முகப்புவாழ்க்கைஅனுபவம்ஆட்டோவுக்கு ரேட்டு - மல்டிபிளக்சில் பூட்டு !

ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !

-

நான் இந்தப் பதிவில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆட்டோவில் கட்டண மீட்டர்கள் வைக்கக் கூடாது என்றோ, அல்லது அதில் வைத்திருக்கும் கட்டணத்தை விட அதிகமாக வாங்குவது நியாயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஆட்டோ கட்டணத்தை ம‌ட்டும் பெரிதாகப் பேசும் அல்லது எழுதும் நண்பர்களிடம் கேட்பது ஒன்றுதான். ஆட்டோக்காரர்களிடம் மட்டும் “ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல” என்று சர்வ சாதரணமாக‌ கேட்கும் நாம் கீழே நான் சொல்லியிருக்கும் விசயங்களை எப்படி அணுகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

ஆட்டோ
ஆட்டோக்காரர்களிடம் மட்டும் “ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல” என்று சர்வ சாதரணமாக‌ கேட்கும் நாம்…

இன்று பெருநகரங்களில் இருக்கும் திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு சாதரண மினரல் வாட்டர் பாட்டிலின் விலை என்ன? அதே வாட்டர் பாட்டிலை வெளியில் வாங்கினால் அதன் விலை என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு பாப்கார்ன் விலையில் வெளியில் உள்ள கடைகளில் அதேப்போல் இரண்டு வாங்க முடியும். ஆனால் அங்கெல்லாம் யாரும் ஏன்டா இப்படி விற்கிறீங்கனு பொங்குவதைப் பார்க்க முடியவில்லை. வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

இதைவிடக் கொடுமை வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று வாசலியே போர்டு மாட்டிவிட்டு, அதற்கும் ஆள் வைத்துப் பரிசோதனை செய்கிறார்கள். டிக்கெட் எடுத்து தான் உள்ளே வருகிறேன், அதேப்போல் என்னுடைய பணத்தை கொடுத்து தான் வெளியில் இருந்து உணவுப் பொருளும் வாங்கி வருகிறேன். ஏன்டா இவைகளை நான் உள்ளேக் கொண்டு போகக்கூடாது என்று எவரும் கேட்பதில்லை. திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்குச் செய்யும் செலவை விட, இங்கு வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அநியாயமாகக் கொடுக்கும் விலையின் செலவு அதிகம். திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு கணக்குக் கேட்காமல் வாங்கிச் சாப்பிட்ட‌ நாம் தான் வெளியில் வந்து, நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று “ஆட்டோ வேணுமா சார்?” என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

மல்டிபிளெக்ஸ்
திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட‌ நாம், நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று “ஆட்டோ வேணுமா சார்?” என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் புக் பண்ணும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், வாரத்தில் சாதரண நாட்களில் இருக்கும் டிக்கெட்டின் விலையை விடச் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை நூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மோசடி முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தான் இருந்த‌து, ஆனால் இப்போது வார இறுதி நாட்களிலேயே இப்படி விலையேற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பஸ் முதலாளிகள் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் டீசலுக்கு அதிக விலை கொடுப்பதில்லை, அதே போல பஸ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் அதிகச் சம்பளம் கொடுத்தும் விடப் போவதில்லை. “அப்புறம் எதற்கு இந்த விலையேற்றம்?” என்று  கேட்கும் துணிவு எவருக்கும் இல்லை.

ஒரு பஸ் டிக்கெட்டிற்கு நூறு முதல் முந்நூறு ரூபாய் அதிகமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் கொடுத்து பயணித்து விட்டு விடியற் காலையில் பஸ்சை விட்டு இறங்கி போக வேண்டிய இடத்திற்காக ஆட்டோவை தேடும் போது, நமக்காகவே காத்திருந்தது போல் வந்து “எங்க சார் போகனும், வா சார் உட்கார்” என்று கேட்கும் ஆட்டோகாரரிடம் தான் “மீட்டர் போட்டா வ‌ரேன்” என்று சட்டம் பேசுவோம்.

