Thursday, May 30, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தயார் , சாவதற்கு யார் தயார் ?

சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தயார் , சாவதற்கு யார் தயார் ?

-

‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானமும், ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ஜெயா பேசிய வசனமும் கூழை கும்பிடு போடும் ஓபீஎஸ்-ன் மடங்காசனமும் அதை ரசிக்கும் செயாவின் முகமும் அனைத்து ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக மின்னியதை நாம் அறிவோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்த வருங்கால பிரதமரை வரவேற்று போயஸ் கார்டன் முதல் வானகரம் வரையிலான வழி நெடுக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதுவும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் 5 அடிக்கு ஒன்று என ஆயிரக்கணக்கான கட் அவுட்டுக்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும் போது இது யார் அப்பன் வீட்டுப்பணம் ? என்ற கேள்விதான் வர வேண்டும்.

செயா வருகிறார் என்றாலே அவர் வருகின்ற சாலை முழுக்க முழுக்க பேனர்கள் நிரம்பி வழிகின்றன. சாதாரண பொது மக்கள் சாலை ஓரத்தில் செல்ல முடியாதபடி வழியை அடைக்கின்றன. பார்வையற்றவர்கள் பலர் அந்தத் தடுப்புக்களில் அடிபட்டு விழுவதை ஊடகங்கள் கூறிய போதும் கட் அவுட்டுக்கள் தொடர்கின்றன. எவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? பிரதமராக அம்மா முடிவு செய்து விட்டார் அவ்வளவுதான்.

வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் பேனர்களுக்கும் காட்சி விளக்கங்களுக்கும் பின்னால் இருக்கும் கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. எத்தனை கோடிகள் இந்த வரவேற்பு விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிட முடியாது. நெடுஞ்சாலையில் அய்ந்து அடிக்கு ஒரு பேனர் என்றால் கோயம்பேடு பாலத்தில் அடிக்கொரு பேனர்கள். மினி பஸ் செல்வதை போல, கணிணி கொடுப்பது போல, அம்மா உணவகம் என மீதமிருந்த இடங்களில் காட்சி விளக்கங்கள். தில்லைக்கோயிலில் தீட்சிதர்களுக்கு தமிழக அரசு மாமா வேலை பார்ப்பதை சித்தரிக்கும் காட்சி விளக்கமும் போலீசு ஸ்டேசன் பாலியல் வன்புணர்வு காட்சிகளும் இந்த கொலுவில் இடம்பெற்றிருந்தால் அம்மா மகிமை முழுமை பெற்றிருக்கும்.

இவ்வாறு நெடுஞ்சாலை முழுவதும் கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்து அலங்கார மின்விளக்குகள் எரிவதை பார்க்கும் போது நம் வயிறு எரிகிறது. வீட்டில் மின்சாரம் இல்லாமல் நாம் புழுங்கிக் கொண்டிருக்க “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்” என்று செயாவை வரவேற்று எம்ஜியார் பாடிக் கொண்டு இருக்கிறார்.

செயாவின் மனதில் இடம் பிடிக்க அவரின் கடைக்கோடி பார்வையைப் பெற்று, தான் தொடர்ந்து மக்களை கொள்ளையடிக்க ஆசியைத் தேடும் நபர்கள்தான் இந்த விளம்பரங்களையும் பேனர்களையும் வைக்கிறார்கள். ஒவ்வொரு பேனருக்குப் பின்னாலும் மக்களின் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு கவுன்சிலரும் எம்.எல்.ஏவும் 100 முதல் 150 பேனர்களையும் பல காட்சி விளக்கங்களையும் பல லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கிறார்கள் என்றால் அது யாருடைய பணம்? ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்றும் போலீசு நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தும் ஊரில் உள்ள நிறுவனங்களை எல்லாம் மிரட்டி பணம் பிடுங்கியும் அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியும்தான் இன்று வரவேற்பு விளம்பரங்களாக மின்னுகின்றன. எவன் அப்பன் வீட்டு காசில் யார் வாழ்வது ? அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் மதுரவாயல் பகுதி.

அதிமுக பொதுக்குழு கூடிய வானகரத்திற்கு மிக அருகில் உள்ள இப்பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் வைத்த பேனர்களுக்கு பின்னால் மக்களின் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. இப்பகுதியில் எந்த நிலமும் சும்மா இருந்தால் உடனே போலிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு கவுன்சிலர்களின் நிலங்களாகவே மாறிவிடும். இதை எதிர்த்து கேள்வி கேட்டாலே பொய் வழக்கு போட போலீசு தயாராக இருக்கின்றது. எதிர்த்து கேள்விதான் கேட்க வேண்டும் என்று இல்லை, ஆளுங்கட்சியின் உள்ளடி சண்டைகளுக்கும் போலீசுதான் எதிரணியினர் மீது வழக்குகளைப் போட்டு கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்களை பாதுகாக்கிறது.

