privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மேட்ச் பிக்சிங் நடந்தது உண்மைதான் - முட்கல் கமிட்டி

மேட்ச் பிக்சிங் நடந்தது உண்மைதான் – முட்கல் கமிட்டி

-

ந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் சூதாட்டம் மற்றும் போட்டி முடிவுகளை திட்டமிட்டு தீர்மானிப்பது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டி தன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.

குருநாத் மெய்யப்பன்
குருநாத் மெய்யப்பன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது வைக்கப்பட்டுள்ள சூதாட்டம் மற்றும் போட்டிகளை திட்டமிட்டு தீர்மானித்தல் இவற்றை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இந்தக் குழு பணிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, மும்பை, டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர் காவல் துறை அதிகாரிகள், இன்னாள் முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள், ஐபிஎல் அதிகாரிகள், இந்தியா சிமென்ட்ஸ் முதலாளிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும், சென்னை ஐபிஎல் அணியின் தலைவருமான தோனி உள்ளிட்ட இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், டெண்டூல்கர், கங்குலி, டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஐபிஎல் முதலாளிகள் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலியா, அங்கித் சவான் ஆகியோரை விசாரித்து வந்தடைந்த முடிவுகளை கமிட்டியின் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பனின் சூதாட்டங்களை நடத்திக் கொடுத்த சூதாட்டத் தரகர் விண்டூ தாரா சிங் கமிஷனின் முன்பு சாட்சி சொல்ல மறுத்து விட்டிருக்கிறார். “சூதாட்டம், போட்டிகளை முன்கூட்டியே தீர்மானித்து நடத்துவது இவை குறித்து தன் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் தனது செயல்கள் பற்றி கமிட்டியின் முன்பு வாக்குமூலம் கொடுக்க முடியாது” என்று குருநாத் மெய்யப்பன் தனது வழக்கறிஞர் மூலம் மறுத்து விட்டிருக்கிறார்.  ஆனாலும், தனக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை என்பதால் யாரையும் சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று பரிதாபமாக சொல்லியிருக்கிறது முட்கல் கமிட்டி.

குருநாத் மெய்யப்பனின் சூதாட்ட விபரங்கள் வெளியானவுடன், குருநாத் மெய்யப்பனுக்கும்  சென்னை ஐபிஎல் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும், அதன் முதலாளி சீனிவாசனும் சாதித்தனர். குருநாத் மெய்யப்பன் சென்னை அணி பிரதிநிதி என்று குறிப்பிடப்பட்டிருந்த அவரது டுவிட்டர் கணக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டது.

முட்கல் கமிட்டியின் விசாரணையில் சென்னை அணித் தலைவர் தோனியும், இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி மற்றும் கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனும் (குருநாத் மெய்யப்பனின் மாமனார்), இந்தியா சிமென்ட்ஸ் அதிகாரிகளும் அவருக்கு இந்தியா சிமென்ட்சில் எந்த பங்கு உரிமையும் இல்லாததால் அவரை அணியின் உரிமையாளர் என்று  கருத முடியாது என்றும் அவர் அணியின் ஒரு சாதாரண ஆதரவாளர்தான் என்றும் வாதிட்டிருக்கின்றனர். இந்தியாவின் கௌரவத்தையே தூக்கிப் பிடிப்பதாக கொண்டாடப்படும் இந்திய அணித் தலைவர் தோனி இந்தியா சிமென்ட்சிடம் வாங்கிய காசுக்குத்தான் விசுவாசமாக இருந்து பொய் சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால், கமிட்டி தனது விசாரணையின் முடிவில், குருநாத் மெய்யப்பன்

  • அணியின் பயிற்சி அமர்வுகளின் போது உடன் இருந்ததையும்
  • அணியின் குழு கூட்டங்களில் பங்கேற்றதையும்
  • அணிக்கு வீரர்களை ஏலம் எடுக்கும் போது அணியின் பிரதிநிதியாக உட்கார்ந்திருந்ததையும்
  • அணி உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்ததையும்
  • ஐபிஎல் உரிமையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றதையும்
  • அணியின் பயணங்களில் சேர்ந்து தானும் பயணித்ததையும்
  • ஐபிஎல் உரிமையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் தன்னை சென்னை அணியின் உரிமையாளர் என்று சொல்லிக் கொண்டு கலந்து கொண்டதையும்

உறுதி செய்திருக்கிறது. குருநாத் மெய்யப்பனின் டுவிட்டர் புரொஃபைல் மாற்றப்பட்டது தொடர்பான விபரங்களையும் சரிபார்த்து உறுதி செய்திருக்கிறது.

மகேந்திரசிங தோனி
பொய் சாட்சியம் அளித்த தோனி.

