Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி ?

மூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி ?

-

ந்தியாவின் போலி ஜனநாயகத்தை காப்பாற்றத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள் அனைத்திற்கும் உள்ள பிரச்சினை, அவைகள் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்ல; காலாவதி நிலையை மறைப்பதற்கு உரிய வார்த்தைகள் கிடைக்காமலும்தான். ஜனநாயகம் குறித்த மாயைகளை பரப்புவதற்கு கொள்கை சார்ந்து நடிக்க வேண்டும். ஆனால் இதையே எத்தனை தலைமுறையாக நடிப்பது?

மூன்றாவது அணி சந்திப்பு
மூன்றாவது அணி தலைவர்கள் சந்திப்பு

விறுவிறுப்பான வெற்றியடையும் சினிமா படங்கள் கூட ஒரு வாரத்திற்கு மேல் திரையரங்குகளில் தங்காத போது மூன்றாவது அணியின் இருப்பை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் அவஸ்தை சொல்லி புரிய வைக்கும் ஒன்றல்ல.

2014 மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் 25.02.2014 அன்று துவங்கப்பட்டதாக பத்திரிகைகள் அனைத்தும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆன்மீக இணைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த செய்திக்கும் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் காட்டுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலுக்கு பிந்தைய அதிரடிக் காட்சிகள் அடங்கிய குதிரை பேரங்களுக்கு இந்த கும்பல்தான் பயன்படும் என்பதால் இப்போதே துண்டு போட்டு மரியாதை செய்கின்றன ஊடகங்கள்.

இந்த அணிக்கு பெயர் என்னவென்றே தெரியவில்லை. இது புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதன் சிரமத்தோடு தொடர்புடையது அல்ல. வேலைக்காகாத ஒரு வினோத ஜந்துவிற்கு கவர்ச்சிகரமாக, என்ன பெயர் வைக்கலாம் என்று மண்டையைக் குடையும் பிரச்சினை சாதாரணமான ஒன்றல்ல. ஏற்கனவே மூன்றாவது அணி, மாற்று அணி, தேசிய முன்னணி என்று ஏகப்பட்ட அதேநேரம் கசப்பான நினைவுகளை கொண்டிருக்கும் வார்த்தைகள் தொண்டைக் குழியை விட்டு வரமறுக்கின்றன. புதிய வார்த்தைகளை பிரசவிக்கும் சமூக யதார்த்தமின்றி, மொழியின் இலக்கணம் தவிக்கின்றது.

ஆயினும் இந்த கஷ்ட ஜீவிதத்திற்கு கடுமையாக உழைப்பது நமது கேலிக்குரிய போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். பாராளுமன்றத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்தாலும், மைக்கோ, பேப்பரோ துள்ளி வந்தாலும், “ எப்பேற்பட்ட இந்திய ஜனநாயகம் இப்படி இழிவுபடுத்தப் படுகிறதே” என்று கண்ணீர் வகுப்பவர்கள் இவர்கள்தான். அதனால்தான் பாராளுமன்ற ஜனநாயகத்திற்காக, சபரி மலைக்கு மாலை போடாமலேயே சரணம் ஜனநாயகம் சொல்லி அழுது அரற்றுவதில் மற்ற சபாநாயகர்களை விட சோமநாத் சட்டர்ஜியே முதலிடம் வகித்தார்.

சிபிஎம்-மின் பொதுச் செயலாளாராக, காலஞ்சென்ற ஹர்கிஷன் சிங் சுர்ஜித்,  92 முதல் 2005-ம் ஆண்டு வரை பணியாற்றிய போதுதான் இந்திய ஜனநாயகத்தின் தரகர் திலகம் எனும் பட்டத்தை போட்டியின்றி பெற்றார். அவர் காலத்தில் இவர்களது, “ஜனநாயகத்தை காப்பாற்றும் அழுகுணி ஆட்டங்கள்”, ராஜதந்திரம் என்ற பெயரில் இன்றும் கூட ‘தோழர்களிடையே’ வியந்தோதப்படுகின்றது. இப்போது சுர்ஜித் இல்லை என்றாலும், அவர் அளவு தரகுக் கலையில் தேர்ச்சி இல்லை எனினும் பிரகாஷ் காரத் சோர்ந்து போய்விடவில்லை. புரட்சி எப்படியும் வரப்போவதில்லை, சிபிஎம் எப்படியும் புரட்சி செய்யப் போவதில்லை எனும் இரு தாரக மந்திரங்களை ஏற்று இந்த அமைப்பிற்குள்ளே “எப்படி சீர்திருத்தம் செய்யலாம்” என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சில்லறையாட்டத்தை எப்படி ஆடலாம் என்று அல்லும் பகலும் சிந்தித்து, உழைத்து வருகிறார்.

