”ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதமொன்றுக்கு 700லிட்டர் தண்ணீர் இலவசம். நவம்பர் 2013 வரையிலான திருப்பிச் செலுத்தவியலாத தண்ணீர் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும்” என்பது ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டமன்ற தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதி.
ஆட்சிக்கு வந்ததும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இந்த முடிவை செயல்படுத்துவது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு கேஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.

“நாங்கள் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை. நாங்கள் சொன்னதெல்லாம் தண்ணீர் இணைப்பு உள்ளவர்களுக்கு 700 லிட்டர் தண்ணீரை இலவசமாக அளிப்போம் என்று தான். இதெல்லாம் வெறும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மட்டும் தான்” என்று சொன்னவர், “குறிப்பிட்ட சில இடங்களில் தண்ணீர் வழங்குவதற்கான அடிப்படைக் கட்டுமானங்கள் ஏற்கனவே இருக்கின்றன, வெறுமனே நீர்தேக்கத்திலிருந்து வரும் முக்கிய குழாயோடு அவற்றை இணைக்கும் வேலை மட்டும் தான் பாக்கி” என்றும் தெரிவித்துள்ளார். “இவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது தண்ணீர் மாஃபியாக்கள் தான்” என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதாவது, ஒரு பக்கம் தில்லியின் குடிநீர் வினியோகத்தை தனியார் மயமாக்கும் கொள்கையில் அடிப்படை மாற்றம் எதுவும் இல்லை என்று முதலாளிகளை சமாதானப்படுத்தி விட்டு, அனைவருக்கும் தண்ணீர் வினியோகம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு நாமம் போட்டிருப்பதை விளக்கியிருக்கிறார்.
மேற்கண்ட அறிவிப்புகள் வெளியானதும், இது தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் தேசியளவிலான ஊடகங்களிலும் இணையவெளியிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
மிகப் பெரும்பான்மையான முதலாளித்துவ ஊடகங்கள் கூட ஆம் ஆத்மி கட்சி காங்கிரசின் வழியில் செல்லத் துவங்கி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றன. மக்களுக்கு இலவசத் திட்டங்களை வழங்குவது அரசின் செலவினங்களை அதிகரித்து விடுமென்றும், ஏற்கனவே பற்றாக்குறையில் தள்ளாடி வரும் தில்லியின் நிதிநிலை இது போன்ற கவர்ச்சிகரத் திட்டங்களினால் நிலைகுலைந்து போய் விடுமென்றும் சாமியாடி வருகிறார்கள். என்றாலும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இணைய பீரங்கிகளோ, இவை மக்கள் நல நடவடிக்கைகள் என்பதால் ஆதரித்தே தீர வேண்டுமென்றும், இது போன்ற திட்டங்களைக் குறை கூறுவோருக்கு மக்கள் மேல் எந்த அக்கறையும் இல்லையென்றும் எதிர் தாக்குதலைத் தொடுத்து வருகிறார்கள்.
இவ்விரு கூச்சல்களுக்கு இடையில் சில உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படைத் தகவல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தில்லியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 25 சதவீதம் குடிநீர்க் குழாய்களால் இணைக்கப்படவில்லை. மொத்தமுள்ள 14,000 கிலோ மீட்டர் குழாய் இணைப்புகளில் 80 சதவீதத்திற்கும் மேலானவை சுமார் 40 அல்லது 50 ஆண்டுகள் பழமையானவை. இதன் மூலம் 45 சதவீத நீர் வீணாகிறது. இந்த அடிப்படைக் கட்டுமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான எந்தத் திட்டமும் ஆம் ஆத்மி கட்சியினரால் இது வரை முன்வைக்கப்படவில்லை. இலாபம் என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு செய்யப்பட வேண்டிய இந்த அடிப்படை வேலைகள் குறித்து முதலாளிகள் மட்டுமல்ல, ஆம் ஆத்மியாலும் கூட முன் வைக்க முடியாது.
