Wednesday, July 28, 2021
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் தில்லைக் கோவில் மீட்பு மாநாடு : உரைகள் , தீர்மானங்கள் , படங்கள்

தில்லைக் கோவில் மீட்பு மாநாடு : உரைகள் , தீர்மானங்கள் , படங்கள்

-

16-2-2014 அன்று ஞாயிறு காலை 9.30 மணிக்கு சிதம்பரம் G.M. வாண்டையார் மண்டபம் நந்தனார் அரங்கத்தில் மாநாடு தொடங்கியது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி-கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளின் புரட்சிகர அமைப்புகள் இணைந்து இந்த எழுச்சிமிகு மாநாட்டை நடத்தின. கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே மாநாட்டுப் பந்தலின் பெரும்பகுதி புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மற்றும் சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வந்திருந்த பெருந்திரளான மக்களால் நிறைந்திருந்தது. தொடர்ந்து அலையலையாக வந்துசேர்ந்த கூட்டத்தைச் சமாளிக்க அதிக இருக்கைகள் கொண்டு வரப் பட்டன. மாநாட்டிற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை வரவேற்ற அவர், நீதிமன்றங்களுக்கு வெளியில்தான் உழைக்கும் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி ஆவேசம் மிக்கதும், உடனடிச் செயல்பாட்டைக் கோருவதுமானதொரு தலைமை உரையினை நிகழ்த்தினார். அவர் பேசும்போது :

சிதம்பரம் மாநாடு
தில்லைக் கோவில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு

“இந்தத் தீர்ப்பு நாங்கள் எதிர்பார்க்காத ஒன்றல்ல. பெரியாரே அன்று அரசியல் அமைப்புச் சட்டம், குறிப்பாக அதன் பிரிவு 26, நமக்கு எதிரானது, அது பார்ப்பனப் பெருச்சாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு பல்வேறு பொந்துகளை வைத்திருக்கிறது என்று சொல்லி அதனை எரித்தார். மேலும் சாதி ஒழிப்பு என்பதையும் அதில் சேர்க்க வேண்டும் என்று சொன்னார். சட்டப் புத்தகங்கள், நடைமுறைகள் என்று எதையும் பார்க்காமல் இந்தத் தீர்ப்பினை கொடுத்துள்ளனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்! இதில் நாம் வெற்றி பெற்றிருந்தால் ஒருவேளை வெற்றி விழாவோடு இது முடிந்திருக்கும். இப்போது தீட்சிதப் பார்ப்பனர்களை அங்கிருந்து முற்றிலும் வெளியேற்றும் போராட்டத்தை நாம் தொடரவிருக்கிறோம்.

ஆனால் இந்துக்களிடம் எல்லாக் கோவில்களையும் ஒப்படைக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள் பா.ஜ.க. பார்ப்பனர்கள். அப்படியென்றால், “தில்லைக் கோவிலை சூத்திர பஞ்சமர்களிடம் கொடு! அவர்களும் இந்துக்கள்” என்றுதானே சொல்லுகிறாய்? தீட்சிதர்கள் கோவிலுக்குள் மணியாட்டும் வேலையைப் பார்த்தால், அதற்குக் கூலியை அவர்கள் கொடுப்பார்கள்!

தோழர் ராஜு
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தமிழ் மக்கள் இசைவிழா, பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு என்று பல்வேறு புரட்சிகர போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். தில்லைக் கோவில் பிரச்சனையில் சட்டப் போராட்டத்தையும் நடத்தி விட்டோம். இப்போது சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இதற்குத் தீர்வு காண முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்பு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இனி மக்கள் மன்றத்தில்தான் வழக்கு நடத்த வேண்டும்! முதலில் அங்கே அகற்றப்பட்ட நந்தனாரின் சிலையை வைப்போம்!” என்றார்.

மேலும், “தீட்சிதர்கள் சட்டத்தையும், தீர்ப்புகளையும் என்றைக்கும் மதித்ததில்லை. தமிழ் பாடும் அரசாணை பெற்ற பிறகும் சாமியார் தீட்சிதர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் கோவில் உள்ளே ஆறுமுகசாமி உயிர் பிரியுமானால், கோவிலுக்கு வெளியே எத்தனை தீட்சிதர்கள் உயிர்போகும் என தெரியாது என்ற நிலையை மக்கள் மத்தியில் நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதனால்தான் ஆறுமுகசாமி இன்னும் உயிரோடு இருக்கிறார். இந்த மாநாடு தில்லைக் கோவிலை மீட்கவும், நந்தன் சிலையை மீண்டும் நிறுவவும் அடிப்படையாக அமையும்” என முடித்தார்.

V.V.சாமிநாதன்
முன்னாள் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் V.V.சாமிநாதன்

மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய 88 வயதான முன்னாள் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் V.V.சாமிநாதன் அவர்கள் பேசுகையில்:

“உச்சநீதி மன்றம் ஓர் அநீதியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால் அப்படி அவசியமில்லை. ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று நக்கீரன் பாண்டியன் அவையிலேயே எழுந்து சொன்னான், அதுவும் அந்த சிவனுக்கு எதிராகவே சொன்னான்! அப்படிப்பட்ட தமிழ் மண்ணில் நீதிமன்றத் தீர்ப்புகளை அப்படியே எப்படி ஏற்க முடியும்? தேவாரம் பாடப்பட்ட பிறகுதான் தில்லைக் கோவிலைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். குமரகுருபரர் மாரிமுத்தாப் பிள்ளை என்று பலரும் தமிழில் பாடியதாலேயேதான் நடராசன் பிரசித்தி பெற்றான். சமஸ்கிருத மொழிக்கு இங்கு எப்போதுமே இடம் இல்லை. மகுடாகமப் படிதான் இங்கு பூசை செய்யப் படவேண்டும். அதற்கு முதலில் தீட்சிதர்கள் வெளியேற வேண்டும். இவர்கள் என்றுமே சட்டங்களை மதித்ததில்லை. நாங்களும் எல்லாப் போருக்கும் தயாராகத்தான் இருக்கிறோம். சொற்போர் என்றாலும் சரி மற்போர் என்றாலும் சரி! அரசு தனிச்சட்டத்தின் மூலம் இந்தக் கோவிலை தனது கட்டுப்பாட்டில் எடுக்க இந்த மாநாடு ஒரு முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

