privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்DR. சந்தோஷ் நகர்: புமாஇமு போராட்டத்திற்கு பணிந்தது மாநகராட்சி !

DR. சந்தோஷ் நகர்: புமாஇமு போராட்டத்திற்கு பணிந்தது மாநகராட்சி !

-

பு.மா.இ.மு தலைமையிலான மக்கள் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி!
மாநகராட்சி அதிகாரிகள் பணிந்தனர்! DR. சந்தோஷ் நகரில் அடிப்படை வசதிகளை செய்தனர்!

சென்னையில் அனைவராலும் பிரபலமாக அறியப்பட்ட இடங்களில் ஒன்றுதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த ஹோட்டல் தாசப்பிரகாஷ். அதற்கு எதிர்புறங்களில் சில நட்சத்திர ஹோட்டல்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும், பணக்காரர்களின் பங்களாக்களும் இருப்பதை எவரும் பார்த்திருப்பர். இந்த மாட மாளிகைகளுக்கு இடையே இந்த அரசால் தீண்டத்தகாத ’சேரி’யாக புறக்கணிக்கபடும் DR. சந்தோஷ் நகர்ப் பகுதியை உங்களுக்குத் தெரியுமா? இது உழைக்கும் மக்கள் வாழும் பகுதி. இப்பகுதி மக்கள் பல் கொத்தனார், சித்தாள், பெரியாள், கம்பி கட்டுவது, பெயிண்ட் அடிப்பது என கட்டிட வேலை, ரயில்வே பார்சல் லோடு ஏற்றும், இறக்கும் வேலை, ஆட்டோ ஓட்டுனர்கள், வீட்டு வேலை என அன்றாடம் காய்ச்சிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மாநகராட்சியால் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது.

அருகில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அபு பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கும், அதனருகிலுள்ள பணக்காரன் வீட்டு பங்களாக்களுக்கும் எப்போதும் ’கார்ப்பரேசன் வாட்டர்’ சப்ளை செய்யப்படுகிறது. சந்தோஷ் நகர் மக்களுக்கு குடிநீரை பயன்படுத்தத் தெரியவில்லை என்று கூறி கார்ப்பரேசன் வாட்டர் சப்ளையை குறைத்து அடுக்குமாடிகளுக்கு திருப்பிவிட திட்டமிடுகிறார்கள். ’அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்பொறுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு, அப்பகுதியே குப்பைக் காடாய் சுகாதாரமற்று நாறிக் கிடப்பது தெரியாதது போல் நாடகமாடுகிறார்கள்.

’அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்பொறுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்

பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலை, குடியிருப்புக்குள் உள்ள சாலைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மழைக்காலங்களில் ஆற்றை நீந்தி கடப்பதுபோல் இந்த ஊருக்குள் செல்வது சவாலானது. குண்டும் குழியுமாகிப் போன சாலைகளில் பிள்ளைகள் அவ்வப்போது விழுவதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுவதும் இப்பகுதியில் சகஜமான ஒன்றாகவே மாறிப்போயுள்ளது.

உழைக்கும் மக்களை துரத்திக் கொண்டிருக்கும் இந்த ’சிங்காரச் சென்னை’ யை விட்டுச் செல்ல முடியாமல் எழும்பூர் மேம்பாலம் அருகில் குடிசை வீடுகளில் நரக வேதனையோடு குடியிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு போதிய இடவசதியும், சுகாதாரமும் இல்லையென்பது மட்டும் அவர்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கவில்லை, அருகில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் மண்டிக் கிடக்கும் முள் புதர்களில் இருந்து அவ்வப்போது வரும் பாம்பு போன்ற விசக்கிருமிகள் உடலில் மிச்சம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிருக்கும் உலை வைத்துவிடுமோ என்ற அச்சத்திலேயே உயிர் வாழ்ந்து வந்தனர்.

சாதாரண உழைக்கும் மக்களான இவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் வேறு வழியே இல்லை, எழும்பூரில் உள்ள பெரிய திருமண மண்டபங்களில் 15 ஆயிரத்திற்கும் மேல் வாடகை கொடுத்துதான் ஆக வேண்டும். இவ்வளவு தொகை கொடுக்க முடியாதவர்கள் கூட இட நெருக்கடியால் தங்கள் தெருக்களில் நடத்த முடியாமல், கந்து வட்டிக்காவது பணம் வாங்கி நடத்த வேண்டும் என கடன் நெருக்கடிக்கு ஆளாவது இப்பகுதியில் தவிர்க்க முடியாதது.

சிறிய பகுதி என்றாலும் இங்கு மாணவர்களும், இளைஞர்களும் நிறைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்குறிய கவுரவத்தோடு, மகிழ்ச்சியோடு, உடல் ஆரோக்கியத்தோடு இருக்க முடிவதில்லையே. விளையாட்டிலும், உடற் பயிற்சியிலும் ஆர்வமுள்ள இப்பகுதி மாணவர்களும், இளைஞர்களும் இதனை அனுபவிக்க வேண்டுமென்றால் உயிரை பணையம் வைக்க வேண்டும். ரயில்வே பாதையைக் கடந்து எழும்பூருக்குச் சென்றால்தான் உடற்பயிற்சியும், விளையாட்டும். இந்த அச்சம் காரணமாகவே பலர் செல்வதில்லை. ஆனால், இந்த இளைஞர்களின் உடலையும், சிந்தனையை சீரழிக்கும் அரசின் டாஸ்மாக் சாராயக் கடைக்கோ பஞ்சமில்லை. ஊரைச் சுற்றி சாராயக் கடை. போதாக்குறைக்கு இரவு நேரங்களில் ஊருக்குள்ளேயே ஆறாய் ஓடுகிறது சாராயம்.