ரெஸ்டாரண்ட் டிப்ஸ்
பெரிய ஹோட்டல்களில் கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல.

இப்போது சாதரணமாக ஒரு ஹோட்டலில் சென்று டிபன் ஆர்டர் செய்தாலே அதைக் கொண்டு வந்து பரிமாறும் சர்வர், இறுதியில் பில் கொடுக்கும் போது நமது முகத்தைப் பார்க்கிறார். அவருக்கும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் டிப்ஸ் வைக்க வேண்டும். சாப்பிட்டது ஐம்பது, அதற்குக் கொடுக்கும் டிப்ஸ் பத்து. இன்னும் கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் டிப்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். தனது கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல. இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம்.

நான் இப்போது இருக்கும் ஹைதராபாத்க்கு வந்தவர்களுக்குத் தெரியும். பிரியாணி என்றால் அது பாவர்ஜி ஹோட்டல் என்று. அந்தக் கடையின் பிரியாணி என்றால் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்பவனும் சாப்பிடுவான். அந்த அளவிற்குப் பிரியாணி சுவையாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிட எப்போதும் நமது ஊரில் நடக்கும் கல்யாணப் பந்தி போல் தள்ளுமுள்ளாகத் தான் இருக்கும். இந்த ஹோட்டலில் பில் போடுவதும், பணம் வங்குவதும் நமக்குப் பரிமாறும் சர்வர் தான். மொத்தமாகப் பில் போட்டு கொடுக்கும் போதே அவருக்குத் தேவையான டிப்ஸை அவரே பில்லில் போட்டு நம்மிடம் வாங்கிக் கொள்வார். ஒரு வேளை பில்லில் போட மறந்து விட்டால் அவரே கேட்டு வாங்கிக் கொள்வார். நாம் சாப்பிடும் தொகைக்கு ஏற்ப அவர்களின் டிப்ஸும் இருக்கும்.

இப்போது பயணத்திற்கு “நாங்க இருக்கோம் வாங்க” என்று நம்மைக் கனிவாக அழைப்பவர்கள் கால் டாக்சி வைத்திருப்போர். இவர்கள் இப்போது ஒரு சிஸ்டம் வைத்திருக்கார்கள், ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட‌ கிலோ மீட்டர் நாம் பயணம் செய்யலாம் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். இதைப் பிளான் செய்து நாம் புக் பண்ணினால் என்ன ஆகும் என்பதைக் கீழே விளக்குகிறேன்.

நாம் போக வேண்டிய இடத்திற்கு ஆகும் நேரம் கால் மணி நேரம், அப்படியானால் வருவதற்கும் கால் மணி நேரம், சென்ற‌ இடத்தில் நம‌க்கு ஆகும் வேலைக்கான நேரம் அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒரு மணி நேரம் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் நாம் அந்தக் கால் டாக்சியில் உள்ள ஒரு மணி நேர பிளானை புக் செய்கிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போகும் போது கால் மணி நேரத்தில் சென்று விடுகிறோம், அங்குள்ள வேலையையும் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வரும் போது டிராபிக் காரணமாக நாம் பத்து நிமிடம் தாமதமாக வருகிறோம் என்றால் அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதேப்போல் மற்றொரு ஒரு மணி நேரத்திற்கான பணம். இரண்டு மணி நேரத்திற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உண்டு. டிரைவரிடம் எப்படி என்று கேட்டால் அவர் மீட்டரை காட்டுவார். சார் எனக்கு இதில் எதுவும் கிடைக்காது, நீங்கள் குறைத்துக் கொடுத்தால் எனது சம்பள‌த்தில் பிடித்துக் கொள்வார்கள் என்று கையை விரிப்பார். இதையே ஒர் ஆட்டோ டிரைவர் செய்தால் நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்கும்.

