privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோயம்பேடும் குற்ற உணர்ச்சியும்

கோயம்பேடும் குற்ற உணர்ச்சியும்

-

நின்று பெய்யும் மழை போல் எந்த அவசரமும் இன்றி நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தது மார்கழி மாதப் பனி. சென்னை நகரம் குளிருக்கு இதமாக போர்வைகளுக்குள் ஒடுங்கிக் கொண்ட நாள் ஒன்றின் நள்ளிரவில் கோயம்பேடு காய்கனிச் சந்தை அமாவாசை இரவின் தேன் கூட்டைப் போல் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. புதிய செல்களின் பிறப்பும் பழையதன் இறப்புமாக வாழ்தலைத் தொடரும் உடலைப் போல் அங்கே ஒரு கூட்டம் நினைவைக் கொல்லும் கடுமையான உழைப்போடு நகர்ந்தவாறே இருக்க, வேறு சிலர் கடைகளின் திண்ணையோரங்களில் பிளந்தவாயோடு மல்லாந்திருந்தனர். உழைப்பும் ஓய்வும் பிரித்தறியவொண்ணாத படிக்கு ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து கலந்திருந்தது.

நள்ளிரவில் டீக்கடை
நள்ளிரவில் ஒரு கப் டீ

“சார், அவங்கெல்லாம் இங்கேயே வேலை பாக்குறவங்க தான். இங்கே கீரை மொத்த சந்தை பதினோரு மணியிலேர்ந்து துவங்கி ரெண்டு மணிக்குள்ளே சில்லறைக் கடைகளுக்கு அனுப்பறதோட முடியும். அப்புறம் காய்ச் சந்தை தொடங்கும். அதே நேரத்திலே பூ சந்தையும் தொடங்கும். கடேசியா பழச் சந்தை. இவங்கள்ல சிலர் காய்ச் சந்தைல கூலி வேலை பார்க்கிறவங்க, சிலர் பழச் சந்தைல வேலை பார்க்கிறவங்க.. அவங்க வேலை நேரம் வார்ற வரைல இங்கெயே தான் தூங்கிக்கினு இருப்பாங்க” – ராஜேந்திரன். வயது நாற்பது இருக்கலாம். ரத்தச் சிவப்பாக மின்னிய கண்களில் ஆர்வம் தொனிக்கப் பேசினார். கீரைச் சந்தையின் அருகே தேனீர்க் கடை நடத்தி வருகிறார்.

”இங்கெயேவா…? வீடு, குடும்பம், பொண்டாட்டி, புள்ளைங்க….”

”அதெல்லாம் ஊர்ல இருக்கும் சார். குடும்பத்த வச்சி பொழைக்கிற மாதிரியா சார் மெட்ராசு இருக்கு?” எமது ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியப்பட்டார்.

“உங்களுக்கு எப்படிண்ணா போகுது?”

”இது நம்ப கடை தான். நானும் அண்ணனும் பாத்துக்கறோம். காலைல அவரு இருப்பாரு.. நைட்டு நான் பாத்துக்கறேன்”

”நீங்க எங்கே வீடு பிடிச்சிருக்கீங்க?”

“வீடா… தோ, அந்தாண்ட உருண்டு கெடக்கானே அவன் தான் என் அண்ணன்” வெள்ளேந்தியான சிரிப்போடு தொடர்ந்தார் “நமக்கு விழுப்புரம் சார். கல்யாணமாகி ஒரு பய்யன் ஒரு பொண்ணு. பய்யன் நாலாப்பு படிக்கிறான் பொண்ணு ரெண்டாப்பு படிக்கிது… மூணு மாசத்துக்கு ஒரு தபா ஊருக்குப் போவேன்.. அப்டியே போகுது சார்”

“ஒரு நாளைக்கி எவ்ளோ வியாபாரம் நடக்கும்?”

நள்ளிரவில் ஒரு கப் டீ
வேலைக்கு இடையில் ஒரு இளைப்பாறல்

”அது சொல்ல முடியாது சார்.. ஒரு நா ஓடும், ஒரு நா ஓடாது. எப்டி பாத்தாலும் செலவெல்லாம் போக கைல ஒரு ஐநூறு ரூபா நிக்கும்.. மூணு பேரு வேலை செய்யிறாங்க.. அவங்களுக்கு கூலி கொடுத்தது போக நம்ப கைல ஓராளு கூலிக்காசு மிஞ்சினா போதுமே சார்” பேசிக் கொண்டிருந்தவர் எதிரே பம்பு ஸ்டவ் மேல் கொதித்துக் கொண்டிருந்த ஈய குண்டானைப் பார்த்தவாறே அவசரமாக ஓடினார்..