மதியழகன்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன்

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன் பேசும்போது :

“தில்லைக் கோவிலை மீட்க தமிழக அரசு தனிச் சட்டம் ஏற்றும் வகையில் போராடுவதுதான் ஒரே வழி. இல்லையென்றால் கோவிலின் நிர்வாக முறைகேடுகளைச் சீர்படுத்தி மீண்டும் தீட்சிதர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றுதான் இவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தங்களுக்குச் சாதகமாகப் பெற்றுக் கொள்ளுவார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்படித்தான் நாங்களும் போராடினோம். சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவவும் தொடர்ந்து பராமரிக்கவும் அரசுதான் பெருமளவு நிதி வழங்கியுள்ளது. அதனை ஒருசில தனிநபர்கள் அபகரித்துக்கொள்ள விட முடியாது என்று நாங்கள் போராடியதை அடுத்து அரசு தனிச்சட்டம் ஏற்றி சென்ற வருடம் பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதே நிலை தில்லைக் கோவிலுக்கும் பொருந்தும். கேதார்நாத் பத்ரிநாத் என்று எல்லா இடங்களிலும் நாமே தொட்டு பூசை செய்யலாம். இங்கு மட்டும் அப்படி என்ன புனிதம்? ஒரு சிறிய கிராமப்புறக் கோவில் என்றாலே அறநிலையத் துறை எடுத்துக்கொள்ளும். தில்லைக் கோவிலின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று போராடித்தான் இதற்குத் தீர்வு காண முடியும்.” என்றார்.

மு.சொக்கப்பன்
திருவண்ணாமலை சைவசமய அர்ச்சகர் பயிற்சி நிலையத்தின் தலைமை ஆசிரியர் புலவர் மு.சொக்கப்பன்

அவரைத் தொடர்ந்து, திருவண்ணாமலை சைவசமய அர்ச்சகர் பயிற்சி நிலையத்தின் தலைமை ஆசிரியர் புலவர் மு.சொக்கப்பன் கோவில்களில் பார்ப்பனர்கள் அடிக்கும் கொட்டத்தையும், மக்களின் மூடத்தனமான பக்தியை பார்ப்பனர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தான் ஒரு மீனவ சமூகத்தில் பிறந்த காரணத்தால் பல இடங்களில் அவமானப் படுத்தப்பட்டதையும் தனது மாநாட்டு வாழ்த்துரையில் உணர்ச்சிப்பூர்வமாக விளக்கிப் பேசினார். திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோவில்களில் பார்ப்பனர்களின் அதிகாரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவர் விவரித்ததோடு, அச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் இவர்களைவிட நன்றாக ஆகமங்களைக் கற்றவர்கள் என்பதையும் தான் தலைமை ஆசிரியராக ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களையும் விளக்கி சூத்திர பஞ்சமர்கள் கோவிலில் நுழைந்தாலோ தமிழில் அவர்கள் அர்ச்சனை செய்தாலோ உள்ளே இருக்கும் தெய்வம் வெளியே போய்விடும் என்ற பார்ப்பனப் புரட்டுக்குச் சவால் விடுத்தார். மேலும் கூடியிருந்த தோழர்களின் கூட்டம் தோழர் ராஜு தலைமையில் கோவிலை மீட்கும் என்பதைப் புலப்படுத்துவதாகவும் கூறினார்.

தொடர்ந்து தில்லைக் கோவில் மீர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே மாறிவிட்ட சிவனடியார் ஆறுமுகசாமி தனது வாழ்த்துரையில் தமிழ் ஆசிரியர்களையும் அமைப்புகளையும் வன்மையாகச் சாடியதோடு, தோழர் ராஜு தலைமையிலான இந்தப் படை தில்லைக் கோவில் மீட்பைச் சாதிக்கும் என்று தனது நம்பிக்கையையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

சிவனடியார் ஆறுமுகசாமி
சிவனடியார் ஆறுமுகசாமி

“தில்லைக் கோவிலுக்குள்ளே தமிழ் நுழைய முடியவில்லை, தேவார திருவாசகம் பாட முடியவில்லை என்ற சிறு வருத்தம் கூட இல்லாமல் இத்தனை தமிழ் ஆசிரியர்கள் தமிழை வைத்துத்தானே பிழைக்கிறீர்கள்? யாருக்குமே கோபம் வரவில்லையே? பெருமாள் கோவிலில் தமிழ் இருக்கு. 10 அடி தள்ளி இருக்கும் நடராசர் கோவிலில் தமிழுக்குத் தடை என்றால் அதை கேட்க வேண்டாமா?” என சிவனடியார் கேட்டது தமிழின் பெயரால் வயிறு வளர்க்கும் அமைப்புகளுக்கும், ஆசிரியர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் (சிறிதேனும் மனசாட்சி இருந்தால்) உறைத்திருக்க வேண்டும்.

“பதினைந்து ஆயிரம் பென்சன் வாங்கும் தமிழ் ஆசிரியர்கள் பத்தாயிரம் செலவு பண்ணி இரண்டு தீட்சிதர்களை அடிக்கக் கூடாதா? நான் மட்டும்தான் தினமும் பாடுகிறேன். தமிழ் என சொல்பவர்கள் பாட வரமாட்டங்கறாங்க….” என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்தார். இனி நேரடியாக மோதுவதன் மூலமாகத்தான் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியும் என்பதைப் பறைசாற்றுவதாகவே அவர் பேச்சு இருந்தது.

