Monday, August 15, 2022
முகப்பு செய்தி ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்

ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்

-

வேலைப்பறிப்பு தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற மைய முழக்கத்தின் கீழ் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்த இயக்கத்தின் தொடர்ச்சியாகவும், கடந்த நவம்பர் மாதம் ராம்கோ குரூப் இராஜபாளையம் மில்ஸ்-ன் முன்பாக துண்டு பிரசுரம் வினியோகித்துக் கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் டிசம்பர் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அந்தப் பகுதியில் செயல்படும் பு.ஜ.தொ.மு சார்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக வெண்மணி தியாகிகள் தினத்தில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தேதி மாற்றி போராடி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கப்பட்டது.

ராம்கோ குரூப் முதலாளி பி.ஆர்.ஆர் இருக்கும் ஊர் இராஜபாளையம் என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. இராஜபாளையம் ஊரின் மொத்த நிர்வாகமும் அவர்களின் சட்டைப் பையில் தான். அவர்கள் நினைப்பது தான் நடக்கும். அது தான் துண்டுப் பிரசுரம் வினியோகித்த தோழர்களை தாக்கும் அளவுக்கு துணிவைக் கொடுத்திருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் மில் நிர்வாகம் மட்டுமல்ல, இராஜபாளையமே கண்டிராத புதுமையாக இருந்தது மக்களுக்கு. இராஜபாளையம் மில்ஸின் ரவுடித்தனம் என்று தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகள் மதுரையிலிருந்து செங்கோட்டை வரை ஒட்ட்ப்பட்டிருந்தன. இராஜபாளையம் ஊருக்குள் ஒட்டினால் போலீசு துரத்தியடித்தது பசையைக் கொட்டியது ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்துப் போட்டது. ஆனாலும் தோழர்கள் ஒரு நாளைக்கு ஐந்து சுவரொட்டிகள் என்று கணக்கு வைத்துக் கொண்டு கிழிக்கக் கிழிக்க ஒட்டிக் கொண்டே இருந்தார்கள். சுவரொட்டியை பார்த்த தொழிலாளர்களும் மக்களும் “இராஜபாளையத்தில் ராம்கோ குரூப்புக்கு எதிராக சுவரொட்டியா” என வியந்து நின்றார்கள். விளைவு, “எங்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்” என்று தொழிலாளர்களைப் பார்த்து நிர்வாகத்தினரைக் கேட்க வைத்தது. யார் இந்த பு.ஜ.தொ.மு என அறிவதற்காக புதிய ஜனநாயகம் இதழை வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆலை நிர்வாகத்தின் முறைகேடுகள், ஒடுக்கு முறைகளைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு உணர்வூட்டியும் இரண்டாவதாக ஒரு பிரசுரம் கொண்டு வரப்பட்டது. இப்பிரசுரம் ராம்கோ குரூப் ஆலைகளுக்கு எந்தெந்தப் பகுதிகளிலிருந்தெல்லாம் தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்களோ அந்தத்ந்தப் பகுதிகளிலெல்லாம் சென்று வீடு வீடாக வினியோகிக்கப்பட்டது. இராமலிங்காபுரம், சத்திரப்பட்டி, அய்யனார்புரம், துரைசாமியாபுரம், ஓ.பி கிருஷ்ணாபுரம், வேப்பங்குளம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பிரசுரம் வினியோகிக்கப்பட, அந்தப் பிரசுரங்கள் ஆலைக்குள் வந்து தொழிலாளர்களிடையே விவாதங்களைக் கிளப்பிவிட கலங்கிப் போனது ஆலை நிர்வாகம். உடனே உள்ளே இயங்கிக் கொண்டிருந்த மூன்று போலி தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அந்தத் தொழிற்சங்கங்கள் “இவர்கள் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், குண்டு வைப்பவர்கள், தீய சக்திகள் இவர்களை உள்ளே விட்டால் நமக்குத்தான் ஆபத்து. எதுவானாலும் மூன்று சங்கங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்வோம். புதிய ஆட்களை அனுமதித்து விடாதீர்கள்” என்று தொழிலாளர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். மறுபுறம் ஹெச்.ஆர் மேனேஜர் “உங்கள் கோரிக்கை என்னவாக இருந்தாலும் என்னிடம் தெரிவியுங்கள். நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்று கூட்டம் நடத்தினார். உடனே,  “480 நாட்கள் வேலை செய்தவர்களை பணிநிரந்தரம் செய்“, “வாரவிடுப்புக்கு ஊதியம் வழங்கு” எனும் இரண்டு கோரிக்கைகள் அடங்கிய கையெழுத்து சுவரொட்டி சில பகுதிகளில் ஒட்டப்பட்டது. தொழிலாளர்களோ, “இரண்டு பிரசுரம் போட்டதற்கே இப்படி என்றால் இவர்கள் சங்கம் கட்டினால் எப்படி இருக்கும்” என்று பேசத் தொடங்கினார்கள்.

இன்னொருபுறம் சட்ட நடவடிக்கையாக உள்ளூர் காவல்துறை தோழர்கள் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆலை முதலாளி, ஹெச்.ஆர் மேனேஜர், மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரும் ‘கோர்ட் டைரக்சன்’ வேண்டி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் டைரக்சன் வந்து விடும்.