“டேய் டேய்.. த்தா அடுப்புல கொதிக்க வுட்டுனு எங்கட … போயிட்டே.. தா பாரு அடி புடிச்சி குண்டா ஓட்ட வுழுந்திடிச்சி..”.  ”ஊர்ல இருந்து போனு வந்திச்சிண்ணா” என்று முணுமுணுத்தவாறே இவரை நேரடியாக பார்க்காமல் குண்டானை இறங்கி வைத்தவர் ஒரு இளைஞர். குண்டானில் வெந்து கொண்டிருந்தவற்றை வேறு பாத்திரத்தில் ஊற்றி விட்டு உள்ளே பார்த்தார். கீழ்ப் பகுதி தீர்ந்து போய் நக அளவு பொத்தல் போட்டிருந்தது..

“போச்சி சார், இதுக்கு நூத்தம்பது ரூவா போயிடும்” திரும்பி நம்மிடம் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அந்த இளைஞரிடம் கோபத்தைக் குறைத்துக் கொண்டு கொஞ்சம் தன்மையாக பேசத் துவங்கினார்..”தா பாரு, இத்தோட நாலாவது குண்டானு இப்டியே தீஞ்சி போயிருக்கு… நா இன்னா சொல்றேன்னா……” நாங்கள் நகர்ந்தோம். வசவும் பேச்சும் சந்தோஷமும் துக்கமும்.. இன்னும் சகல மனித உணர்ச்சிகளையும் உழைப்பும் பிழைப்பும் ஒரு பெரும் போர்வையாக போர்த்துக் கொண்டு கிடக்கிறது அங்கே.

அது பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு. வினவின் செய்தியாளர் குழுவாக நாங்கள் கோயம்பேடு சந்தையின் எதிர்புறமாக கூடினோம். வார்த்தைகளிலும், புகைப்படங்களிலும் பதிவு செய்ய சில குழுக்களாக பிரிந்து கொண்டோம். கோயம்பேடு காய்கனிச் சந்தையின் இயக்கத்தையும் அவ்வியக்கத்தின் அங்கங்களையும் அறிந்து வருவதுதான் நோக்கம்.

பொங்கலுக்கு வந்திறங்கும் மஞ்சள்
பொங்கலுக்கு வந்திறங்கும் மஞ்சள்

பொங்கல் என்பதால் புது மஞ்சள் கிழங்குப் பொதிகள் லாரி லாரியாக வந்து இறங்கிய வண்ணம் இருந்தது. கிழங்கு மூடைகளை இறக்குவது, நகர்த்துவதும், தரம் பிரிப்பதும், ஏலம் கேட்பதும் என அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. குட்டியானை, எய்ச்சர் டெம்போ, 407, டாடா மற்றும் அசோக் லேலண்டு லாரிகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பல நூறு டன் மஞ்சள் வரிசை கட்டி நின்றது. நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளிகள் தேனைக் குடித்துத் தீர்த்து கூட்டைக் கலைத்துக் களையும் தேனீக்களைப் போல் லாரிகளில் இருந்து மூடைகளை இறக்கி எடுத்துச் சென்றனர். மஞ்சள் பொதிகள் காலத்தை விட வேகமாக கறைந்து மறைந்து கொண்டேயிருந்தன.

அங்கே வாகனப் போக்குவரத்தையோ மனிதப் போக்குவரத்தையோ ஒழுங்கு படுத்தவென்று தனியே எவரும் இல்லை – அப்படி ஒரு தேவையும் இருக்கவில்லை. தரையில் சிதறிக் கிடக்கும் கறிகாய்களால் வழுக்கி விழுவதைத் தவிர்க்க காலணி அணியாத கால்களோடு மூடைகளைச் சுமந்து ஓடும் அம்மனிதர்களின் உடல் மொழியில் ஒரு ஒழுங்கு இருந்தது. ஈரச் சணல் மூடைகளைச் சுமந்து சுமந்து முதுகுத் தோலே கருத்துக் காய்த்த அவர்கள் மூடைகளைத் தூக்கிக் கொண்டு தரை பார்க்க குனிந்தவாறே ஒடும் போது எதிர்வரும் எவரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. எனினும், மோதிக் கொள்வதில்லை. மூடைகளையும் தவற விடுவதில்லை. விவரிக்கவியலாத தன்னுணர்வினாலும் உழைப்பாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நேர்த்தி அங்கே தானாகவே அமைந்திருந்தது.

