privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்ஆரம்பம் – வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் மரணக் குறிப்புகள்

ஆரம்பம் – வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் மரணக் குறிப்புகள்

-

புனைவின் முன் நியாயக் குறிப்பு: முகநூலில் அறிவால் ஜீவிக்க கூடிய வாளிகள் சிலர் மக்களை அச்சுறுத்தும் ‘பயங்கரவாத’ குறிப்புகளை அவ்வப்போது முன்வைக்கிறார்கள். வாளிகள் லிஸ்ட்டில் இடம் பிடிப்பதை இலட்சியமாகவும், பிழைப்பை காரியமாகவும் கொண்ட சிறுவாளிகள் பலர் இதை மார்கெட் செய்கிறார்கள். நாலும் இரண்டும் எட்டு என்பதைக் கூட நாலில் ஒன்றைக் கழித்து, மூன்றைக் கூட்டி, இரண்டால் வகுத்து, ஒன்றால் வகுத்து, நாலால் பெருக்கி, மூன்றைக் கழித்து………..(ஸ்ப்பஃபா முடியல), கடைசியில் எட்டு என்பதைக் கூட கிசுகிசு குரலில் கீச்சி விட்டு படுத்தி எடுக்கிறார்கள். அதை உங்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரிக்கவே இந்த புனைவு வினவால் விடப்படுகிறது. புனைவு நனவை மீட்டினால் கம்பெனி பொறுப்பல்ல.

முகநூல் ஃபார்மெட்டில் படிக்க…
______________

அறிவுஜீவி

about Wastesh Kosuwarthi – உலக சினிமாக்களில் கிளாப் ஃபோர்டு குறித்த வரலாறும், அந்த ஃபோர்டுகள் என்னென்ன மரத்தில் செய்யப்படுகின்றன, அந்த மரங்கள் குறித்து நகர்ப்புறங்களில் பேசப்படும் நாட்டுப்புறக் கதைகள் குறித்தும் மார்ட்டின் டப்ளர் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்பு முடித்தவர்.

Works in – Don at Koma naidu cinema university

333 friends, 1111 followers

_______________

Notes by kosuwarthi

ஆரம்பம் – மீண்டும் ஒரு மரண வாசிப்பு (வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி) – பாகம் 1
November 18, 2013 at 1:55pm

இந்த விமரிசனத்தை நான் விரும்பி எழுதுவதாக விரும்பாமலேயே நீங்கள் புரிந்து கொள்ள முயன்றாலும், அதை நான் விரும்பியே புரியாது என்று ஒதுக்கினாலும் இந்த குறிப்பின் நியாயத் தேவை இருக்கவே செய்கிறது என்பதை நான் விரும்பியே சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.

ஆரம்பம் படம் குறித்து ஆயிரமாயிரம் விட்டை விமரிசனங்கள் பேசியிருக்கும் கழுதை கருத்துக்களை என் குறிப்பு எப்போதும் பேசாது என்றுதான் நீங்கள் என் பக்கம் வந்து படிப்பதற்கு காரணம். சிலர் கோமா நாயுடுவிடம் ஆட்டையைப் போட்டு நான் டான் ஆனது போல ஏதேனும் ஒரு சில சினிமாக்களை எடுத்து நாயுடுவிடம் ஆட்டையைப் போடலாம் என்றும் வருகிறார்கள். அது எனக்கு தெரியாதது அல்ல. உட்கார்வது ஆய் போய் விட்டு எழுந்திருக்கவே என்ற உலக தத்துவம் அறியாதவன் அல்ல இந்த கொசுவர்த்தி. ஆரம்பத்தில் கொசு அடிக்க மட்டும் பயன்பட்ட இந்த வர்த்தி இப்போது கோப்ராக்களையும் சுருட்டி போடுவதால் சுண்டெலிகளின் நோக்கம் அறியாதவன் என்று எண்ணுவது எஸ்கேப்பிசம்.

ஆக்சன் படங்கள் வேறு, அண்ட்ராயர் படங்கள் வேறு என்று சிலர் கருதுகிறார்கள். ஓசி விக்கிபீடியா முதல் காசு என்சைக்ளோபீடியா வரை அப்படித்தான் விளக்கமளிக்கிறார்கள். என் வரைக்கும் நான் ஓசி, காசு இரண்டையும் மதிப்பவனல்ல. மார்ட்டின் டப்ளரில் படிக்கும் போது நானே ஒரு நூலகம் அளவுக்கு கோட்பாடுகளையும், கோக்குமாக்குகளையும் எழுதி தள்ளியவன். இந்த உலகை அறிவதற்கு எனது கிட்னியையே சார்ந்திருக்கிறேன். அடை மழை வருமா எனும் வானிலையைக் படித்தறிவது கூட பக்கத்து சீட்காரன் மூலம் கூடாது என்று டிசிப்பிளினோடு வாழ்பவன்.

ஆக்சன் படங்களில் காமம் கவர்ச்சிக்காவும், அண்ட்ராயர் படங்களில் கதையேயாகவும் வருகின்றன. ஒன்றில் சைட் டிஷ், மற்றொன்றில் மெயின் டிஷ். இரண்டும் டிஷ்ஷையே சார்ந்து இயங்குகின்றன என்பதறியும் போது மெயினில் பன் இருந்தாலென்னா, பலகாரம் இருந்தாலென்ன? எனர்ஜி பாக்கெட்டை கேப்சர் செய்தால் மின்சாரம், ரிலீஸ் செய்தால் அணு குண்டு. ஆனால் அணு அணுதானே மிஸ்டர்?

என்னைப் பொறுத்தவரை வெளியாடைகளை துறப்பது கவர்ச்சி, உள்ளாடைகளை துறந்தால் காமம், என்றால் இதில் எந்த உடை என்பதில் ஏன் விளக்கங்களும், விவாதங்களும்? பம்பாய் படத்தில் மார்பு குலுங்க கடற்கரையில் ஓடி வரும் மனிஷா கொய்ராலவும், குருதிப்புனலில் கவுதமியை ஆழமாக முத்தமிடும் கமலஹாசனும்தான் பார்வையாளர்களின் மனதில் கதையை கிளறிவிட்ட குறியீடுகள். இதை சில கடிவாய் கம்யூனிஸ்டுகள் லூசுத்தனமாய் மதச்சார்பின்மை, மதவெறி, தீவிரவாதம், முதலாளித்துவம் என்று உளறுகிறார்கள். காமமும் இறுதியல் ஒரு ஆக்சன் எனும் போது ஆக்சனையும், அண்டர்வாயரையும் பிரிக்க முடியுமா?

