் அதிகாரமாகவும், அடையாளமற்ற மக்களின் அடையாளமாகவும் ஆதார் அட்டையைச் சந்தைப்படுத்துகிறது அரசு. பத்து ரூபாய் அரசு சலுகையைப் பெறுவதற்கு பன்னிரெண்டு அதிகாரிகளின் கையெழுத்துக்காக அலைய வேண்டியிருப்பதாலும், போலீசிடமும் அதிகார வர்க்கத்திடமும் தாங்கள் யாரென்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு அடிக்கடி ஆளாக்கப்படுவதாலும், இத்தகைய தொல்லைகளிலிருந்தெல்லாம் தங்களை விடுவிக்கும் வரப்பிரசாதமாக ஆதார் அட்டையைச் சாதாரண மக்கள் கருதுகிறார்கள்.

நம்மைக் கண்காணிப்பதையும், ஒடுக்குவதையும் ஆதார் மிகவும் எளிதாக்கி விடும் என்ற அபாயத்தை பலர் உணர்வதில்லை. தாங்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதால் அஞ்சத் தேவையில்லை என்று பாமரத்தனமாக கருதுகின்றனர். போலீசாரால் ஒரு பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு விட்டாலோ, ஒரு ஆலையில் நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, அந்த விவரங்களை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நபரை எப்போது வேண்டுமானாலும் துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்குமான சாத்தியத்தை ஆதார் அட்டை கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய நந்தன் நிலேகனி, 19-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்க கண்டத்திற்கு பிழைக்க வந்த ஐரோப்பியர்களை, கனடாவின் எல்லிஸ் தீவைச் சேர்ந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் கையாண்ட முறையை நினைவுபடுத்தினார். குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் ஐரோப்பியர்கள் விதவிதமான மொழிகளில் தம் பெயர்களைக் கூறினர். அவையனைத்தையும் ரத்து செய்து விட்டு, ஒவ்வொருவருக்கும் அதிகாரிகளே ஒரு பெயரை சூட்டி, இனி இந்த நாட்டில் இதுதான் உன் பெயர் என்று அறிவித்தார்கள். ”ஆதார் என்பது உலகின் பிரம்மாண்டமான பெயர் சூட்டும் விழா – இது 21-ஆம் நூற்றாண்டின் எல்லிஸ் தீவு” என்றார் நிலேகனி.

உங்கள் உண்மையான பெயர், பெற்றோரின் பெயர், இனம், மொழி, மதம், ஊர், தொழில், கல்வித்தகுதி ஆகியவை ஒருபுறமிருக்க, ஒரு மனிதன் என்ற முறையில் உங்களது உடலின் தனித்துவமான அடையாளங்களை மட்டும் (விழிப்பாவை, ரேகை இன்னபிற) பதிவு செய்து கொண்டு, இவ்வடையாளங்களைக் கொண்ட உடலுக்குரிய சங்கேத எண் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் பின்னர் நீங்கள் சோதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ”குறிப்பிட்ட பயோ மெட்ரிக் அளவீடுகளுக்குரிய உடலமைப்பைக் கொண்ட மனிதன் நான்தான்” என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகி விடும். ”உங்களுடைய விழிப்பாவை மற்றும் ரேகைகளில் காலப்போக்கில் மாற்றம் ஏற்படுமாதலால், குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் பயோ மெட்ரிக் அடையாளங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்” என்றும் யு.ஐ.டி.ஏ.ஐ. (Unique Identification Authority of India) கூறுகிறது.

ஆதார் சுரண்டல்மாட்டுக்கு சூடு வைப்பதைக் காட்டிலும் மோசமாக, மனிதர்க்கு இலக்கமிடும் இந்த முறையை, ”ஒற்றை தேசிய அடையாளம்” என்று கூறி வரவேற்றிருக்கிறார் தேசியப் புலனாவு வலைப்பின்னலின் (National Intelligence Grid) தலைவர் ரகுராமன். ”நாட்கிரிட்” என்பது உள்நாட்டு பாதுகாப்பு அபாயத்தைக் கையாள்வதற்கென்று தனியே உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு உளவுத்தகவல் வலைப்பின்னல். குடிமக்கள் அனைவருடைய தொலைபேசி, இணைய சேவை, ரயில்-விமான போக்குவரத்து விவரங்கள், வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள், வீடு-நிலப் பத்திரங்கள், ஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இதில் இணைக்கப்படவிருக்கின்றன. இதனுடன் ஆதார் எப்போது வேண்டுமானாலும் இணைக்கப்படக் கூடும்.

