Thursday, November 26, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

-

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்த ராமச்சந்திர மூர்த்தி பிள்ளை வரம் தருகிறாராம். வசூலாகாத கடனெல்லாம் வசூலாகிறதாம், தீராத நோய்கள் தீர்கிறதாம். இவ்வாறாக வெளிவந்த பத்திரிகை செய்தியைக் கண்டதும் பத்தோடு ஒன்று என்று கடந்து செல்ல முடியவில்லை. நேரில் சென்று ’அற்புதங்களைப்’ பார்த்து விடுவது என்று தீமானித்தோம்.

எம்.ஜி.ஆர் கோயில்
பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திக்கு பக்தர்கள் கட்டிய கோயில்.

திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் இடது புறமாக 5 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் நத்தமேடு. படு குக்கிராமமான இந்த ஊருக்கு ஒழுங்கான சாலை வசதி கூட கிடையாது. பகுதி அளவிற்கு விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள். நாங்கள் சென்ற போது கோவிலில் மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்து கொண்டிருந்தது.

“ஓம் ஆயிரத்தில் ஒருவனே போற்றி! ஓம் இதய தெய்வமே போற்றி ! ஓம் இரட்டை இலை தந்தவா போற்றி, இதயக்கனியே நமக” – பூணூல் அணிந்த பார்ப்பனர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்கள் தான் இவை. குழம்பி விட்டீர்களா?

இது அயோத்தி ராமச்சந்திர மூர்த்தியின் கோயிலல்ல; நமது அண்ணாயிஸ்டு மற்றும் பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்தியின் கோயில். கோயிலுக்கும் அதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனுக்கும் ஓனரான கலைவாணனிடம் பேசினோம்,

“இந்த  கோவிலை எங்கள் சொந்த பணத்தில் கட்டி பராமரித்து வருகிறோம். நான் ஆரம்பத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் எல்லாம் கிடையாது. மற்ற ஹீரோ படங்களை விட இறைவன் படங்களை அதிகமா பார்ப்பேன். இறைவன் சி.எம் ஆக இருக்கும்போது கூட எனக்கு அவ்வளவா பிடிக்காது. ஆனா அவர் செத்த பின்னாடி தான் அவரைப் பற்றி பல விசயங்கள் கேள்விப்பட்டேன். அவர் ஏழைகளுக்கு நிறைய செய்திருக்கிறாராம். அதே மாதிரி சிகரெட் தண்ணி அடிக்க மாட்டாராம். இறைவன் நடிச்ச படங்கள்ல கூட அப்படி தவறாக நடிக்காமல் இருப்பதை ஒரு கொள்கையாக வச்சிருந்தாராம். மத்ததை விடுங்க சார், இந்த ஒரு  காரணத்துக்காகவே இறைவனுக்கு கோவில் கட்டலாம் தானே. நான் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் வாங்கி மக்களுக்கு கொடுத்துக்கிட்டு தான்  இருந்தேன். என் மனைவி தான் இப்படி செலவு செய்யிறதுக்கு பேசாம ஒரு கோயில் கட்டலாம் என்று ஐடியா குடுத்தாங்க”.

கலைவாணனின் ’வெற்றிக் கதைக்குப்’ பின்னே அவரது மனைவி இருந்திருக்கிறார். தனது நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவியிருக்கிறார். சேர்த்த சொற்ப காசில் இறைவன் வாழ்ந்த புனித தலமான சென்னை நகரத்துக்குள் இடம் கிடைக்கவில்லை அதற்காக அவரது அவதார ஸ்தலமான இலங்கையின் கண்டிக்கா போக முடியும்? எனவே சென்னைக்கு வெளியே இடம் பிடித்து கோயிலைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இதன்றி கலைவாணனின் பூர்வாஸ்ரமம் குறித்து விசாரித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கோவிலை வைத்து பிசினெசை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற இலட்சிய தாகத்தை பார்க்கும் போது ஏதோ கிரைம் ரிகார்டு இறந்த காலத்தில் இருந்தாலும் இருக்கலாம்.