இந்த நிலையில் தான் “ராம்கோ முதலாளியை கிரிமினல் சட்டத்தில் கைது செய்” எனும் உரத்த முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. நிர்வாக குண்டர்களால் தாக்கப்பட்ட தோழர் அய்யனார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். தன் தலைமை உரையில் “நாங்கள் சோரம் போகக்கூடியவர்கள் அல்ல. எது வந்தாலும் தைரியமாக எதிர்த்து நிற்போம். ஏனென்றால் நாங்கள் நேர்மையாக போராடுகிறோம், தொழிலாளர்களுக்காக போராடுகிறோம். காசு பணம் ஆசை காட்டலோ, மிரட்டலோ எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது” என்றும், தாக்கப்பட்ட அன்று ஆலையில் நடந்தவற்றை விவரித்தும் பேசினார்.

அன்று தாக்குதலுக்கு ஆளான இன்னொரு தோழர் இசக்கியம்மாள் அன்று உள்ளே நடந்தவற்றையும், ஆலை நிர்வாகத்தின் அத்துமீறலையும் காவல் துறையின் கையாலாகாத் தனத்தையும், இதுவா ஜனநாயகம்? என்று கேட்டு மக்கள் மொழியில் எள்ளி நகையாடினார். அதிலும் குறிப்பாக எதிரே நின்றிருந்த ஒரு காவலரை நோக்கி கைநீட்டி “இதோ இந்த போலீசுக்காரர்தான் தான் எப்படி நீ முதலாளிக்கு எதிராக நோட்டிசு கொடுக்கலாம் என்று என்னை கேட்டவர்” என்று போட்டு உடைத்ததும் அந்த போலீசின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.

கண்டன உரையில் முதலாவதாக, வி.வி.மு தோழர் சம்மனஸ் இராஜபாளையம் பகுதியின் வரலாற்றை எடுத்துரைத்து, “தாத்தன் முப்பாட்டன் காலத்திலிருந்து இந்தப் பகுதியில் வசித்து வரும் தோழர்களைப் பார்த்து, நேற்று வந்த வந்தேறியான நீ யார் என்று கேட்கிறாயா?” என்று கர்ஜித்தார். இந்தப்பகுதியில் ராஜூக்கள் எப்படி யார் தயவில் வந்து தொழில் தொடங்கினார்கள்?, எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்கள்? என்பதையும் எடுத்துரைத்தார்.

அடுத்து, தோழர் நாகராஜ் சிவகங்கை புஜதொமு அமைப்பாளர் பேசும் போது, “இந்த ராஜபாளையம் மில்ஸில் நடந்த தாக்குதல் என்பது இங்கு மட்டும் நடந்த ஒன்றல்ல, உலகம் முழுவதிலும் முதலாளிகள் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறார்கள். இதற்கான அடிப்படை அரசிலும், அரசின் கொள்கையிலும் இருக்கிறது. தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் விலைவாசி உயர்வு போன்ற உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் வேறுவேறு அல்ல”. முதலாளிகள் சட்டவிரோதமான முறையில் தொழிலாளர்களை வஞ்சிப்பதையும் அதையே சட்டபூர்வமானதாக ஆக்கிவிட்டதையும், போலித் தொழிற்சங்கங்களையும் அம்பலப்படுத்தி, “தனியார்மய தாராளமய உலகமய கொள்கையையும் அதை தாங்கிப் பிடித்து அமல்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசுகளையும் தூக்கி வீசி உழைக்கும் வர்க்கம் தமக்கான அரசை அமைத்துக் கொள்ளும் போது தான் இது போன்ற கொடுமைகளை தடுக்க முடியும்” என்று விளக்கினார்.

இறுதியாக, சிறப்புரையாற்றிய தோழர் வெற்றிவேல் செழியன், புஜதொமு மாநில அமைப்பாளர் பேசும் போது, “இந்தக் கொடுந்தாக்குதலுக்கு எதிராக ராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும்? தொழிற்சங்க நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? ஆனால் இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு மாற்றாக புஜதொமு எவ்வாறு செயல்பட்டு தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கைக்கு பாத்தியமாயிருக்கிறது” என்பதை விளக்கி, ராம்கோ நிவாகத்தின் அடக்குமுறைகளை பன்னாட்டு தொழிற்சாலைகளின் அடக்குமுறைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, இவைகளை வெகு எளிதாக வெற்றி கொள்ளலாம் என்று பேசியது தொழிலாளர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாகவும், அதேநேரம் வீரியத்துடனும் இருந்தது. நாடெங்கிலும் முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்தை கசக்கிபிழியும் கொடூரத்தையும் அதற்கு ஆதரவான போக்கையையே தனது கொள்கயாகக் கொண்டுள்ள அரசுகளின் மக்கள் விரோதப் போக்கையும் அம்பலப்படுத்தியதோடு எதற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட வேண்டியதின் அவசியத்தையும் விளக்கினார்.