மாநாட்டு உரைகளில் முதலாவதாக மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் ‘போராடிப் பெற்ற வழிபாட்டு உரிமையை பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா?’ என்ற பொருளில் உரையாற்றினார். பெரியாரும் திராவிட இயக்கமும் கோவில் நுழைவு உரிமையைப் பெற நடத்திய பல்வேறு போராட்டங்களை பல்வேறு புத்தகங்களை ஆதாரமாகக் காட்டி விளக்கிய அவர், தில்லைக் கோவிலின் வரலாற்றையும் அங்கு தீட்சிதர்கள் வெறும் மணியாட்டும் பூசாரிகள்தான் என்பதையும் ஆதாரங்களை அடுக்கி விளக்கினார்.

தோழர் வாலாசா வல்லவன்
மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன்

“தில்லைக் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் பார்ப்பனர்களா என்று சந்தேகம் ஏற்படுவதாக இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அந்தச் சந்தேகம் சரிதான், அவர்கள் பார்ப்பனர்கள் அல்ல! 1930-ம் ஆண்டு திராவிடன் பத்திரிக்கையில் இந்தத் தில்லைத் தீட்சிதர்கள் ஒரு ஆட்டைக் கிடுக்குப் பிடிபோட்டு அதன் விரைகளை நசுக்கிக் கொன்று யாகத்தில் போடும் படம் உள்ளது. இவர்களை பல்லவ மன்னன் இரணியவர்மன்தான் தனக்கு ஊழியம் புரிய அழைத்து வந்தான். அப்போது இவர்கள் கேட்டதன் பேரில் தில்லைக் கோவிலில் பூசை செய்யும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தான். மன்னர்களுக்கு முடிசூட்டி இவர்கள் பூசை மட்டுமே செய்தனர்.

இதேபோல பழனி முருகன் கோவிலில் கூட சமீப காலம்வரை பண்டாரம் எனப்படும் பார்ப்பனர் அல்லாதோர்தான் பூசை செய்து வந்தனர். இந்தத் தீட்சிதர்களும் அப்படித்தான். தில்லைக் கோவிலைப் பற்றி மொத்தம் 260 கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் எதிலும் தீட்சிதர்கள் கோவிலின் உரிமையாளர்கள் என்று இல்லை. சோழர்களின் வம்சமான பிச்சாவரம் ஜமீனுக்கு கடைசியாக முடிசூட்டியுள்ளார்கள். அந்த ஜமீன் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் போக அரசு ஜமீன் நிலத்தின் பெரும்பகுதியை ஏலத்தில் விட்டது. பொதுவாக வருமானம் வரவில்லை என்றால் பார்ப்பான் மதிக்க மாட்டான்! அதுபோலவே அதிலிருந்து பிச்சாவரம் ஜமீனுக்கு முடிசூட்டுவதை நிறுத்தி விட்டார்கள். ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’ என்று தமிழில் பழமொழி ஒன்று உண்டு. இவர்களும் தில்லைக் கோவிலுக்குச் சொந்தமான நிலம், நகை, சொத்து என்று எல்லாவற்றையும் விற்றுத் தின்று விட்டு பெரும்பாலான சொத்துக்களை அழித்துவிட்டார்கள்!” என்று பேசிய அவர்,  “தீட்சிதர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்று லண்டன் ப்ரிவீ கோர்ட்டே 1933-ல் கூறியுள்ளது. தீட்சிதர்கள் பனாரசில் இருந்து வந்தவர்கள் என்ற செய்தி அரசு கெசட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்பதை ஆதாரத்துடன் படித்துக்காண்பித்தார்.

“இன்று திராவிடக் கட்சிகளும் பெரியாரிய அமைப்புகளும் பெயரில் மட்டுமே பெரியாரை வைத்திருக்கும் நிலையில், ம.க.இ.க. பெரியாரின் தொடர்ச்சியாக அவரது போராட்டங்களை சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த மாநாட்டில் நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன, எங்கள் கட்சியும் தில்லைக் கோவிலை மீட்க இணைந்து போராட ஆவன செய்வேன். நம்மை இழிவு படுத்திவரும் அந்தத் தீட்சிதர்களை தில்லைக் கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் தோழர் சகாதேவன்
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் சகாதேவன்

அவரை அடுத்து, தில்லைக் கோவிலில் தமிழ் பாடுவதற்கான நீதிமன்றப் போராட்டங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் சகாதேவன் ‘உச்சிக்குடுமி மன்றத் தீர்ப்பும், தில்லைக் கோவில் மீட்பும்’ என்ற தலைப்பில் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் உரையாற்றினார். உரையாற்றினார் என்பதைவிட ஒவ்வொருவரின் அருகிலும் பல ஆண்டுகள் நன்கு பழகிய நண்பர் அமர்ந்து பேசுவதைப் போல் உரையாடினார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நீதிமன்றங்கள் பார்ப்பனப் பெருச்சாளிகளின் சட்டபூர்வப் பொந்துகளாக இருப்பதை தனது உச்சநீதி மன்ற வழக்கு அனுபவத்தின் மூலம் விளக்கிய அவர் சிவப்புப் படைதான் நீதிமன்றத்திற்கு வெளியில் போராடி தில்லைக் கோவிலை மீட்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்:

“உச்சநீதி மன்றத்தில் எல்லோருமே பார்ப்பனர்கள், நீதிபதியும் பார்ப்பான், தீட்சிதர் வக்கீல்களும் பார்ப்பனர்கள், சு.சாமி… அரசு வக்கீல் கூட பார்ப்பான் தான்! மற்றவர்கள் குத்தியதுகூட பரவாயில்லை, ஆனால் தமிழக அரசு வக்கீல் முதுகில் குத்திவிட்டான் என்பதுதான்… ‘அங்கெல்லாம் குத்துவான் என்று தெரியாதா தம்பி, ஏன் போனாய்?’ என்று வழக்கு முடிந்த பிறகு மற்ற வக்கீல்கள் கேட்டார்கள். ‘நான் சட்டை கிழியும் என்று தெரிந்துதான் சண்டைக்குப் போனேன்!’ என்று பதில் சொன்னேன். 2004-ல் நான் வக்கீல் கோட்டைப் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த போது ஆறுமுகசாமி என்னைச் சந்தித்து, ‘என்னுடைய காலத்திலேயே தில்லைக் கோவிலுக்குள் பாட வழிபண்ணிக் கொடுங்கள்’ என்று சொன்னார். ராஜு அண்ணன் சொன்னதன் பேரில் நானும் இது என்ன சிறிய விஷயம்தானே என்று வழக்குத் தொடர்ந்து விட்டேன். பிறகுதான் தெரிகிறது அவன் எவ்வளவு பெரிய ஆள் என்று! பார்ப்பான் ஏதோ சாதாரணமாக இருப்பான் என்று பார்த்தால், நன்றாகத் தின்று கொழுத்திருக்கிறான், அதுவும் நீங்களெல்லாம் கொடுத்த நெய்யிலும் பருப்பிலும்தான்”

“உள்ளே தமிழ் நுழையக் கூடாது என்கிறானே தமிழன் நுழையக் கூடாது என்கிறானே என்று உயர்நீதி மன்றத்தில் ஒரு தலித் நீதிபதியிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். அவரும் உள்ளே பாட ஆவண செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால் கீழ் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தீட்சிதன் கொடுத்த மனுவை அப்படியே ஏற்று ஆறுமுக சாமி பாடுவதற்குத் தடை விதித்தார், அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்தான். நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் தமிழ் பாடினோம். அதற்கு பிறகு கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை கொண்டு வந்தோம். அதில்தான் பானுமதி என்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருமையானதொரு தீர்ப்பினை வழங்கினார்.”

“உச்சநீதி மன்றத்தில் கூட நாம் இருந்ததால்தான் இவ்வளவுநாள் வழக்கு நடந்தது. இல்லையென்றால் முதல்நாளே முடித்திருப்பார்கள்! அங்கு ஒரு பெரிய குறை, இந்தச் சிவப்புப் படை டெல்லியில் இல்லை!” என்றார். மேலும், 1878-ம் ஆண்டு தீட்சிதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் தில்லைக் கோவிலில் தீட்சிதர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று 1890-ல் ஆவணமாக வெளியிடப்பட்ட முத்துசாமி அய்யர் ஷெப்பர்ட் வழங்கிய தீர்ப்பு, 1939-ல் மீண்டும் தீட்சிதர்களின் வாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிராகரிக்கப் பட்டது என்று தில்லைக் கோவில் மீது மக்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டிய தீர்ப்புகள் எதிர் வழக்குகள் ஆகியவற்றின் வரலாற்றை அவர் விளக்கிப் பேசினார்.

வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்

உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்குத் தொடங்கிய மாலை அமர்வில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் ‘கோவில்கள் மடங்கள் உள்ளிட்ட எல்லா மத நிறுவனங்களின் சொத்துக்களையும் அரசுடமையாக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தில்லைக் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பெருமளவு சொத்துக்களையும், நகைகளையும் விலைமதிப்பு மிக்க செல்வங்களையும் இலட்சக் கணக்கான கோடி மதிப்பில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விளக்கிய அவர், அவை அனைத்தும் மக்களது உழைப்பினைச் சுரண்டிச் சேர்க்கப்பட்ட சொத்துக்களே என்றும் அவற்றை மீண்டும் மக்கள் நலனுக்குப் பயன்படும் வகையில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்:

“எல்லாவற்றிற்கும் உச்சநீதி மன்றம்தான் முடிவா? மக்கள் நீதிமன்றம் தான் முடிவு என்பதன் சாட்சி இந்தக் கூட்டம்! அம்பேத்கர் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பற்றிக் கூறும்போது ‘I am bound by the judgment, but not bound to respect the same’ என்றார். அதாவது நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்பதல்ல. தேர்தல் மாநாடுகள் ஓட்டுப் பொறுக்க. ஆனால் பார்ப்பனியத்திற்கு எதிரான நமது மாநாடு ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்காக.”

“மத எல்லைக்குள்ளும் தேசிய எல்லைக்குள்ளும் அம்பேத்கரும் பெரியாரும் நடத்திய இந்தப் போராட்டம் இப்பொழுது மார்க்சிய எல்லைக்குள் வந்துள்ளது. கோவில்கள் அரசர்களின் காலத்தில் அவர்களுக்குக் கீழான அதிகார மையங்களாகச் செயல்பட்டன. ராஜராஜன் காலத்தில் நடைபெற்றது முழுக்க முழுக்க பார்ப்பனியத்தின் ஆட்சி. நிலங்கள் செல்வம் என்று வைத்திருந்த கோவில்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து மக்களைச் சுரண்டிக் கொழுத்தன. பனிரெண்டு சதவீத வட்டி கட்ட முடியாமல் பலர் தங்கள் குடும்பப் பெண்களை விற்ற கதை ஏராளம் உண்டு. ராஜராஜனின் ஆட்சியில் தான் முதன்முதலில் ‘ராஜகுரு’ என்ற பதவியளித்து பார்ப்பனர்களை அவன் வாழ வைத்தான்.”