குருநாத் மெய்யப்பனை அணி உரிமையாளராகவும், அணியின் பிரதிநிதியாகவும் குறிப்பிடும் பிசினஸ் அட்டைகளையும், லெட்டர் பேடுகளையும் மும்பை காவல் துறை கைப்பற்றியிருக்கிறது. மேலும், இந்திய சிமென்ட்ஸ் நிறுவனமே கடந்த 6 ஆண்டுகளில் ஒவ்வொரு ஐபிஎல் பருவத்திலும் குருநாத் மெய்யப்பன் பெயரை பிரதிநிதியாக சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள்களை அனுப்பியிருக்கிறது. அதன்படி கிரிக்கெட் வாரியம் அனுப்பிய சென்னை அணி கேட்ட பிரதிநிதிகளுக்கான ஒப்புதல் பட்டியலில் குருநாத் மெய்யப்பனின் பெயரும் சேர்க்கப்பட்டு அவர் இயக்குனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதன்படி, குருநாத் மெய்யப்பன் சென்னை அணியின் பிரிக்க முடியாக அங்கமாக விளங்கியதாகவும்,  சட்டப்படி அவர் அணி முதலாளி இல்லை என்றாலும், நடைமுறையில் அவர் அணி உரிமையாளராகவே செயல்பட்டார் என்றும் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் குருநாத் மெய்யப்பனுக்கு சென்னை அணியின் உள் விபரங்கள், குறிப்பிட்ட போட்டிகளுக்கான செயல் உத்திகள், மைதான நிலவரங்கள், போன்ற சாதாரண கிரிக்கெட் ரசிகருக்கு தெரிய வாய்ப்பில்லாத பல தகவல்கள் தெரிந்திருந்தன.

ஆனால், அணி உரிமையாளர்களும், அணியுடன் தொடர்புடையவர்களும் முறைகேடுகள் செய்வதை கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஐபிஎல் முதன்மை செயல்பாட்டு அலுவலர் (சிஈஓ) சுந்தர ராமனோ, “எந்த ஒரு ஐபிஎல் அணிக்கும் உரிமையாளர் என்று யாரையும் தெளிவாகச் சொல்ல முடியாது” என்றும் “அணிகளின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ள கிரிக்கெட் வாரிய நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று அலட்சியமாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஐபிஎல் செயல்பாட்டு விதிகள், ஐபிஎல் ஒழுங்குவிதிகள், ஐபிஎல் ஊழல் ஒழிப்பு நெறிகள், ஆட்டக்காரர்களுக்கும், ஆட்ட அலுவலர்களுக்குமான ஐபிஎல் நெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில்

  • அணி உரிமையாளர்களும், அணியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களும் தமது அணி பங்கெடுக்கும் போட்டிகள் தொடர்பாக பந்தயம் கட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • அணியின் உள் வட்டங்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்களை அவை பந்தயம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிந்து வெளி ஆட்களுக்கு அறியத் தருவதும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் போட்டிகளில் அணியின் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி தூண்டுவது, போட்டி முடிவுகளை  மாற்றி அமைக்க முயல்வது போன்றவையும் ஊழல்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
  • ஊழல் செய்யுமாறு தூண்டி தன்னை அணுகுபவர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமாகும்.

மேலும்,  ஒரு அணியின் உரிமையாளரின் நண்பர்கள், உறவினர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அந்த உரிமையாளரும் குற்றம் இழைத்தவர் ஆகிறார். இந்த குற்றங்களை செய்பவர்கள் மீது ஐபிஎல் நிர்வாகம் தற்காலிக விலக்கம், அபராதம், நிரந்தர விலக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியும். மேலும், குத்தகைதாரர் ஒப்பந்தத்திலும் கிரிக்கெட்டுக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அல்லது ஐபிஎல்லுக்கு நற்பெயரை கெடுக்கும் எந்த வித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டுள்ளது.

மும்பை காவல் துறை, டெல்லி காவல் துறை, சென்னை காவல் துறை போன்றவை இந்த வழக்குகள் தொடர்பாக திரட்டிய சாட்சியங்களின் அடிப்படையில்

  • குருநாத் மெய்யப்பன் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.
  • மும்பையைச் சேர்ந்த விண்டூ தாரா சிங், சென்னையைச் விக்ரம் அகர்வால் போன்ற சூதாட்டத் தரகர்களுடன் தரகருடன் அவர் பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
  • சென்னை அணி விளையாடும் போட்டிகளில் போட்டிகள் நடந்து கொண்டிக்கும் போது கூட அணி ஜெயிப்பதாக மட்டுமின்றி, தோற்பதாகவும் பல முறை அவர் பந்தயம் கட்டியிருக்கிறார்.

