Thursday, May 30, 2024
முகப்புஅரசியல்ஊடகம்தெகல்காவின் மறுபக்கம் !

தெகல்காவின் மறுபக்கம் !

-

ராமன் கிர்பால்… ‘தெகல்கா’வின் முன்னாள் செய்தியாளர். 2011-ம் ஆண்டு வரையிலும் அதில் பணிபுரிந்தவர். 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவா இரும்பு தாது ஊழல் குறித்து ராமன் கிர்பால் எழுதிய புலனாய்வுக் கட்டுரையை தெகல்கா வெளியிட மறுத்தது. இதைக் கண்டித்து வெளியேறிய அவர் www.firstpost.com என்ற இணையதளத்தில் இணைந்தார். அங்கு அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. இது ராமன் கிர்பாலின் பின்னணி.

கோவா சுரங்கத் தொழில்
தென் கோவாவில் உள்ள வேதாந்தாவின் செசா நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கம்.

மாறாக, ராமன் கிர்பால் அம்பலப்படுத்தும் தெகல்காவின் கார்ப்பரேட் தொடர்புகள் குறித்த செய்திகள் விளிம்பில் கிடக்கின்றன. இத்தனைக்கும் அவர் ஒன்றும் தனது முன்னாள் நிறுவனம் குறித்த காழ்ப்பில் கதையளக்கவில்லை. ஆதாரங்களுடன், ஆவணங்களுடன் எழுதுகிறார். பெண் செய்தியாளர் மீதான பாலியல் வன்முறை நடந்த ‘கோவா திங்– 2013′ விழாவின் அழைப்பிதழைப் பார்த்தாலே… தெகல்காவின் நன்கொடையாளர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளலாம். கோகோ கோலா முதல் மோடியின் டார்லிங் நிறுவனமான அதானி வரை அனைவரும் தெகல்காவின் புரவலர்கள். ராமன் கிர்பால் தனது கட்டுரைகளில் இவற்றை வெளிப்படுத்துகிறார். தெகல்கா என்ற நிறுவனம் எவ்வாறு, ‘மொரீசியஸ்’ பாணியிலான போலி நிறுவனங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்டது என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிக் கொண்டு வருகிறார். அது தெகல்கா என்னும் கார மிளகாயின் நமத்துப் போன மறு முனையாக இருக்கிறது.

தெகல்காவின் வீழ்ச்சியில் ஆதாயம் அடையத் துடிப்பது யார் என்பது வெளிப்படையானது. அது ஆதாயமா, இல்லையா என்பது பிறகு. முதலில் இது பழிவாங்குதல். ‘இந்து’ மனம் முதல், ‘தி இந்து’ இதழ் வரை தேஜ்பால் மீது பாய்ந்து குதறுவது இதனால்தான். அவர்கள் தெகல்காவின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை பின்னோக்கி விரிவுபடுத்தி, பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியது முதல் குஜராத் கொலையாளிகளின் வாக்குமூலம் வரை தெகல்காவின் அனைத்து புலனாய்வுகளும் பொய்யானவை என்று நிறுவ முயல்வார்கள். அல்லது, ‘தெகல்காவே ஒரு கிரிமினல். இவங்க என்ன எங்களை குற்றம் சொல்றது?’ என்று பந்தை இந்தப் பக்கம் தள்ளி விட்டு விட்டு சந்தேகத்தின் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். இவை எல்லாம் எதிர்மறை சாத்தியங்கள். நேர்மறையில்… இந்த இந்துத்துவவாதிகளும் கூட, தெகல்காவின் மீதான கார்ப்பரேட் குற்றச்சாட்டுகள் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த கோணத்தில் ராமன் கிர்பாலின் குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஃபர்ஸ்ட்போஸ்ட்.காமில் அவர் எழுதிய கட்டுரையை தழுவி மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரை கீழே…

*********

னிவரும் நாட்களில் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே தெகல்காவின் கவலையாக இருக்காது. ஏனெனில் தருண் தேஜ்பாலும், ஷோமா சௌத்ரியும் மேற்கொண்ட பல சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் அவர்களை துரத்தப் போகின்றன. இவர்கள் தங்களிடம் இருந்த, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை, தங்களின் மற்றொரு நிறுவனத்திற்கு கற்பனை செய்ய முடியாத லாப விகிதத்தில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டியிருக்கின்றனர்.

