Saturday, August 20, 2022
முகப்பு செய்தி தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 13/03/2014

தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 13/03/2014

-

செய்தி: மத்தியில் தமிழ் ஆட்சிமொழி, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குதல் ஆகியவற்றை நிறைவேற்றுவோம் – திமுக தேர்தல் அறிக்கை.

நீதி: சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் தமிழை ஒழித்த இந்த வாய்கள் தரும் துர்நாற்றத்தை போக்க பல்மருத்துவரைப் பார் உடன்பிறப்பே!
________

தேர்தல் 2014செய்தி:  கருணாநிதி வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 100 தலைப்பு களில் வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

நீதி: ஓரிரண்டு சொல்லி ஒன்றுமே நடக்காது என்று வரும் அவமானத்தை விட 100 சொல்லி ஒன்றும் ஆகாது என்பது சாலச்சிறந்தது.
________

செய்தி: கரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான தம்பி துரைக்கும் திமுக வேட்பாளரான சின்னசாமிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே 1972-ல் அதிமுக உறுப்பினரானவர்கள். அதிமுக-வில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என பல பொறுப்புகளுக்கு வந்தவர்கள். இடையில் 2010-ல் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டதால் சின்னசாமி திமுக-வில் இணைந்தார்.

நீதி: மிட்டாமிராசுகளுக்கு கதர் கட்சியாக இருந்தால் என்ன, கருப்பு சிவப்பு  கட்சியாக இருந்தால் என்ன? குட்டைகளுக்கு மட்டுமல்ல, மட்டைகளுக்கும் இங்கே வேறுபாடு இல்லை.
________

செய்தி: வரும் லோக்சபா தேர்தலில் வோட்டு போடும் நேரத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வோட்டு போடுவதற்கு நாடு முழுவதற்கும் இரண்டு மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதி: கூடுதல் நேரத்தால் ராகு காலம், எமகண்டம், முகூர்த்தம் பார்த்து வாக்களிக்கலாம் என்று ஜோசியர்கள் கிளப்பி பாஜக பரப்பினால் என்ன செய்வது? எது எப்படியோ இந்த நேர அதிகரிப்பினால் நாட்டு மக்களுக்கு நல்ல நேரம் வரப்போவதில்லை.
________

செய்தி: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனாவிற்கும், பா.ஜ.க-வுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அனுமதியில்லாமல், ராஜ்தாக்ரே கட்சியுடன் பா.ஜ.க பேசி வருவதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

நீதி: நாடு முழுவதும் சரக்கு சப்ளை செய்பவன், உள்ளூர் சாராய வியாபாரிகளுக்கிடையே நடக்கும் சண்டையினை, புரிந்து கொள்ள மாட்டான் என்கிறது சிவசேனா.
________

செய்தி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தனது ஆதரவுக் கரத்தை வலியச் சென்று தெரிவித்தார் அண்ணா ஹசாரே. இந்நிலையில் இவர்கள் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தில்லியில் கூட்டத்துக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உடல் நிலையைக் காரணம் காட்டி அண்ணா ஹசாரே திடீரென பின் வாங்கினார். இதனால் கூட்டத்தில் ஆளுமில்லை, அண்ணாவுமில்லை என்பதால் கடுங்கோபத்தில் ஆழ்ந்தார் மம்தா பானர்ஜி.

நீதி: பணிவு இல்லாதா தீதி பட்டாபிஷேகம் செய்யவும், சரக்கு இல்லாத அண்ணா சாணக்கியனாகவும் ஆசைப்பட்டா அது காமடி படம்தானே ஒழிய ஆக்சன் படம் அல்ல!
________

செய்தி: குஜராத் வளர்ச்சி கதையை சொல்லி நாடு முழுவதும் மோடியால் ஆதரவை பெற முடியாது என கேஜ்ரிவால் மும்பையில் பேசினார்.

நீதி: அப்படிப் பார்த்தால் சர்வரோக நிவாரணியாக ‘ஊழல் எதிர்ப்பு’ கிராஃபிக்ஸ் கதையை சொல்லி நாடு முழுவதும் ஆதரவைப் பெற முயலும் ஆம் ஆத்மியும் எடுபடாதே கேசரிவாள்?
_________

செய்தி: தமிழகத்தில் இந்த முறை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 39 வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க சோனியாகாந்தி தலைமையில் இன்று பரிசீலனை நடக்க உள்ளது.