மூன்றாவது அணியில் இருக்கும் சமூகநீதிக் கட்சிகள்அனைத்தும் தமது ‘கொள்கைகளை’ ஜனரஞ்சகமாக மக்களிடையே கொண்டு செல்லும் திறமையை வைத்துத்தான் இதுவரை காலம் தள்ளின. இனி காலமே இவர்களை தள்ளும் என்றாலும் போலிக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை கொள்கையும் வரண்டிருப்பதோடு அவற்றை ஜனரஞ்சகமாக பேசும் ஆற்றலும் இல்லை. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வளைப்பதிலும், அந்த வளைப்பை சாத்தியப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தை ‘கொள்கையாக’ மாற்றும் ஆற்றலிலும் இவர்களுக்கு ஈடு இணையில்லை. என்ன இருந்தாலும் ‘கம்யூனிசம்’ கற்றுத் தேர்த்தவர்கள் அல்லவா?

ஏன் அடிக்கடி கூட்டணி மாறுகிறீர்கள், கொள்கை முக்கியமில்லையா என்று யாரும் கேட்டால், “யார் இந்தக் காலத்தில்  கொள்கை பார்க்கிறார்கள்?, இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காத ஒன்றா” என்று தமது சந்தர்ப்பவாதத்தை ஒத்துக் கொள்வார்கள், இந்த சமூகநீதிக் கட்சிகள். ஆனால் போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் இந்த பிழைப்புவாதத்திற்கு கொள்கை முலாம் பேசி அந்த தலைவர்களையே அசரவைப்பார்கள். இதனால்தான் சுர்ஜித்தோ இல்லை காரத்தோ இந்த மூன்றாம் அணியின் சடங்கு சம்பிரதாயங்களை செய்யும் தலைமை புரோகிதர் இடங்களுக்கு போட்டி இன்றி கோலேச்சுகிறார்கள்.

மூன்றாவது அணி
கடந்த அக்டோபர் மாதம் நடந்த சந்திப்பில் மூன்றாவது அணி வதந்தி ஆரம்பித்தது.

அதுவும் தேர்தல் காலங்களில் ‘தோழர்களுக்கு’ கூட்டணி கூடாமல் தூக்கமே வராது. கேள்வி கேட்காத கட்சி அணிகளுக்கு, பறிகொடுத்த கட்சியின் இருப்பை கணிசமாக காட்டுவதற்காகத்தான் இந்த முனைப்பு. அந்த படிக்கு இந்த தேர்தலில் சிபிஎம் கொட்டு முரசு ஒலிக்க அறிவித்திருக்கும் அணிதான் இந்த மாற்று அல்லது மூன்றாவது அணி.

பாஜக சார்பு ஊடகங்கள் இந்த அணியை ஆரம்பம் முதலே கேலி செய்து வருவதற்கு காரணம் உள்ளூர ஊறியிருக்கும் பயம்தான். பல ஊடகங்களின் தேர்தல் கணிப்பு படி பாஜகதான் அதிக உறுப்பினர் கொண்ட கட்சியாக வருமென்றாலும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரிகிறது. இதை விட மூன்றாம் அணிக்கு அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே காவிகளின் கலவரத்திற்கு காரணம். அந்த காய்ச்சல்தான் மூன்றாவது அணி ஒன்றுமே இல்லை என சும்மா லாவணி பாட வைக்கிறது. காங்கிரசைப் பொறுத்தவரை தேர்தலுக்கு பிறகு மூன்றை முதலுக்கு கொண்டு வந்து விடலாம் என்பதால் கண்டும் காணாததும் போல இருக்கிறார்கள். இப்போதே சவுண்டு விட்டால் பிறகு பாதிக்கும். பாஜகவும் தேர்தலுக்கு பிறகு இந்த முயற்சியில் இறங்குமென்றாலும் இப்போது எதிர்ப்பதற்கு காரணம் தங்களது எண்ணிக்கை தேர்தலில் குறைந்து விடக்கூடாது என்பதே.