எமக்குத் தெரிந்த இந்த விசயங்களெல்லாம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கவுன்சிலருக்கும் தெரியாததா என்ன?. நன்றாகத் தெரியும். சென்னையை சிங்காரிப்பது என்ற பெயரில் பணக்காரர்களும், அரசு உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் வாக்கிங் போகும் பூங்காக்களுக்குக் கூட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து பராமரிக்கும் மாநகராட்சிக்கு, உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதை ஒருவர் சொல்ல வேண்டுமா என்ன?

திட்டமிட்டே உழைக்கும் மக்கள் வாழும் பகுதியை புறக்கணிக்கிறார்கள். பல்வேறு சொத்தைக் காரணங்களைச் சொல்லி உழைக்கும் மக்கள் பகுதிகளை காலி செய்கிறார்கள், இந்நாட்டின் உண்மையான குடிமக்களான உழைக்கும் மக்களை குப்பையைப் போல புறநகர்ப் பகுதிகளில் அள்ளிவீசுகிறார்கள். அப்படி உருவானதுதான் செம்மஞ்சேரியும், துரைப்பாக்கமும் என்பது நமக்குத் தெரியாததில்லை. இப்பகுதியையும் அதுபோல் செய்ய முயன்றார்கள். புமாஇமு தலைமையில் மக்கள் போராடி முறியடித்தனர்.

சாலை பராமரிப்பு

அண்ணாநகர் அப்பார்ட்மெண்டுகளுக்காகவும், அபு பேலஸ் நட்சத்திர ஹோட்டல்களுக்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவும், அதன் கைக்கூலிகளான அரசு உயர் அதிகாரிகளுக்காகவும்தான் இந்த சிங்காரச் சென்னையாம். ஒரு காலத்தில் தமிழகத்தின் கிராமங்களில் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்த விவசாயிகள். விவசாயம் போண்டியானதன் விளைவாக வாழ்க்கையை இழந்து பிழைக்க வழிதேடி இந்த நகரத்தை நோக்கி 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களை இன்று சந்தோஷ் நகர் போன்ற பகுதிகளில் தீண்டத்தகாத சேரி மக்களாக இந்த அரசு நரகத்தில் தள்ளி வருகிறது. இதை அனுமதிக்க முடியுமா? முடியாது என்று புமாஇமு இப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டத்தை தொடங்கியது.

கார்ப்பரேட் முதலாளிகளைப் போல் இல்லாமல், காலம் முழுவதும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்து, இந்த அரசு போடும் வரிகளை நோக்கியா முதலாளிகளைப் போல் ஏய்க்காமல் முறையாகக் கொடுத்து, இந்த நாட்டையே இயங்க வைக்கும் உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை வசதி, சமூக நலக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இந்த அரசின் கடமை. அதைக் கேட்பது உழைக்கும் மக்களாகிய நமது உரிமை என்று சந்தோஷ் நகர்ப்பகுதி மக்களை தட்டி எழுப்பி கடந்த ஓராண்டுகளாக எமது பு.மா.இ.மு பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது.

குடிநீர்க் குழாய்

மாநகராட்சி அதிகாரிகளையும், வார்டு கவுன்சிலரையும் மக்கள் போராட்டத்தால் நிர்பந்தித்தோம். இறுதியில் மக்களின் தொடர் போராட்டம் வென்றது. தெருவுக்கு ஒரு குப்பைக் கூடை, குண்டும் குழியுமான இடங்களில் தார்சாலை, குடிநீர் வீணாகாமல் இருக்க குழாய்களுக்கு வால்வு, முள்புதர்களை அகற்றி சிமெண்டு தரை, வாகன வேகைத்தடை, பிரதான சாலையில் இருபுறத்திலும் பிளாட்பாரம், உடற் பயிற்சிக் கூடம், சமூக நலக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்நோக்குக் கட்டிடத்திற்கு அனுமதி என அடிப்படை வசதிகள் நடைபெற்று வருகின்றன.

பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதும், மீட்டெடுக்க வேண்டிய நமது உரிமைகளுக்காக போராடுவதும் நமது கடமை என்பதை கடந்த ஜனவரி 12-ந்தேதி சந்தோஷ் நகர் மக்கள் மத்தியில் பேரணி – கூட்டம் மூலம் பிரச்சாரம் செய்தது புமாஇமு.

பேரணி – கூட்டம்

புமாஇமு அப்பகுதிக்கிளை செயலர் தோழர் அசோக் தலைமையில் நடந்த இப்பேரணி – கூட்டத்தில் பு.மா.இ.மு, பெவிமு தோழர்களோடு உழைக்கும் மக்களும், இளைஞர்களும், பெண்களும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டனர். போராட்ட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இருந்த அவர்கள் புமாஇமுவின் முழக்கத்தை தங்கள் சொந்த முழக்கமாக வரித்துக்கொண்டனர்.

உழைக்கும் மக்கள், இளைஞர்கள், மாணவர்களின் உரிமைக்கான போராட்டக் களத்தில் உறுதியோடு நிற்கிறது புமாஇமு. உங்கள் பகுதியிலும் உரிமைப் போராட்டத்தைத் தொடங்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்…. கரம் சேருங்கள்!

இவண்,

புமாஇமு,சென்னை.
9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க