privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்

மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்

-

காங்கிரஸ் ரூ 500 கோடி, பாஜக ரூ 400 கோடி, மாநிலக் கட்சிகள் ரூ 1,000 கோடி மொத்தம் ரூ 2,000 கோடி. இதற்கு டாப் அப் ஆக மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை ரூ 180 கோடி.

காங்கிரஸ் விளம்பரம்
கிரிமினல் பாஜக இப்போதைய கிரிமினல் காங்கிரசு கட்சியின் மோசடியை கண்டிக்க முடியாது

இதெல்லாம் என்ன? கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதையோ விற்கும் விலையா என்று கேட்காதீர்கள். இவை அந்தந்த கட்சிகள் மே மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முந்தைய விளம்பரங்களுக்கு செலவிட இருக்கும் தொகைகள். அதாவது, தேர்தல் திருவிழா தொடங்கப் போகிறதாம்.

இவற்றில் அரசு செலவழிக்கும் ரூ 180 கோடியிலான விளம்பரங்களை பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து விட வேண்டுமாம், ஏனென்றால் அதற்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கான காலம் ஆரம்பித்து விடுமாம். நன்னடத்தை விதிகளின்படி அரசு பணத்தை ஆளும் கட்சியின் விளம்பரத்துக்கு செலவழிக்கக் கூடாதாம். எனவே, நன்னடத்தை விதிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை துர்நடத்தைகள் அனைத்தையும் செய்து முடித்து விட வேண்டும்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியில் இருக்கும் போது 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஒளியில் கண் கூசி மக்கள் பார்க்காமல் இருந்து விட்டால் என்ன ஆவது என்று டார்ச் அடித்துக் காட்ட அரசு பணத்தை ரூ 150 கோடி செலவிட்டு விளம்பரங்கள் செய்திருக்கிறது. எனவே அப்பேற்பட்ட கிரிமினல் பாஜக இப்போதைய கிரிமினல் காங்கிரசு கட்சியின் மோசடியை கண்டிக்க முடியாதுதான்.

காங்கிரசின் சார்பில் இந்தத் தொகையை செலவழித்துக் கொண்டிருப்பது மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம். அமைச்சர் மனீஷ் திவாரி, “இந்தத் தொகை பாஜக 2004-ல் செலவழித்ததை விட ரூ 30 கோடிதான் அதிகம். பண வீக்கத்தை கணக்கில் எடுத்தால் அதிகரிக்கவே இல்லை” என்று சொல்லி விடலாம் என்று சோடி போட்டு காட்டுகிறார். “நானும் திருடன், நீயும் திருடன், நான் எடுப்பதை நீ கண்டுக்காதே, நான் அடிக்கிறதை நீ கண்டுக்காதே” என்ற விளையாட்டுதான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆள விரும்பும் கட்சி என்று பல தரப்புக்குள்ளும் நடக்கும் நாடகம்.

இப்போது “பாரத் நிர்மாண்” ஆகி வருவதை கண்ணிருந்தும் பார்க்காமல் முரண்டு பிடிக்கும் மக்களின் கழுத்தைப் பிடித்து, நிர்மாணுக்கான பிரமாணங்களை கண்ணுக்கு முன் திணிப்பதற்கு இந்த ரூ 180 கோடியை செலவிடவிருக்கிறது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி.

இந்த செலவுகளுக்கான திட்டமிடல் 2013 மே மாதம் முதல் தொடங்கி விட்டது. அதாவது, 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் விளம்பரச் செலவாக ரூ 630 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பாதியை (சுமார் ரூ 310 கோடி) மார்ச் 2014-க்கு முன்பு செலவழித்து விட வேண்டும் என்று ஆளும் கும்பல் திட்டமிட்டிருக்கிறது.