சண்டையில் கட்டிப் புரள்கிறார்கள். சரசத்திலும் கட்டிப் புரள்கிறார்கள். இரண்டிலும் உடம்பின் எல்லையற்ற சாத்தியங்களோடு கட்டிப் புரள்கிறார்கள். ஒன்றில் அணைத்தல், இன்னொன்றில் அடித்தல், ஒன்றில் இன்பக்காயம், மற்றொன்றில் துன்பக் காயம், என்றாலும் மருத்துவமும் டாக்டரும் ஒன்றுதானே? சிலர் சேலம் சிவராஜ் வைத்தியர் இருப்பதற்கு என்ன பொருள் என்று கேட்கலாம். எலும்பு முறிவுக்கு ஆர்த்தோ டாக்டர் வைத்தியம் செய்வது போல காமம் முறித்த குற்ற உணர்வுகளுக்கு சேலம் வைத்தியர் டிரீட்மெண்ட் கொடுக்கிறார். எனவே அதுவா இதுவா என்ற பேதமும் வாதமும் ஆதிசங்கரன் காலம் முதல் ஆய்வாளர் அனாடினோ முறுவலினா வரை உள்ள பிரச்சினை.

ஆரம்பம் படத்தில் தல போட்ட கோட்டு சூட்டுக்களின் விலையும், தயாரிப்புச் செலவும் அதிகம் என்றாலும், நயன்தாரா போட்ட செலவில்லாத நீச்சல் உடையையும் பாருங்கள். பார்வையாளன் எந்த உடைக்கு அதிகம் செலவு என்று யோசித்து காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்வதில்லை. எந்த உடம்பில் குறைவு என்பதுதான் அவனைக் கிளப்பி விடும் மர்மம். இதனால் தலயின் ரசிகர்களை விட நயன்தாரா ரசிகர்கள் அதிகம் இருக்க வேண்டுமல்லவா என்று நீங்கள் கேட்கலாம்.

அங்குதான் நல்லது கெட்டது இருமை முரண்களின் சதுரங்க ஆட்டம் வேலை செய்கிறது. ஒரு வியப்பூட்டும் உதாரணத்தை எம்ஜிஆர் படங்களில் இருந்து சொல்கிறேன். எம்ஜிஆர் படங்களில் நாயகிகளும் சரி அவரது வில்லனான நம்பியாரின் பெண் உதவியாளர்களும் சரி கவர்ச்சி உடைகளில் வருவார்கள். ஆனால் நாயகிகள் எம்ஜிஆரை மணம் செய்யும் போதும், இல்லற வாழ்க்கையின் போதும் சேலை உடுத்தி பாந்தமாக இருப்பார்கள். வில்லனது நாயகிகளுக்கு இந்த போலித் தனம் இல்லை. எப்போதும் ஃபீரிதான். இறுதியில் நல்லதின் நாயகன் வெற்றி பெறுகிறார் என்ற உண்மை வில்லனது நாயகிகளை ரசிக்க மட்டும் என்றாக்கி விட்டு, நாயகனது நாயகிகளை பூஜிக்க என்றும் ஆக்கி விடுகிறது. நாயகிகளுக்கு லட்சுமி, சரஸ்வதி என்று பேர் வைத்து விட்டு வில்லிகளுக்கு ரீட்டா, ஸ்டெல்லா என்று பெயர் வைப்பதை மதம் சார்ந்து பார்ப்பதை விட மேற்குலகு உருவாக்கியிருக்கும் கீழைத்தேய கவர்ச்சி குறித்த சொல்லாட அடிமைத்தன மனோபாவ பிரதிபலிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

காமக் கலையில் இருந்துதான் கர்ணக்கலை ஆக்சன் உருவானது என்பதை டிரைபல் சொசைட்டி முதல் அர்பன் சொசைட்டி வரை எனும் ஆய்வு நூலில் அறிஞர் எக்ச்ட்டீர் பக்ஸ் தெரிவிக்கிறார். எனவே ஆக்சன் படங்களும், அண்ட்ராயர் படங்களும் இரு வகை என்றாலும் ஒன்றின் வாழ்வு மற்றதை தீர்மானிக்கிறது. எனவே தலையின் படங்களோடு ஷகிலாவின் படங்களுக்கும் கொள்ளும் கொடுப்பினையும் உண்டு என்பதை எனது அடக்கமுடியாத பெருமிதக் கண்டுபிடிப்பாக மறுக்க முடியாத பணிவுடன் முன்வைக்கிறேன்.

ஆரம்பம் படத்தின் முதல் விமரிசனமே என்னுடையதுதான் என்பதை நான் இதற்கு மேலும் எழுதி உங்கள் விருப்பத்தை தடை செய்ய விரும்பவில்லை. தமிழ் சினிமாக்களை இத்தகைய கோட்பாட்டு புரிதல்கள் இன்றி வாசிக்கும் போதும், பேசிக்கும் போதும் ஏற்படும் அறிவு மரணங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தகைய மரணங்களை நிறுத்தவும், ஒருவகையில் துரிதப்படுத்தவும்தான் என்னுடைய குறிப்புகளை நேரமற்ற நேரத்தில், நிலையற்ற நிலையில், சரளமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பான அத்தனை கேள்விகளுக்கான பதில்களும் என்னுடைய குறிப்புகளில் இடம் பெற்றிருப்பதால் நயன்தாரா நீச்சல் உடையை எங்கே தைத்தார்கள், தலையின் சூட்டு கோட்டு எங்கே வைத்தார்கள் என்று தனி மெயிலிலும், பிரைவேட் மெசேஜிலும் கேட்காதீர்கள்.

–    வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி

_______________________

ஏ.ஒன்.ஐஸ்ராமன், அம்ஷா வினோத், சுமாலன் சுர் உசைன், யூத் கண்ணா and 14 others like this.

Varun – super super super uncle wow i loved reading it very much
January 31 at 6:50pm · Like

Ssuresh Kannan – கடைசி வரி அற்புதம்
January 31 at 6:53pm · Like · 2

Vhmana Roja Kannan – // சண்டையில் கட்டிப் புரள்கிறார்கள். சரசத்திலும் கட்டிப் புரள்கிறார்கள். இரண்டிலும் உடம்பின் எல்லையற்ற சாத்தியங்களோடு கட்டிப் புரள்கிறார்கள். ஒன்றில் அணைத்தல், இன்னொன்றில் அடித்தல், ஒன்றில் இன்பக்காயம், மற்றொன்றில் துன்பக்காயம்,  என்றாலும் மருத்துவமும் டாக்டரும் ஒன்றுதானே? சிலர் சேலம் சிவராஜ் வைத்தியர் இருப்பதற்கு என்ன பொருள் என்று கேட்கலாம். எலும்பு முறிவுக்கு ஆர்த்தோ டாக்டர் வைத்தியம் செய்வது போல காமம் முறித்த குற்ற உணர்வுகளுக்கு சேலம் வைத்தியர் டிரீட்மெண்ட் கொடுக்கிறார். எனவே அதுவா இதுவா என்ற பேதம் ஆதிசங்கரன் காலம் முதல் ஆய்வாளர் அனாடினோ முறுவலினா வரை உள்ள பிரச்சினை.// மிகவும் பிடித்தது. முழு விமர்சனம் படிக்கவில்லை. படம் பார்த்து விட்டு படிக்கிறேன். நன்றி sir.
January 31 at 7:00pm · Like