மாநாட்டில் பங்கேற்றவர்கள்
மாநாட்டில் பங்கேற்றவர்கள்

“இந்தக் கோவில்கள் எல்லாம் மன்னர்கள் கட்டிய கோவில்கள் அல்ல. அவை சாதாரண உழைக்கும் மக்களும் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட அப்பாவிகளும் கட்டியவை. பல்வேறு மன்னர்கள் தங்களது செல்வங்களைக் கொட்டிக் கொடுத்துள்ளனர். அவையெல்லாம் மக்களின் உழைப்பில் வந்த மக்கள் சொத்துக்கள் தான். விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது பற்றிக் கேட்டதற்கு மன்மோகன் சிங் அதனைக் குறைக்க தன் கையில் மந்திரக் கோல் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் மத நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை மீட்டாலே போதும், இந்த நாட்டின் பெரும் பணக்காரர்களின் செல்வத்திற்கு இணையான செல்வம் கிடைக்கும்! சமீபத்தில் திறக்கப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் மட்டும் இதுவரை கண்டறியப் பட்ட பொருட்களின் மதிப்பு பத்து லட்சம் கோடிக்கு மேல். இது அம்பானியின் சொத்து மதிப்பைவிட அதிகம். அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து மதிப்பு மட்டும் இலட்சம் கோடிக்கு மேல், இது மிட்டலின் சொத்து மதிப்பைவிட அதிகம். இதுபோலவே பல கோவில்களில் இந்த நாட்டின் பெரும் முதலாளிகள் வைத்திருக்கும் பணத்திற்கும் கூடுதலான சொத்து உள்ளது.

இந்துக் கோவில்கள் மற்றும் மடங்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கச் சொன்னால் கிறித்துவர்களும் முசுலீம் அமைப்புகளும் சொத்து வைத்துள்ளனரே என்கிறார்கள். நாங்கள் மக்கள் உடமையாக்க வேண்டுமென்று சொல்லுவது எல்லா மத நிறுவனங்களின் சொத்துக்களையும் சேர்த்துதான். வக்பு வாரியம் உள்ளிட்ட முசுலீம் அமைப்புகளும் பல இலட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களை தங்கள் வசம் வைத்துள்ளன. அவற்றையும் சேர்த்துதான் மீட்க வேண்டியுள்ளது. அம்பேத்கரும் பெரியாரும் நடத்திய போராட்டங்கள் சீர்திருத்தங்களைக் கோருபவையாகவே இருந்தன. ஆனால் நாம் நடத்துவது ஒட்டுமொத்த அமைப்பையே மாற்றுவதற்கான போராட்டம். இதில் சமய நிறுவனங்களின் சொத்துக்களை மக்கள் உடமையாக்கப் போராடுவோம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மதச் சார்பற்றதும் அல்ல, இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடும் அல்ல. இங்கு கோவில்களின் கருவறையிலேயே தீண்டாமை உள்ளது. அதைத் தடுக்கப் போனால் தனிநபர் உரிமையைக் கெடுப்பதாகக் கூறுகிறது நீதிமன்றம். தொடர்ந்து போராடி நமது வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்” என்றார்.

தோழர் மருதையன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர் மருதையன்

‘முதல் ஆலய நுழைவுப் போராளி நந்தனாரும் சாதித் தீண்டாமை ஒழிப்பும்’ என்ற பொருளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர் மருதையன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். அவர் தனது உரையில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தக் காலத்திலும் மாறாமல் தொடர்ந்து வருவதை ஆதாரங்களோடு விளக்கி, முதல் ஆலய நுழைவுப் போராளியான நந்தனாரின் அகற்றப்பட்ட சிலையை தில்லைக் கோவிலில் நிறுவி நடராசன் கோவிலை ‘நந்தனார் கோவில்’ என்று மாற்றுவதுதான் நமது உடனடியான முதல் இலக்காக இருக்கும் என்று புரட்சிகர அமைப்புகளின் போராட்டப் பாதைக்கு அறைகூவல் விடுத்தார். அவர் தனது உரையில் எல்லா மத நிறுவனங்களுமே பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவிகளாக இருந்து அவர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் வைத்து ஏகபோகமாக வாழ்ந்து வருவதை அம்பலப் படுத்தினார்:

“இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆலய நுழைவுப் போரினை இந்தச் சிதம்பரம் மண்ணில் தன்னந்தனியாக நடத்தியது நந்தனார் தான். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில், பார்ப்பனியக் கொடுங்கோன்மை உச்சத்தில் இருந்த நேரத்தில் நந்தனார் தில்லைக் கோவிலுக்குள் நுழைந்தார். அதனால்தான் தனது “தீண்டப்படாதோர் யார்”என்னும் புத்தகத்தை மூன்று பேருக்கு அர்ப்பணித்த அம்பேத்கர் அவர்களுள் முதலாவதாக நந்தனாரைக் குறிப்பிட்டார். நந்தனார் தில்லைக் கோவிலுக்குள் நுழைய வேண்டுமென்று போராடியபோது அவருடன் இருந்தவர்கள் எப்படியெல்லாம் ஏளனம் செய்திருப்பார்கள்? முட்டாள் என்றும் பைத்தியக்காரன் என்றும் ஏசியிருப்பார்கள்! அவற்றையெல்லாம் பொறுத்துத்தான் தனியொருவனாக அந்தப் போரை அன்று நந்தனார் நிகழ்த்தினார். அப்படிப்பட்ட நந்தனார் தொடங்கி, சித்தர்கள், வள்ளலார், பெரியார் என்று மிகப் பெரிய பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகள் வாழ்ந்த இந்த மண்ணில் பிறந்தோம் என்பதற்காக சற்றே கர்வம் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அதே சமயத்தில், இன்று இருக்கும் நிலையைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அன்று தில்லைக் கோவிலுக்குள் நுழைந்த நந்தனாரை எரித்துக் கொன்றனர் தீட்சிதர்கள். இன்று ஆறுமுக சாமியின் கையை உடைத்து வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகளில் என்ன மாறியிருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றும் மாறிவிடவில்லை, இன்று ஆறுமுக சாமி உயிரோடு வெளியில் வந்தார் என்பதைத் தவிர.