செயலலிதாவை வரவேற்பதற்கென்று கூறிக்கொண்டு பள்ளி மாணவிகளை பல மணி நேரம் வெயிலில் நிற்கவைத்ததும் அருகில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியை மிரட்டி அதை இரண்டு மணிக்கே இழுத்து மூட வைத்து அந்தத்தொழிலாளிகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் தெருவில் நிற்க வைத்ததும் இந்த அடிப்பொடிகளின் சாதனைகள்.

விளையாட்டு மைதானம் அமைக்க துப்பில்லாத அவர்கள் இளைஞர்கள் எங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறார்களோ அதை இரவோடு இரவாக வீட்டு மனைகளாக மாற்றுகிறார்கள். இப்பகுதியில் பொதுக் கழிவறைகளோ விளையாட்டு திடல்களோ இல்லாத நிலையில் கவுன்சிலர்களும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் எந்த நிலத்தையும் விட்டு வைப்பதில்லை.

‘பள்ளி மாணவர்கள் சங்கமாக சேரக் கூடாது’ என்று சீருடை அணியாத போலீசார் காவல் காத்து வருகின்றனர், பள்ளிகளின் முன்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு அரசியல் எதுக்கு என்று யோக்கிய சிகாமணிகள் பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தில் ஊளையிடுகின்றன. ஆனால் செயாவை வரவேற்க மாணவர்கள் கால் கடுக்க வெயிலில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். யாரும் உரிமைக்காக போராடக் கூடாது? அடிமைகளாக வேண்டுமானால் வரலாம் அதற்கான கடமை மட்டுமே உண்டு.

எவன் கக்கூசு போனால் எனக்கென்ன? தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் என்ன? சாலை இல்லை என்றால் என்ன? நான் பொறுக்கித் தின்ன வேண்டும் என்ற தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களின் கையில் சிக்கி சீரழிந்த பகுதிகளில் இருந்து மதுரவாயல் மட்டும் வேறுபட்டதா என்ன? அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு சுவரொட்டி ஒட்ட முடிகிறதா? இல்லை மக்களின் கோரிக்கைகளை வலியுயுறுத்தி ஒரு போராட்டத்திற்கு அனுமதி வாங்க முடிகிறதா? புரட்சிகர – சனநாயக அமைப்புக்கள் வேலை செய்யக் கூடாது என்று சுவரொட்டியைக் கூட மோப்பம் பிடிக்கும் அதே போலீசுதான் இந்த பேனர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டு இருக்கிறது. ஊரில் மக்களுக்கு கழிவறை கட்டித் தர வக்கில்லை, இதில் பெருமையாக பேனர் வேறு! சுதந்திரம் வாங்கியதாகக் கூறுகிறார்கள்,  எதற்கு? தடையின்றி கொள்ளையடிக்கவும் கேள்வி கேட்டால் போட்டுத் தள்ளவும் தானே? இதற்கு பெயர் பயங்கரவாதம் இல்லையா?

ஒவ்வொரு கவுன்சிலரும் 100-க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்திருந்தார்கள். எதற்கு? நான்தான் அதிகம் கொள்ளை அடித்தேன் என்பதைக் காட்டுவதற்காக. தமிழகத்தை மொட்டையடித்தது போதாது என்று டெல்லி கிளம்பி இருக்கும் ஆத்தாளிடம் சர்டிபிகேட் வாங்க வேண்டாமா என்ன? நீதி நேர்மை நியாயம் என்பதை ஒரு பெயருக்காகவாவது சொல்ல வேண்டும் என்பதெல்லாம் மாறிப் போய் நான் தான் கொள்ளையடித்தேன், அப்படித்தான் கொள்ளையடிப்பேன் என்று சவால் விடுகிறார்கள் இந்தக் கொள்ளைக்காரர்கள். அதன் தலைவியோ மவுனமாக ரசிக்கிறார். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

அம்மா பிரதமர் ஆவதற்கு முன்னரே இப்படி என்றால் பிரதமராகி விட்டால் உலகத்தில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமும் செயாவை வரவேற்பதற்கு போதாமல் கூட போகலாம். இப்போதே காலை முதல் மாலை வரை டிராபிக் ஜாம் என்றால் பிரதமராகிவிட்டால் அவர் வரும் வழியெல்லாம் சுடுகாடாக்கவும் தயங்க மாட்டார்கள் இந்தக் கொள்ளைக்காரர்கள்.

