அது ஒரு மாலை நேரம். கோடம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு பயணிகள் கடந்து செல்லும் பாதையோரம்; வினைதீர்த்த விநாயகர் கோயிலின் முகப்பில், முதுமையின் களைப்பில் கீரைக்கட்டுகளையும் காய்கறிகளையும் பூக்களையும் கேரிபேக்கில் கட்டி வைத்துக் கொண்டு வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தனர், அந்தப் பெண் வியாபாரிகள்.
அப்போது, கோடம்பாக்கம் இரயில் நிலையத்தின் பின்பக்க வழியாக ஆர்.பி.எஃப் போலீசுகாரர் ஒருவர் பதுங்கியபடியே வந்து சேர்ந்தார். இரயில் நிலையத்திலிருந்து தப்பி வந்து விட்ட தீவிரவாதியையோ அல்லது திருடனையோ மடக்கிப் பிடிக்கத்தான் இப்படி பின்பக்க வழியாகப் பதுங்கி வருகிறாரோ? என்ற பரபரப்பு அவரை கண்ட அனைவரிடத்திலும் தொற்றிக் கொண்டது.
“இரயில்வேக்குச் சொந்தமான இடத்தில், பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக, நடைபாதையை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக வியாபாரம் செய்தக் குற்றத்திற்காக”, நடைபாதை வியாபாரிகளின் உடமைகளை ‘பறிமுதல்’ செய்த ஆர்.பி.எஃப். போலீசு, வயதான அந்த நடைபாதைப் பெண் வியாபாரிகளையும் விரட்டியடித்தது.
தன் மகன் மற்றும் பேரன் வயதேயான அந்தப் போலீசுகாரனைக் கையெடுத்துக் கும்பிட்டனர், அப்பெண் வியாபாரிகள். “அய்யா இந்த ஒரு தடவ வுடுய்யா… இனி கடை போடலை…” எனக் காலில் விழாதக் குறையாக கெஞ்சினர்.
முதுமையால் வலுவிழந்து தளர்ந்து போன நிலையில், தனது உடம்பையே அசைத்து அசைத்துத்தான் நகர்த்த முடிந்த அந்த மூதாட்டியால், தலைச்சுமையாய் மூங்கில் கூடையை சுமந்து கொண்டு தப்பிச் செல்ல வழியேது?
அன்றாடம் அஞ்சுக்கும் பத்துக்கும் வியாபாரம் பண்ணும் அந்த நடைபாதை வியாபாரிகளுக்கு இரவு தங்குமிடமும் அதே நடைபாதைதான் என்பதைக் காண முடிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
அவர்களுள் ஒரு பெண் வியாபாரி, நூறு ரூபாய்த் தாளை நாலாய் மடக்கி நாசூக்காக ஆர்.பி.எஃப். கைகளில் திணிக்கப் பார்த்தார். “இதெல்லாம் என்கிட்ட நடக்காது… பொருளை வண்டியில் ஏத்து” என எகிறினார் அந்த போலீசுக்காரர்.
“எதையும் எங்கிட்ட பேசாதே… ஸ்டேசனுக்கு வா… கோர்ட் ல பைன் கட்டிட்டு… உன் பொருள வாங்கிட்டு போ… பொருள் எல்லாத்தையும் மூட்டையில போடு…”
அப்பெண் வியாபாரிகளின் கோணிப்பையைப் பிடுங்கி ‘கைப்பற்றிய’ப் பொருட்களை அதில் போட்டுத் திணித்தது ஆர்.பி.எஃப். போலீசு.
“நாலு பேரு பொருளையும் ஒன்னா கட்ட முடியுங்களா? பூ, கீரையெல்லாம் ஒன்னா போட்டு கட்டிட்டா வீணாப்போயிடும். திரும்ப விற்க முடியாது. பொருள் இங்கேயே இருக்கட்டும். நாங்க வேணா கூட வர்றோம். ஃபைன் போடுங்க. கட்டிடறோம்….”என்றனர், அப்பெண் வியாபாரிகள்.
அப்பெண் வியாபாரிகளின் புலம்பலை காதில் வாங்கிக்கொள்ளத் தயாரில்லாத ஆர்.பி.எஃப் போலீசு, “கோணிப்பையை தூக்கிட்டு என்கூட வா” என அதட்டியது.
“மனசாட்சி இல்லாம சொல்றீங்களே..? என்னால எப்படிப்பா தூக்க முடியும்?” என்றார், வயதான அந்தப் பெண் வியாபாரி.