Basu Devan – நன்றி.கொசு. எக்ச்ட்டீர் பக்ஸ் படைப்புகளை பற்றி நீங்கள் எழுதியதும்,உங்கள் கோணங்களும் எனக்கு உடன்பாடே. ஆனால் இப்படத்தின் கலைப் பார்வை என்ன? சூழலை முன் வைத்து உங்களிடம் கேட்கிறேன்.(பெருவாரியாக அரசியலில் ரீதியாக விவாதங்கள் நடைபெறுகையில்)….
January 31 at 8:09pm · Like · 3

Watesh kosuvarthi@Basu Devan…என்ன பாசு இவ்வளவு தெளிவா அதனுடய ரசனை இலக்குகள் என்ன என்று எழுதிய பிறகும் அதனுடய கலை பார்வை என்னன்னு என்னை கேட்கிறீங்க?
January 31 at 8:14pm · Like · 2

Moni payaprakashvel – உங்கள் எழுத்து நடை பின்பற்ற சற்று சிரமமாக (எனக்கு) இருந்தாலும் அப்படி இப்படியாக சரியாக முடிகிறது உங்கள் பதிவு. ஆக்சன் ஜீசஸ் படத்தை வெளியிடும் காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியாக வேண்டாம் என்றே நான…See More
January 31 at 9:17pm · Like · 6

Watesh kosuvarthi – நன்றி மோணி பயபிராகஷ்வேல்…எழுத்தின் நடை கருத்தாக்கங்களின் கடினத்தில் குடி புகுந்து விட்டது. இதற்கு மேல் எளிமையாக எகத்தாளமாக எழுத முடியாததற்கு வருந்துகிறேன்.
January 31 at 9:20pm · Like

ரோம்ஜி யாஹூ – படம் பார்க்க படவேண்டும் . விரும்புகிறவர்களால் பார்க்கப் பட்டு விவாதிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்தும்.

ஆனால் அமெரிக்கர்களுக்கு/ கிறித்துவர்களுக்கு , அண்டார்டிகா முசுலீம்களுக்கு கவர்ச்சி மீது உள்ள வெறுப்பை ஒரு இடத்தில்/ஒரு வசனத்தில் கூட காட்டாமல் இருப்பது ஏன் .
January 31 at 9:56pm · Like

சுமாலன் சுர் உசைன் – தமிழ் சினிமாவின் இயங்கு திசையில் இக்குறிப்புகள் இல்லையில்லை மகத்தான ஆய்வுக் குறிப்புகள் ஒரு முன்கூட்டியே அறுதியிடப்படாத சாத்தியப்பாடுகளின் எல்லையில்லா திண்டாட்டத்தை கொண்டாட்டமாக முன்வைக்கும் பேருவுப்பை அடைகிறேன். வாழ்த்துக்கள் கொசுவர்த்தி தொடர்ந்து அளியுங்கள்!
January 31 at 9:75pm · Like

வருந்தேவி – கொசு இந்தப் படத்திற்கு முதலில் உரையாடல் எழுதுவதாக இருந்த சுயமோகனின்  கருத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே தாத்பரியமாகவும், உசிதமின்றியும் புறந்தள்ளியும் கூட எனக்கு அதில் பெருத்த ஆர்வம் கொண்டிருப்பதை உங்கள் கருத்துக்களை கைவிடாமலே முன் வைக்கிறேன்…….
January 31 at 10:56pm · Like

Showing 10/111 comments
____________________________________________________

  1. இல்லை. பாகம்-1ல், பல பாராக்கள் புரிந்துவிடுகிறது. ஆதலால் இம்மாதிரியான பகடிகளை எழுதுவதற்கு முன் பல சிற்றிதழ்களை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு ஒரு பயலுக்கும் புரியாதமாதிரி எழுதுவது எப்படி என்பதை ஓரிருமுறை எழுதிப் பார்த்துக்கொண்டு பிறகு பதிவிடவும்.

  2. அமுதவன், இதுல புரியாததுங்கிறது ஒரு அம்சம்தான், ஆனா ஒண்ணுமில்லாத விசயத்தை கூட பயங்கரமா ஆய்வு செஞ்சு அதி பயங்கரமான முடிவுக்கு வருவாங்கங்கிறதும்தான் முக்கியம்.இதுல சொல்லியிருக்கிற ஆய்வாளர், விசுவரூபம், ஓநாய் ஆட்டுக்குட்டி ரெண்டு படத்தையும் ஆய்வு செஞ்சதை படிச்சா இத வுழுந்து வுழுந்து சிரிக்கலாம்.

    • //இதுல சொல்லியிருக்கிற ஆய்வாளர், //
      யாருங்க அந்த அதி’பயங்கர’ ஆய்வாளர்?

      இந்த பதிவே எனக்கு அரையும் குறையுமாத்தான் புரியுது. அவர் ஆய்வு செஞ்சதை படிச்சா ?

      நனவை மீட்டிப்பார்க்க ஒரு hint அல்லது link குடுத்து உதவக்கூடாதா?

  3. அய்யா,
    அடியேன் இந்துஞான மரபின் எல்லையில்லா உள்ளொளியைத் தேடி கூவாங்கரை நெடுக இலக்கில்லா நடையாத்திரை மேற்கொண்டுள்ளதால் தங்களின் இரண்டாவது கீதையான !@#$%^&*(+><$% படைப்பை உடனே தரிசிக்கும் வரம் கிடைக்கவில்லை! அந்த வலியுடன் இந்தக்கடிதம். கடிதம் எழுத காகிதம் கிடைக்காத காரணத்தால், என் மனவெழுச்சியைப் பிசாகமல் பிரதிபலிக்கும் இந்தக்கடித்தை காப்பி எடுத்து உங்கள் அறிவொளியின் காலடியில் வைக்கிறேன். பெயர் மாறினால் என்ன? அகம் தேடித்தானே நம்மைப்போன்ற அறிவாளிகள் பயணம்!

