Sunday, September 15, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி, ஜெயமோகன், பத்ரி – கலக்கும் கூட்டு

அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி, ஜெயமோகன், பத்ரி – கலக்கும் கூட்டு

-

20-ம் நூற்றாண்டில் இந்திய ஆளும் வர்க்கங்களால் முன்னிறுத்தப்பட்ட காந்தியம், 21-ம் நூற்றாண்டிலும் மராட்டியத்தைச் சேர்ந்த அண்ணா ஹசாரேவிற்காக அதே ஆளும் வர்க்கங்களால் இழுத்து வரப்பட்டது. ஆனாலும் காந்திக்கு இருந்த நீண்ட கால ‘ஸ்பான்சர்’ யோகம் கூட ஹசாரேவுக்கு இல்லை. இதிலிருந்தே காந்தியத்தின் ‘பவரை’ அறியலாம்.

 அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி
வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.

இதன் சமீபத்திய காமடிதான் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.

காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு முதலாளிகள் பங்கு பெற்ற பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்கள்அம்பலமாகி நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் உட்பட ஆளும் அமைப்புகள் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக பலவீனமடைந்து கொண்டிருந்த நிலையில்தான் அண்ணா ஹசாரே வருகையை ‘நாடே’ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. அதன்படி 2011-ல் ஊழலை ஒழிப்பதற்கு ஜன்-லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் சீசன் – I, உண்ணாவிரதம்- சீசன் – II, உண்ணா விரதம் – சீசன் – III நடத்தி இந்திய, சர்வதேச ஊடகப் புகழ் பெற்ற அண்ணா ஹசாரே விரைவிலேயே தான்  தானமாகப் பெற்ற அந்த புகழுக்கு கூட லாயக்கில்லை என்று அதே ஆளும் வர்க்கங்களால் தூக்கி எறியப்பட்டார்.

இருப்பினும் “ஓசியில் பிரபலமடைந்தவன் ஓய்ந்து கிடக்க மாட்டான்” என்ற விதிக்கேற்ப தனது காந்திய போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஆள்பவர்களுக்கான 17 அம்ச கொள்கைகள் குறித்து அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சியினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருக்கிறார் அண்ணா.

அண்ணா ஹசாரேவின் காந்திய போராட்டத்துக்கு புளூபிரின்ட் போட்டு நடத்திக் கொடுத்து, பின்னர் ஆம் ஆத்மி கட்சியாகி பிரிந்து போய் விட்ட கார்ப்பரேட் என்ஜிஓ தயாரிப்பான அரவிந்த் கேஜ்ரிவாலே கூட அந்தக் கடிதத்தை கடாசி விட்டார். வளர்த்த கடாவே பாராமுகமாக இருக்கும் போது மற்ற கட்சிகள் அவருக்கு பதில் போடாதது அதிர்ச்சியான விசயமல்ல. ஆனால், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் ராயும், ராஜ்ய சபை உறுப்பினர் கே.டி.சிங்கும் ராலேகான் சித்திக்கு நேரில் போய் அண்ணாவை சந்தித்திருக்கின்றனர். தீதி இந்த மாதிரி செல்லாத பொருட்கள் மீதேல்லாம் அரசியல் முதலீடு செய்வது ஒன்றும் புதிதல்ல. அதனால்தான் அவர் தீதி.

அண்ணா ஹசாரே
யாருமே சீண்டாத தனது ஆதரவை அண்ணா ஹசாரே மம்தாவுக்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.

தன் கடிதத்தை யாரும் கண்டு கொள்ளாததால் அறச்சீற்றம் அடைந்து அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கி விடலாமா, போராடினாலும் ஒரு பயல் சீந்த மாட்டான் என்று மோட்டு வளையைப் பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த அண்ணா, திரிணாமூல் கட்சி தனது அறிவுரையை கேட்க வந்து மனம் குளிர்ந்ததில், மராட்டியத்தில் மழையே வந்து விட்டதாம். பிறகென்ன, யாருமே சீண்டாத தனது ஆதரவை அண்ணா ஹசாரே மம்தாவுக்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.

அவரை டெல்லிக்குப் அழைத்துப் போன திரிணாமூல் கட்சியினர் கொல்கத்தாவிலிருந்து வந்து இறங்கிய மம்தா பானர்ஜியை, முகுல் ராயின் வீட்டில் சந்திக்க வைத்திருக்கின்றனர்.