பின்னர், விவிமு தோழர் நாகராஜ் நன்றியுரை கூற, அனல் பறந்த முழக்கங்கள் மீண்டும் ஒருமுறை உரத்து முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடக்கூடாது என்று கடைசி வரை முயற்சித்தது ராம்கோ நிர்வாகம். ஆனால் அது முடியாமல் போய் விடவே தன்னுடைய நிர்வாகிகள் பலரை அனுப்பி ஆர்ப்பாட்டம் நடந்த ஜவகர் திடலின் பலமுனைகளிலும் நிறுத்தி தொழிலாளர்கள் யாரும் கலந்து கொள்கிறார்களா என்று கண்காணித்து அதன் மூலம் ஆர்ப்பாட்டத்தை பிசுபிசுக்க வைத்து விடலாம் என்றும், காவல்துறை உதவியுடன் ஆர்ப்பாட்டத்தை காட்சிப் பதிவு செய்வதன் மூலம் பயத்தை ஏற்படுத்தி விடலாம் என்றும் முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் நிர்வாகத்தின் இந்த கீழ்த்தரமான உத்திகளையெல்லாம் முறியடித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன் கடைசி வரை உற்சாகமாக இருந்தது ராம்கோ நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசுவதாக அமைந்தது.

ராம்கோ முதலாளி என்றால் வள்ளல் போல உருவகிக்கப்பட்ட ‘குருபக்தமணி’ பட்டமும், ஒரு புனிதத்தனம் நிறைந்த பெரிய மனிதர் என்பது போன்ற தோற்றமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரக்க முழங்கப்பட்ட, ராம்கோ முதலாளியை கிரிமினல் சட்டத்தில் கைது செய் எனும் முழக்கமும், அவர் பெயரையே உச்சரிக்கத் தயங்கிய நிலையில் ராம்கோவில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதும் அந்தப் புனிதப் போர்வையை உடைத்து நொருக்கியதுடன், அந்தப்பகுதி மக்களை ஆச்சரியத்துடன் கவனிக்கவும் வைத்தது. இது தொடக்கம் தான். ராம்கோவில் புஜதொமு கட்டாமல் தோழர்கள் ஓயப்போவதில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
இராஜபாளையம்

 1. நாளைக்கு அந்த ஆள் கம்பெனிய இழுத்து அடைச்சுட்டு போன என்னப்பா பண்ணுவிங்க?

  • கவர்மெண்ட் மயிர் புடுங்கவா இருக்கு? ராம்கோ அந்தபகுதியில் நமதுநிலங்களை கண்டம் செய்து குதறி தொழிலாளர் உழைப்பை சுரண்டி சொத்து சேர்த்து உள்ளதை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கச் செய்ய போராடுவோம்!

   • அதுக்கும் பேராட்டமா? வௌங்குன மாதிரி தான்.

    அப்ப தீர்வு எதுவும் உங்ககிட்ட இல்ல. போராடி தீக்குற வரைக்கும் வேலை இழந்தவய்ங்களுக்கு சோறு?
    உங்களுக்கு கவலை இல்லை.

 2. நெஞ்சுரத்துடன், தீரமிக்க வகையில் போராடும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ## ராம்கோ முதலாளி என்றால் வள்ளல் போல உருவகிக்கப்பட்ட ‘குருபக்தமணி’ பட்டமும், ஒரு புனிதத்தனம் நிறைந்த பெரிய மனிதர் என்பது போன்ற தோற்றமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரக்க முழங்கப்பட்ட, ராம்கோ முதலாளியை கிரிமினல் சட்டத்தில் கைது செய் எனும் முழக்கமும், அவர் பெயரையே உச்சரிக்கத் தயங்கிய நிலையில் ராம்கோவில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதும் அந்தப் புனிதப் போர்வையை உடைத்து நொருக்கியதுடன், அந்தப்பகுதி மக்களை ஆச்சரியத்துடன் கவனிக்கவும் வைத்தது. இது தொடக்கம் தான். ராம்கோவில் புஜதொமு கட்டாமல் தோழர்கள் ஓயப்போவதில்லை.##

  மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன இந்த வரிகள்!

 3. “வேலைப்பறிப்பு தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” இந்த உண்மையை உரக்கச்சொல்லட்டும் தொழிலாளி வர்க்கம் இதை கேட்டு நடுங்கட்டும் முதலாளி வர்க்கம்.தொழிலாளியே உன் உரிமை பரிக்கும் போதும்,உன் வழ்வைமுடிக்கும் போதும்,முதலாளிகள் உன்னை கொலைசெய்யும் போதும், எந்திரங்கள் கோபம் கொண்டு வெடித்து சிதைவதை பார்க்கும் நீ… முதலாளி எனற கொலைகாரனுக்கு எதிராக வெடித்தெழு…………..எந்திரத்திற்கு கூடுதலாக.

 4. எவருடைய அவலங்களுக்காக தோழர்கள் குரல் கொடுக்கிரார்களோ, அவர்களில் ஒருவராக அனைத்து தொழிலாளர்களும் மாறும் காலமே பொற்காலம் அந்தநாள் இனிதே கூடி வர வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க