சுமையில் வளைந்த முதுகு
காய் சுமக்கும் மனித உடல்

“ஏய்… ஏய்..” என்பது தான் சுமை தூக்கும் தொழிலாளிகளின் வேலை நேரத்திய பேசு மொழி. ”நான் முதுகு தாங்காத சுமையோடு வருகிறேன், வழியை மறிக்காமல் கொஞ்சம் ஒதுங்கி நில்லேன்” என்பதை அந்த சுருக்கமான “ஏய்” எச்சரிக்கையாகவும், பணிவாகவும், வசவாகவும், நம் மீதான அக்கறையோடும் தெரிவித்தது. அந்த மொழியும் அவர்களுக்குள் தேவையிருக்கவில்லை, அந்த உலகத்துக்குள் ஊடுருவியிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் ’புறஜாதியாராகிய’ கமிஷன் ஏஜெண்டு முதலாளிகள் மற்றும் புதிய ட்ரைவர்களுக்காகவுமே தேவைப்பட்டது. எச்சரிக்கையை உதாசீனப்படுத்தத் துணியும் நாசூக்கு உலகின் கனவான்கள் தங்கள் பிறப்பு சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுவதைக் கேட்டு ஜீரணிக்கப் பழகிக் கொள்ள வேண்டியது தான்.

வளைந்த கொக்கியை இடையில் சொறுகியவாறே அடுத்த லாரியை எதிர்நோக்கி நிற்கும் தொழிலாளர்கள் சிலரை கண்டோம். கூடவே அந்த உலகத்தின் ஓரத்தில் அப்போது தான் விழித்தெழுந்து உணர்ச்சிகளற்ற கண்களோடு தங்களைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த போர்க்களத்தை வெறித்துக் கொண்டே சோம்பல் முறித்த வேறு சிலரிடம் சென்றோம்.

“எம் பேரு ஏகாம்பரம் சார். நமக்கு ஊரு திருச்சி பக்கம்..” கண்ணோரப் பீழையைத் துடைத்துக் கொண்டு கைலியின் இடை மடிப்பில் சுருட்டி வைத்திருந்த பீடியைத் துளாவி எடுத்துப் பற்ற வைத்தார். ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். மெலிந்து வற்றியிருந்தார்.

”இன்னைக்கு நீங்க வேலைக்குப் போகலியாண்ணே?”

இறக்கி விடப்பா
இறக்குவதும் ஏற்றுவதும் சந்தையின் வாடிக்கை

”இவுக பூராவும் சங்கத்துல இருக்கறவுக. வேலை எப்பயும் இருக்கும். நமக்கு யார்னா யாவாரி வந்து உள்ளேர்ந்து வெளியே லோடு தூக்கிப் போக கூப்டா தான் சார்”

”ஏன், நீங்களும் சங்கத்துல சேரலை?”

”நானெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி இங்க வந்து பத்து நாளோ மாசமோ வேலை பார்த்துட்டு ஊருக்கே போயிடுவேன்பா?” எதிரிலிருக்கும் எங்கள் முகத்தைப் பாராமல் வேறெங்கோ வெறித்தவாறே பதிலிருத்தார்.

”ஏன், இங்கே உங்களுக்கு அவ்வளவு வேலை கிடைக்கிறது இல்லையாண்ணே?”

“இல்லபா… ஊர்ல நமக்கு விவசாயம் இருக்குபா” கவுரவக் குறைவான எதையோ சொல்வது போல் அவரது குரல் கம்மியது. நாங்கள் மேற்கொண்டு கேள்விகள் எதையும் கேட்காமல் அவர் முகத்தைப் பார்த்தோம். பீடியை இழுத்துக் கொண்டு தொடர்ந்தார்..

”திருச்சிப் பக்கம் ஊரு.. ரெண்டு பொட்ட புள்ளைங்க, ஒரு மகன். கண்ணாலம் இன்னும் ஆகலை. ரெண்டு ஏக்கரா நெலம் இருக்கு. இப்ப நெல்லு போட்டுருக்கோம். அறுவைக்கு தயாரா இருக்காம்.. இன்னைக்கு நைட்டு பஸ் ஏறிடுவேன். நடுவைக்கு, அறுவைக்கு, மருந்து காட்ட அப்பப்ப ஊருக்குப் போயிருவேன். இடையில பத்து நாளோ ஒரு மாசமோ இங்க வந்து எதுனா வேலை பார்ப்பேன். ஏதோ செலவுக்கு ஆகுமில்லே?”

”நீங்க இங்கே வந்துட்டா வயலை யார் கவனிப்பாங்க?”

“வீட்ல சம்சாரம் இருக்கா.. அவ பார்த்துக்குவா. எதுனா அம்பளையாளு செய்ய வேண்டிய வேலைன்னா மட்டும் நான் போயிட்டு வந்துருவேன்”

“பிள்ளைங்க?”

