கொச்சியிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து மங்களூருவிற்கும் குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் (இந்திய எரிவாயுக் கழகம்) 2010-ஆம் ஆண்டு செயல்படுத்தத் தொடங்கியது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலுள்ள 136 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களின் வழியே சுமார் 310 கி.மீ. தூரத்துக்கு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் இத்திட்டத்தினால், கோவை மாவட்டத்தில் மட்டும் 50,000 ஏக்கர் பாதிக்கப்படுவதால், சென்ற ஆண்டு முதலே விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இப்போராட்டங்களைத் தொடர்ந்து விவசாய நிலங்கள் வழியே எரிவாயுக் குழாய் பதிப்பதற்கும், அதன் பொருட்டு நிலம் கையகப்படுத்தவும் அனுமதி மறுத்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகள் ஓரமாகக் குழாய்களைப் பதிக்குமாறு கெயில் நிறுவனத்துக்குச் சென்ற ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில், விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவசாயிகளின் நலனுக்கு மேலான பொதுநலன் இந்த எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் இருப்பதாகவும், இந்தத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமென்றும் கூறி, விளைநிலங்களில் குழாய் பதிக்க அரசு பிறப்பித்திருந்த தடை உத்தரவை ரத்து செய்துள்ளது.
அதுமட்டுமல்ல; இத்திட்டத்தினை விவசாயிகள் ஏற்குமாறு செய்ய தமிழக அரசால் இயலுமென்றும், ஒருவேளை அவர்கள் ஏற்க மறுத்துப் போராடினால், கூடங்குளம் போராட்டத்தைக் கையாண்டதைப் போல இதையும் கையாள முடியுமென்றும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அளவு வலிமை அரசுக்கு இருப்பதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். ஒருவேளை தமிழக அரசின் அதிகாரத்தில் நீதிபதிகள் அமர்ந்திருந்தால், இந்நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியாவது நிலத்தைப் பறித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. “பொதுநலன்” மீது நீதிபதிகளுக்கு அவ்வளவு ஈடுபாடு!

நிலத்தடியில் ஒரு மீட்டர் ஆழத்தில் எரிவாயுக் குழாய் பதிப்பதற்காக கெயில் நிறுவனம் கையகப்படுத்தும் நிலத்தின் அகலம் 66 அடி. அந்த இடத்தில் நிலத்தை உழுவதோ, அந்த இடத்தில் குழாய்க்கிணறு போடுவதோ கூடாது. வயலில் பதிக்கப்படும் குழாய்களுக்குச் சேதமோ, விபத்தோ நேர்ந்தால் சம்பந்தப்பட்ட விவசாயியின் மீது கிரிமினல் குற்றவழக்கு போடப்படும். கையகப்படுத்தும் நிலத்திற்குச் சந்தை விலையில் 10% மட்டுமே தரப்படும். இத்தனை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விவசாயிகள் நிலத்தை ஏன் தரவேண்டும் என்பதுதான் கேள்வி.
ஏற்கெனவே நான்குவழிச் சாலைகள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், இருவழி இரயில் பாதைகள் போன்றவற்றுக்காக பொதுநலன் என்ற பெயரில் தமது நிலத்தை வழங்கிய விவசாயிகள், அதனால் அடைந்த பயன் என்ன? கிராமங்களுக்கு 10 மணிநேர மின்வெட்டு, நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வசூல், கிராமங்களில் நிற்கும் பாசஞ்சர் ரயில்கள் மென்மேலும் ரத்து செய்யப்பட்டு அதிவேக ரயில்கள் அறிமுகம் – என்பதுதான் இந்த “பொதுநலன்” விவசாயிகளுக்கு அளித்திருக்கும் பரிசு.
இது விவசாயத்தைச் சீர்குலைக்குமென்பதால், இக்குழாய்களை நெடுஞ்சாலை ஓரமாகவோ, ரயில்பாதை ஓரமாகவோ கொண்டு செல்லுமாறு கோருகிறார்கள் விவசாயிகள். அவ்வாறு கொண்டு சென்றால் “குழாய்ப் பாதையின் நீளம் அதிகரிக்கும், செலவு அதிகரிக்கும், அதனை நுகர்வோர் சுமக்க வேண்டியிருக்கும்” என்பதுதான் கெயில் நிறுவனத்தின் ஆட்சேபம். எரிவாயு விலையை விருப்பம் போல உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் எரிவாயு நிறுவனம், நுகர்வோர் நலன் குறித்துப் பேசுவது ஒரு பித்தலாட்டம். தற்போது இந்தக் குழாய்ப் பாதையில் செல்லும் எரிவாயுவில் கூட 50%-க்கு மேல் தனியார் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்குத்தான் செல்லவிருக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் உரிமையை, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காட்டிலும் மேம்பட்ட பொதுநலனாக நீதிமன்றம் கருதுகிறது.
அதுமட்டுமல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பொதுச்சொத்துகள் என்ற நம்பிக்கையில்தான் விவசாயிகள் தம் நிலங்களை அன்று வழங்கினார்கள். அத்தகைய பல பொதுத்துறை நிறுவனங்கள் இன்று தனியார் மயமாக்கப்படுகின்றன.
இன்று பொதுத்துறை என்ற முகமூடி அணிந்து விளைநிலங்களை வளைக்க வரும் கெயில் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 30% ஏற்கெனவே அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கையில்தான் உள்ளது. மீதியையும் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதுதான் அரசின் கொள்கை. ஏற்கெனவே கோதாவரிப்படுகை எரிவாயுக் கிணறுகள் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. அவற்றிலிருந்து எடுக்கும் எரிவாயுவை ஆந்திராவிலிருந்து கர்நாடகா, மகாராட்டிரா, ம.பி., வழியாக குஜராத் கொண்டு செல்லும் குழாய்ப்பாதையும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது. ம.பி.யிலிருந்து உ.பி.க்கு புதிய குழாய்ப் பாதையொன்றையும் அம்பானியின் நிறுவனம் அமைக்கவிருக்கிறது. நாட்டின் பொதுச்சொத்தான கோதாவரி எரிவாயுவின் விலையை ரிலையன்சும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும்தான் இன்று தீர்மானிக்கின்றன. சொன்ன விலை தராவிட்டால் உற்பத்தியை முடக்குகின்றன.
இந்நிலையில் பொதுநலன் எனும் பேரில் பறிக்கப்படும் நிலம், நாளை தனியார்மயமாக்கப்பட்டு விடும். அப்போது அந்தத் தனியார்மயத்தையும் “பொதுநலன்” என்ற பெயரில் நீதிமன்றம் நியாயப்படுத்தும்.
இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ‘விவசாயிகளின் நலன் காக்க’ உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கும் ஜெ. அரசு, போராடும் விவசாயிகள் பக்கம் நிற்பதைப் போல நடிக்கிறது. கூடங்குளம் பிரச்சினையில் ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றமும் கடைப்பிடித்த தந்திரமும் இதுவேதான். “யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன் உள்ள ஒரே வழி. அத்தகைய போராட்டம்தான் அரசையும் நீதிமன்றத்தையும் மட்டுமின்றி, பொதுநலன் என்ற பித்தலாட்டத்தையும் அம்பலமாக்கும்.
– அன்பு
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014
_____________________________________________