1970-களில் காந்திய வழியில் ‘ஊழல் ஒழிப்பு’ போராட்டம் நடத்திய ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய கல்கத்தாவிற்கு வந்திருந்தார். ஜெபி கார் பானெட்டின் மீது நடனம் ஆடி தனது அரசியலை ஆரம்பித்தவர், அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த மம்தா பானர்ஜி. இப்படி ஊழலுக்கு ஆதரவாகவும், பாசிச இந்திராவுக்கு ஆதரவாகவும்தான் மம்தாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. இந்த வீரதீர காரியத்திற்கு பிறகு அவரை கட்சிக்காரர்கள் “தீதி” (அக்கா) என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர். இதெல்லாம் அண்ணா ஹசாரேவுக்கு வயசாகிவிட்டதால் மறந்திருக்கலாம் என்று அவரது பக்தர்கள் மனசாந்தி அடைந்து கொள்ளலாம்.

1990-களில் நரசிம்மராவ் அமைச்சரவையில் மனித வளத்துறை அமைச்சர், வாஜ்பாயியின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர், 2009 ஐ.மு.கூ-II அரசில் மீண்டும் ரயில்வே அமைச்சர் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசில் பங்கேற்று, இமேஜை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதுவும் கடைசி காலங்களில் பதவிகளை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தியவர் மம்தா பானர்ஜி. பொதுக் கூட்ட மேடையில் தனது தலைக்கு தானே சுருக்குப் போட்டுக் கொள்ளப் போவதாக மிரட்டுவது, நாடாளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் முகத்தில் விசிறி அடிப்பது, மாற்றுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டைக் காலரைப் பிடித்து கதறக் கதற வெளியில் இழுத்துக் கொண்டு தள்ளுவது போன்றவையெல்லாம் தீதியின் அதிரடி அரசியல் காட்சிகள்.

மம்தா பானர்ஜி
ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை.

ஆனால் இந்த அதிரடி காட்சிகளே வங்கத்து மக்களை திரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது. அந்த அளவுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளின் மீது அவர்களுக்கு வெறுப்பு. இத்தகைய வரலாற்று விபத்துதான் தீதியை உருவாக்கிய அரசியல் களம் மற்றும் காலம். அத்தகைய “தீதிய” போராட்டங்களின் ஒரு பகுதியாக 1997-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய திரிணாமூல் காங்கிரசை ஆரம்பித்தார் மம்தா. மேற்கு வங்கத்தில் 1977 முதல் ஆட்சியில் இருந்த ஜோதிபாசு-புத்ததேப் பட்டச்சார்யா அரசுகள் மக்களுக்கு எதிரான குற்றங்களின் சுமையில் மண்ணைக் கவ்விய போது 2011-ல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக ஆட்சி பீடத்தில் ஏறி அம்மாநிலத்தில் ‘ஜனநாய’கத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அந்த ஊட்டலில் கதற ஆரம்பித்த ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை.

கம்யூனிஸ்ட் என்று எழுதிய பேப்பரை ஒருவர் கிழித்துப் போட்டாலே, விருது வழங்கி கௌரவிக்க காத்திருக்கும் தேசிய, சர்வதேசிய ஊடகங்களில் போலிகளாக இருந்தாலும் இந்தியாவின் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளை வீழ்த்திய வீராங்கனையாக மம்தா பானர்ஜி கொண்டாடப்பட்டார். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை அவரை 2002-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. 200 ஆண்டுகள் கழித்து ஜெயமோகனது எழுத்துலக வாரிசுகள் “கம்யூனிசத்தை வீழ்த்திய தீதி” எனும் நாவல் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். ஆனால் அப்போது கொண்டாடுவதற்கு முதலாளித்துவம் இருக்காது என்பது வேறு விசயம்.

எளிமையான உடை, சிறிய வீட்டில் வசிப்பது, கார் கூட வைத்திருக்காதது போன்ற ‘காந்திய’ கொள்கைகளையும் பின்பற்றும் அவர், மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனது தீதிய பாணி ஜனநாயக ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னைப் பற்றிய கார்ட்டூன் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அம்பிகேஷ் மகாபத்ரா என்ற பேராசிரியரை அவரது கட்சிக்காரர்கள் அடித்து உதைத்து, பின்னர் போலீசால் கைது செய்ய வைத்து ஒரு நாள்  லாக்-அப்பில் அடைத்ததை நியாயப்படுத்தியது, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் பெற்றுத் தருவதற்காக பொய் சொல்வதாக குற்றம் சாட்டியது, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டி வெளி நடப்பு செய்தது, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு சப்பைக்கட்டு கட்டியது, சாரதா சிட் நிதி நிறுவன மோசடியில் திரிணாமூல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் பிரமுகர்கள் அடித்த கொள்ளை என்று மூன்றாண்டுகளாக சாதனைகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து வருகிறார் மம்தா பானர்ஜி.

