Wednesday, September 23, 2020
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

-

2000-ம் ஆண்டு மார்ச் மாதம். மறக்க முடியாத சில நிகழ்வுகளை உள்ளடக்கிய மாதம் அது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த மாதமும் கூட. துணைக்கண்ட பிரதேசத்தில் பனிப்போர் காலத்திய புவிசார் அரசியல் கூட்டுகளில் ஏற்பட்டிருந்த பாரிய மாற்றங்களை வெளிப்படையாக அறிவித்தது அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனின் இந்திய வருகை. பின்னர் ஏற்படவிருக்கும் அணுவுலை ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல்வேறு இந்திய – அமெரிக்க அடிமை ஒப்பந்தங்களுக்கு இந்த வருகை கட்டியம் கூறியது.

பில் கிளிண்டன்
இந்திய அடிமைகளுக்கு அருள் பாலிக்க வந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்

கிளிண்டனின் இந்திய வருகை பாகிஸ்தானுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் ராஜதந்திர ரீதியிலான தோல்வி என்று இந்தியா தரப்பில் படாடோபமாக கொண்டாடப்பட்டது. உலக வல்லரசின் கருணைப் பார்வையை வென்றெடுப்பதில் துணைக்கண்டப் பிரதேசத்தில் தனக்கிருந்த போட்டியாளனை வீழ்த்தி விட்ட பெருமிதத்தை இந்திய ஆளும் வர்க்கம் பட்டவர்த்தனமாகவும் வெட்கமின்றியும் உரக்கப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. முதலாளித்துவ ஊடகங்களின் மகிழ்ச்சிப் பெருக்கிற்கு ஒரு எல்லையே இல்லை.

இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், மார்ச் 20-ம் தேதி மாலை வேளையில் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட சத்திசிங்கபுரா கிராமத்திற்கு இந்திய இராணுவச் சீருடையணிந்த 17 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சீக்கியர்களை குருத்வாராவிற்குள் கூடுமாறு அந்தக் கும்பல் உத்தரவிடுகிறது. சீக்கிய ஆண்களும் சிறுவர்களும் அந்த கிராமத்திலிருந்த குருத்வாராவில் கூடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுதமற்ற அந்த அப்பாவிச் சிவிலியன்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது இந்திய இராணுவ சீருடையில் இருந்த கும்பல். 34 பேர் பலியாகிறார்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீறுகொண்டெழும் இந்திய ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் இது பாகிஸ்தானின் சதி என்று குற்றம் சுமத்துகிறார்கள். கிளிண்டன் இந்தியா வருவதை விரும்பாததால் பாகிஸ்தான் இப்படிக் கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இதற்கு உடனடியாக பழிவாங்கப்படும் என்று அரசு தரப்பிலிருந்து சூளுரைக்கப்பட்டது.

மார்ச் 25-ம் தேதி. அனந்த் நாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிபால் கிராமத்திற்குள் இந்திய இராணுவம் நுழைந்து அங்கிருந்த குடிசை ஒன்றைச் சுற்றி வளைக்கிறது. அந்தக் குடிசையினுள் ‘பதுங்கியிருந்த’ ஐவரை சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவம், சத்திசிங்கபுராவில் சீக்கியர்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாத படையைச் சேர்ந்தவர்களோடு நடந்த மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர் என்று ஆரவாரமாக அறிவித்துக் கொண்டது.

சத்திசிங்கபுரா
சத்திசிங்கபுராவில் இந்திய இராணுவ சீருடையில் இருந்த கும்பல் அப்பாவிச் சிவிலியன்கள் மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலியாகிறார்கள்.

இந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த கூடுதல் தகவல் ஒன்று – சத்திசிங்கபுரா தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, அந்த தாக்குதல் ‘அடையாளம் தெரியாத’ கும்பலால் நடத்தப்பட்டதாகவே தெரிவித்திருந்தது. பின்னர் 2004-ல் “என் வாழ்க்கை” எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதும் கிளிண்டன், அதிலும் ‘அடையாளம் தெரியாத’ கும்பல் என்றே குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டில் கிளிண்டனின் நெருங்கிய சகாவான ஸ்ட்ரோப் டேல்பாட் எழுதிய நூலில் சத்திசிங்கபுராவில் நடந்த தாக்குதல் பாகிஸ்தானின் பின்புலத்தில் நடந்ததாக கிளிண்டன் நம்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

நிற்க.

