Friday, May 2, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இலஞ்சம் ... தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

-

வீ.கே.சிங் என்ற விஜயகுமார் சிங் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தபொழுது (2010-2012) உருவாக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப ஆதரவு பிரிவு என்ற உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய இந்திய இராணுவத் தலைமை,  ”அந்த அமைப்பு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை ஆண்டு வரும் ஒமர் அப்துல்லா அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு, அவரது கூட்டணி அரசில் விவசாயத்துறை அமைச்சராக இருந்து வரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த குலாம் ஹசன் மிர்ருக்கு 1.19 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது; இராணுவ அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டிருக்கிறது” என்பன உள்ளிட்டுப் பல முக்கியமான கிரிமினல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறது. மைய அரசிடம் கடந்த மார்ச் மாதத்தில் அளிக்கப்பட்ட இவ்விசாரணை அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அதிலுள்ள முக்கிய விடயங்களை கடந்த செப். மாத இறுதியில் பரபரப்புச் செய்தியாகக் கசிய விட்டது.

வீ.கே. சிங்
முன்னாள் ராணுவ தளபதி வீ.கே. சிங்.

கடந்த ஆறேழு மாதங்களுக்கு மேலாக மைய அரசின் குப்பைகளுள் ஒன்றாகக் கிடந்த இந்த அறிக்கை, வீ.கே.சிங், பா.ஜ.க.வின் பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடியுடன் கை கோர்த்துக் கொண்டவுடனேயே கசிந்து வெளிவந்திருப்பதைத் தற்செயலானதாகவோ, மைய அரசிற்குத் தெரியாமல் நடந்து விட்டதாகவோ கருத முடியாது. அதே சமயம், இந்தக் கசிவு கேள்விக்கிடமற்ற புனிதப் பசுவாகச் சித்தரிக்கப்படும் இந்திய இராணுவத்துக்குள் புரையோடிப் போயிருக்கும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டிகள், குழிபறிப்புகள், ஊழல்கள் ஆகியவற்றோடு, தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் இந்திய இராணுவம் காஷ்மீரில் நடத்தி வரும் சதிகள், தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தையும் கீறிக் காட்டுவதாக அமைந்து விட்டது.

‘‘இராணுவ அமைச்சகம் அளித்துள்ள அறிவுரைகளின் படிதான் தொழில்நுட்ப ஆதரவுப் பிரிவை அமைத்ததாக” வீ.கே.சிங் தன்னிலை விளக்கம் அளித்திருந்தாலும், அவர் தனது சுயநல நோக்கங்களுக்காகவும் அவ்வமைப்பைப் பயன்படுத்தி வந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. வீ.கே. சிங் இராணுவத் தளபதியாக மே 2010-இல் பதவியேற்றவுடனேயே, தொழில்நுட்பப் பிரிவு என்ற பெயரில் இந்த உளவு அமைப்பை அமைத்து, அதனைத் தனது விசுவாச அதிகாரிகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்; தன்னைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படவோ பதில் சொல்லவோ தேவையில்லை என்ற விதத்தில் இந்த அமைப்பைச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார அமைப்பாக வளர்த்து விட்டதோடு, தனது எதிர் கோஷ்டிகளை உளவு பார்க்கும் அமைப்பாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார். இராணுவத்தின் மற்ற உளவுப் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, முறைகேடாகத் தனது விசுவாச உளவு அமைப்பிற்குத் திருப்பி விட்டிருக்கிறார். அவரது ஓய்வு பெறும் வயதை நிர்ணயிக்கும் பிரச்சினையில் காங்கிரசு அரசிற்கும் அவருக்கும் பிணக்கு ஏற்பட்ட பிறகு, இந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு இராணுவ அமைச்சகத்தின் தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக்கேட்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். இந்த ஒட்டுக் கேட்கும் கருவிகளை வாங்கியதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழலும் முறைகேடுகளும் நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

வீ.கே. சிங்கிற்குப் பிறகு விக்ரம் சிங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவை மைய அரசு எடுத்த சமயத்தில், ”விக்ரம் சிங் காஷ்மீரில் போலிமோதல் படுகொலைகளை நடத்தியவர்; எனவே, அவரைத் தலைமைத் தளபதியாக நியமிக்கக் கூடாது” எனக் கோரி, ”எஸ் காஷ்மீர்” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு பொதுநல வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதென்றாலும், இதற்குப் பின்னால் இருந்தவர் வீ.கே.சிங்தான் என்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.  இந்த எஸ் காஷ்மீர் அமைப்புடன் தொடர்புடைய ஜம்மு-காஷ்மீர் மனித சேவை அமைப்பு என்றொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு வீ.கே.சிங் தலைமைத் தளபதியாக இருந்த சமயத்தில் 2.38 கோடி ரூபாயை நிதியாக அளித்திருக்கிறார்.  அந்த வழக்கையும் இந்த நிதியையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வீ.கே.சிங், விக்ரம் சிங்கின் பதவி உயர்வுக்கு எதிராகத் திரைமறைவில் காய் நகர்த்தியதைப் புரிந்துகொள்ள முடியும்.

குலாம் ஹசன் மிர்
ஒமர் அப்துல்லா அரசைக் கவிழ்ப்பதற்காக இராணுவத்திடமிருந்து 1.19 கோடி ரூபாய் இலஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள காஷ்மீர் மாநில அமைச்சர் குலாம் ஹசன் மிர்.