“அப்போ… என்னைய தூக்க சொல்றியா?” பதிலுக்கு எகிறினான், அந்தப் போலீசுக் காரன்.
“அதுக்குத்தான் சொல்றேன்… பொருள இங்கேயே கட்டி வச்சிடு… நான் ஸ்டேசன் வந்துட்டு போனதுக்கு அப்புறம் என்கிட்ட திருப்பிக்கொடு… தூக்கி இறக்குனா பொருளு வீணாப் போயிடும்பா..” மீண்டும் கெஞ்சலோடு கோரிக்கை விடுத்துப் பார்த்தார்கள், நடைபாதை வியாபாரிகள்.
எதற்கும் அசருவதாயில்லை… அந்த ‘கடமை தவறாத’ ஆர்.பி.எஃப். போலீசுக்காரர்கள். வலுக்கட்டாயமாகப் பறித்து, ஆட்டோவை அழைத்து ‘கைப்பற்றிய’ப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.
***
அதுவரை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களிடம், ஆர்.பி.எஃப். போலீசின் நடவடிக்கை சரியா? தப்பா? என்ற விவாதம் குசுகுசுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“என்னண்ணே… பிரச்சினை” என்ற கேள்விக்கு, “ஆர்.பி.எஃப். இடத்துல கடை போட்டா… சும்மா இருப்பாங்களா?..” என நம்மிடமே எதிர்கேள்வி கேட்டார், ‘தென்னக ரயில்வேயின் அனுமதி பெற்ற ஆட்டோ நிறுத்தத்’தைச் சார்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர்.
“பப்ளிக் போயிட்டு வர்றதுக்கு இடைஞ்சலா இருக்குன்னு… கண்டவனெல்லாம் போன் போட்றானுங்க தம்பி.. அதான் இப்படி பண்றாங்க… இல்லைன்னா பாவம் பொழச்சி போகட்டும்னு கண்டுக்காமத்தான் இருப்பாங்க…” என ஆர்.பி.எஃப். போலீசின் ‘அழுத்தத்திற்கு’ அர்த்தம் சொன்னார் ஒருவர்.
“அவங்க ஒரு ஓரமாத்தானே வியாபாரம் பண்றாங்க..? இதனால.. ஸ்டேசனுக்கு வந்துட்டு போறவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லியே? அங்கப் பாருங்க நல்லா தாராளமா இடம் இருக்கத்தானே செய்யுது?” என்ற கேள்விக்கு “நாம என்ன பண்ண முடியும்? அவங்க டூட்டி அது. அவுங்க மேலதிகாரிங்க அவுங்களைத்தானே கேள்வி கேட்பாங்க”என்றார் இன்னொருவர்.
***
கோடம்பாக்கம் இரயில்நிலையத்தில் மட்டுமல்ல; கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரையிலும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இந்த நடைபாதை வியாபாரிகள் நிறைந்திருக்கிறார்கள். நடந்து போவதற்கு இடையூறாக கடைவிரித்திருக்கின்றனரே என்று இவர்களைக் கண்டு நீங்கள் முகஞ்சுழிக்கவும் செய்திருக்கக் கூடும்.
இங்கே, எது ஆக்கிரமிப்பு? எது இடையூறு? சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா? சென்னையில் வீடு கட்டும் எந்த யோக்கியனாவது அடுத்தவனுக்கு இடையூறின்றி தமது கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்திருக்கிறானா? கேள்வி கேட்பாரின்றி நடு ரோட்டில்தானே கொட்டப்படுகின்றன. சென்னை-தி.நகர் ரெங்கநாதன் தெரு கண்டிராத ஆக்கிரமிப்பா? நத்தை ஊர்வதைப்போல, ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டுதான் ரெங்கநாதன் தெருவையே கடக்க முடிகிறது நம்மால். இரண்டு மாடிக்கு அனுமதியை வாங்கிவிட்டு எட்டு மாடி கட்டினால், அது ‘பிரம்மாண்டம்’. பேரிடர் காலங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள் கூட நுழைய முடியாத படிக்கு தீப்பெட்டிகளைப் போல அடுக்கப்பட்டிருக்கும் ரெங்கநாதன் தெருவே அநியாயமான ஆக்கிரமிப்பு.
