Thursday, July 3, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நல்ல சமாரியன் திருட்டுக் கல்லூரிக்கு எதிராக புமாஇமு போராட்டம்

நல்ல சமாரியன் திருட்டுக் கல்லூரிக்கு எதிராக புமாஇமு போராட்டம்

-

அரசு அங்கீகாரம் பெறாமலேயே போலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம். புதுக்கோட்டை – நாசரேத் : நல்ல சமாரியன் கல்வியியல் கல்லூரிக்கு எதிரான மாணவர் போராட்டங்கள்

நல்ல சமாரியன் கல்லூரி விளம்பரம்
நல்ல சமாரியன் கல்லூரி மாணவர் சேர்க்கை விளம்பரம்

டந்த அக்டோபர் மாதம் (2013) நல்ல சமாரியன் கல்வியியல் கல்லூரி அங்கீகாரம் பெறாமலேயே திருட்டுத்தனமாக நூறு மாணவர்களை சேர்த்தது. போலியாக பத்திரிக்கைகளில் விளம்பரம், துண்டறிக்கை, இணையதள விளம்பரம் என விளம்பரப்படுத்தி மாணவர்களிடம் மோசடியாக ரூ 10,000 முதல் ரூ 50,000 வரை, எந்த மாணவரிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அந்தளவு பணத்தை பிடிங்கியுள்ளது. குறைந்த கட்டணம் மற்றும் கடைசி ஒரு வாய்ப்பு என மாணவர்கள் தங்களின் எதிர்காலம் கருதி கல்லூரி நிறுவனம் கேட்கும் பணத்தை இரவோடு இரவாக கொடுத்துள்ளனர். விடுதி கட்டணம் தனியாக வசூல் செய்துள்ளனர். இரண்டு மாதங்கள் ஆன பிறகும் எந்தவிதமான சீருடை, அடையாள அட்டை, புத்தகங்கள் என எதுவும் கொடுக்கவில்லை.

மாணவர்கள் தங்களுக்கு எதுவுமே தராத பட்சத்தில் நிறுவனத்தை பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் மரிய சூசை காலமானார். பிறகு இவரது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் கல்லூரி நிறுவனத்தை நடத்தாமல் கைவிடப் போவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்தனர். பிறகு தான் அங்கீகாரம் வாங்காமலேயே கல்லூரி நடத்தியது பற்றி மாணவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், “இதற்கெதிராக போராட வேண்டும் அப்பதான் நாம் இந்த ஆண்டு தேர்வு எழுத முடியும். இல்லையென்றால் மீண்டும் ஒரு வருடம் படிக்க வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டும்” மற்றும் தமிழக அரசு TET தேர்வு நடத்துவதில் அதிக மாணவர்கள் எழுதுவதால் இதன் விதிமுறையில் அதாவது பி.எட் படிப்பை விட எம். பில் படிப்பு மட்டும் தகுதி தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுத்தால் மேலும் 2 ஆண்டு படித்து தேர்வு எழுத வேண்டும். வேலை கிடைப்பதும் குதிரை கொம்பாக உள்ளது” என்ற தனது எதிர்காலத்தை பற்றி அஞ்சினர்.

வசதி வாய்ப்பு உள்ள மாணவர்கள் சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தங்களது நம்பிக்கையை கைவிடாமல் ஜனவரி 31ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்பு 50 மாணவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளிருப்பு போராட்டமாக தனது போராட்டத்தை செய்ய ஆரம்பித்தனர். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பு.மா.இ.மு. சார்பாக  கல்லூரியை சுற்றி உள்ள ஊர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