    மதிப்புக்குரிய ஜெயமோகன்,

    நான் ஒரு சாமானிய சென்னைத்தமிழன். இப்பொழுது பெங்களூரில் அலுவலக மேஜைமேல் வேலை. தமிழை முறையாக கற்றுக்கொண்டது, ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை. இந்த வருட ஜனவரியிலிருந்துதான் தமிழிலக்கிய வாசிப்பு திசையும் வேகமும் பெற்றது. எந்த மொழியிலும் இலக்கிய வாசிப்பு துவங்கியது நாலைந்து வருடங்களுக்கு முன்பே. தமிழில் இதுவரை அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், கா.நா.சு முதலியோரின் படைப்புகளை படித்திருக்கிறேன், ஆனால் உங்களின் மொழிநடையும் கதைக்களங்களும்தான் என்னை இதுவரையில் அதிகமும் கவர்ந்திருக்கிறது (பாராட்டாக சொல்லவில்லை, என் ரசனையைப் பற்றிய உண்மை, அவ்வளவுதான்). உங்களின் படைப்புகளில் ஏழாம் உலகம், அறம், ரப்பர் மற்றும் சில சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.

    சென்றவருட சென்னை புத்தகக்கண்காட்சியில் விஷ்ணுபுரத்தின் கண்ணைப்பறிக்கும் பிரதியைக்கண்டு வாங்கிவிட்டேன், ஆனால் படிக்கத்துவங்க அச்சமாகவேயிருந்தது. தலையணை வடிவத்தைக்கண்டு வந்த அச்சமல்ல. பரந்தவெளியைக்காண மனமோ கண்களோ இன்னும் விரியவில்லை என்று தோன்றியது. விஷ்ணுபுரம் வலைத்தளத்தில் உங்களின் அறிமுகம் படித்தேன். அதில், ”அந்நாவலின் உத்தேசவாசகன் ஆன்மீகமான அடிப்படை வினாக்களைத் தானும் கொண்டவன் என்றே நான் நினைத்திருக்கிறேன். இந்திய ஞானமரபின் படிமங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்து கற்று வருபவனாகவே அவன் இருக்கவேண்டும். இந்த இரு இயல்புகளும் இல்லாமல் விஷ்ணுபுரத்தை ஒரு கதையாகவோ கருத்துக்கட்டமைப்பாகவோ வாசிப்பவர்களை நான் அதற்கான வாசகர்களாக நினைத்ததில்லை.” என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

    முதல் இயல்பு என்னில் உள்ளதுதான் என்று நம்புகிறேன். இரண்டாவது இயல்பு இல்லையோ என்ற சந்தேகம் மிச்சமுள்ளது. இந்திய ஞானமரபைப் பற்றி எந்த அளவுக்கு நான் அறிந்திருக்கவேண்டும்? குறிப்பாக எந்த நூல்களை நான் படித்திருக்கவேண்டும்? நான் எந்த வேதாந்த நூல்களையும் இதுவரையில் படித்தது கிடையாது. கீதையைப் படிக்கவேண்டும் என்ற உத்தேசம் இன்னும் செயலாகவில்லை. உங்களிடமே விஷ்ணுபுரத்தை சென்றடையும் வழியை கேட்டுவிடலாமென்று நினைத்தேன். வழிகாட்டுங்கள்.

    – விஜய் கௌசிக்

    அன்புள்ள விஜய்,

    நான் விஷ்ணுபுரம் வாசிப்பதற்கான முன் தகுதிகள் என்று சொன்னவை ஒருவர் அதை வாசிப்பதற்கு முன்னரே அடைந்திருக்கவேண்டிய வாசிப்புத் தகுதிகள் என்ற பொருளில் அல்ல. அந்நூலைப் புரிந்துகொள்ளத்தேவையான அனைத்தும் அதிலேயே உள்ளன. அவற்றை அதிலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய கவனம் வாசகரிடமிருக்கவேண்டுமென்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். அதன் தத்துவவிவாதங்களைப் பயில வேறு நூல்களை நாடவேண்டியதில்லை. ஆர்வமிருந்தால் அதிலேயே பயிலலாம். அதற்கான முயற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும். தேவை என்றால் வெளியே வாசிக்கவும் வேண்டும்

    ஒருநாவல் எல்லாக் கோணத்திலும் வாசிக்கப்படலாம். வெவ்வேறு வகையில் ரசிக்கப்படலாம். நான் சொல்வது அதன் மிகச்சிறந்த வாசகர் என நான் நினைப்பவர் எவர் என்றுதான்

    ஜெ

  4. பொதுவாக உங்கள் பகடிகள் புரிந்து விடும். இது புரியவில்லையே ஐயா!

    யாரிந்த “கொசுவர்த்தி”? அக்காகி அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் அடியேனுக்கும். “யூத் கண்ணா” போல நேரடியாக பெயர் வைக்க கூடாதோ?

    வெற்றிவேல் அவர்கள் கொடுத்த hint ஐ பயன்படுத்தி யார் எல்லாம் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்திற்கு விமர்சனம் எழுதினார்கள் என கூகுளில் தேடிப் பார்க்கலாம் என திட்டம்!

  5. கொசுவத்தியை எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் கொசுவத்தி அதுவல்ல என்றே நினைக்கிறேன். ஆக, அச்சு அசலாக எனக்குத் தெரிந்த அதே கொசுவத்தியை உங்களுக்கும் தெரிந்திருக்கிறது அப்படியென்றால், உலகில் கொசுக்களின் நடமாட்டத்திற்கு இணையாக கொசுவத்திகளும் பெருகிவிட்டது என்றுதான் அர்த்தம். பொதுவாக கொசுவத்திகள் எல்லாம் வேறுலகில் இயங்குபவை. இந்த உலகத்தில் அவைகளுக்குத் தெரியாதவை எதுவுமில்லை எனும் பேரொளிப்பெரு வெள்ளத்தில் மிதப்பவை. ஆனால் இவைகள் மீது ஒரு கெட்ட நாத்தம் வீசும். வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் நாத்தம் எப்படியோ தெரியவில்லை. ஆனாலும் சமீப காலமாக மணக்கும் கொசுவர்த்திகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அது ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸில் விற்கப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். வேஸ்ட்டேஷ்ஷும் அப்படியானதுதானா . . . . . . . . . . . பார்ப்போம்!

  6. முகநூலில் கொசுவர்த்தி விஸ்வரூபம் படத்திற்கு முதல் விமரிசனம் என்ற பெயரில் அடித்து விட்டிருக்கும் கட்டுரையை படித்து இன்புறுங்கள். இதை படித்தால் வினவுவின் கட்டுரையை வியுந்து வியுந்து சிரிக்கலாம், அடியேன் கேரண்டி!