10 ரூபாய் மதிப்புடைய தெகல்காவின் பங்குகள் 13,189 ரூபாய்க்கு கை மாற்றப்பட்டுள்ளன. தெகல்காவின் நிறுவன பங்குதாரர்கள், தங்கள் வசமிருந்த பங்குகளை அவசர, அவசரமாக இந்த விலைக்கு விற்றுள்ளனர். அப்படி விற்கப்பட்ட சமயத்தில் தெகல்காவின் நிறுவனமான அக்னி மீடியா பிரைவேட் லிமிட்டெட்டின் (தற்போது, ஆனந்த் மீடியா பிரைவேட் லிமிட்டெட்) மொத்த சொத்து மதிப்பு ‘நெகட்டிவ்’வில் இருந்தது. ஆனால் பங்கு விலை மட்டும் ‘எப்படியோ’ அதிகமாக இருந்தது. இப்படி 10 ரூபாய் பங்கை 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு கம்பெனி வெற்றி முகட்டில் சென்று கொண்டிருந்த போதுதான், தெகல்கா தன் ஊழியர்களுக்கு 2 மாதம் தாமதமாக ஊதியம் வழங்கியது என்கிறார் தெகல்காவில் ‘பீரோ சீஃப்’ ஆக பணிபுரிந்த ஹர்தோஷ் சிங்பால்.

தெகல்காவின் நிறுவனமான ஆனந்த் மீடியா பிரைவேட் லிமிட்டெடின் பெரும்பான்மையான பங்குகளை தருண் தேஜ்பாலின் குடும்பத்தினரே வைத்திருந்தனர். குறைந்த அளவு பங்குகள் வேறு சிலரது பெயரில் இருக்கின்றன. அந்த வேறு சிலர் யார்? ராம்ஜெத் மலானி (165 பங்குகள்), கபில் சிபல் (80 பங்குகள்), லண்டன் தொழிலதிபர் பிரியங்கா கில்லி (4,242 பங்குகள்) போன்றோர். ஆனால் கபில் சிபிலுக்கு தனது பெயரில் பங்குகள் இருப்பது அவருக்கேத் தெரியவில்லை.

‘‘தருண் தேஜ்பால், என் பெயரில் பங்குகளை விநியோகித்திருப்பது எனக்கே இதுவரை தெரியாது. நான் தெகல்காவுக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன். மற்றபடி பங்குகள் வாங்குவதற்காக எந்த விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து தரவில்லை” என்கிறார் கபில்சிபல். எனில், அவரது பெயரில் பங்குகள் எப்படி வந்தன? அவரது கையெழுத்தை போட்டது யார்? 2005–&ம் ஆண்டில் இருந்து கபில்சிபில் பெயரில் 80 பங்குகள் இருக்கின்றன. ராம்ஜெத்மலானி பெயரில் உள்ள பங்குகளுக்கும் இதே கதைதான்.

தருண் தேஜ்பால் - ஷோமா சௌத்ரி
தருண் தேஜ்பால் – ஷோமா சௌத்ரி

வாங்கவே இல்லை. ஆனால் இவர்கள் பெயரில் பங்குகள் இருக்கின்றன. எப்படி? 2005-க்கு முன்பு, தெகல்காவை இணைய இதழில் இருந்து அச்சு இதழாக கொண்டு வர முயற்சித்த சமயத்தில், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நன்கொடைகள் பெற்றார் தேஜ்பால். வெளிப்படையான அறிவிப்பு ஒன்றையும் இதற்காக வெளியிட்டிருந்தார். அமீர்கான், நந்திதா தாஸ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களிடம் இருந்து ஆளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நன்கொடை பெற்று 2 கோடி ரூபாய் வரை நிதி சேகரித்துள்ளதாக அப்போது தேஜ்பால் அறிவித்தார். அந்த சமயத்தில் தெகல்காவுக்கு இருந்த நன்மதிப்பு, மற்றும் மாற்று ஊடகத்தின் தேவையை கருத்தில் கொண்டு பலரும் நிதி அளித்தனர்.