இந்தக் கூட்டல் கழித்தல்களே மூன்றாவது அணியின் அரசியல் மரியாதையை தாங்கி வருகின்றது. அல்லது எதிரிக்கு எதிரி நண்பன் எனும் தத்துவமே மூன்றாவது அணிக்கு உள்ள சந்தை மதிப்பை தக்க வைக்கிறது. ‘இன்னைக்கு முறைப்பான், நாளைக்கு வருவான்’ என்பதால் மாற்று அணியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதற்கு ஒரு தனிச் சிறப்பான மரியாதை இல்லை.

காரத் பத்திரிகையாளர் சந்திப்பு
நிதீஷ் குமார், தேவகவுடா, பிரகாஷ் காரத், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் (பத்திரிகையாளர் சந்திப்பில்)

இப்படி காங்கிரஸ், பாஜக எனும் இரு கட்சிகளது, அணிசேர்க்கை விளையாட்டின் இடைவேளை என்டர்டெயின்மெண்டை செய்கிறோமே என்ற அறிவு கூட போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை என்பதல்ல. இதுகூட இல்லை என்றால் நம்மை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்களே எனும் உயிர் வாழ்தல் குறித்த பயம்தான் அப்படி அம்மணமாக ஓட வைக்கிறது.

ஆகவே இந்த மாற்று அணிக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பும் இல்லை. பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடும் இல்லை. அல்லது மதச்சார்பின்மை என்ற நிலையும் இல்லை. அவர்கள் இருக்குமிடத்திற்கு ஏற்ப கொள்கைகளின் வார்த்தைகள் கூட்டண அகராதிப்படி எடுத்தாளப்படும். காங்கிரசில் இருந்தால் மதச்சார்பின்மை, பாஜகவில் இருந்தால் வளர்ச்சி அல்லது ஊழல் எதிர்ப்பு, அவ்வளவுதான்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துத்தான் போலிக் கம்யூனிஸ்டுகள் முந்தைய ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் ஆதரவை விலகிக்கொண்டனர். அப்போதைய வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக நின்றவர்களில் முலாயம் சிங் முதன்மையானவர். இப்போது மூன்றாவது அணியில் முக்கியமானவர். ஆக அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள்தான் மாற்று அணியில் இடம் பெற முடியும் என்று காரத் அறிவித்தால் கடை உடன் காலியாகும்.

தேவகவுடா கட்சி பெயரில் (மதச்சார்பற்ற ஜனதாளம்) மதச்சார்பின்மை இருப்பது ஒன்றே அவர் எத்தனை பெரிய ஃபிராடு என்பதே பறைசாற்றும். முந்தைய சட்டமன்ற ஆட்சியில் பாஜக ஆதரவைப் பெற்று கர்நாடகத்தை ஆண்டு பின்னர் அவர்களது முறை வரும்போது ஆதரவை விலகிக் கொண்டு மதச்சார்பின்மை பேசும் குமராசாமியும், தேவகவுடாவிற்கும் சந்தர்ப்பவாதம் தவிர வேறு என்ன கொள்கை இருக்கிறது? மாற்று அணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இருப்பதில் என்ன மாற்று வெங்காயம் உள்ளது?

இதே போல குஜராத்  கலவரத்தின் போது மத்திய ஆட்சியில் இடம்பெற்று பதவி ருசி கண்ட ஐக்கிய ஜனதா தளம் இப்போது பாஜக வேண்டாம் என்று மதச்சார்பின்மை பேசுகிறது. சரத்யாதவும், நிதீஷ்குமாரும் பாஜகவின் தயவில் பீகாரில் ஆட்சியை பிடித்து விட்டு இப்போது சண்டமாருதம் செய்கிறார்கள். இவர்கள் நாளைக்கே தேர்தல் முடிந்து காங்கிரஸ் அணிக்கு போகமாட்டார்கள் என்று காசி விஸ்வநாதரே வாக்குறுதி அளிக்க முடியாது. ஆனால் இது கொள்கை சார்ந்த அணி என்று பிரகாஷ் காரத் நம்பச் சொல்லுகிறார்.

