privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?

கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?

-

சமூக விடுதலையை முன்னெடுப்போம் ! பெண் விடுதலையை சாதிப்போம்!

கொசுவை ஒழித்து நோயைத் தடுக்க துப்பு இல்லாதவர்களுக்கு மங்கள்யான் ஒரு கேடா ? –

பெண்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார இயக்கம்

மக்களிடையே விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதைப் போல, 500 கோடி ரூபாய்க்கு மங்கள்யான் என்ற ஒரு விலை உயர்ந்த பட்டாசை விண்ணில் ஏவி, மக்களின் வரிப் பணத்தைப் பொசுக்கி விட்டது, இந்த அரசு.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். இங்குள்ள நீரையெல்லாம் பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் விற்பனை செய்துவிட்டதோடு  இல்லாமல், இருக்கும் கொஞ்சநஞ்ச நீரையும் பாட்டிலில் அடைத்து ‘அம்மா’ என்ற பெயரில் காசாக்கி வருகிறது ‘ஜெ’ அரசு.

இயற்கை தந்த நீரை பாதுகாத்து மக்களுக்கு இலவசமாக வழங்காமல், தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, செவ்வாய் கிரகத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்குத்தான் மங்கள்யானை விண்ணுக்கு அனுப்பியுள்ளார்களாம். ‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பை யிலும் நெய் வடியும்’ என்பதைத்தான் நினைவு படுத்துகிறது.

குடிநீருக்காக அன்றாடம் மக்கள் அல்லல்படும்போது, ஒரு குடம் குடிநீருக்காக 8 ரூபாய் வரை கொட்டி அழும்போது, இயற்கை தந்த கொடையை, லாபவெறி கொண்டு அலையும் முதலாளிகளுக்கு அற்ப விலைக்கு அள்ளிக் கொடுத்ததை மறக்க முடியுமா? அல்லது மறைக்கத்தான் முடியுமா?

விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் கூட மக்களின் தண்ணீர் தேவைக்காக அல்ல;

எல் – டி போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் செழிக்கவே இத்திட்டத்தை திணித்துள்ளனர். மங்கள்யானுக்கான அதிகபட்ச உதிரிபாகங் கள் தயாரித்துக் கொடுத்ததே இந்த நிறுவனம்தான். இதன்மூலம் இந்நிறுவனம் கோடிக் கணக்கான ரூபாயை லாபமாக சுருட்டிக் கொண்டது. மக்கள் வரிப் பணமோ பொசுங்கி விட்டது. இப்படி பொசுங்கிப் போன மக்களின் வரிப் பணம் 500 கோடி ரூபாய். இப்போது சொல்லுங்கள், இது ஊதாரி அரசா? இல்லையா?

ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், மறுகண்ணில் வெண்ணையையும் வைப்பதுபோல, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் உழைக்காத இந்த ஊதாரிக் கூட்டங்கள் உறிஞ்சி எடுப்பதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்வதும், மறுபக்கம் உழைத்து ஓடாகத்தேயும் மக்களின் வேலையை பறித்து வறுமையிலும், பட்டினியிலும் தள்ளுவதும் கொடுமை இல்லையா? நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் இதை எப்படி எல்லோருக்குமான அரசு என்று சொல்ல முடியும்?

மேலும் கொசுவை ஒழித்து நோயைத் தடுக்க இவர்களுக்கு துப்பு இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ ஏழைகள் தான். பணக்காரர்களோ பாதுகாப்பாக ஏசி அறைகளில் பதுங்கிவிடுகின்றனர். ஏழைகளோ நாள் பூராவும் உழைத்துக் களைத்து வந்தவுடன் அயர்ந்து தூங்க முடியவில்லை. கொசுக்களின் ரீங்காரமும், அதன் கடியும் தாள முடியவில்லை. போர்த்திக் கொண்டால் புழுங்குகிறது, விலக்கினால் கடிக்கிறது. இப்படி அன்றாடம் தூங்காமல் அவதிப்படுவதோடு கொசுக்கடி யால் உருவாகும் நோய்களால் அவதிப் படுவதையும் சொல்லி மாளவில்லை.

மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றால் சரியான மருத்துவம் கிடைப்பது இல்லை. வேறுவழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கு நோயை சரி செய்கிறார்களோ, இல்லையோ காசை மட்டும் ஈவு இரக்கமில்லாமல் கறந்து விடுகின்றனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உழைத்த பணம் முழுவதையும் தனியாருக்கு கொட்டிக் கொடுக்கிறோம். போதாக் குறைக்கு கடன் வாங்கியும் செலவழிக்கிறோம், இப்படி ஆண்டுதோறும் கடன் பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடி. இப்பணம் முழுவதும் மீண்டும் முதலாளிகளின் கஜானாவுக்கே செல்கிறது.

இது போதாதென்று இவர்கள் தயாரிக்கும் கொசுவத்தி சுருள், மேட், ஓடோமாஸ் கிரீம், லிக்கூட், கொசு பேட் போன்ற கொசு விரட்டிகளை வாங்குவதற்கும் நம் உழைப்புப் பணத்தில் கணிசமான தொகையை இழக்கிறோம். இந்த இழப்பு, இதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், ‘இதன் அருமை பெருமை’களைச் சொல்லி நம்மை ஏமாற்றி இவைகளை வாங்க வைக்கும் விளம்பர நிறுவனங்களுக்கும் லாபமாக போய் சேருகிறது.

