Monday, August 15, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்

கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்

-

குழந்தைக்காக காத்திருந்த ஒரு பொண்ணு தான் உண்டான விசயத்த சந்தோசமா மாமியார்கிட்ட சொன்னா. மாமியாருக்கு அளவில்லாத மகிழ்ச்சிதான், டாக்டர் குழந்தை பிறக்கும் தேதி குறிக்கற வரைக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள்
மருத்துவ பரிசோதனைக்கு காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்

“குழந்தை ஆரோக்கியமா இருக்கு. ஸ்கேன் ரிப்போட்ல எந்த பிரச்சனையும் இல்ல. ஜூலை மாசம் குழந்தை பிறக்கும். மருமகள நல்லா பாத்துக்கங்க பழம், பச்சை காய்கறின்னு சத்தானதா பாத்து கொடுங்க. அப்பதான், உங்க பேரப்பிள்ள ஆரோக்கியமா வளரும். எந்த பிரச்சனையும் இல்ல. தாயும் பிள்ளையும் நல்லாருக்காங்க, சந்தோசமா போய்ட்டு வாங்க” என்றார் டாக்டர்.

“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க. கண்ணடி பட்டு படுத்துப் போன ஏங்குடும்பம் இப்பதான் தலையெடுக்குது. இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்.” என்றார். என்னமோ சொசைட்டி பேங்குல அடமானம் வைச்ச நகையை எடுக்கணும்ங்கிற மாதிரி அவங்க சொன்னதெல்லாம் டாக்டரம்மாவுக்கு அதிர்ச்சியா இருக்காது. இப்படித்தானே பலரையும் பாக்குறாங்க.

வெலவெலத்துப் போன அந்த மருமகப் பெண் கலங்கிய கண்களுடன் தன்னையும் அறியாமல் குழந்தையை தடவுவது போல் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.

மருமகளுக்கு முன்னாடி அந்த அம்மாவோட பொண்ணுதான் முழுகாம இருந்தது. மகளுக்கு சித்திரை மாசம் குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மகள், மருமகள்ங்கற பேதம் இல்லாம மகளுக்கும் முன்கூட்டியே ஆப்ரேசன் செஞ்சு குழதைய எடுத்துறனுங்கற அதே மூடத்தனமான நீதியதான் முன்வச்சாங்க. மேலும் “மாசமாக இருக்கும் நீங்க ரெண்டு பேரும் (மகளும் மருமகளும்) ஒரே வீட்டில் இருக்க கூடாது ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கக் கூடாது. பெரியவங்க சாஸ்திரபடிதான் சொல்லி வச்சுருங்காங்க. மீறினா ஊனமா கொழந்தப் பொறக்கும்”ன்னு சொல்லி பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பது தெரிந்தும் மருமகளை அவர் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நிலைமை தெரிஞ்சாலும்  சம்பிரதாயங்களை மீற அவருக்கு மனசில்லை.

அம்மா வீட்டில் இருந்தாலும் ஈருயிருக்காரியான அவளை இந்த சம்பிரதாயங்கள் விட்டுவைக்கவில்லை. மசக்கயால சோர்ந்து சோர்ந்து படுக்கணும் போல இருந்தாலும் அம்மா வீட்டுல இருக்க நம்பள, புருஷன் வீட்ட சேந்தவங்க அன்பா பார்க்க வாராங்கங்கற சந்தோசத்துல சோர்வையும் மீறி, அவங்கள உபசரிக்க காரக்குழம்பு வச்சு காய், ரசம்னு சமையல் செஞ்சுருந்தா அந்த பொண்ணு. வந்தவங்களோ “மொதமொதன்னு உங்க வீட்டுக்கு வந்து காரக்கொழம்பு சாப்புடக் கூடாது, உறவுக்குள்ள பகை வந்துரும், சாம்பார்தான் சாப்பிடனும் சாம்பார் செய்யி”ன்னு சொல்லிட்டாங்க. மூச்சு வாங்கறதையும் பொருட்படுத்தாம ஆசாசையா சமைச்சவளுக்கு எதுத்துக் கேக்குற துணிவில்லாமல் சாஸ்த்திரத்து மேலயும் சாம்பார் மேலயும் பயங்கரமா கோபப்பட்டாள்.

மசக்கக்காரிக்கு நாக்குக்கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் சமைச்சுப் போடலேன்னா கூட பரவாயில்லை. ஆனா அவள இப்படி கஷ்டப்படுத்தி சாம்பாரை தின்னணும்ணு சாதிச்ச அந்த சனங்களை என்ன செய்யறது?