மூன்றாவது அணி பிரதமர்கள்
மூன்றாவது அணிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். அதாவது, பிரதமர்கள்….

இதே போல பாஜகவுடன் காலம் தள்ளிய பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசாமில் மாணவர் போராட்டத்தை வைத்து ஆளாகி திவாலான அசாம் கணபரிஷத், பாஜகவுடன் நீண்ட தேனிலவுக் காலத்தில் திளைத்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இவர்களெல்லாம் கொள்கை சிங்கமென்று பேசுவது அசிங்கமல்லவா? ஆனால் அசிங்கத்தை பார்த்தால் அரசியல் தொழில் செய்ய முடியுமா என்று தாபாவோ இல்லை காரத்தோ சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

இந்தக் கூட்டணிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்து கொண்டிருக்கிறார். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் போலிக் கம்யூனிஸ்டுகளோடு பேசி காலரைக்கால் சீட்டு முடிவானால் தானம் தரப்படும் என்று ‘அம்மா’ அலட்சியமாக அறிவித்தாரல்லவா? அதில் எங்களது சுயமரியாதை ஒன்றும் இழிவுபடுத்தப்படவில்லை என்று தா பாண்டியன் கம்பீரமாக பேசியிருக்கிறார். இத்தகைய கோழைகள் கூட்டிய கூட்டத்தில் தம்பிதுரை கட்டதுரை போல இருக்கும் போது போலிக் கம்யூனிஸ்டுகள் கைப்புள்ளைதான் என்பது அழுது கொண்டிருக்கும் குழந்தையைக் கேட்டால் கூட சொல்லி விடுமே?

மேலும் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் அதிமுக, மோடியை ஆதரிக்க வேண்டும் என்று ஜெயாவின் ராஜகுரு துக்ளக் சோ சத்தியக் கடிதாசியே வெளியிட்டிருக்கிறார். அதே போன்று பாஜகவிற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அவர்கள் அம்மா பிரதமர் ஆவதற்கு முன்வரவேண்டும் என்றும் கண்டிஷன் அப்ளை வைத்திருக்கிறார். கரசேவைக்கு ஆளனுப்பிய கட்சி மட்டுல்ல, பாஜக ஆட்சிக்கு தோள் கொடுக்கும் கட்சியாகவும் இருக்கும் அதிமுகவை வைத்துத்தான் இந்த மாற்று அணி என்றால் போலிகளின் அசடு வழியும் முகத்தை துடைப்பதற்கு இந்த உலகில் துணியே இல்லை.

திமுக கூட இந்த தேர்தலில் இதுவரை  காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறது. இந்தக் கொள்ளுதலில் உண்மை இல்லை என்றாலும் அது 3-வது அணியின் ஏனைய கட்சிகளுக்கும் பொருந்தும். என்றாலும் திமுகவை இந்த அணிக்குள் கொண்டு வர போலிகள் ஏன் முயலவில்லை? காரணம் திமுக, அதிமுக இரண்டில் ஒன்றுதான் மூன்றில் வர முடியும் என்பதாலும், போலிகள் ஏற்கனவே அதிமுகவின் தயவில் தமிழகத்தில் இருப்பதாலும்தான். ஒருவேளை ஒரு பேச்சுக்காக கருணாநிதி நானும் மூன்றாவது அணியில் வருகிறேன் என்று சொன்னால் அது ஜெயலலிதாவோடு, காரத்திற்கும் பெரும் தலைவலியாக இருக்கும். மூன்றாவது அணி எனும் மாபெரும் தேசிய நிர்மாண அணியில் இத்தகைய குழாயடிச் சண்டைகளே ஆட்டத்தை நிர்ணயிக்கின்றன என்றால் அதை போலிகள் மறுத்து வாதிடப் போவதில்லை. கேட்டால் பெரும் கொள்கைகளுக்காக சிறு சமாதானங்கள் என்று வியாக்கியானம் செய்வார்கள். அந்த பெரும் கொள்கைகளே சிரிப்பாய் சிரிக்கிறதே என்றால் வேறு என்ன செய்வது, காலத்தின் கோலம் என்று கடிகாரத்தின் மேல் பழி போடுவார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய காரத், “ஊழலில் திளைக்கும் கட்சியாகி விட்டது காங்கிரஸ். மதவாதசக்தியாக உள்ளது, பா.ஜ., இந்த இரண்டு கட்சிகளுமே, ஒரு நாணயத்தின், இரண்டு பக்கங்களைப் போன்றவை. எந்த வேறுபாடுகளுமே, இந்த கட்சிகளுக்கு கிடையாது. எனவே, இந்த கட்சிகளை, தோற்கடிப்பதே, எங்களது நோக்கம்.” என்று முழங்கியிருக்கிறார். ஆனால் மூன்றாவது அணியின் சீமந்திர புத்திர-புத்திரிகளைப் பார்த்தால் ஒரு நாணயத்திற்கு இனி மூன்று பக்கம் உள்ளது என்று நாம் அறிவியலைத்தான் மாற்ற வேண்டும் போல.

