privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்

பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்

-

“நாம், கலைத்துறையில் இருக்கும் தொழிலாளர்கள்; பாடகர்களாக, நடிகர்களாக, பல்துறைக் கலைஞர்களாக இருக்கும் நாம், மக்களிடமிருந்து வந்தவர்கள் என்பதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். நமது முழுத்திறனும் மக்களிடமிருந்து கிடைத்தது என்பதால் மக்களுக்கு சேவையாற்றுவது நமது கண்டிப்பான கடமையாகும். அதன் வழி அவர்களுடன் இரண்டறக் கலந்திருக்க வேண்டும்.’’ – பால்ராப்சன்.

பால் ராப்சன்
பால் ராப்சன்

அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் இப்படி முழக்கமிட்டான். எந்த அமெரிக்கா? நாம் கலைத்துறையில் இருக்கும் பன்னாட்டு முதலாளிகள்; மைக்கேல் ஜாக்சனாக, ஸ்பில்பெர்க்காக, ஆர்னால்டாக இருக்கும் நாம், மூலதனத்திலிருந்து வந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது. சுரண்டலின் மூலம் பெற்ற ஆற்றலை, மக்களை மழுக்குருண்டையாக மாற்றுவதற்கு பயன்படுத்துவது நமது கடமை. அதன் வழி பன்னாட்டு முதலாளிய தேவர்களுடன் கலந்திருக்க வேண்டும். நாம் கண்ட அமெரிக்கா இதுதான். ஆனால் நமக்கு மறைக்கப்பட்ட அமெரிக்காவையும் வரலாறு பதிந்திருக்கிறது.

‘புரட்சியின் நாதம் உங்களுக்கு கேட்க வில்லையா,’ ‘என் ஆன்மாவை ஒரு வெள்ளையனிடம் விற்க மாட்டேன்’ என்று நமது இதயங்களைத் தடையின்றித் தொட்டுப் பேசும் இன்றைய டிரேசி சாப்மென், வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்து வீதிதோறும் இசையால் முழங்கிய நேற்றைய ஜோன் பெய்ஸ், போன்ற மக்கள் பாடகர்கள்தான், அப்படி மறைக்கப்பட்டவர்கள். இப்படி ஒரு மரபை அமெரிக்காவில் தொடங்கி வைத்தவர் பால்ராப்சன். ‘அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ, ஒரு கலைஞன் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்’ எனும் ராப்சன் ஒரு பாடகராக மட்டுமல்ல, அரசியல் போராளியாகவும வாழ்ந்தார் என்பதுதான் இன்றும் அவர் மறைக்கப்படுவதற்கு காரணம்.

டீப் ரிவர் – பால் ராப்சன் (வேல்ஸ் நிலக்கரி சுரங்க கதை 1940)

நியூ ஜெர்சி மாநிலத்தில் 1898-ஆம் ஆண்டு ராப்சன் பிறந்தார். அவரது தந்தை வர்ஜீனிய மாநிலத்தில் அடிமையாக இருந்து சுதந்திர மாநிலங்களுக்குத் தப்பி ஓடியவர். ஒரு கறுப்பின அடிமையின் அவலங்களையும், போராட்ட குணத்தையும் தந்தையிடமிருந்தே மகன் அறிகிறார். ராப்சனின் குடும்பம் அமெரிக்காவின் மிகப் பழைய கருப்பின குடும்பங்களில் ஒன்று என்பதும் அவரது போராட்ட ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகித்தது.

பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற உயர் மதிப்பெண்கள் மூலம் ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர உதவித் தொகை கிடைக்கிறது. நிறவெறியின் களத்திலும் 15 வித விளையாட்டுக்களில் முதலிடம் வகித்தார். சிறந்த கால்பந்து வீரரான ராப்சன், ரட்கர்ஸ் பல்கலையிலிருந்து இருமுறை தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் கருப்பர் என்பதால் கல்லூரி அணியில் இடம் கிடைக்கவில்லை. அவரது கல்லூரியை வேறு ஒரு கல்லூரி 10 கோல் போட்டு தோற்கடித்த பின் தான், ராப்சனுக்கு அணியில் சேர முடிந்தது. தனது கல்வி நிறுவனத்துக்கு விளையாட்டுத் துறையில் மூலம் பல பெருமைகளை வாங்கிக் கொடுத்தாலும், ராப்சனின் பெயர் அவர் இறந்து 19 ஆண்டுகள் கழித்து 1995-ஆம் ஆண்டில்தான் கல்லூரி அணியில் விளையாடியவர் என அங்கீகாரம் பெற்றது.

கருப்பர்கள் விளையாட முடியாது என்ற அளவுக்கு நிறவெறி கோலோச்சிய காலத்தில் ராப்சனை ஒரு வீரனாக அங்கீகரிக்க மறுத்தார்கள். கல்லூரி அணி தோல்வியுற்ற பின் ஒரு வீரனென்று இல்லாமல் ஒரு அடியாளைப் போல் அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். இறுதியில் பட்டியலில் இடம் பெற 1995-ஆம் ஆண்டில்தான் முடிந்தது என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் யோக்கியதையைக் காட்டுகிறது.

பால் ராப்சன்
கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து மூர் கப்பல் தள தொழிலாளர்களுடன் பாடும் பால் ராப்சன் (செப்டம்பர் 1942)

பின்னர் சட்டம் பயின்று, நியூயார்க்கில் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்தார். ராப்சனுக்குக் கீழே பணியாற்றும் வெள்ளையன் ஒருவன் ஒரு கருப்பனுக்குக் கீழே வேலை செய்ய முடியாது என மறுத்ததன் மூலம் அவரது சட்டத்துறை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தான். 1921-இல் எஸ்லானடா என்ற மனித இயல் ஆய்வாளரைத் திருமணம் செய்தார். மனைவியின் தூண்டுதலினால் நாடகங்களில் நுழைந்தார் ராப்சன். மிகச் சிறந்த நடிகரானதும், சில திரைப்படங்களிலும் நடித்தார். இரண்டிலும் கறுப்பர் மற்றும் தொழிலாளர்கள், பற்றிய பிரச்சினைகளே அதிகம். அதனால் பெரும் நிறுவனங்கள் அவரைத் துண்டித்துக் கொண்டன.

1925-முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினார். சிறுவயதில் சர்ச் இசையை மட்டும் கேட்டிருந்த ராப்சன், இசைக் கல்வி எதுவும் பெற்றிருக்க வில்லை. ஆனால் கறுப்பின மக்கள் மரபிசையை முதன்முதலில் பயன்படுத்திய ராப்சன் பின் சீனா, ரசியா, வேல்ஸ், யூதம் என பலவித நாட்டுப்புற இசைகளைக் கற்றுக் கொண்டு பாட ஆரம்பித்தார். பல நாடுகளிலிருக்கும் மொழியியல், அழகியல், மனித ஒருமைப்பாடு மூன்றையும் தனது இசையால் விளக்கி நிகழ்த்தினார்.

ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர். 1927-இல் குடும்பத்துடன் லண்டனில் தங்கி ஒரு கலைஞராகவும், மொழியியல் அறிஞராகவும் வாழ ஆரம்பித்தார்.

பால்ராப்சன்
பால்ராப்சன்

அடிமை உலகிலிருந்து வந்த ராப்சன் இங்கிலாந்தின் வரவேற்பிலும், வசதியிலும் மூழ்கவில்லை. லண்டன் வருடங்களில் சோசலிச அரசியலைக் கற்றுக் கொண்டார். வேல்ஸில் இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து இரண்டறக் கலந்தார். நிறவெறியில்லாமல் வெள்ளையினத் தொழிலாளர்கள், கறுப்பர்களுடன் சேர்ந்து வாழ்வதையும், போராடுவதையும் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு அவரது விடுதலை வேட்கை கறுப்பின மக்களோடு நில்லாமல், தொழிலாளர்கள், பாசிசத்திற்கு எதிராகப்போராடும் மக்கள், தேசங்கள் என விரிந்து சென்றது.