சொந்தமாக குடிநீர் தயாரிப்பதற்கு தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1994-ல் ஆரம்பிக்கப்பட்ட யமுனா நதியில் அணை கட்டும் திட்டம் ரூ 214 கோடி செலவழித்த பிறகு கைவிடப்பட்டுள்ளது என்று சமீபத்திய தலைமை தணிக்கை அலுவலக அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தில்லியின் பிரதான நீராதாரமான யமுனை மற்றும் கங்கையின் நீரோட்டம் தொடர்ந்து மாசுபட்டு பயன்படுத்தவியலாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனைச் சரி செய்வது குறித்தும் இதுவரை எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. வைக்கவும் முடியாது. மீறி வைத்தால் ஆட்சி மட்டுமல்ல, கட்சியே நடத்த முடியாது.
அரசு புள்ளிவிபரங்களின்படி 2.2 கோடி தில்லி வாழ் மக்களில் 30 சதவீதம் பேர் நகர்ப்புற கிராமங்களிலும், அங்கீகரிக்கப்படாத சேரிகளிலும் வசிக்கின்றனர். தில்லியின் மொத்த குடும்பங்களில் சுமார் 32 சதவீத வீடுகளுக்கு (சுமார் 7 லட்சம் குடும்பங்கள்) குடிநீர் இணைப்பே கொடுக்கப்படவில்லை. 68 சதவீத வீடுகள் மட்டுமே குடிநீர் விநியோக கட்டுமானத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ள வீடுகளிலும், சுமார் 20 சதவீத இணைப்புகளுக்கு குடிநீர் பயன்பாட்டு அளவைக் கணக்கிடும் மீட்டர் பொருத்தப்படவில்லை. மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இணைப்புகளில் சரிபாதி சதவீதம் பேர் இலவச நிர்ணய அளவான 700 (தற்போது 667 லிட்டர்கள் என்கிறார்கள்) லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்துவோர். ஆக, ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேருக்கும் குறைவானவர்களே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்த இலவச அறிவிப்பு ஆரவாரமாக அறிவிக்கப் பட்ட போது இதோடு சேர்த்து குடிநீருக்கான கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தும் அறிவிப்பும் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தேசிய மாதிரி சர்வே ரிப்போர்ட்டின் படி, மீட்டர் பொருத்தப்பட்டுள்ள தில்லியின் மாநகரப் பகுதி குடும்பங்களில் 15.6 சதவீத குடும்பங்களுக்கும் புறநகர் பகுதியில் 29.7 சதவீத குடும்பங்களுக்கும் வருடம் முழுவதும் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. இது தவிர, குடிநீர் பகிர்தலும் சமனற்ற முறையிலேயே உள்ளது. சமீபத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் நடத்திய சர்வே ஒன்றின் படி சுமார் 24.8 சதவீத மக்களின் தனிநபர் தண்ணீர் வழங்கல் ஒரு நாளைக்கு வெறும் 3.82 லிட்டர் தான். அதே நேரம் தில்லியின் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியிலோ தனிநபர் குடிநீர் வழங்கல் சராசரியாக 220 லிட்டராக உள்ளது. பணக்கார மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியிலோ ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 509 லிட்டர் அளவு குடிநீர் நுகரப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வான விநியோகத்தையும், நுகர்வையும் சமப்படுத்தும் தைரியம் ஆம் ஆத்மிக்கு கிடையாது.
அறிவிக்கப்பட்டுள்ள இலவச அறிவிப்பின் கீழ் ‘நிபந்தனைகளுக்குட்பட்டது’ என்ற சிறிய ஸ்டார் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது, எவர் ஒருவர் இலவசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 700 லிட்டரை (அல்லது தற்போது சொல்லப்படும் 667 லிட்டரை) தாண்டி ஒரு சொட்டு நீராவது பயன்படுத்தி விடுகிறார்களோ, அவர் எடுத்துக் கொண்ட மொத்த நீருக்குமான விலையையும் கொடுத்து விடவேண்டும்.
