privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

-

தில்லை கோவில் மீதான தமிழ் மக்களின் உரிமைக்காக சிதம்பரத்தில் நடந்த ஆறுமுக சாமி – புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையிடமிருந்து பிடுங்கி தீட்சிதப் பார்பனரிடம் ஒப்படைப்பதற்கு சு.சாமியும் ஜெயாவும் கூட்டு சதி செய்யும் அயோக்கியத்தனத்தை முறியடிக்கும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளும் சிதம்பரத்தில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருவதை அறிவீர்கள். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 2, 2013 திங்கள் கிழமை காலை ஏழு மணி முதல் இரவு பதினோரு மணி வரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் பழனிசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஹரிகிருஷ்ணன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் கருணா தலைமையில் எமது தோழர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட்ட செய்தி பின்வருமாறு :

சிவனடியார் கோயிலில் நுழைவு
மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் சிவனடியார் கோயிலில் நுழைகிறார்.

காலை ஏழு மணி :

சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த வழக்கறிஞர்களும் தோழர்களும் ஒன்று குவிந்தனர். கடந்த இரு தினங்களாக மையம் கொண்டுள்ள புயல் வலு வடைந்து கனமழை பொழியத் தொடங்கியது. இரண்டு தினங்களுக்கு முன்பு உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் மற்றும் வாழ்த்துரை வழங்க வந்திருந்த தோழர்கள் மீண்டும் வந்தனர்.

காலை எட்டு மணி :

கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் கோவில் வளாகத்தில் எமது தோழர்கள் சிற்றம்பல மேடைக்கு அருகில் சென்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் என ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். ஒன்பது மணி கால பூஜை முடிந்தவுடன் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு ஆறுமுக சாமி தயாரானார். தேவாரம் பாடுவது மட்டும் இன்றி உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிப்பதற்கும் தொடர்ந்து தமிழில் பாடுவதற்கும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை பாடப் போவதாக அறிவித்து சிற்றம்பல மேடைக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

மணி ஒன்பது :

கால பூஜை முடிந்தவுடன் ஆறுமுக சாமி பாடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் தயாராக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். கோவில் வளாகத்திற்குள் பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியிலிருந்த காவலர்களிடம் ஆறுமுகசாமி மேடையில் பாட ஏற்பாடு செய்யுமாறு கோரினர். பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தமது கோரிக்கைகளை முன் வைத்து பாடுவதாக ஆறுமுகசாமியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

காலை பத்து மணி :

போலீஸ் பாதுகாப்புடம் தமிழில் பாடும் சிவனடியார்.
போலீஸ் பாதுகாப்புடம் தமிழில் பாடும் சிவனடியார்.

கால பூஜை முடிந்தவுடன் ஒரு சில நிமிடங்கள் மேடையில் தேவாரம் பாடிய ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் இறக்கி விட்டனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு பாட அனுமதிப்பதாக கூறிக் கொண்டிருந்தனர். ஆறுமுக சாமி இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருப்பதை பேருந்துகளிலும் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு விதிகளிலும் 2,200 துண்டறிக்கைகளை தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து விநியோகம் செய்தனர். கோரிக்கைகளின் நியாயத்தையும் தில்லைக் கோயில் தீட்சிதப் பார்ப்பனரிடம் செல்லும் அபாயத்தையும் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேருந்துகளில் உழைக்கும் மக்கள், “ கொட்டும் மழையிலும் நீங்கள் தமிழ் மொழி உரிமைக்காகப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது “ என்று வாழ்த்தினர்.

காலை 11 மணி :

வாஞ்சிநாதன், சிவனடியார் ஆறுமுகசாமி
கோரிக்கைகளை வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமியும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் போராட்டம்.