இதை பார்த்த குன்னத்தூர் பஞ்சாயத்து தலைவர் (அதிமுக) பு.மா.இ.மு. செயலாளருக்கு போன் செய்து, “இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்” என நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசினார். அதற்கு பு.மா.இ.மு. செயலாளர், “நீங்கள் நினைப்பது மாதிரியான அமைப்பு நாங்கள் இல்லை. உங்களால் முடிந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவும் நிர்வாகத்தை தண்டிக்கவும் நடவடிக்கை எடுங்க. இல்லையென்றால் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” எனக்கூறி அவர் முகத்தில் கரியை பூசினார். ஒருவார காலம் ஆன நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை உணர்ந்த மாணவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆவன செய்யுமாறு கோரி 11.02.14 அன்று மனு கொடுக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் சுமார் 40 பேர் தமது கோரிக்கைகளை முழக்கமிட்டபடி கொண்டு ஊர்வலமாக சென்றனர். அலுவலக வாயிலில் சுமார் 15 நிமிடம் முழக்கமிட்டு மாணவர்களின் கோரிக்கைகளை பொது மக்களுக்கு விளக்கி பேசினர்.

விஷயமறிந்து பறந்து வந்த போலீஸ் அதிகாரிகள், “அனுமதி வாங்காமல் முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து கலெக்டர் ஆபிசில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது. இது சட்ட விரோதம்” என பேசினர்.

புமாஇமு போஸ்டர்“கோரிக்கைகளை கூறி முழக்கமிட்டு வருவது எங்கள் உரிமை” என்றும்,  “கலெக்டரிடம் மனு கொடுக்கத்தான் வந்தோம். ஆர்ப்பாட்டம் செய்யவில்லை” என்றும் மாணவர்கள் கூறினர். “மோசடி செய்த கல்லூரி முதலாளிகளையும், புரோக்கர் செந்தில் மற்றும் அந்தோணி போன்றவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத நடவடிக்கை எடுங்கள்” என நியாயத்தை பேசியும் எதையும் உணராத எருமைத்தோல் போன்ற அதிகாரிகள் மற்றும் போலீசு மாணவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேனில் தள்ளி கைது செய்தது. அரசின் கோர முகத்தையும் அடக்குமுறையையும் மக்கள் உணர்ந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மாணவர்களை கைது செய்யும் போது கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பற்றிய கூட்டத்தில் இருந்த மாவட்ட நீதிபதிகள் வாயிலில் வந்து காட்டுமிராண்டித்தனமாக போலீஸ் நடந்து கொண்டதை வேடிக்கை பார்த்து கொண்டுதான் சென்றனர். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை வந்து கேட்காமல் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தேர்தல் பணிகள் தான் முக்கியமானது எனக்கூறி வந்த மாணவர்களை கைது செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் உதவியாளர், “இந்த மாவட்டத்தில் வராது. புதுக்கோட்டையிலே போய் அதிகாரிகளிடம் கேளுங்கள்” என திமிராக பேசினார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.புமாதிமு தோழர்கள் மாவட்ட செயலாளர் செழியன் மற்றும் ஓவியா, கர்ணா, முத்துக்குமார் என மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களின் உரிமையையும், போராட்டத்தின் நியாயத்தையும் விளக்கி பேசினர்.  ஒவ்வொரு நேரத்திலும் தோழர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை கற்றுக் கொண்ட  மாணவர்கள் நம்பிக்கை அதிகரித்து, போராட நம்பிக்கை வளர்ந்தது.

விஷயம் அறிந்த மாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்று இரவே கல்லூரி மாணவர் ஒருவருக்கு போன் செய்து, “கோரிக்கை சரியானது தான், புகார் கொடுங்கள். நான் உடனே அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை தேர்வு எழுத வழி வகை செய்கிறேன்” என பேசினார்.

ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் யாரும் கண்டு கொள்ளாத நிலையில் இன்று தங்களை தேடி போலீஸ் பேசியது மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த கட்ட போராட்டத்திற்கு மாணவர்களுடன் இணைந்து பு.மா.இ.மு. சார்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோரிக்கை மனுக்கள், பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பு.மா.இ.மு. – திருச்சி
போன் : 9943176246