ஆட்டோ டிரைவர்
சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார்

இன்றைக்கும் சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு சில‌ ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார். அது மட்டுமல்ல குடித்துவிட்டு நடுச் சாலையில் விழுந்துக் கிடப்பவ‌ர்களைச் சற்று ஒதுக்கி போடுவதற்கோ அல்லது அவருடய ஆடையைச் சரிசெய்வதற்கோ வழியில் செல்லும் எவருக்கும் மனசு வராது. அதையும் மனிதாபிமானம் உள்ள ஓர் ஆட்டோ டிரைவர் செய்வதை நாம் கைக‌ட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.

ச‌மீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், முதியோர்களை இன்றைய தலைமுறைகள் எவ்வாறு கவனிக்கின்றன என்ற தலைப்பில் பேசிய ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியது : “இன்றைக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரும்பாலான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மனிதாபிமானம் உள்ள ஏதாவது ஒரு சில‌ ஆட்டோ டிரைவர்கள் தான். இந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை.”

சமீபத்தில் நான் சென்னை வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரிடம் மீட்டர் கட்டணம் பற்றிப் பேசினேன். “என்னங்க மீட்டர் போட்டு ஓட்டினா லாபமா? நஷ்டமா?” என்றேன், அவரோ, “எனக்கே தெரியல சார்” என்றார். அப்புறம்,”நஷ்டம் தான் சார். எங்க சார்!! சவாரி கிடைக்க மாட்டேங்குது, எங்களுக்கு உறுதியாக இத்தனை சவாரி கிடைக்கும் என்று இருந்தால் லாபமாக இருக்கும். ஆனால் இப்போது சவாரி கிடைப்பதே குறைவாக இருக்கு” என்று சொன்னார்.

அவர் கூறியதும் எனக்கு உண்மையாகப் பட்டது, காரணம் இவர்களுக்கு இன்று இத்தனை சவாரிகள் கிடைக்கும் என்ற உறுதி இல்லை. ஆனால் அன்றைக்கும் அவர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு மேல் மட்டத்தில் இருப்பவர்களையே அசைத்துப் பார்க்கிறது, இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். நம்மிடம் வாங்கும் பத்து, இருபது ரூபாய்களைக் கொண்டு அவர்கள் ஒன்றும் பங்களா கட்டிவிட முடியாது. அவர்கள் குடியிருப்பது என்பதோ வாடகை வீடுகளிலும், சேரிகளிலும் தான். அவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதாக உயர்ந்தாகவும் இல்லை.

மல்டிபிளெக்ஸ்
பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களின் சட்டையைப் பிடிப்பது எதனால்

இந்த ஆட்டோ டிரைவர்களுக்குக் கேட்கும் தொகையை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கும் சில பயணிகளால் தான் இந்த பிரச்சனை என்றுப் புகார் வேறு கூறுகிறார்கள் முற்போக்காளர்கள். இவர்களால் தான் இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரிடமும் அதிகமாக பணம் கேட்பதாகவும் எழுதுகிறார்கள். இப்படிக் கொடுப்பவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும் என்று அறிவுரை வேறு. என்ன கொடுமை… கண்டிப்பாக நான் கொடுக்கும் பத்து அல்லது இருபது ரூபாய், அவனுடைய குழந்தைக்குப் பிஸ்கட் ஆகத் தான் வீட்டுக்கு போகும். இப்படிக் கொடுப்பதை நிறுத்தி தான் நான் திருந்த வேண்டும் என்றால் நான் திருந்தாமலே இருந்துவிட்டுப் போகிறேன்.

பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களின் சட்டையைப் பிடிப்பது எதனால். மேலே சொல்லியிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் எந்தப் பத்திரிகையும் எழுதியதாகவோ அல்லது ஊடகங்கள் பொங்கியதாகவோ தெரியவில்லை. காரணம் இந்தப் பெரிய கார்பரேட் முதலாளிகளின் விளம்பரம் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தேவை. இவர்களில் நியாயம், அநியாயம் எல்லாம் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தான்.

