privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காSICKO - மைக்கேல் மூரின் ஆவணப்படம்

SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்

-

ந்தப் பூவுலகில் ‘சொர்க்கம்’ ஒன்று இருக்கிறது. உலகுக்கே ‘வழி’ காட்டும் பொருளாதார  அமைப்பு இருக்கிறது.

அந்த சொர்க்கத்தில்

  • மேலும் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாத நோயாளிகளும், வயதானவர்களும் கையில் சலைன் பாட்டிலோடு நடுத்தெருவில் இறக்கி விடப்படுகிறார்கள்.

    சிகிச்சைக்கு பேரம்
    வெட்டுப்பட்ட விரல்களுக்கு சிகிச்சை அளிக்க பேரம்.
  • வேலை இல்லாத, மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாத தொழிலாளி, விபத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு தன் கையாலேயே தையல் போட்டுக் கொள்கிறார்.
  • வெட்டும் எந்திரத்தில் இரண்டு விரல்கள் சேதமடைந்த தொழிலாளியிடம் “துண்டிக்கப்பட்ட நடு விரலை இணைப்பதற்கு $60,000 ஆகும், வெட்டுப்பட்ட மோதிர விரலை சரி செய்ய $12,000 ஆகும்” என்று மருத்துவமனை பேரம் பேசியதைத் தொடர்ந்து, அவர் மோதிர விரலை சரி செய்து கொள்ள நடு விரல், குப்பைத் தொட்டியில் எறியப்படுகிறது.
  • கடும் காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு போன போது, அந்த குழந்தைக்கு எடுக்கப்பட்டிருந்த மருத்துவக் காப்பீடு அந்த மருத்துவமனையில் பரிசோதனைகளுக்கும், மருந்துகளுக்கும் செல்லாது என்பதால் காப்பீடு செல்லுபடியாகும் வேறு மருத்துவமனைக்கு போகச் சொல்லி விரட்டுகிறார்கள். சில மணி நேர தாமதத்தில் அந்த குழந்தை அநியாயமாக உயிரிழக்கிறது.
  • புற்றுநோய் வந்து விட்ட ஒருவருக்கு தேவையான சிகிச்சையை, ‘நிரூபிக்கப்படாதது’ என்று சொல்லி காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட சில வாரங்களுக்குள் அவர் இறந்து விடுகிறார்.
  • வாழ்நாள் முழுவதும் நேர்மையாக உழைத்து 5 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தம்பதியினர் வயதான காலத்தில், இதய நோய், புற்று நோய் சிகிச்சைக்கு பணம் கொடுத்து, குடியிருந்த வீட்டை இழக்கின்றனர். இன்னொரு நகரில் இருக்கும் மகளின் வீட்டின் சாமான்கள் போடும் அறை ஒழிக்கப்பட்டு அங்கு குடியேறுகின்றனர்.
  • 79 வயதான முதியவர் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தரை துடைக்கும், கழிவறை கழுவும் வேலை பார்க்கிறார். அவருக்கும், மனைவிக்கும் மருந்துகள் வாங்க வேண்டுமானால் காப்பீடு வேண்டும். அதற்கு வேலை வேண்டும். அவரது மனைவிக்க்கான வலி நிவாரண மருந்தின் விலை $213 என்று சொல்லப்பட்டதும், வலியை பொறுத்துக் கொள்வதாக மருந்தை மறுத்து விடுகிறார் அவர்.
  • விபத்தில் காயமடைந்து ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் கட்டணம் முன் கூட்டியே ஒப்புதல் பெறவில்லை என்று காரணம் காட்டி நிராகரிக்கப்படுகிறது.

இதுதான் அமெரிக்கா, யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. அமெரிக்க மருத்துவத் துறையின் நிலையைப் பற்றி மைக்கேல் மூர் எடுத்த ஆவணப் படமான “சிக்கோ”வில் மேலே சொன்ன காட்சிகள் இடம் பெறுகின்றன.

தனிநபர் நலம், தனியார் உரிமை, லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு என்ற சந்தையின் மகத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அந்த நாட்டில், உலகத்திலேயே வலிமையான வல்லரசின் ஆட்சி நிலவும் அந்நாட்டில் மருத்துவக் காப்பீடு எடுக்க பணம் இல்லாத 5 கோடி மக்களுக்கு மருத்துவச் சேவைகள் மறுக்கப்படுகின்றன. மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவம் மறுக்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் 18,000 அமெரிக்கர்கள்  உயிரிழக்கிறார்கள்.