என்று முட்கல் கமிட்டி தீர்மானித்திருக்கிறது.

சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே மே 12, 2013 அன்று ஜெய்ப்பூரில் நடந்த விளையாட்டில் சென்னை அணி 130-140 ரன்கள் எடுக்கும் என்று விண்டு தாராசிங்கிடம் குருநாத் மெய்யப்பன் பந்தயம் கட்டியிருக்கிறார். கடைசி பந்தில் எட்ஜ் வாங்கி பந்து எல்லைக் கோட்டை தாண்டியதில் அணியின் ஸ்கோர் 141-ல் முடிந்திருந்தது. “இது போட்டியை தான் விரும்பிய வண்ணம் கொண்டு போக அவர் முயற்சித்திருக்கிறார் என்று காட்டுகிறது. இது குறித்து மேலும் விசாரிக்க வேண்டும்.” என்று கமிட்டியின் அறிக்கை பரிந்துரைக்கிறது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை, 11-வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த அணி 141 மட்டுமே குவித்தது. இவை அந்த சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சென்னை அணிக்கும் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இவ்வாறு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்று பலர் கமிட்டியின் முன்பு கருத்து கூறியிருக்கின்றனர்.

குருநாத் மெய்யப்பன் வழக்கறிஞருடன்
குருநாத் மெய்யப்பன் வழக்கறிஞருடன்

யாருடைய ஆசீர்வாதத்தோடு குருநாத் மெய்யப்பனும், சென்னை ஐபிஎல் அணியும் இந்த சூதாட்டங்களையும், போட்டிகளை தீர்மானிப்பதையும் செய்து கொண்டிருந்தார்களோ, அந்த சீனிவாசன்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கட்டுப்படுத்துவதோடு, ஐசிசியிலும் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராகி வருகிறார். இந்த கிரிக்கெட் வாரியம்தான் கிரிக்கெட்டில் ஊழலை ஒழித்து விளையாட்டை தூய்மைப்படுத்தும் என்று நம்பச் சொல்கிறார்கள்.

ராஜஸ்தான் அணியின் முதலாளி ராஜ் குந்த்ரா டெல்லி காவல் துறையிடம் தான் பந்தயம் கட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு பின்னர் அதை திரும்பப் பெற்றிருக்கிறார். ஆனால், ராஜ் குந்த்ராவின் நண்பர் உமேஷ் கோயங்கா அவர் பந்தயம் கட்டியதாக சாட்சி அளித்திருக்கின்றார். அணி வீரர்களிடமிருந்து நேரடியாக போட்டி பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும்படி உமேஷ் கோயங்காவுக்கு ராஜ் குந்த்ரா அனுமதி அளித்திருக்கிறார். தான் இங்கிலாந்து குடிமகன் என்றும், அங்கு இருப்பது போல இந்தியாவில் பந்தயம் கட்டி சூதாடுவது சட்டபூர்வமானது என்று நினைத்ததாகவும் அவர் டெல்லி காவல் துறையிடம் கூறியிருக்கிறார். ராஜ் குந்த்ரா மீதும் குற்றங்கள் நிரூபணம் ஆகியிருப்பதாகவும், அவற்றை மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கமிட்டி அறிக்கை கூறுகிறது.

ராஜஸ்தான் அணியில் விளையாடிய அஜித் சாண்டிலியா மே 5, 2013 அன்று பூனே அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் தான பந்து வீசிய இரண்டாவது ஓவரில் 14 ரன்கள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு அதை செய்திருக்கிறார். அதற்காக ரூ 20 லட்சம் பேரம் பேசப்பட்டிருக்கிறது.

மே 9, 2013 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த் ஒரு ஓவரில் 14 ரன்கள் விட்டுக் கொடுப்பதாக  சூதாட்ட தரகர்களுடன் சொல்லி விட்டு அதை செய்திருக்கிறார்.

மே 15, 2013 அன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அஜித் சாண்டிலியாவுடன் திட்டம் தீட்டி அங்கித் சவான் ஒரு ஓவரில் 12 ரன்கள் விட்டுக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்கள், ரன் ரேட், சிக்சர், செஞ்சுரி என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் போது, மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் தமக்கு வரவிருக்கும் சூதாட்ட பணத்தை கணக்கு போட்டுக் கொண்டு விளையாடியிருக்கின்றனர்.