கோயம்பேடு சந்தை
உழைப்பாளிகள் இயக்கும் கோயம்பேடு சந்தை

“பொண்ணுங்க ரெண்டும் மூத்தது. வீட்ல தான் இருக்காங்க. பய்யன் கடைசி. படிக்கிறான்.. நல்லா படிப்பான் தம்பி. எங்கனா வேலைய பிடிச்சிக் குடுத்துடனும். இதெல்லாம் நம்மளோடு போகட்டும். என்னா நான் சொல்றது சரி தானே?” பேசியவாறே அவர் எழுந்தார். அதிகாலை 2 மணிக்கு அவரது உலகம் இயக்கத்தைத் துவங்கியிருந்தது. தவிர்க்க முடியாத காலைக் கடமைகளில் இருந்து துவங்க வேண்டும்.

“கக்கூசு எங்கண்ணே இருக்கு?”

“வா, அங்கே தான் போறேன்”

கக்கூசு எனப்பட்டது அருகிலிருந்த இடுக்கு ஒன்றினுள் ஒளிந்து கொண்டிருந்தது. முகப்பில் நீல நிற ப்ளாஸ்டிக் ட்ரம் ஒன்று போடப்பட்டு அதில் தண்ணீர் நிறைக்கப்பட்டிருந்தது. சிறிய ப்ளாஸ்டிக் கோப்பைகளில் தண்ணீர் சேந்திக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். ஏகாம்பரம் அருகிலிருந்த வாளி ஒன்றில் தண்ணிர் நிரப்பிக் கொண்டார்.

”ஏய்.. இந்தா நில்லுபா; இன்னாபா நென்சிகினுகீறே.. இத்தினி தண்ணிய நீ ஒண்டி தூக்கினு போனா மத்தவங்களுக்கு வோணாமா? சொல்லினே கீறேன்.. நில்லுபான்னா” கக்கூசு வாயிலுக்கு எதிரே அமர்ந்திருந்த வயதான அம்மா ஓங்கிக் குரல் கொடுத்தார்.

”நாள் குளிக்கப் போறேன்” பதில் எதுவும் எதிர்பார்க்காமல் ஏகாம்பரம் வாளியோடு உள்ளே நுழைந்தார்… சின்ன வாளி தான். மிஞ்சிப் போனால் ஐந்து லிட்டர் தண்ணீர் கொள்ளும். அவருக்கும் வற்றிச் சிறுத்த உடல் தான் என்றாலும் அதில் எப்படிக் குளிப்பார் என்பதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தலைப்பிரட்டை கூட நீஞ்சத் திணறும் அளவு அது.

உழைப்பே வாழ்வாக
உழைப்பே வாழ்க்கை

கக்கூசு எனப்பட்ட அந்த அமைப்பினுள் மூன்று கழிவறைகள் இருந்தன. மூன்றுக்கும் சேர்த்து ஒன்றே முக்கால் கதவுகள் இருந்தன. அவையும் கீல்கள் முறிந்து சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே பீங்கான் கோப்பையின் வெண்மை தெரியாதபடிக்கு மக்கிய அரக்கு நிற படிமம் போர்த்தியிருந்தது. அது நீரூற்றாது தேங்கிய மலம் அல்ல. பல்லாண்டுகளாக பினாயில் காணாது உறைந்து போன மஞ்சள் பிசுக்கு. சுவரெங்கும் வெற்றிலைக் கறையேறியிருந்தது. எனினும், பேருந்து நிலைய கழிவறைகளில் காணக்கிடைக்கும் பின்னவீனத்துவ ஓவியங்களும் இலக்கியங்களும் இல்லை.

கழிவறைகளின் பக்கவாட்டில் சிறு நீர்க்கழிப்பதற்காக நான்கு கோப்பைகள் நிறுவப்பட்டிருந்தன. அதில் இரண்டு உடைந்து போயிருக்க மூன்றாவது பாலித்தீன் கவர்களாலும் உடைந்த சீப்புகளாலும் தேய்ந்த சோப்புகளும் வேறு சில்லறைப் பொருட்களாலும் நிரம்பியிருந்தது. அதன் பயன்பாட்டைக் குலைக்க விரும்பாமல் நான்காவதை அணுகினோம். அந்தக் கோப்பை மேலும் கீழும் பைப்புகளின் பிடிமானமின்றி அந்தரத்தில் நின்றது. அதிசயம் தான். கடைசியில் வெடிக்க காத்திருந்த சிறுநீர்ப் பையை சமாதானம் செய்ய கழிவறையே கைகொடுத்தது.

கழிவறைகளுக்கு எதிர்புறம் அரையடிக்கு தரை உயர்த்தப்பட்ட அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூன்று தண்ணீர் குழாய்களில் இரண்டின் மண்டையில் திருகும் காதுகள் இல்லை. அவற்றின் குரல்வளையை மரத்துண்டாலும் மட்கிய துணியாலும் அடைத்திருந்தனர். நடுவில் இருந்த குழாயிடம் இவையெல்லாம் இருந்தும் புண்ணியமில்லை. ஏகாம்பரம், இடையில் சாயம் போன காசித்துண்டு ஒன்றை இறுக்கிக் கட்டியவாறு தனது சொரசொரப்பான உள்ளங்கையால் தோலைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவர் வாளியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் மீதமிருந்தது. வெளியேறினோம்.

