privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்வெட்டிட்டு தைக்கிறது மட்டும் தையல் இல்லை - வேணி

வெட்டிட்டு தைக்கிறது மட்டும் தையல் இல்லை – வேணி

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 11

எங்க ஊரில் இருந்த நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே என் பெற்றோர், கைக்குழந்தையான என் தங்கையை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்று படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்கள். இரண்டு வருடம் கழிந்து திரும்பவும் பள்ளிக் கூடத்துக்கு போவேன் என்று அடம் பிடித்து போனேன். அதற்குக் காரணம் பள்ளிக்குப் புதிதாய் வந்திருந்த வைத்திலிங்கம் ஆசிரியரும் ஜெயசித்ரா டீச்சரும் தான்.

வைத்திலிங்கம் சார்தான் பள்ளியில் பாதி வகுப்பில் நின்று போன மாணவர்களை எல்லாம் தேடிப் பிடித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பெற்றோரிடம், “உங்கள் பிள்ளையை இரண்டு மாசம் பள்ளிக்கு அனுப்புங்க, படிப்பு வரலேன்னா நானே திருப்பி அனுப்பி விடுகிறேன்” என்றார். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் நானும் ஒருத்தி. இரண்டு வருச இடைவெளியில் பள்ளியும், படிப்பும் எனக்கு இனிப்பும் கசப்பும் போல இரு சுவையாய் தோன்றியது. இறுதியில் இனிப்பே நிலையாய் இருந்தது. வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும் பாடம் நடத்திய விதமும், மாணவர்களிடத்தில் அவர்கள் அணுகுமுறையும் அவ்வாறு எண்ணத்தை ஏற்படுத்தியது.

school-teacherவைத்திலிங்கம் சார் என் வகுப்புக்கு கணக்கு, ஆங்கிலப் பாடம் எடுத்தார். மூணும் ஏழும் கூட்டுனா என்ன வரும் என்று என்னை கேட்டு விடுவாரோ என்று பயத்தில் கணக்கு புரியாமல் மணவர்களுக்கு மத்தியில் ஒளிந்த என்னை தலை நிமிர்ந்து உட்கார வைத்தார். வாய்ப்பாடுதான் அவர் சொல்லிக் கொடுத்த முதல் கணக்கு. ஏறுவரிசை, இறங்கு வரிசை கணக்கு சொல்லிக் கொடுத்த அழகை இன்றளவும் மறக்க முடியாது. பள்ளிப் படிப்பில் எனக்கிருந்த இடைவெளி காலத்தை சரி செய்து உற்சாகப் படுத்தவே ஒவ்வொரு முறையும் போர்டில் கணக்கு போடும் போது தவறு செய்து விட்டு என்னை திருத்தச் சொல்வார்.

ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் போது, “தமிழ்தான் நம் தாய் மொழி அதுதான் ஈசியா நமக்கு புரியும். இருந்தாலும் ஆங்கிலம் ஒரு மொழியாக நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்” என்று தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆங்கில எழுத்து என்ன வரும் என்று புரிய வைத்த அழகே தனி. எங்கள் பள்ளியில் முதன் முதலில் ஆங்கிலம் எழுத்துக் கூட்டி படிக்க வைத்த முதல் வாத்தியார் வைத்திலிங்கம் சார்தான். ஒரு பாடம் முடிந்ததும் அதற்க்கான பரிச்சை வைத்து அனைவருக்கும் புத்தகம் பரிசளித்து ஊக்குவிக்கும் பழக்கத்தை வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும் பழக்கமாக வைத்திருந்தார்கள். நானும் நிறைய புத்தகம் பரிசு வாங்கியது உண்டு. அதில் திருக்குறள் புத்தகம் என்னிடம் இன்னும் இருக்கிறது.

ஜெயசித்ரா டீச்சர் தோற்றத்தில் மாணவியைப் போலதான் இருப்பார். ஆசிரியர் பயிற்சி முடித்த உடனே வேலை கிடைத்து எங்க ஊர் பள்ளிக்குதான் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அனுபவமிக்க ஆசிரியர் போல பாடம் எடுப்பார். என் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுத்தார். பாடத்தைத் தாண்டி சமூகப் பிரச்சனைகளையும் பேசுவார். பெற்றோரிடம் பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்லி பல மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். அன்றாடம் பேப்பர் படித்து செய்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

ஆங்கிலத்தில் எஸ்சே என்றால் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அல்ல, ஆசிரியருக்கே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏ.பி.சி.டி, பூனை, நாய், கொரங்கு இது போல் பத்து வார்த்தைகள் இதைத் தவிர எந்த மாணவனுக்கும் ஆங்கிலம் தெரியாது. கணக்கு போர்டில் போட்டா பெருக்கலா, வகுத்தலா என்று தெரியாது. விளக்கிக் கூறாமல் போர்டில் எழுதி போடுவார்கள் பார்த்து எழுத வேண்டியதுதான். தமிழ் முதல் அனைத்து தேர்வுகளுமே போர்டில் எழுதி போடுவார்கள், பார்த்து எழுதுவோம். வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும்தான் பள்ளியின் முறையையே மாற்றினார்கள்.