அதன் பிறகே தெகல்காவின் சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் துவங்கின. இந்த தெகல்கா கதையில் ஆறு முக்கிய முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பக்ருதீன் தஹிர்பாய் கொராக்கிவாலா,  ஏ.கே. குர்து ஹோல்டிங், என்லைட்டன்டு கன்சல்டன்சி சர்வீசஸ், வெல்டன் பாலிமர்ஸ், ராஜஸ்தான் பத்ரிகா மற்றும் ராயல் பில்டிங்ஸ் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்  ஆகிய ஆறு நிறுவனங்கள், தெகல்காவில் பெரும் பணத்தை முதலீடு செய்திருந்தன.

இப்போது ராஜஸ்தான் பத்ரிகா, கொராக்கிவாலா ஆகிய இரு நிறுவனங்களைத் தவிர மற்றவற்றைக் காணவில்லை. அவை எங்கே போயின? ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய தளத்தின் விசாரணையில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிய வந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் செயல்படும் இடம், யூகிக்க முடியாத மர்மப் பிரதேசங்களாக உள்ளன. பொதுவாக தெகல்காவின் முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்ததில் இருந்து இரண்டு ஆண்டுகள் செயல்படும்; பிறகு நஷ்டக் கணக்குக் காட்டி விட்டு காட்சியில் இருந்து அகன்று விடும். இது பொதுப் பண்பாக இருக்கிறது. இதைத்தான் ‘மொரிசியஸ் வகை’ நிறுவனங்கள் என்று அழைக்கிறார்கள். அதாவது, பெயர் தெரியாத, முகம் தெரியாத முதலீட்டாளர்களின் பணத்தை கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இவை.

இனி தெகல்காவின் சில பண பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம்…

  • தெகல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு, ஆனந்த் மீடியா, 10 ரூபாய் முக மதிப்புடைய 1,500 பங்குகளை ஒதுக்கியது. 2006 ஜூன் 14-ம் தேதி, ஷோமா சௌத்ரி தன்னிடம் இருந்ததில் 500 பங்குகளை, ஏ.கே. குர்து ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பங்கு 13,189 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்தார். இதன்மூலம் அவருக்கு 66 லட்ச ரூபாய் கிடைத்தது. அதாவது 5 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்று அவர் ஈட்டியது 66 லட்ச ரூபாய்.
  • தருண் தேஜ்பாலின் மனைவியான கீத்தன் பாத்ரா, தன்னிடம் இருந்த 2,000 பங்குகளை ஏ.கே.குர்து நிறுவனத்திற்கு ஒரு பங்கு 13,189 ரூபாய் வீதம், மொத்தம் 2.64 கோடி ரூபாய்க்கு விற்றார்.
  • தருண் தேஜ்பாலின் சகோதரர் மிண்டி குன்வார் 1,500 பங்குகளை 2 கோடி ரூபாய்க்கும், தேஜ்பாலின் அப்பா இந்திரஜித் தேஜ்பால் ஆயிரம் பங்குகளை 1.32 கோடி ரூபாய்க்கும், தேஜ்பாலின் அம்மா சகுந்தலா, ஆயிரம் பங்குகளை 1.32 கோடி ரூபாய்க்கும் விற்றார்கள்.
  • தருண் தேஜ்பாலின் சகோதரியும், தெகல்காவின் தலைமை செயல் அதிகாரியுமான நீனா டி சர்மா, 432 பங்குகளை அதே நிறுவனத்திற்கு, அதே விலையில் விற்றதில் 57 லட்சம் சம்பாதித்தார்.
  • தருண் தேஜ்பால் தன்னிடம் இருந்த பங்குகளை விற்பனை செய்யவில்லை. மாறாக, சங்கர் சர்மா, தேவினா மெஹ்ரா ஆகிய இருவரிடம் இருந்தும் 4,125 பங்குகளை வாங்கினார். இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவெனில், தருண் தேஜ்பால் இவர்களிடம் இருந்து, ஒரு பங்கு 10 ரூபாய் வீதம் வாங்கினார். ஆனால் அதே நாளில் அதே நிறுவனத்தின் பங்குகளை தேஜ்பாலின் உறவினர்கள் 13,189 ரூபாய்க்கு விற்றார்கள். இந்த வியாபார அற்புதங்கள் அனைத்தும் நடந்த தேதி 2006 ஜூன் 14.