பூமி பூஜை அழைப்பிதழ்”மூணு வருசத்துக்கு முன்னே இதை கட்ட ஆரம்பிச்சோம். எட்டு மாசத்தில் திருப்பணி முடிஞ்சது. ஆகஸ்டு 15 சுதந்திர தினம் அன்று விடுமுறை என்பதால் அன்றைக்கு கும்பாபிசேகம் நடத்தினோம். இதயக்கனி, உரிமைக்குரல் பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருந்தோம். பத்திரிகைகளில் செய்தியும் வந்தது. அதைக் கேள்விப்பட்டு நிறைய பக்தர்கள் வந்தார்கள்.

கும்பாபிசேகத்துக்கு அப்புறம் ஒரு மண்டலம் விரதம் இருந்து மண்டலபிசேக விழா சரியாக அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடந்த்து. அன்று இறைவனை மாட்டு வண்டியில் எழுந்தருளச்செய்து முதல் தடவையா கிராமத்தில் ஊர்வலமா கொண்டு போனோம்.

சாமி ஊர்வலம்னாக்க மக்கள் தேங்காய் பழம் உடைச்சி மாலை போட்டு வணங்குவாங்க. நம்ம இறைவன் நடிகராச்சே கேவலமா பேசிட்டா என்னா பன்றதுன்னு யோசிச்சோம். சரி, நாமளே ஆள் செட் பண்ணி தேங்காய் பழம் வாங்கி மூணு வீட்டுக்கு ஒரு தபா நாமே தேங்காய் உடைச்சிடலாம்னு முடிவு பண்ணி ஒரு சாக்கு நிறைய தேங்காயோடு போனோம்”

ஆனால், மக்கள் இவர்களை ஏமாற்றவில்லை. இறைவனின் திருவீதி உலாவைக் கேள்விப்பட்டு அவர்களே தேங்காய்ப் பழங்களோடு தயாராக நின்றார்களாம். கலைவாணனிடம் அற்புதங்கள் பற்றிக் கேட்டோம்.

“எனக்கு அதெல்லாம் சரியா தெரியாதுங்க. ஆனா இங்க வர்றவங்க ஏதோ நடக்குதுன்னு சொல்லிக்கறாங்க” என்று பட்டும் படாமல் பேசிக் கொண்டிருந்த போது அவரது மனைவி அவசரமாக குறுக்கிட்டார்.

கும்பாபிஷேகம்
கோயிலை ஆகம விதிப்படி அமைக்கவும், இறைவனின் திருவுருவச் சிலையின் மேல் யாகங்கள் நடத்தி ’சக்தியை ஏற்றவும்’ செய்தது பார்ப்பன புரோகிதர்கள் தான்.

“சார், நான் சொல்றேன் சார். எங்களுக்கே பாருங்க, ஒருத்தன் 17 லச்சம் கடன் வாங்கிட்டு இப்போ அப்போன்னு இழுத்துட்டு இருந்தான். கோயில் கட்டினதுக்கு அப்புறம் வட்டி 4 லச்சத்தையும் சேர்த்து 21 லச்சமா கொடுத்துட்டான். போன வருசம் ஒருத்தரு குழந்தையில்லேன்னு வந்தாருங்க, இப்ப குழந்தை பிறந்துட்டுதுன்னு கேள்விப் பட்டோம்”

கலைவாணன் இதுவரை அடைந்த வெற்றிகளுக்கு மட்டுமல்ல, இதற்கு மேலும் பல உயரங்களை அடையும் வரை அவரது மனைவி ஓயப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் நெடுஞ்சாலை மைல்கல்லில் புடவை சார்த்தியிருந்தால் கூட கண்டதும் குப்புற விழுந்து வணங்கத் தயாராக இருக்கும் ‘இந்துக்களின்’ ஆன்மீக வறட்சியின் ஆழத்தைத் தான் நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இந்தக் கதைகள் மேலும் ஒரு சுற்று சுற்றி வரும் போது எம்.ஜி.ஆர் சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப்பொறி ஒன்றிற்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அவதாரம் என்ற ’நம்பிக்கை’ தோன்றியிருக்கக் கூடும். பல லட்சம் வருடங்கள் முன்னால் ராமனால் குமித்து வைக்கப்பட்டதாக டுபாக்கூர் விடப்பட்ட மணல் திட்டுக்களைக் கைவைப்பதற்கே ’இந்துக்களின் மத உணர்வுகளுக்கு’ அஞ்சி மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அவதாரக் கதைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பு இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

கோயிலில் ஒரு பார்ப்பனரை அர்ச்சகராக அமர்த்தியிருக்கிறார்கள். அவர் மொத்தம் 12 கோயில்களில் பூசை செய்து கொண்டிருக்கிறாராம். அந்தப் பன்னிரண்டில் இதுவும் ஒன்று. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வேத மந்திரங்களை சுதி பிசகாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தது அவர் தான்.