டிஜிட்டல் பேனர்களை வைக்கும் அடிப்பொடிகளே இப்படி என்றால் பிரதமாராகும் ‘மம்மீ’ செயா எத்தனை பேர்களின் வாழ்க்கையை அழித்து இருப்பார்? இப்படி செயா பிரதமராக தகுதியானவர்தான் என்பதையும் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் அடிப்பொடிகள் தாங்கள்தான் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் தெளிவாக செருப்பால் அடித்தது போல கூறி விட்டார்கள். உண்மைதான், அம்மாவுக்கும் அவரது அடிமைகளுக்கும் தகுதி இருக்கலாம். தன்மானமுள்ள, சுயமரியாதையுள்ள நமக்கு அந்த வரிசையில் சேரத் தகுதி இல்லை என்பதை அந்த எருமைத்தோலில் உரைக்கும்படி கூற வேண்டியதுதான் தற்போதைய அவசியம். சென்னை டூ செங்கோட்டைக்கு ரயில் கிளம்பி விட்டது, டிராகுலா செயாவோ எஞ்சின் டிரைவராக ஆசைப்படுகிறார், அடிப்பொடிகள் நம் மீது தண்டவாளத்தை போட வருகிறார்கள் நமக்கு என்ன வழி இருக்கிறது. தண்டவாளத்தை தகர்ப்பதைத் தவிர.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

  1. நம்மால் என்ன செய்ய முடியும் என்று அனைவரும் ஒதுங்கிய காலம் போய் ,, நம்மால் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும் என்று நினைக்கும் அளவுக்கு இந்த கும்பல் மக்களை மாற்றிவிட்டனர். சின்ன டீ கடையில் இருந்து பெரிய பெரிய நட்சத்திர விடுதிகள் வரை இது பறந்து ஒரே சீராக இருக்கிறது …. கலி முத்த்டுச்சி நு நம்மளை நாமளே சமாதானம் செய்வதுதான் சரி

  2. ஜெயா ” சென்னையிலிருந்து செங்கோட்டை” என்றுதானே கூறினார்.அது தென்காசி செங்கோட்டையாக இருக்கலாமே.

  3. சமீபத்தில் நெல்லைமாநகராட்சி ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தது.அதாவது மாநகராட்சியின் அங்கீகாரம் இல்லாத விளம்பரங்களை அப்புறப் படுத்தியது.அதில் ஜெயா சிரித்துக் கொண்டிருக்கும்,”அம்மாவை? பிரதமராக்க சபதம் எடுப்போம்” போன்ற விளம்பரங்கள் அகற்றப் படவே இல்லை.வண்ணாரப் பேட்டை மேம்பாலத்தின் மேல் புரம் காவல் துறையின் அறிவிப்பு ஒன்று உள்ளது.அதில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக,”இந்த இடத்தில் விளம்பரப் பலகைகள் அனுமதியில்லை” என்று வாசகம் உள்ளது.அந்த அறிவிப்புக்கு மேலே ஜெயாவின் அம்மா? கட் அவுட் வருடக் கணக்காக உள்ளது. இப்படியே போனால் வீதியில் வருவோர் போவோர் முகத்திலெல்லாம் ஜெயாவின் படத்தை ஒட்டிவிடுவார்கள் போலும்.”வசந்த சேனைகளும் வட்டமிடும் கழுகுகளுடன் வரார் பராக் பராக்.”

  4. “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமானதும் எதிர்த் திசையில் உள்ளதுமான எதிர் வினை உண்டு” என்ற நியுட்டனின் கூற்று என்றுமே பொய்த்து போகாது!!!
    தில்லியில் நடந்த மாற்றம் மக்களை விலுங்கும் ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் சரியான பாடம்!!!

    • ஆனால் யாருக்கு சிறைத் தண்டனை கொடுத்ததற்காக, தருமபுரியில் 3 வேளாண் பல்கலைக் கல்லூரி மாணவிகள் உயிருடன் எறிக்கப் பட்டு கொலை செய்யப்பட்டதற்கும்,வாசாத்தியில் தமிழச்சிகள் கற்பளிக்கப் பட்டதற்கும், பொறுப்பாளருக்கு நியூட்டனின் விதி பொய்யாகி விட்டதே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க