நீதி: தலையை கொடுக்க எந்த ஆடும் தயாராக இல்லாத போது வெட்டப்படும் ஆடுகள் குறித்து நடக்கப் போவது பரிசீலனையா, தண்டனையா?
________

செய்தி: தமிழக முதல்வர் ஜெயலலிலா திருப்பூரில் வியாழக்கிழமை(இன்று) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதையொட்டி, 10  எஸ்.பி.க்கள், 6 பட்டாலியன் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை போலீஸார் உள்பட 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீதி: வரலாறு காணாத இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒட்டி, போலீசு காலியாக்கப்பட்ட பக்கத்து மாவட்ட திருடர்கள் என்ன திட்டங்களை தீட்டியிருக்கிறார்களோ, மக்களே உசார்!
_________

செய்தி: குஜராத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களது பெற்றோருக்கும் மாணவர்களின் தொலைபேசிகளுக்கும் வரும் திடீர் அழைப்புகளில், மோடி பதிவு செய்த குரலில் தொடர்பு கொள்கிறார். அதில் “உங்களைப் போலவே நானும் ஒரு தேர்வை சந்திக்கவுள்ளேன். மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்கக்கூடாது. கடுமையாக உழைத்தால் அதில் சாதனை படைக்கலாம். எனவே தேர்வுகளை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று மோடி பேசியுள்ளார்.

நீதி: தேர்தலில் பிட்டடித்தாவது பாஸாக வேண்டுமென, சமூகவலைத் தளங்களில் பினாமி பெயர்களிலாவது மோடியின் புகழ் பாடும் பாஜகவைப் போல, மாணவர்களும் இறங்கி விட்டால் என்ன ஆவது?
________

செய்தி:  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டம் 15-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

நீதி: புதை குழிக்கு போன காங்கிரசுக்கு நடக்கும் முதல் கூட்டத்தை அஞ்சலி கூட்டம் என்று அழைக்காமல் பிரச்சாரக் கூட்டமென்று அழைப்பது சரியா, யுவர் ஆனர்?
________

செய்தி: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார்.

நீதி: திமுக-விலிருந்து நீக்கப்பட்ட முரட்டுப் பிள்ளையும், திமுக கூட்டணியில் சேர நாதியற்ற கைப்புள்ளயும் சந்தித்துக் கொண்டால், அங்கே இசைக்கும் உணர்ச்சி எது? துக்கமா, வெட்கமா?
________

செய்தி: திமுகவில் உட்கட்சிப் பூசலை தவிர்க்கும் வகையில், அதிருப்தியாளர்கள் மற்றும் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தலைமையிட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நீதி: தேர்தலில் நிக்கிறவனுக்கு சீட்டுல ஜெயிச்சா நோட்டு வரும், சீட்டு இல்லாதவனுக்கு பொறுப்பாளரா போட்டா செலவழிப்பதற்கு நோட்டு வரும். நோட்டு பிந்தி வந்தால் என்ன, முந்தி வந்தால் என்ன?
________

செய்தி: “என்னுடைய முந்தைய ஆட்சியில் போடப்பட்ட மின் உற்பத்தி தி்ட்டங்களை செயல்படுத்தாத கருணாநிதி, இப்போது மின் உற்பத்தியை பற்றி பேசுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் மின் உற்பத்தியை சீர்குலைத்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்,” என்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

நீதி: தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணிநேர மின்சாரமும் மக்களுக்கு பல மணிநேர மின்தடையும் கொடுத்த அதிமுக ஆட்சிக்கு இதே நீதி பொருந்தாதா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதால் அடித்தாலும் கேட்க ஆளில்லாத தமிழ்நாட்டு காங்கிரசின் மேல் பொங்குகிறார் ஜெயா.
________

செய்தி:  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை வலை வீசித் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

நீதி: மற்ற கட்சியில் தேர்தலில் நின்றால்தான் செலவழிக்க வேண்டும். கதர் கட்சிக்கு மட்டும் நிற்பதற்கே தட்சணை கொடுக்க வேண்டும் போல. காந்தி கட்சி போகும் வழி சுடுகாடு என்றாலும் பல்லக்கில் தூக்கிச் செல்வார்களாம்!
________

செய்தி: லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி பாடலிபுத்ரா தொகுதியின் ராஷ்டீரிய ஜனத தள வேட்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அதிருப்தி அடைந்த ராம்கிரிபால் யாதவ் அக்கட்சியில் இருந்து விலகி ராஜ்நாத் சிங் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

நீதி: வாரிசு அரசியலும், சமூக அநீதியும் லாலுவோட ஜனதாக் கட்சிக்கு சொந்தமென்றால் இந்து மதவெறி பாசிசம் மோடியின் ஜனதாக் கட்சிக்கு சொந்தம். இப்படி ஜனங்களுக்கு விரோதமாயிருக்கிற ஜனதாக் கட்சிக்காரன் ராஷ்டிரிய ஜனதாவில் இருந்தாலென்ன, பாரதிய ஜனதாவில் இணைந்தாலென்ன?
_______