ஆக, கூட்டுக் குடும்பமாக வசித்து அதிக நீர் பயன்படுத்துவோரும் குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தாதவர்களுமே இலவச நீருக்கான கூடுதல் செலவில் ஒரு கணிசமான பகுதியைச் சுமக்கவிருக்கிறார்கள். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் வேறு ஒரு கணக்கைச் சொல்கிறார். அதையும் பார்க்கலாம்.

இந்த வாக்குறுதியை கேஜ்ரிவால் கொடுப்பதற்கு முன், இலவசமாக தண்ணீர் வழங்குவது குறித்த சாத்தியப்பாடுகளை ஆராயும் பொறுப்பை என்.ஜி.ஓ ஒன்றிடம் ஒப்படைத்துள்ளார். “தண்ணீர் ஜனநாயகத்துக்கான மக்கள் முன்னணி” என்கிற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், தில்லி குடிநீர் வாரியத்தின் வருவாயை ஆராய்ந்தார்களாம். அந்த ஆராய்ச்சியின் படி, ஆண்டொன்றுக்கு தில்லி குடிநீர் வடிகால் வாரியம் சுமார் ரூ 2,000 கோடி சம்பாதிப்பதாகவும், இதில் ரூ 1,500 கோடி நீர் வழங்கலுக்காக செலவாகி விடுகிறதென்றும், மீதமுள்ள ரூ 500 கோடி லாபமாக கிடைக்கிறது என்றும் தெரிய வந்ததாம்.
இந்த ரூ 1,500 கோடி பல்வேறு தனியார்-பொதுத்துறை கூட்டு மாதிரியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து தண்ணீர் வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. அத்தகைய ஒரு நிறுவனம்தான் வயோலியா
நாளொன்றுக்கு 700 லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான ஓராண்டு செலவு ரூ 469 கோடி மட்டும்தான் என்றும், எனவே இலவச நீர் வழங்குவது (மேலே சொன்னதுபடி தில்லி மக்கள் தொகையில் 27% பேருக்கு மட்டும்) சும்மா ஜூஜூபி மேட்டர் என்றும் தெரிய வந்ததாகவும் அந்த என்.ஜி.ஓவைச் சேர்ந்த ‘விஞ்ஞானி’ சஞ்சய் சர்மா ஏசியன் ஏஜ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
“நாலும் மூணும் ஏழு” என்கிற அரிய உண்மையைக் கண்டுபிடிக்க இப்பேர்ப்பட்ட விஞ்ஞானிகளெல்லாம் ஆம் ஆத்மி கட்சிக்குத் தேவைப்படுகிறார்கள் என்பது ஆச்சரரியமாக இருக்கிறது. இத்தகைய கட்சியில்தான் ஐ.ஐ.டி மற்றும் என் ஆர் ஐ அறிவாளிகள் போட்டி போட்டுக் கொண்டு சேர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக, அறிவிக்கப்படவுள்ள திட்டம் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் கொண்டது, அது வெறும் வாய் வார்த்தையோடு நின்று போகுமா அல்லது பயனாளிகளைச் சென்றடையுமா, அதற்காக செய்யப்பட வேண்டிய உள்கட்டுமான வசதிகள் என்ன என்று பல்வேறு அம்சங்களையும் பருண்மையாக ஆராயாமல் இப்படி அடித்து விடுவதற்கு என்ன காரணம்? அறிவிப்பை வெளியிட்டு பின் அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் யோக்கியதை பற்றிக் கொஞ்சமும் அக்கறையின்றி வார்த்தைகளை மாத்திரம் வைத்து விளம்பரம் தேடிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனர் ஆம் ஆத்மி. அதாவது தனியார் மயம், உலகமயக் கொள்கைக்கு கேடு வராமல் மக்களை ஏமாற்றும் தந்திரமே ஆம் ஆத்மியின் மக்கள் நல புரட்டுத் திட்டங்கள்.