பூஜை முடிந்தவுடன் ஆறுமுக சாமியை மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்கள் அனுமதித்தனர். தேவாரத்தை அரை மணி நேரத்திற்கும் மேலாக மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தார். அதே வேளையில் சிற்றம்பல மேடைக்குக் கீழே ஒரு பெண்மணியும் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். பிறகு கீழே இறங்கிய ஆறுமுக சாமி சிற்றம்பல மேடைக்கு எதிரில் அமர்ந்து தனது கோரிக்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

செய்தியைக் கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அங்கே திரண்டனர். ஆறுமுக சாமியிடம்,”ஏன் திடீர்னு போராடுறிங்க” என்று கேள்விகளைக் கேட்டு போராட்டத்தின் நோக்கத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். தனது கோரிக்கைகளை துண்டறிக்கையாக கொடுத்தார். அது பற்றி மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் விளக்கமளித்தனர். இதற்கிடையே போலீசைக் குவிக்கத் துவங்கினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீட்சிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு கோவிலுக்குள் திரளத் துவங்கினர்.

மணி 12 :

ஆறுமுக சாமி மேடையில் பாடிய பிறகும் சிற்றம்பல வளாகத்தை விட்டு வெளியில் வராமல் அங்கேயே அமர்ந்து போராடிக் கொண்டிருப்பதைப பற்றிய செய்தி வெளியில் பரவ ஆரம்பித்தது. உடனடியாக அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மற்றும் அறங்காவலர் போன்றவர்கள் ஆறுமுக சாமியிடம் சமரசமாகப் பேசத் துவங்கினர். தமிழக அரசின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டு இருப்பதாக கூறினர். ஆனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை நியமித்தது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை தான் இங்கேயே அமர்ந்து பாடிக் கொண்டிருப்பதாக ஆறுமுகசாமி அறிவித்தார்.

மணி மதியம் 1 :

பத்திரிகை பேட்டி
சிவனடியாரிடம் கேள்வி கேட்கும் ஊடகங்கள்.

மத்திய பூஜை முடிந்தவுடன் ஒரு மணிக்கு மனிதப் பதர்களை வெளியே தள்ளிவிட்டு உத்தம சிகாமணிகளான தீட்சிதர்கள் மட்டும் உள்ளே இருப்பதை அனுமதிக்கும் ஆகம விதியை காரணம் காட்டி பக்தர்களையும் நமது தோழர்களையும் அதுவரை மூன்று வெவ்வேறு கோணங்களில் வெளித் தெரியாமல் போராட்டத்தை படமெடுத்து பதிவு செய்து கொண்டிருந்த நமது புகைப்படக் கலைஞர்களையும் வெளியேற்றத் துவங்கினர். நடுவில் ஆறுமுக சாமியும் அவரைச் சுற்றி மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும் எமது தோழர்களும் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டிருந்தனர்.

“ஆகம விதிகளை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும் தீட்சிதர்கள் ஆகம விதிப்படி நடையைச் சாத்தப் போவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சிற்றம்பல வளாகத்தை விட்டு வெளியேற முடியாது” என்று உறுதியுடன் இருந்தனர். பல கோடி மதிப்புள்ள சிதம்பரம் கோயிலையும் அதன் நிர்வாகத்தையும் தீட்சிதர்களிடம் வாரிக் கொடுக்க தயாராக இருந்த பார்ப்பன ஜெயா அரசாங்கம் ஆகம விதி மீறப்பட்டால் சர்வமும் அழிந்துவிடும் என்பதைப் போல தீட்சிதர்களிடம் மண்டியிட்டுக் கொண்டிருந்தது. அறங்காவலர் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்து தமது போராட்டத்தைத் தொடருமாறு ஆறுமுகச் சாமியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

மணி 2 :

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்த போராட்டத்தை ஒடுக்க முடியாத போலீசு, “உங்களைக் கைது செய்வதாக இல்லை. தயவு செய்து எங்களுடன் ஒத்துழையுங்கள்” என்று புலம்பினர். அதற்கு பதிலடி கொடுத்த நமது தோழர்களோ “பிரச்சனையை குறுக்கிப் பார்க்காதீர்கள். கோரிக்கையின் தன்மையை உணர்ந்து ஒன்று அதை நிறைவேற்ற வழி செய்யுங்கள். அல்லது எங்களைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்று உறுதி காட்டினர்.