தேஜ்பாலின் ரத்த உறவினர்களைத் தவிர்த்து, தெகல்காவின் பங்குகளை அதிகம் வைத்திருந்தவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பக்ருதின் ஷேக் தஹிர்பாய் கொராக்கிவாலா. 2005-ல் கோத்ரா புலனாய்வை வெளியிட்டு தெகல்கா பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்த சமயத்தில் கொராக்கிவாலா, தெகல்காவில் 4.65 கோடி ரூபாயை முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு 19,326 பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனந்த் மீடியாவின் ஆண்டு நிதியறிக்கையின்படி 2006-ம் ஆண்டு, கொராக்கிவாலா ஒரு பங்கின் விலை 13,189 ரூபாய் வீதம், தன்னிடம் இருந்த அனைத்து பங்குகளையும் மொத்தம் 25.49 கோடி ரூபாய்க்கு ஏ.கே.குர்துவிற்கு விற்றிருக்கிறார். கொராக்கிவாலா 2011-ம் ஆண்டு தனது 93-வது வயதில் இறந்துபோனார். அவரது ரத்த உறவினர்களிடம் விசாரித்ததில், 25 கோடி ரூபாய் பணத்தை அவர் இறுதிவரை பெறவில்லை என்கிறார்கள். எனில், அந்தப் பணம் தெகல்காவுக்கு வழங்கப்பட்ட நன்கொடை என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

2006-ம் ஆண்டு தெகல்காவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் திடீரென காணாமல் போய்விட்ட அந்த ஏ.கே.குர்து ஹோல்டிங்ஸ் நிறுவனம் யாருடையது? இந்திய நிறுவன விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) விவரங்களில் இப்படி ஒரு நிறுவனத்தையே காண முடியவில்லை. கூகுள் தேடலில் கூட Marg என்ற சென்னை நிறுவனத்தின் இயக்குநரான அருண்குமார் குர்து (Arun Kumar Gurtu) என்பவரின் பெயரை மட்டுமே காண முடிகிறது. இவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தெகல்கா பதிவுகளின்படி ஏ.கே.குர்து நிறுவனம் 22 ஜங்க்புரா ஏ, புது தில்லி என்ற முகவரியில் ஆரம்பத்தில் இயங்கி வந்தது. பிறகு எம்.ஜே ஷாப்பிங்க் சென்டர், 3 வீர் சாவார்க்கர் வளாகம், ஷகார்பூர், தில்லி-110092 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது. ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய இதழ் இந்த இரண்டு முகவரிகளையும் ஆய்வு செய்ததில் அங்கு இப்படி ஒரு நிறுவனமே இல்லை.

2007-ம் ஆண்டு ஏ.கே.குர்து நிறுவனம் தனது முதலீடுகளை என்லைட்டன்ட் கன்சல்டன்சி மற்றும் வெல்டன் பாலிமர்ஸ் நிறுவனங்களுக்கு நஷ்டத்துக்கு கை மாற்றியது. இதில் விநோதம் என்னவெனில் என்லைட்டன்ட் கன்சல்டன்சி நிறுவனமும் மேற்கண்ட அதே ஷகார்பூர் முகவரியில்தான் இயங்கியது. அதாவது விற்ற கம்பெனிக்கும், வாங்கிய கம்பெனிக்கு ஒரே முகவரி. இதில் இருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 2009-ல் என்லைட்டன்ட் கன்சல்டன்சியின் செயல்பாடுகள் தெகல்காவுடன் இணைக்கப்பட்டன. பிறகு 17 கோடி ரூபாய் நஷ்டக் கணக்குக் காட்டி என்லைட்டன்ட் கன்சல்டன்ஸியும் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

திரிணாமுல் ராஜ்யசபா எம்.பி.யான கே.டி.சிங்கின் ராயல் பில்டிங்ஸ் நிறுவனம் இப்போது தெகல்காவின் 66 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. (மொத்த முதலீடு 32 கோடி ரூபாய்). தருண் தேஜ்பால் குடும்பத்தினரிடம் 22 சதவிகிதத்திற்கும் குறைவான பங்குகளே இருக்கின்றன. தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் கே.டி.சிங் எந்நேரமும் ஆனந்த் மீடியாவை விட்டு வெளியேறலாம். ஒருவேளை அப்படி நடந்தால், அது தெகல்காவின் மரணப்பாதையாக இருக்கும்!

மேலும் படிக்க

–    வளவன்
  1. இந்தியாவில் “எல்லா” தூண்களுமே இப்படி
    வலுவிழந்துதான் இருக்கும்:
    புலனாய்வு என்ற போர்வையில்,குளிர் காய்வது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க