privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇசைதமிழிசை மரபு சில குறிப்புகள்

தமிழிசை மரபு சில குறிப்புகள்

-

தமிழ் இசை மரபை இருட்டடிப்பு செய்து பார்பனியம் மற்றும் வடமொழி சார்ந்த ‘கர்நாடக இசை’ மரபே தமிழகத்தின் செவ்வியல் இசை மரபு என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை தஞ்சையை சேர்ந்த இசையறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே நிரூபித்தார்.

1917-ல் வெளியிடப்பட்ட அவரது கருணாமிருத சாகரம் என்னும் இசை ஆய்வு நூல் இவ்வுண்மையை ஆணித்தரமாக நிறுவுகிறது. இசைக் கல்லூரிகளிலோ, இசை விழாக்களிலோ இதுபற்றி மூச்சும் விடப்படுவதில்லை.

இதுவன்றி திரு.மு.அருணாசலம் அவர்கள் எழுதிய கருநாடக சங்கீதம், தமிழிசை ஆதிமும்மூர்த்திகள் என்ற நூலும் இசையறிஞர் தண்டபாணி அவர்களின் ‘திராவிட இசை’ எனும் நூலும் மேலும் பல அறிஞர்களின் ஆய்வு நூல்களும் இதனை நிரூபிக்கின்றன.

மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து நமது வாசகர்ரொருவர் தொகுத்தனுப்பிய விவரங்களை கீழே தருகிறோம்.

இசை மட்டுமல்ல கருவிகளும்

தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்மக்களுக்குமே உரிமையாயிருந்து, இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகளுக்கும் பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக் கருவிகளாக பல்கி பெருகியுள்ளன.

பரதர் நூலில் ஆதாரம்

“ தென்னிந்திய மக்கள் பற்பல நடனங்களிலும், வாய்ப்பாட்டிலும், வாத்திய சங்கீதத்திலும் தனிப்பட்ட கலையார்வம் காட்டுகிறார்கள். அவர்களின் கலைகளில் அழகும் மதுரமும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. அவர்களின் சமர்த்தியமான் அபிநயங்கள் பொலிவுடன் விளங்குகின்றன. இவ்வாறு நுண்கலைகள் உலவும் நாடானது வடக்கே விந்திய மலையாலும் மற்ற மூன்று திசைகளில் கடலாலும் சூழப்பட்டுள்ளது”, பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் 5-ம் நூற்றாண்டு.

பண்டைக்காலத் தமிழகத்தில் பண் இசைப்போரை பாணர் என்றும் பெண்டிரைப் பாடினி என்றும் குறித்தனர். இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர் என்றும் யாழ் இசைத்தவர் யாழ்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் என்று அழைக்கப்பட்டனர் என தமிழிலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன. வடமொழியாளர் இசைபாடியதாகவோ நடனமாடியதாகவோ பழம் நூல்களில் குறிப்பு இல்லை.

தமிழ்ப் பண்கள்

நிலத்தை உழுது பயிரிடும் போதும் உணவுக்காக நெல்லைக் குற்றும் போதும் சுமை சுமந்து செல்லும் போதும் களைப்பின்றி நடக்கவும் ஆணும் பெண்ணும் பாடினர். அறுபடையிட்டு பொங்கலிட்டு ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து ஆடிப்பாடினர். நெடுஞ்சாலையில் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயமின்றி பயணம் செய்தனர்.

தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில : அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன.

நாடோடி இசைப்பாடல் வகைகள் : உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன.

பார்ப்பனப் புரட்டு

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட “சங்கீத ரத்னாகரம்” என்ற நூலே குறிப்பிடத்தக்க வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும். தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னர் அந்நூல் இயற்றப்பட்டுள்ளது. அந்நூலில் சாரங்க தேவர் இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி,தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய பிருகத தேசி என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. தமிழ்கத்தின் ஊர்ப்பெயர்களை வடமொழியில் கும்பகோணம் (குடமூக்கு), வேதாரண்யம் (மறைக்காடு), விருத்தாசலம் (பழமலை) என்று மாற்றியதைப் போலவே திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களை வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாய் வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார். இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார். தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார். எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார். இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர்

இந்த ஆரிய இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது :

“பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.

கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் பரத நாட்டியம் என்று புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர்.

ச,ரி,க,ம,ப,நி

ஏழிசைக் குறீயீடு எழுத்துக்கள் சரிகமபதநி ஏழும் தமிழ் எழுத்துக்களே. சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில் “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர். தமிழ் ‘ச’ வுக்கும் பதிலாக வடமொழி ‘ஸ்’ வை வலிந்து திட்டமிட்டுப் பயன்படுத்தினார்.