ஆதார் அட்டை என்பதன் நோக்கம் மக்களை உளவு பார்ப்பது மட்டுமோ, அரசு பிரச்சாரம் செய்வதைப் போல குக்கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அரசின் உதவித்தொகையைக் கொண்டு சேர்ப்பதோ அல்ல. கிராமப்புற மக்கள் வைத்திருக்கும் சேமிப்புப் பணத்தையும், நகைகளையும் வங்கிகளை நோக்கி ஈர்ப்பது, கிராமப்புறங்களில் இன்னமும் நீடிக்கும் உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை அழித்து, தேசிய நுகர்வுச் சந்தையுடனும், வங்கிக் கடன் சந்தையுடனும் கிராமப்புற மக்களை இணைப்பது – என்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாகனமாக ஆதார் அட்டை இறக்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புற வங்கிக் கிளைகளால் வருமானமில்லை என்று அவற்றை மூடி, விவசாயக்  கடன்களை நிறுத்தி கிராமப்புறத்தைப் புறக்கணித்த வங்கிகளின் பார்வை, ஆதார் அட்டைக்குப் பின் கிராமப்புறத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. கிராமப்புற மக்கள் தமது சேமிப்பில் 42%-ஐப் பணமாக வைத்துள்ளனர் என்கிறது அரசின் ஆய்வு.  இன்னமும் வங்கிச் சேவையுடன் இணைக்கப்படாமல் இருக்கும் நாட்டின் 60% கிராமப்புற மக்களை உடனே வங்கிச் சேவையுடன் இணைத்து அவர்கள் ”சட்டி-பானைகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புகளை வங்கிக்குக் கொண்டுவர வேண்டும்” என்று கூறியிருக்கிறார் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன்.

”ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு ஆதார் அட்டையே போதுமானது” என்று ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. ஒரு ஆண்டிற்குள் ஆதார் அட்டை அடிப்படையிலான 10 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார் நிலேகனி. கிராமங்களில் ஒரு கிளை கூட இல்லாத ஆக்சிஸ் வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகள், ”ஆதார் அட்டையைக் காட்டினால் யார் வேண்டுமானாலும் எங்கள் வங்கியில் கணக்கைத் தொடங்கலாம்” என்று கூவிக்கூவி அழைக்கின்றன.

இந்த வங்கிகள் கிராமங்களில் தனது கிளைகளைத் திறக்காமல், வணிக முகவர்கள் (Business correspondents) எனப்படுவோரை நியமித்து, அவர்களிடம் அட்டைகளை ”ஸ்வைப்” செய்வதற்கான கருவிகளையும் குறிப்பிட்ட அளவு பணத்தையும் அளித்து, அவர்களையே நடமாடும் வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சுமார் 70,000 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள், அஞ்சலகங்கள் போன்ற அமைப்புகளையும் வணிக முகவர்களாகப் பயன்படுத்தி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எல்லா  கிராமங்களையும் வங்கி வலைப்பின்னலுடன் இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

தப்பிப் பிழைத்திருக்கும் சுயசார்புப் பொருளாதாரத்தை அழிப்பதுடன், நிதிச் சந்தையுடன் இணைத்துக் கொள்வது (Financial inclusion) என்ற பெயரில் மக்களின் கொஞ்ச நஞ்ச சேமிப்பையும், கழுத்துச் சங்கிலியையும் பறிப்பதற்கு சர்வதேச நிதிமூலதனம் கட்டவிழ்த்துவிட இருக்கும் தீவட்டிக் கொள்ளையின் தொடக்கமாகவே இது இருக்கும்.

ஆதார் என்பது 14 வளர்முக நாடுகளில் மின்னணுவியல் நிர்வாகத்தைப் (e-transform initiative) புகுத்துவது என்ற உலக வங்கித் திட்டத்தின் அடிப்படையிலானது. இந்திய மக்களிடம் ஆதாருக்கான தரவுகளைத் திரட்டுபவர்கள் யார்?