1934-ல் சோவியத் நாட்டில் ராப்சன் மேற்கொண்ட பயணம் சோசலிசத்தின் நடைமுறையை அவருக்குக் காட்டியது. “முதன்முறையாக தன்னை ஒரு நீக்ரோவாக இல்லாமல், மனிதனாக நடத்தியது சோசலிச பூமிதான்”, என்று குறிப்பிட்ட ராப்சன் சோவியத் மக்களுடன் கொண்ட நட்பு அவர் இறப்பு வரை நீடித்தது. ஜெர்மனியிலும், ஸ்பெயினிலும் எழுந்த பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியை, விடுதலை விரும்பும் அனைத்து மக்களும் உருவாக்க வேண்டும் என்பதைப் பிரச்சாரம் செய்தார். பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து ஸ்பெயின் மக்கள் போராடிய காலத்தில் 1938-ஆம் ஆண்டு மாட்ரிட் சென்று மக்களின் போர்க்காலப் பாடல்களை பாடினார்.

அடுத்த ஆண்டில், பாசிசத்திற்கு எதிரான உலகப்போரில் அமெரிக்காவை ஈடுபட வைப்பதையும், தன் இன மக்களின் சம உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பினார். புகழின் உச்சியிலிருந்த ராப்சனை விடுவதற்கு இங்கிலாந்தின் தொழிலாளர்களும், கலைஞர்களும் விரும்பிவில்லை என்றாலும், அவர் கற்றுக் கொண்ட அரசியல், அதன் கடமையை நிறைவேற்ற விரும்பியது. ‘கம்யூனிஸ்ட் ஆதரவாளர்’ என குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளைச் சந்தித்த சார்லி சாப்ளின் அமெரிக்காவை விட்டு லண்டன் வந்த காலத்தில் ராப்சன் அமெரிக்கா திரும்பினார்.

உலகப்போர் முடிந்து, கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகள் அங்கே கொடிகட்டிப் பறந்த காலம். ஏற்கனவே அமெரிக்காவில் முற்போக்கு தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக இருந்த ராப்சன், மீண்டும் அவர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார். கலை உலகில் கறுப்பரென்பதால் புறக்கணிக்கப்படும் கலைஞர்களுக்காகவும் போராட ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சிப் போக்கில் 1948-ஆம் ஆண்டில் ராப்சன் நடவடிக்கைகளை முடக்கும் அரசு பயங்கரவாத இயக்கம் ஆரம்பித்தது.

கம்யூனிசக் கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் – நடவடிக்கைகள் அனைத்தும் வெளிநாட்டின் கைக்கூலிகள் என முத்திரை குத்தி ஒடுக்கப்பட்டன. ‘அமெரிக்க எதிர்ப்பு’ நடவடிக்கைகளை விசாரிக்கும் கமிட்டியும் சட்டமும் முழுவீச்சில் இயங்க ஆரம்பித்தன. ஜனநாயக,முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டிருந்த முற்போக்கு கட்சிக்காக ராப்சன் பிரச்சாரம் செய்து வந்தார். இறுதியில் ‘கம்யூனிஸ்ட்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, செனட் பிரதிநிதிகள் கமிட்டி முன்பு நிறுத்தி விசாரிக்கப்பட்டார். நீ ஒரு கம்யூனிஸ்ட்டா என்ற கேள்விக்கு ஆம் என்றோ, இல்லையென்றோ பதிலளிக்க மறுத்தார். தனது அரசியல் தெரிவைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், சோவியத் நாட்டை எதிர்க்கும் அமெரிக்கப் போரை ஆதரிக்க முடியாது என்றும் முழங்கினார். இத்தகைய பேச்சுக்களை அன்றும் இன்றும் அமெரிக்காவில் கேட்க முடியாது. ராப்சனின் முடிவு அவரது நண்பர்களையே வியக்க வைத்தது. கு-கிளக்ஸ்- கிளான் என்ற வெள்ளை நிறவெறி பயங்கரவாத அமைப்பும் ராப்சனைக் கொல்லப் போவதாக மிரட்டி வந்தது.