பத்ரிபால் தாக்குதல் சம்பவம் நடந்த உடனேயே அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்லவென்றும், அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி சிவிலியன்கள் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், மார்ச் 21-லிருந்து 24-ம் தேதிக்குள் சுமார் 17 பேர்கள் வரை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் விட்டதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். பத்ரிபால் கொலைகளைக் கண்டித்து காஷ்மீர் முழுவதும் மெல்ல மெல்ல போராட்டங்கள் அதிகரித்தவாறே இருந்தன.

கிளிண்டனின் இந்திய வருகை மார்ச் மாத இறுதியில் நடந்து முடிகிறது. மக்கள் போராட்டங்கள் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் பத்ரிபால் கொலைகளைக் குறித்து விசாரிக்க உத்தரவிடுகிறார் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டு கொல்கொத்தா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள நவீன தடயவியல் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பபடுகின்றது. ஆய்வுகள் மற்றும் விசாரணைகளின் முடிவில்  2002 ஏப்ரலில் கொல்லப்பட்டவர்களும் காணாமல் போனவர்களும் இந்திய இராணுவம் கதை கட்டியதைப் போல் அந்நிய தீவிரவாதிகள் அல்லவென்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகள் தானென்பதும் நிரூபணமானது. அதைத் தொடர்ந்து பத்ரிபால் போலி மோதல் கொலைகளை விசாரிக்க 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, சத்திசிங்கபுராவில் நடந்த சீக்கியப் படுகொலைகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் அதன் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் வேலை என்பதை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க மறுத்து வந்தது. இந்நிலையில் கதையில் எதிர்பாராத திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. 2000-மாவது ஆண்டு ஆகஸ்டு மாதம் சத்திசிங்கபுரா படுகொலையில் ஈடுபட்ட லஷ்கர் – இ – தொய்பாவைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவிக்கிறது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான மொஹம்மத் சுஹேய்ல் மாலிக், அதே ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளிக்கிறார். இந்திய வரலாற்றிலேயே கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அமெரிக்க பத்திரிகையிடம் ‘பேட்டியளித்த’ அதிசயம் நடந்தது.

அந்தப் பேட்டியில், தான் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியைச் சேர்ந்தவனென்றும் லஷ்கர் அமைப்பு தன்னை நாசகார வேலைகள் செய்ய பயிற்சியளித்தது என்றும், தனது சகாக்களோடு இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாகவும், தனது சகாக்களோடு சேர்ந்து சத்திசிங்கபுராவில் சீக்கியர்களைத் தான் கொன்றதாகவும் அவர் ’ஒப்புதல் வாக்குமூலம்’ அளித்துள்ளார்.

சத்திசிங்கபுராவின் கதை இத்தோடு முடியவில்லை – இறுதி திருப்பம் பத்தாண்டுகள் கழித்து வந்தது. சத்திசிங்கபுரா படுகொலைகளை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி நடந்த படுகொலைகளுக்கும் மொஹம்மத் சுஹேய்ல் மாலிக் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட வாஸிம் அஹம்மது ஆகியோருக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

பத்ரிபால்
பத்ரிபாலில் இந்திய ராணுவம் நடத்திய போலி மோதல் கொலைகளுக்கு நீதி இல்லை.

இதற்கிடையே பத்ரிபால் படுகொலைகள் குறித்து நடந்து வந்த விசாரணைகளின் முடிவில் நடந்தது போலி மோதல் கொலைகள் தான் என்பதை உறுதி செய்த சி.பி.ஐ, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி சிவிலியன்கள் தான் என்பதையும் உறுதி செய்தது. ஏழாவது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த பிரிகேடியர் அஜய் சக்சேனா, லெப்டினெண்ட் கலோனல் ப்ரஹேந்த்ர ப்ரதாப் சிங், மேஜர் சௌரப் ஷர்மா, மேஜர் அமித் சக்சேனா, சுபேதார் இத்ரீஸ் கான் ஆகியோரே இந்தப் படுகொலைகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள் என்று சி.பி.ஐ அறிவித்தது.