மேட்டுக்குடி பணத்திமிரில் ஆளுக்கொரு காரை வாங்கிவிட்டு அதை நடுத்தெருவில் நிறுத்துவதை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? அவன் வீட்டு கட்டுமானப் பொருளையெல்லாம் நடுரோட்டில் கொட்டி வைப்பதை நாம் ஏன் அனுசரித்துப் போக வேண்டும்? ‘செல்வரத்தினங்கள்’ கோடிகளில் செல்வங்களை குவிக்க நாம் ஏன் ரெங்கநாதன் தெருவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்க வேண்டும்? சாமானியனைப் பற்றிய அக்கறையற்ற மேட்டுக்குடி பணத்திமிரும் பச்சையான சுயநலனும்தானே இங்கே மண்டியிருக்கிறது.
தி.நகர் ரெங்கநாதன் தெருவின் ஆக்கிரமிப்பு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
நடைபாதை வியாபாரிகளைக் கண்டு ஆக்கிரமிப்பு, இடையூறு என்று நெஞ்செரிச்சல் படும் மேட்டுக்குடி – நடுத்தர வர்க்க குடிமக்கள் இவற்றையெல்லாம் வகையாய் மறந்து விடுவதேன்?
***
விவசாயம் இழந்து, சிறு தொழில் நொடிந்து, வாழ வழியின்றி நகருக்குள் விசிறியெறியப்படும் அந்த உழைக்கும் வர்க்கப் பிரிவினர்தான் கந்துவட்டிக்கு கடனை வாங்கி, தன் சொந்தக்காலில் ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையில் நடைபாதை வியாபாரிகளாக மாறியிருக்கின்றனர். இவர்களை நாம் ஆதரிக்காமல், வேறு யார் ஆதரிப்பது?
கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கி வருவதைக்கூட கவுரவக் குரைச்சலாக கருதும் ‘ஆண்’மகன்களுக்கு, நடைபாதையில் கடைவிரித்து அமர்வதற்கு அசாத்தியமான மன உறுதி தேவை என்பதை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறது.
தமக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராத இந்த அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழாமல், வக்கற்ற அரசின் மீது காறி உமிழ்ந்து விட்டு தன் கையை நம்பி நடைபாதை வியாபாரிகளாய் மாறிப் போனவர்களைக் கண்டு அரசும் அதிகார வர்க்கமும் பெருமிதம் கொள்ளத்தான் காரணங்கள் பல இருக்கின்றன.
கோடிகளை குவித்துவிட வேண்டுமென்ற வெறியோடுதான், இவர்கள் தெருக்கோடியில் கடை விரித்திருக்கின்றனரா என்ன? இந்த நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பில் பொதுநலன் அடங்கியிருப்பதை நீங்கள் மறுக்கத்தான் முடியுமா?
அதிகாலை எழுந்து பிள்ளைகளுக்கும் கணவன்மார்களுக்கும் சமைத்து வைத்துவிட்டு… அடித்துப் பிடித்து இரயிலைப் பிடித்து… நீர்ச்சொட்டும் தலைமுடியை அவிழ்த்துவிட்டு… காலை சிற்றுண்டியை தொடர்வண்டி ஓட்டத்தோடே முடித்து… தனக்கான நிலையம் வந்ததும் மீண்டும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழலும் தாய்மார்கள்தானே இந்த நடைபாதை வியாபாரிகளின் அன்றாட வாடிக்கையாளர்கள்.
பொதுவாக காய்கறிகளை கிள்ளிப் பார்த்தும் கீரைக்கட்டுகளை பலமுறைத் திருப்பிப் பார்த்தும் நிதானமாக அண்ணாச்சி கடைகளில் வாங்கும் தாய்மார்கள்; இந்த நடைபாதை வியாபாரிகள் முடி போட்டு வைத்திருக்கும் காய்கறிகளை கண்ணை மூடிக் கொண்டு வாங்கிச் செல்கின்றனரே! இதற்கான காரணம், அடுத்த இரயிலைப் பிடித்துவிட வேண்டுமென்ற அவசரம் மட்டுமல்ல; அன்றாடம் கடந்து செல்லும் அந்த நடைபாதை வியாபாரிகளின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினாலும்தான்.
அன்றாடம் அலுவல் முடித்து அரக்கபறக்க வீட்டுக்கு ஓடும் தாய்மார்களுக்கு ரிலையன்ஸ் பிரஷ் கியூவில் நின்று கார்டை தேய்க்க சாத்தியமில்லை என்பது மட்டுமில்லை; பத்து ரூபாய் தாளை நீட்டினால் பாலிதீன் பையில் தயாராயிருக்கும் தரமான காய்கறிகள் கிடைக்கிறது என்பதுதான்.