mamta_walkout
கேள்வி கேட்ட மாணவர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டி வெளி நடப்பு செய்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிர்க் கட்சிகளான “இடது” காரத் கட்சி மற்றும் “வலது” தா.பா கட்சியினர் வெறும் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடப் போகும் தமிழ்நாட்டு ஜெயலலிதாவின் பிரதமர் பதவி கனவுகளுக்கு அகில இந்திய அளவில் ஃபிளெக்ஸ் கட்டத் தயாராகி ஒப்புக் கொடுத்திருக்கும் நிலை தீதிக்கு கோபத்தை வரவழைத்திருக்கும் போல.

போலிகளின் போரை முறியடிக்க உறுதி கொண்ட மம்தா, 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திலும், அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களின் சில தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் ‘பெரிய’ கட்சியின் தலைவரான தான் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தேடி சமஷ்டி முன்னணியை அதிரடியாக அறிவித்திருக்கிறார். அந்த அணியில் சேருவதற்கு கொங்கு தேசிய முன்னேற்றக் கழகம், கார்த்திக் கட்சி போன்ற ஆளே இல்லாத குறுநில மன்னர்களது கட்சிகள் கூட ஆர்வம் காட்டாத நிலையில் அண்ணா ஹசாரேவின் ஆதரவுக்கு எத்தகைய மதிப்பு இருக்கும் என்பதை புரிந்து கொள்க. இதையும் சீசனுக்கு பிந்தைய கழிவு விலையில்தான் வாங்கியிருக்கிறார். அண்ணாவின் சந்தை நிலவரம் அதுதான் எனும்போது தீதி என்ன செய்ய முடியும்?

“மமதா பானர்ஜி முதலமைச்சர் ஆன பிறகும் சிறிய வீட்டிலேயே வாழ்கிறார், எளிய உணவுதான் சாப்பிடுகிறார், அவருக்கு சொந்தமாக வீடும் இல்லை காரும் இல்லை. நம் மத்தியில் இது போன்ற தலைவர்கள் தோன்றி நீண்ட காலம் ஆகிறது. இப்போது நாம் மமதா பானர்ஜியை கண்டு கொண்டிருக்கிறோம்” என்று மமதாவை பாராட்டி விட்டு, “தீதியும் என்னைப் போலவே கிராமங்களை ஆதரிக்கிறார். அவரது கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒன்றுதான்” என்று “தீதி”யவாதத்தில் ஒளிந்திருக்கும் காந்தியவாதத்தை கண்டு பிடித்து அறிவித்திருக்கிறார் அண்ணா ஹசாரே. இப்படியாக பிரபலத்திற்கு ஆசைப்படும் இரண்டு சந்தர்ப்பவாதங்கள் சங்கமித்திருக்கின்றன.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் வேலைகள் எவ்வளவு அவசியம்’ என்று ஆதிக்க சாதி மக்களுக்கு புரிய வைத்து, ‘மாட்டிறைச்சி சாப்பிடறதாலதான் தீண்டாமையை கடைப்பிடிக்கிறாங்க’ என்று தாழ்த்தப்பட்ட மக்களை சைவ உணவர்களாக்கி, சாதி பேதங்கள் நிரம்பிய ஆனால் பகைமை இல்லாத மாதிரி கிராமமாக ராலேகான் சித்தியை  உருவாக்கியவர் அண்ணா. அதன் அடிநாதமான இந்துத்துவ உணர்வை தீதியிடம் கண்டிருக்கிறார். தான் போடும் உத்தரவுகளை பின்பற்றாதவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைப்பது போன்ற ராணுவ கறாருடனான ஜனநாய உணர்வையும் அவர் தீதியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

“தீதியை ஒரு தனிநபராகத்தான் ஆதரிக்கிறேன், அவரது கட்சியை ஆதரிக்கவில்லை. வரும் தேர்தலில் அவர் நிறுத்தும் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நான் நாடு முழுவதும் பயணிப்பேன்” என்கிறார் அண்ணா ஹசாரே.

மமதா பானர்ஜி
அண்ணா ஹசாரேவின் 17 அம்ச கொள்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்யலாம்.