நாடெங்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் ஜனநாயக சக்திகளையும் இந்த உண்மைகள் கொதித்தெழ வைத்தன. உச்சநீதிமன்ற அமர்வு முன்னர் நடந்த விசாரணைகளின் போதும் சி.பி.ஐ தனது விசாரணை முடிவுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைத்து வாதாடியது. பத்ரிபால் கிராமத்தில் நடந்தது பச்சை இரத்தப் படுகொலைகள் என்பதை நீதிமன்றத்தில் நிறுவியது. இந்த விசாரணைகள் இராணுவத்துக்கு வெளியே நடந்தால் அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை முன்னுணர்ந்த இராணுவம் ஜூன் 2012-ல், மேற்கொண்டு விசாரணைகளைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இராணுவ நீதிமன்றத்திலேயே விசாரித்துக் கொள்வதாக நீதிமன்றத்திடம் முன்வந்து அறிவித்தது.

இராணுவம் தனது குற்றத்தை தானே விசாரித்துக் கொள்ளும் அநீதியான முடிவை ஏற்ற உச்சநீதிமன்ற அமர்வில்ல் இருந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர், தற்போது பாலியல் புகாரில் சிக்கிக் கொண்ட ஸ்வாதந்திர குமார் என்பது இந்தக் கட்டுரைக்கு அவசியமில்லாத தகவல். அதைத் தொடர்ந்து இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு தற்போது ஒட்டு மொத்தமாக ஊத்தி மூடப்பட்டுள்ளது. போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடந்த 23-ம் தேதி தீர்ப்பெழுதியுள்ளனர் இராணுவ நீதிமன்ற நீதிபதிகள்.

”சி.பி.ஐயின் வாதங்களை மறுத்து இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு வழக்கை உச்ச நீதிமன்றம் மாற்றிய அந்த நாளிலேயே எங்கள் நம்பிக்கைகள் தகர்ந்து போனது. இருந்தாலும் சாட்சிகள் வரவில்லை என்கிற காரணத்தைச் சொல்லி வழக்கை இழுத்து மூடிவிடக் கூடாது என்பதற்காகவே இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்று வந்தோம். முதலிலேயே எங்களுக்கு இது முடிவு இன்னதென்று நிச்சயிக்கப்பட்ட ஆட்டம் என்பது தெரிந்திருந்தது” என்கிறார் அப்துல் ரஷீத் கான். இவரது தந்தையார் ஜூமா கானும் போலி மோதலில் கொல்லப்பட்டவர்.

நடந்த சம்பவங்களை நேர்மையோடு பரிசீலிப்பவர்கள் யாரும் இந்திய இராணுவத்தின் பச்சைப் படுகொலையை மறைக்கும் அநீதியையும், அயோக்கியத்தனத்தையும் உணர முடியும். இப்படி அப்பாவி மக்களை பறிகொடுக்கும் காஷ்மீர் சமூகத்தில் இருந்துதான் கோபத்துடனும், விரக்தியுடனும் ‘தீவிரவாதிகள்’ உருவாகின்றார்கள். இதற்கு பாகிஸ்தான் தூண்டுதலை விட இந்திய அரசின் அடக்குமுறையே பிராதன காரணம்.

இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள். கொழுந்து விட்டு எரியும் அந்த கோபத்திலிருந்து இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் என்றைக்கும் தப்பிக்க முடியாது.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. //இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது //

  உன்மை.

 2. அதற்கு முழு பொருப்பும், காரணகற்தாவும் காங்கிரசும், பன்டிட் நேரு குடும்பமும் தான். ஒருகாலும் இந்திய மக்களோ,பிர அரசியல் கட்சிகலோ நீதிப்படி பொருப்பாகாது.

 3. 1987ல் இலங்கை வந்த இந்திய அமைதிப்படை யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் செவிலியர் ஊழியர்கள் நோயாளிகள் என 150 க்கு மேற்பட; அப்பாவி ஆயுதமில்லாத பொது மக்களை தீபாவளி தினத்தில் சுட்டுக் கொன்றது. இது ஒரு தனி நிகழ்வு மட்டுமே. எனவே இந்திய இராணுவம் ஒன்றும் புனிதப் படை அல்ல. தமிழருக்கு சிங்களப் படையும் சீக்கியப் படையும் ஒன்றேதான்.