இந்த கிரிக்கெட் வீரர்களைத் தவிர முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய வீரர் அமித் சிங் சூதாடுவதற்கு இடைத்தரகராக இருந்ததாகவும், ராஜஸ்தான் அணி வீரர் ஹர்மீத் சிங், சித்தார்த் திரிவேதி ஆகியோர் சூதாடிகள் தம்மை அணுகியதை நிர்வாகத்திடம் சொல்லத் தவறியதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முட்கல் கமிட்டியின் விசாரணையை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்பதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசியின் நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த ஊழல்கள் தொடர்பான விசாரணை விபரங்களை முட்கல் கமிட்டியிடம் கொடுக்காமல் ஐசிசியின் ஊழல்  ஒழிப்புப் பிரிவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவும் திட்டமிட்டு இழுத்தடித்து நாடகமாடியிருக்கின்றன. கிரிக்கெட்டில் மோசடிகளை தடுப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், பன்னாட்டு கிரிக்கெட் குழுமமும் பின்பற்றும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று குழு கருதுகிறது.

சரத்பவார் தலைவராக இருக்கும் போது லலித் மோடியின் தூண்டுதலின்படி பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணிகளை வாங்குவதை அனுமதிக்கும்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளது. அணி உரிமையாளர்களே, கிரிக்கெட் வாரிய அலுவலர்களாகவும் இருப்பது சூதாட்டம், போட்டிகளை முன்கூட்டியே தீர்மானித்து விளையாடுவது போன்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முடக்கி விடுகின்றன என்று ஊரறிந்து உண்மையை இந்த கமிட்டியும் தரவுகளின் அடிப்படையில் வந்தடைந்திருக்கிறது.

இருப்பினும், முட்கல் கமிட்டியும் ஐபிஎல் என்ற வணிக சூதாட்டத்தின் வரம்புகளுக்குள் நின்றே தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதாவது, கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்க டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லட்சுமணன், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே போன்ற மூத்த புனிதமான வீரர்கள் இளைய வீரர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்க வேண்டும் என்றும் சூதாடுதல் பற்றி காட்டிக் கொடுப்பவர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருந்து அவற்றை விசாரிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் பல விளையாட்டு வீரர்களுக்கு பலன் அளித்துள்ள நல்ல வடிவம் என்பதால் ஐபிஎல் ஒரு சுயேச்சையான வணிக அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

அப்படி இளம் வீரர்களுக்கு மூத்த புனிதர்கள் வழிகாட்டும் போது,  “அண்ணே நீங்க விளம்பரங்கள்ல நடிச்சி, சட்டைல விளம்பரம் போட்டுகிட்டு கோடீஸ்வரன் ஆகிட்டீங்க. எங்களுக்கெல்லாம் இதுதான் ஒரே வாய்ப்பு” என்று கேட்டால் அவர்களது போதனை அத்தோடு முடங்கி விடும். ஐபிஎல் சுயேச்சையாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் வாரியத்தோடு இருந்தாலும் சரி, மேலும் மேலும் ரசிகர்களை மொட்டை அடிக்க வேண்டும் என்று அடங்காத தாகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த டிராகுலாவின் குருதி தாகம் அடங்கி விடப் போவதில்லை.

இதனால்தான் இப்படி மோசடி, சூதாட்டமாக நடைபெறும் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கலாம் என்றும், அப்படி சட்டபூர்வமாக்கினால் இவற்றை முறைப்படுத்தலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் முட்கல் கமிட்டியிடம் கூறியிருப்பதை தனது பரிந்துரைகளில் கமிட்டி சேர்த்திருக்கிறது. சாட்சிக்காரனிடம் விழுவதை விட சண்டைக்காரனிடமே விழுவது மேல் என்பது கமிட்டியின் கருத்து போலும். இறுதியில் கிரிக்கெட் எனும் விளையாட்டு லாட்டரி சூதாட்டத்தை விட கேடு கெட்ட பெட்டிங் எனும் சூதாட்டத்தின் மூலதனத்தை வைத்து கல்லா கட்டும் விளையாட்டாக மாறிவிட்டது. இதனால் கள்ள சந்தையில் புழங்கும் பல ஆயிரம் கோடிபணத்தை இனி கிரிக்கெட் அணி முதலாளிகள் சட்டப்பூர்வமாகவே திரட்டமுடியும்.

இந்த வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் மார்ச் 7-ம் தேதி தொடரும். ஆனால், முட்கல் கமிட்டி அறிக்கையில் சொல்லியிருப்பவற்றை பொருட்படுத்தாமல் பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் எந்த தடையும் இன்றி நடக்கலாம் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. விசாரணை, தீர்வுகள், பரிந்துரைகள் என்ற நாங்கள் ஒரு புறம் பேசிக் கொண்டிருப்போம். ஆனால், முதலாளிகள் தமது லாப வேட்டையையும், சூதாட்ட கொள்ளையையும் தொடர்வதற்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தப் போவதில்லை என்று நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

அப்துல்

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க