அதே போல யார் பிரதமர் என்பதை தேர்தலுக்கு பின்பு இந்த அணியினர் கூடி முடிவெடுப்பார்கள், கடந்த காலத்தில் அத்தகைய அனுபவங்கள் நிறைய உள்ளது என்று சமாளிக்கவும் காரத் தயங்கவில்லை. யார் பிரதமர் எனும் போட்டியில் ஜெயலலிதா, முலாயம், நிதீஷ் என்று பல அரசர்களும், அரசிகளும் அணிவகுக்கும் போது சீட்டுப் போட்டு பார்க்கும் புரோகித வேலையை காரத் செய்யவிருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான்.

சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அம்மாதான் பிரதமரா என்று கேள்விகள் வந்த போது ஓய்வுபெற்ற கம்யூனிஸ்டுகளான வலதுகள் ஆமா அதிலென்ன தவறு என்று ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இன்னமும் தரகர் பணியில் சிறந்து விளங்கும் இடதுகளை அப்படி ஒரு இக்கட்டில் சிக்கவைக்க விரும்பாத ஜெயலிலிதா உடன் மைக்கில் குறுக்கிட்டு அடுத்த பிரதமர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காரத்தை காப்பாற்றினார்.

ஆக பிரதமர் பதவிக்குரிய சண்டை, ஒருவேளை இந்த அணி அதிக இடங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் தூள் பறக்கும். அதே நேரம் சந்தர்ப்பவாதத்தின் வழியில் பதவிகளுடன் தொடர வேண்டுமென்றால் விட்டுக் கொடுத்தால்தான் முடியும் என்பதால் இவர்களுக்கிடையே சமாதான ஒப்பந்தமும் ஏற்படலாம், மறுப்பதற்கில்லை. எல்லாம் வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கையே தீர்மானிக்கும் என்பதால் இவர்களது எண்ணங்களுக்கு இங்கே எந்த முக்கியத்துவமும் இல்லை.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் பெயரைக் கொண்டிருக்கும் விஜயகாந்த் கட்சிக்கு ஏதேனும் பொருள் சார்ந்தோ, இல்லை கொள்கை சார்ந்தோ விளக்கம் தர முடியுமா? கட்சி பெயரை தீர்மானிப்பது முதல், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது வரை திருப்பதி கோவிலில் பூ போட்டு பார்க்கும் இந்த குடும்பமெல்லாம் தமிழகத்தில் ஒரு கட்சி என்று உலாவரும் போது மூன்றாவது அணிக்கு மட்டும் நாம் மரியாதை கொடுக்கக் கூடாது என்றில்லை.

ஆனால் இந்த ‘மரியாதை’யை நாட்டு மக்கள் மாற்றிப் போடுவது எப்போது?

  1. வரிக்கு வரி ….
    வயிறு குலுங்க குலுங்க …..
    வடிவேல் காமெடியை மிஞ்சிட்டிங்க ……..

  2. பாதிப்பேர் எழுந்துநிற்க திராணி இல்லாமல் குச்சி ஊன்றி நிற்கும் அழகே அழகு

  3. காவிரி பிரச்சனையில் இந்த மூணாவது அணியின் நிலைப்பாடு என்ன?தேவேகவுடா ஒரு நிலைப்பாடு ஜெயா மற்றொரு நிலைப்பாடு என்று ஆட்சி கவிழும்.காங்கிரசு பா சா க என்ற இரண்டு கோட்டான்களுக்கு நடுவில் இது ஒரு கருங்கொரங்கு!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க