அரவிந்த் கேஜ்ரிவால் தனது கடிதத்துக்கு பதில் போடாததால் அவரை ஆதரிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அண்ணா ஹசாரே கூறியிருக்கிறார். ஒருவேளை பதில் போட்டாலும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவும் கிடையாது, கேசரியும் கிடையாது என்பதுதான் நிஜம். “தனது 17 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்துக்கு வேறு எந்தக் கட்சியும் பதில் போடாத நிலையில், அது குறித்து தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்திய மமதா பானர்ஜி நாட்டின் பிரதமர் ஆனால், அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தனது உண்ணாவிரத போராட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ள, “நாலு ஊடகங்களில் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களில் கவர் ஆக  வேண்டும்” என்ற தனது வாழ்நாள் இலட்சியத்தை சாதித்து விட்ட அண்ணா, அடுத்த கட்டமாக தன்னை ஒரு பொருட்டாக மதித்து பதில் போட்ட திரிணாமூல் காங்கிரசின் ஆன்மீக வழிகாட்டியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். மராட்டிய ஆன்மீகமும், வங்கத்து குழாயடிச் சண்டையும் இணைந்து செய்யப் போகும் இந்த மகத்தான அரசியலை காவியமாக்க கம்பனில்லையே என்றொரு ஏக்கம் வரத்தான் செய்கிறது.

ஆனாலும், அண்ணா ஹசாரேதான் தன்னை சந்திக்க விரும்பியதாகவும் தாங்கள் அவரை நாடவில்லை என்றும் மம்தா பானர்ஜியும் அவரது கட்சியினரும் தெளிவாக சொல்லுகின்றனர். “அண்ணாவின் 17 அம்சக் கொள்கைகளில் ஓரிரண்டைத் தவிர மற்ற அனைத்தையும் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம். நிலம் கைப்பற்றல் போன்ற அம்சங்களைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்று கூறி அந்த கிராமத்து பெருசின் மனதில் சப்பணம் போட்டு உட்கார்ந்து விட்டார் மம்தா. அந்த 17 அம்ச கொள்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்யலாம்.

இதனால் பெருசினால் மம்தாவுக்கு பயனில்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்யாதீர்கள். காங்கிரஸ், பாஜக இரண்டுமே பெரும்பான்மைக்கு அருகில் வராது என்றும், மூன்றாம் அணி உள்ளிட்ட மற்ற கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்றெல்லாம் கொளுத்திப் போடும் போது அதற்கு ஜெயா, முலாயம் என்று போட்டியெல்லாம் இருக்கும் போது தீதிக்கும் தூக்கம் வராது என்ற நிலையில்தான் அண்ணா அவருக்கு தேவைப்படுகிறார்.

வடகிழக்கு இந்தியாவில் தம் சொந்த செல்வாக்கிலும் நாட்டின் மத்திய, தெற்கு பகுதிகளில் அண்ணா ஹசாரேவின் ஆலோசனையின்படியும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். எப்படியும் பிரதமர் போட்டியில் தானும் ஒரு குதிரையாகவாவது நிறுத்தப்படுவது அவசியம் என்று அவர் நினைக்க, அவரது தேரோட்டியாக அண்ணா அவதிரித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணியிலோ திரிணாமூல் கட்சி சேருமா என்று கேட்கப்பட்ட போது, “இப்போதெல்லாம் பிரீ-போல் (தேர்தலுக்கு முந்தைய) கூட்டணி கிடையாது, போஸ்ட் போல் (தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி) கூட்டணிதான்” என்று பதிலளித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. தனியாக நின்று சில 10 இடங்களை பிடித்து விட்டால், தேர்தலுக்குப் பிந்தைய குதிரை பேரங்களில் தேவகவுடாவைப் போலவோ, குஜ்ராலைப் போலவோ பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட மாட்டோமா என்று தமிழ்நாட்டின் அம்மாவிலிருந்து வங்கத்து தீதி வரை ஆசை பிடித்தாட்டுகிறது.

இவ்வாறாக, அண்ணாவின் காந்திய போராட்டமும், மம்தாவின் தீதிய போராட்டமும் தத்தமது அடுத்த வளர்ச்சி கட்டத்தில் ஒன்றோடொன்று கை கோர்த்திருக்கின்றன. ஆனால்,  2019 தேர்தலில் தானே 100 சுயேச்சை வேட்பாளர்களை நாடு முழுவதும் நிறுத்தப் போவதாக அண்ணா ஹசாரே கூறியிருப்பதிலிருந்து இந்த தேர்தல் கூட்டணி அதற்கான அவரது ஒத்திகை என்று அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி பரஸ்பரம் இரண்டு தரப்பிலும் உடனடி மற்றும் தொலை நோக்குத் திட்டங்களெல்லாம் உண்டு. படித்து இரசிப்பதற்குத்தான் நமக்கு நேரமில்லை.

