உலகின் மிக விலை மலிவான கார் என்று பீற்றிக்கொள்ளப்பட்ட டாடா நானோவின் உண்மை விலை என்ன தெரியுமா? வாங்குபவரின் உயிர் தான். நானோ மட்டுமின்றி இந்தியாவில் விற்கப்படும் பிரபலமான சிறிய ரக மாருதி ஆல்டோ 800, டாடா நானோ, ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் ஐ-10 மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார்களின் யோக்கியதை என்ன? இந்தக் கார்கள் அனைத்தும் விபத்து சோதனைகளில் தோல்வியடைந்ததாகவும், விபத்து நேர்ந்தால் உயிரை பறிக்கும் மிக ஆபத்தான காயங்களை ஏற்படுத்தும் சாத்தியம் அதிகமுள்ளதாகவும் பிரிட்டனை சேர்ந்த குளோபல் என்.சி.ஏ.பி (Global NCAP) என்ற கார்களின் பாதுகாப்பிற்கான அரசுசாரா தன்னார்வ நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்களின் பாதுகாப்பு அம்சங்களை சோதித்தறியும் முகமாக முன்பக்க தாக்கம், பக்கவாட்டு தாக்கம், தலைகீழ் உருண்டோட்டம், உள்ளிட்ட பல்வேறு விபத்து சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சோதனைகளின் போது கார்களின் இருக்கைகளில் மனிதர்களுக்கு பதிலாக முடுக்கமானிகள் (Accelerometer), சுமை உணரிகள் (Load Cells) இயக்க உணரிகள் (Motion Sensor) போன்ற உணர்கருவிகள் (sensors) பொருத்தப்பட்ட பொம்மைகள் இருத்தி வைக்கப்பட்டு விபத்து உருவகப்படுத்தப்படுகிறது. விபத்து சோதனையின் போது பொம்மைகளின் உருக்குலையும் பாதிப்பு மட்டுமின்றி விபத்தின் போது பயணி (அதாவது பொம்மை) உணரும் அதிர்வு, முடுக்கம், அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு அளவுருக்கள் (parameters) பதியப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் (நட்சத்திர அலகுகள்) வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்திய சந்தையில் விற்கப்படும், விலை குறைந்த சிறிய ரக கார்களை குளோபல் என்.சி.ஏ.பி சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்திலான நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முன்பக்க தாக்க சோதனையில் மேற்குறிப்பிட்ட ஐந்து ரக கார்களும் தோல்வியடைந்துள்ளன. குறிப்பாக நானோ ஐந்திற்கு பூஜ்ஜியம் (0/5) மதிப்பெண்களே பெற்றுள்ளது. ஐ.நா சபை அறிவுறுத்தியுள்ள குறைந்தபட்ச அடிப்படை அளவான மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்திலான முன்பக்க தாக்க சோதனையிலும், ஃபோர்டு ஃபிகோ தவிர்த்த அனைத்து கார்களும் தோல்வியடைந்துள்ளன.
காற்றுப்பை போன்ற பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமையால் இக்கார்களில் பயணிப்பது அபாயகரமானது என குளோபல் என்.சி.ஏ.பி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும், மாருதி ஆல்டோ 800, டாடா நானோ, ஹூண்டாய் ஐ-10 ஆகிய கார்களில் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளால் காற்றுப்பை பொருத்தப்பட்டாலும் கூட கட்டமைப்பு ஒருங்கிணைவில் உள்ள பலவீனங்களால், பயணம் செய்பவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் காயங்களை தவிர்க்க இயலாதெனவும், இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போதைய பொதுவான பாதுகாப்பு நிலைகளைவிட இந்தியா 20 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இது மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அதே ஹுண்டாய் ஐ-10 மாடல் கார்கள் சோதனையில் சிறப்பாக செயல்பட்டு நட்சத்திர தரவரிசையை பெற்றுள்ளன. தரம் குறைந்த கார்கள் இந்திய சந்தைக்கும், அதே வகை கார்கள் ஐரோப்பிய சந்தைக்கென தரம் அதிகமானதாகவும் தயாரிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இது தான் இக்கார்களை வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் உயிரை தனது லாப நோக்கிற்காக மயிரளவிற்கும் மதிக்காத முதலாளிகளின் தேசப்பற்று.
சோதனை முடிவுகள் வெளியானதையடுத்து வோல்க்ஸ்வேகன் மட்டுமே தனது போலோ கார்களில் காற்றுப்பைகளை பொறுத்தி மறுவடிவமைப்பு செய்து சந்தைப்படுத்தப் போவதாகவும், அதனால் 2.7 சதவீதம் வரை அதன் விலை ஏறலாமெனவும் அறிவித்துள்ளது. ஆனால், மாருதி, டாடா, போர்டு, ஹுண்டாய் உள்ளிட்ட மற்ற அனைத்து கார் நிறுவனங்களும், தாங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவமளிப்பதாகவும், தங்களது அனைத்து வகை-ரக கார்களும் எல்லா இந்திய பாதுகாப்பு நெறிமுறைகளையும் பூர்த்தி செய்வதாக ஒரு கண் துடைப்பு அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
இந்திய நெறிமுறைகளின் படி ஒரு கார் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்திலான முன்பக்க தாக்க சோதனையை தாக்குபிடித்தாலே போதுமானதாகும். இந்த மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தை தாக்குபிடிக்கும் கார்கள் தான் மணிக்கு 150, 200 கிலோமீட்டர் செல்லக்கூடியதாக விளம்பரப்படுத்தபடுவதுடன், வேகமானிகள் (Speed Meter) 150, 200 கிலோமீட்டருக்கு வடிவமைக்கப்படுகின்றன.
