privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் !

டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் !

-

ஒசூரில் டி.வி.எஸ். ஹரிதா ரப்பர் ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நீக்கம்!
டி.வி.எஸ்.யின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்

டி.வி.எஸ் ஹரிதா
டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை

ம்ம ஊரு வண்டி டி.வி.எஸ். எக்ஸ்.எல் என்ற விளம்பரத்தை நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருப்பீர்கள். நம்மூரு முதலாளி நம்மூரு தொழிலாளியை ஒடுக்கும் கதையை இங்கே தருகிறோம்.

டி.வி.எஸ். நிறுவனத்தில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் நிறுவனர் தின விழாவிற்கு முன்னதாக பு.ஜ.தொ.மு. பிரச்சார இயக்கத்தை தொடங்கியது. டி.வி.எஸ்.யின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக பல வடிவங்களில் அவ்வாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். சிக்கன் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் “டி.வி.எஸ்.ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்”, “தமிழக முதல்வர் சட்ட சபையில் TVS Group-ல் 1,300 தொழிலாளிக்கு வேலை என்று அறிவிப்பு!”, “நடப்பது சட்டத்தின் ஆட்சியா? TVSன் சர்வாதிகாரமா?” என்று எழுதப்பட்ட பனியன் அணிந்து வேலை செய்தனர். இது சிக்கன் கடைக்கு வருபவர்களை ஏன், என்ன ஆனது என்று டி.வி.எஸ்.இன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கேட்கத் தூண்டியது. இந்த பனியனை அணிந்து கொண்டு தொழிலாளர் துறையிடம் பேச்சு வார்த்தைக்கு செல்வது, பேருந்துகளில் பயணம் செய்வது என செயல்பட்டதால் டி.வி.எஸ்-ன் முகத்திரை தொடர்ந்து கிழித்தெறியப்பட்டது.

இதன் அடுத்தக் கட்டமாக டி.வி.எஸ். நிறுவனர் தினவிழாவிற்கு முன்னதாக நகரம் முழுவதும், சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. “தொழிலாளர் வயிற்றில் அடித்துவிட்டு கொண்டாடப்படும் ஸ்தாபகர் தினவிழாவைப் புறக்கணியுங்கள்!” என்ற சுவரொட்டி டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. டி.வி.எஸ். ஹரிதா ரப்பர் ஆலை முன்பாகவே சுவரொட்டியை ஒட்டினர் தொழிலாளர்கள். இதனை க் கண்டு அரண்டு போன செக்யூரிட்டிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சுவரொட்டிகளை பிடுங்க முயற்சித்தனர். தொழிலாளர்களும் தோழர்களும் மேலே கைவைத்தால் நடப்பது வேறு என எச்சரித்த பின்னர் பின்வாங்கினர். தோழர்கள் சென்ற பின்னர் சுவரொட்டியை ‘வீரத்தோடு’ கிழித்தனர்.

டி.வி.எஸ் ஹரிதா ஆலை எதிரில்
டி.வி.எஸ். ஹரிதா ஆலை எதிரில் சுவற்றில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

உடனே டி.வி.எஸ்.இன் தலைமைக்கு செய்தி பறந்தது. “நம்மாவை எதிர்க்கிறாளே” என்று அரண்ட டி.வி.எஸ். நிர்வாகம் வரலாறு காணாத போலீசு பாதுகாப்புடன் ஸ்தாபகர் தினவிழாவை நடத்தியது. இதில் பேசிய எம்.டி. ஸ்தாபகர் தினவிழா வாழ்த்துகளை தெரிவிப்பதற்கு பதிலாக தீபாவளி தின வாழ்த்துகளை தெரிவித்து தனது அஞ்சா நெஞ்சத்தைக் காட்டிக் கொண்டார். கோடிகால் பூதமான தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவினர் டி.வி.எஸ்-ன் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியதற்கே இந்த அளவிற்கு ஆட்டம் காணுகிறது டி.வி.எஸ் என்றால் அங்குள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் டி.வி.எஸ்-ன் பயங்கரவாதம் தூள்தூளாகி விடும். இதற்காக டி.வி.எஸ்-ஐ குறைத்து மதிப்பிட்டு விடவில்லை. இதனை பிரச்சாரத்தின் போது தொழிலாளர்களும் அவர்கள் வீட்டில் இருக்கும் மனைவியரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பிரச்சாரம் செய்யுங்கள் என்று எச்சரிக்கவே செய்தனர்.