கொசுவை ஒழிக்க ஒரு உருப்படியான நியாயமான வழிமுறையை தேடாமல், கொசுவலையையும், நொச்சிச் செடிகளையும் தரப்போகிறேன் என்கிறது ‘அம்மா’ அரசு. குடியிருக்கவே வழியில்லாத போது, எங்கு நொச்சிச் செடியை நட்டு வைப்பது?

அப்படி என்றால் இதற்கு வேறு வழியில்லையா? ஏன் இல்லை? இதோ, தென் அமெரிக்க சிறுவன் “நீர்த்தொட்டியில் ஒரு வித ரசாயன மருந்தை கலந்து விட்டால், அம்மருந்து பெண் கொசுக்களை ஈர்த்து கொன்றுவிடும். இதன் மூலம், கொசுவின் இனப்பெருக்கத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்து விட முடியும்” என்று கூறியுள்ளான்.

இச்சிறுவனுக்குள்ள சொற்ப அறிவு கூடவா, ஆற்றல் மிகுந்த நமது விஞ்ஞானிகளுக்கு தெரியாமல் போகும் ? இதைவிட இன்னும் அதிகமாகவே தெரியும். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விடுவது என்பது யாரை ஏய்ப்பதற்கு?

போகாத ஊருக்கு வழி சொல்லும் இந்த அரசுகள் அறிவிக்கும் கொள்கைகளும், திட்டங்களும் உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு அல்ல. உழைக்காத கூட்டங்கள் மேலும், மேலும் செழிப்பதற்குத்தான்.

அதனால்தான், இலவச மருத்துவத்தை படிப்படியாக ஒழித்து தனியார் மருத்துவ மனைகளை கொழுக்க வைக்கத்தான் இந்த அரசுகள் தனியார்மயத்தைப் புகுத்தி வருகின்றன. இதைத்தான் நாங்கள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பெயரில் அரங்கேறும் மறுகாலனியாக்க கொள்(ளை)கை என்கிறோம்.

மங்கள்யான் தயாரிப்பு தனியாருக்கு, தண்ணீர் தனியாருக்கு, கல்வி தனியாருக்கு, மருத்துவம் தனியாருக்கு என்று அனைத்தை யும் தனியாருக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டபிறகு, இவர்களுக்கு என்னதான் வேலை?

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக, இவர்களின் செயல்களுக்கு எதிராக, இவர்களின் கொடுமைக்கு எதிராக, போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதே இவர்கள் வேலை. நம் விரலை எடுத்து நம் கண்ணையே குத்தும் இந்த மக்கள் விரோத அரசுகளை இனியும் நம்மை ஆள அனுமதிப்பது அவமானம். இனியும் இந்த அவமானத்தை அனுமதியோம்! இதற்கு எதிராக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

______________________________

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மாலை 6  மணியளவில் குரோம்பேட்டையில்  தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தெருமுனைக் கூட்டத்திற்கு தோழர் மீனா தலைமை ஏற்று நடத்தினார்.

தோழர் பேசும் போது, “கொசுக்களினால் ஏற்படக் கூடிய வியாதிகளில் குழந்தைகளுக்கு வரும்  டெங்கு காய்ச்சலால் இறப்பு ஏற்படுகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு கொசுக்கடியால் வியாதிகள் வரும் போது பெண்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களது பொறுப்புகள், வேலைச் சுமை அதிகமாகிறது. அருகில் உள்ள பகுதியான செல்லியம்மன் நகரில் பெண்கள் விடுதலை முன்னணி மக்களோடு இணைந்து நடத்திய போராட்டங்களால் பெண்களுக்கான கழிப்பறை, மற்றும் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க போராடி வெற்றி பெற்றோம், இந்த அரசுகள் கொசுவைக் கூட ஒழிக்க வக்கில்லாதவர்கள், அக்கறை அற்றவர்கள். பெண்கள் போராடினல்தான் எதிலும் வெற்றி பெற முடியும்” எனப் பேசினர்.

அடுத்ததாக மாவட்ட செயற்குழு தோழர் அஜிதா பேசும் போது “அம்மா பெயரில் உணவு கடை நடத்தி பெருமைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இந்த அரசுகள் கொசுவை ஒழிக்க வழிகளை கண்டறியவில்லை. மக்களுக்கு கொசுவலை, நொச்சிசெடி கொடுப்பதாக சொல்லி ஏமாற்றுகிறது. கொசுவைத்தடுக்க, கிரீம், மேட், பேட், கொசுவர்த்திச்சுருள், லிக்விட் போன்ற பொருட்களை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கத்தான் உதவி செய்கின்றது. இங்கே இருக்கும் நீர் நிலைகளை சரிசெய்ய துப்பில்லாத இந்த அரசுகள் மங்கள்யான் அனுப்பி செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கிறார்கள். மக்கள் பணம் கோடிகோடியாக  செலவழிகிறது” என்று பேசினார்.

சிறப்புரையாக பு.மா.இ.மு. தோழர் கார்த்திகேயன் பேசினர். “மக்களைப் பற்றி சட்டமன்றமோ, பாராளுமன்றமோ, எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவதில்லை, மக்கள் வர்க்கமாக இணைந்து நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும்” எனப் பேசினார்.

கூட்டத்திற்கு பகுதியிலிருந்து பெண்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், கொசுவை ஒழிக்கவும் பிற சமூக பிரச்சனைகளுக்கும் பெண்கள் அமைப்போடு இணைந்து போராடுவோம் என்கிற கருத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி

பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95.
தொடர்பு எண்: 9841658457