பாரத் நிர்மாண் விளம்பரம்
கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் பேக்கு இளைஞனை இவர்கள் எல்லோரும் சேர்ந்து, இந்தியா ஜெயித்துதான் கொண்டிருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறார்கள்.

பாரத் நிர்மாண் விளம்பரங்கள் மே 2013-ல் முதல் கட்டத்தையும், ஆகஸ்ட் 2013-ல் இரண்டாவது கட்டத்தையும் நிறைவு செய்தன. ஆகஸ்ட் வரை 22 விளம்பரங்கள் இந்தி, வங்காளம், மராட்டியம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம், வெளிப்புற தட்டிகள் என்று அவிழ்த்து விடப்பட்ட இந்த விளம்பரங்களிலிருந்து யாரும் தப்பித்திருக்க முடியாது.

மைல் கற்கள் என்ற விளம்பரத்தில், இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள், கணினியை அறிமுகம் செய்த காங்கிரஸ், பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்த காங்கிரஸ், பக்ரா நங்கல் அணை கட்டிய காங்கிரஸ், வங்கிகளை தேசியமயமாக்கிய காங்கிரஸ் என்று கருத்து கந்தசாமிகளாக கருத்து சொல்வதாக ஒரு விளம்பரம். கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் பேக்கு இளைஞனை இவர்கள் எல்லோரும் சேர்ந்து, இந்தியா ஜெயித்துதான் கொண்டிருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறார்கள்.

கணினியை அறிமுகம் செய்து 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சமூகத்தை கதறக் கதற 21-ம் நூற்றாண்டுக்குள் திணித்த ராஜீவின் காங்கிரஸ், பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்துக்கு ஈமச் சடங்குகளை ஆரம்பித்து வைத்த இந்திராவின் காங்கிரஸ், பக்ரா நங்கல் அணை கட்டியது முதல் பழங்குடி மக்களை புழு பூச்சிகளை போல அழித்துக் கொண்டிருக்கும் நேருவின் காங்கிரஸ், வங்கிகள் மூலம் இந்திய முதலாளிகளுக்கு மக்கள் பணத்தை படி அளந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் என்று விளக்கவுரைகளை நாமே சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த 22 விளம்பரங்களை தயாரிப்பதற்கு பரிநீதா என்ற இந்தி திரைப்பட இயக்குனர் பிரதீப் சர்க்காரும் பாடல்கள் எழுதுவதற்கு ஜாவேத் அக்தரும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். மீலோன் ஹம் ஆ கயே, மிலோன் ஹமே ஜானா ஹை (நிறைய சாதிச்சிட்டோம், ஆனா இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு) என்ற விளம்பர வாசகத்தை ஜாவேத் அக்தர் உருவாக்கியிருக்கிறார். இந்த வாசகத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமெரிக்க எஜமானைப் பார்த்துக் கூறுவது போலவும் எடுத்துக் கொள்ளலாம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி – “நான் இல்லை நாம்” யாரைப் பார்த்து சொல்கிறார்? அமெரிக்க எஜமானைப் பார்த்து.

2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டீசல் விலை உயர்வுக்கான காரணங்களையும், சில்லறை வணிகம், விமானப் போக்குவரத்து, தகவல் ஒளிபரப்பு ஆகிய துறைகளில்  அன்னிய முதலீடு ஏன் தேவை என்றும் ரூ 100 கோடி செலவில் விளம்பரம் கொடுத்திருந்ததையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டும்.

தேர்தலுக்கு முந்தைய இப்போதைய கட்டத்தில் முதல் 15 நாட்களில் ரூ 35 கோடி செலவழிப்பார்களாம். அந்த விளம்பரங்களுக்கு பொதுமக்களிடம் எத்தகைய எதிர்வினை ஏற்படுகிறது என்பதை மதிப்பிட்டு, வேண்டிய திருத்தங்கள் செய்து பிப்ரவரிக்கு முன் மொத்தம் ரூ 180 கோடியையும் செலவு செய்து விடுவார்களாம்.