ஒமர் அப்துல்லாவின் அரசைக் கவிழ்க்கப் பணம் கொடுத்தார், இராணுவத்தின் அதிகார ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுகளை விட, இக்குற்றச்சாட்டுகளுக்கு வீ.கே. சிங் அளித்த பதில்தான் அவரது ஆதரவாளர்களைக் கூட விக்கித்துப் போக வைத்து விட்டது. ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை அடக்கி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகளை தான் எடுத்ததாகவும், பணப் பட்டுவாடா நடந்ததை இலஞ்சமாகக் கருதக் கூடாது; அதனை நல்லெண்ண நடவடிக்கையாகக் கருத வேண்டும்” என அவர் விளக்கமளித்ததோடு, ”ஜம்மு-காஷ்மீர் அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் புதிதாகத் தொடங்கவில்லை; அது 1947 தொடங்கியே நடந்து வருகிறது” என ஒரே போடாகப் போட்டார். தான் மட்டும் நீரில் மூழ்காமல், தனது எதிராளியையும் இழுத்துக் கொண்டு மூழ்கும் தந்திரம் நிறைந்தது அவரது பதில்.

2010-ஆம் ஆண்டில் காஷ்மீரின் தாங்க்மார்க் பகுதியில் நடந்த இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், 2011-ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்தி முடித்ததிலும் தொழில்நுட்ப ஆதரவுப் பிரிவு பெரும்பங்கு ஆற்றியதாகக் குறிப்பிட்டு, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருக்கிறார், வீ.கே. சிங்.  ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் தேர்தல்களைத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக, அங்கு நடைபெறும் போராட்டங்களை இந்திய இராணுவம் தனது உயிரைக் கொடுத்து அடக்கி வருவதாக ஆட்சியாளர்களும் தேசியக் கட்சிகளும் காட்டும்பொழுது, வீ.கே.சிங் அளித்திருக்கும் அறிக்கையோ, அவையெல்லாம் கையூட்டுக்கும் இலஞ்சத்திற்கும் கிடைத்த வெற்றியாகக் கூறுகிறது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சியான மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெடித்தபொழுது, போராட்டக்காரர்கள் லஷ்கர்-இ-தொபாவிடம் காசு வாங்கிக் கொண்டு போராடுவதாகக் கூறி, காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தியது, இந்திய இராணுவம். இராணுவத்தின் அக்குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  ஆனால், காசு கொடுத்து துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் உருவாக்குவதன் மூலம்தான் காஷ்மீரில் தேசிய ஒருமைப்பாட்டின் கொஞ்சநஞ்ச மான, மரியாதையையும் காப்பாற்ற முடிகிறது என்பதை இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்தவரே ஒப்புக்கொண்ட பிறகும் இது குறித்து விசாரிப்பதற்கு மட்டுமல்ல, இது குறித்துப் பேசுவதற்கே அச்சப்படுகிறார்கள் காங்கிரசு, பா.ஜ.க. பிராண்டு தேசியவாதிகள்.

காங்கிரசு தோண்டிய கிணற்றிலிருந்து வெளிவந்த பூதம் காஷ்மீரைச் சேர்ந்த பிழைப்புவாத ஓட்டுக்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, இந்த ‘தேசிய’க் கட்சிகளையும் ஒருசேர அம்பலப்படுத்தி விட்டது. அதனால்தான், ”இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்” என இழுக்கிறது, மைய அரசு. வீ.கே. சிங்கின் ஆதரவாளரான பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி, ”இத்தகைய இரகசியங்கள் வெளியே வந்திருக்கக் கூடாது; இஷ்ரத் ஜஹான் வழக்கிலும் இப்படிதான் காங்கிரசு இரகசியங்களை வெளியே கசியவிட்டு விட்டது” எனக் கண்டித்திருக்கிறார். ”இராணுவ இரகசிய நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை வெளிப்படையாக ஆராய்வதும் பேசுவதும் ஆபத்தானது; உளவு அறியவும் எதிரியைத் திசை திருப்பவும் இராணுவம் எதையெல்லாமோ செய்யும். அதையெல்லாம் அம்பலப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல” என எச்சரிக்கிறது, தினமணி (29.09.2013).

2011 பஞ்சாயத்து தேர்தல்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2011-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டுப்போடக் காத்திருக்கும் மக்கள் (கோப்பு படம்)

இப்படிப்பட்ட கேள்விக்கிடமற்ற ஆதரவு மட்டுமல்ல, சட்டபூர்வ பாதுகாப்பும் இந்திய இராணுவத்துக்கு வழங்கப்படுவதால்தான், அக்கும்பல் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றி நிதி முறைகேடுகள், ஊழல்கள் மட்டுமல்ல, காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் போலி மோதல் கொலைகளை அடுக்கடுக்காக நடத்தி வருகிறது. அதிலும் கூட, ‘மோதல்’ கொலை நடந்ததாகப் பொய்க்கணக்கு எழுதி, அரசாங்கம் அறிவித்துள்ள பரிசுப் பணம், பதவி உயர்வுகளை மோசடியான முறைகளில் சுருட்டிக் கொள்கிறது.  போராளி அமைப்புகளிலிருந்து விலகி சரணடைவோரை மிரட்டிப் பணம் பறிக்கும் மாஃபியா வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தனது சதித் திட்டங்களை நிறைவேற்றும் பலிகிடாக்களாகச் சரணடைந்த போராளிகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவர்களைத் தூக்கு மேடைக்கும் அனுப்புகிறது.  தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குரு இப்படிபட்ட பலிகிடாக்களில் ஒருவர்தானே!  இந்தச் சதிகளை விசாரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தென்றால், அயோக்கியத்தனத்தின் மறுபெயர்தான் தேசப் பாதுகாப்பு, தேச பக்தி என அடித்துச் சொல்லலாம்.

-ஆர்.ஆர்.
________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
________________________________