தொழிலாளர்களை நாயைவிடக் கேவலமாக நடத்திய டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு தற்போது அவ்வாலைத் தொழிலாளர் தூக்கியிருக்கும் போர்க்கொடி, ஒரு முதல்படி! டி.வி.எஸ்.இன் அடக்குமுறைக்கு எதிராக அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஒசூர்.
தொடர்புக்கு: 97880 11784

 

பிரசுரத்தின் உள்ளடக்கம் :

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் – 1

“கம்பெனிகளை, நிறுவனங்களை விற்கும் போது கட்டாய ஓய்வு, ஆட்குறைப்பு என தொழிலாளர் விருப்பத்திற்கு எதிரான முடிவுகளை திணிக்கக் கூடாது. அந்தக் குழும நிறுவனத்தில் தான் வேலை தரவேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தனது தீர்ப்பு ஒன்றில் (20.11.2012) குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்கள் மீது முதலாளிகள் தொடுத்து வரும் பயங்கரவாதத் தாக்குதலை இந்தத் தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நீதிபதி. ஆனால், நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எந்த முதலாளிகளும் மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை.

டி.வி.எஸ். என்றால், அது நல்ல கம்பெனி, அங்கு கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை இருக்கும் என்ற ஒரு கருத்து நம்மில் பலரிடம் உள்ளது. கோவில்களுக்கு அன்னதானம் செய்வது, அருகாமை கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துவது, தொழிலாளர் குடும்பத்தினரை ஆண்டுக்கொரு முறை ஆலைக்கு அழைத்து, “ஸ்தாபகர் தினவிழா” நடத்துவது என சமூகத்தில் சில வேலைகள் செய்வதன் மூலம் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சிக்கிறது. முதலாளிகளின் பயங்கரவாத உண்மை முகத்தை நேரடியாக அறியாத நம்மில் பலரும் இதனை நம்புகிறோம். டி.வி.எஸ். நிறுவனம் உண்மையில் எப்படிப்பட்டது?

டிவி.எஸ். குழும நிறுவனத்தின் ஒரு பிரிவான சுந்தரம் ஆட்டோ காம்பொனண்ட் ரப்பர் டிவிசனில் (ஹரிதா ரப்பர்) நிரந்தரத் தொழிலாளர்கள் 64 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 120 பேரும் நிர்வாக அதிகாரிகள் 40 பேரும் பணிபுரிந்து வந்தனர். கடந்த 01.04.2013-ம் நாள் முதல் இவ்வாலையை மும்பையைச் சேர்ந்த மெகா ரப்பர் டெக்னாலஜி என்ற கம்பெனிக்கு விற்று விட்டதாக இவ்வாலை நிர்வாகம் அறிவித்தது. ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வந்த இந்நிறுவனத்தை பல கோடிகளுக்கு விற்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

30 ஆண்டுகளாக இவ்வாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களை 15.03.2013 அன்று தனித்தனியாக அழைத்து, வேலையை ராஜினாமா செய்து விட்டு, மெகா ரப்பர் கம்பெனியில் புதிதாக வேலை தருமாறு மனு எழுதிக் கொடுக்குமாறு ஆலை நிர்வாகம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பலரும் மறுத்துள்ளனர். சிலர் தயங்கியுள்ளனர். உரிமைகள் கேட்டு பழக்கமில்லாத கொத்தடிமைகளாக பல ஆண்டுகள் வேலை செய்த தொழிலாளர்களை திடீரென அழைத்து இவ்வாறு கேட்டதால் பலரும் மனம் வெதும்பி செய்வதறியாது கதறியுள்ளனர். இவ்வாறெல்லாம் கேட்டால் சரிபட்டு வராது என உணர்ந்த நிர்வாகம் தனது சாம, பேத, தான, தண்ட ஆயுதங்களை பிரயோகிக்கத் தொடங்கியது.

செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் -2

நிர்வாக அதிகாரிகள் ஆர்.கோபாலகிருஷ்ணன், மணிபாரதி (இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி), லெட்சுமணன் (பர்சனல் துறை) தொழிலாளர்களைத் தனித்தனியாக அழைத்து, “உனக்கு மனைவி, குழந்தை, குடும்பம் எல்லாம் இருக்கு. அதை காப்பாத்த வேண்டாமா?…” என்று தொடங்கி பலவிதமான மிரட்ட தொடங்கினர். “அந்த தொழிலாளி கையெழுத்து போட்டுவிட்டான் . நீயும் போடு” என்று பேத ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளனர். தனியறையில் வைத்து தொடர்ந்து தொல்லை செய்து பல வெற்றுத்தாள்களில் தேவையான கையெழுத்துக்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு பல ஆண்டுகள் வேலை செய்த தொழிலாளர்களின் பணி மூப்பு தொடர்ச்சி (சர்வீஸ் கண்டினிவிட்டி) என்ற உரிமையைப் பறித்துள்ளனர்.

தண்டாயுதத்தை பிரயோகித்த டி.வி.எஸ் !

நிர்வாகத்தின் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து தன்மான உணர்வுடன் 12 தொழிலாளர்கள் கையெழுத்து போட மறுத்துள்ளனர். நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் டி.வி.எஸ் முதலாளி மிகவும் நல்லவர் என்று நம்பியுள்ளனர். இதனால், குடும்பத்துடன் சென்னைக்கு சென்று டி.வி.எஸ் குழுமத்தின் முதலாளியான (எம்.டி.) வேணு சீனிவாசனை சந்திக்க முயற்சித்துள்ளனர். வேணு சீனிவாசன் தொழிலாளர்களை சந்திக்க மறுத்தது மட்டுமின்றி, தனது கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரியான லட்சுமணன் (வயது 82) மூலம் தொழிலாளர்களை விரட்டியுள்ளார்.

“எம்.டி.யை எல்லாம் பார்க்க முடியாது. உங்க கம்பெனிக்கு நான்தான் எம்.டி. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கப்பா” என்றவரிடம் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை விளக்கியுள்ளனர். “ஏம்பா, புது கம்பெனியில வேலை கெடைக்கிறது ஏற்பாடு செய்துருக்கோனோ, அங்கே வேலை செய்யுங்கோ. இங்கல்லாம் வரப்டாது. நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க. உங்க மேல எனக்கு கோபமா வருது” என்று பேசியுள்ளார். தனது கணவர்களுக்கு வேலை கன்டினிவிட்டி தருமாறு தொழிலாளர்களின் மனைவியர் அந்த அதிகாரியின் காலில் விழுந்துள்ளனர். அவரோ, காவலாளியை விட்டு விரட்டியடித்துள்ளார். அது மட்டுமல்ல, சென்னையிலிருந்து தொழிலாளர்கள் சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்து ஒரு கும்பல் விரட்டிக் கொண்டு வந்துள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தொழிலாளர் வாகனத்தை மறித்து அவர்களைப் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளது. நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக் கொண்டு போகவில்லை எனில், உங்க கழுத்துல தாலி இருக்காது என தொழிலாளர்களின் மனைவியரிடம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது அக்கும்பல்.

நிர்வாகத்தின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத தொழிலாளர்களின் உறுதியைக் குலைக்க, அவர்கள் வீட்டிற்கு முன்பு அடையாளம் தெரியாத ஆட்களை வைத்து தொழிலாளர் செல்லும் இடங்களில் எல்லாம் பின்தொடர்வது என்ற வேலையையும் செய்தது.