    விஸ்வரூபம் (2013): ஒரு முதல் விமர்சனம் – (வேஸ்ட்டேஸ் கொசுவர்த்தி)

    January 31, 2013 at 6:22pm

    ஆண்மையற்றது போல் தோன்றும் நாயகனின் தகுதியை அவனுடய மனைவி தன் செயல்களால் கேள்விக்குட்படுத்துவதால்; அவன் ஆண்மை வீரிற்று எழுந்து விஸ்வரூபம் எடுப்பதுதான் கதையின் மையக்கரு. அதே சமயம், அவனுடய ஆண்மை வெளிப்படும் களத்தை; (காஷ்மீர்), பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா போன்ற இடங்களில் பரவியுள்ள ஜிஹாதி தீவிரவாதிகள் செயல்படும் வெளியாக திரைக்கதை முன்னிறுத்துகிறது. ஒரு புறம் இன்று உயர்ந்த வேலைக்களுக்கு செல்லும் நடுத்தரவர்க பெண்களின் வேட்கையினால் தனிக்குடும்பதிற்கு ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்துவது இந்த படத்தின் முதல் சித்தாந்த இலக்கு என்றால்; மறுபுறம் தேசம் என்று கருதப்படுவதற்கு தீவிரவாதத்தினால் ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்துவதே அதனுடய இரண்டாவது சித்தாந்த இலக்கு. இந்த இரண்டு இலக்குகளுக்குள் திரைகதை உருவாக்கும் அகண்ட உலகத்தின் பொருள் சுருக்கப்படுகிறது. இதனால், ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யரில்’ (2002) இருக்கும் பெண்ணின் வேட்கையை வெளிப்படுத்தும் பெண்ணின் கோணத்திற்கு இந்த கதையுலகில் இடமில்லை. அதாவது, விஸ்வரூபத்தில் நாயகனை, தன் அறியாமையினால் ஆண்மையற்றவனாக கருதுவதால் நாயகி வேறொருவனுடன் தொடர்புகொள்கிறாளே தவிர மேற்கூறிய படத்தில் வருவதுபோல் தன் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு பெண்ணாக அல்ல. மற்றும் அந்த படத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞனாக வரும் கதாநாயகன் ராகுல் போஸ் என்ற நடிகர்; இந்த படத்ததில் உஸாமா பின் லாடனுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் தாலிபானை முன்னடத்தி செல்லும் தலைவன், உமராக தோன்றுகிறார். இதனால், அமேரிக்க அரசின் கொடூரங்களை இஸ்லாமியர்களின் கோணத்திலிருந்து கடுமையாக விமர்ச்சிக்கும் ஜார்ஜ் க்ளூனி என்ற ஹாலிவுட் நடிகர் தயாரித்த சீரியான (2005) என்ற படத்தில் வரும் தருணங்களுக்கும் இந்த படத்தில் இடமில்லை. ஆகையால், ரோஜாவில் (1992) வைக்கப்பட்ட அதே மாதிரியான இரண்டு சிந்தாந்த இலக்குகளை மையமாக வைத்து இயங்கும் மற்ற பல படங்களில் இது ஒன்றாக இருக்க; இதில் மதவெறியும் தேசியமும் எவ்வாறு வெளிப்படுகிறது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

    ஆண்மையற்றவானாக தோன்றும் நாயகனும் அவனுடய மனைவியும்; உமரின் கட்டளைப்படி கடத்தி செல்லப்பட, அந்த சிறிய கும்பலின் தலைவன் அவனை அவனது ஆண் குறியின் மீது வீட்டில் ஒரு முறையும், கடத்தி சென்ற இடத்தில் இரு முறையும் பயங்கரமாக அடிப்பதோடு நிறுத்தாமல் அவனை புடைத்து எடுத்துவிடுகிறான். இதில் கதாநாயகனின் அடையாளம் அதே சமயத்தில் வசிம் காஷ்மீரி என்ற இஸ்லாமிய அடையாளமாக இருப்பதால், அந்த ஆளிடம் தான் அல்லாவை தொழுவதற்கு தனது கைகளை அவிழ்த்துவிட சொல்ல; அப்படி தனது கைகள் விடுப்பட்டதும், தன் தொழுகையை விரிவாக முடித்தவண்ணம் நாயகன் வீரி எழ; நாயகியின் கண் முன்; அவனுடய விஸ்வரூப வீரியம் பீரீட்டு வெளிப்பட்டு அங்கிருப்பவர்களை கொன்று கூவிக்கும் காட்சி; முதலில் அதன் செயல்களின் இயல்பான வேகத்தில் காண்பிக்கப்பட்டு, பிறகு ஸ்லோ மோஷனில் இரண்டாம் முறை காண்பிக்கப்படுகிறது. அந்த தருணத்தில் தியேட்டரிலிருந்த பல இளைஞர்கள் வெறித்தனமாக கூக்குரலுடன் அந்த காட்சியை கண்டு மகிழ்ந்தனர். காரணம் முதலில் நாயகனை ஒரு குறையுள்ள இந்து பிராமண நடனகர்த்தாவாகாத்தான் படம் அவனை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ரோஜா ஐதாராபாதில் திரையிடப்பட்ட சமயத்தில் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தியேட்டருக்கு வெளியே பாகிஸ்தான் கொடியை எரித்து, இந்திய தேசியை கொடியை ஏற்றியது ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம். அந்த அளவிற்கு இந்த காட்சி அவர்களை தள்ளவில்லை என்றாலும்; அவர்கள் தீடிரேன்று அவ்வாறு வெறித்தனமாக கத்தியது என் அடிவயிற்றை கலக்கியது. கதாநாயகன், இந்திய அரசின் ஒற்றனாக வந்து அமேரிக்காவின் கண்காணிப்பையும் மீறி அந்த நாட்டை அனுகுண்டு பயங்கரத்திலிருந்து காப்பாற்றுவது; தேசத்திற்கு எதிரானது அகண்ட உலகத்தில் எங்கிருந்தாலும் அதை வேட்டையாடி ஒடுக்கமுடியும் என்ற பாணியில் நிறைவடைகிறது. இறுதியில், உமர் தனது இலக்குகளில் தோல்வியடைந்தாலும் அவன் தப்பித்துவிட்டதால்; அவனை வேட்டையாடி பிடிப்பதே விஸ்வரூபத்தின் இரண்டாவது பாகம் என்ற தொனியில் அந்த படம் முடிகிறது.

    அடுத்ததாக தொக்கி நிற்கும் கேள்வி; இது ஒரு மாபெரும் கலைப்படைப்பா என்பதே. கலை சினிமாவை பொருத்துவரையில் எனக்கு ஒரு ஆழ்ந்த புரிதலை முதன்மையாக கொடுத்தது ஆந்திரே தார்க்காஸ்வியின் படைப்புகளும் எழுத்துகளும் என்பதே சரி. அவரை பொறுத்தவரை கலை என்பது மானுடத்தை வழிநடத்தி செல்லும் உயர்ந்த ஆன்மீக இலக்குகளை உள்ளடக்கிய ஒன்று. இந்த அடிப்படையில் தான் அவரை பொறுத்தவரை தனிமனித திறனை மற்றும் வெளிப்படுத்தும் படைப்புகள்; மாடர்ன் ஆர்ட் உள்பட நாம் கலை படம் என்று பொதுவாக கருதும் பல படங்களும் கலையற்றவை. விஸ்வரூபம் இயக்குனரின் தனிமனித தொழில்நுட்ப படைப்பு திறனை; இந்த படம் ஹாலிவுட்டிற்கு சளைத்தல்ல என்ற பாணியில் பல இடங்களில் வெளிப்படுத்தினாலும்; மேற்கூறிய அந்த இரண்டு சிந்தாந்த இலக்குகளை தவிர எந்த வித உன்னத ஆன்மீக இலக்குகளும் இல்லாத மற்றொரு படமாகவே அமைகிறது அல்லது இருக்கிறது.