மருத்துவமனையில், அவசர சிகிச்சைகளைத் தவிர மற்றவற்றுக்கு பணம் தருவதாக காப்பீட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகுதான் சிகிச்சை ஆரம்பிக்கும். காப்பீடு இல்லை என்றால், பணத்தை கட்டி விட வேண்டும்.

அரசியல்வாதிகள்
மருத்துவத் துறை நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்படும் அரசியல்வாதிகள்.

‘நோயாளிகளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மருத்துவ சேவை கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும்’ என்ற விதிக்குள் செயல்படும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், முதியவர்கள், பலவீனமானவர்கள், போதிய உடல் எடை இல்லாதவர்கள், அதிக பருமன் ஆனவர்கள், என்று பலருக்கு பல காரணங்களை காட்டி காப்பீடு வழங்கவே மறுக்கின்றன.

மருத்துவக் காப்பீடு எடுத்துள்ள 25 கோடி மக்களுக்கு பல அவசிய மருத்துவ சேவைகளுக்கான ஒப்புதலை நிராகரிக்கின்றன. காப்பீடு செய்யப்பட்டு முறையாக தவணை கட்டுபவர்களுக்கு, நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கின்றன. ‘நோய், காப்பீடு எடுப்பதற்கு முன்னமே இருந்தது’, ‘குறிப்பிட்ட சிகிச்சை நிரூபிக்கப்படாத ஒன்று’ என்று பலவிதமான காரணங்களைக் காட்டி சிகிச்சைக்கு ஒப்புதல் மறுக்கின்றன; இதற்காக பல லட்சம் டாலர் சம்பளத்தில் சிறப்பு மருத்துவர்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றன; ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்பட்ட பணத்தை ஏதாவது காரணம் கண்டுபிடித்து திரும்பப் பெறுவதற்கும் சிறப்பு ஆய்வாளர்களை நியமித்திருக்கின்றன. ஒப்புதல் அளிக்கப்படும் ஒவ்வொரு மருத்துவ செலவையும் ஒரு “மருத்துவ இழப்பு” என்று அழைக்கின்றன அந்நிறுவனங்கள்.

‘சமூகரீதியாக மருத்துவ சேவை அளித்தால், நிர்வாக ஒழுங்கீனங்கள் அதிகமாகும், காத்திருப்போர் பட்டியல் நீளமாகும், மருத்துவர்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்காது, அது படிப்படியாக சோசலிசத்துக்கு கொண்டு செல்லும்’ என்று அவதூறு பிரச்சாரங்கள் செய்து, மக்களுக்கான மருத்துவ சேவையை தனியார் மருந்து கம்பெனிகள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் இவற்றின் கூட்டு கொள்ளைக்கான வக்கிர அமைப்பாக உருவாக்கி வைத்திருக்கின்றது அமெரிக்காவை ஆளும் கார்ப்பரேட் அரசு.

  • அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். கல்லூரி படிப்புக்காக பெரும் தொகை கடன் வாங்கும் அமெரிக்கர்கள், வேலையில் சேர்ந்த பிறகு முணுமுணுக்கக் கூட துணியாத வகையில், ‘வேலை இழந்தால் காப்பீடு இல்லை, மருத்துவ சேவை இல்லை’ என்று அவர்களது சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
  • நிறுவனம் மூலம் காப்பீடு பெற முடியாதவர்கள் (வேலை இழந்தவர்கள், வேலை இல்லாதவர்கள்), சொந்தமாக காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கான பிரீமியம் கட்ட முடியாத 5 கோடி பேர் காப்பீடு இல்லாமல், “மருத்துவ சிகிச்சைக்கான தேவை வந்து விடக் கூடாது” என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றனர்.
  • வயதானவர்களுக்கும், ஏழைகளுக்கும் மெடிக்ளெய்ம், மெடிகேர் போன்ற திட்டங்கள் மூலம் அரசு காப்பீடு வழங்குகிறது. மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலைகளை பல மடங்கு அதிகரித்து, செலவை காப்பீட்டு நிறுவனங்களிடம் வசூலிக்கின்றன. 10 ஆண்டுகளில் $800 பில்லியன் (சுமார் ரூ 5 லட்சம் கோடி) வரிப்பணம், தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சேரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 1990-களிலும், கடந்த 10 ஆண்டுகளிலும் இந்த அமைப்பை சீர்திருத்தும் முயற்சிகள் எதுவும் தனியார் மருந்து நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளின் கொழுத்த லாப வேட்டையில் கை வைக்கத் துணியவில்லை. ஏழைகளுக்கும், முதியோருக்கும் அரசு உதவியாக காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பது மட்டுமே விவாதமாக இருந்து வருகிறது.
  • பல கோடி டாலர் செலவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் லாபியிங் வேலை செய்கின்றன மருத்துவத் துறை நிறுவனங்கள். அமெரிக்க நாடாளுமன்ற உதவியாளர்கள் 14 பேர் மருத்துவத் துறையில் ஆலோசகர்களாக சேருகின்றனர். மருந்து நிறுவனங்களுக்கு லாபம் தேடிக் கொடுத்த பில் டவுசின் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டுக்கு $20 லட்சம் (சுமார் ரூ 12 கோடி) சம்பளத்தில் தனியார் மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பான PhRMAவில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