நன்றி நாடோடியின் பார்வையில்

 1. Dear Author,

  Please note, we have to differentiate between luxuries and necessities. Luxuries – People who are going to hotels, cinemas, call taxis (as per their own wish), it may be only 2 or 3 percentages. But Necessities – poor and middle class people needs it service every day, it is must for them, example Auto, most of the public are using auto for going hospitals, for jobs, and for emergency issues……, also the percentage of users are above 50% (unfortunately we do not have proper public transport for most of the small distance areas, and it is too crowds in peak time). I regret to note that your comparison is meaning less.

 2. நான் உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன் . எந்த ஆட்டோ டிரைவரிடமும் நான் இதுவரை பேரம் பேசியது இல்லை . நான் பயணித்த ஆட்டோவின் டிரைவர்கள் எல்லாருமே ஒரு சாதாரண மனிதர்களாக குடும்ப கஷ்டத்தை புரிந்தவர்களாக பயணிகளின் நிலைமையை தெரிந்தவர்களாக தான் இதுவரை இருந்து இருக்கிறார்கள்.
  நான் ஆட்டோ பிடிக்கும் போதே அப்படிப்பட்ட ஆட்டோவை தான் இதுவரை பிடித்துள்ளேன். அல்லது எனக்கு அமைந்தவர்கள் அப்படியாக இருக்கலாம்.
  இப்படி பட்ட ஆடோக்காரர்களிடம் அவர்கள் கேட்பதை அப்படியே கொடுக்கலாம் அவர்களும் நியாயமாக தான் கேட்பார்கள். ஆனால் இதை எல்லா ஆட்டோ காரர்களுக்கும் பொருத்தி பாக்க முடியாது .
  ஒரு ஸ்டாண்டில் இருக்கும் முப்பது ஆட்டோக்களில் நான்கு பேர் பயணிகளுக்கு நண்பனாக இருந்தாலே பெரிய விஷயம் பெரும்பாலான ஆட்டோகாரர்கள் பயணிகளிடம் உண்மையாக இருப்பதில்லை .
  நம்மிடம் உண்மையாக நடந்து கொள்ளும் ஆட்டோகாரர்களுக்கு அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்கலாம் . உண்மையாக நடக்காதவர்களிடம் பேரம் பேசுவது தப்பில்லை அதே நேரத்தில் இப்படிப்பட்டவர்களின் ஆடோகளில் ஏறுவதை தவிர்க்கலாம்

 3. நல்ல கட்டுரை. குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து விஷயங்களும் மிகச் சரியே!நான் எப்போதும் ஆட்டோவில் ஏறினால் பேரம் பேசுவதில்லை.

  ஆனால் வேறு இடத்தில் அநியாயம் நடப்பதால் நான் செய்வதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்னும் வாதம் சரியல்ல.

  பிறகு எல்லா கொலைக் கைதிகளும், திட்டமிட்டு வெளி நாட்டில் இருந்து இங்கு வந்து கொலை செய்தவர்களுக்கு விடுதலை என்றால் எங்களுக்கு ஏன் பாரபட்சம் என்று கேட்பதற்குச் சமமாகிவிடும்.

 4. ஐயா,
  அறுபது ரூபாய் தூரத்துக்கு 100 ரூபாய் 120 ரூபாய் கேட்கும் போது என்ன செய்வது. மீட்டர் ரேட் என்று பேசவே கூடாது என்று நினைப்பவர்களைப்பற்றி என்ன சொல்வது? பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் கூப்பிட்டால் வர மறுக்கும் போது அவர்களைப் பாராட்டவா முடியும்? இவர்களுக்கு நடுவே ஓரிருவர் மட்டும் மீட்டர் ரேட்டுக்கு ஓட்டுகிறார்களே அது எப்படி?