மேலும் கோயிலை ஆகம விதிப்படி அமைக்கவும், இறைவனின் திருவுருவச் சிலையின் மேல் யாகங்கள் நடத்தி ’சக்தியை ஏற்றவும்’ செய்தது பார்ப்பன புரோகிதர்கள் தான். ஏற்கனவே இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாலும், அதில் பலரது பெயர்கள் இந்து மத அறிஞர்களுக்கே மறந்து போயிருப்பதாலும், அந்தப் பட்டியலில் புதிதாய் ஒரு பெயரைச் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

“இதயக்கனியே நமக” என்று எழுதி தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு ஒப்புறவை ஏற்படுத்தவும், “ஆயிரத்தில் ஒருவனே போற்றி” என்று அக்மார்க் தமிழை கருவறைக்குள் புகுத்தவும் பார்ப்பன புரோகிதர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. காசு கொடுத்தால் வரிசையை மீறி சிறப்பு தரிசனமாக சாமியின் அப்பாயின்மெண்டையே சீக்கிரத்தில் வாங்கித்தரும் வல்லமையைக் கொண்டிருக்கும் அவாள்களுக்கு இதெல்லாம் சாதாரண சமாச்சாரங்கள் என்பது கலைவாணன் சொல்லாமலே நமக்கு விளங்கியது.

கும்பாபிஷேக அழைப்பிதழ்வருடாந்திரம் இறைவனுக்கு விரதமிருந்து மாலை போடுவதோடு ஜனவரி 12-ம் தேதியன்று விரதமிருந்து பாதையாத்திரையும் மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். ஜனவரி 12-ம் தேதியின் சிறப்பு என்ன? அந்த தேதியில் தான் எம்.ஆர்.ராதா இறைவனை துப்பாக்கியால் சுட்டாராம். எனவே தங்கள் இறைவனின் இரண்டாவது பிறப்பை மறு அவதாரமாக கருதி அந்த நாளையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா செய்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் விட்டாரே என்று இப்போது தோன்றுகிறது.

” சார், இப்பயும் இறைவனோட பக்தர்கள் நெறிய பேரு இருக்காங்க சார்.  இறைவனோட படம் செகண்டு ரிலீசா போட்டாங்கன்னா அலகு குத்தினு போறது, கட்டவுட்டு வக்கிறதுன்னு துட்டை வேஷ்ட் பன்றாங்க சார். அதுக்கு பதிலா கோயிலுக்கு கொண்டாந்து குடுத்தாங்கன்னா கோயிலாச்சும் வளரும் சார். இதையும் மறக்காம எழுதிக்கங்க சார்” கலைவாணனின் மனைவி அக்கறையோடு சொன்னார்.

ஆனால், அவர் அங்கலாய்த்துக் கொள்வது போல் நாட்டில் ஆன்மீகத்தின் நிலைமை அத்தனை மோசமாக இல்லை. கோயிலைக் கட்ட செலவான எட்டு லட்ச ரூபாயில் இரண்டு லட்சத்தை இறைவனின் பக்தர்கள் தங்கள் கைக்காசில் இருந்து கொடுத்துள்ளனர். அதோடு பயபக்தியோடு அவ்வப்போது பாதயாத்திரை செல்வதாகட்டும், விரதமிருந்து மாலை போட்டுக் கொள்வதாகட்டும், இறைவனின் பக்தர்கள் பக்தியில் குறை வைப்பதில்லை. மாலை போட்ட சமயத்தில் அடக்கமான சாமியாக இருப்பதும் மாலையை அவிழ்த்துப் போட்ட பின் அடங்காமல் ஆடுவதும் இந்துத்துவ ஆன்மீகத்தின் இரண்டு உச்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு நமக்குத்தான் ஞானமில்லை.

