Saturday, May 10, 2025
முகப்புசெய்திஇப்படியெல்லாம் கூட நமது தொழிலாளிகள் சாகிறார்கள்

இப்படியெல்லாம் கூட நமது தொழிலாளிகள் சாகிறார்கள்

-

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஜே.ஜே நகரை சேர்ந்த மணி என்பவரது மகன் நாகராஜ் (வயது 20) மற்றும் அவரது நண்பர்கள் சி.பிரசாத் (வயது 19), கே. விஜயகுமார் (வயது 20), முத்துக்குமார் (வயது 20) ஆகிய நான்கு பேரும் நேற்று (25-11-2013) கனகராஜ் என்பவரது நிலத்தில் இருந்த செம்மண் குவியலை வெட்டி எடுத்து டிராக்டரில் அனுப்பிக் கொண்டிருந்தனர். ஒரு லோடு மண்ணை அனுப்பிய பிறகு அவர்கள் சிறிது இளைப்பாறுவது வழக்கம். திடீரென முற்பகல் 11.30 மணிக்கு மண்மேடு சரிந்து விழுந்ததில் தலை வெளியில் தெரியுமளவுக்கு முத்துக்குமாரின் உடல் மண்ணில் சிக்கியிருந்தார். முத்துக்குமாரின் கூச்சலைக் கேட்டு அருகில் உள்ள செங்கற்சூளையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். மற்றவர்களை ஜேசிபி இயந்திரம் வந்த பிறகு தான் ஆனால் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது. இறந்தவர்களில் நாகராஜ் என்பவர் குடியாத்தம் அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பில் முதலாமாண்டு மாணவர்.

செங்கல் சூளைஏரிக்குத்தியை சேர்ந்த சதீஸ் என்பவரது டிராக்டர் மூலமாக அவர்கள் ஏற்றி அனுப்பும் செம்மண் அடுத்து செங்கற்சூளைகளுக்கு செல்லும். செங்கற்சூளையும் அங்கிருந்து சிறிது தூரத்தில்தான் இருக்கிறது. இந்நிலத்தில் மண் வெட்டி எடுப்பது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. கனகராஜூவும் அதே பகுதியை சேர்ந்தவர்தான். மணல் அள்ளும் வேலைக்கு வரும் ஆண் தொழிலாளிகளுக்கு ரூ.200 முதல் 300 வரை கூலியாக இப்பகுதியில் கிடைக்கிறது. அந்த வகையில் கல்லூரி மாணவரான நாகராஜுவும் விடுமுறை நாட்களில் இதுபோன்ற கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக ஜேசிபி இயந்திரம் வரவில்லை. பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் சொல்லி ஓரிரு மணி நேரம் கழிந்துதான் வந்து பின்னர் பிணங்களை மீட்டெடுத்திருக்கின்றனர். பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டுமென்பது விவசாய தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் விசயத்தில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோருக்கும் இதே நிலைமைதான். உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில்தான் பெரும்பாலான அடிப்படையான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இருக்கின்றனர். மண் சரியும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே ஒரு ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தால் நிச்சயமாக மூன்று மனித உயிர்கள் அநியாயமாக பறிபோவதை தடுத்திருக்கலாம்தானே. ஜேசிபி இயந்திரத்திற்கு ஒரு நாள் வாடகை கொடுக்க வேண்டியிருக்குமே என்ற முதலாளியின் இலாப-நட்ட கணக்குதானே இப்படி பாதுகாப்பு தரமுடியாமல் போனதற்கு காரணம் என்பதை அனைவரும் மறந்து அல்லது மறைத்து விடுகின்றனர்.

தொழிலாளிகளும் வேலை செய்யுமிடங்களில் தங்களது பாதுகாப்பு அம்சங்களைப் பெரிதாக வலியுறுத்துவது இல்லை. காரணம் இப்பகுதியில் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் இல்லை. குடும்பத்தில் அனைவருமே வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்பகுதியில் தோல் தொழிற்சாலை ஓரளவுக்கு இருந்தாலும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுவதில்லை. பெண்களுக்கு பீடி சுற்றுதல் வேலையில் ஓரளவு வருமானம் கிடைத்தாலும் அன்றாட குடும்ப செலவுகளுக்கு அது மட்டுமே போதுமானதாக இல்லை. எனவே படிக்கும் மாணவர்களும் வாய்ப்புள்ள வேலைகளை விடுமுறை நாட்களில் செய்தாக வேண்டிய நிலைமைதான் இங்கே இருக்கிறது.

சிறு நகரங்களான வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் மற்றும் வேலூருக்கு அருகாமையில் பேராணம்பட் இருக்கிறது. இங்கு சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இணைப்பு சாலைகளும் உள்ளன. இந்நகரங்களில் பெருகி வரும் ரியல் எஸ்டேட் கட்டுமான தொழிலுக்கு தேவையான செங்கற்களை தயாரிக்க தேவையான தரமான செம்மண் இப்பகுதியில் அதிகமாக கிடைக்கிறது. எனவே செங்கற்சூளைகளையும், அங்கு கொத்தடிமைகளுக்கு நிகரான வாழ்க்கைத்தரத்தில் உள்ள தொழிலாளிகளையும் இப்பகுதியில் அதிக அளவில் பார்க்க முடியும். செங்கற்சூளையில் இருக்கும் அதிக வேலை நேரம், குறைவான கூலியை விட சற்றே மேம்பட்ட வேலை நிலைமை காரணமாக பலரும் மண் அள்ளும் வேலையை விரும்பிதான் தினந்தோறும் சென்று வருகின்றனர். பாதுகாப்பு வசதிகளில் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

இதுதான் முதலாளிகளுக்கு தோதாகப் போய் விடுகிறது. அரசும் இத்தகைய விதிமுறை மீறல்களுக்கு துணை போகிறது. முறைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் கூட சட்டரீதியான பாதுகாப்புகள் தொழிலாளிகளுக்கு உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதுதான் நமது நாட்டின் இன்றைய எதார்த்தம். அதையே கவனிக்காத அரசு மணல் அள்ளும் தொழிலாளிகளை பாதுகாப்பது பற்றி யோசிக்காமல் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தொழிற்சங்கங்களும் இவர்களுக்காக இல்லை.

காயமடைந்த நாகராஜ் பேரணாம்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவ இடத்தை குடியாத்தம் தாசில்தார் கஜேந்திரம் மற்றும் பேரணாம்பட் நகர காவல்துறை ஆய்வாளர் பழநி ஆகியோர் பார்வையிட்டனர். நில உரிமையாளர் மற்றும் டிராக்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை ஏதும் வழங்கப்படுமா? என்பதுதான் அப்பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.

இழப்பீட்டுத் தொகை ஒருவேளை வழங்கப்பட்டாலும், பணிப் பாதுகாப்பை வழங்கத் தவறிய முதலாளிகளை தண்டிக்காமல் விடுவது எப்படியும் லஞ்சத்தால் நிறைவேறும். இன்று பணிப் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யும் முறைசாரா தொழிலாளிகளுக்கு அரசு நல வாரியங்கள் எத்தனை அமைத்தாலும் உயிர் காக்கும் அடிப்படை உரிமைகளைக் கூட தொழிலாளிகளுக்கு தர மறுப்பது தொடர்கிறது என்பதற்கு துலக்கமான உதாரணம்தான் இந்த சம்பவம். சரியாகச் சொன்னால் தொழிலாளி வர்க்கத்தின் மீது இந்த சமூகம் நடத்தியுள்ள ஈவிரக்கமற்ற படுகொலை.

மேலும் படிக்க