நாஜி ஜெர்மனியில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை ”பஞ்ச் கார்டு” முறையிலான கணினியில் பதிவு செய்து இட்லர் அரசிடம் ஒப்படைத்து, யூத இனப்படுகொலைக்கு வழியமைத்துக் கொடுத்த ஐ.பி.எம். என்ற அமெரிக்க கணினி நிறுவனம், அமெரிக்க இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள எல்.1 சர்வீசஸ் என்ற நிறுவனம், முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரிகளை நிர்வாகிகளாகக் கொண்டிருக்கும் அசென்ச்சர் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் மூலம்தான் பயோமெட்ரிக் தரவுகள் மக்களிடமிருந்து திரட்டப்படுகின்றன. இவற்றை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடும்.

ஆதார் ஆக்கிரமிப்புஅது மட்டுமின்றி, ஆதார், நாட்கிரிட், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், ”இ.பேமென்ட் சிஸ்டம்” போன்ற பலவும் உலக வங்கியின் மின்னணுவியல் நிர்வாகத்துடனும், நேட்டோவின் கொள்கைகளுடனும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பெருமளவில் மக்கள் கொந்தளிப்புகளைச் சந்தித்து வரும் கிரீஸ், எகிப்து மற்றும் அமெரிக்க வெறுப்பில் குமுறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டை விவரங்கள், அமெரிக்க அரசிடம் கையளிக்கப்பட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, ஆதார் என்பது அமெரிக்கக் கண்காணிப்புக்கு இந்தியக் குடிமக்களை ஒப்புக் கொடுக்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையாகும் என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆதார் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய நிலேகனியிடம், ”2050 வாக்கில் தேசிய அரசுகள் தட்டித் தகர்க்கப்பட்டு, ஒரு உலக அமைப்பு உருவாகிவிடும் என்று கருதுகிறீர்களா?” ”ஒருவேளை ஆப்பிரிக்காவில் ஆதார் அட்டை போன்ற ஒன்றை உருவாக்கித் தருமாறு உங்களிடம் கேட்டால், ஆப்பிரிக்கர்களுக்கென்று புதிய சங்கேத எண்களை உங்களால் உருவாக்கித் தர முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் உலக வங்கித் தலைவர்.

”100 கோடிப் பேருக்கு செய்ய முடிவதை 700 கோடிப் பேருக்கும் ஏன் செய்ய முடியாது? உலகின் மக்கட்தொகை முழுவதையும் ஆதாருக்குள் கொண்டு வருவதற்குத் தொழில்நுட்பம் ஒரு தடையல்ல” என்று பதிலளித்தார் நிலேகனி.

”அப்படியானால் தேசிய இறையாண்மை என்பதை முற்றிலுமாகப் பிளந்தெறியவிருக்கின்ற ஆப்புதான் ஆதார் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்று உற்சாகமாக அடுத்த கேள்வியைக் கேட்டார் உலக வங்கியின் தலைவர்.

நாட்டின் இறையாண்மையைப் பிளத்தல் என்ற சோற்றொடர் நிலேகனியிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ”அது எந்த அளவுக்கு நாம் (அரசு நிர்வாகத்தை) மையப்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்தது” என்று அவருக்குப் பதிலளித்ததன் மூலம் நாடுகளின் இறையாண்மை அழிக்கப்படுவதற்குத் தான் காத்திருப்பதை வெளிப்படுத்தினார் நிலேகனி.

இந்தியாவின் பாதி மக்கட்தொகைக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டது. அதாவது, இறையாண்மையின் மீது இறங்கிய ஆப்பு, அதனைப் பாதியளவுக்குப் பிளந்துவிட்டது. ”மீதியையும் பிளப்பது அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே” என்று வாதிடுவதற்கு அட்டர்னி ஜெனரல் ஆஜராகிறார். ”இறையாண்மையைப் பிளந்தெறியும் அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு” என்று நிலைநாட்டும் பொருட்டு ஆதார் மசோதா நாடாளுமன்றத்தில் காத்திருக்கிறது.

ஆப்பை அசைக்கும் அதிகாரம் பெற்ற நீதிமன்றமோ, இறையாண்மையின் மீது அமர்ந்திருக்கிறது.

-சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________