 5. ஆதாரமான ஒன்றை மறந்துவிட்டு, இக்கட்டுரை ஆசிரியர் இதை பேசுகிறார். படம் பாக்க போகும் போது தெரிந்தே தான் நீங்கள் செலவு செய்கறீர்கள். எல்லார்க்கும் ஒரே வெலை தான். ஆட்டோ அப்படியில்லை, எங்கே எமாற்றபடுகிறோமோ என்று தான் தோன்றுகிறருது.

 6. தீயேட்டர்காரனா இருந்தாலும் சரி, ஆட்டோ ஒட்டுரவனா இருந்தாலும் சரி, அநியாமாய் பணம் பிடுங்குவது தவறு தான்….. சர்வர் கம்பீரமாக டிப்ஸ் கேட்டு வாங்குவதும், கேண்டீனில் இரண்டு மடங்காக ரேட் வாங்குவதும் ஆட்டோகாரன் தப்பை நியாப்படித்தாது…. தவறு எங்கு நடந்தாலும் கண்டிப்பாக தண்டிகப்பட வேண்டும்….. தொழிலாளி தப்பு செய்தால் பின்னால் கொடிப்பிடிப்பதை வினவு கைவிடவேண்டும்… இதேயெல்லாம் சரி செய்ய என்ன நடைமுறை என்று ஒரு கட்டுரை வேண்டுமானால் கிழிக்கலாம்…….ஜெய் இந்த்….

 7. சரி வினவு… இதே கட்டுரைக்காரர் சொல்ல ”மறந்த கதை” பற்றி சொல்கிறேன்
  1) சென்னை ஆடடோ மட்டும் ஏன் இவ்வளவு காஸ்ட்லி.. கேரளா ஆந்திரா ஆட்டோகாரர்கள் மட்டும் ஏன் பெட்ரோல்ல ஓட்டாம தண்ணியிலயா ஓட்றாங்க….
  2) பல ஆட்டோக்காரர்கள் சர் சர் என்று பல முறை ராங் சைட்டில் வருவார்கள்… கேட்டால்.. சென்னைத் தமிழில் பதில் கூறுகிறார்கள்..
  3) அது சரி.. வினவு ஏதாச்சும் ஆட்டோ ஸ்டாண்டுல யூனியன் ஆரம்பிக்கப் போவுதா… உண்மைய சொல்லுங்களேன்…

 8. ஏன் போகவேன்டும் சினிமாவுக்கு?……….. சினிமாவுக்கே போகக்குடாது ……….
  அஙகு சினிமாவா காட்டுகிரார்கல்?………4 பைட் ,4 பாடல்,8 காமடி,2 சென்டிமன்ட்….
  இது யாரை உருவக்குகிரது?……….. இதையெல்லாம் சொன்னால் கேட் க மாட்டேன்……..என் கிரார்கல்… தக்கை மனிதர்கல்………

 9. நல்ல கட்டுரை.

  // இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம் //

  விலை அதிக துணிமணிகளை கேள்வி எதுவும் கேட்காமல் கேட்ட விலை கொடுத்து மூட்டை முடிச்சோடு வெளியே வந்து பத்து ரூபாய்க்கு ஆட்டோகாரரிடம் பேரம் பேசுபவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழக்கத்தை மற்ற பல இடங்களிலும் பார்க்க முடியும். ஆடம்பர இடங்களில் கேள்வி கேட்காமல் பணத்தை விட்டெரியும் பந்தா! தெருவோர கடைக்காரர்களிடம் பேரம்! அந்த பத்து ரூபாய் காசை விட ஆட்டோக்காரரை வென்று வெற்றி வாகை சூடி விட்டதாய் தோன்றும் ஈகோ மனப்பான்மையும் காரணமோ என தோன்றுகிறது.