மற்றபடி இந்தக் கோயிலை அ.தி.மு.க அரசு ஏன் இன்னமும் கண்டு கொள்ளாமல்  இருக்கிறது என்று இவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். நமக்கு அதில் ஆச்சர்யமில்லை. புரட்சித் தலைவியின் வடிவில் அ.தி.மு.கவினர் ஏற்கனவே ஒரு வாழும் தெய்வத்தைக் கட்டிக் கொண்டு மாரடிக்கும் நிலையில் இன்னுமொரு தெய்வத்தையும் குனிந்து வணங்க வேண்டுமென்றால் அவர்களின் முதுகெலும்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் ஒழிய சாத்தியமில்லை.

அந்த வகையில் கலைவாணன் ஒரு தவறு செய்து விட்டார். எம்ஜிஆரை விடுத்து ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டியிருந்தால அவரே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கல்லா செழித்திருக்கும். அதிமுக கட்டவுட்டகளில் பிள்ளையார் சுழி போல தம்மாத்துண்டு எம்ஜிஆர் படமும், யானை பிளிறல் போல பிரம்மாண்டமான ஜெயாவும் இடம் பிடித்திருப்பதை பார்த்துக் கூட யார் அதிக சக்தி வாய்ந்த ‘தெய்வம்’ என்று அவருக்கு தெரியவில்லை.

கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம். நடிகர்கள், தலைவர்களை அவர்களது இரசிகர்கள் ஆண்டவனாக போற்றி துதிக்கும் பிளக்ஸ் பேனர்களை பார்த்து இரத்தம் கொதிக்கும் இந்துமத வெறியர்கள், உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால் இந்த எம்ஜிஆர் கோவிலை எதிர்க்க முடியுமா?

21-ம் நூற்றாண்டில் மதம், கடவுள் நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாம் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த எம்ஜிஆர் கோவிலே சாட்சி.

வினவு செய்தியாளர்கள்.

 1. நல்ல வேளை…ஆசாமி “இறைவனுக்கு” கோவில்
  கட்டியதோடு நிறுத்திக் கொண்டார்…
  “இறைவனின்” வைப்பாட்டிகளுக்கும் கோவில் கட்ட ஆரம்பித்தால்?…..
  இந்தியாவில் மட்டுமல்ல ஆசியா கண்டம் முழுவதும் இடம் வேண்டும்…
  இவனையெல்லாம் சுண்ணாம்பு காளவாயில் போட்டால் அடுத்த
  தலைமுறை,தலையெடுக்க வாய்ப்புண்டு

  • ஒரு பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர் அன்னியன் பட பாடல் ஒன்றில் வரும் “ரெண்டக்க ரெண்டெக்க” வரிகளுக்குப் பொருள்”அது ஒன்றுமில்லை. இந்துக் கடவுள் எல்லோருக்கும் இரண்டு மனைவிகள்.அந்த மனைவிகளைக் கவிஞர் மனதில் கொண்டு பாடலில் “ரெண்டக்கா ரெண்டக்கா” என்று கூறியுள்ளார்.இந்து மத விதிப்படி கடவுள்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் யோக்கியமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.இந்திரன் விஸ்வாமித்திரர் மனைவியை வஞ்சகமாக புணரலாம்.கண்ணக் கடவுள் பல பெண்களின் சேலையை உறியலாம்.ஒரு நாள் இரவு பெண்ணாக உறுவெடுத்து அரவாணனுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்லலாம்.கர்ணனை வஞ்சகமாகக் கொலை செய்வது இந்துக்களுக்கப் புனிதமானது.காஞ்சிபுரத்திலும் திருப்பரங்குன்றத்திலும் கடவுளின் கண்முன்னே மங்கயரைப் புணர்ந்த அர்ச்சகர்களைப் புனிதர்களாக ஒத்துக் கொண்டது இந்த தமிழ்ச் சமூகம். ஆணும் ஆணும் புணர்ந்ததில் உறுவான அய்யப்பனை கடவுளாக்கியது இந்த சமூகம்.அய்ந்து ஆண்களுக்கு மனைவியாகிய பாஞ்சாலிக்குக் கோவில் கட்டிய இந்து சமூகம், எம்ஜியாருக்கும் அவரின் வைப்பாட்டிகளுக்கும் கோவில் கட்டுவதில் வியப்பு ஒன்றுமில்லை.