ரோசக்காரனுக்கு சோறு எதுக்கு? இது மனுநீதி! டி.வி.எஸ்.இன் நீதியும் இதுதான்!

நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், இராஜினாமா கடிதம் தராமல் சர்வீஸ் கண்டினிவிட்டி கேட்டு வந்த இந்தத் தொழிலாளர்களை எந்த வித முன்னறிவுப்பும் இன்றி சட்டவிரோதமாக வேலையை பறித்து விட்டது ஆலை நிர்வாகம். உரிமைக்காகப் போராடுபவர்களைப் பட்டினிப் போட்டு அடிப்பது என்பது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை!

ஆலை நிர்வாகத்தின் சொல்படி கேட்டு இராஜினாமா செய்துவிட்டு புதிய ஆலையில் வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது உரிமை இழந்து, எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். இவர்களுக்கு மட்டுமல்ல, டி.வி.எஸ். குழும நிறுவனத்தில் பணிபுரியும் எல்லா தொழிலாளர்களுக்கும் இந்த நிலைமைதான்.

தொழிலாளர் துறையிலும் டி.வி.எஸ்.ன் அடியாட்கள்!

வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 12 பேரும் தங்களுக்கு நியாயம் கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியரோ தொழிலாளர் துறையை நாடுமாறு தெரிவித்துள்ளார். அந்த வகையில் கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலத்தில் தொழிற்தகராறு சட்டம் 2அ பிரிவின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இச்சட்டப் பிரிவின் படி 45 நாட்களுக்குள் விசாரித்து பதிலளிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ 4 மாதங்களாக டி.வி.எஸ் நிறுவனத்திற்கு வாய்தா வழங்கி வருகிறது. டி.வி.எஸ். நிறுவனத்திடமிருந்து முறையான எந்த ஆவணங்களைப் பெறுவதற்கான முயற்சியில் கூட தொழிலாளர் துறை இறங்கவில்லை. இவை எதையும் செய்யாத தொழிலாளர் அலுவலர் லெட்சுமணன், “12 மாத சம்பளம் தர்றாங்களாம். நிர்வாகம் சொல்றதைக் கேளுங்கப்பா. கோர்ட்டு கேசுன்னு போனோம்னா எத்தனை வருசம் ஆகும்னு தெரியாது. டி.வி.எஸ். நிறுவனம் பெரிய இடம்பா. நீங்களோ வளர்ற பசங்க” என்று தொழிலாளர்களை மிரட்டியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பை லெட்சுமணனிடம் காட்டிய போது, படித்து விட்டு மேலும் அதிகமாக மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து தொழிலாளர் துறை அலுவலத்திற்கு இவ்வழக்கிற்காக சென்றால், லெட்சுமணனே தொழிலாளர்களைத் தீர்த்துக் கட்டி விடுவார் என்று அஞ்சும் நிலையில் தான் தொழிலாளர் அலுவலகம் உள்ளது.

மெகா ரப்பருக்கு விற்பனை – மற்றுமொரு கார்ப்பரேட் ஊழல்!

கடந்த 1992 வாக்கில் இந்நிறுவனத்தில் மேலாளர் கோபால கிருஷ்ணன் ஆலையை விற்றுவிட்டதாகவும் இந்த விற்பனை உண்மையானது எனவும் தொழிலாளர்களிடம் சத்தியம் செய்தார். ஆலை மூடல் அறிவித்து அப்போது வேலை செய்த நிரந்தரத் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பினார். ஆனால், அதன் பின்னரும் அவரே ஆலையில் மேலாளராகவும் டி.வி.எஸ் குழுமத்தின் ஒரு கிளையாகவும் இந்த ஆலை இயங்கி வந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஹரிதா ரப்பரில் நிரந்தரத் தொழிலாளர்கள் ஒழித்துக் கட்டப்பட்டார்கள். தற்போது மீண்டும் 64 நிரந்தரத் தொழிலாளர்கள் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளனர்.

