மலேசிய விமான விபத்துக் குறித்த செய்திகளை உலகம் அனுதாபத்துடன் கவனித்து வருகிறது. இந்த செய்திகளை தமிழக ஊடகங்களில் படித்தபோது ஒரு செய்தி மட்டும் துருத்திக் கொண்டு தெரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் பயணம் செய்ததாக ஊடகங்கள் எழுதின. இப்படி குறிப்பிடுவது வழக்கமானதுதான் என்றாலும், அந்த சென்னை பெண் பற்றிய தகவல்கள் சற்றே கவனிக்க வைத்தன.

அவர் பெயர் சந்திரிகா சர்மா. 51 வயது. சென்னை வேளச்சேரியில் கணவருடன் வசிக்கும் இவர் மீனவர் நலன்களுக்காக பணிபுரிந்து வருகிறார் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மங்கோலியா செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டு விட்டார் என்றும் செய்திகள் தெரிவித்தன. ஓர் உயிரின் இழப்பு என்பது நிச்சயம் வருந்தத் தக்கதுதான். இதன்பொருட்டு அவரது குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் இச்செய்தி இந்த பரிதாபத்துடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை.
சென்னை வேளச்சேரியில் உயர்வர்க்க பணக்கார குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் சர்மா பெண் ஒருவருக்கும் மீனவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர் உள்ளூர் மீனவர்களின் சிக்கல்கள் குறித்து பேச மங்கோலியாவுக்குச் செல்கிறார் என்றால் அது மிகவும் வினோதமாக இருக்கிறது. ஹரியானாவை சொந்த ஊராகக் கொண்ட இந்தப் பெண்மணி, மும்பை டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் படித்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் மேற்படிப்புப் படித்து டெல்லியில் பணிபுரிந்துள்ளார். இதில் எதுவுமே மீனவர் வாழ்க்கையுடன் பொருந்தவில்லை. மீனவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை கேள்வி ஞானத்தில் கூட அறிந்திருக்க வாய்ப்பற்ற இவர் எப்படி மீனவர் போராளியானார்? பத்திரிகை செய்திகளைப் படித்தபோது இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது.
International Collective in Support of Fishworkers (ICSF – மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஆதரவான பன்னாட்டு கூட்டமைப்பு) என்ற தன்னார்வக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார் சந்திரிகா. இந்தியா, லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் இந்த என்.ஜி.ஓ.வில் (தன்னார்வ தொண்டு நிறுவனம்) கடந்த 19 ஆண்டுகளாக இவர் பணிபுரிந்துள்ளார். சென்னையில் இருந்தபடியே உலக நாடுகளுக்குப் பறந்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளான்மைக்கான அமைப்பு மங்கோலியாவில் நடத்தும், ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் மண்டல மாநாட்டுக்குச் செல்வதற்காக அவர் மலேசியா வழியே பெய்ஜிங் சென்றுள்ளார். அப்போதுதான் விபத்து நடந்துள்ளது.
சென்னையில் இவருடன் பணிபுரிபவர்களும், நண்பர்களும் ‘‘சந்திரிக்காவின் இழப்பு மீனவ சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு’’ என்று பேட்டிக் கொடுத்துள்ளனர். உலகளாவிய அளவிலான மீனவர் சிக்கல்கள் தொடர்பான செய்திகளை உள்ளூர் மீனவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் இவர் முக்கியப் பங்காற்றி உள்ளாராம். மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொண்டாராம்.
‘‘அவர் மிகவும் எளிமையாக பழகுவார்’’ என்கிறார் தேசிய மீனவர் பேரவையின் அகில இந்தியத் தலைவர் இளங்கோ. தேசிய மீன்பிடித் தொழிலாளர் பேரவையைச் சேர்ந்த எம்.ஜே.விஜயன், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்புகளான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு… ஆகியவற்றின் கொள்கை முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்தும் நபராக சந்திரிகா இருந்தார்’’ என்கிறார்.
இந்தப் பின்னணியில் இதை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம். ஒன்று, உண்மையிலேயே மீனவர்கள் மத்தியில் சந்திரிகா அப்படி என்னதான் பணியாற்றினார்? இரண்டு, அவர் கலந்து கொள்வதற்காகச் சென்ற மங்கோலியா கருத்தரங்கில் என்ன விவாதிக்கப்படுகிறது? இதில் முதல் கேள்விக்குப் பதில் தேடினால் கடும் அதிர்ச்சி. சந்திரிகா சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலாளர்களின் நலன்களுக்காக பணிபுரிந்ததாக எல்லா ஊடகங்களும் எழுதுகின்றன. ஆனால் உண்மையில் அவர் சிறிய மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியை அப்பட்டமாக செய்துள்ளார். மேலும், கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும், கடற்கரை சீரழிக்கப்பட்டதற்கும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழில்தான் காரணம் என்று அவரது தன்னார்வ நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. அவரது ஐ.சி.எஸ்.எஃப். நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘மீன்பிடிக் குறித்து உயிர்ச்சூழல் அணுகுமுறை’ என்ற பிரசுரத்தைக் கவனியுங்கள். இது மிகவும் வழக்கமான என்.ஜி.ஓ. வகை மாதிரி துண்டு பிரசுரம்தான். ஆனாலும் மிகவும் அப்பட்டமாக மீனவர்களை கடலுக்கும், மீன்வளத்துக்கும் எதிரிகளாக சித்தரித்துள்ளனர்.
- ‘பெரிய விசைப் படகுகள் மட்டுமல்ல… நாம் பயன்படுத்தும் வலைகள் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்’ என்று ஒரு மீனவர் சொல்வதாகக் கருத்துப்படம்.