என்றேனும், வாய்ப்புக் கிடைத்தால் ஒரு நிமிடம் நின்று பாருங்கள்! நடைபாதை வியாபாரிகளையும், அவர்களின் வாடிக்கையாளர்களையும் வேடிக்கை பாருங்கள்! கொஞ்சம் துணிவிருந்தால் நடைபாதை வியாபாரிகளின் ‘ஆக்கிரமிப்பை’ப் பற்றி அத்தாய்மார்களிடம் பேசிப் பாருங்கள்!
கழுவி ஊற்றி விடுவார்கள் என்று கவலைப்படுகிறீர்களா? சரிதான், வேறென்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
– இளங்கதிர்
தனக்கு பாதிப்பு வரும்போதும் பணிந்து போவதும்… பிறர்க் வரும்போது வேடிக்கை பார்ப்பதும் கேலி செய்வதுமாய் இருக்கிறது தமிழனின் ஒற்றுமை…
இது தெரிந்ததால் தான்.. வட இந்திய, அமரிக்க சட்டப்படி தவறு செய்த, தேவையானியின்.. xxxல் டார்ச் அடித்து சோதனை செய்தார்கள்.. டெல்லியில் பாய் பிரண்டுதன்ிஇரவில் சுற்றிய பெண்ணை கற்பழ்த்தார்கள்,அதேபோல் மும்பையில் பாய் பிரண்டுடன் இரவில் போய் ‘போட்டோ’ எடுத்த பெண்ணை கெடுதார்கள் என்பதற்கு பிரைம் மீடியா கவரேஜ் கொடுத்து அகில இந்திய பிரச்சனையாக்கி. சிற்றூர்களில் எல்லாம் இதற்காக போராட்டம் செய்ய வைத்தார்கள்…
அதே அன்று பள்ளி சென்ற தூத்துகுடி பெண் ரயில் நிலைத்தில் கற்பழிக்கப்ட செய்தி கூட பலருக்கு தெரியாது.. இப்படி எந்த விஷ்யத்திலும் தமிழினம் ஒதுக்கப்ட காரணம் புகழ் பெற்ற ஒற்றுமை..
http://kannimaralibrary.co.in/elamebook/
தமிழக அரசின் போலீஸ் மட்டும் அல்ல மத்திய ரயில்வே போலீசும் ரெங்கநாதத் தெருவில் உள்ள பெரும் முதலாளிகளின் காலை நக்கும் நாய்கலாகதான் இருக்கின்றனர் .
கடந்த ஆண்டு சரவாண கோல்டுபேலஸ் பக்கத்தில் புதிய சரவாண ஸ்டோர் திரப்பதர்க்காக அங்கு பலாஆண்டுகலாக காய்,பழம்,கீரை,வீட்டூஉபையக பொருட்கள் போன்றவற்றை வியபாரம் செய்துவந்த நடைபாதை வியபாரிகலை அங்குருந்து காலி செய்வதர்க்காக சரவாண ஸ்டோர் முதலாளி தமிழ்நாடு குற்றபிரிவு போலீசையும்,ரயில்வே ஆர்.பி.எஃப் போலீசையும் ஏவிவிட்டு அந்த வியபாரிகலை அங்குருந்து காலி செய்யவைத்தார்கள் .
தீ நகரில் உள்ள சரவாண ஸ்டோர்,சரவாண ஸ்டோர் பிரமாண்டமாய்,போத்தீஸ்,முஸ்தபா கோல்டுபோலஸ்,போண்ற பல கடைகள்மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் மக்கள் உயிருக்கு உலைவைக்கும் வகையில் உள்ளது இதில் சிலவற்றில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகளும் உண்டு இவைகள் தீ நாகரில் உள்ள போலீசுக்கு தெரியாத இல்லை அந்த கடைகலின் பக்கம் போகும்போது போலீசுக்கு கண் குருடாக ஆகிவிடுகிறத என்பது எனக்கு விலங்கவில்லை.