தற்போது, ஹரிதா கிராமர் ஆலையை மெகா ரப்பர் என்ற மும்பையை சேர்ந்த கம்பெனிக்கு விற்றுவிட்டதாக டி.வி.எஸ் குழுமம் அறிவித்துள்ளதன் முழு பின்னணி என்ன? கடந்த ஆண்டில் டி.வி.எஸ் குழும நிறுவனம் 700 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்வதாகவும் 1,300 பேருக்கு வேலையளிப்பதாகவும் முதலமைச்சரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டது. இவ்வாறு புதிய முதலீடு செய்வதாக சொல்லிக்கொண்டே பழைய ஆலையை விற்று விட்டதாகக் கூறி நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுகிறது டி.வி.எஸ். நிறுவனம். இதேபோல ஹரிதா ரப்பர் ஆலையை விலைக்கு வாங்கியதாக கூறும் சுஜன் குழும நிறுவனம் (மெகா ரப்பர்) புதிதாக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்ததாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் டி.வி.எஸ், சுஜன் ஆகிய இரு குழும நிறுவனங்களும் அரசை ஏமாற்றி பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளன.

மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு வழங்கும் சலுகைகளை கொள்ளையடிக்க கார்ப்பரேட் முதலாளிகள் மேற்கொள்ளும் இந்த ஊழலை முறியடிக்க வேண்டும்.

டி.வி.எஸ். முதலாளித்துவ பயங்கரவாதத்தின் முகம்! (தொழிலாளர்களை ஒடுக்கிய வரலாறு)

ஹரிதா கிளேட்டன் என்ற இவ்வாலையில்தான் 2004ம் ஆண்டு முத்து என்ற இளந்தொழிலாளி இயந்திரத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார். இயந்திரத்தின் சென்சார்களை எல்லாம் நிறுத்தி விட்டு, இரு கைகளால் இயங்கும் எந்திரத்தை ஒரு கையினால் இயக்கும் வகையில் மாற்றியமைத்து, 10 மடங்கு அந்த இயந்திரத்திலிருந்து உற்பத்தியை பெருக்கியது, அதாவது இயந்திரத்தின் இயல்பை மாற்றியது என்பது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் எனத் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட சதி. இந்த விபத்து என்பது திட்டமிட்ட படுகொலை. இதனை மறைக்க ஆலை நிர்வாகம் முயற்சித்த போது தொழிலாளர்களின் போராட்டத்தால் இந்த உண்மை வெளிவந்தது. இது போன்ற பல படுகொலைகள் அவ்வப்போது ஆலையில் நிகழ்ந்தும் முதலாளித்துவ அடக்குமுறையால் இவை வெளி உலகிற்கே தெரியாமல் போனது.

வேலையில் சேர்க்கும் போதே ஆலைக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்று அடிமை சாசனத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் வேலையில் சேர்க்கின்றன டி.வி.எஸ் குழும நிறுவனங்கள். இதில் சூப்பர் வைசர்கள் சொல்லும் ஈனத்தனமான வேலைகளை செய்ய வில்லை என்றாலும் வேலை நீக்கம்தான்!

தொழிலாளர் வீட்டில் மனைவி, குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என விடுப்பு கேட்டால் தருவதில்லை. மருத்துவம் தருவதாகக் கூறி வீட்டிற்கே ஆள் அனுப்பி கண்காணிக்கும் கேடு கெட்ட வேலையில் இறங்குகிறது.

டி.வி.எஸ்-ல் வேலைக்கு ஆள் எடுப்ப்து என்பது இந்திய இராணுவத்திற்கு ஆள் எடுப்பது போல மேற்கொள்ளப்படுகிறது. அந்தத் தொழிலாளியின் ஆதி அந்தம் வரை எல்லா விவரங்களையும் சேகரித்த பின்னர்தான் வேலை தருகிறது! இது அரசு நிர்ணயித்துள்ள நிலையாணை சட்ட முறைகளுக்கும் இயற்கை முறைகளுக்கும் எதிரானது.