- ‘இந்த அசுத்தமான மீன்பிடிப் படகுகளால் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுகிறது’
- புவிவெப்பமயமாதலில் நமக்கு என்ன பங்கிருக்கிறது என்று மீனவர்கள் சிந்திப்பது…
என்று முழுக்க, முழுக்க மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது இந்த பிரசுரம். கடலோரத்தில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி, மொத்த கடலோரத்தையும், கடற்பரப்பையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடத் துடிக்கும் கடற்கரையோர மேலாண்மை சட்டத்தைக் குறித்து இந்த தொண்டு நிறுவனம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களால் ஒட்ட சுரண்டப்படும் மீன்வளம் பற்றியும் மௌனம் காக்கின்றனர். மொத்தத்தில் பெரும் நிறுவனங்களின் வேட்டைக்காடாக இருக்கும் கடற்புரத்தில் இருந்து மீனவர்களை அடியோடு விரட்டியடித்துவிட்டு, இடையூறு இல்லாத ஏகபோக சந்தையை உத்தரவாதப்படுத்திக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். இதையும் சுற்றுச் சூழலோடு இணைத்து மீனவர்களை குற்றவாளிகளாக்கி இயற்கை ஆர்வலர் வேடம் போடுகிறார்கள் இந்த கபடதாரிகள்.
துண்டு பிரசுரத்திலிருந்து சில பக்கங்களின் படங்கள் [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இந்த லட்சணத்தில் அந்தப் பெண் மீனவப் போராளியாம். அவரது இழப்பு தாங்க முடியாத துயரமாம். என்.ஜி.ஓ. போராளியின் மரணத்திற்காக ஊளையிடும் ஊடகங்கள் இந்த உண்மைகளை ஆய்வு செய்வதோ, பரிசீலிப்பதோ இல்லை.
சரி, இவர் கலந்துகொள்ளச் சென்ற மங்கோலிய மாநாட்டில் அப்படி என்னதான் பேசப்படுகிறது? மங்கோலியாவின் உல்லன்பட்டார் என்ற இடத்தில் மார்ச் 10-ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் இந்த மாநாடு 14-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. ஆசிய, பசிபிக் மண்டலங்களைச் சேர்ந்த 46 நாடுகளின் விவசாய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கணிசமான அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து நாடுகளைச் சேர்ந்த தன்னார்வக் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்தரங்கின் முதல் நாளில், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்கள் ஆராயப்படும் என்றும், முக்கியமாக இந்த பிராந்தியங்களில் மேற்கண்ட துறைகளில் முதலீடுகள் மற்றும் மானியங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்றும் சொல்கின்றனர். அதாவது ஆசிய, பசிபிக் நாடுகளில் உள்ள ஏழை மக்களின் உணவை உத்தரவாதப்படுத்துகிறார்களாம். எப்படி? விவசாயத் துறையில் முதலீடு செய்வதன் மூலம். அப்படியான முதலீட்டுச் சூழலுக்குரிய வாய்ப்புகள் தங்கள் நாடுகளில் எப்படி இருக்கிறது, எப்படி உருவாக்கலாம் என்பது குறித்து உரையாற்றவே பல்வேறு நாடுகளின் தன்னார்வக் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். பச்சையாக சொல்வதானால் தங்கள் சொந்த நாட்டை காட்டிக் கொடுக்கும் புரோக்கர் வேலையைப் பார்ப்பதற்காக இவர்கள் அங்குச் சென்றுள்ளனர்.
‘ஆசிய, பசிபிக் நாடுகளின் விவசாயிகளிடையே போட்டித் திறனை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதுக் குறித்து’ இந்தக் கூட்டத்தில் விவாதிக்கிறார்களாம். ஆசிய நாடுகளின் அரிசி உற்பத்தி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் நிலையில், அது சூழல் பாதிப்பு உள்ளிட்ட சில எதிர்விளைவுகளையும் உருவாக்குகிறதாம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்படுமாம். மொத்தத்தில் விவசாயத்தின் மீதான விவசாயிகளின் இறையாண்மையை இல்லாதொழிக்க வேண்டும். அதுதான் இவர்களின் நோக்கம். அதை ஐ.நா. சபை வழியே வேறு, வேறு வார்த்தைகளில் இழுத்துப் பிடித்துச் சொல்கின்றனர். இன்றைய விவசாயி எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை இவர்கள் மருத்தளவுக்குக் கூட பேசாதது மட்டுமல்ல… இருக்கும் விவசாயிகளைத் துரடித்தியடித்துவிட்டு சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் சிந்திக்கின்றனர்.
நாம் சந்திரிகா சர்மாவில் பேசத் துவங்கினோம். அது இறுதியில் இங்கு வந்து நிற்கிறது. மீனவர் நலன், மங்கோலிய மாநாடு, விவசாய நலன், அரிசியால் சூழல் கேடு என்று இது யூகிக்க முடியாத வட்டமாக இருக்கிறது. தன்னார்வக் குழுக்களின் அரசியல் கண்ணி இப்படித்தான்… நாம் அறிய முடியாத ஆழங்களிலும், காண முடியாத தூரங்களிலும் படர்ந்துள்ளன.
தன்னார்வக் குழுக்கள்,வெளித் தோற்றத்தில் சேவையையும், உள்ளே ஏகாதிபத்தியங்களுக்கு தேவையான சதிகார நடவடிக்கைகளையும் கொண்டுள்ளன. இவர்களுக்கு கொடுக்குகள் வெளியில் இருப்பது இல்லை. உள்ளே இருக்கின்றன!
– வழுதி
மேலும் படிக்க