”சார், சரியா சில்றை அஞ்சு ரூவா குடு சார்” அந்த அம்மாள் கடுகடுப்போடு இருந்தார். ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து விட்டு நாங்கள் அவருக்கு அருகிலிருந்த கல்லில் அமர்ந்தோம்.

“உங்களுக்கு எந்த ஊரும்மா?” வினோதமாக பார்த்தார்.

எல்லோருக்கும் இங்கு வாழ்வுண்டு
எல்லோருக்கும் இங்கு வாழ்வுண்டு

“இன்னாத்துக்கு கேக்கிறே… யாரு நீனு?” அவரது பார்வையில் சந்தேகம் இருந்தது. அந்தக் கேள்வியை அந்த இரவில் அந்த இடத்தில் மட்டும் தான் எதிர் கொண்டோம்.

”இல்லம்மா நாங்க பத்திரிகையில இருந்து வாறோம். இந்த சந்தையைப் பத்தி ஒரு ரிப்போர்ட் எடுக்க வந்திருக்கோம்”

”இங்கெ தண்ணீ இல்லேன்னு எயுதுபா. சாயந்தரம் நாலு மணிக்குள்ளே தண்ணீ தீந்து பூடுதுபா”

”இங்கே கார்ப்பரேசன்லேர்ந்தா தண்ணி வருது?”

“காப்புரேசனா..? அதெல்லாம் இல்லபா. தோ மோட்டாரு போட்டு ஏத்துவோம். கீழயே இல்லன்னா இன்னா பன்றது?”

”நீங்களா காண்டிராக்டு எடுத்திருக்கீங்க?”

“நானு வேலைக்கி இருக்கம்பா. இந்த மார்கெட்டுல மொத்தம் எளுவதுக்கு மேல கக்கூசு கீது. அத்தினியும் ஒரே ஆளு தாம்பா காண்டிராக்டு எடுத்துகுறான்”

“மாசத்துக்கு எவ்வளவு சம்பளம் தர்றாங்க?”

“ஆயிரத்து எறநூறு ரூவா தறாங்க” என்றவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஒரு கக்கூசில் குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் கூட வசூலாகிறது என்றார். இவருக்கு அறுபத்தைந்து வயதாகிறது; கணவர் இறந்து விட்டார்; மதுரவாயலில் இருந்து வருகிறார். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு சேர் ஆட்டோவில் வருபவர் இரவு பதினோரு மணிக்குத் திரும்புகிறார். போக்குவரத்துக்காக மட்டும் தினசரி முப்பது ரூபாய் செலவகிறதென்றார். ஒரே மகனுக்கும் திருமணமாகி விட்டதாம்; அவனுக்கும் தனியார் நிறுவன வேலை – கஷ்ட ஜீவனம்.

“ஆயிரத்தி இருநூறு ரூபாயிலே தொள்ளாயிரம் ரூபாய் போக்குவரத்துக்கே செலவு செய்துட்டீங்கன்னா எதுவுமே மிஞ்சாதேம்மா?”

“இன்னா பன்றதுபா.. சுகரு பிரசரு… வேற இன்னா வேலை செய்ய முடியும் சொல்லு? ஏதோ இதுவாச்சியும் கிடைச்சா வூட்ல ஒரு ஆதரவா இருக்குமே. இங்கே குந்தினு இருந்தா அதுவாச்சியும் கிடைக்கும். வூட்ல சும்மா குந்திகினு இருந்தா என்னா கிடைக்கும் சொல்லு?”

காத்திருக்கும் கீரைக் கட்டுகள்
காத்திருக்கும் கீரைக் கட்டுகள்

நாங்கள் திரும்பினோம். சந்தை மேலும் பரபரப்பாகியிருந்தது. மொத்த சந்தையும் ஒரே உடலாக ஒரே ஆன்மாவாக எழுந்து நின்றது. அந்த உடலில் பல்வேறு பாகங்களுக்கு பாயும் ரத்த நாளங்களாக சுமை தூக்கும் தொழிலாளிகள் அங்கும் இங்குமாய் சுமைகளோடு ஓடிக் கொண்டிருந்தனர். நாங்கள் அயர்ந்து நிற்கும் நேரமெல்லாம் எங்கிருந்தோ கேட்ட “ஏய்” நினைவுகளுக்கு உயிரூட்டியது. சங்கத்தில் சேர்ந்திருக்கும் சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு ஒரு மூடைக்கு ஒரு ரூபாய் கூலி. எனவே அதிக மூடைகளுக்கு அதிக கூலி. வயதில் இளைய தொழிலாளிகள் சிலர் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூடைகளைச் சுமந்து கொண்டு ஓடினர்.

இந்தப் பரபரப்புகளுக்கு இடையே எண்பது வயது மதிக்கத் தக்க முதியவர் இரண்டு பிளாஸ்டிக் கித்தான்களில் கறிகாய்களை நிறைத்துக் கொண்டு சந்தையின் பக்கவாட்டு வாயிலோரம் அமர்ந்திருந்தார். நாங்கள் அவரிடம் சென்றோம்.

“என் பேரு கனசபை தம்பி. இந்த கறிகாயெல்லாத்தையும் மகாபலிபுரம் கொண்டு போயி விக்கனும். என்னோட சம்சாரம் வாழக்கா வாங்க உள்ளே போயிருக்கா.. நமக்கு முடியல்லே. புள்ளைங்க யாரும் இல்ல. முதியோர் துட்டுக்கு எழுதுப் போட்டும் கிடைக்கலே. தினமும் ரவைக்கு இங்கே வந்துடுவோம். இங்கியே தூங்கிட்டு இந்த நேரத்துக்கு கறிகா வாங்கிட்டு பஸ்சுல ஏத்திகிட்டு போவோம். ஒரு நாளைக்குத் தொள்ளாயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்வோம். பஸ்காரன் லக்கேஜுக்கு 20 ரூபாயும் மாமூலா 40 ரூபாயும் வாங்கிக்கிறான். எல்லா கறிகாயும் மிஞ்சாம வித்தா அம்பதோ நூறோ மிஞ்சும்..”

உழைப்புக்கு ஓய்வில்லை
உழைப்புக்கு ஓய்வில்லை

தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை இவரைப் போல் எண்ணற்றவர்களை ஒரு தாயைப் போல் அரவணைத்துக் காக்கிறது. தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது. இவரைப் போல் ஆதரவற்ற முதியவர்கள் பலர் இங்கே மிஞ்சும் கறிகாய்களை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று தெருத்தெருவாக கூடைகளில் சுமந்து கூவிக்கூவி விற்றுப் பிழைக்கிறார்கள். மீண்டும் இரவில் இங்கேயே ஒதுங்கிக் கொள்கிறார்கள். சிலர் காயம் பட்ட பழங்களையும் காய்கறிகளையும் குறைந்த விலைக்கு வாங்கி கூறு கட்டி விற்கிறார்கள். இவ்வாறு வாங்கி விற்கும் அளவுக்குக் கூட பொருளாதாரம் இல்லாதவர்களையும் இந்தச் சந்தை கைவிடுவதில்லை.

ஆண்டாளம்மாள் அப்படி ஒருவர் தான். ஆண்டாளம்மாவுக்கு 89 வயது. கணவரோ, பிள்ளைகளோ ஆதரவளிக்கக் கூடியவர்களோ இல்லாதவர். கறிகாய்கள் வாங்கி விற்க குறைந்த பட்சமாகவாவது தேவைப்படும் சில நூறு ரூபாய்கள் கூட ’மூலதனம்’ இல்லை. அலைந்து திரிந்து கூடை சுமக்கத் தெம்பும் இல்லை. கேட்கும் திறன் ஏறத்தாழ போய் விட்டது, பார்க்கும் திறனும் நழுவிச் சென்று கொண்டேயிருக்கிறது. கேள்விக்குறியாய் வளைந்த முதுகு. உடுத்தியிருக்கும் சாயம் போன கிழிந்த சேலையைத் தவிற ஒரு ‘சரவணா ஸ்டேர்ஸ்’ பிளாஸ்டிக் கவரில் இன்னொரு சேலை வைத்திருக்கிறார். மேலும் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கித்தானை வைத்திருக்கிறார். அவரிடம் சொத்து என்று பார்த்தால் இவ்வளவு தான்.

உழைப்புக்கு நாங்கள் சலிக்கவில்லை
உழைப்புக்கு நாங்கள் சலிக்கவில்லை

ஆண்டாளம்மாளின் நாள் தினமும் அதிகாலை இரண்டு மணிக்குத் துவங்குகிறது. தனது கித்தானைத் தூக்கிக் கொண்டு தள்ளாடியவாறே நடந்து செல்கிறார். லாரிகளில் இருந்து கறிகாய் மூடைகள் இறக்கும் இடங்களிலும், மூடைகள் அடுக்கி வைத்திருக்கும் இடங்களிலும், தூக்கிச் செல்லும் வழி நெடுகவும் சிதறிக்கிடக்கும் கறிகாய்களை அந்த கித்தானில் சேகரித்து வருகிறார். சந்தையின் ஒரு நுழைவாயிலருகே ஆண்டாளம்மாளின் ‘கடை’ இருக்கிறது. கறிகாய்களைக் கீழே கொட்டி அதைத் தனது இன்னொரு பழைய சேலையால் துடைத்து சுத்தம் செய்து அதே கித்தானை தரையில் விரித்து அதன் மேல் அழகாக அடுக்குகிறார். அவர் வியாபாரத்தை துவங்கும் போது அதிகாலை நான்கு மணியாகி விடுகிறது.  அவற்றை விற்றுத் தீர்த்து ஐம்பதோ நூறோ சேர்த்துக் கொண்டு அடுத்த நாளுக்காகவும் சாவுக்காகவும் காத்திருக்கத் துவங்குகிறார்.

ஆண்டாளம்மாள் தனது வாழ்க்கை குறித்து விவரிக்கும் போது அதில் துயரத்தின் சுவடு கொஞ்சம் கூட தென்படவில்லை. அது ஒரு தகவல் என்கிற மதிப்போடே தான் விவரித்துச் செல்கிறார். இப்படி சிதறிய கறிகாய்களைப் பொறுக்கி விற்பவர்கள் மாத்திரம் சுமார் நூறு பேர்கள் வரை அங்கே பிழைக்கிறார்கள். இவர்கள் தவிர காவலர்கள். பழச் சந்தையில் ஐந்து பத்துக் கடைகள் சேர்ந்து இரவுக் காவலர் ஒருவரை நியமித்துக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் மொய்தீன் காட்வா.

”சார், என்ன பத்திரிகையா? வாங்க சார் நான் சொல்றேன்.. திருநெல்வேலிக்குப் பக்கம் நாங்குனேரி தான் நம்ம பூர்வீகம். எங்க அப்பாரு காலத்திலேயே இங்க வந்துட்டோம். அப்பா காட்வா பாய் மண்ணடில இரும்பு யாவாரம் பாத்தாரு. அந்தக் காலத்திலேயே லச்சாதிபதி சார் அவரு” காட்வா பாய் சிரித்துக் கொண்டே துவங்கினார்.

பொங்கலுக்கு செங்கரும்பு
பொங்கலுக்கு செங்கரும்பு

காட்வா பாயின் சகோதரர்கள் பங்கு பிரிப்பதில் ஏமாற்றி இவரை ஓட்டாண்டியாகத் துரத்தி விட்டுள்ளனர். தற்போது எழுபது வயதாகும் காட்வா பாய், இதற்கு முன்பு வடபழனியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்துள்ளார். ‘அஞ்சி கிலோ பார்சலோ, பத்து கிலோ பார்சலோ.. நல்லா பொட்டலம் போடுவேன் சார்’ என்கிறார். இங்கே வாங்கும் ஏழாயிரம் சம்பளத்தில் நாலாயிரத்தை வாடகைக்குக் கொடுத்து விட்டு மற்ற செலவுகளைச் சமாளிக்க தினமும் வேலை முடிந்து செல்லும் போது நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு கீரை வாங்கிச் செல்கிறார். அதில் நாற்பதோ அம்பதோ நிற்கிறது.

”இன்ஷா அல்லாஹ் எனக்கு ஒரு குறையும் இல்லே சார். முன்னே எல்லாம் அஞ்சு வேளையும் தொழுவேன் அந்த புண்ணியத்துல ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடிச்சு குடுத்துட்டேன். இனி என்ன நானும் என் சம்சாரமும் தானே… காலம் அப்படியே போயிடும்” காட்வா பாயின் சிரிப்பில் அத்தனை அழகு. மேல் வரிசையில் இரண்டு பற்களும் கீழ் வரிசையில் ஒரு பல்லும் பெயர்ந்திருந்தது. அது இன்னும் அழகைக் கூட்டியது.

“நைட்டு வேலையை வச்சிக்கிட்டு எப்படி உங்களால தொழ முடியுது?”

“அதெல்லாம் முன்னே சார்… இப்ப எங்க தொழுதுகிட்டு.. பிழைப்புக்கே சரியா இருக்கே?” அதே சிரிப்பு.

நாங்கள் திரும்பினோம். கீரைச் சந்தை தான் எங்களது சந்திப்புப் புள்ளி; அது பழச்சந்தைக்கு நேர் எதிர் திசையில் இருந்தது. மனிதக் கடலுக்குள் நீண்ட தொலைவு நடக்க வேண்டியிருக்கும். மணி ஐந்தைக் கடந்திருந்தது, சந்தையின் இயக்கம் உக்கிரமாகியிருந்தது. மனிதத் தலைகளும், குரல்களும் கணிசமாக கூடியிருந்தது. ”ஏய்” என்கிற சங்கீதம் உச்சமடைந்திருந்தது.

