Wednesday, May 7, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?

தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?

-

வ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையொட்டி, தேவர் சாதியினரின் அபிமானத்தைப் பெற பல அறிவிப்புகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தேவர் சாதிவெறிக்கு வக்காலத்து வாங்கும் சம்பத் கமிசன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பரமக்குடியில் நடந்த தாழ்த்தப்பட்டோரின் தலைவரான இம்மானுவேல் சேகரன் குருபூசையின் போது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு குறித்து கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட பல உண்மையறியும் குழுக்கள், இந்தப் படுகொலையானது அரசின் ஆதரவுடன், போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

08-caste-atrocity-1ஆனால், படுகொலை நடந்த இரண்டாவது நாளன்றே தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிசன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கலவரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அவசியமானது” என இப்படுகொலையை நியாயப்படுத்துவதுடன், பதற்றமான சூழலில் விவேகத்துடன் செயல்பட்டதாக போலீசாரைப் பாராட்டுவதோடு, தனது ஆதிக்கசாதி மனோபாவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

“தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்களுள் ஒருவரான ஜான் பாண்டியன், 11.9.2011 அன்று பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் சமாதிக்குச் செல்வதாக இருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிகுமார் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன், வேறு சாதியைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டான்.அந்த இறப்பு குறித்தும் விசாரிக்க ஜான் பாண்டியன் பரமக்குடிக்கோ,பச்சேரிக்கோ சென்றால், அவரது ஆதரவாளர்களுக்கும், தேவர் சாதியினருக்குமிடையே மோதலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் போலீசுக்கு ஏற்பட்டது.

எனவே, தூத்துக்குடி உயர் போலீசு அதிகாரிகள் உத்தரவுப்படி 11.9.2011 அன்று ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதற்கெதிராக அவரது ஆதரவாளர்கள் 200 பேர் பரமக்குடி – ஐந்துமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில், அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் இன்னொரு தலைவரான கிருஷ்ணசாமி செல்லவே, இவருக்கு மட்டும் அனுமதியளித்துத் தங்களது தலைவரைத் தடுத்து விட்டதாகக் கோபமடைந்த ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் வாகனங்களையும் தாக்கினர். இதனைத் தடுக்க முயன்ற பரமக்குடி துணை போலீசு கண்காணிப்பாளர் கணேசனும் மற்ற போலீசாரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் கலவரக்காரர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தாக்கி, அங்கிருந்த போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இதனால் கமுதி வட்டாட்சியர் சிவக்குமார் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டார். வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிக்கு வன்முறை பரவுவதைத் தடுக்கவும் இந்தத் துப்பாக்கிச் சூடு அவசியம் என்று கமிசன் கருதுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமலிருந்தால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிகமாக ஏற்படுவதோடு, தென்மாவட்டங்களுக்கும் வன்முறை பரவியிருக்கும். எனவே, இந்தத் துப்பாக்கிச் சூடு அவசியமானது” என்று சம்பத் கமிசன் அறிக்கை கூறுகிறது.

2011-ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் குருபூசை அரசு விழாவாக அறிவிக்கப்படும் என்று தாழ்த்தப்பட்டவர்கள் பெரிதும் நம்பியிருந்த சூழலில், அதனைத் தடுக்க வேண்டும் என்று ஆப்பநாடு மறவர் சங்கம் உள்ளிட்ட தேவர் சாதிவெறி அமைப்புகள் பகிரங்கமாகப் பேசி வந்ததுடன், அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். கலவரத்தைத் தூண்ட வேண்டுமென்றே இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தில் ‘தேவர் பேரவை’ என்று எழுதி, அதில் மலம் கழித்து அசிங்கப்படுத்தித் தாழ்த்தப்பட்டோரை ஆத்திரமூட்டியுள்ளனர்.

ஆனால், ஜான்பாண்டியன் கைது செயப்பட்டது போல, தேவர் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் எவரும் ஏன் கைது செயப்படவில்லை என்ற கேள்வியே கமிசன் அறிக்கையில் இல்லை.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்குள் வர விடாமல் தடுத்துக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்திற்காகவே முத்துராமலிங்கத் தேவரை ஒன்பது என சுவற்றில் எழுதியதாக அவதூறு பரப்பி, பச்சேரியில் சிறுவன் பழனிகுமாரைத் தேவர் சாதி வெறியர்கள் கொலை செய்தனர். சிறுவன் பழனிகுமாரைக் கொன்றவர்களை ஏன் இது வரை கைது செய்யவில்லை என்றும் சம்பத் கமிசன் கேட்கவில்லை.

ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் ஏறத்தாழ 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோதே, போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், கூட்டம் அதிகரிக்கும் வரை காத்திருந்து விட்டு, திடீரென தடியடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டு போடவில்லை என்றும், முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரெனக் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களின்படி, போலீசார் பெரும் கற்குவியல்களைச் சாக்குப்பையில் வைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் மீது வீசுகின்றனர். எனில், போலீசார் இவ்வளவு கற்களைக் முன்கூட்டியே கொண்டு வந்து குவித்தது ஏன்?

முதலில் துப்பாக்கியால் சுட்டவர் கணேசன் என்கிற உதவி போலீசு கண்காணிப்பாளர். இவர்தான், ஜான்பாண்டியன் ஆதரவாளர்களால் படுமோசமாகத் தாக்கப்பட்டவர் என கமிசன் அறிக்கை கூறுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் எவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு வந்து முதல் ஆளாகச் சுட்டார் என நீதிபதி சம்பத் கேட்கவில்லை. சென்னை அடையாறில் துணை ஆணையராக இருந்த செந்தில்வேலன், பரமக்குடிக்கு ஏன் கொண்டுவரப்பட்டார் என்றும் விசாரிக்கவில்லை.

துப்பாக்கிச் சூடு நடந்துமுடிந்த பிறகு, போராட்டக்காரர்களை விரட்டிவிட்டுத் தங்களது “வஜ்ரா” வாகனத்திற்கும் பிற வாகனங்களுக்கும் போலீசார்தான் தீ வைத்தனர் என்று இப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி சம்பத் கமிசன் வாய் திறக்கவேயில்லை.

மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய போலீசின் தாக்குதல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், துடிதுடித்து இறந்து கொண்டிருக்கையில் அவர்களை அப்படியே கொளுத்தும் வெயிலில் போட்டு வைத்திருந்ததுடன், உயிரிழந்த ஒருவருடைய சடலத்தை மனிதாபிமானமே இல்லாமல் நாயைத் தூக்குவது போலத் தூக்கிச் சென்று போலீசார் வீசியெறிந்தனர். கண்ணில் பட்ட தாழ்த்தப்பட்டோரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி இரத்தம் வரும்வரை அடித்துத் துவைத்துள்ளனர். போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து அருகிலிருந்த மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தவர்களையும் விடாமல் விரட்டிச் சென்று, வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.

இவை அனைத்தும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் உண்மையறியும் அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. இவ்வாறு இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கும் போது, அவற்றில் ஒன்றைக் கூட விசாரிக்காத நீதிபதி சம்பத், நடந்த எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிக் கூறும் போது “கலவரங்களில் ஈடுபடும் வகையில் தவறாக வழி நடத்தப்பட்டு அதனால் பலியானவர்கள்” என்று கூறுகிறார். கொல்லப்பட்டவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அரசின் பெருந்தன்மையை வேறு பாராட்டியுள்ளார்.

இறுதியாக, இது போன்ற சாதித் தலைவர்களின் குருபூசையைத் தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி சம்பத் அரசிற்குப் பரிந்துரைக்கிறார். இதற்காக “இம்மானுவேல் சேகரனின் குருபூசையை ‘டம்பம் அடிப்பதற்கான நிகழ்ச்சி’ எனப் பலரும் கூறியுள்ளனர்; அந்த விமர்சனங்களுக்கு அடிப்படைக் காரணம் உள்ளது” எனத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ‘தேசியத் தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்கத்தின் குருபூசையை அரசு விழாவாகக் கொண்டாடும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது தலைவரான இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடத்தினால், அது டம்பம் அடிப்பதற்கான நிகழ்ச்சியாம்! அதனைத் தடை செய்ய வேண்டுமாம்!

“மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா?” எனக் காலம்காலமாகக் கேட்கப்படும் ஆதிக்கசாதியின் அதே குரல்தான் சம்பத் கமிசனின் அறிக்கையிலும் எதிரொலிக்கிறது.

– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________