ஒருநாள் நான் அந்த பொண்ண பாத்துட்டு வரலான்னு போயிருந்தேன். எல்லோரும் சாப்பிட்டு முடிச்சு சந்தோசமா சிரிச்சுப் பேசிட்டிருந்த ஒரு வேளையில “உனக்கு பொம்பளப் புள்ள வேணுமா ஆம்பளப்புள்ள வேணுமா, பொம்பளப் புள்ளயே பெத்துக்க அதுதான் நாளைக்கி நமக்கு முடியாதப்ப நம்ம கைவேலய வாங்கி செய்யும், நமக்கு உதவியா இருக்கும். பசங்க ஒரடி எட்டிதான் இருப்பாங்க”ன்னு விளையாட்டா சொன்னேன்.

அப்ப அந்தப் பெண்ணோட மாமியாரும் அங்க இருந்தாங்க. “எங்குடும்பத்துல யாரும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யல, நல்லதுதான் செஞ்சுருக்கோம். காச காசுன்னு பாக்காம வாரம் ஐநூறுன்னும் ஆயிரம்னும் செலவுபண்ணி எத்தன கோயிலுக்கு பூஜபண்றேன்னு தெரியுமா? என்ன காக்குற மாரியாத்தா அந்த செரமத்தெல்லாம் தரமாட்டா. எம்மருமகளுக்கு ஆம்பளப்புள்ளதான் பொறக்குன்னு” சொன்னாங்க அந்த மாமியாரம்மா. பெண் குழந்தை பொறந்தா ‘பாவச்செயல்’ன்னு சொல்றளவுக்கு அறிவை மழுங்கடிக்கும் ஆணாதிக்கமும் அதன் சமுக அமைப்பையும் கண்டு ஒரு நிமிசம் என் உச்சி மயிர் வழியாய் உயிரை பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்துச்சு. பெண் இனத்தையே கேவலப் படுத்திக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாம சாதாரணமா சொன்னாங்க.

ஆம்பளப் புள்ளையை பெத்துக்குறது புண்ணியம், பொம்பளப் பிள்ளையை பெத்தால் பாவம்னு நினைக்கிறவங்க மத்தியில மருமகளோ, அக்காவோ, பாட்டியோ இன்னும் அத்தனை பொம்பளங்களும் எப்படி நிம்மதியா வாழ முடியும் சொல்லுங்க?

வயித்துல புள்ளைய சுமக்கறப் பொண்ணுக்கு வாயிக்கி ருசியா சமைச்சுப்போட்டு மனசுக்கு இதமா பேசி பழகி அனுசரணையா நடந்துக்கணும். அப்பதான் அவளும், அவ வயித்துல வளர்ற பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கும். வயித்துல புள்ளய சொமக்குற சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் பயங்கரமான மனக் கொழப்பம், குழந்தை பிறக்கற வரைக்கும் வந்துகிட்டே இருக்கும். கர்ப்பமுன்னு முடிவான பிறகு எந்த நேரத்துலயும் கலஞ்சுருமோன்ற பயத்தால பாத்ரூம் வந்தாக்கூட போகப் பயம்மாருக்கும். எந்த கொறையும் இல்லாம நல்ல கைகாலோட பொறக்கணுமேங்கற எண்ணமும் எப்பவும் கூட இருக்கும். வயிறு பெருசாக பெருசாக பிரசவ பயம் ஆள தொலச்செடுத்துரும். எந்த வேலையையும் மனசு ஒட்டி செய்ய முடியாது.

இது உடலோட அதுவும் தாய்மையோட பிரச்சனைங்கன்னு புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணலாம். ஆனா சமூகத்தோட சம்ரதாயப் பிரச்சினைங்க ஒரு புள்ளத்தாச்சிய இப்புடிப் போட்டு வாட்டு வைதைக்கும்ணு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிஜம்.

அஞ்சாவது மாசம் அழைப்பு, ஏழாவது மாசம் பூ முடிப்பு, ஒம்பதாம் மாசம் வளைகாப்புன்னும், விதவிதமா சாப்பாடு தேடித் தேடி செய்றாங்க. தேனாமிர்தமே கொடுத்தாலும் அதவிட வயுத்து புள்ளக்காரிக்கி முக்கியமான தேவை, சுத்தியிருக்கும் குடும்பத்த சேந்தவங்களோட அன்பான பேச்சும், நாங்க இருக்குறோம் கவலப்படாத தைரியமா இரு என்ற நம்பிக்கையும் தான். அவளுக்கு ஆரோக்கியமான முறையில குழந்தைப் பெத்துக்குற தைரியத்தக் கொடுக்குங்கறத மறந்துர்ராங்க.