’மார்னிங் வாக் போய்ட்டு அப்டியே சீப்பா எதுனா கிடைச்சா பர்சேஸ் பண்ணிட்டு வரலாமே’ என்கிற திட்டத்தோடு வந்திருந்த நாகரீக மனீதர்கள் சிலர் தென்பட்டனர். ரெபோக் ஷூ, பூமா ட்ராக் மற்றும் டீ அணிந்து குறுந்தாடியும் ரிம்லெஸ் கிளாசும் அணிந்திருந்த ஒரு வெள்ளை மனிதர் ஆண்டாளம்மாளின் கடை முன் தனது பெருந் தொப்பை அழுந்தக் குனிந்திருந்தார்.

“நோ நோ… இதுக்கு டெவெண்டி ரூபீஸா? பத்து ரூபா தருவேன்.. இஷ்டமிருந்தா குடு இல்லேன்னா விடு”

ஆண்டாளம்மாளுக்கு இந்த பேரமெல்லாம் காதில் கேட்டிருக்காது என்று எமக்குத் தெரியும்; எனினும் அவள் திருப்தியாக கறிகாய்களை அள்ளிக் கொண்டிருந்தாள். இன்றைக்கு அவள் ஐம்பது ரூபாய்கள் தேற்றி விடுவாள்.

நாங்கள் சந்திக்கும் இடம் நோக்கி நடையைப் போட்டோம்.

கோயம்பேடு பயணத்தை முடித்துவிட்டு தோழர்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு தோழர் சொன்னார்: “இந்த வாழ்க்கையை பாத்தப்புறம்தான் நம்மளோட வாழ்க்கை எவ்வளவு பாதுகாப்பானதுங்கிறத தெரிஞ்சுகிட்டேன். இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து இப்போதைக்கு விடுதலை இல்ல”.

–    வினவு செய்தியாளர் குழு

  1. Hi வினவு செய்தியாளர் குழு,

    Nice coverage.நன்றி.

    கடைசியில் சொதப்பிவிட்டீர்கள்.

    //ஆண்டாளம்மாளுக்கு இந்த பேரமெல்லாம் காதில் கேட்டிருக்காது என்று எமக்குத் தெரியும்; எனினும் அவள் திருப்தியாக கறிகாய்களை அள்ளிக் கொண்டிருந்தாள். இன்றைக்கு அவள் ஐம்பது ரூபாய்கள் தேற்றி விடுவாள்.//

    இங்கே ள் க்கு பதில் ர் போட்டு எழுதியிருக்க வேண்டும். திருத்தி விடுங்கள். நன்றி.

  2. எல்லா அமைச்சர்களையும் ஒரு வாரம் இஙுகு காய்கறி சுமக்க
    வைக்கணும்…வலி என்ன என்பது தெரியும்

  3. . பஸ்காரன் லக்கேஜுக்கு 20 ரூபாயும் மாமூலா 40 ரூபாயும் வாங்கிக்கிறான்….

    Since they are charging 20 for luggage , I assume it is legally allowed.
    Or does the luggage has any restrictions?
    if that is case it should be made legal during certain hours.

    Article gives a good insight about the poor people’s life.

  4. முதியோர் பாதுகாப்பு என்பது சமூகத்தின், அரசின் கடமையாக இருந்தாலும் ஆண்டளம்மாள் போன்ற ஆதரவற்ற முதியவர்களை அவர்கள் விரும்பினால் காக்கும் கரங்கள் போன்ற முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவது ஓரளவுக்கு நம் மனதை ஆற்றுப்படுத்தும்..

  5. “இன்ஷா அல்லாஹ் எனக்கு ஒரு குறையும் இல்லே சார். முன்னே எல்லாம் அஞ்சு வேளையும் தொழுவேன் அந்த புண்ணியத்துல ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடிச்சு குடுத்துட்டேன். இனி என்ன நானும் என் சம்சாரமும் தானே… காலம் அப்படியே போயிடும்” காட்வா பாயின் சிரிப்பில் அத்தனை அழகு. மேல் வரிசையில் இரண்டு பற்களும் கீழ் வரிசையில் ஒரு பல்லும் பெயர்ந்திருந்தது. அது இன்னும் அழகைக் கூட்டியது.””

    Is this called beauty. Why dont you kiss him?

  6. சுமை தூக்கும் தொழிலாளிக்கு ஒரு மூடைக்கு ஒரு ரூபாய் கூலி.அவல வாழ்க்கையின் அர்த்தங்களை சிலுவை போல் சுமக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட பொறாத தர்ப்பயை வைத்துக்கொண்டு கச்சம் வரிஞ்சு கட்டி,உச்சிகுடுமி தட்டி யமகாவில் பறக்கும் அவர்கள் கணிசமான தொகையுடன் ஒரு மூடை பச்சரிசி காய் கனிகளுடன் ஒரு மணிநேரத்தில் திரும்புகின்றனர்.என்ன கொடுமை இது.

Leave a Reply to ஹைதர் அலி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க