அடுத்து டி.வி.எஸ். குழும நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் செய்து கொடுக்கும் ராஜ்சிரியா, எல்.கே.எம்., டெனிக்கோ, சாந்தார் உள்ளிட்ட பல ஆலைகள், அவ்வாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவர்களது முதுகெலும்பு ஒடியும் அளவிற்கு வேலை செய்ய வைக்கின்றன. அத்தொழிலாளர்களை 12 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய வைத்து அவர்களை பிழிந்தெடுக்கின்றன. இவ்வாலைகளில் வேலையின் போது போதுமான பாதுகாப்பு முறைகள் இல்லாததால் தொழிலாளர்கள் பலர் கண்கள், விரல்கள் இழந்து வாடுகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு எந்த விதமான பதிவு செய்யப்படுவதில்லை. மேலும், இவர்களுக்கு உரிய நிவாரணம், இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. மீறி இழப்பீடு கேட்கும் தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். கணவனை இழந்த நாகவேணி என்ற பெண் தொழிலாளி, ராஜ்சிரியா ஆலையில் பணிபுரியும் போது, அவ்வாலையில் வாராந்திர பராமரிப்பு செய்யாத காரணத்தினால் தீவிபத்து ஏற்பட்டு பலியானார். அவரின் இரண்டு குழந்தைகளையும் நிர்கதியாகி விட்டன.

1989-ல் டி.வி.எஸ்.ல் தொழிற்சங்கம் தொடங்க முயற்சித்த போது 3 மாதங்கள் கதவடைப்பு செய்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை விரட்டியடித்தது ஆலை நிர்வாகம். டி.வி.எஸ் குழும நிறுவனங்கள் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளி என்ற பெயரில் பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டி வருகின்றன. 6 – 8 மாதங்கள் உழைப்பை உறிஞ்சி விட்டு இவர்களை வீதியில் வீசியெறிந்து விடுகின்றன.

மொத்தத்தில், தொழிலாளர் நலச் சட்டங்களை டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் மதிப்பதில்லை. தொழிலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சட்ட பூர்வ உரிமைகளை மறுக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் முகாமாக டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் உள்ளன.

தீர்வு – தொழிலாளர் வர்க்க ஒற்றுமை !

டி.வி.எஸ் நிறுவனத்தின் அடக்கு முறைகளை எதிர்த்து ஒசூரில் பல தொழிலாளர்கள் போராடியுள்ளனர். அதற்காக அவர்கள் டி.வி.எஸ் நிர்வாகத்தின் மூலம் ரவுடிகள், போலீசு ஏவி ஒடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஒசூரில் உள்ளூர் அளவில் ரவுடி இசத்தை வளர்த்து விட்டதில் டி.வி.எஸ் குழுமத்திற்கு தனி வரலாறு உண்டு. அதேபோல கோயில்களுக்கு அன்னதானம், நிதி உதவி செய்வதன் மூலம் தன்னுடைய குற்றங்களை மறைக்க முயல்கிறது.

இவ்வளவு கொடூரமான டி.வி.எஸ். நிறுவனத்தை தொழிலாளர்கள் தனியாக நின்று எதிர்த்துப் போராட முடியாது. டி.வி.எஸ்-ன் பயங்கரவாத நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எங்களைப் போன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து போராட முன்வரவேண்டும். ஒசூரில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக திரட்டி போராட பு.ஜ.தொ.மு.தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில் பு.ஜ.தொ.மு.வில் இணைந்து போராட முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.

தமிழக அரசே!

  • மெகாரப்பர் ஆலையில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களின் சர்வீஸ் உரிமையை உறுதி செய்!
  • வேலை நீக்கம் செய்யப்பட்ட 12 தொழிலாளர்களுக்கு வேலை வழங்க உத்தரவிடு!

தொழிலாளர்களே!

  • டி.வி.எஸ். நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஒசூரில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!
  • ஒசூர் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

பிரச்சாரம்

நோட்டிஸ் – போஸ்டர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்.