செய்தி:  ”பா.ஜ, தே.மு.தி.க. கூட்டணியை பார்த்து ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் பயம் வந்து விட்டது. அதனால்  மாற்றி  மாற்றி பேசுகின்றனர்,” என  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நீதி: பின்னே, சரக்கடித்து விட்டு இந்த ஆள் சவடால் அடிப்பதைக் கூட கேட்பதற்கும், எழுதுவதற்கும், கூட்டணி சேர்வதற்கும் இந்த நாட்டில் வாய்ப்பு இருப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வராது?
_______

செய்தி: பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பாக‌ போட்டியிடும் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தேர்தலில் வெற்றிபெற வேண்டி விடிய விடிய சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார்.

நீதி: தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்துமதவெறியர்கள் நம்பும் இரண்டு விசயங்கள்: ஒன்று கலவரம். இரண்டு யாகம். கலவரத்தில் சிறுபான்மை மக்கள் உயிரிழப்பார்கள். யாகத்தில் பார்ப்பனர்கள் வயிறு வளர்ப்பார்கள்.
________

 1. கேஜ்ரிவால் அம்பானி என்ற பெரிய திமிங்கலத்தை எதிர்த்தவரல்லவா?
  சுப்பிரமணியசாமியால் நக்சல்பாரி என்று உரைக்கப் பட்டவர் அல்லவா?
  தனி மெஜாரிட்டியில்லாமல் தன் எண்ணவோட்டங்களை செயல் படுத்தமுடியாதவர் அல்லவா?
  சில எதிர் கேள்விக்கணைகள் தோன்றினாலும்,சற்று கால அவகாசம் இவருக்கு கொடுக்கலாமே?

 2. ///தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்///

  ஞான தேசிகன்: எங்களுக்கு சீட்டே வேணாம்,எங்களை விட்டுடுங்கன்னு கால்ல விழுந்து கெஞ்சுன 39 பேர வழுகட்டாயமா பிடிச்சு கொண்டாந்தமே எங்க அவங்க?

  தொண்டர்: இதோ,வந்துட்டாங்க.

  ஞானதேசிகன்: [வேட்பாளர்களை பார்த்து] கட்சிக்கு நிதி எதும் கொண்டாந்திங்களா?

  [வேட்பாளர்கள் முழிக்கிறார்கள்]

  ஞானதேசிகன்: ஓட்டு கேக்க போறத நெனச்சு உங்க கண்ணுல மரணபயம் இருக்குறது நல்லா தெரியுது.அதே பயம் எனக்கும் இருக்கு.ஆனா அத வெளிய தெரியாம மெய்ன்டெய்ன் பண்ணனும் புரியுதா? அட்டாக் அதிகமாறப்ப ஒரு முடிவெடுப்போம்.

  [ஒரு வேட்பாளர் பயத்தில் அழுகிறார்]

  ஞானதேசிகன்: யார்யா அது அழுவுறது? அழுவபுடாது அசிங்கமா இல்ல அண்ணனுக்கு.

 3. வினவு, தேர்தலும் வந்துவிட்டது. உங்கள் எழுத்துக்களின்படி காங்கிரஸுக்கு ஓட்டளிக்கக்கூடாது. பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளிக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள், திமுக, அதிமுக, அண்ணா ஹசாரே, அர்விந்த் கேஜ்ரிவால், முலாயம் சிங், மம்தா, விஜயகாந்த், வைகோ தேவேகௌடா இவர்களுக்கும் வாக்களிக்கக்கூடாது. யாருக்குத்தான் வாக்களிப்பது? ஞானி சொல்கிறமாதிரி நாட்டோவுக்கா?
  வெறும் விமர்சனம் செய்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்காமல் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி ஒரு தெளிவான கட்டுரையாவது எழுதுங்களேன்.(நிற்பவர்களில் யார் நல்லவர் என்று பார்த்து வாக்களியுங்கள் என்ற மொக்கை பதில் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)

  • தெளிவில்லாத இவர்களுக்கு வாக்களித்துதான் எதை சாதிக்கப் போகிறீர்கள்? உங்களை சுற்றியுள்ளவர்கள் தவறே செய்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

 4. Tirupur kottaththirkku vanthal mens sukku Rs400, pant,shirt,seruppu,biriyani,sarakku

  ladies sukku Rs300, sare,biriyani ena sumar 1,00,000 perukku kuduththum 35,000 per kuda varavillai ena MSM Anandan polampukirar.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க