சக மனிதனுக்கு, சக குடிமகனுக்கு தேவைப்படும் போது உதவுதல் என்ற சமூக அடிப்படையையே ஒழித்துக் கட்டும் ‘அமெரிக்க கொடுங்கனவின்’ ஒரு வடிவமாக அமெரிக்க மருத்துவத் துறை செயல்படுகிறது.

கனடா
புற்றுநோய் சிகிச்சைக்கு கனடா நண்பரின் உதவி வேண்டும்.

அமெரிக்க எல்லை தாண்டி கனடாவிலும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் இங்கிலாந்திலும், பிரான்சிலும் செயல்படும் அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம் போன்ற மக்கள் நல திட்டங்கள் குறித்தும் மைக்கேல் மூர் ஆய்வு செய்கிறார்.

கனடாவுடனான எல்லைப் புற அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் ஏட்ரியன் கேம்பெல் என்ற 22 வயது பெண்ணுக்கு கர்ப்பப் பை வாயில் புற்றுநோய். 22 வயதில் கர்ப்பப்பை புற்று நோய் வரக் கூடாது என்று காப்பீடு நிறுவனம் சிகிச்சை மறுத்து விடுகிறது. தனது 3 வயது குழந்தையுடன் காரில் கனடாவுக்குள் சென்று, அவரது கனடிய நண்பரின் முகவரியை கொடுத்து சிகிச்சை பெறுகிறார் அவர்.

அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் விளையாடச் சென்ற போது காயமடைந்த லேரி காட்ஃபிரே என்ற கனடியர், அமெரிக்காவில் சிகிச்சை பெற $24,000டாலர் செலவாகும் என்று அறிந்து, கனடா திரும்பி விடுகிறார். கனடாவில் அவருக்கு செலவில்லாமல் சிகிச்சை வழங்கப்படுகிறது. “எனக்கு நோய் வரும் போது மற்றவர்கள் தமது வரிப் பணம் மூலம் என்னை கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அதே உதவியை நான் செய்கிறேன். அவரவர் செலவை அவரவர் கவனித்துக் கொள்வது என்ற முறையில் தம்மைத் தாமே பராமரிக்க முடியாதவர்கள் ஒதுக்கப்பட்டு விடுவார்கள். அந்த முறையே நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்கிறார் அவர்.

5 விரல்களும் வெட்டுப்பட்ட பிராட் என்ற தொழிலாளியின் அனைத்து விரல்களும் இலவசமாக, முழுமையாக இணைக்கப்பட்டு குணப்படுத்தப்படுகின்றன. “அவர் மருத்துவமனைக்குள் வரும் போது, சிகிச்சைக்கான மருத்துவச் செலவை அவர் கொடுக்க முடியுமா என்று நாங்கள் கவலைப்பட தேவையிருக்கவில்லை. விதிகள் அனுமதிக்கவில்லை என்று ஒருவரது வெட்டுப்பட்ட விரல்களை இணைக்க மறுக்கும் அமைப்பில் நான் வேலை செய்ய மாட்டேன். சக மனிதர்களை கவனித்துக் கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுக்கும் அமைப்பில் வேலை செய்வதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்கிறார் அவரது மருத்துவர்.

இங்கிலாந்து
இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவை மருத்துவமனையில் எந்த நோயாளியும், எந்த சிகிச்சைக்கும் பணம் செலுத்துவதில்லை.