    இறுதியாக இந்த படம் மேற்கூறிய வெறித்தனமான காட்சியமைப்பிற்காக தடை செய்யப்படவேண்டுமா என்ற கேள்வி இருக்கிறது. அதை தடை செய்வதால் எந்த பயனுமில்லை. மாறாக, அது தமிழ்நாட்டிலும் உடனடியாக வெளிவந்து பரவலாக விமர்ச்சிக்கப்படும் பொழுது தான் உன்னதனமான படைப்புகள் நம்மிடையே தோன்ற வழிப்பிறக்கும்.

  7. ஓநாய் ஆட்டுக்குட்டிக்காக கொசுவர்த்தி தீட்டிய காவியக் குறிப்பு. இது படிச்சும் புரியலேனா பாகம் 2யும் காப்பிடுறேன், என்சாய் மக்கள்ஸ்!
    _____________________________________________________

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – மீண்டும் ஒரு வாசிப்பு (வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி) – பாகம் 1
    November 11, 2013 at 10:58pm

    இந்த படத்தை பற்றி பல வாசிப்புகள் வந்த பிறகு மீண்டும் இன்னொரு விமர்சனமான என்று வாசகர்கள் அலுத்துக்கொள்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. இருந்தாலும் என்னுடய கருத்துகளை பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. விருப்பம் இருந்தால் படியுங்கள்.

    முதற்கண் சில கேள்விகள். ஆனால் அந்த கேள்விகளை எழுப்பும் முன் எனக்கு நானே வகுத்துக்கொள்ளும் சில முக்கியமான விமர்சன எல்லைகள். 1. இந்த படத்தை ஒரு முழுமையான ரியலிஸ்டிக் அல்லது யாதார்த்த வடிவமாக வாசிப்பதை தவிர்ப்பது. 2. இந்த படத்தில் எது அபத்தம் எது அபத்தமில்லை என்று சொல்வதை தவிர்ப்பது. 3. இதுவரை இந்த படத்தைப்பற்றி சிறு குறிப்பிகளாகவோ அல்லது கட்டுரைகளாகவோ எழுதியவர்களை படத்தின் அல்லது மிஷ்கினின் அபிமானிகளாகவோ அல்லது துவேஷிகளாகவோ கூறு பிரிப்பதை தவிர்ப்பது. 4. குறிப்பாக என் கருத்துகளின் அடிப்படையில் படைப்பாளியை அடி அடி என்று அடித்து துவைத்து எடுப்பதை தவிர்ப்பது.

    கேள்விகள்:

    1. நமது சினிமாவின் ஆதிக்க மரபை மீறும் நுட்பங்கள் இந்த திரைப்படத்தில் உள்ளதா? அல்லது அந்த மரபை தன் போக்கிற்கு ஏற்றவாரு வளைக்கும் முயற்சியாவது தென்படுகிறதா?

    2. படத்தை ரசித்தவர்கள் அதில் எதை ரசித்தார்கள்? ஏன் அவற்றை ரசித்தார்கள்? எதை ரசிக்கவில்லை? ஏன் அவற்றை ரசிக்கவில்லை?எதை பாராட்டினார்கள்? ஏன் பாராட்டினார்கள்? எதை பாராட்டவில்லை? ஏன் பாராட்டவில்லை?

    3. இதுவரை தன் படங்களை விநியோகம் செய்வதில் பெரும் பிரச்சனைகளை சந்திக்காத மிஷ்கின் ஏன் இந்தப் படத்திற்கு அவரே போஸ்டர் ஒட்டும் நிலமை ஏற்பட்டது?

    4. பேஸ்புக்கில் இந்த படம் பரவலான ஒரு வரவேற்பை பெற்றாலும் ஏன் ஷிப் அஃப் தீஸியசின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்த இந்த வலைதளம் ஓ.ஆவிற்கு அந்தமாதிரியான ஒரு வெற்றியை பெற்று தரவில்லை?

    முதல் கேள்வியை எடுத்துக்கொண்டால் தமிழ் சினிமாவின் ஆதிக்க மரபை மெலோடிராமடிக் வடிவம்/முறை சார்ந்த கதையமைப்பு என்று கருத்தாக்கம் செய்யலாம். ஆனால் மெலோடிராமா என்றால் என்ன? அகராதிகளையோ அல்லது என்ஸைக்லோபிடீயாக்களையோ புரட்டிப்பார்த்தால் மெலடி+டிராமா = மெலொடிராமா என்ற விளக்கம் இருக்கும். ஆனால் அந்த மாதிரியான நாடங்களில் இசை ஒரு முக்கிய பங்கை வகித்தாலும், அந்த சொற்தொடரை நாம் இசை நாடகம் என்று தமிழில் மொழிப்பெயர்க்கமுடியாது. காரணம் நமது இசை நாடங்கள் பொதுவாக புராணக்கதைகளை மையமாக கொண்டு இயங்குபவை. மாறாக மெலோடிராமா என்பது தன்னை இடைவிடாமல் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நவீன வடிவம். இதற்கும் அரசியல் நவீனத்துவத்திற்கும் ஒரு நீண்ட தொடர்புண்டு. ஏனென்றால் ப்ரெஞ்சு புரட்சி என்று ஒன்று நிகழ்ந்ததாலும், அதை ஒட்டி உருவான நவீன அரசியல் அமைப்பினாலும், துன்பியல் என்ற வடிவம் மரணமடைகிறது. ராஜா ராணிகள், படை தளபதிகள்/வீரர்கள், பிரபுக்கள் போன்றவர்களை முக்கிய கதைமாந்தர்களாக வைத்து இயங்கிய இந்த வடிவத்திற்கு அந்த நடுத்தரவர்க புரட்சிக்கு பின் வேலையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தையும், கீழ் நடுத்தரவர்க்கத்தையும் முன்னிலைப்படுத்தும் மெலோடிராமா உருவானது. இதில் முக்கிய கதை மாந்தர்களாக தோன்றுபவர்கள் அந்த வர்க விழுமியங்களை வெளிப்படுத்தும் ஒரு குடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் சூழ்ச்சியினால் துவக்கத்தில் சிதறிய குடும்பம் இறுதியில் ஒன்று சேர்வது; அல்லது அப்படி பிரிந்த தந்தையும் மகனும் ஒன்று சேர்வது; அல்லது அப்படி பிரிந்த இரட்டை சகோதரர்கள் அல்லது இரட்டை சகோதரிகள் இறுதியில் ஒன்று சேர்வது போன்ற சமூக நாடகங்களும் கதைகளும் அந்த காலத்தில்தான் முதலில் தோன்றின.