 2. சோனியாவுக்கு ஆந்திராவில் கோவில் கட்டியது மட்டும் இஸ்லாமிய ஆன்மீக கொந்தளிப்போ?
  எம்ஜிஆருக்கு கட்டியது தவறு என்றால் சோனியாவுக்கு கட்டியதும் தவறா இல்லையா?
  தாங்கள் தங்கள் தந்தையின் மகன்தான் என்பதையும் உலகமே எதிர்த்து நின்றாலும் தான் ஒரு உண்மையான இஸ்லாமியன் என்பதையும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பம்.
  தங்களது பதிவை அப்படியே தமிழக நாளிதழ்களில் விளம்பரமாக பிரசுரிக்க தங்களால் இயலுமா?
  வாழ்க வளமுடன் திரு.மோடி அவர்கள்
  கொச்சின் தேவதாஸ்

  • சேச்சே, எம்.ஜி.ஆர் மட்டும்தான் பாசிஸ்ட். ஏனெனில் அவர் எந்த மதத்தையும், அல்லது சாதியைச் சேர்ந்தவர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்று சொன்னதில்லை, ஓரு குறிப்பிட்ட சாதியினரக் கண்டாலே அடித்து விரட்டு என்று சொன்ன ஈ.வெ.ரா போல எம்.ஜி.ஆர் இல்லை, அதனால் அவர் பாசிஸ்ட்.

   ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் அது ஏதோ சமூக விரோதக் கும்பல் போலவும், பிறமதத்தாரை வெட்டிச் சாய்த்தே வளர்ந்த இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றிப் போற்றிப் புகழும் வினவு பாஸிஸ்ட் அல்லவே அல்ல.

   சோனியா? அவரது தந்தை இத்தாலிய பாஸிஸ்ட் முஸொலினியின் வழிநடந்தவர், அவரது ஆதரவாளர், கொத்தனார் என்றாலும் முசோலினியின் பரம பக்தர். அதனால் அவரோ அல்லது அவர் மகளான சோனியாவோ நிச்சயம் பாஸிஸ்ட் அல்லவே அல்ல.

   • அட, ஒரு முக்கியமான தகவல் விட்டுப் போய் விட்டது.

    இந்த பாசிசம் என்ற சொல்லின் மூலமே இத்தாலிதான், இத்தாலியின் முசோலினிதான். அவரது கட்சியின் பெயர்தான் தேசியப் பாஸிச்டுக் கட்சி! சோனியாவின் அப்பா தன்னை முசோலினியின் தேசிய பாஸிஸ்டுக் கட்சியின் முசோலினியின் விசுவாசமிக்க தொண்டர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொண்டார்! இட்லரின் படையில் உறுப்பினராகவும் இருந்தார்!

    ஒரிஜினல் பாஸிஸ்டின்நேரடி வாரிசு என்ற முறையில் சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை சோனியா குறித்து அவர் பாஸிஸ்ட் இல்லை என்று முழங்கி மகிழலாம்.