குழந்தையை சுமக்கும் பெண்ணின் மனநிலையை புரிஞ்சுக்காம ஏதோ இந்த ஒரு குடும்பத்துல மட்டும்தான் இப்படி பேசுறதில்ல. மதமும், சம்பிரதாயமும் தூணுலயும் இருக்கும், துரும்புலயும் இருக்கும். ‘தொப்புள் கொடி சுத்தி பொறந்தா மாமனுக்கு ஆகாது, வெள்ளிக் கிழம பொண்ணு பொறந்தா லட்சுமி கடாட்சம். வியாழக் கிழமை ஆம்பளப் பிள்ள பொறந்தா தங்காது தவறிடும், அதனால தவுடு வாங்கிக்கிட்டு தத்து கொடுத்துட்டு ஒரு நாள் இரவு முடிஞ்சதும் தூக்கிக்கனும். செவ்வாக் கிழம பொறந்த செவ்வாதோசம் இருக்கும்’ன்னும் கிராமத்துல பெரும்பாலான வீடுகள்ள இதுபோல பல காரணங்கள் சொல்லி சொல்லி கடுப்பேத்துவாங்க.

புள்ளத்தாச்சி பொண்ணுகள இப்படி நிம்மதி இல்லாம செய்றதால வயித்துல உள்ள குழந்தைக்கு பாதிப்பையும் உண்டு பண்ணிருவாங்க, பிரசவத்துக்கும் செரமத்த ஏற்படுத்திருவாங்க. இந்த சடங்கும் சம்பிரதாயமும் வயித்துல வளர்ற கருவைக் கூட விட்டு வைக்கிறதில்லை. கொழந்த பிறக்கும் போது யாராவது தற்செயலா இறந்து போனா முழு ஊரும் உறவும் பேசிப் பேசியே கொல்லும்.

இவங்களப் போல உக்கார்ரதுக்கும் படுக்குறக்கும்ன்னு தொட்டதுக்கும் சாங்கியம் பாக்கும் மனிதர்களின் வாழ்க்கை என்னைக்குமே முன்னோக்கி செல்லாது. ‘ஆண்டவன நெனைக்காத நாளே கெடையாது, உப்பு புளி வாங்கணுன்னா கூட நல்ல நாள், நல்ல நேரம் பாத்துதான் வாங்குவேன் ஆனா என் விசயத்துல கண்ணு தொறந்து பாக்கமாட்டேங்குறான் அந்த கடவுள்’ என்பார்கள். வாழ்க்கை ஓட்டத்தில் என்னனென்ன பிரச்சனை வரும் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்திருந்தாலும் பிற்போக்குத் தனமான மூட பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூளையை சிந்திக்க விடாம சுருக்கிக் கொள்கிறார்கள்.

பிள்ளைப்பேறு காலம்றது மறுஜென்மம் என்பதும் கருவுற்றவளை கவனிப்பதின் அவசியத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனும் அடங்கியுள்ளது என்பதும் அந்த அம்மாவுக்கு மட்டுமில்ல பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்சுருக்கும். தெரிஞ்சாலும் மனுசனோட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காம சாஸ்த்திரம் சம்பரதாயம்னு இல்லாத ஒண்ணுக்கு மல்லு கட்டிகிட்டு மூடத்தனத்த கொள்கையா கடைபிடிக்குறாங்க. சாமின்னும், மந்திர தந்திரம்னும் காலம் காலமா மூழ்கி கெடக்கறதால திட்டமிட்டுத்தான் இதுபோல மத்தவங்க மனசு புண்படும்படி பேச வேண்டிய அவசியமில்லை. அவங்கள அறியாமலே பேசுற பேச்சுல செய்ற செயல்லன்னு மூடநம்பிக்கையும் ஒரு அங்கமா அனிச்சை செயலா கலந்துருக்கு.

பிரவசம் இப்ப ரொம்பவே முன்னேறியிருக்கு. தாயையும், சேயையும் காப்பாத்துறதுல மருத்துவம் எவ்வளவோ வளர்ந்துருச்சு. அவரசம்னா அறுவை சிகிச்சை செஞ்சு கூட இரண்டு பேரையும் காப்பாத்தலாம். ஆனா மக்கள்கிட்ட இருக்கும் இந்த சம்பிரதாய நோயையை அழிக்கிறதுக்கு மருத்துவம் உதவாது. பகுத்தறிவை வளர்க்க கொஞ்சம் முரட்டு வைத்தியம்தான் பண்ணனும் போல.

–    சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க