தொடர்ச்சியாக 1949-இல் பாரிசில் நடந்த உலக அமைதி மாநாட்டில் “தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படும் அமெரிக்க கருப்பர்கள், தம்மை ஒடுக்கும் சக்திகளுக்காக, ஒரு தலைமுறைக்குள் நமது மக்களுக்கு சமத்துவத்தை வழங்கிய சோசலிச நாட்டை எதிர்த்து போரிடுவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்று ராப்சன் பேசிய பேச்சு ஒரு திருப்புமுனை. கேவலம் ஒரு வாஜ்பாய், அத்வானி, பால்தாக்கரேவை கண்டிக்க வக்கற்றுப் போன நமது கலைஞர்களுடன் பால் ராப்சனை இணைத்துப் பாருங்கள். உலக ரவுடியை அதன் குகையிலிருந்தே எதிர்ப்பது, எவ்வளவு பிரமாண்டமானது, வீரமானது என்பது புரிய வரும்.

ராப்சனது பேச்சை, ஊதிப்பெருக்கி திரித்து அமெரிக்க அரசும், செய்தி நிறுவனங்களும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. கருப்பின மக்களின் ‘மதிப்பு வாய்ந்த’ ஏனைய தலைவர்களும் ராப்சனைக் கண்டிக்க ஆரம்பித்தனர். கருப்பின மக்களின் நலனை ராப்சனது பேச்சு புறக்கணித்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இன்றும் அமெரிக்காவில் கருப்பின உரிமைக்காகப் போராடும் இயக்கங்கள், அரசின் வெளியுறவு ஆதிக்கக் கொள்கையை விமர்சிக்கமாட்டார்கள். அந்த அளவுதான் அவர்கள் போராடுவதற்கான எல்லை, அந்தத் தலைவர்களும் அதை நெஞ்சார ஏற்றுக் கொண்டவர்கள் தான். ஆனால் ராப்சன் ஏற்கவில்லை.

பால் ராப்சன் – நேர்முகம்

மோதலும் முற்றியது. ராப்சன் நாடு திரும்பிய போது 11 கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவரது நண்பர்கள், கலைஞர்கள் பலர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்த அடக்கு முறை பயங்கரவாதத்தின் தொடர்ச்சியில் பலர் வீழ்ந்தனர். வீழாத சிலரில் ராப்சன் முன்னணியிலிருந்தார். அவரது சொந்த ஊருக்குப் போவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிற் சங்கங்களுக்காக, நியூயார்க்கில் பீக்ஸ்கில்லில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி வெள்ளை நிற வெறியர்களால் அரசு உதவியுடன் தாக்கப்பட்டது. ‘எங்கெல்லாம் என் பாட்டை மக்கள் விரும்புகிறார்களோ, அங்கு நிச்சயம் செல்வேன்’ என்று இடியாய் முழங்கினார் ராப்சன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ராப்சன் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு அதிகப்படுத்தியது.

தொலைக் காட்சிகளும், வானொலிகளும் அவரைப் பேட்டியெடுக்க மறுத்தன. செய்தி நிறுவனங்கள் ராப்சனது செய்திகளைத் தணிக்கையிட ஆரம்பித்தன. அவரது இசை நிகழ்ச்சிக்கான அரங்குகள் தருவதற்கு யாரும் தயாரில்லை. கடைகளிலிருந்து அவரது ஒலிப்பேழைகள் திடீரென மாயமாய் மறைந்து போயின.

“நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை” என கையெழுத்திட மறுத்த ராப்சனது, பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. அனைத்து வருமானங்களையும் இழந்த ராப்சன், தனது சொந்த வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருந்தும் தனது கொள்கையை விற்க மறுத்த ராப்சன், “இவை என் உறுதியில் ஆயிரத்திலொரு பங்கைக் கூட குறைக்க முடியாது” என எட்டுத் திக்கும் நிமிர்ந்து அறைக்கூவினார். ‘அமெரிக்க நலனுக்கெதிரான’ நடவடிக்கைகளை விசாரிக்கும் கமிட்டி முன் ‘பொய்யான அமெரிக்கர்களான நீங்கள், உங்களுக்காக வெட்கப்பட வேண்டும்’ எனக் காறி உமிழ்ந்தார். ராப்சனை அடக்க நினைத்த அரசு தனது பயங்கரவாதத்தை எப்.பி.ஐ மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகள் செயல்படுத்தி வந்தது.

பால் ராப்சன் பட்டம்
1919 ரட்கர் வகுப்பில் பட்டம் பெற்ற பால் ராப்சன் (இடது புறம் முதலில்)

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா 4 கண்டங்களிலிருந்தும் பல்வேறு அமைப்புக்கள், கட்சிகள் சார்பாக கண்டனக் குரல்கள் எழுந்தன. ராப்சனை அச்சுறுத்தும் அமெரிக்க அரசை எதிர்த்து உலக இயக்கம் தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மெக்கார்தி யுகம் (கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகள்) முடியும் தறுவாயில், உலக நிர்ப்பந்தம் காரணமாக 1958-இல் ராப்சன் பாஸ்போர்ட் திரும்ப தரப்பட்டது.

மீண்டும் அந்தக் கருப்புக் குயில் தனது விடுதலை இசையை உலகெங்கும் பரப்ப பயணமானது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட காலத்திலும், தனது இசையை ஒலிப்பேழைகள், தொலை பேசி மூலமாக உலகத்தொழிலாளர் இயக்கங்களுக்கும், முற்போக்கு அமைப்புக்களுக்கும் அனுப்பி வந்தார். 1952-இல் கனடாவில் தொழிலாளர் அமைப்பு அவரை அழைத்தது. அமெரிக்க அரசு தடை செய்தது. மீறினால் 5 வருடம் சிறை எனத் தெரிந்தும், ராப்சன் கனடாவை நோக்கிப் பயணமானார். எல்லையில் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டார். அங்கேயே இருநாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் எல்லையிலேயே இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

தடைக்கு முன்னும், பின்னும் அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் வருமானங்கள் அனைத்தும் அகதிகள், தொழிலாளர் அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டன. ஒரு மக்கள் கலைஞனுக்கு இவையெல்லாம் சாதாரண விசயம்தான். இருப்பினும் தடையால் தன் வருமானங்களை இழந்தபோதும் பணம் ஈட்டும் பொருட்டு இசை நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பது அவர் ஒரு மகத்தான மக்கள் கலைஞன் என்பதை உணர்த்தும்.

விடுதலைக்காகப் போராடும் தொழிலாளர்கள், கறுப்பர்கள், காலனிய நாடுகள், கம்யூனிஸ்டுகள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த இசைக் குயில் தனது கடைசி உலக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது. நோய்வாய்ப்பட்ட உடல்நிலையில் 1976-ஆம் ஆண்டு முதல் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இறப்பதற்கு முன் “என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எதுவும் வீணில்லை” எனப் படுக்கையிலும் உறுதியுடன் இருந்த அந்தப் போராளி 1976-இல் மறைந்தார்.

விளையாட்டு வீரராக, வழக்கறிஞராக, நடிகராக, பாடகராக என ஒவ்வொரு துறைக்கும் ராப்சன் மாற நேர்ந்தது. அவருடைய விருப்பத்தினால் அல்ல. எந்தத் துறையிலும் இடம் கொடுக்க விரும்பாத நிறவெறிதான் அவரைப் பல துறைகளுக்குப் பந்தாடியது. இருப்பினும் அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, இறுதியில் ஒரு அரசியல் போராளியாக மாறினார். அவர் நினைத்திருந்தால், ஏதோ ஒரு துறையில் சமரசம் செய்து கொண்டு பொருளீட்டியிருக்கலாம்.