   • திரு.மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனை நாஸிஸ்ட் என்று அழைப்பதைக் காட்டிலும்,சேடிஸ்ட் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.தன்னை வைத்து படம் எடுத்து,தனக்குப் படியளந்தவராகியவரும்,ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் தன்னை “நான் ஏன் பிறந்தேன்” என்ற சுய சரிதம் எழுத அனுமதித்தவரும் ஆன ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களை,ஆனந்தவிகடனில் அட்டைப் படத்தில் அரசியல்வாதிகளை திருடர்கள் போல் படம் போட்டுக் காட்டியதற்கு,கைது செய்து சிறையில் அடைத்து,முதல் வகுப்புக் கொடுக்காமல் கைதி உடை அணிவித்து மன மகிழ்ச்சி அடைந்தவர்தான் இந்த இராமச் சந்திர மூர்த்தி.இது எடுத்துக் காட்டுதான்.இவர் ஒரு இனத்துக்கு எதிராகச் செயல்படவில்லையாம்.பிரபாகரனுக்குப் பணம் கொடுத்து நம்பவைத்து அவரை இந்திய அதிகாரவர்க்கத்திற்கு அடிபணிய வைக்க முயன்றதும்,அவர் அடிபணிய மறுத்ததின் விளைவாக இந்தியப் அமைதிப் படை இந்த இராமசந்திரமூர்த்தி முதல்வராக இருக்கும் பொழுது,இவர் ஒப்புதலுடன் ஈழத்துக்கு அனுப்பப் பட்டது.அங்கு என்ன நடந்தது என்பதை உலகறியும்.அமைதிப் படை இந்த இராமச் சந்திரமூர்த்தியின் மரணத்துக்குப் பின்தான் வி.பி.சிங் அவர்களால் திரும்பப் பெறப் பட்டது.இவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராகச் சதி செய்திருந்தால் மன்னிக்கலாம்.ஆனால் இவர் தமிழ் சமூகத்துக்கே slow poison கொடுத்துக் கொண்டிருந்தார்.தமிழகத்தில் 1905 இல் சிவகாசிக் கொள்ளை என்ற சாதிக் கலவரம்.அதன்பின்1925 இல் மாங்குடி- பெருமாள்பட்டி சாதிக்கலவரம்.அதன் பின்பு 1958 இல் முதுகுளத்தூர் சாதிக் கலவரம்.இந்தச் சாதிக் கலவரங்கள் தானாக வெடித்தவை.அதன் பின்பு இந்த இராமச் சந்திரமூர்த்தி 1977 இல் முதல்வரான உடன், சேரன் சோழன், பாண்டியன், பல்லவன், திருவள்ளுவர், பெரியார் என்று பெயர் சூட்டப் பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களையும்,சரித்திரப் புகழ்வாய்ந்த மாவட்டங்களையும் துண்டு துண்டாக உடைத்து,சாதித் தலைவர்கள் அவைகளுக்குச் சூட்டி தமிழ்ச் சாதியினர் மத்தியில் சாதியச் சண்டைகளை தூண்டி விட்டார்.இவர் ஆட்சிகாலத்தில் நடந்த சாதிச் சண்டைகள் கணக்கிலடங்கா.அதன்பின்பு அந்த சாதிச் சண்டைகள் 1996 இல் சாதித் தலைவர்களின் பெயரை நீக்கியபின்தான் ஓய்ந்தது.ஆனால் சாதிய வன்மங்கள் இன்னும் மாறவில்லை.1971 இல் கருணாநிதியால் திறக்கப்பட்டு,எல்லோரும் திட்டுகிறார்கள் என்று, அவராலே 1975 இல் மூடப்பட்ட மதுக்கடைகள்,திரைப் படத்தில் கூட மதுக் குடிப்பவராக நடிக்காத இந்த உத்தமர்,தான் ஆட்சிக்கு வந்தவுடன் திறந்துவிட்டார்.இன்னும் அது மூடப் படவில்லை.அதுமட்டுமில்லை சாராய பேர ஊழலிலும் மாட்டிக் கொண்டார்.
    குலக் கல்வி,தேவதாசி முறைகளை அமுல் நடத்திய பிராமணரை விமரித்த்ததில் என்னதப்பு.அதை ஒழிப்பதற்காக 1928 இல் சட்டம் கொண்டு வரப் பட்டது.அதை எதிர்த்து சத்தியமூர்த்தி அய்யர்,”தேவதாசி முறை கண்டிப்பாகவேண்டும்.திமிர் நிறைந்த காளயர்கள்,தங்களின் உணர்வுகளைத் தணிப்பதற்கு அதுதான் சிறந்த வழி” என்று வாதிட்டார்.திருமதி.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்,”அப்படியானால் உங்கள் சாதிப் பெண்களை தேவதாசிகளாக மாற்றி விடுங்களேன்” என்று அச்சட்டமன்றத்திலேயே பதிலளித்தபின்புதான் அவர் கொட்டம் அடங்கிது.அந்தக் கூட்டத்தை புனிதர்கள் என்று கொண்டாடும் கூட்டத்தினர்,தங்கள் உடன்பிறப்புகள் கட்டாயமாக சாதிய அடிப்படையில் பல ஆண்களுக்கு மடிவிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்கள்.எல்லோருக்கும் பொதுவான கல்வி கொடுத்தால்,சிறைப்பதற்கும்,மலம் அள்ளுவதற்கும் யார் இருப்பார்கள் என்று திமிராகப் பேசி(இராஜாஜி),குலக் கல்வி கொண்டுவந்த பிராமணக் கூட்டத்தை விமரிசித்ததில் என்ன தப்பு.குலக் கல்வியை ஒழித்தது பெரியார் அல்ல.காமராஜர்தான் ஒழித்தார்.பெரியார் மட்டும்தான் பிராமணித்தை எதிர்த்தார் என்பது வரலாற்றுப் பிழை.
    ஏதோ முகமதியர்களும்,கிரிஸ்தவர்களும்தான் பிற மதத்தினரை வெட்டிச் சாய்ப்பது போலவும்,இந்து தீவிரவாதம் இல்லாதது போலவும் பேசுவது சரிதானா? பாகிஸ்தான் பிறிவினையின் போது,நாட்டின் கிழக்குப் பகுதியில் கொலை செய்யப் பட்டவர்களில் பாதிப் பேர் முகமதியர்கள்,பாதிப் பேர் இந்துக்கள்.இறந்த முகமதியர்கள் அவர்களாகவே அவர்களைக் கொன்றுவிட்டனரா? அசாமில் ஒரு பாதரியார் உயிருடன் கொழுத்தப் பட்டார்.அது இந்து தீவிறவாதம் இல்லையா?நமது தேசத் தந்தை காந்தியடிகள் கொலை செய்யப் பட்டது இந்து தீவிறவாதமில்லையா? அது இந்து தீவிறவாதம் இல்லையென்றால்,அவரைக் கொலை செய்தவன் கோட்சே என்ற பிராமணன் என்பதால் அதைப் பிராமணத் தீவிறவாதம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அது சரி,பிராமணர் என்பது சாதியா? இல்லை இனமா?

