Tuesday, October 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி

சந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி

-

டந்த புதன்கிழமை 5.2.2014 அன்று கொல்கத்தாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். “இடதுசாரி கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம் – கம்யூ, திரிணாமுல் கலக்கம்” என்பதாக தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் இந்த கூட்டத்தைக் கொண்டாடின. மம்தா போன்ற மேற்கு வங்கத்து ஜெயாக்களையே பிரவேசிக்க வழியேற்படுத்திய போலிக் கம்யூனிஸ்டுகளது மாநிலம் மோடிக்கும் மட்டும் அருள்பாலிக்காதா என்ன?

நரேந்திர மோடி
கொல்கத்தாவில் மோடி நிச்சயமாக திரிணாமுல் கட்சியைப் பார்த்து கலங்கியிருக்கிறார்.

ஆனால் தினமலர் கொண்டாடுவது போல மம்தா இந்தக் கூட்டத்தைப் பார்த்து கலங்கினாரோ இல்லையோ மோடி மட்டும் நிச்சயமாக திரிணாமுல் கட்சியைப் பார்த்து கலங்கியிருக்கிறார். இதை நாம் கூறவில்லை, மோடியின் பேச்சே பகிரங்கமாக தெரிவிக்கிறது.

முதலில் மூன்றாவது அணி குறித்து மோடி உதிர்த்த முத்துக்களை பார்ப்போம். சில நாட்களுக்கு முன்புதான் “மக்களவை தேர்தலில் 3-வது அணி குறித்த பேச்சு, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே பெரிதும் உதவும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான அருண் ஜேட்லி வஞ்சப்புகழ்ச்சி பாணியில் சோகப்பாட்டு பாடியிருந்தார். மூன்றாவது அணியினால் மோடி அணிக்கு லாபம் என்றால் அதை பாராட்டுவதற்கு பதில் ஏன் இப்படி மீசையில் மண் ஒட்டவில்லை என்று முறுக்க வேண்டும்?

உண்மையில் மூன்றாவது அணி குறித்து மோடி கும்பல் எப்படி மிரண்டு போயிருக்கிறது என்பதற்கு அவரது கொல்கத்தா பேச்சே சான்று.

மோடி பேசியதாவது:

“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை மூன்றாவது அணியினர் அறிந்து கொள்வார்கள். மூன்றாவது அணி என்ற ஏற்பாடே, இந்தியாவை மூன்றாம் தர நாடாக ஆக்குவதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மூன்றாவது அணியைச் சேர்ந்த கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அதனால்தான் அந்த மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் எதிலும் மூன்றாவது அணியைச் சேர்ந்தோரின் ஆட்சி இல்லை.

இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்தாக்கத்துக்கு விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. தேர்தல் வரும்போதெல்லாம் மதச்சார்பின்மை, ஏழை மக்களின் நலன் போன்ற விஷயங்களை பற்றி மூன்றாவது அணியினர் பேசத் தொடங்கி விடுகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சியின் பலன்கள் முஸ்லிம்களை சென்றடையும் வகையில் செயல்பட்டதில்லை. முஸ்லிம்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் எப்போதும் கருதுகின்றனர்.

குஜராத்தில் சிறுபான்மையினரின் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அரசுக்கு அரசியல் சாசனம் மட்டும்தான் மதப் புத்தகமாக இருக்க வேண்டும். தேசியவாதத்தில் மட்டுமே நம்பிக்கை இருக்க வேண்டும்”  இப்படித்தான் கொல்கத்தாவில் பொங்கியிருக்கிறார் மோடி.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி – மம்தாவுக்கு கிடைக்கும் கணிசமான எம் பிக்கள், தேவைப்பட்டால் நமக்கும் படியளக்க வேண்டும் என்று அவருக்கு ஜே போடுகிறார் மோடி.

முதல் தரமா, மூன்றாவது தரமா என்று முத்திரை குத்தும் அளவிற்கு மூன்றாவது அணி அவ்வளவாக வொர்த் இல்லை என்பது வேறு விசயம். ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் காங் கூட்டணியை விட பாஜக கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றுதான் கூறப்படுகிறதே அன்றி பெரும்பான்மை கிடைக்கும் என்று சொல்லவில்லை. இன்னும்  பாஜக அணியை விட மூன்றாவது அணிக்குத்தான் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் அந்த சர்வேக்கள் தெரிவிக்கின்றன. மோடியின் பீதியும், வயிற்றெரிச்சலும் இந்த எண்கள் காரணமாகவே அன்றி வளர்ச்சி குறித்தோ வாந்தி குறித்தோ அல்ல.

மேலும் மூன்றாவது அணியில் மதில் மேல் பூனைகளாக காத்திருக்கும் சந்தர்ப்பவாத கட்சிகளை வழிக்கு கொண்டு வரும் விதமாகவும் மோடி குரூப் பேசியும் எழுதியும் வருகிறது. ஜெயிக்கிற குதிரை மீது சூதாடுங்கள் என்று அவர்கள் வெளிப்படையாகவே 3-வது அணி கட்சிகளை அழைக்கிறார்கள்.