இப்புரட்டினை மறைத்திரு நாரயண சாஸ்திரிகள் கீழ்கண்டவாறு வன்மையாக கண்டித்துள்ளார்

“சாரங்கதேவர் விவரித்த சரிகமபதநி என்கிற ஏழு சுரக்குறிகள் காரணப் பெயருள்ளவைகளென்பது, இடுகுறிப்பெயர்கள் என்று மெய்பித்து விளக்குகிற சிகண்டி மாமுனிவர் அருளிச் செய்த இசை நூலுக்கு விரோதப்படுகின்றது. அன்றியும் ஷட்ஜா என்ற பதத்திலிருந்து ‘ஸ்’ வும், ருஷப என்கிற பதத்திலிருந்து ‘ரி’ யும், காந்தார என்கிற பதத்திலிருந்து ‘க’வும், பஞ்சம என்கிற பதத்திலிருந்து ‘ப’ வும், தைவத என்கிற பதத்திலிருந்து ‘த’ வும், நிஷாத் என்கிற பதத்திலிருந்து ‘நி’ யும் வந்தனவென்று உரைக்கில், ‘ஷ’ என்கிற சமஸ்கிருத அட்சரம் ‘ஸ்’ என்கிற மாறுதலை அடைவதற்கும், ‘ரு’ என்கிற சமஸ்கிருத உயிரெழுத்து ‘ரி’ என்று சமஸ்கிருத மெய்யெழுத்தாக மாறுகிறதுக்கும், ‘கா’ என்கிற தீர்க்கம் ‘க’ என்று குறுகுவதற்கும், தைவத என்பதில் ‘த’ என்று அகர வடிவமைந்து வருவதற்கும் யாதொரு சமஸ்கிருத வியாகரண பிரமாணம் காண முடியாமையாலும்,ஷட்ஜா முதலிய ஏழு பதங்களும் காரணச் சொற்கள் என்று காட்டுவதற்காக ‘ரிஷப, காந்தார, தைவத’ என்கிற மூன்று பதங்களின் பொருள் ஆராய்ச்சியில் சுரங்களைச் சம்பந்தித்தவைகளாகவே சாரங்க தேவர் விவரிப்பதில் ஷட்ஜ, மத்திம, பஞ்சம, நிஷாத என்கிற உரைகள் சுரங்களையே சம்பந்தித்ததெனக் கூறுவது கிரமமில்லாமையும் அபந்நியாயத்தையும் ஷண்ட, ருதம், காத்ரம், மதுரம், பட்டலம், தைரியம் முதலான சமஸ்கிருத பதங்களில் முதல் அட்சரமாக அதிப்பிரசிங்கிப்பதாலும் திராவிடர்கள் அமைத்த இடுகுறிப்பெயரை மாற்றுவதற்கெடுத்த புரட்டு என்று தீர்மானிக்கப்படுகிறது”

கீர்த்தனைக்கு முன்னால் தேவாரம்

கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவார காலத்தில் தோன்றியது. கீர்த்தனத்தில் நிரவல் விருத்தி முதலிய இசையமைப்புகள் எல்லாம் தேவாரப் பாடல்களைக் கொண்டே அமைந்தவை. தியாகையர் கீர்த்தனங்களின் இசையமைப்பானது தொடக்கத்தில் பெரும்பாலும் எளிமையாகவே இருந்தது. பின்னாளில் ஆங்காங்கு பாடிய இசை வல்லுனர்களே நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களின் இசையமைப்பில் விருத்திகளைப் புகுத்தி வளர்த்து வந்துள்ளனர்.

தியாகய்யரின் கீர்த்தனங்களை(கொச்சையான தெலுங்குப் பாடல்கள்) அவருடைய தெலுங்கு மொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் கற்று கச்சேரி செய்ய ஆரம்பித்த பிறகு மொழிக்கொலையும், சங்கீத கொலையும் விளைந்தன. இதைக்கண்டு சுப்பிரமணிய பாரதியார் புலம்புவது பின்வருமாறு :

“ இசைஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனைகளும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்தில் சங்கீத வித்துவான்களிலே பல்ர் சங்கீதத்துக்கும் நவரசங்களே உயிர் என்பதை அறியாதவர்”

“முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவர்களுக்கு ரசம் தெரிய நியாயமில்லை”

“நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிற்து : “ வாதாபி கணபிதம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராம நீசமான மெருவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுசொசகி’,…. அய்யய்யோ, அய்யய்யோ ஒரே கதை

– பாரதியார் மேலும் எழுதிக் கொண்டே போகிறார்.

ஆதி மும்மூர்த்திகள்!

தியாகையர் (1767-1847), சியாமா சாஸ்திரிகள் (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776-1835) ஆகிய இம்மூவருமே கருநாடக இசை மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகிறார்கள். இம்மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள். இம்மூவருடைய சங்கீதமும் அன்னிய மொழிகளில் தாம், பரந்துபட்ட மக்களுக்கு புரியாத மொழிப்பாடல்களே. ஆகையால் இவர்களுடைய சங்கீதம் வாழ்க்கையில் சமூகத்தில் மேல்நிலையில் உள்ளவர்களுக்கே உரியதாய் இருந்து வந்துள்ளது.

இராமப்பிரமத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை. ஆறுகாலங்களிலும் நாதஸ்வர வாத்திய இசை, தேவார இசை அவ்வளவே. அவருக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த சங்கீத வித்துவான்களுடைய இசையையும் அவர் கேட்டிருந்தார். இவ்வாறு பெற்ற இசையறிவை தெலுங்கு இசைப்பாடல்களாக இயற்றினார்.

தியாகையர் தல்லப்பாக்கம் அன்னமையாவிடமும் (1423-1503) புரந்தர தாசரிடமும் (1484-1564) இசை கற்றார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஏனெனில் தியாகையரின் காலம் (1767-1847) மேற்கூறிய இருவரின் காலத்துகு மிகவும் பிற்பட்டதாகும்.

இம்மூர்த்திகளுக்கும் மிக முந்திய காலத்தில் தமிழிலேயே கீர்த்தனைகளை இயற்றி தமிழிசையை வளர்த்தவர் மூவராவார். அவர் சீர்காழி முத்துதாண்டவர்(1525-1625), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711-1779), மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) என்பவர். இவர்கள் கீர்த்தனங்களும் பதங்களும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. தற்போதைய மும்மூர்த்திகளுக்கு முன்னோடிகளாவார்.

இன்றைய கருநாடக இசையில் கையாளப்பட்டுவரும் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே.
_______________________________________
புதிய கலாச்சாரம்,  ஜனவரி 1994

_______________________________________