நந்தனார் அரங்கம்
நந்தனார் அரங்கம்

இப்போது வந்திருக்கும் இந்தத் தீர்ப்பினை எப்படிப் பார்ப்பது? இதில் போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையமோ அல்லது ம.க.இ.க.வோ வருத்தப்படத் தேவையில்லை. எந்த ஒரு போராட்டத்திற்கும் வெற்றியை முன் நிபந்தனையாக வைத்துக் கொண்டு போராட முடியாது. ஆனால் ‘என்ன தோழர் விட்டுட்டிங்க போல?’ என்று வேடிக்கை பார்க்கும் மனநிலையில் கேட்பவர்கள்தான் உண்மையில் வெட்கப்பட வேண்டும். இங்கு பல தமிழின வாத அமைப்புகள் கச்சத் தீவை மீட்பேன், தனி ஈழம் வாங்கித் தருவேன் என்று வாய்ச் சவடால் அடித்து வருகின்றன. தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் சிதம்பரம் நடராசன் கோவிலை மீட்கத் துப்பில்லாத இவர்கள் எங்கே தனி ஈழம் வாங்குவது? அங்கே உச்சநீதி மன்றத்தில் சுப்பிரமணிய சாமி தமிழ்நாட்டில் ஏதோ ஒரு காட்டாட்சி நடந்து, அதில் தமிழ் அசுரர்களின் பிடியில் பார்ப்பன தேவர்களெல்லாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக ஒரு சித்திரத்தை உருவாக்குகிறான். பா.ஜ.க.வின் எச்.ராஜா ராமரைச் செருப்பால் அடித்தான் பெரியார், அவனை அப்போதே திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறான். திருமா வளவனையும் கூட அவன் இவன் என்று பேசி இருக்கிறான். ஆனால் யாருக்கும் கோபம் வரவில்லை.

இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா கேட்ட நீதிபதியே வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்ட யோக்கியர்கள். தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கு இவர்களெல்லாம் கூட்டுச் சேர்ந்து சவால் விடுத்திருக்கிறார்கள். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு பேசிய சுப்பிரமணிய சாமி தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து மீட்பதுதான் தனது அடுத்த பணி என்று சொன்னான். அது நடக்காது என்றா நினைக்கிறீர்கள்? இப்படியே இருந்தால் அது நிச்சயம் நடக்கும்! இது வெறும் தில்லைக் கோவிலுக்கு மட்டும் எதிரான தீர்ப்பல்ல. இது இனி வரவிருக்கும் பார்ப்பன பயங்கரவாத அபாயத்தின் அறிகுறிதான்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

இந்துக் கோவில்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கப் போராடி பார்ப்பனியக் கொடுங்கோன்மை மூலம் அபகரித்துச் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வேண்டும். பல இந்துக் கோவில்கள் பௌத்தக் கோவில்களாகவும் சமண ஆலயங்களாகவும் இருந்திருக்கின்றன. திருமங்கை ஆழ்வார் திருடிக் கொண்டுபோன தங்கத்தில்தான் திருவரங்கம் கோவிலுக்குத் திருப்பணிகள் செய்தார். மேலும் இச்செய்திகளை தல புராணங்களில் அவர்களே பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இதில் முசுலீம் மதச் சொத்துக்களும் கிறித்துவ நிறுவனங்களின் சொத்துக்களும் சேர்த்துத்தான் பறிமுதல் செய்யப்பட வேண்டும். சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலோ, அதற்காகப் போராட வேண்டும் என்பதிலோ, கல்வி வேலைவாய்ப்பு முதலானவற்றில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிறுபான்மை மக்களின் பெயரைச் சொல்லி தங்களின் சொந்த நலன்களைப் பெருக்கிக் கொள்ளும் மேட்டுக்குடி முசுலீம் மற்றும் கிருத்துவர்களை எப்படி அனுமதிக்க முடியும்? ஆயிரக் கணக்கான அப்பாவி முசுலீம் மக்களைக் கொன்ற மோடியுடன் சேர்ந்து நின்று குல்லாப் போட்டுக் கொள்கிறார்கள் மேல்தட்டு முசுலீம் வணிகர்கள். இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் இங்கிருக்கும் இசுலாமிய கட்சிகள். இவர்களை சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் என்று எப்படி அங்கீகரிக்க முடியும்? தலித் கிறித்துவர்கள் ஒடுக்கப் படுவதற்கு எதிராக எதுவும் செய்யாத, கல்வி நிறுவனங்கள் வைத்துக் கொள்ளையடிக்கும் கிறித்துவ மத நிறுவனங்களை எப்படி கிறித்துவ சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் என்று கூற முடியும்? எனவே எல்லா மத நிறுவனங்களின் சொத்துக்களையும் மீட்கப் போராடுவோம்.

மாநாடு முடிந்த பின்இவை எல்லாவற்றிக்கும் முதலாவதாக நந்தனாரின் சிலையை தில்லைக் கோவிலுக்குள் வைப்போம். நடராசன் கோவில் நந்தனார் கோவிலாக மாற பார்ப்பனியத்திற்கு எதிராகத் தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம்” என்று உழைக்கும் மக்கள் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் ஓரணியில் நின்று பார்ப்பனச் சமர் வெல்ல அறைகூவல் விடுத்தார்.

அவரது உரையுடன் மாநாடு பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக நந்தனார் வள்ளலார் பெரியாரின் வாரிசுகளாக நக்சல்பரிப் புரட்சியாளர்கள் நடத்தவிருக்கும் சமரசமற்ற போருக்குக் கட்டியம் கூறி நிறைவுபெற்றது.