    இருந்தாலும் இந்த வடிவத்தை பற்றி 1976ல் வெளியான ‘மெலொடிராமடிக் இமாஜினேஷன் – பஸ்ஜாக், ஹென்றி ஜேம்ஸ், மெலொடிராமா அண்ட் தி மோட் அஃப் எக்ஸஸ்’ (மெலொடிராடிக் புனைவு – பல்ஜாக், ஹென்றி ஜேம்ஸ், மெலோடிராமவும் அதன் மிகைப்படுத்தும் முறையும்) என்ற மிகவும் முக்கியாமான தனது நூலில் பேசும் போது எவ்வாறு இது 19-ம் நூற்றாண்டில் உருவான ரியலிஸ்டிக் அல்லது யதார்த்த இலக்கியத்தையும் பாதித்தது என்று தெளிவாக பீட்டர் ப்ரூக்ஸ் விளக்குகிறார். ஆகையால், ரியலிசம் அல்லது யாதார்த்தலியத்தை மெலோடிராம்விற்கு எதிராக நிறுத்துவது தவறு. குறிப்பாக மெலொடிராமாவை ஒரு மிகைப்படுத்தும் முறையாக நாம் கருதினால் அது எதை மிகைப்படுத்துகிறது என்ற கேள்வி எழுகிறது. நவீனம் என்பது துன்பியலை மட்டுமல்ல எல்லா புனிதங்களையும் கொன்றுவிடுகிறது. இதனால் துன்பியலுக்கு பிறகு உதித்த வடிவம் என்றாலும் மெலோடிராமா அந்த முந்தைய வடிவத்தின் உணர்ச்ச்சித்தளங்களை தொட முயல்கிறது. இதற்கு அன்றாட நவீன வாழ்க்கையில் இருக்கும் சரடுகளை தேர்வுச் செய்து அவற்றை நன்மைக்கும் (ஹீரோ) தீமைக்கும் (வில்லன்) ஏற்படும் ஒரு மாபெரும் போராட்டாமாக உருவமைத்து எது கருப்பு எது வெள்ளை என்று எடுத்துக்காட்டுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட நியாயத்தை போற்றுகிறது அந்நியாத்தை தண்டிக்கிறது. சில ரியலிஸ்டிக் படைப்புகள் இப்படி தனது அன்றாட உலகை கருப்பு வெள்ளை என்று பிரிக்காவிட்டாலும், மெலோடிராமாவின் மிகைப்படுத்தும் முறையை கையாளுவது உண்டு. உதாரணத்திற்கு இந்த மிகைப்படுத்தும் முறையில் பேசமுடியாத, கேட்கமுடியாத, பார்க்க முடியாத அல்லது எதாவது ஒரு வகையில் முக்கிய உருப்புகள் ஒன்றின் சக்தியை இழந்த கதாமாந்தர்கள் சகஜம் என்றால், பேசாத விலங்கொன்றுக்கு ஒரு மானுடதன்மையை வழங்கி அதை முக்கிய கதைமாந்தர்களுடன் பிணைப்பதும் அதன் நுட்பங்களில் முக்கியமான ஒன்று. விட்டோரியோ டி சிகாவின் ‘உம்பர்டோ டியில்’ (1952) வரும் அந்த முதிர்வடைந்த கதாநாயகனின் நாய் இந்த பாணியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது அது ஒரு இத்தாலிய நீயோரியலிச படைப்பு என்றாலும். ஆகையால் மெலொடிராமாவிற்கு எதிரான வடிவமாக ரியலிசத்தை கருதமுடியாது. அதற்கு ஒரு எதிரான வடிவம் இருக்கிறது என்றால் அது எல்லாவிதமான மிகைகளையும் வெட்டித்தள்ளும் ராபர்ட் பிரஸானின் மினிமலிசம் அல்லது எளிமையியத்தில்தான் இருக்கிறது.

    மற்றும் சினிமாவை பொறுத்தவரை மெலோடிராமா என்பது சில சமயங்களில் ஒரு வகைமையாகவும் சில சமயங்களில் ஒரு கதையமைப்பு முறையாகவும் இயங்குகிறது. உதாரணத்திற்கு ‘கிரேமர் வர்ஸஸ் கிரேமர்’ (1979) என்ற ஹாலிவுட் படம் ஒரு குடும்ப மெலொடிராமா வகைமையை சார்ந்தது. ‘தி காட் பாஃதர்’ (1972) காங்க்ஸ்டர் வகைமையை சார்ந்திருந்தாலும் மெலொடிராமடிக் முறையை கையாளுகிறது. அதில் தோன்றும் கதைமாந்தர்கள் மிகைப்படுத்தப்பட்டவர்கள். குறிப்பாக டான் கார்லியான். அவரைப் போல ஒருவர் நிஜ அமேரிக்காவில் இருந்தது கிடையாது.

    இருந்தாலும், மெலோடிராமடிக் முறையை கையாளும் எல்லா படங்களும் கட்டாயமாக ஒதுக்கி தள்ளப்பட வேண்டியவை என்று கூறமுடியாது. அதாவது அந்த முறையை தன் போக்கிற்கு வளைத்து இழுத்து செல்லும் படைப்புகளும் உண்டு. முதல் உதாரணமாக ‘தி காட் பாஃதர்’ என்ற படத்தை எடுத்துக்கொள்ளலாம். அது தனது அன்றாட உலகத்தை கருப்பு வெள்ளை என்று பிரித்தாலும், இறுதியில் கதாநாயகன் மைகல் தன் தங்கையின் கணவன் உட்பட தன் இனத்தை சார்ந்த மற்ற காங்க்ஸ்டர்களை கொன்று குவித்து அரியனையில் அமரும் போது இவனா அடுத்த காட்பாஃதர் என்ற கேள்வியுடன் அந்த கருப்பு வெள்ளை உலகத்தை அந்த படம் புரட்டிப்போட்டுவிடுகிறது. ‘மை ப்யூடிப்புஃல் லாண்டரட்’ (1985) என்ற படத்தின் கதாநாயகன் ஒரு புலம்பெயர்ந்த பாகிஸ்தானி இளைஞன். அவன் நீயோநாக்ஸி தன்மைகளுடய ஒரு வெள்ளைக்கார தோழனுடன் பாலியல் உறவுகொண்டிருப்பதால் தாட்சரிஸத்தில் உருவான நிலமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த வெள்ளைக்கார தோழனை தனது அதிகாரத்திற்கு படியவைப்பதில் அந்த படத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளை உலகம் புரட்டிப்போடப்படுகிறது.