ஜெயமோகன்
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அவருக்கே தெரியாமல் அடங்கியிருந்த உள்ளார்ந்த அர்த்தங்களை தனது அக ஒளியால் கண்டறிந்து பதிவுகள் எழுதிக் குவித்தவர் ஜெயமோகன்.

இந்நிலையில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து தேசியக் கொடி ஆட்டியவர்கள், பானி பூரி விற்றவர்கள், நான் அண்ணா என்று தொப்பி போட்டவர்கள் இவர்கள் எல்லோரையும் விட அந்த போராட்டத்துக்குள் ஒரு சித்தாந்த அடிப்படையை கண்டு பிடித்துச் சொன்ன ஜெயமோகனுக்குத்தான் ஒரு வரலாற்றுப் பொறுப்பு இருக்கிறது.

அண்ணா ஹசாரேவை 1990-களிலேயே ராலேகான் சித்தியில் தான் போய் பார்த்திருப்பதாகவும், ஊழலுக்கு எதிரான அவரது காந்திய போராட்டம் என்பது “மெல்ல மெல்ல சமூகப் பிரக்ஞையில் வேரூன்றி கருத்தியல் மாற்றத்தை உருவாக்கி அதன்மூலம் வெற்றியை நோக்கிச் செல்வது” என்றும் “காந்தியப்போராட்டத்தில் பெரும் சோர்வுக்காலங்கள் உண்டு”, “காந்தியப்போராட்டம் என்பது எப்போதும் ஒரு சமரசத்திலேயே முடியும்”, “காந்தியத் தரப்பு அடைந்தவற்றை உறுதிப்படுத்திக்கொண்டு உடனடியாக அடுத்த கட்டத்துக்குச் செல்லும், அடைந்தவற்றை மேம்படுத்திக் கொள்ளும்.” என்றும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அவருக்கே தெரியாமல் அடங்கியிருந்த உள்ளார்ந்த அர்த்தங்களை தனது அக ஒளியால் கண்டறிந்து பதிவுகள் எழுதிக் குவித்தவர் ஜெயமோகன்.

அந்த வழியில் அண்ணாவின் காந்திய போராட்டம் மம்தாவின் திரிணமூல் காங்கிரசை நோக்கி அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கும் இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கொள்கைதான் தன் கொள்கை என்று அண்ணா ஹசாரே அறிவித்திருக்கும் நிலையில் அண்ணா ஹசாரே-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு ஆதரவாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினருடன் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதுதான் அறமாக இருக்கும். இல்லை என்றால் ‘ஒரு மாபெரும் வரலாற்று இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து சுக்கு காபி குடித்தவாறு மகாபாரதம் எழுதிக்கொண்டிருப்பதுதான் ஒரு எழுத்தாளனின் அறமா’ என்ற கேளவிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

அண்ணா ஹசாரே பற்றிய ஜெமோவின் பதிவுகளை தொகுத்து புத்தகம் போட்டு, அதற்கு பாட்காஸ்ட், விவாத விளம்பரம் எல்லாம் செய்த கிழக்கு பதிப்பக பத்ரியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறப்பணிக்கு தோள் கொடுப்பார் என்று நம்பலாம். அண்ணா ஹசரே புத்தகத்தை அவர் மலிவுப் பதிப்பில் பத்து ரூபாய் போட்ட மாதிரி, தீதி – தாத்தா கூட்டணி புத்தகத்தை ரெண்டு ரூபாய்க்கு போடுவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த புத்தக கண்காட்சியில் இதுதான் பெஸ்ட் செல்லராக இருக்கும்.

மராட்டிய அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு, வங்கத்து தீதியின் போராட்ட குணம், பார்வதிபுரத்து ஜெயமோகனது அறம், மந்தைவெளி பத்ரியின் புத்தகக் கடை எல்லாம் சேர்ந்து எழுப்பும் அந்த மகோன்னதக் காட்சியை நினைக்கும் போது……………………..!

அப்துல்

  1. மராட்டிய அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு, வங்கத்து தீதியின் போராட்ட குணம், பார்வதிபுரத்து ஜெயமோகனது அறம், மந்தைவெளி பத்ரியின் புத்தகக் கடை எல்லாம் சேர்ந்து எழுப்பும் அந்த மகோன்னதக் காட்சியை நினைக்கும் போது……………………..! வயித்தைக்கலக்குது அர்ஜ்ஜெண்ட்டா பாத்ரூம் போகணும்………

  2. ஜெமோ, பத்ரி போன்ற ஜென்மங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லவா போகுது! மானங்கெட்ட பிறவிகள் இவை. இதை வாசகர்கள் புரிந்து கொள்ளட்டடும் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க