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை அமைப்பின் மூலம் அனைவருக்கும், இலவச மருத்துவச் சேவை வழங்கும் திட்டம் 2-ம் உலகப் போருக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டத்துக்கு மக்கள் வரிப்பணம் மூலம் நிதி வழங்கப்படுகிறது. “தேசிய மருத்துவ சேவை அமைப்பில் கை வைத்தால் இங்கிலாந்தில் புரட்சி வெடிக்கும்” என்கிறார் டோனி பென் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். “குடிமக்களை அச்சத்திலும், சோர்விலும் வைத்திருந்தால்தான் அவர்களை ஆள்வது எளிது. படித்த, ஆரோக்கியமான, நம்பிக்கையான குடிமக்களை கண்டு அரசுகள் அஞ்சுகின்றன.”

தேசிய சுகாதார சேவையின் மருத்துவமனையில் எந்த நோயாளியும், எந்த சிகிச்சைக்கும் பணம் செலுத்துவதில்லை.

“நான் மருத்துவமனை கட்டணங்கள் பற்றி விசாரித்தால், நீங்கள் சிரிக்கிறீர்கள்” என்று புகார் சொல்கிறார் மைக்கேல் மூர். “அவசர சிகிச்சை பிரிவில் யாரும் என்னிடம் இப்படி ஒரு கேள்வியை இது வரை கேட்டதில்லை” என்கிறார் மருத்துவமனை ஊழியர். மாறாக, சிகிச்சை முடிந்து வீட்டுக்குப் போக போக்குவரத்து செலவு செய்ய முடியாதவர்களுக்கு மருத்துவமனையே காசு கொடுத்து அனுப்பி வைக்கிறது.

இங்கிலாந்தின் மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரைச் சீட்டு ஒவ்வொன்றுக்கும், அதில் எவ்வளவு விலை உயர்ந்த மருந்து எழுதப்பட்டிருந்தாலும், ஒரே கட்டணம் (சுமார் $10) வசூலிக்கப்படுகிறது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மருந்துகள் முற்றிலும் இலவசமாக தரப்படுகின்றன.

பிரான்சில், வாரத்துக்கு 35 மணி நேர வேலை, ஆண்டுக்கு 5 வாரம் சம்பளத்துடன் விடுமுறை, இலவச மருத்துவ சேவை, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய அரசு ஊழியர் சேவை (வாரத்துக்கு 2 முறை, ஒரு முறைக்கு 4 மணி நேரம்), இலவச பள்ளிக் கல்வி, இலவச உயர் கல்வி போன்ற சோசலிச சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஒரு பிரெஞ்சு குடும்பத்தின் அதிகம் செலவு பிடிக்கும் இனங்கள் என்று பார்த்தால், வீட்டுக் கடன் தவணைக்குப் பிறகு மீன் வாங்கும் செலவு, காய்கறிகள் வாங்கும் செலவு, தயிர் வாங்கும் செலவு என்று அடுக்குகிறார்கள். கல்வி, மருத்துவம்  போன்றவை அவர்கள் செலவு பட்டியலில் இல்லவே இல்லை. தொலைபேசியில் அழைத்தால் வீட்டுக்கே வரும் மருத்துவர் என்ற வசதி கூட பிரான்சில் செயல்படுகிறது.

“பிரான்சில் மக்களைக் கண்டு அரசாங்கம் பயப்படுகிறது. மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர். தெருவில் இறங்கி போராட பயப்படுகின்றனர்” என்கிறார் பிரான்சில் வாழும் ஒரு அமெரிக்கப் பெண்.

மருத்துவ சிகிச்சை தேவைப்படும், சிகிச்சை மறுக்கப்பட்ட அமெரிக்கர்கள் சிலரை உலக வர்த்தகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, பின்தங்கிய நாடு என்று அமெரிக்காவால் அவதூறு பிரச்சாரம் செய்யப்படும் கியூபாவுக்கு அழைத்துச் செல்கிறார் மைக்கேல் மூர்.  அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை, தெருவுக்கு ஒரு மருத்துவமனை; அமெரிக்காவில் $120 விலையாகும் மருந்துக்கு இணையான மருந்து கியூபாவில் $ 0.05-க்கு கிடைக்கிறது. இதை அறிந்து, தனது $1,000 முதியோர் ஓய்வூதியத்தில் $120 மருந்து வாங்க முடியாமல் அவதியுறும் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விட்டு அழுகிறார். எப்படிப்பட்ட ஏமாற்று அமைப்புக்குள்  நாம் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று அரற்றுகிறார்.

சமூக மருத்துவமனைகள், சமூக மருந்து கடைகள் செயல்படும் கியூபாவில் ஒருவருக்கு மருத்துவ சேவை வழங்க ஆண்டுக்கு $251 செலவாகிறது. தனியார் மருத்துவமனை, தனியார் மருந்து நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டியிருக்கும் அமெரிக்காவில் ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கு ஒரு ஆண்டுக்கு $7,000 செலவாகிறது. ஆம், மருத்துவ சேவைக்காக வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்கா அதிகம் செலவழிக்கிறது. ஆனால், கியூபாவில் அமெரிக்காவை விட குழந்தைகள் இறப்பு வீதம் குறைவு, மக்களின் சராசரி வாழ்நாள் அதிகம்.

சரி, அமெரிக்க முதலாளிகள் உலக மக்களை எல்லாம் கொள்ளை அடித்தும் தம் மக்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள், ஐரோப்பிய முதலாளிகள் மக்கள் நல அரசுகளை மக்கள் போராட்டங்களை அடுத்து வேறு வழியின்றி வெறுப்புடன் அனுமதிக்கிறார்கள். இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு என்ன கதி?

நம்ம ஊரிலும் காசைப் பொறுத்துதான் உயிர் வாழும் உரிமை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனையில் கட்டணங்கள் விண்ணைத் தொடுகின்றன. இப்போது செயல்படுத்தப்படும் தனியார் மய, தாராள மய, உலக மய மருத்துவம் இவற்றை மேம்படுத்த முடியுமா என்பதற்கான விடை அமெரிக்காவில் இருக்கிறது.

இங்கிலாந்து மருத்துவர்
“4 கார்கள், 40 லட்சம் டாலர் வீடு, ஆடம்பர வாழ்க்கை வேண்டுமென்றால் தனியார் சேவையில் வேலை செய்ய போகலாம்.”

தனியார் மருத்துவ காப்பீடுகள், ஏழைகளுக்கு அரசே காப்பீடு வழங்குவது, அரசு மருத்துவமனைகளை ஒழித்துக் கட்டுவது, தனியார் மருத்துவமனைகளுக்கு தீனி போடுவது என்று இந்த மாதிரியின் எதிர்காலம் இன்றைய அமெரிக்காதான். சோசலிச மருத்துவம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற முறையை இன்று வரை பின்பற்றும் ஐரோப்பிய நாடுகளையும் உலகளாவிய கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டை அமெரிக்க வழியில் செலுத்த முனைகிறது.

அமெரிக்கா போல பணம் உள்ள 1 சதவீதத்துக்கு சொர்க்கமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு போராட்டமாகவும், நலிந்த பிரிவினருக்கு நரகமாகவும் விளங்கும் எதிர்காலம் வேண்டுமா?

ஆவணப்படத்தில் தேசிய மருத்துவ சேவையில்பணி புரியும் இங்கிலாந்து டாக்டர் சொல்வது போல, “4 கார்கள், 40 லட்சம் டாலர் வீடு, ஆடம்பர வாழ்க்கை வேண்டுமென்றால் தனியார் சேவையில் வேலை செய்ய போகலாம். ஆனால் 1 கார், 1 வீடு, வசதியான வாழ்க்கைக்கு சமூக மயமான சேவையில் வேலை செய்தால் போதும்.”

“மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, அவரால் பணம் கொடுக்க முடியாது என்று சேவை மறுக்கும் அமைப்பில் நான் வேலை செய்ய மாட்டேன். தேவையான சிகிச்சையை தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் தொழில் முறை சுதந்திரம் எனக்கு வேண்டும்” என்கிறார் கனடாவின் மருத்துவர்.

இதுதான் உண்மையான சுதந்திரம். விருப்பப்பட்டதை தின்பது, விருப்பப்பட்டதை நுகர்வது சுதந்திரம் அல்ல. தன்னுடைய பணியை முழுத் திறமையுடன், தேவைப்பட்ட சக மனிதருக்கு பயன்படும்படி செய்யும் சுதந்திரமே மனிதருக்கான சுதந்திரம்.

அதை பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவ உலகம் ஒரு போதும் தர முடியாது.