privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !

2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !

-

சென்னைத் துறைமுகத்தில் கடந்த எட்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். வாஹ்லி என்கிற நீர்மூழ்கிக் கப்பலை சுத்தம் செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை உள்ளே சென்ற தொழிலாளிகளில் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர், இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எஸ். வாஹ்லி
ஐ.என்.எஸ். வாஹ்லி

1974-ம் ஆண்டு கட்டப்பட்ட ஐ.என்.எஸ்.வாஹ்லி என்கிற இந்த நீர் மூழ்கி கப்பல் 36 ஆண்டுகளாக இந்தியக் கடற்படையில் இருந்தது. மேற்கொண்டு பயன்படுத்த முடியாத நிலையில் 2010-ம் ஆண்டு ஓரங்கட்டப்பட்டது. 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாதுகாப்பு அமைச்சகம் இக்கப்பலை தமிழக அரசிடம் ஒப்படைத்தது. உடனடியாக கப்பல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இக்கப்பலை மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் கடல்சார் பூங்காவில் காட்சிக்கு வைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக பத்து கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருந்தது.

கப்பலை தயார் செய்து மாமல்லபுரம் கொண்டு செல்வதற்கான பொறுப்பை தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் தமிழக அரசு ஒப்படைத்திருந்தது. கப்பலில் செய்ய வேண்டியிருந்த பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், டிரேடெக்ஸ் ஷிப்பிங் என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. பராமரிப்பு பணிகளில் ஒரு சிலவற்றை டிரேடெக்ஸ் ஷிப்பிங் நிறுவனம், அக்சயா மரைன் என்ஜினீயரிங் என்கிற சிறு நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. அக்சயா மரைன் நிறுவனத்தின் ஊழியர்கள் திங்கட்கிழமை வேலையை துவங்கும் போது தான் விஷவாயு விபத்து நடந்துள்ளது.

காயலான் கடைக்கு தள்ளப்படும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் இத்தனை கை மாறியது ஒருபுறமிருக்க, இதனது பிரச்சினைகள் எதுவும் கடைசி கைக்கு தெரியாது என்பதே முக்கியம்.

விபத்து எப்படி நடந்தது என்பதை அக்சயா மரைன் எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர் லெனின் குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

“கம்பெனியின் உரிமையாளர் பவானிசங்கர் உள்ளிட்ட 6 பேர் வெல்டிங் பணியை மேற்கொள்வதற்காக கப்பலுக்குச் சென்றோம். கப்பலின் ஒரு மூடியை முதலில் மகேந்திரன் திறந்தார். பின்னர் கீழே எத்தனை படிகள் உள்ளன என்று தெரிந்துகொள்வதற்காக செல்போன் மூலம் வெளிச்சம் அடித்து பார்த்தார். அப்போது மயக்கம் வந்த நிலையில் மேலே நின்ற எனது கையைப் பிடித்தார். சிறிது நேரத்தில் முழுமையாக மயங்கி உள்ளே விழுந்து விட்டார். அப்போது எனக்கும் லேசான மயக்கம் வந்ததால் கூச்சலிட்டேன். உடனே அங்கு வந்த ஜெயக்குமாரும், பவானி சங்கரும் மகேந்திரனைக் காப்பாற்ற உள்ளே இறங்கினர். ஆனால் அவர்களும் மயங்கி கப்பலின் உள்ளே விழுந்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம்” என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு வந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புக் கருவிகளுடன் உள்ளே நுழைந்து பார்த்தபோது நான்கு பேரும் தரையில் சரிந்து கிடந்திருக்கின்றனர். நான்கு பேரில் இரண்டு பேர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தனர், ஆபத்தான நிலையில் இருந்த மற்ற இரண்டு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொழிலில் அனுபவம் பெற்ற சந்திரகுமார் என்பவர் இந்த கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார். “கப்பலுக்குள் வெல்டிங் செய்ய வேண்டுமென்றால் துறைமுகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையினரிடம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும். பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொள்கலன்கள் இருந்தால் அவற்றில் உள்ள ஆயில்கள், வாயுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தததற்கான சான்றிதழை கப்பல் நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். கண்காணிக்க வேண்டிய பொறுப்பு துறைமுக அதிகாரிகள், கப்பல் உரிமையாளர், ஒப்பந்ததாரர் என அனைவருக்கும் உண்டு. விபத்து ஏற்பட்டபோது இவ்வாறான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால் சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, “கப்பலை இங்கே நிறுத்தி வைக்க மட்டும் தான் துறைமுகம் அனுமதித்திருந்தது. விபத்துக்கும் துறைமுக நிர்வாகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று நடந்துள்ள இரு கொலைகளைப் பற்றி அலட்சியமாக பதிலளித்துள்ளார். அதே போல கப்பலை மாமல்லபுரத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு கடல்சார் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் தலைவர் கேப்டன் சாய்நாத்திடம் துறைமுகத் தலைவர் கூறியதைப் பற்றி கேட்ட போது, “அந்தத் தகவல் தவறானது” என்று மட்டும் சுருக்கமாக கூறியுள்ளார். கருத்து தவறு இருக்கட்டும், யார் தவறானவர்கள் என்பதை யாரும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். இறந்தது இரண்டு தொழிலாளிகள்தானே?

இங்கு நடந்திருப்பது ஒரு கொலை, இந்தக் கொலைக்கு காரணம் இந்த அரசு தான். அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன. இதற்கு முன்பும் இதே காரணங்களால் பல தொழிலாளிகள் இறந்திருக்கின்றனர். அதிகாரிகளோ துறை வாரியாக எனக்கு பொறுப்பில்லை உனக்கு பொறுப்பில்லை என்று நழுவிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இந்த குப்பையை பெரிய பொக்கிஷத்தை போல வாங்கிக்கொண்ட ஜெயலலிதாவோ இதுவரை இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இது போன்ற பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கூட சரியாக கண்காணித்து அமுல்படுத்தத் தெரியாத அரசுக்கு நீர்மூழ்கி கப்பல்களும், ராக்கெட்டுகளும் ஒரு கேடா? இந்த அரசு பெருமை பீற்றிக்கொள்வதைத் தவிர இந்த நீர்மூழ்கி கப்பல்களால் யாருக்கு என்ன பயன்.

இந்த 36 ஆண்டுகளில் இரண்டு தொழிலாளிகளின் உயிரை வாங்கியதை தவிர இந்த நீர்மூழ்கி கப்பல் வேறு எந்த வேலையையாவது செய்திருக்குமா? ஒரு நீர்மூழ்கி கப்பலைக் கூட சரியாக பயன்படுத்தி அதன் பயன்பாட்டை முறையாக நிறுத்தத்தெரியாத இந்த அரசு தான் அணு உலைகளை பாதுகாப்பாக பராமரிப்போம் என்று நம்மை நம்பச் சொல்கிறது, நீங்கள் நம்புகிறீர்களா ?