 10. சொகுசான வசதிகளுக்கும் அன்றாட தேவைக்கும் வித்தியாசம் இருக்கிறது . சென்னையோட மக்கள் தொகையில் சினிமாவிற்கும் ஷாப்பிங் மாலுக்கும் செல்பவர்கள் 1% கூட கெடையாது , அதுவும் அவர்களது சொகுசான வசதிகளுக்காக அவர்கள் தேடி கொள்வது. ஆட்டோக்கள் அன்றாட வாழ்க்கைக்கு நகர மக்கள் உபயோகபடுத்துவது . அதில் அவர்கள் மீட்டர் போடா மாட்டேன் . இவ்வளவு தந்தா தான் வருவேன்னு பேசினால் அதை நீங்கள் எப்படி ஆதரிகிறீர்கள். சொகுசான தேவைகளுக்கும் அன்றாட தேவைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.

  ஒரு சில ஆட்டோக்கள் மீட்டர் போட்டு ஓட்டுகிறார்களே. அவர்களுக்கு மட்டும் இது எப்படி கட்டு படி ஆகிறது . நம்ம ஆட்டோக்கள் ஓடுகிறது . அவர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகிறது . தொழிலாளர் ஆதரவு என்ற பெயரில் அநியாயத்தை ஆதரிக்க கூடாது . கால் டாக்ஸி ல ஆட்டோகாரங்க கேட்குற அதே காசுக்கு A/C வண்டில சொகுசாவே வந்துடறாங்க. இன்னும் சொல்லனும்ன ஆட்டோவ விட கார் பாதுகாப்பு அதிகம் .

  குறிப்பு: சில தினங்களுக்கு முன்னாடி பத்திரிகைகள்ல படித்த செய்தி . பயணியோடு சென்று கொண்டு இருந்த நம்ம ஆட்டோவை தொழிற்சங்க ஆட்டோவை சேர்ந்தவங்க தாக்கி அதை நடு ரோட்டிலேயே தலை குப்பற கவிழ்த்து போட்டு இருகிறார்கள் . (நம்ம ஆட்டோ டிரைவரையும் அடித்தார்களா என்று தெரியவில்லை???). கம்மியான விலைக்கு ஓட்டுறதால தொழிற்சங்க ஆட்டோக்களுக்கு வருமான பாதிப்பாம். இதுக்கு பெயர் தான் தொழிற்சங்கமோ??? அந்த ஆட்டோல பயணித்த பயணியை பற்றி கூட கவலை படாத தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் !!!!

  இடது சாரி சிந்தனை மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொண்டது எனில் மக்களுக்கு நன்மை பயக்கும் “நம்ம ஆட்டோ” போன்றவர்களையும் மீட்டர் போட்டு ஓட்டுபவர்களையும் ஊக்குவித்து நீர் மற்றவர்களுக்கு ஆதரவளிக்காதிரும்

  • வினவு ஆரம்பத்திலிருந்தே அடாவடி ஆட்டோக்காரர்களை நியாயப் படுத்தியே கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்டோக்காரர்களை சக தொழிலாள தோழர்களாக கரிசனத்துடன் அணுகும் வினவு அதில் பயணித்து சுரண்டப்படும் பொதுஜனம் பற்றி துளி கூட அக்கறையில்லாத தொனியே தெரிகிறது.

   ஒரு நாளைக்கான தேவைகளுக்குக் கூட சவாரியே வருவதில்லை என்று ஆட்டோக்காரர்கள் கவலைப் படுவதாக பதிவெழுதும் வினவிற்கு தெரியுமா? அடாவடியான ஆட்டோக் கட்டணத்தை தருவதற்குப் பதிலாக நடுத்தர வர்க்கத்தினர் பலரும் கால் டாக்ஸியிலேயே பயணித்து விடுகிறார்கள் என்ற நிஜம்! ஏனென்றால் பெரும்பாலான சமயங்களில் கால் டாக்ஸி கட்டணத்தை விட அதிகமாக கேட்கிறார்கள் அடாவடி ஆட்டோக்காரர்கள். ஆட்டோக்காரர்கள் அனைவரும் மீட்டர் கட்டணம் மட்டும் வசூலிக்கத் தொடங்கட்டும்; நிறையப் பேர் பயணங்களுக்கு ஆட்டோக்களை விரும்புவார்கள்; அதன் மூலம் நிறைய சவாரிகள் கிடைக்கும். சும்மா நின்றாலும் நிற்பேன்; ஆனால் நியாயமான கட்டணத்திற்கு வர மாட்டேன். எவனாவது அவசரத்திற்கு ஆட்டோக்களில் பயணிக்க ஆள் மாட்டினால் அவன் தலையில் மொளகாய் அரைத்தால் எப்படி போதுமான சவாரி கிடைக்கும்?
   வினவு அநியாயத்திற்கு ஆட்டோக்காரர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் அதனுடைய மற்ற கட்டுரைகளின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகும். வினவென்றால் எப்போதுமே தொழிலாளியின் நியாயத்தை மட்டுமே பேசுமென்று.

 11. இந்த கட்டுரை படித்தவுடன் நிச்சயம் ஒன்று நாம் அனைவரும் தெரிந்துகொள்ள செய்தி ஆட்டோக்காரர்கள் மனிதர்கள் தான்…ஆம் உண்மை..

  ஆனால் இந்த பதிவில் குறிப்பிட்ட / குறிப்பிடுகின்ற விஷயங்கள் மிக முக்கியமாக இவர்கள் குறிப்பிடுகின்ற மக்கள் வெறும் 5% அல்லது அதிக பட்சம் வைத்தாலும் கூட 10% மக்கள் மட்டும்தான் இருக்க முடியும்… மிதமுள்ள 90% மக்களின் வாழ்க்கை முறை இந்த கட்டுரை பதிவு செய்யவில்லை என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை…இந்த பதிவின் முக்கியமான நோக்கமாக தேடுவது அல்லது உண்மை நிலைமையை மறைத்து பொதுமக்களின் பரிதாபம் தேடும் நிலையில் தான் உள்ளது…

  எவ்வளவோ சான்றுகள் இன்னும் ஏன் லட்சக்கணக்கான மக்களின் சாட்சியமாக சொல்லலாம் இந்த “ஆட்டோ ஓட்டுனர்கள்” செய்யும் பிடிவாதம் / மரியாதை இன்மை / இறங்கும்போது அடாவடி இன்னும் பிற …இங்கு நாம் ஆணித்தரமாக பதிய விரும்புவது எல்லாரும் நீங்கள் குறிப்பிடுகின்றது போல் மால்களுக்கும் / கேளிக்கை இடங்களுக்கும் / பந்தாவாக ஊர் சுற்றுகின்றன மக்கள் இல்லை கிட்டத்தட்ட 90% மேல் உள்ள மக்கள் தங்களின் மாதாந்திர சம்பளம் சரிவர கிடைக்கப்பெறாமலும் அந்த கடன் / இந்த கடன் / மனைவி / குழந்தைகளின் படிப்பு / இன்னும் எண்ணில் அடங்கா பிரச்சனைகள் உள்ளன … இந்த நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் நிலமை அவர்களின் குறைந்த பட்ச ஆட்டோ தேவை என்ன வென்று உங்களுக்கு தெரியுமா????
  அப்படி உங்களுக்கு தெரிந்து இருந்தால் இந்த கட்டுரை நீங்கள் பதிவு செய்து இருக்க மாட்டிர்கள் பின் இந்த மாதிரி பரிதாப அனுதாப செய்கின்ற மாதிரி எழுதி இருக்க மாட்டிர்கள்…