\\சென்னையில் வீடு கட்டும் எந்த யோக்கியனாவது அடுத்தவனுக்கு இடையூறின்றி தமது கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்திருக்கிறானா? //
அது மட்டுமல்ல்.எந்த யோக்கியனும் அனுமதி வாங்கிய திட்டப்படி [plan ] கட்டடம் கட்டுவதில்லை.5000 சதுர அடிக்கு அனுமதி வாங்கியிருந்தால் 10,000 சதுர அடிக்கு கட்டுகிறார்கள்.வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவதில்லை. வாகன நிறுத்துமிடமாக திட்டத்தில் காட்டப்படும் இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள்.அந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் வரும் வாடகைதாரர்களின் வாகனங்கள்,அவர்களது வாடிக்கையாளர்கள்,விருந்தினர்களின் வாகனங்கள் அத்தனையும் தெருவில்தான் நிறுத்தப்படுகின்றன.அந்த கட்டிட உரிமையாளர்கள் கூடுதலாக கட்டிய இடத்திற்கு வாங்கும் வாடகை பணம் ஒரு கொள்ளைப் பொருள்தானே.போக்குவரத்துக்கு அந்த கட்டிட உரிமையாளரால் ஏற்படும் இடையூறுக்கு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அதிகார வர்க்கம் ஏழை நடைபாதை வியாபாரிகளை ,அவர்களால் இந்த சமூகம் பெரும் பயன் அடைந்தும்,அநியாய ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுகிறது.
// “பப்ளிக் போயிட்டு வர்றதுக்கு இடைஞ்சலா இருக்குன்னு… கண்டவனெல்லாம் போன் போட்றானுங்க தம்பி.. அதான் இப்படி பண்றாங்க… இல்லைன்னா பாவம் பொழச்சி போகட்டும்னு கண்டுக்காமத்தான் இருப்பாங்க…” என ஆர்.பி.எஃப். போலீசின் ‘அழுத்தத்திற்கு’ அர்த்தம் சொன்னார் ஒருவர். //
எத்தனையோ குறைகளை சரி செய்ய முயலாதவர்கள் பாவப்பட்ட ஏழைகளிடம் கறார்த்தனம் காட்டுவது ஏன்..?
All obstructions are bad – temple, shops, political banners, parking …,
வினவு அய்யா.. பணக்காரனுக்கு அரசைப் போல பரம ஏழைகளுக்கு நீங்கள்…நீங்கள் ஏழைகள் என்று சொல்லி அனுதாப ஓட்டு பெற்று எதிர்கருத்து சொல்பவர்களை நம்பியார் டைப் வில்லனாக்கி விடலாம்தான்.. அதையும் மீறி உண்மை என்ற ஒன்று உள்ளது.. அதற்குத்தான் ஆதரவு அளிக்க யாரும் இல்லை.. பரங்கிமலை ரயிலடியிலிருந்து காலை 9 மணிக்கோ அல்லது மாலை 5 மணிக்கு பிறகோ மேடவாக்கம் வரை பரந்து விரிந்து கிடக்கும் பல்வேறு நகர்களுக்கு வந்து செல்லும் அலுவலகவாசிகளான எங்களைக் கேட்டுப் பாருங்கள்.. ஆக்கிரமிப்பு என்றால் அப்படியொரு ஆக்கிரமிப்பை socalled (நீங்கள் சப்போர்ட் பண்ணும் மேற்படி) கதாநாயகர்கள் செய்வார்கள்.. (ஏகாதிபத்திய அமெரிக்காகூட ஈராக்கை அப்படி ஆக்கிரமித்திருக்காது….)நடக்ககூட முடியாது.. சற்று முணுமுணுத்தால் சென்னை பாஷை வரும்.. போலிசும் ’சில சமயங்களில்’ போலிசாக நடந்து கொள்வார்கள்.. பல சமயங்களில் ’கண்டு‘ கொள்ள மாட்டார்கள்.. காரணம் சிதம்பர ரகசியம்தான்… எங்களுக்கு குரல் கொடுக்க யார் வருவார்கள்…
//ஆக்கிரமிப்பு என்றால் அப்படியொரு ஆக்கிரமிப்பு//
நமது ஒவ்வொரு தெருவின் சாலையின் இரு புறமும் உள்ள கடைக்காரர்கள் 3-10 அடிகள் வரை தெருவை/சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இவர்களின் ஆக்கிரமிப்பு அகற்றப்/குறைக்கப்படுவது எப்போது? அப்போது பாதை வியாபாரிகள் யாருக்கும் இடையூறாக தெரிய மாட்டார்கள்.
ஆக்கிரமிப்பு எல்லா மட்டதிலும் உள்ளது. அனைத்து தரப்பினரும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு செயகிரார்கள். இதனால் பாதிக்கப்படுவது நாம் எல்லாரும் தான்.