இரண்டாவதாக, நீராதாரங்களை மேம்படுத்துவது, நீர் வழங்கலுக்கான உள்கட்டுமானத்தை சீரமைப்பது, அனைத்து மக்களுக்கும் சரி சமமாக நீர் விநியோகம் நடைபெறுவதை உத்திரவாதப் படுத்துவது, குடிநீர் சுத்திகரிப்பு கட்டுமானங்களை உருவாக்குவது போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளைப் புறக்கணித்து விட்டு தனியார் மயத்தை பெருக்கி விட்டு இலவசத் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்துக் கொண்டே செல்வது என்பது மேலோட்டமாக மக்களிடம் ஒரு நற்பெயரைத் தரலாம். ஆனால் சற்று ஆழமாக பார்த்தால் எப்படி தமிழக அரசு காப்பீட்டுத் திட்டம் மக்கள் பணத்தை காப்பீடு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, சிகிச்சை என்றால் காசு இருந்தால்தான் முடியும் என்று மாற்றிவிட்டார்கள் அல்லவா? இதில் பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் முன் கேஜ்ரிவால் வெறும் சுண்டெலி தான்.
மூன்றாவதாக, இவர்கள் போடும் ”நாலும் மூணும் ஏழு” என்கிற கணக்கும் அதனடிப்படையில் வந்தடைந்திருக்கிற முடிவுகளுமே அடிப்படையில் சில சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன. இலவச நீர் வழங்குவதற்குப் போதுமான நிதி ஆதாரம் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தான் தில்லி குடிநீர் வாரியத்திடம் இருப்பாக இருக்கிறது. ஏனெனில், ஏற்கனவே ’சம்பாதித்த’ லாபமெல்லாம் பணக்கட்டுகளாக மஞ்சப்பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்காது. அவை அரசு கருவூலத்திற்குச் சென்று வேறு பல திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டிருக்கும். ஏப்ரலுக்குப் பின்னரான புதிய கட்டணத்தின் மூலம் ஒரு பகுதி பயனாளிகளிடமிருந்து கிடைக்கவுள்ள கூடுதல் வருமானம், இன்னொரு பகுதி பயனாளிகளுக்கு வழங்கும் இலவசத்தின் சுமையை ஒரு பகுதியளவிற்கே சுமக்கும். ஆக, ஏப்ரல் மாதத்திற்குப் பின் இந்த் கூடுதல் தொகையை அரசு மானியமாக வழங்க வேண்டியிருக்கும் என்கிறார் தில்லி குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
இதே அரவிந்த் கேஜ்ரிவால் 2005-ல் தண்ணீர் வினியோகத்தில் தனியார் மயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு குடிநீர் சுத்திகரிப்பில் தனியார் மயத்தைக் குறித்து அவர் மௌனம் சாதிக்கிறார். அதன் மூலம் தனது தனியார் மய ஆதரவை பணிவுடன் தெரிவிக்கிறாராம்.
மொத்தத்தில், இருபது சதவீத மக்களுக்கு இலவச நீரையும் எண்பது சதவீத மக்களுக்கு கானல் நீரையும் வழங்குவது தான் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான அறிவிப்பின் பின்னே உள்ள சூட்சுமம். மறுகாலனியாக்கத்தையும், உலக மயத்தையும் ஆதரிக்கின்ற ஆளும் வர்க்க கட்சிகளின் புதிய வரவு ஆம் ஆத்மி என்பதைத் தாண்டி இது குதிரை அல்ல, பெருச்சாளிதான் என்பதை மக்கள் உணர்வார்களா?
– தமிழரசன்
மேலும் படிக்க
- Why AAP’s free water promise in Delhi is careless populism
- Not so aam aadmi policy
- AAP delivers on water promise, but bills to rise for big consumers
- Arvind Kejriwal delivers on the promise of free water for Delhi
- Why 700 litres free water daily may remain a far cry for Delhi
- Vinod Binny’s AAP outburst: Real concern or just sour grapes?
- AAP delivers on water promise