மேற்கே வளம் கொழிப்பதற்கு அங்கே மூன்றாம் அணி ஆளவில்லை என்றும் கிழக்கே வறுமை தாண்டவமாடுவதற்கு மூன்றாவது அணி ஆள்கிறது என்றும் தனது வழக்கமான பனியா பாயிண்டுகளை வீசுகிறார் மோடி.

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் மேற்கில் பாஜகவோடு காங்கிரசும்தான் ஆள்கின்றது, ஆண்டது. அதனால் காங்கிரசை காவிக் கூட்டம் ஆதரிக்க வேண்டியதுதானே? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் சந்தர்ப்பவாதிகளுக்காகவே உயிர் வாழ்கிறது என்றால் அதில் காவிக் கும்பல் கொட்டை போட்டது.

அடுத்து மராட்டியம், குஜராத்தில் முதலாளிகள் கொழிக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை கிழக்கின் ஏழைகள் வந்து கொத்தடிமை போல வேலை பார்ப்பதுதான். இவர்களைத்தான் வங்க தேச அகதிகள், உ.பி, பீகார் வாலாக்கள் என்று வெறுப்பை உமிழ்ந்தவாறு அடித்து துரத்த வேண்டும் என்று இந்துமத வெறியர்கள் கூப்பாடு போடுகிறார்கள். குஜராத்தில் முசுலீம் மக்களின் தனிநபர் வருமானம் அதிகம் என்று மோடி வீசும் பொய்கள் ஒருபுறம் இருக்கட்டும். கலவரத்தில் கொல்லப்பட்டும், தொழிலை இழந்தும் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் குஜராத் முசுலீம் மக்களை விட கிழக்கு மாநிலங்களின் முசுலீம் மக்களது வாழ்க்கை கொஞ்சம் மேம்பட்டதுதான்.

அடுத்து வங்கத்து சென்டிமெண்டை கவருவதற்கு கொட்டை போட்ட காங்கிரசு பெருச்சாளி பிரணாப் முகர்ஜியை ஜாக்கி வைத்து தூக்குகிறார் மோடி. பிரணாப்பிற்கு பிரதமர் ஆவதற்கு தகுதி இருந்தும் காங்கிரசு ஆக்கவில்லை என்று உருகுகிறார் மோடி. இந்திரா காந்தி காலம் முதல், ராகுல் காந்தி காலம் வரை எமர்ஜென்சி முதல் 2ஜி-நிலக்கரி ஊழல் வரை அனைத்து பாசிச, ஊழல் நடவடிக்கைகளிலும் காங்கிரசின் முக்கிய தளபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை மோடி இப்படி பாராட்டுகிறார் என்றால் சோனியாவும், ராகுலும் இதைவிட பாராட்டுக்குரியவர்கள் ஆயிற்றே?

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி – மேற்கு வங்க மாநிலத்தில் இந்து தேசிய உணர்வு செல்ஃப் எடுக்காது என்று தெரிந்து வங்க தேசிய உணர்வை, பிரணாப் முகர்ஜி எனும் பெருச்சாளியை வைத்து அள்ள நினைப்பதுதான் மோடியின் கீழ்த்தரமான அரசியல்.

அப்பேற்பட்ட பிரணாப்பை குடியரசுத் தலைவர் ஆக்கியதும் இதே காங்கிரசு கும்பல்தானே? மேற்கு வங்க மாநிலத்தில் இந்து தேசிய உணர்வு செல்ஃப் எடுக்காது என்று தெரிந்து வங்க தேசிய உணர்வை, பிரணாப் முகர்ஜி எனும் பெருச்சாளியை வைத்து அள்ள நினைப்பதுதான் மோடியின் கீழ்த்தரமான அரசியல். மேலும் ஒருக்கால் தான் ஆட்சியில் பிரதமராக அமர்ந்தால் இதே முகர்ஜி ஏதும் குடைச்சல் கொடுக்க கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையுடன் இப்போதே சோப்பு போடுகிறார் மோடி. கரையும் இந்த சோப்பை போய் இரும்பு என்று வியப்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?

இதே போன்று மம்தா பானர்ஜியையும் மோடி விமரிசிக்காததோடு பாராட்டவும் செய்திருக்கிறார். சோப்புதான் என்று வந்த பிறகு மம்தாவாக இருந்தால் என்ன, முகர்ஜியாக இருந்தால் என்ன? மாநிலத்தில் மம்தா ஆட்சியும், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியும், மத்தியில் தனது ஆட்சியும் இருந்தால் அது மேற்கு வங்க மாநில மக்களுக்கு பொற்காலம் என்று ஆசை காட்டியிருக்கிறார் இந்த நரவேட்டை மோடி.