குத்துச் சண்டை முகமது அலி, கூடைப்பந்து ஜோர்டன், ஹாலிவுட்டின் எடி மர்பி, பாப்பிசையின் மைக்கேல் ஜாக்சன் போன்ற கறுப்பர்கள் தத்தம் துறையில் பிரபலமாகி கோடீஸ்வரர்களாகத் திகழ்பவர்கள். ராப்சனும் அப்படி வாழ்ந்திருக்க முடியும். அல்லது ‘மார்டின் லூதர் கிங்’ போல கறுப்பின உரிமைக்குப் போராடுவதோடு நின்றிருக்க முடியும். மாறாக ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், கம்யூனிசத்தையும் நாடிய ராப்சன் தனது வாழ்க்கை இதற்காக மட்டும்தான் என முடிவு செய்தார். அதன் படி அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்தார்.

20 மொழிகள் அறிந்த ராப்சன் அவற்றை ஒரு மொழியியல் அறிஞர் என்பதனால் கற்கவில்லை. பல நாட்டு மக்களுடன் பழகி அவர்கள் பாடல்களை அவர்களது மொழியிலேயே பாட விரும்பி, கற்றுக் கொண்டார். கனடா, பனாமா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் போராட்டங்கள் விழாக்கள், வேலை நிறுத்தங்கள், துப்பாக்கிச் சூடுகள் எதுவாக இருந்தாலும் சென்று கலப்பார்; பாடுவார். பிரெக்ட், பாப்லோநெருடா, ஐசன்ஸ்டின், நசீம் இக்மத் போன்ற சமகால மக்கள் கலைஞர்களுடன் உறவும் நட்பும் கொண்டவர். சோவியத் நாடு மக்களுடன் அவர் கொண்டிருந்த அன்பும், நேசமும் தான் மிகவும் குறிப்பிடத்தக்கது.

ராப்சன் அமெரிக்காவில் உரையாற்றிய மற்றும் இசை நிகழ்ச்சிகளின் ஒளிப்படங்கள் தற்போது அழிக்கப்பட்டு விட்டன. இருக்கும் படங்களிலும் ஒலி அழிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ராப்சனது தபால் தலையை வெளியிட கிளிண்டன் அரசு மறுத்து வருகிறது.

இளம் சோவியத் நாட்டிற்கு ஆதரவாகவும், பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு எதிராகவும், நிறவெறியை ஒழிக்கவும் – சபதம் பூண்டு, தன் வாழ்க்கை முழுவதும் போராடிய அந்த மக்கள் கலைஞனை உலக உழைக்கும் மக்கள் தமது நெஞ்சங்களில் நிறைத்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவால் அழிக்க முடியாது.

________________________________________________________________

பெட்டிச் செய்தி 1

ராப்சன் பேசுகிறார்…

வேல்ஸ் தொழிலாளர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அது வெறும் அழைப்பு மட்டுமல்ல, அதற்கு மேலும் அர்த்தமுண்டு. உங்களுக்குத் தெரியும், இங்கிலாந்தின் அங்கமாயிருக்கும் வேல்சில்தான் கறுப்பு, வெள்ளை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட முடியும் என்பதை முதலில் உணர்ந்து கொண்டேன். அங்கிருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு தொழிலாளர்களுடன் செல்வேன். அவர்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அதையே ‘ப்ரவுட் வேலி’ (PROUD VALLEY) என்ற படத்தில் நடித்துமிருக்கிறேன்…

‘நான் ஒரு அமெரிக்கன். கடல் கடந்து, பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் வீரர்களுடன் கைகுலுக்கிய தாமஸ் ஜெபர்சனைப் போல, கண்டம் விட்டு வாழும் அற்புதமான சோவியத் மக்களுடன் கைகோர்க்கிறேன். இது என் உரிமை, ஒரு அமெரிக்கன் என்பதால்….’’