மாநாட்டு உரைகளுக்கு இடையில் ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுவினர் முழங்கிய ‘பாடினாரு தமிழிலே ஆறுமுக சாமி, அவர் பாதத்திலே வீழ்ந்தது தீட்சிதன் குடுமி’, ‘உனக்கா எனக்கா, தில்லை உனக்கா எனக்கா’ என்ற இரு பாடல்கள் மற்றும் தஞ்சைக் குழுவினரின் தப்பாட்டம் ஆகிய நிகழ்வுகள் கோவிலை தீட்சிதர்களிடம் இழந்த சோர்வில் இருந்து தட்டி எழுப்பி வீறுகொண்டு போராடும் எழுச்சியைப் பெருக்குவனவாக அமைந்திருந்தன.

காலை அமர்வு நிறைவு பெற்றபோது கூடியிருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் கர ஒலி ஆதரவோடு மாநாட்டுத் தீர்மானங்கள் தோழர் ராஜு அவர்களால் வாசிக்கப் பட்டன.

மாநாட்டு தீர்மானங்கள்

மாநாடு பங்கேற்றவர்கள்1.   சிதம்பரம் நடராசர் கோவிலை  அறநிலையத்துறை கட்டுபாட்டுக்கு கொண்டுவர நூறாண்டுகளாக நடக்கும் வழக்கில், தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு சேர்ந்து, கோயிலை தீட்சிதர்களின் உடைமையாக்குவதற்கு தமிழக அரசு வழி செய்துள்ளது. பொதுக்கோயில் என்று சந்தேகத்திற்கிடமின்றி பல்வேறு தீர்ப்புகளில் நிலைநாட்டப்பட்ட தில்லைக் கோயிலையும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களையும், கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில் அநீதியான முறையில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பார்ப்பனச் சூதுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தீர்ப்பையும், இதனை சாத்தியமாக்கிய தமிழக அரசையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் தனிச்சட்டமொன்று இயற்றுவதன் மூலம் நடராசர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசைக் கோருவதுடன், இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராட எல்லாக் கட்சிகளையும், இயக்கங்களையும் தமிழ் மக்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

2.   சிதம்பரம் நடராசர் கோவிலில் தீண்டாமை வெறியின் காரணமாக தீட்சிதப் பார்ப்பனர்களால் சதித்தனமாக அகற்றப்பட்ட  ஆளுயர நந்தனார் சிலையை அதே இடத்தில் நிறுவவும்,  தீட்சிதர்களால் அடைக்கபட்ட நந்தனார் நுழைந்த தெற்கு வாயில் தீண்டாமைச்சுவரை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

மாநாடு பங்கேற்றவர்கள்3.   சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சொந்தமாக 2571 ஏக்கர் நிலம் உள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்திலேயே குறிப்பிட்டுள்ளது. இது நாள் வரை அந்த நிலங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறித்தோ, அவற்றின்  வருவாய் குறித்தோ தீட்சிதர்கள் முறையாக கணக்கு கொடுத்த தில்லை என்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான மனைகளைத் தங்களது உடைமை போல மோசடி செய்து ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தீட்சிதர்கள் விற்றுள்ளது தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படாமல் உறங்குகின்றன. இத்தகைய தீட்சிதர்களை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், எல்லா தீட்சிதர்களின் சொத்து விபரங்கள் குறித்தும் நேர்மையான நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் எனவும் சொத்துக்களை மீட்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4.   சிதம்பரம் நடராசர் கோவிலில்  1282 கிராம் தங்கம் மற்றும் 2780 கிராம்  வெள்ளி நகைகளைக் காணவில்லை என  நகைமதிப்பீடு செய்த போது கண்டறிந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் தீட்சிதர்கள் மீது இதுவரை கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நகை திருட்டு குற்றத்துக்காக தீட்சிதர்களைக் கைது செய்வதுடன், அவர்களால் களவாடப்பட்ட நகைகளை மீட்கவும் வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5.   சிதம்பரம் கோவிலில் சாதாரண மக்கள் நடராசரை தரிசிக்க வரும்போது தீட்சிதர்கள் கட்டாய கட்டணம் வசூலிக்கின்றனர்.  பணம் கொடுக்க முடியாதவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். மக்களின் வழிபாட்டு உரிமையைத் தங்களது வழிப்பறி உரிமையாக மாற்றிக் கொண்டுள்ள இத்தீட்சிதர்களை உரிய கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தோழர் ராஜு
தோழர் ராஜு

6.   சிதம்பரம் நடராசர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சமஸ்கிருதம் முற்றிலும் தடை செய்யப்பட்டு தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் வழிபாடு தெரியாத அல்லது செய்ய மறுக்கின்ற அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7.   கருவறைத்தீண்டாமை ஒழிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்த தமிழக அரசு திறமையான மூத்த வழக்கறிஞரை நியமித்து தமிழக மக்களின் குரலாக போராடி வெற்றிபெற  வேண்டும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

8.   தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் வருமானங்களையும் கோவில் பராமரிப்பு பணிக்கு போக மீதி தொகையை அந்தந்த ஊர்களில் உள்ள நகராட்சி பள்ளிகள், நகராட்சி மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