இதே மம்தா பானர்ஜி கூட காங்கிரசு பாசறையிலிருந்து வந்தவர் என்பதோடு போலிக் கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருந்து மாநிலத்தை கைமாற்றியவர். வரும் தேர்தலில் அவருக்கு கிடைக்கும் கணிசமான எம் பிக்கள், தேவைப்பட்டால் நமக்கும் படியளக்க வேண்டும் என்று கணக்கின்பாற்பட்டு மம்தா பானர்ஜிக்கு ஜே போடுகிறார் மோடி. அதே நேரம் மம்தா பானர்ஜி மூன்றாவது அணிக்கு போய்விடக் கூடாது என்பதற்கும் அந்த அணியை குறித்து விமரிசிக்கிறார்.

ஆனால் மோடியின் பச்சையான சுயநலத்தை தின்று விழுங்கும் சக்தி படைத்த மம்தாவோ அண்ணா ஹசாரே ஆதரவு பெற்று, மாநிலத்திலும் கணிசமான எம்பிக்கள் வென்று மூன்றாவது அணியின் பிரதமராக வர முடியுமா என்று தனி ரூட்டை ஆரம்பித்திருக்கிறார். ‘மாபெரும்’ இந்திய தேசத்தின் பிரதமர் பதவியை மாநிலத்தில் 30, 40 எம்பிக்களை வைத்து வென்று விடலாம் என்ற அளவிற்கு இங்கே தேர்தல் கூட்டணியும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும் சிரிப்பாய் சிரிக்கிறது.

ஓட்டுப் பொறுக்கி கட்சிகளில் கொள்கை கிடையாது, சந்தர்ப்பவாதக் கூட்டணியும், பதவி பேர ஆதாயங்களும் மட்டுமே இருக்கும் என்பது ஆண்டுக்காண்டு அதிகமாய் சந்தி சிரித்தாலும், காவிக் கும்பல் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

நாளைக்கு சென்னைக்கு வரும் மோடி இங்கே ஜெயலலிதாவுக்கும் ஜே போடுவதற்கு மறக்க மாட்டார். இவ்வளவிற்கும் மம்தாவை விட பிரதமர் பதவிக்கு அதிகம் சவுண்டு விடுபவர்தான் ஜெயலலிதா. என்றாலும் தேர்தலுக்கு பிறகு சூழ்நிலை மாறி அவர் ஆதரவு தமக்கு தேவைப்படும் என்பதால் பாஜகவினர் அம்மா பெயரை மறந்தும் கூட விமரிசிக்க மாட்டார்கள். அந்த வகையில் அம்மா கூட்டணியில் இருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு கூட தமிழகத்து காவிக் கும்பலிடம் கொஞ்சம் மரியாதை கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றியினால் பீதியடைந்திருக்கும் பாஜக கும்பல் வரும் நாட்களில் சந்தர்ப்பவாதத்தில் புது சாதனையே படைக்கும். ஆயினும் ஆட்சியைப் பிடிப்பதில் இருக்கும் சந்தர்ப்பவாதம், ஆட்சியில் அமர்ந்த பிறகு பாசிசத்தை நோக்கி அதிவேகத்தில் பயணிக்கும். அந்த பதவி வெறிதான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலம்தான் இத்தகைய சந்தர்ப்பவாதங்களை பகிரங்கமாக பேசுகிறது, முன்வைக்கிறது.

ஆகவே நரவேட்டை மோடி இந்துமதவெறியில் மட்டுமல்ல, சந்தர்ப்பவாதத்திலும் சாதனையாளர்தான்.

  1. வினவு பொறுமை ,பொறுமை ….!

    [1]முன்றாம் அணியீன் பிதாமகன்களான போலி கம்யூனிஸ்ட்டுகளுடன் , மேற்கு வங்க புரட்சித் தலைவி மம்தா பானர்ஜி அக்காவும் கூட்டணியா ? தலை சுத்துகின்றது.

    [2]If third front form a gov with congress support then it may happened! One[t.congress] is providing inside support to third front gov! Another[communist] is from outside support to third front!

    //நமக்கும் படியளக்க வேண்டும் என்று கணக்கின்பாற்பட்டு மம்தா பானர்ஜிக்கு ஜே போடுகிறார் மோடி. அதே நேரம் மம்தா பானர்ஜி மூன்றாவது அணிக்கு போய்விடக் கூடாது என்பதற்கும் அந்த அணியை குறித்து விமரிசிக்கிறார்.

  2. “மம்தா போன்ற மேற்கு வங்கத்து ஜெயாக்களையே பிரவேசிக்க வழியேற்படுத்திய போலிக் கம்யூனிஸ்டுகளது மாநிலம் மோடிக்கும் மட்டும் அருள்பாலிக்காதா என்ன?”

    “முழு பாசிசம்” போலி கம்யூனிஸ்டுகளை போன்ற “அரை பாசிஸ்டுகளை” வைத்து தான் தன்னை கடை விரிக்கின்றது.

  3. “முழு பாசிசம்” போலி கம்யூனிஸ்டுகளை போன்ற “அரை பாசிஸ்டுகளை” வைத்து தான் தன்னை கடை விரிக்கின்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க