privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !

ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !

-

ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு ! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம் !

பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம்.

சிறீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் அமைந்துள்ள நோக்கியா கைபேசி நிறுவனம், தமது நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலை நீக்கம் செய்திருக்கிறது.

“ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!” என்று இவ் வேலை பறிப்புக்கெதிராக, தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த நவம்பர் 20 அன்று திருப்பெரும்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

கடந்த நவம்பர் 7-ம் தேதி அன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் 200 பேரை அழைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி, “கம்பெனியின் வளர்ச்சிக்கு நன்றாக உழைத்தீர்கள்; வேறு இடத்தில் நல்ல வேலை கிடைத்து முன்னேற வாழ்த்துக்கள்!” என்று வக்கிரமாகக் கூறி வெளியேற்றியிருக்கிறது, நோக்கியா நிர்வாகம். ஒரே நேரத்தில் கணவன், மனைவி இருவரின் வேலையும் பறிக்கப்பட்டதையடுத்து, “தம்மில் யாரேனும் ஒருவருக்காகவாவது வேலையைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று அத்தம்பதிகள் கெஞ்சிய போதும் மனமிரங்க மறுத்து விட்டது, நோக்கியா நிர்வாகம். நரிக்குறவர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர், 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு நோக்கியாவில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். “தனது வருமானத்தை மட்டும நம்பி தமது குடும்பம் இருக்கிறது; வேலை பறிக்கப்பட்டால் தனது குடும்பமும் சேர்ந்து பாதிக்கப்படும்” என்ற இவரது நியாயமான கோரிக்கையும் ஏற்கப்படவில்லை

தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசாரித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; இதனினும் கொடுமை, ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களின் மின்னணு அடையாள அட்டையை, நோக்கியா கம்பெனியின் மின்னணு வருகைப் பதிவேட்டு இயந்திரம் ஏற்க மறுத்து வெளியே தள்ளி விட்டதென்றால், அத்தொழிலாளியின் வேலை பறிக்கப்பட்டுவிட்டது என்று அவராகவே புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, மனிதவள மேம்பாட்டு அதிகாரியையோ, நிர்வாகிகளையோ சந்தித்து முறையிட கூட அவர்களுக்கு அனுமதியில்லை.

ஒரு நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்கிறது என்றால், என்ன காரணத்திற்காக ஆட்குறைப்பு செய்கிறது என்பதையும் இது தொடர்பாக முறையான முன்னறிவிப்பையும் தொழிலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும்; அதற்கு முன்னர், இந்த ஆட்குறைப்பிற்கான சட்டபூர்வமான காரணங்களை முன் வைத்து, தொழிலாளர் நல ஆணையரிடம் முன் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்; அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்; ஆனால், இவை எவற்றையும் பின்பற்றவில்லை என்பது மட்டுமல்ல; தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தொழிலாளர்களை மயிருக்குக்கூட சமமாக மதிக்காமலும், வக்கிரமான முறையிலும் கிள்ளுக்கீரைகளைப் போல கடாசி எறிந்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

ஆறாண்டுகளுக்கும் மேலாக, ஓடாக உழைத்த தொழிலாளர்களுக்கு நோக்கியா நிறுவனம் வழங்கியிருக்கும் “வெகுமதி’ இதுதான். தன்னுடன் பணியாற்றிய சக தொழிலாளிகளுள் யார் யாருடைய வேலை பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சக தொழிலாளிகளுக்குக் கூடத் தெரிய வாய்ப்பில்லை என்பது இதன் உச்சக்கட்ட அவலம்.

“நோக்கியா கைபேசிக்கான மார்க்கெட் சரிந்துவிட்டது; உற்பத்தி இல்லை; எனவ, வேலைநீக்கம் செய்கிறாம்.” என்கிறது அந்நிறுவனம். நோக்கியா தயாரிப்பு மொபைல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதும், பங்கு சந்தையில் அதன் மதிப்பு குறைந்துள்ளது என்பதும் உண்மைதான் என்ற போதிலும், இதனால் தொழில் நொடித்துப் போக, போட்ட காசு எடுக்க முடியாமல் பின்லாந்து முதலாளி ஒன்றும் பிசசையெடுத்துத் திரியவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும பிரதானமாகக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான வழியில் அவர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி ஆறு ஆண்டுகளில் ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய்களை இலாபமாக மட்டும் ஈட்டியிருக்கிறது, இந்நிறுவனம். அரசின் பல்வேறு சலுகைகளையும், பல்லாயிரம் கோடி ரூபாய்களை வரிவிலக்காகவும் பெற்றுள்ளதோடு, 1800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்ட கேடி நிறுவனம்தான் நோக்கியா. இவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்திற்கு நல்ல இலாபத்திற்குத்தான் விற்றிருக்கிறது.

“நிலைமை இவ்வாறிருக்க, தமது பொருளுக்கு சந்தையில்லை என்பதையும் மைக்ராசாஃப்ட் நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டதையும சாக்காகக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையானது சட்ட விரோதமானது! ஆயிரக் கணக்கான தொழிலாளர்களையும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களையும் தற்கொலைக்குத் தள்ளும் நடவடிக்கை இது. தொழிலாளர்களின் குருதியைக் குடித்து கோடிகளாய் குவித்து, கரும்புச் சக்கைகளாய் தொழிலாளர்களை தூக்கி கடாசும் நோக்கியாவின் பயங்கரவாதம்; முதலாளித்துவப் பயங்கரவாதம் இது!” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுர மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா.