9.   கோவில்கள்,மடங்கள் உள்ளிட்ட அனைத்து மத நிறுவனங்களின் சொத்துக்களையும் மக்கள் சொத்தாக மாற்றும் வகையிலும்,  மதநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் எல்லா விதமான சலுகைகளையும் ரத்து செய்யும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அனைத்து மக்களும் போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10. மக்களை மூடர்களாக்கும், புதுச்சாமியார்கள், திடீர் கோவில்கள், அருள்வாக்கு பேர்வழிகள் போன்ற ஆன்மீக வியாபாரிகளை மக்கள் புறக்கணிப்பதுடன், மத நம்பிக்கையின் பெயரால் தொழில் நடத்தும் இத்தகைய காவிக் கிரிமினல்களை சிறையில் தள்ள மக்கள் முன் வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. சிதம்பரம் கோயிலை தமிழ் மக்களிடமிருந்து பறித்து தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு உடைமையாக்குவதிலும், தமிழ் வழிபாட்டுரிமையைத் தடுப்பதிலும் முன் நின்று, வெறியோடு செயல்படும், இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பார்ப்பன பாசிசக் கும்பல் தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் விழிப்புடனிருந்து முறியடிக்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் துணை போகும் தமிழின விரோதிகளை அடையாளம் கண்டு அறவே புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

12.நகை களவு, கோவில் சொத்து மோசடி, கிரிமினல் குற்றங்கள், கோவில் உள்ளே மது, மங்கை, மாமிசம்,என்று உல்லாசமாக திரியும் தீட்சிதர்கள் புனிதர்கள் அல்ல, தீட்சிதர்களில் ஒருவர் தில்லை நடராசன் என்ற மூட நம்பிக்கையில் பாவம், புனிதம், என்ற அறியாமையின் அடிமைத்தனத்திற்கு பலியாகாமல் தீட்சிதர்களின் ஆதிக்க வெறிக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் தயக்கமின்றி சுயமரியாதை உணர்வுடன் சமரசமின்றி போராட வேண்டும் என இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

13.தில்லை நடராசர்கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என கூச்சலிடும் பி.ஜே.பி.சங்பரிவார அமைப்புகளின் பார்ப்பன பாசிச அபாயத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஒருங்கிணைப்பு
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்பு 98423 41583

பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கடலூர் – விழுப்புரம் – புதுச்சேரி

மாநாடு – பொதுக்கூட்டம் முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

  1. நடராசன் கோவிலை நந்தன் கோவிலாக மாற்ற நான் தயாராக உள்ளேன்,அதுமட்டுமின்றி ஆறுமுகசாமி ஆதங்கம் புரிந்துகொண்டேன் அவர் வயதுக்கு மொழியை காத்து நிற்க்கும் அவர் வீரத்திற்கு மதிப்பளித்து தீச்சதர்களை அந்த கோவில் விட்டு வெளியேற்ற நான் முதல் போராளியாக நான் கல்த்தில் இருப்பேன்.வாழ்க போராட்டம் ! வளர்க தில்லையில் தமிழ் முழ்ங்கும் போராட்டம்!!
    வாருங்கள் தமிழர்களே,,, தீட்சதர்களை அடித்து வெளியேற்றுவோம்.

  2. இந்தப் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கு, முதலில் மத நம்பிக்கையுள்ள, பெரும்பான்மை தமிழ்நாட்டு இந்துக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏறப்படுத்தி அவர்களையும் உங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். சிதம்பரத்தை தீட்சிதர்களிடமிருந்து மீட்பதில் உங்களுக்குள்ள உயரிய நோக்கத்துக்கும், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் தொடர்பில்லை, இது தமிழர்களின் மானப் பிரச்சனை, தமிழர்களின் வரலாற்றுச் சின்னத்தைக் காக்கும் போராட்டம் என்பதை விளக்கி, சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரையும் (உலகத்தமிழர்கள் உட்பட) ஒருங்கிணைத்தால் தான், இந்தப் போராட்டம் வெற்றி பெறும். தீட்சிதர்களுக்கு ஆதரவாக முழு இந்தியாவும் உள்ளது. அத்துடன், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அவர்களுக்காக, ஆங்கில இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும்,பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளனர். பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட, அதுவும் அசைக்க முடியாத இந்துக்களாகிய, ஈழத்தமிழர்களின் தமிழீழப் போராட்டத்தை, சுப்பிரமணியம் சுவாமி, சோ ராமசாமி போன்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், தமிழெதிரி மலையாளிகளும் எப்படி, பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்கங்களின் தொடர்ச்சியாக முழு இந்தியாவையும் எண்ண வைத்து, ஈழத்தமிழர்களுக்கெதிராக முழு இந்தியாவையும் திருப்பினார்களோ அதே போல், முழு இந்தியாவையும், தீட்சிதர்களுக்காதரவாகவும், தமிழர்களுக்கெதிராகவும் மாற்றக் கூடிய, பொருளாதார, கல்வி, ஊடக வல்லமை பார்ப்பனர்களிடம் உண்டு. அதனால், தமிழர்கனைவரையும் ஒன்றுபடுத்தாமல், மேற்கொள்ளப்படும் எந்தப் போராட்டத்திலும் பலன் கிடைக்காது. முதலில் சிதம்பரம் கோயில் பிரச்சனையை விளக்கும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற வேண்டும். அத்துடன் உலகத் தமிழர்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  3. \\நகை களவு, கோவில் சொத்து மோசடி, கிரிமினல் குற்றங்கள், கோவில் உள்ளே மது, மங்கை, மாமிசம்,என்று உல்லாசமாக திரியும் தீட்சிதர்கள் புனிதர்கள் அல்ல\\

    அட… கோயிலில் பாட பாப்பான் விட மாட்டேன் என்கிறான்….என்று வழக்கு தொடுத்த உங்களால்..இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஒரு கிரிமினல் கேஸ் கூட போட முடியவில்லையா? (அ) வழக்கை நடத்த ராம் ஜெத்மலானி போன்ற பாப்பான் கிடைக்க வில்லையா? 😀

    அது சரி பெரியார் சொத்தை அரசுடமை ஆக்க எப்பொழுது போராட போகிறீர்கள்???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க