இதைத் தொடர்ந்து 2.40 மணிக்கு ஆறுமுக சாமியையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் 12 பேரையும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. தோழர்கள் 20 பேரையும் கைது செய்து மண்டபத்துக்குக் கொண்டு சென்றது. ஏதோ தீவிரவாதிகளைக் கைது செய்வதைப் போல வழி நெடுக பீதியூட்டிக் கொண்டு சென்றது.

கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்க்கச் சென்றவர்களை மிரட்டியும் தீட்சிதர்களைக் கண்டித்து முழக்கமிட்ட தோழர்களை வேனில் ஏற்றியும் தனது தீட்சிதர் விசுவாசத்தைக் காட்டியது.

மணி மூன்று :

கைது செய்யப்பட்ட தோழர்களை மண்டபத்துக்கு கொண்டு சென்றவுடன் ஆங்காங்கே பாதுகாப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிற தோழர்களை ஓரிடத்தில் ஒன்றிணைத்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் பற்றி விளக்கமாக வெளியிடப்பட்டிருந்த 4,000 துண்டறிக்கைகளுடன் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தோம். பார்ப்பன அக்ரகாரம் முதல் உழைக்கும் மக்கள் நிரம்பிய பகுதிகள் வரை அனைத்து மக்களும் நமது போராட்டம் பற்றித் தெரிந்து கொண்டு இரண்டு மணி நேரத்தில் ரூபாய் மூன்றாயிரம் நன்கொடையாகக் கொடுத்தனர்.

மணி 4, 5, 6 :

மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மண்டபத்திற்குள்ளே தமது போராட்டத்தின் நியாயத்தை நமது தோழர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். வழக்கமாக கைது செய்தால் ஒன்று ஆறு மணிக்குள்ளாக நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைப்பார்கள் அல்லது எந்த வழக்குமின்றி விடுவித்து விடுவார்கள். ஆனால் போலீஸ் இரண்டையும் செய்யாமல் நைச்சியமாக நம்மிடம் பேசிக் கொண்டே நேரத்தைக் கடத்தினர். கோவிலுக்குள் உடனே நம்மைக் கைது செய்யாமல் இரண்டு மணி நேரம் போராடட்டும், செய்தி வெளியே போகட்டும் என்று தாமதப்படுத்தியதாக டி.எஸ்.பி. ராஜாராம் சப்பைக்கட்டு கட்டினார். உண்மையில் போராட்ட செய்திகள் வெளியேவராமல் அமுக்க முயன்று தோற்றுப்போனது போலீசு. பத்திரிகையாளர்கள், தோழர்கள், வழக்கறிஞர்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் மாலை ஐந்து முதல் ஊடகங்களில் நமது போராட்டசெய்தி வெளி வந்தது.

மாலை ஏழு முதல் பத்து வரை :

மண்டபத்தில் அடைக்கப்பட்ட தோழர்களின் போலீசுக்கு எதிரான தொடர் போராட்டத்தால் ஒரு முடிவுக்கு வந்தனர். “உங்களை வெளியே விட்டால் மீண்டும் கோவிலுக்குள் சென்று போராட மாட்டேன் என்று உறுதி கொடுங்கள் விடுவிக்கிறோம்” என்றது போலீசு. ஆனால், “இவ்வாறெல்லாம் உறுதி மொழி கூறி வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை” என்று உறுதியாக நின்றதால்,”நடை சாத்தும் வரை உங்களை விடமாட்டோம், அதன் பிறகு விட்டு விடுகிறோம்” என்று பாமரத்தனமாக கூறினார்கள். மணி பத்து முப்பதுக்கு நடை சாத்தப்பட்டது தோழர்களும் விடுவிக்கப்பட்டனர். காலை முதல் ஓயாமல் பெய்த கன மழை ஓயத் தொடங்கியது. ஆனால் சூழ்ந்திருக்கும் பார்ப்பன இருளையும் பார்ப்பன கும்பலின் தமிழ் மக்களுக்கு எதிரான சாதித் துவேசத்தையும் எதிர்த்த எமது போராட்டம் ஓயாது என்ற முடிவுடன் பகுதிகளுக்குத் திரும்பினர்.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு.
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி