Thursday, May 15, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விதுணைவேந்தரை பதவி நீக்கக் கோரி HRPC ஆர்ப்பாட்டம்

துணைவேந்தரை பதவி நீக்கக் கோரி HRPC ஆர்ப்பாட்டம்

-

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணைனைப் பதவி நீக்கம் செய்யக்கோரியும்
துணை வேந்தரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும்

ஆர்ப்பாட்டம்

னித உரிமைப்பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக்கிளை சார்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவர்மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திடவும், பழிவாங்கப்பட்டுள்ள ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி பணியமர்த்த வலியுறுத்தியும், 21.01.2014 காலை 10.00 மணியளவில் மதுரை உயர்நீதிமன்றம் முன்பாக தோழர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர். ம.உ.பா.மையம், அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துவக்க உரையாற்றிய மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர். திருநாவுக்கரசு, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் உள்ளதா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது, துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் லஞ்சத்தின் உறைவிடமாகிவி்ட்டார். கேள்விகேட்பவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதை எதிர்த்து மாணவர்களும் பேராசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களோடு மக்களும் கிளர்ச்சியாக எழுந்து நின்று போராடும் போதுதான் இந்த அநீதிகளுக்குத் தீர்வு கி்ட்டும். மக்களைத் திரட்டும் அந்தப்பணியை மனிதஉரிமைப் பாதுகாப்பு மையம் செய்ய வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளர். ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர்.சீனிவாசன் தனது உரையில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம், பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு இருண்ட காலம். நியாயத்தை பேசியதற்காக பழிவாங்கப்பட்டவர்கள் ஏழுபோ். பிரச்சனைகள் தேங்கிக்கிடக்கின்றன. பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தைகளின் மூலம் எளிதில் தீர்வு காணமுடியும். ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை. ஏனெனில் பிரச்சனைகளின் மூலகாரணமே அவர்தான். தான்தோன்றித்தனமாக அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது.

துணைவேந்தர் என்பவர் நோ்மையாகவும், தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும். ஆனால் எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் பதவியி்ல் இருப்பது அநியாயம், நீதிமன்றத்தின் முன்னால் போராடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் நீதிதேவனின் கண்கள் திறக்குமா எனத் தெரியவில்லை” என்று பேசினார்.மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனி்ன் தலைமையில் நடத்தப்பட்டுவரும் முறைகேடுகள், அட்டூழியங்கள் உள்ளிட்டவை குறித்து ஆரம்பம் முதலான அனைத்து விவரங்களையும் தெளிவாக எடுத்தரைத்தார்.

வழக்கறிஞர் வின்சென்ட் தனது உரையில், “பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தகுதிகளை புறக்கணித்துவிட்டு அரசியல் சார்பாக என்றைக்கு முடிவு எடுக்கப்பட்டதோ, அன்றே பல்கலைக்கழகம் அழிவை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இன்று அது ஊழலில் திளைக்கிறது. முன்பு பெரியாரின் கருத்துக்களை எடுத்துச்சென்ற ஒரு பல்கலைக்கழகம் இன்று புதிய பார்ப்பனியத்தின் உறைவிடமாக மாறிவிட்டது” என்று பேசினார். ஜெ. அரசின் பார்ப்பானிய ஆதரவு, திராவிட கட்சிகளின் கள்ளமௌனம் உள்ளிட்டவைகளையும் தோலுறித்துக்காட்டினார்.

ம.உ.பா.மையத்தின் துணைத்தலைவர். வழக்கறிஞர் பா.நடராஜன் தன்னுடைய கண்டன உரையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேங்கிக்கிடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், தமிழக அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ள பங்கினை விளக்கினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராஜ் தனது உரையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரின் நியமனத்தினை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டு, 1 ½ ஆண்டுகள் ஆகியும் (துணைவேந்தர் பதவிக்காலமே 3 ஆண்டுகள் மட்டுமே) நீதிவழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்துவரும் நீதித்துறையின் போக்கினை விளக்கி, நீதித்துறையிலும் சீர்திருத்தம் வேண்டி போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

சமநீதி வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர் கனகவேல் பேசும் போது, “50 ஆண்டுகால பல்கலைக்கழக வரலாற்றில் 16 துணைவேந்தர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் இதுபோன்று ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியவர்கள், மானியம் கேட்டவர்கள், எஸ்.சி / எஸ்.டி க்கான காலிபணியிடங்களை நிரப்பச்சொன்னவர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர்களையும், பேராசிரியர்களை தன்சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, ஒரு துணைவேந்தர் பழிவாங்குவது இதுவே முதல்முறை” என்று குறிப்பிட்டார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிரச்சனையானது ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனை என்று குறுகிய வட்டத்தில் நின்று கருதிவிடமுடியாது. ஏனெனில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமானது, மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து வரக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான ஒரே பல்கலைக்கழகமாக இருந்து வருகின்றது. அதனால் இது அனைத்து மக்களுக்குமான பிரச்சனை என்பதை மக்கள் உணரவேண்டும். இதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மாணவர்களையும், முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும்” என அறிவித்தார்.

செயற்குழு உறுப்பினர் ஜெயப்பாண்டி நன்றி தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள், ம.உ.பா.மைய உறுப்பினர்கள் தோழமை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.