    ரித்விக் கதக்கின் ‘சுபர்ணரேகா’ (1965) என்ற படமும் மெலோடிராமவின் ஒரு கருப்பு வெள்ளை உலகத்தை முதலில் உருவாக்குகிறது. அதாவது கதாநாயகன் அவனுடய தங்கையையும் தான் அடைக்கலம் தந்த அந்த அனாதை பையனையும் வளர்த்திருந்தாலும் சாதியின் அடிப்படையில் அவர்களுடய காதலுக்கு எதிராக நிற்கின்றான். அதனால் அவர்கள் கல்கத்தாவிற்கு ஓடிப்பொய் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். ஆனால் விபத்தில் தன் கணவனை இழந்த தங்கையை விலைமாந்தர்கள் இருக்கும் இடத்தில் தற்செயலாக கதாநாயகன் எதிர்கொள்ளும் போது அவள் தற்கொலை செய்துக்கொள்கிறாள். இதனால் அந்த இருவரை எவ்வாறு அவன் வேலை செய்யும் இடத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன் கூட்டிக்கொண்டு வந்தானோ அதே போல் தனது தள்ளாத வயதில் ஒரு பாவச்சுமையாக அவன் அந்த சிறுவனை அழைத்துவரும் காட்சி அந்த கருப்பு வெள்ளை உலகத்தை உடைத்துவிடுகிறது.

    மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ (1979) ஒரு இறுக்கமான கருப்பு வெள்ளை உலகத்தை கட்டமைக்கிறது. ஆனால் அதனுடய இறுதி காட்சியில் கதாநாயகன் ‘நான் செய்ததிலையே மிகவும் மோசமான விஷயம் உங்களையும் என்னைபோல் மாற்றியது’ என்றும் தனது குழந்தைகளிடம் ‘அப்பா குளிக்கப்போறேன்…நீங்க போங்க’ என்று சொல்வதும் அந்த உலகத்தை புரட்டிப்போட்டுவிடுகிறது. அதனால் தான் இன்றும் நாம் அந்த படத்தை பற்றி பேசுகிறோம்.

    அதாவது, மெலோடிராமா என்ற வடிவம் எப்பொழுதும் அதிகாரத்திற்கு எதிராக உருவாகும் போராட்டத்தை மையமாக வைத்து இயங்கும் ஒரு வடிவம். ஆனால், எதை எதிர்கிறதோ அதை வேறுவிதமாக தனது கருப்பு வெள்ளை பிரிவில் நியாயப்படுத்திவிடும். தி காட் பாஃதரை தழுவி உருவான படங்களில், நாயகனை (1987) எடுத்துக்கொண்டால் அதன் முதல் பாகத்தில் இருக்கும் வீச்சு அது தனது இரண்டாவது பாகத்தில் முதன்மைப்படுத்தும் நடுத்தரவர்க விழுமியங்களால் மழுங்கடிக்கப்பட்டாலும் கதாநாயகனின் மரணம் அதனுடய கருப்பு வெள்ளை உலகை ஓரளவுக்காவது அசைக்கிறது. ஆனால் ‘தேவர் மகன்’ (1992) கருப்பு எது வெள்ளை எது என்பதை தனது போதனையில் பிரித்துப்போட்டுவிடுகிறது. ராம் கோபாலின் சர்கார் (2005) அதைவிட மோசம்.

    —————————
    இதுக்கும் மேலே 2வது பாகம் வேணுமா?

  8. யார் சார் இந்த கொசுவத்தி? கூகுள் உதவியோடு எவ்வளவு “ஆராய்ந்தும்” கண்டறிய முடியவில்லை. தோழர்களே! ஒரு ஹிண்ட்டு கொடுக்க கூடாதா?

    • பேரைச் சொல்றதுல பிரச்சினை இல்லை, சொன்னா வினவுல வெளியிடுவாங்களான்னு ஒரு சந்தேகம், அத்னாலா நீங்க கேட்ட மாரி ஹிண்ட்ஸ்

      உங்கள் பெயர் முதலிலும் ஆனா அன் விகுதி இல்லாமல் ஷ் விகுதியோடும், பின்னாடி அரசர்களின் பேரரசன் பொருள் கொண்ட பேரும் அதாவது வர்த்தி என்று முடியும்.

      இதுக்கு மேலேயும் சொன்னா த்ரில் லேது!

    • எனது மறுமொழி 9 ஐ எச்சில் தொட்டு அழித்து விடுங்கள்! வெற்றிவேல் எடுத்துப் போட்ட கட்டுரைகளை படிக்கும் முன் எழுதி விட்டேன்.

      யாரப்பா இந்த வெங்கடேஷ் சக்ரவர்த்தி? எப்போதாவது சிறு பத்திரிகைகள் படிப்பதுண்டு என்ற வகையில் பெரிய தலைகளை அறிவேன். இவரைத் தெரியாது! வெற்றிவேல் எடுத்துப் போட்ட கட்டுரைகள் கதிகலக்குகின்றன. ஆளை உடுங்க சாமி!

      விசித்திரமான உலகம் இது! யாரிவர் என தெரிந்து கொள்ள எனது நண்பரிடம் வினவு கட்டுரையை காட்டி கருத்து கேட்டேன். தெரியவில்லை என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டு இருக்கலாம். “அசப்புல பாத்தா, வெங்கடேசன் சக்கரவர்த்தி என்ற உன்னோட பேர் மாதிரி இருக்கு” என பீதி கிளப்பி விட்டார். வினவு தளத்தில் உளறிக் கொட்டினாலும், இந்த அளவு நான் செய்வதில்லை என நினைத்து அமைதி அடைந்து விட்டேன். கடைசில பாத்தா நெஜமாவே ஒரு “வெங்கடேஷ் சக்ரவர்த்தி”! What a coincidence!

      • ஓ அப்ப நீங்கதானா வெங்கடேஷ் சக்ரவர்த்தி, சொல்லவே இல்லை 😆

        • உலகில் ஒரே பெயரில் ஒன்பது பேர் இருப்பார்கள் என அக்காகி சித்தர் ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளாரே! நீங்கள் படித்ததில்லையா 🙂

    • நன்றி வெற்றிவேல்! ஹிண்டே தேவையில்லை!

      கூகுள் இருக்க பயமேன்! நீங்கள் எடுத்துப் போட்ட கட்டுரையின் முதல் வரியை “காபி பேஸ்ட்” செய்து கூகுளிடம் கேட்டதில் பெயரில் இருந்து தொடங்கி மொத்த புராணமும் அறிந்து கொள்ள முடிந்தது!

Leave a Reply to வெற்றிவேல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க