இந்த விளம்பரங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வழங்கிய அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் 2007-க்கும் 2012-க்கும் இடையே ஆண்டுக்கு 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை சாதித்தது இவற்றை சுட்டிக் காட்டுவார்களாம்.

“ஒன்பது ஆண்டுகளில் ஒரு மௌனமான புரட்சி நடந்திருக்கிறது. அதில் நாங்கள் பலவற்றை சாதித்திருக்கிறோம். ஆனால், அரசியல் ஏற்றத் தாழ்வுகளால், அரசியல் விவாதங்களின் கூர்மைக்கு மத்தியில் அது போன்ற சாதனைகள் கூட்டு மனசாட்சியிலிருந்து போய் விட்டிருக்கின்றன. எனவே மாற்று விவரிப்பு ஒன்றை ஏற்படுத்துவது தேவையாக இருக்கிறது” என்று திவாரி கூறியிருக்கிறார். அதாவது, தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப்  போகிறதாம்.

இது வரை பார்த்தது அரசு செலவழிக்கப் போகும் பணக் கணக்கு. கட்சிகள் தாங்கள் ‘கஷ்டப்பட்டு’ சம்பாதித்த பணத்தை செலவழிப்பது பிப்ரவரிக்குப் பிறகு சூடு பிடித்து மே மாதம் வரை தொடரும். அதாவது சுமார் 3 மாத காலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகள் ரூ 2,000 கோடி மதிப்பிலான விளம்பரங்களை கடை விரிக்கப் போகின்றன.

பாரத் நிர்மாண்
பாரத் நிர்மாண் – சிவராஜ் சித்த வைத்தியர் விளம்பரங்கள்.

சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் ஏமாந்தவன் காசை செலவழித்து தொலைக்காட்சியில் இளைஞர்களை அதட்டி தொழில் செய்வதைப் போல, நாடு முழுவதும் கட்சிக் கிளைகள், கோடிக்கணக்கான கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கு சேவை என்று பம்மாத்து காட்டும் இந்தக் கட்சிகள் தம்மைப் பற்றி தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தி கல்லா கட்டப் போகின்றன.

சிவராஜ் வைத்தியரின் செலவு உள்ளிட்டு 3 மாத காலத்தில் இந்தியாவின் விளம்பர சந்தையில் புரளும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ 65,000 கோடி. இந்தச் சந்தையில் சுமார் 3.5%-ஐ பிடித்து அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்கள், விளம்பரம் வினியோகிக்கும் நிறுவனங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், பத்திரிகைகள் இவற்றின் மீது தம் செல்வாக்கை செலுத்தவிருக்கின்றன.

இப்படித்தான் அரசும், ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் தூண்களாக நின்று இந்திய ஜனநாயகத்தை பரஸ்பரம் ஆதாயம் கொடுக்கும் கறவைப் பசுவாக பராமரிக்கின்றன.

இந்த செழிப்பான பிசினசை பிடிப்பதற்கு முன்னணி விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. தம்மிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கோரும் விற்பனை வாதங்களை பெரிய விளம்பர நிறுவனங்கள் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளிடமுமே வைத்திருக்கின்றன.

பாடலாசிரியரும் விளம்பரத் துறை நிபுணருமான பிரசூன் ஜோஷியின் மென்கேன் வேர்ல்ட் குழுமம் ரூ 400 கோடி மதிப்பிலான பாஜக கணக்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்டிராக்ட் அட்வர்டைசிங் என்ற நிறுவனமும் பாஜகவை பிடிக்கும் போட்டியில் உள்ளது. விளம்பரங்களை  போடுவதற்கான பணியை தனியாக பிரித்து லோட்ஸ்டார் மற்றும் டபிள்யூபிபி-ன் குரூப் எம், சாம் பல்சாராவின் மேடிசன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படவுள்ளன.