மேலும், இப்பிரச்சினையை தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சார இயக்கமாக கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், “இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூன்டாய்; ஹ்வாசின்; எஸ்.ஜி.எச். உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் பிரசுரங்களை விநியோகித்து, ஆலை வாயில் கூட்டங்களை நடத்தியுள்ளோம். ஹூண்டாய் ஆலைவாயில் கூட்டத்தின் பொழுது, தமது ஆலைவாயிலின் முன்பாக கூட்டம் போடக்கூடாது என மிரட்டினார், ஹூண்டாயின் பாதுகாப்பு அதிகாரி. ‘இது எமது தொழிற்சங்க உரிமை; தொழிலாளர்கள் கூடியிருக்கும் இடங்களில்தான் கூட்டம் நடத்துவோம். உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ! உன்னால் ஆனதைப் பார்’ என்று சவால் விட்டு தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர், எமது தோழர்கள்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து, 20.11.2013 அன்று மாலை திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு.வின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சி.வெற்றிவேல் செழியன்; நோக்கியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றும் தோழர் திலகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நிறுவனப் பேருந்துகளில் சென்ற தொழிலாளர்களின் கவனத்தை இவ்வார்ப்பாட்டம் ஈர்த்தது.

“ஆயிரம் பேரின் வேலை பறிப்புக்கு எதிரான எமது பிரச்சாரங்களின் பொழுது, நாங்கள் சந்தித்த பல தொழிலாளர்கள் வர்க்க உணர்வற்று, யாருக்கோ பாதிப்பு, நமக்கென்ன வந்தது” என்ற கண்ணோட்டத்தில் இருப்பதை உணர முடிந்தது.  ‘வேலைக்கு எடுக்கும் பொழுது, ஒப்பந்த அடிப்படையில்தான் எடுத்தனர். அவர்கள் ஒன்றும் நிரந்தரம் இல்லையே? அவர்கள் வேலையில்லை போ என்றால் போய்தானே ஆக வேண்டும்?’, ‘அவனால் சம்பளம் கொடுக்க முடியல… நட்டம்னு சொல்றான்.. வேறென்ன சார் பண்ண முடியும்?’, ‘நோக்கியா கம்பெனியை மைக்ராசாப்ட் நிறுவனம் வாங்கிடுச்சு’,  ‘நோக்கியா கம்பெனி 8-வது படிச்சவன கூட வேலைக்கு வச்சிகிட்டான். மைக்ராசாப்ட், சாப்ட்வேர் கம்பெனி, அவங்களுக்கு, தகுதியில்லாதவங்க தேவையில்லை; அதனால, அவங்கள மட்டும் வெளியேற்றியிருக்காங்க…’ என்று ஏறத்தாழ நோக்கியா கம்பெனிக்கு வக்காலத்து வாங்குவதைப் போலத்தான் தொழிலாளர்களுள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

நிரந்தரத் தொழிலாளி, யாருக்கோ பிரச்சினை என ஒதுங்கிச் செல்வதும்; ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் தன்னையும் வெகு விரைவில் வெளியேற்றி விடுவான் என்ற அச்சம் இருந்த போதிலும், தம் கண்ணெதிரே வேலை பறிக்கப்பட்டு தெருவில் வீசியெறியப்பட்ட சக தொழிலாளியின் உரிமைக்காகப் போராட முன்வரத் தயாராக இல்லை. அது போலத்தான், நோக்கியா தவிர்த்த பிற பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களும் இதை நோக்கியாவின் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கின்றனர். நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, பயிற்சியாளர் எனத் தொழிலாளர்கள் பிரிந்து கிடப்பதும், பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தனித்தனிப் பிரச்சினைகளாகப் பிரித்துப் பார்ப்பதும்தான் தொழிலாளர்களைப் பீடித்துள்ள நோயாக உள்ளது.

இது, ஒப்பந்தத் தொழிலாளியின் பிரச்சினை மட்டுமல்ல; தொழிலாளர்கள் அனைவரின் பிரச்சினை. அந்நிய மூலதனத்தை வரவேற்பது; வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்கிற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி, அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை பணிக்கமர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கி, மலிவான விலையில் தொழிலாளர்களின் மனித வளத்தைப் பயன்படுத்திக் கொண்டும், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தும் நாட்டையே சூறையாடும் அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் இவற்றுக்கு அடிப்படை.

நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, பயிற்சியாளர் என அனைவரின் தலைக்கு மேலும் தொங்கும் கத்தியைப் போல, எந்நேரமும் நம்மை காவு வாங்க காத்திருக்கிறது முதலாளித்துவப் பயங்கரவாதம். நம்மிடைய உள்ள பிரிவினைகளை உடைத்தெறிந்து நாமெல்லாம் தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் வர்க்கமாக அணி திரண்டு போராடாமல், நம்மை நடுத்தெருவுக்குத் தள்ளும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும் நாட்டையேச் சூறையாடும் மறுகாலனியாக்கக் கொள்கையையும் எதிர்த்து வீழ்த்தவியலாது!” என்று அறைகூவல் விடுத்து கண்டன உரையாற்றினார், தோழர் சி. வெற்றிவேல் செழியன்.

சி.ஐ.டி.யு.வின் அ.சவுந்திரராஜனை சிறப்புத் தலைவராகக் கொண்ட, நோக்கியா நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் சங்கமான “நோக்கியா (இந்தியா) தொழிலாளர் சங்கம்” ஒப்பந்தத் தொழிலாளர்களின் இப்பிரச்சினை குறித்து இதுவரை வாய்திறக்காத நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி மிரட்டல் மற்றும் போலீசின் பீதியூட்டல்களை எதிர்கொண்டு, இருங்காட்டுக்காட்டை சிப்காட் உள்ளிட்ட சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக வர்க்க ஒற்றுமையுடன் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டுமென்ற அறைகூவலோடு தொழிலாளர்களை அணி திரட்டி வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டல தொழிற்சாலைகள் முன்பு பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

– இளங்கதிர்.