 3. mr cochin,

  When I was alive MKEK did so many things against me blantantly. And on my death they did most provocative Front page on their magazine. They were very less compared to what they are now. So before talking anything check the history first. Modi podi pakkaththu veettu jaadi

  • When you were alive,you cheated actor Chandra Baabu,S.A.Asokan and G.N.Velumani.Chandra Baabu’s writing in Pesum Padam during 60’s about your forgeries were noteworthy. You might have not forgot Mr.Ganpathi Butt,the authorized husband of V.N.Janaki, to whom with you had been living together.

 4. மதம் என்பதே உளைக்காது உட்கார்ந்து உண்ணும் கூட்டத்தினர் அவர்களது உடம்பு வலிக்காது வாழ்வதற்காக ஆரம்பிக்கப் பட்டதே.மதம் மக்களிடம் சார்புத் தன்மையை வளர்க்கும்.சார்புத்தன்மை கையாலாகாத் தன்மையைத் தோற்றுவிக்கும்.மக்கள் கையாலாகாமல் இருப்பதனால் மதத்தின்பால் ஈர்க்கப் படுகிறார்கள். அப்படி மக்கள் கண்மூடித் தனமாக ஈர்க்கப் பட்டால்தான்,மதவாதிகள் சுகமாக வாழலாம்.மக்களின் இந்த கையாலாகத் தனத்தை நம்பித்தான் உலகில் எல்லா மதமும் இயங்குகின்றன. உலகில் முப்பெரும் மதங்கள் தோன்றிய நாடு இந்தியா.அதனால்தான் இந்தியர்கள் உலகில் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர்.இந்த தன்னம்பிக்கையற்ற கூட்டத்தை நம்பித்தான் இந்த ஆசாமி இந்த கபட வேடதாரிக்கு இந்து முறைப் படி கோவில் கட்டியிருக்கிறார்.இந்து மதத்தில்தான் பல கடவுளர்கள்.ஆதலால் எம்ஜியாரை பத்தோடு பதினொன்று என்று ஏற்றுக் கொண்டார்கள்.இப்பொழுது இந்தக் கோவிலில் வருமானம் இருப்பதால் ஆரியக் கூட்டம் தல புராணம் பாடிவிடும்.

 5. எல்லாரும் ஒருவரை ஓவராக புகழ்ந்து கொண்டிருக்கும் போது இதை எழுதுவதற்கே துணிச்சல் வேண்டும்.எம் ஜி ஆர் பற்றிய உண்மைகளை தனி தொடராக எழுதினால் நன்று.வினவு செய்யுமா?

 6. எத்தனை ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் இவர்களெல்லாம் திருந்தமாட்டார்கள் என்று விவேக் படத்தில் கூறியது மிகவும் சரியான கூற்று.
  (ஆனால் விவேக்கின் சுயரூபம் இங்கே: http://www.youtube.com/watch?v=s77Ufg9c7QI#t=352 😀 )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க