காங்கிரஸ் தனது ரூ 500 கோடி ஒப்பந்தத்தை டென்ட்சு & டேப்ரூட்டு என்ற நிறுவனத்துக்கும், செய்தித் தொடர்பு பணிகளை ஜெனிசிஸ் பர்சன்-மார்ஸ்டெல்லருக்கும், வெளிப்புற விளம்பரங்களின் பொறுப்பை ஜேடபிள்யூடி-க்கும் கொடுத்துள்ளது.

அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் ரூ 100 கோடி விளம்பரத் திட்டத்தை பெர்செப்ட்/எச் என்ற நிறுவனம் கையாளவிருக்கிறது.

இந்தியத் தேர்தல்களில் கார்ப்பரேட் நன்கொடைகள்/ஊழல்கள் மூலம் திரட்டிய பணத்தை பயன்படுத்தி,  கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக விளம்பரம் செய்து, கார்ப்பரேட் நலன்களுக்கான அரசாங்கத்தை பிடிக்க கட்சிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் ஆரம்பத்தில் நாம் பார்த்தது கட்சிகளை வாங்குவதற்கு முதலாளிகள் செலவழித்த தொகைகள்தான் என்று தெளிவாகிறது.

இந்தத் தேர்தல்கள் இந்திய மக்களை அவமானப்படுத்தும் சடங்குகளாகப் படவில்லையா உங்களுக்கு?

மேலும் படிக்க

  1. மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளம்பரம் செய்து தான் மக்கள் அறிந்து கொள்ளும் நிலை. என்ன கொடும சார்…

  2. அவனும் திருடன் இவனும் திருடன்.ஆக எல்லாருமே திருடன். இந்தத்திருடனுக்குள் ஒரு திருடனை தேர்ந்தெடுக்கத்தான் இத்தனை விளம்பரங்கள். இதில் ஜனநாயகத் தேர்தல் என்று பீத்தல்

  3. //இந்தத் தேர்தல்கள் இந்திய மக்களை அவமானப்படுத்தும் சடங்குகளாகப் படவில்லையா உங்களுக்கு?//

    இந்த மக்களுக்கு ஏற்ற சடங்குகள்.

  4. அரசியல் கட்சிகளே கார்பரேட்டுகளாக மாறிவிட்டதைத்தான் விளம்பர செலவுகள் உணர்த்துகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது கார்பரேட்டுகளுக்கான ஆட்சியாகத்தான் இருக்குமேயொழிய சாமான்யர்களுக்கான ஆட்சியாக இருக்க முடியாது.

  5. தமிழக காங்கிரசுக்கு ஒரு பாட்டில் சிட்டுக் குருவி லேகியம் தரவும்

  6. மக்களின் உரிமை பரிபோய்கொண்டுஇருக்கிறது,
    மக்களின் இரத்தத்தை குடிக்கும் காங்கிரஸ்
    கொலைகாரகும்பல் ப.ஜ.க
    நாட்டை அடிமையாக்குகிறார்கள்,
    நமது சுயமரியதையும் தன்மானத்தையும் அமெரிக்காவிடம்
    அடகுவைக்கும் முதலாளித்துவ அடியாட்கள் ,
    தேர்தல் மக்களை ஏமாற்றும் கண்கட்டிவித்தையை நடத்துகிறார்கள்.
    இது ஒரு எச்சரிக்கை, உழைக்கும் மக்கள் ஒருமுறைதான் ஏமாறுவர்கள்…
    தூங்கிகொண்டிருக்கும் மக்களை நமது தோழர்கள் தட்டி எழுப்புகிறார்கள்…

  7. பறிபோன‬ உரிமைகளை,
    பிச்சையாகப் பெற முடியாது.
    தீர்மானங்கள் மூலமோ,
    மன்றாடுவதன் மூலமோ,
    நியாயங்கள் பிறக்காது
    Dr.பாபாசாகேப் அம்பேத்கர்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க