எங்கள் பள்ளியில் இருந்த வாத்தியார்களில் பெரும்பாலும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சாதி பாகுபாட்டோடு நடத்துவார்கள். அதையெல்லாம் எதிர்த்தவர்கள் இவர்கள் இருவரும்தான். நாம் மட்டும் இந்த பள்ளியை சரி செய்ய முடியாது. ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் அதுதான் பள்ளிக்கு நல்லது என்று முடிவு செய்து மாணவர் மன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்படுத்தினார்கள். இவர்கள் எண்ணமும் செயலும் நல்லது என்று எண்ணி சில ஆசிரியர்களும் உடன்பட்டனர். வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும் ஆரம்பித்து வைத்த பள்ளியின் முன்னேற்றப் பாதை இருபது வருடம் கழித்து இன்றளவும் தொய்வில்லாமல் சென்று கொண்டுள்ளது. இன்று எங்க ஊர் பள்ளி சிறப்பாக உள்ளது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் வைத்திலிங்கம், ஜெயசித்ரா என்ற இருவரும் தான்.

மீண்டும் மேல் நிலை பள்ளிப் படிப்பு பாதியில் தடைபட்டு விட்டதால் எனக்கு கிடைத்த மேலும் இரண்டு ஆசிரியர்கள் ஏஞ்சலினா, மீனா. இவர்கள் என் தையல் கலை ஆசிரியர்கள். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு தையல் கற்றுக் கொள்ளப் போனேன். நகரத்து பழக்கமும், தாவணி பருவமும் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றச் சொன்னது. கோயிலுக்குப் போவது, சினிமாவுக்குப் போவதுமாக பொழுதை கழித்தேன். ஒரு நாள் ஏஞ்சலினா டீச்சர் கண்டித்தற்கு “கிழிச்சுட்டு அந்த இடத்த தைக்கிறதுதானே, செஞ்சர்லாம் டீச்சர்” என்று அசால்டாக பதில் சொன்னேன்.

sewing-trainingஏஞ்சலினா டீச்சர் என் மேல் தனி கவனம் எடுத்துக்கொண்டு, “மற்றவர்களெல்லாம் பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடைப்பட்ட காலத்தை கழிப்பதற்காக பொழுது போக்காக தையல் கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்கள். உன் படிப்பு பாதியிலேயே நின்று விட்டது. உன் எதிர்காலம் குறித்து உனக்கு பயம் இல்லை? இதை விட்டா உனக்கு வாய்ப்பில்லை என்பதை நீ புரிந்து கொண்டு பாடத்தை கவனித்து கற்றுக் கொள்ள வில்லை என்றால் உன் வாழ்க்கையில் நீ மிகவும் சிரமப்படுவாய். அதுவும் தவிர இது ஒரு கலை, அப்படி அலட்சியப் படுத்தி பேசக்கூடாது. நீ உருவாக்கிய ஒரு ஆடையை அணிந்திருக்கும் ஒருவரை பார்த்தால் அந்த பெருமிதம் தெரியும். ‘நீ நல்லா சட்டை தச்சுருக்க, இந்த சட்டையை போட்ட நான் இவ்வளவு அழகா தெரியிறேன்’ என்று சொல்லும் போது தையலின் சிறப்பு புரியும்” என்றார்.

மீனா டீச்சருக்கு என் குடும்பத்தை நன்கு தெரியும். “வெட்டிட்டு தைக்கிறது மட்டும் இல்லை தையல் அதில் கலைநயம் இருக்கணும். நையாண்டித் தனமா பேசக்கூடாது. உன் குடும்பத்தின் வறுமையை மனதில் கொண்டு தையல் கற்றுக் கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள். இந்த வயசில் குடும்ப பாரம் உணர்வது சிரமமாக இருக்கும் அதற்க்காக மட்டும் சொல்லவில்லை. எந்த நேரத்திலும் உனக்கும் கைகொடுக்கும் இந்த தையல் என்பதை தெரிஞ்சுக்க” என்று எனக்கு கவனம் எடுத்து சொல்லிக் கொடுத்தார்.

பெடல் போடுவது முதல் நூல் எப்படி கோர்த்து தையல் சரியாக போடுவது வரை என்னை விட்டு அசைய மாட்டார். எனக்கு வரமாட்டேங்குது டீச்சர் என்றால் விட மாட்டார். எனக்கு தெரியும் நீ நல்லா கத்துக்குவே என்று நம்பிக்கையுடன் பேசுவார். அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் நான்தான் இரண்டாவது மதிப்பெண் பெற்றேன்.

நான் மனதொடிந்த பல காலகட்டங்களில் துணையாகவும், கலையாகவும் இருந்தது தையல். ஏஞ்சலினா, மீனா ஆசிரியர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.

– வேணி

  1. வைத்திலிங்கம் ஆசிரியரும் ஜெயசித்ரா டீச்சரும் போற்றுதலுக்குரியவர்கள்.

    இப்பொழுது பல அரசு பள்ளிகளிலும் இடைநிற்றல்கள் அதிகமாகி, தனியார் பள்ளிகளில் சேர்வது அதிகமாகிவிட்டது. அதனால், அரசு பள்ளிகள் இருக்கவேண்டுமென்றால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இப்பொழுது பல பள்ளிகளில் மாணவர்களை தேடிப்பிடித்து சேர்க்கிறார்கள்.

    கட்டுரையாளர் தனது உணர்வுகளை அருமையாக பதிவு செய்துள்ளார். வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க