உலகிலேயே இந்தியாவில் தான் மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் படி 2013-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,40,000 பேர் விபத்தில் இறந்துள்ளனர்.
மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்திலான முன்பக்க தாக்கத்தை குறைந்தபட்ச அடிப்படை அளவாக கொண்டுள்ள ஐ.நாவின் வாகன பாதுகாப்பு விதிமுறைகளில் இந்தியா 1998-ம் ஆண்டு கையெழுத்திட்டது, ஆனால் இன்றளவிலும் நெறிமுறைகளை செயல்படுத்தவில்லை. கையெழுத்திட்ட பின்னரும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும், அபரிதமாக அதிகரித்துள்ள கார் விற்பனை சந்தையும், போக்குவரத்து நெரிசல், விபத்துகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். பதினாறு ஆண்டுகளாக கார் உற்பத்தி முதலாளிகளின் லாப நோக்கிற்காக தானே ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு அம்சங்களை, வரைமுறைகளை தளர்த்தி வைத்திருக்கிறது இந்திய அரசு.
கிடைத்த வரை லாபம் என்று இந்திய அரசுடன் கூட்டு சேர்ந்து மக்களை மொட்டை அடிப்பதுதான் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் செயல் திட்டமாக இருக்கிறது. தனியார்மயமே தரம், பன்னாட்டு நிறுவனங்களால் நுகர்வோருக்கு மரியாதை என்றெல்லாம் சுய இன்பம் காணும் உலகமய தாசர்கள் இப்போது என்ன கூறுவார்கள்?
– மார்ட்டின்
மேலும் படிக்க
இது தான் இக்கார்களை வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் உயிரை தனது லாப நோக்கிற்காக மயிரளவிற்கும் மதிக்காத முதலாளிகளின் தேசப்பற்று.
correct words
//முடுக்கமானிகள் (Accelerometer), சுமை உணரிகள் (Load Cells) இயக்க உணரிகள் (Motion Sensor) போன்ற உணர்கருவிகள் (sensors)//
எங்கங்க புடிக்கிறீங்க இந்த வார்த்தைகளை? செம…
//ஐ.நா சபை அறிவுறுத்தியுள்ள குறைந்தபட்ச அடிப்படை அளவான மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்திலான முன்பக்க தாக்க சோதனையிலும், மேற்குறிப்பிட்ட ஐந்து ரக கார்களும் ஐந்திற்கு பூஜ்ஜியம் (0/5) மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளன//
ஒரு சின்ன திருத்தம், ஐ.நா அறிவுறுத்தியுள்ள சோதனையில் ஃபோர்டு ஃபிகோ தேறியுள்ளது.
http://www.globalncap.org/crash-tests-show-indias-cars-are-unsafe/
ஓன்னும் பிரச்சனையில்லை எல்லா விதிமுறைகளை அமல்படுத்தினால் ஓரு மாருதி 800 சுமார் 15லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்.. ஓகேவா
விதிமுறை மீறல்களால் தான் விலை குறைப்பு சாத்தியம் என்கிறீர்கள் அப்படித்தானே?
முதலாளிகள் தங்களது உற்பத்தி செலவிலிருந்து விற்பனை விலையை எத்தனை சதவீதம் அதிகமாக வைத்து விற்கிறார்கள் என்பது பற்றி விரிவான தகவல்கள்/தரவுகள் உங்களிடமிருக்கின்றனவா?
விதிமுறை மீறல்களின் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட தரமில்லாத, மிக மோசமான வடிவமைப்பு கொண்ட, பாதுகாப்பு வசதிகள் ஏதுமில்லாத கார்களை வாங்கி பயன்படுத்தினால் மரணம் பரிசாக கிடைக்கும் அது உங்களுக்கு ஓகேவா?
Actually the gross profit margin of automobile industry is around 20% and net margin (after taxes, interest etc) is only around 8%…This is average and is much lower for low priced cars
தேவையில்லாத கட்டுரை… இது வருடா வருடம் நடக்கும் ஒரு சோதனை தான்….ஏதோ இந்தியாவே இந்த சோதனையின் மூலம் நாசமாகப்போறது மாதிரியான ஒரு மாய்மாலம் தேவைஇல்லாதது…. அது மட்டும்மல்லாது, தற்ப்போழுது இந்தியா முழுவதும் சுமார் 300க்கும் அதிகமான கார் மாடல்கள் உள்ளன, அதில் 4 மாடல்கள் மட்டுமே ஒரு சில சோதனைகளில் வெற்றி பெற முடியவில்லை ( ஒரு காருக்கு சுமார் 27 விதமான சோதனைகள் நடத்தப்படும்)…. இளவரசி டயானா கார் விபத்தி இறந்த போது,உலகம் முழுவதும் இது போல இட்டு கட்டப்பட்ட கட்டுரைகள் பென்ஸ் கார்களின் மேல் திணிக்கப்பட்டது… இப்ப என்னாச்சு????
நீ புடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணிதான் ராசா…