“மலையின் உச்சியிலிருந்து உலகைப் பார்க்கிறேன். ஆப்பிரிக்கா, கனடா, அனைத்து உலகிலும் என் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் ஏனெனில் மனித இனம் ஒன்றே ஒன்றுதான். நிறம், இனம், பண்பாடு என அடிப்படையான வேறுபாடுகள் எதுவும் கிடையாது. மனித இனம் முழுமையும் அன்புடனும், நேசத்துடனும் வாழ முடியும். என் அனுபவத்தில் அதை உணர்ந்திருக்கிறேன். அப்படி மக்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் மொழியைக் கற்றிருக்கிறேன். அவர்கள் பாடலையும் பாடுகிறேன். மனித ஒருமைப்பாடு ஒரு எளிய விசயம்தான். அதேசமயம் நமது எதிரிகள் அதை விரும்பவில்லை, என்பதையும் அறிவோம். ஏற்கெனவே சொன்னதைப் போல, என் வாழ்க்கையை, அன்றாடம் போராடும் அத்தகைய மக்கள் திரளினருக்குத்தான் கொடுப்பேன். அவர்கள் போராட்டங்களுக்கு உதவி செய்வேன். அதற்காக ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். போராட்டத்தைத் தொடருவேன். அதையே உண்மை எனக் காண்கிறேன்.

ஆகஸ்ட் 16, 1953 –வாஷிங்டன் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசியது.

பால் ராப்சன்
பால் ராப்சன் சோவியத் யூனியனில்

உலக மக்களிடையே அமைதியைப் பிரச்சாரம் செய்தமைக்காக, சர்வதேச ஸ்டாலின் அமைதி விருது கிடைத்தது பற்றி நண்பர்கள் கேட்கிறார்கள்: ‘உங்கள் உணர்வு எப்படி இருந்தது?’ ஏனைய விருது பெற்றவர்களைப் போல, ‘இது மிகப்பெரும் மரியாதை’ என்று வழக்கமாகச் சொல்லலாம். ஆனால் அப்படியில்லை. இந்த விருது வெறும் நன்றி தெரிவிப்பதைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. ஏற்கனவே விளையாட்டு, கலை கறுப்பின மக்களின் சம உரிமைக்கான போராட்டம், தொழிலாளர் உரிமைகள், அமைதிக்கான போராட்டம் போன்றவற்றில் என் பங்கு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது… இந்தப் பரிசு உண்மையிலேயே ஒரு உலக விருது. மிகவும் முக்கியமானது, இந்தப் பரிசை ஒரு தனி நபராக நான் பெற்றுக் கொள்ள வில்லை…

விடுதலை இதழ் ஜனவரி 1953, ஸ்டாலின் அமைதிப் பரிசு பெற்றது குறித்து

“நான் வளர்ந்து பெரியவனாகிய பிறகு, முதன் முதலில் ஒரு மனிதனாக இங்கேதான் உணருகிறேன். நான் ஒரு நீக்ரோ அல்ல: ஒரு மனிதன். இங்கே வரும் முன்னால் இப்படிக் கூட ஒரு விசயம் இருக்கும் என்பதை நம்பவில்லை. என் வாழ்வில் முதன் முறையாக கவுரவத்தோடு நடத்தப்படுகிறேன். ஒரு நீக்ரோ இதை எப்படி உணருவான் என்பதை உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.”

1934 சோவியத் பயண அனுபவத்தை, ரசிய திரைப்பட இயக்குநர் ஐசன்ஸ்டினிடம் – ராப்சன் தெரிவித்தவை.

பெட்டிச் செய்தி 2

நியுயார்க் அருகிலுள்ள பீக்ஸ்கில் பூங்கா. அங்கே கருப்பின மக்களும், யூத தொழிற் சங்கத்தினரும், சமாதானம் விரும்பும் சங்கத்தினரும் 1949 ஆகஸ்ட் 27 அன்று ராப்சன் இசை நிகழ்ச்சியை நடத்த முடிவுசெய்கின்றனர். கூ-கிளக்ஸ்- கிளான் என்ற வெள்ளை நிறவெறி அமைப்பும் அமெரிக்க ‘லீஜியன்’ என்ற ‘முன்னாள் இராணுவவீரர் சங்கமும்’ சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்த விடாமல் கலவரம் செய்கிறார்கள்; தாக்குகிறார்கள். அன்றைய நிகழ்ச்சி ரத்தானது.