 4. தற்போதைக்கு இந்தியாவை பாதுகாப்பதற்கு எந்த இராணுவத்தை நம்பியிருக்கிறீர்கள்?

  நாட்டுவெடிகுண்டு கட்டுத்துவக்கு அம்பு ஈட்டி கோடாலி போன்ற வற்றையா?

  தமிழ்நாட்டு தமிழனையே ஒரு அணிக்குள் கொண்டுவர முடியாமல் திணறியடிக்கும் போது இந்தியமக்களையா (பாட்டாளிகள்) அணி திரட்டப்போகிறீர்கள்?

  இதுவரைக்கும் இந்தியயிராணுவத்தை எதிர்ப்பது நமது இந்தியதேசத்திற்கு செய்கிற துரோகம் ஆகாதா?

  உலகத்தில் உள்ள முதாலித்தவ இராணுவகளில் எந்த இராணுவ அமைப்பு ஒழுங்குமுறையாக இருக்கிறது? இப்படி பார்க்கும் போது இந்தியயிராணுவத்திற்கும் இலங்கையிராணுவத்திற்கும் எந்த குறையும் வந்துவிடவில்லை.

  இந்தியா-இலங்கையில் முதாலித்துவ அமைப்பு முறையையும் இராணுவத்தையும் இன்னும் நாம் அனுமதிகொண்டிருப்பதும் இதற்கு மாற்றீடாக ஒருஅரசையோ-இராணுவத்தையோ நாம் இன்னும் தேடித்தேடி கண்டு கொள்ளமுடியாது இருப்பது தான் குறை!.

  இந்த 21-ம் நுற்றாண்டில் யாராவது ஆயுதங்களால் அரசியல் அதிகாரத்தை பெறமுடியும் அடையமுடியும் என்பவனே முதல் முட்டாள்களாக இருக்க முடியும்.

  ஒவ்வொரு ஆயுதயிகத்திற்கு பின்னாலும் பல பின்ணணிகள் இருக்கின்றன. இந்த பின்ணணி இழையை தொடர்ந்து நடந்து தேடிப் பார்த்தீர்களாக இருந்தால் அது சென்றடையும் ஊர் எகாதிபத்தியம் என்ற “ஊர்”ராக இருக்கும்.

  இனி யாழ்பாணவைத்தியசாலைக்கு வருவோம்:

  என்ன நடந்தது?. டாக்டர்கள் தாதிமார் நோயாளிகள் சுட்டு கொல்லப்பட்டது இந்தியயிராணுவத்தின் அடாவடிதனத்தாலா?

  இந்திய இராணுவத்திற்கு ஆத்திரமூட்டியவர்கள் யார்? யாரும் சுட்டால் திருப்பி சுடக்கூடாது என்பது எந்த இராணுவத்தின் சட்டமாக ஆக்கப்பட்டிருக்கிறது?

  முதல் மருத்துவமனைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தவர்கள் புலிகளே! மருத்துவமனையில் இருந்து எதிரே இருந்த இராணுவ முகாமுக்கு முதல்வெடியை தீர்த்தவர்களும் புலிகளே!!. (தரவு: முறிந்த பனை)ஆகவே டாக்டர் தாதிகள் நோயாளிகள் இறப்புக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டியது இந்த மக்களின் வாழ்வில் நலன்களில் அக்கறையில்லாத அலட்சியம் கொண்ட இந்த குட்டி முதாலித்தவ இயக்கமே!

  விடுதலைக்காக சிந்திப்பவன் அதற்காக பாடுபவனின் உள்ளம் என்றும் வெறுமையாகவே இருக்கும். அதேபோல அவனது பத்து விரலில்களிலும் எந்த விதமான கூர்மையான வில்லுக்கத்யைக் கூட காணமுடியாது.

  முட்டாள்கள்தான் ஆயுதங்களை தேடுவார்கள். உழைப்பார்களின் வாழ்விலும் நலன்களின் நம்பிக்கை வைத்தவர்கள் வரலாற்றிலும் தத்துவத்திலும் மனத்தை புதைத்து எதிர்காலத்திற்கான அறுபடைக்கு காத்திருப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க