  இன்றைய ஏழை & நடுத்தர மக்கள் உள்ள சென்னை மக்களின் நிலைமை மற்றும் அவர்களின் குறைந்த பட்ச தவிப்பு எதுவும் அறிந்தவராக இல்லை.. இந்த மக்களின் குறைந்தபட்ச ஆட்டோ உபயோகிக்கும் காரணங்கள் :

  1) மருத்துவமனைக்கு அவரச நேரங்களில் செல்வது
  2)அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையம்
  3)வயதானவர்கள் / பெண்கள்
  4)ஏதேனும் அவரச காரணக்களுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் இதுப் போன்ற நியாமான காரணக்களுக்காக “நாம் இங்கே குறிப்பிடுவது கிட்டத்தட்ட 90% நடுத்தர மற்றும் சாதாரண பொதுமக்களைப் பற்றிதான்”…. இப்படி மேலே நான் குறிப்பட்ட சில காரணத்திற்காக நாம் ஆட்டோவை பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை மற்றும் கட்டாயம் ஏற்படுகிறது இந்த சந்தர்ப்பத்தை நம் ஆட்டோ ஓட்டுனர்கள் வரம்பு மீறி அடாவடியாகத் தான் பொதுமக்களிடம் பணம் பெறுகிறார்கள்…

  சும்மா பொத்தம் பொதுவாக உங்களின் கருத்து திணிப்பை மக்களிடம் பதிவு செய்யாதிர்கள்…ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல என்னிடம் 100…இன்னொருவனிடம் 150..இன்னொருவனிடம் 75….இப்படி செய்வது இந்த தொழில் மட்டுமே….அதனால் தான் கட்டண முறைமையை வேண்டும் என்று சொல்வது என்ன தவறு.

  பணக்காரன் ஆட்டோ பக்கமே வரமாட்டான். அவன் கார்ல போயிருவான். நடுத்தரம் மற்றும் அடிதரம் மக்கள் அவசரத்துக்கு ஆட்டோ வேணும்னா அவ்ளோதான்.
  அன்றாடம் ஆட்டோ என்பதை மக்கள் அவசரத்துக்கு கூட வேணாம்னு மாறினதுக்கு யார் காரணம்? ஆட்டோ ஓட்டிகள் தான?

  இப்பவும் பல ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் விலை நிர்ணயம் செய்த பின் முதல் இருந்ததை விட அதிகம் சம்பாதிப்பதாக தான் சொல்கிறார்கள்.

  ஆனா மீட்டர் போட்டு ஓட்டினா நிறைய சவாரி போக வேண்டியிருக்கும். மொதோமாதிரி ஒன்று அல்லது இரண்டு சவாரியில் நாளுக்கான சம்பாத்தியத்தை பெற்றுவிட்டு முகாவீசம் சும்மாவே பொழுது ஓட்ட முடியாது.

  மேலும் பழைய petrol ஆட்டோ இல்லாமல் இப்போ நிறைய LPG வண்டிகள் ஓடுது.
  இப்போ நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணம் கட்டுபிடி ஆவலன்னு சொல்றதெல்லாம் பம்மாத்து.

  “எப்பொழுது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை முறையாக பயன்படுத்துகின்றார்களோ அன்று தான் அனைத்து பொது மக்களின் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்…”

 12. I don,t agree . This is purely one side story.. Neglating common man interest .. In fact if they use meter they will earn more , because lots of people will use auto, this automatically increas their revenue.

  Not only that once people know the distance and auto charges which is going to be as per meter then many people will make up their mind to use the auto rather then using other mode…

  This is the success of Mumbai auto. In Mumbai people use more auto then other public transport because auto driver will charge as per meter…

 13. I agreed with Mr.samoogam. Vinavu is speaking about those 10% where it is forgot the remains middle class and lower lever people and their necessity. I have travelled all over the country and i have never seen like pathetic auto system in tamilnadu.
  Now a days people use call taxi rather than auto as it is cheaper than auto. First Auto drivers should make trust with common people so that their day to day life will get improve.

Leave a Reply to Prabhu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க