‘நானும், எனது மக்களும் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பணிய மாட்டோம்,’ என்று ராப்சன் பதிலடி கொடுத்தார். அடுத்தவாரம் நியூயார்க் மற்றும் பல இடங்களிலிருந்து சுமார் 25,000 மக்கள் ராப்சனுடன் பீக்ஸ்கில் சென்றனர். 2,500 தொழிலாளர்கள் பூங்காவைச் சுற்றி மனிதச் சங்கிலியாகப் பாதுகாப்பு கொடுக்க, இசை நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடந்தேறியது. வெளியே வெள்ளை நிறவெறியர்கள் நிகழ்ச்சி முடிந்து திரும்பியவர்கள் தாக்கினார்கள். நூற்றுக்கணாக்கான மக்கள் படுகாயமடைந்தனர். அரசன் போலீசும், நிர்வாகமும் வேடிக்கை பார்த்தது. வெள்ளைப் பத்திரிகைகளும் இத்தாக்குதல்களை மறைத்தன. உலக முற்போக்கு அமைப்புக்களும், கலைஞர்களும் இத்தாக்குதலைக் கண்டித்தனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அமெரிக்கத் தொழிலாளர்கள் வரலாற்றில் பீக்ஸ்கில் நிகழ்ச்சி, ஒரு ரத்த சாட்சியாகப் பதிந்து விட்டது.

பெட்டிச் செய்தி 3

ஜோ ஹில்லுக்கு நினைவஞ்சலி

வெள்ளையரினத்தில் பிறந்த ஜோஹில், ஒரு தாமிரச் சுரங்கத் தொழிலாளி; அமெரிக்காவின் உட்டா வட்டாரத்தில், சுரங்க முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளிகளைத் திரட்டிப் போராடிய ஒரு தலைவன். அவன் மீது கொலைப்பழி சுமத்திய முதாலாளிகள் தூக்கிலேற்றிக் கொன்றார்கள். அந்த வீரனைப் பற்றி ராப்சன் பாடும் நினைவஞ்சலிப் பாடல்:

நேற்றிரவு,
என் கனவில்
ஜோவைக் கண்டேன்
’நீ இறந்து10 வருடமாயிற்றே’
ஜோவிடம் கேட்டேன்.

இல்லை,
எப்போதும்
எனக்கு மரணமில்லை என்றான்.
தாமிர முதலாளிகள்
உன்னைக் கொன்றார்களே!,
சுட்டு விட்டார்களே,
பதட்டத்துடன் கேட்டேன்.

ஒரு மனிதனைக் கொல்ல
எத்தனை துப்பாக்கிகள்
வேண்டுமானாலும் எடுக்கட்டும்
நான் இறக்க மாட்டேன்
ஒரு போதும் மறைய மாட்டேன்
என்றான் ஜோ.

உயிர் போல் முழுதாய் நின்று
கண்கள் சிரிக்க
பேசினான் ஜோ,

அவர்கள் கொல்ல மறந்தது
எதுவோ,
அது சென்றது

மக்களை அணிதிரட்ட.
சான்டிகோ முதல்
மையின் வரை
ஒவ்வொரு ஆலையிலும்,
தங்கள் உரிமைக்காக
போராடும் தொழிலாளிகள்
இருக்கும் இடங்களிலெல்லாம்
ஜோ ஹில் இருப்பதை
நீங்கள் கண்டுபிடிக்கலாம்
நீங்கள் காணலாம்.

நேற்றிரவு,
என் கனவில்
ஜோவைக் கண்டேன்.

–  வேல்ராசன்

(பால்ராப்சன் நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை.)
____________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 1999
____________________________________________

ஜோ ஹில்லுக்கு நினைவஞ்சலி – யூ டியூப் வீடியோ